paadal thedal – 9(2)

paadal thedal – 9(2)

ஐந்து மாதங்கள் கழித்து…

சந்தான லட்சுமி ஜானவியிடமும் மீனாவிடமும் கொண்டிருந்த வருத்தம் கோபம் எல்லாம் அவ்வளவாக இப்போது இல்லை. மற்றொரு புறம் ஜானவி செழியன் நட்பு பலப்பட்டு கொண்டிருந்தது. அதேநேரம் ஜானவி ராஜன் விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் ஒருவாறு உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் விவாகரத்து கிடைப்பதில் நிறைய நடைமுறை சிக்கல்களை கடந்துவர வேண்டி இருந்ததால் சட்டபடியான முறைகள் நீட்டித்து கொண்டே போனது.

இவை எல்லாவற்றையும் கடந்து ஜானவி வேலை செய்யும்  அலுவலகத்தில் அவளுக்கு மீண்டும் பழைய பெயர் கிடைத்தது. அவளால் அந்த நிறுவனம் பன்மடங்கு லாபம் பெருகிய அதேநேரம் ஜானவியின் சம்பளம் மற்றும் இதர பல சலுகைகள் கமிஷன்கள் என்று அவள் லட்சங்களில் ஈட்ட ஆரம்பித்திருந்தாள்.

அன்று ஜெகன் ஜானவியை பார்க்க வீட்டிற்கு வந்திருந்தான். “யாரு?” என்று கேட்டு கொண்டே கதவை திறந்தவள், “ஏ வா ஜெகி” என்று அவனை புன்னகையோடு உள்ளே அழைத்து அமர வைத்தாள்.

“என்ன சார் இந்த பக்கம்? என் ஞாபகம் எல்லாம் உங்களுக்கு இருக்கா?” என்றவள் எகத்தாளமாக கேட்க,

“என்ன க்கா இப்படி பேசுற?” என்று அவன் முகம் சுருங்கினான்.

“வேறெப்படி பேச” அவள் முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை. ஜெகன் மேலே பேசாமல் மெளனமாக அந்த வீட்டிலிருந்த பொருட்களை சுற்றும் முற்றும் ஆராய்வாக பார்த்து கொண்டிருந்தான். ஒரு வீட்டிற்கு இன்றளவில் தேவையான எல்லாமுமே அங்கே இருந்தது.

“எல்லாத்தையும் வாங்கி வைச்சிட்டியா க்கா? செலவு அதிகமாயிருக்குமே” என்றவன் கேட்க, “செலவுக்காக பார்த்தா… வீட்டுக்கு தேவையானதை எல்லாம் வாங்க வேண்டாமா? அதுவும் இல்லாம எல்லாத்தையும் எல்லாம் நான் வாங்கல”

“அப்புறம்”

“அப்பா எனக்கு சீர் வரிசையா கொடுத்தது எல்லாம் எதுக்கு அந்த ஆள் வீட்டில இருக்கணும்… அதான் எல்லாத்தையும் கேட்டு வாங்கிட்டேன்” என்று சொன்ன தமக்கையை ஜெகன் அதிர்ச்சியாக பார்த்தான். அவளுக்கு இருக்கும் தைரியமும் திமிரும் வேறு யாருக்கும் வராது என்று எண்ணி கொண்டான்.

“சரி அதை விடுறா… என்ன வீக் டேஸ்ல வந்திருக்க… காலேஜ் இல்லையா?”

“ஸ்டடி ஹாலிடேஸ் க்கா”

“ஒ! ஆமா… நீ ஃபர்ஸ்ட் ஹியர் முடிக்க போற இல்ல” என்று ஜானவி ஆவலாக கேட்க,

“ஹ்ம்ம்” என்றவன் முகத்தில் தெளிவே இல்லை.

ஆனால் அவள் அதுபற்றி எதுவும் கேட்டு கொள்ளவில்லை. வெகுநேரம் அவளிடம் உரையாடி கொண்டிருந்தவன் மாலை பொழுதாக, “டைம் ஆச்சே… மீனாவை போய் கூட்டிட்டு வரணும் இல்ல… நான் போய் கூட்டிட்டு வரவா க்கா?” என்று கேட்க,

“வேண்டாம் ஜெகி! செழியன் அவர் பொண்ணை கூட்டிட்டு வரும் போது மீனாவையும் அழைச்சிட்டு வந்திருவார்” என்றாள்.

“யாரு க்கா அவரு?” என்று ஜெகன் குழப்பமாக,

“உனக்கு தெரியாது இல்ல… எதிர் ப்ளேட் தான்… மீனா படிக்கிற ஸ்கூலில்தான் அவரும் வேலை செய்றாரு… அவர் பொண்ணு அன்புச்செல்வியும் நம்ம மீனா கிளாஸ்தான்… ரொம்ப நல்லவர்… பாவம்! அவர் வொய்ஃப் ஒன் இயர் பேக் இறந்துட்டாங்க” என்று செழியனை பற்றி அவள் கதையாக உரைத்து கொண்டிருக்க ஜெகன் தன் தமக்கையை யோசனையாக பார்த்தான். அதிகமாக யாரை பற்றியும் பேசுபவள் அல்ல ஜானவி. அதுவும் முக்கியமாக ஆண்களை பற்றி!

‘அக்கா கிட்ட என்னவோ வித்தியாசமா இருக்கு’ என்று அவன் சிந்தித்து கொண்டிருக்க கதவு தட்டும் ஓசை கேட்டு ஜானவி கதவை திறந்தாள்.

செழியன் மீனாவை அழைத்து வந்திருக்க, “தேங்க்ஸ் செழியன்” என்றவள் மகளை உள்ளே அழைத்து கொள்ள,

“இப்படி தினைக்கும் தேங்க்ஸ் சொல்லி என்னை கடுப்பக்காதீங்க ஜானவி” என்றான்.

“என்ன பண்றது செழியன்… அதுவா வருது” என்றவள் புன்னகையோடு சொல்ல,

“இனிமே வர கூடாது” என்றவன் அழுத்தமாக சொல்லிவிட்டு மீனாவை பார்த்து, “பை மீனா குட்டி” என்று சொல்ல மீனாவும் சிரித்து கொண்டே,

“பை அன்பு ப்பா” என்றாள்.

அதே போல் அன்புச்செல்வி மீனாவிற்கு பை சொல்லிவிட்டு, “பை ஜானு ம்மா” என்றாள். ஜெகன் முகம் இன்னும் குழப்பமாக மாறியது.

அவனுக்கு  அவர்கள் இப்படி அழைப்பதற்கான பின்னணி காரணம் தெரியாதே.

அன்புவிற்கு மீனாவை போல் ஜானவியை அம்மா என்று அழைக்க தோன்ற, “நான் உங்களை அம்மான்னு கூப்பிடவா?” என்று கேட்டாள்.

“ஆண்ட்டின்னு கூப்பிடு செல்லம்” என்று ஜானவி சொல்ல,

“இல்ல… உங்களை பார்த்தா எனக்கு எங்க அம்மா ஞாபகம்தான் வருது… உங்க உதட்டு மேல எங்க அம்மாவுக்கு இருக்க மாறியே மச்சம் இருக்கு” என்றவள் அதை சுட்டி காண்பிக்க ஜானவிக்கு சங்கடமானது.

அவளிடம் மறுப்பு தெரிவிக்க மனமில்லாமல், “நீ என்னை ஜானு ம்மான்னு கூப்பிடேன்” என்றாள். அந்த வார்த்தையை அன்புச்செல்வி அப்படியே பிடித்து கொண்டாள்.

மீனா அப்படியே அன்புச்செல்வியின் வழிக்காட்டுதலில் செழியனை ‘அன்பு அப்பா’ என்று அழைக்க தொடங்கிவிட்டாள். ஆனால் இந்த காரணகாரியம் தெரியாத ஜெகனுக்கு இது என்னவோ தவறாகப்பட்டது. ஆனால் தன் தமக்கையிடம் அவன் வாய்விட்டு எதுவும் கேட்டு கொள்ளவில்லை.

இதெல்லாம் ஒருபுறம் மனதில் சுழன்றாலும் ஜெகன் மீனாவோடு விளையாட தொடங்க, மீனாவுக்கும் தன் மாமாவை பார்த்ததில் மிகுந்த சந்தோஷம்!

ஜெகனுடன் அத்தனை களிப்பாக மீனா விளையாடி கொண்டிருக்க அவன் அப்போது,

“அம்மம்மா வீட்டுக்கு போலாமா மீனு” என்று கேட்க, மீனாமுடியவே முடியாது என்று மறுத்துவிட்டாள்.

அது மட்டுமல்லாது, “எனக்கு ஹோம் வொர்க் பண்ணனும்… நான் அன்பு வீட்டுக்கு போறேன்” என்று அங்கிருந்து ஓடியே விட்டாள்.

“இரு டி பால் குடிச்சிட்டு போவ” என்ற ஜானவியின் அழைப்பை அவள் காதில் வாங்கவே இல்லை.

“இப்படிதான் தினைக்கும் பண்றா ஜெகி” என்று ஜானவி சொல்லி கொண்டே, “சரி… இந்தா நீ டி குடி” என்று அவனக்கும் கொடுத்துவிட்டு அவளும் அருந்தினாள்.

குடித்து முடித்ததுமே, “நான் கிளம்பிறேன் க்கா” என்றவன் புறப்பட எத்தனிக்க, “கேட்க வந்ததை கேட்காமலே போறியே ஜெகி!” என்றதும் அவன் அவளை நின்று தயக்கமாக பார்க்க,

“என்னடா? பீஸ் கட்டணுமா?” என்று கேட்டாள். அவன் தலைதொங்கி போனது.

“ஆமா… பீஸ் கட்டலன்னா ஹால் டிக்கெட் கொடுக்க மாட்டாங்க… அம்மா உன்கிட்ட கேட்க வேணாம்னுதான் சொன்னாங்க… ஆனா” என்றவன் இழுத்து கொண்டிருக்க,

“போதும் நிறுத்து… இந்த செண்டிமெண்ட் டிராமா எல்லாம் என்கிட்ட போடாதே… என் பிரச்சனையில கஷ்டத்துல யாரும் பங்கு போட்டுக்க மாட்டீங்க… ஆனா என் சம்பாதியத்தில மட்டும் உங்களுக்கு எல்லாம் பங்கு வேணுமா?” என்று சற்று கடுமையாகவே கேட்டாள்.

“அக்கா… போதும்…. இப்படியெல்லாம் பேசி அசிங்கப்படுத்தாதே… நான் போறேன்” என்றவன் முறுக்கி கொண்டு செல்ல,

“இந்த ரோஷம் மானத்துக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல” என்றதும் அவன் திரும்பி நின்று கோபமாக ஜானவியை முறைத்தான்.

“எனக்கு வேணும்… அம்மா சொல்ல சொல்ல கேட்காம உன்கிட்ட போய் காசு கேட்க வந்தேன் பாரு”

“அதானே… சார் என்கிட்ட ஏன் கேட்க வந்தீங்க… போய் உங்க ஜோதி அக்காகிட்ட கேட்க வேண்டியதுதானே” என்று எள்ளல் தொனியில் சொல்லியவள் இடைவெளி விட்டு, “அப்படியே கேட்டு அவ கொடுத்துட்டாலும்” என்றாள்.

“கொடுக்கிறாங்க கொடுக்கல… ஆனா உன்னை மாறி பெரிய அக்கா பேச மாட்டாங்க” என்று ஜெகன் சொல்ல,

“அதானே… அவளை மட்டும் நீங்க யாரும் விட்டு கொடுக்க மாட்டீங்களே” என்றவள் தம்பியின் முகம் பார்த்து, “போயிடாதே… இரு வரேன்” என்று சொல்லி அவள் உள்ளே சென்றுவிட,

“ஏன்… இன்னும் நீ என்னை அசிங்கப்படுத்த வேண்டியது பாக்கி இருக்கா?” என்று ஜெகன் சத்தமாக கேட்டான்.

அவள் பதில் பேசாமல் பணத்தை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க, “எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்று அவன் முகத்தை திருப்பிகொள்ள,

“சீ புடி டா” என்று அவன் கையில் அந்த பணத்தை திணித்தவள், “உன்னோட இந்த ரோஷத்தை எல்லாம் படிப்பில காட்டு… பைசா பாக்கி இல்லாம இதை நீ எனக்கு திருப்பி கொடுக்கணும்… சொல்லிட்டேன்” என்றாள்.

அவள் மேலும், “பீஸ்சை கட்டிட்டு மிச்ச காசை… செலவுக்கு நான் கொடுத்தேன்னு சொல்லி அம்மாகிட்ட கொடு… புரிஞ்சிதா” என்ற போது ஜெகன் அவளை வியப்பாக பார்த்தான்.

அவளை எந்த ரகத்தில் சேர்ப்பதென்றே அவனுக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. அவள் இல்லாத அந்த ஐந்து மாதத்தில் அவர்களின் குடும்பத்தின் பொருளாதார நிலை ஆட்டம் கண்டது.

அருகே இருக்கும் பொருளின் அருமை எவருக்கும் தெரிவது இல்லை. ஜானவி விஷயமும் அப்படித்தான். அவள் அருகே இருக்கும் போது அவளால் அனுபவித்த சலுகைகளின் அருமை சங்கரன் குடும்பத்திற்கு தெரியவில்லை. அவள் விலகி சென்ற பிறகே அவளின் அவசியமும் தேவையும் அவர்களுக்கு பிடிபட ஆரம்பித்தது.

error: Content is protected !!