Pallavan_kavithai_13

PKpic-c0e9962d

பல்லவன் கவிதை – 13

வாளின் மீது ஆணையிட்ட அந்த வாலிபனை இமைக்காமல் பார்த்தாள் மகிழினி. அதிக வயதில்லை, ஆனால் அந்த முகத்திலும் உடலிலும் வயதிற்கு மீறிய நிதானமும் வீரமும் தெரிந்தது.

“நான் ஒன்று தெரிந்து கொள்ளலாமா அம்மா?”

“கேளுங்கள்.”

“மைத்ரேயியின் தாயார் ஏன் அப்படி சொன்னார்கள்?” மார்த்தாண்டன் கேட்ட கேள்வியில் மகிழினியின் கண்கள் கலங்கின.

“அது ஒரு பெரிய கதை அப்பனே!”

“ஓ… அதை நான் தெரிந்து கொள்ளலாமா?”

“சொல்வதற்கு எனக்கு அனுமதி இல்லையே.”

“சொல்ல முடியாது என்றால் பாதகமில்லை… எனக்கு மைத்ரேயியை இப்போது சிறையிலிருந்து மீட்க வேண்டும், அவ்வளவுதான்.”

“முடியுமா தம்பி?!” ஆவலே வடிவாக கேட்டாள் மகிழினி.

“பெற்றவர்கள் சென்று முதலில் நியாயம் கேட்கலாம், ஏனென்றால் மைத்ரேயி மீது எந்த தவறும் இல்லை…”

“அது நடவாது, அவள் தாயார் சொன்ன பதிலைத்தான் நீயே கேட்டாயேப்பா.”

“மைத்ரேயியின் அப்பா…” மார்த்தாண்டன் வாக்கியத்தை முடிக்கவில்லை.

“தம்பி… சில விஷயங்களை நாம் பேசாமல் இருப்பது நல்லது.”

“ஓ… உயிரோடு இருக்கிறாரா? அதை மட்டுமாவது சொல்ல முடியுமா?”

“இருக்கிறார்.” மகிழினியின் வாயிலிருந்து அந்த வார்த்தை உதிர்ந்த போது இதழ்கள் மட்டுமே அசைந்தன. சற்றும் சத்தம் வெளியே கேட்கவில்லை.

“மைத்ரேயி தன் தந்தையைப் பற்றி இதுவரை என்னிடம் எதுவுமே சொன்னதில்லையே?!”

“யாரென்றே தெரியாத தகப்பனைப் பற்றி எப்படித்தான் அந்த குழந்தைப் பேசும்!”

“என்ன?!”

“மைத்ரேயிக்கு அவள் அப்பா யாரென்றும் தெரியாது, அவர் உயிரோடு இருப்பதுவும் தெரியாது.”

“விந்தையாக இருக்கிறது, ஒரு குழந்தையிடம் தன் தந்தையைப் பற்றி மறைக்கிறார்கள் என்றால்… அதில் நிச்சயமாக அரசியல் பின்னணி இருக்க வேண்டும்! நான் சொல்வது சரியா தாயே?” இந்த கேள்விக்கு மகிழினி பதில் சொல்லவில்லை. கண்கள் கலங்க தலையை மட்டும் ஆமென்பது போல ஆட்டினாள்.

மார்த்தாண்டன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் தீவிர சிந்தனையின் ஆழ்ந்து விட்டான். அங்கு நின்ற இருவருமே எதையும் வெளிப்படையாக பேச இயலாமல் அதே நேரம் எதையும் தெளிவுற புரிந்து கொள்ளாமலும் நின்றிருந்தார்கள்.

மார்த்தாண்டன் தன்னைப்பற்றி முழுவதுமாக மகிழினியிடம் அப்போது சொல்ல முடியாமல் தவித்தான் என்றால், மகிழினியும் அந்த வாலிபனிடம் மைத்ரேயியின் பிறப்பு ரகசியத்தைச் சொல்ல முடியாமல் வெகுவாக தவித்தாள்.

***

அமரா தேவிக்கு அந்த முகம் மிகவும் பரிட்சயமானது போல தோன்றியது. அந்த சிறு பெண்ணின் முகத்தையே மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து பார்த்தாள். தன்னோடு கூட வந்த படைத்தலைவரும் தன் முகத்தையும் அந்த இளம்பெண்ணின் முகத்தையும் ஆராய்வது போலவே பார்த்தது ஞாபகம் வரவும் அமரா அவரைக் யோசனையோடு பார்த்தார்.

“படைத்தலைவரே, என்ன அப்படி பலமாக சிந்தனைச் செய்கிறீர்கள்?”

“அம்மணி, தாங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் நான் ஒன்று கூறட்டுமா?”

“தாராளமாக கூறுங்கள்.” மனதுக்குள் லேசாக படபடப்பு தோன்றினாலும் வெளிக்கு எதையும் காட்டிக்கொள்ளவில்லைப் பெண். என்ன வரப்போகிறது என்று சற்றே புரிந்தாற்போல இருந்தது.

“அந்த சிறு பெண்ணைப் பார்க்கும் போது எனக்கு தங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது.” மிகவும் பணிவாக வந்த படைத்தலைவரின் குரலில் அமரா தேவி திடுக்கிட்டு போனார். சற்று நேரம் புருவங்களை நெரித்துக்கொண்டு சிந்தனையில் கழித்த தேவி அங்கிருந்த காவலனை நோக்கி,

“அந்த பெண்ணை அழைத்து வாருங்கள்!” என்று உத்தரவிட்டார்.

“ஆகட்டும் தேவி.” வெளியேறிய காவலன் சற்று நேரத்தில் மைத்ரேயியோடு அந்த அறையினுள் நுழைந்தான்.

மைத்ரேயி குழப்பம் நிறைந்த முகத்தோடு அந்த இடத்தை ஒரு முறைக் கண்களால் அளந்தாள். பெரிய ஆசனமொன்றில் அமரா தேவி அமர்ந்திருக்க அதற்கு அடுத்தாற்போல் போடப்பட்டிருந்த இன்னுமொரு ஆசனத்தில் படைத்தலைவர் அமர்ந்திருந்தார்.

எது எப்படி இருந்தாலும் தன் உபாத்தியாயர் தன்னைக் காப்பாற்ற வருவார் என்ற நம்பிக்கை நிறையவே இருந்ததால் இப்போது ஆரம்ப கட்ட அதிர்ச்சி நீங்கி அமைதியாகவே நின்றிருந்தாள் இளையவள்.

“என்ன… யோசனைப் பலமாக இருக்கிறது?” இகழ்ச்சியாக வந்தது அமராவின் குரல். ஆனால் இளையவளின் குரல் இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் வந்தது.

“எதற்காக நான் இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறேன் என்று புரியவில்லை, அதைத்தான் சிந்தித்தபடியே இருக்கிறேன் தேவி.”

“உன் கூட ஒருவன் இருந்தானே…‌ அவனால்தான் உனக்கு இந்த நிலைமை.” அசட்டையாக வந்தது பதில்.

“அவர் அப்படி என்ன தவறு செய்தார்?”

“ஓஹோ! அது கூட தெரியாமல்தான் அவனோடு சகவாசம் வைத்திருக்கிறாயா?”

“அவர் என் குரு, வாள் வீச்சில் வல்லவர்… இதை விட வேறு என்ன தெரிய வேண்டும் எனக்கு?”

“யாரிடம் வேண்டுமானாலும் வாள் வீச கற்றுக்கொள்வாயா பெண்ணே?”

“அதிலென்ன சந்தேகம்?! நம்மிடம் இல்லாத திறமை இன்னொருவரிடம் இருக்கும் போது அவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அவரிடம் அந்த வித்தையைக் கற்றுக்கொள்ளலாம் என்று என் தாத்தா கூறி இருக்கிறார்கள்.”

“அது யார் உன் தாத்தா?”

“உபாத்தியாயர்…”

“பெயரில்லையா அவருக்கு?”

“உண்டுதான்… ஆனால் அவரை இப்படி சொன்னால்தான் இங்கு எல்லோருக்கும் புரியும்.”

“உன் அப்பா…”

“எனக்கு அப்பா இல்லை தேவி.” இந்த பதிலில் அமரா தேவி திடுக்கிட்டாள். அவள் மனம் இப்போது எப்படி உணர்கிறது என்று அவளாலேயே இனம் பிரித்து அறிய முடியவில்லை.

“அம்மா…”

“இருக்கிறார்கள்.”

“அவர்கள் பெயர் என்னவோ?” கேட்டுவிட்டு படபடக்கும் இதயத்தோடு காத்திருந்தார் அமரா தேவி. அவர் கேட்கவே விரும்பாத ஒரு பெயர் அந்த இளம்பெண்ணின் நாவிலிருந்து வந்துவிட கூடாது என்று அவர் மனம் இறைவனை அந்த நொடி பிரார்த்தித்தது.

“பரிவாதனி.” அமரா தேவியின் அனைத்து பிரார்த்தனைகளையும் தவிடு பொடி ஆக்கிவிட்டு வந்து வீழ்ந்தது அந்த வார்த்தை.

ஆசனத்தில் வாகாக சாய்ந்து அமர்ந்திருந்த அமரா தேவி கண்களைச் சட்டென்று மூடி கனத்த தன் தலையையும் ஆசனத்தில் சரித்துக்கொண்டாள். விளங்காத பல முடிச்சுகள் சட் சட்டென்று இப்போது விடுபட்டது போல தோன்றியது.

ஆக… ஒட்டுமொத்த குடும்பமும் காஞ்சியை விட்டுக்கிளம்பி கொற்கையில் வந்து குடியேறி இருக்கிறார்கள். காஞ்சியை விட்டு தொலைதூரம் வரவேண்டும் என்பதற்காக தெற்கே வந்து காவிரியைத் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

‘வந்தது சரி, ஆனால் இந்த குழந்தையை எதற்காக தன் அண்ணனிடம் இருந்து அந்த பெண் மறைக்க வேண்டும்?!’ அமராவின் தலைக்குள் ஆயிரம் சிந்தனைகள் இப்போது பவனி வந்தன.

தன் எதிரில் நின்றிருக்கும் இந்த சிறு பெண் பல்லவ சாம்ராஜ்யத்திற்கே சொந்தக்காரியா? அப்படியென்றால் நரசிம்ம பல்லவனின் நிலைமை என்ன?!

சதா காஞ்சியை குறிவைக்கும் எதிரிகளின் காதுகளுக்கு இந்த சேதி கிட்டுமானால் பல்லவ சாம்ராஜ்யத்தின் நிலைதான் என்ன? தாயாதி சண்டையினால் பிளவு படுவதற்காகவா தன் மூதாதையர்கள் இந்த பல்லவ சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்டார்கள்?!

“தேவி…” படைத்தலைவன் குரலில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார் அமரா தேவி.

“படைத்தலைவரே, எனக்கு இப்போது சிறிது ஓய்வு தேவை, நான் அப்புறமாக இந்த பெண்ணை விசாரித்து கொள்கிறேன்.”

“ஆகட்டும் தேவி.”

அமரா தேவி சட்டென்று எழுந்து தன் அறைக்கு விடுவிடுவென்று போவதை படைத்தலைவன் மட்டுமல்ல, மைத்ரேயியும் பிரமிப்புடன் பார்த்து கொண்டிருந்தார்கள்.

அறைக்குள் வந்த பிற்பாடும் அமரா தேவி ஓய்ந்து அமரவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்த வண்ணமே இருந்தார். மனதிற்குள் ஒரு பெரிய புயலே வீசிக்கொண்டிருந்தது.

‘அப்படியென்றால் மைத்ரேயிதான் தன் அண்ணனின் முதல் வாரிசா? பல்லவ சாம்ராஜ்யத்தின் முடிக்குரிய இளவரசி இவள்தானா? ஆண் மகவிற்குத்தான் ராஜ்ஜிய பாரத்தைச் சுமக்கும் தகுதி இருக்கிறது என்று நிச்சயமாக தன் அண்ணன் கூறமாட்டான்… ஏன்? அதில் தனக்கே உடன்பாடில்லையே! அப்படியிருக்க மைத்ரேயியை எப்படி விலக்க முடியும்?’

அப்படி அந்த குழந்தையை விலக்குவது எந்த வகையில் நியாயம்? காதல் இருந்ததென்று தெரியும். ஆனால் குழந்தை வரை அந்த உறவு போயிருக்க நியாயமில்லை என்றுதான் இது காலம் வரை அமரா நினைத்திருந்தார். இப்போது இரு கைகளாலும் தலையைத் தாங்கிய படி மஞ்சத்தில் அமர்ந்துவிட்டார் அமரா தேவி. இப்போது என்ன செய்வது?

இந்த பெண் பேசுவதைப் பார்த்தால் இவள் தந்தை யாரென்று இவளுக்கே தெரியவில்லைப் போலிருக்கிறதே! ஆகமொத்தம் இப்படியொரு குழந்தை இருக்கின்றது என்று மகேந்திர பல்லவனுக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே இங்கு வந்து மறைந்து வாழ்கிறார்கள்.

இப்போது இவர்களைப் பார்க்காதது போல நானும் இருந்துவிட்டால் எந்த சிக்கலும் வராதோ? ராஜ்ஜியத்தில் குழப்பம் வரக்கூடாது என்று இந்த பெண்ணின் தாயே நினைத்து குழந்தையை மறைக்கும் போது நாம் எதற்காக தேவையில்லாமல் இவர்களைப் பற்றி பேசி புதிதாக குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும்?

தொலைந்த பெண் தொலைந்து போனவளாகவே இருந்தால் நல்லதுதானே! சக்கரவர்த்தி கொற்கைக்கு வரப்போவது இல்லை. வந்தால்தானே இவர்களைப் பார்க்க முடியும்! நடப்பதற்கு வாய்ப்பே இல்லாத ஒரு விஷயத்தை எதற்காக நாமே முன்னின்று நடத்திக்கொடுக்க வேண்டும்?

ஆனால்… இது அத்தனையும் அந்த இளம் பெண்ணிற்குச் செய்யும் துரோகம் ஆகாதா? அமரா தேவியின் தலை வெடித்து விடும் போல வலித்தது.

சற்று நேரம் வானத்தைப் பார்த்து அமர்ந்திருந்த அமரா தேவியின் உள்ளத்தில் எத்தனையோ சிந்தனை அலைகள் மோதின. இது நடந்தால்… இது நடக்காவிட்டால்…‌ என்று பல கோணங்களிலும் அவர் சிந்தனை மீண்டும் மீண்டும் செயல்பட்டது.

இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தவர் போல சில ஓலை நறுக்குகளை எடுத்து அதில் எழுத்தாணி கொண்டு மிகவும் கவனமாக வார்த்தைகளைத் தேடித்தேடி எழுதினார். அதை மீண்டும் மீண்டும் படித்து பார்த்து திருப்தியுற்றவர் மூங்கில் குழல் ஒன்றில் போட்டு மூடினார்.

“யாரங்கே!” அமரா தேவி குரல் கொடுக்க வாசலில் நின்றிருந்த காவலாளி ஓடி வந்தான்.

“திறமையாகவும் துரிதமாகவும் புரவியைச் செலுத்த தெரிந்த வீரன் ஒருவனை அழைத்து வா!”

“ஆகட்டும் தேவி.” விரைந்து சென்ற காவலாளி கையோடு ஒரு வீரனை அழைத்து வந்தான்.

“தேவி!” பணிவாக வந்து நின்றான் வீரன்.

“உன் பெயர் என்ன?”

“மாரப்பன் தேவி.”

“நல்லது… மாரப்பா, இந்த குழலில் மிகவும் முக்கியமான செய்தி ஒன்று வைத்திருக்கிறேன்.”

“நல்லது தேவி.”

“இதை எடுத்துக்கொண்டு நீ வாயு வேகமாக காஞ்சி நகருக்குச் செல்ல வேண்டும்.”

“ஆகட்டும் தேவி.”

“அங்கே பல்லவ உப சேனாதிபதியிடம் இந்த குழலை நீ ஒப்படைக்க வேண்டும்.”

“அப்படியே தேவி.”

“மாரப்பா… இதிலிருக்கும் செய்தி பல்லவ உப சேனாதிபதியைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது.”

“புரிகிறது தேவி.”

“வழியில் எங்கேயும் தாமதிக்காதே.”

“உத்தரவு தேவி.”

“பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் பொதியாக கட்டிக்கொள்.”

“இன்றே புறப்பட வேண்டுமா தேவி?”

“இப்போதே புறப்பட வேண்டும்.”

“உத்தரவு தேவி.”

“மீண்டும் சொல்கிறேன்… உன் உயிரே போனாலும் ஓலையை மட்டும் தவற விட்டு விடாதே!”

“மிகவும் கவனமாக நடந்து கொள்கிறேன் தேவி.”

“நல்லது, போய் வா.” வீரன் விடைபெற்றுக்கொண்டு செல்ல பஞ்சணையில் நிம்மதியாக சாய்ந்து கொண்டார் அமரா தேவி. மனம் இப்போது லேசானது போல இருந்தது. தான் செய்ததுதான் சரியென்று தோன்றவே லேசாக கண்களை மூடிக்கொண்டார்.

***

மாரப்பன் அமரா தேவியுடன் பேசி முடித்த சில நொடிகளிலேயே தனது பயணத்தை ஆரம்பித்துவிட்டான். ஏதோ பெரியதொரு ராஜீய விவகாரம் தன் தலையில் கட்டப்பட்டுள்ளது என்று அவனுக்கு நன்றாக புரிந்தது.

பிரதான படைத்தலைவர் தன்னிடம் கொடுத்திருந்த ஓலைக் குழலைத் தன் இடைக்கச்சையில் பத்திரப்படுத்தி கொண்டவன் பயணத்தின் போது தனக்குத் தேவையான ஆகாரங்களையும் நீரையும் குதிரையில் கழுத்தில் பொதியாக கட்டிக்கொண்டான்.

கையில் எதற்கும் இருக்கட்டும் என்று அவன் ஒரு வேலையும் எடுத்துக்கொண்டான். அந்த வேலுக்கு எந்த வேலையும் இருக்காது என்று அவன் நினைத்தது போக பயணம் தொடங்கிய ஒரு நாழிகைக்குள்ளாகவே அந்த வேலுக்கு வேலையும் வந்தது.

மாரப்பன் காஞ்சிக்கு செல்லும் பிரதான ராஜ பாட்டையில் தன் புரவியை வேகமாக செலுத்திக்கொண்டு சென்றான். அமரா தேவி சொன்ன வார்த்தைகள் அவனுக்கு நன்றாகவே நினைவில் இருந்ததால் அவன் புரவி துரித வேகத்தில் காஞ்சியை நோக்கி பயணப்பட்டது.

ஆனால் அவன் பயணத்தைத் தடைசெய்யும் விதமாக அந்த ராஜபாட்டையில் இரு குழுக்கள் தகராறு பண்ணிக்கொண்டிருக்கவே தன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான் மாரப்பன்.

“யாரப்பா நீ?” கை கலப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவன் மாரப்பனை பார்த்து கேள்வி கேட்டான்.

“ஐயா! நான் காஞ்சிக்கு செல்லும் வழிப்பிரயாணி, அவசர வேலையாக காஞ்சியை நோக்கி போகிறேன், நீங்கள் கொஞ்சம் எனக்கு வழிவிட்டால் நான் பாட்டில் போய்க்கொண்டே இருப்பேன்.”

“தம்பீ… இந்த கலகம் இப்போதைக்கு முடிவது போல தெரியவில்லை, அதனால் சற்று நேரம் ஒதுங்கி நின்று கொள்.”

“ஐயா, நான் அவசரமாக காஞ்சிக்கு பயணப்பட வேண்டும், கொஞ்சம் கருணைக் காட்டுங்கள்.”

“இதில் நான் செய்ய எதுவுமே இல்லை, வேண்டுமானால் அங்கே எங்கள் குழுவின் தலைவர் இருக்கிறார், அவரிடம் போய் பேசிப்பார்.” அந்த மனிதன் காட்டிய திசையில் திரும்பிய மாரப்பன் அங்கு ஓர் வாலிபன் நிற்பதைக் கண்டான்.

தலையில் அந்த வாலிபன் கட்டியிருந்த முண்டாசு தலையை மறைத்ததை விட அவன் முகத்தை மறைப்பதற்காகவே கட்டியது போல இருந்தது.

‘இவர்கள் என்ன கொள்ளைக் கூட்டமா?!’ மனதிற்குள் நினைத்த படியே தன் புரவியையும் நடத்திக்கொண்டு அந்த வாலிபனிடம் போனான் மாரப்பன். அவன் கை ஒரு முறைத் தன் இடைக்கச்சையைத் தடவிப் பார்த்து கொண்டது.

“ஐயா, நான் காஞ்சிக்கு ஒரு அவசர வேலையாக போகவேண்டும்.”

“அதற்கு என்னை என்ன செய்ய சொல்கிறாய்?” கோபமாக வந்து வீழ்ந்தது கேள்வி.

“கொஞ்சம் வழியை விட்டீர்கள் என்றால்…”

“டேய்! யாரங்கே? இவனை அந்த மரத்தோடு இழுத்துக்கட்டு!” மாரப்பன் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்னால் ஆணைப் பிறந்தது. இப்போது மாரப்பனின் கை அவனது வேலுக்காக நகர,

“டேய்! உனக்கு எத்தனைத் துணிச்சல் இருக்க வேண்டும்!” கூவிக்கொண்டே கோபமாக எழுந்த அந்த வாலிபன் மாரப்பனின் கையிலிருந்த வேலைப் பிடுங்கினான்.

“இவனை அந்த மரத்தில் கட்டுங்கள்!” மீண்டும் அந்த வாலிபன் கர்ஜிக்க நான்கைந்து வீரர்கள் இவனைச் சூழ்ந்து கொண்டு அங்கிருந்த பெரிய மரமொன்றில் கட்டினார்கள்.

“அவனை நன்றாக சோதனைப் போடு!” அடுத்த ஆணையில் மாரப்பன் திடுக்கிட்டு போனான்.

“ஐயா! இது என்ன பகல் கொள்ளையாக இருக்கிறது? பல்லவ சாம்ராஜ்யத்தில் இப்படியெல்லாம் கூட நடக்குமா?”

“டேய்! நீ உன் திருவாயை மூடிக்கொண்டிருந்தால் உயிரோடாவது திரும்பி போவாய், அதை விட்டுவிட்டு அதிகம் பேசினாயானால் இங்கேயே உன் தலையைச் சீவி கழுகிற்குப் போட்டு விடுவேன் ஜாக்கிரதை!”

அந்த வாலிபன் சொல்லி முடிக்க இரண்டு வீரர்கள் இவனை அணுகி சோதனைப் போட ஆரம்பித்தார்கள். மாரப்பனின் இடைக்கச்சையில் ஒரு வீரன் கை வைக்கவும் அவனை உக்கிரமாக பார்த்தான் மாரப்பன்.

“வீரனே! இடைக்கச்சையில் கை வைக்காதே!” மாரப்பனின் கோபத்தைப் பார்த்து அங்கிருந்த எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

இத்தனை நேரமும் கோபத்தால் சிவந்திருந்த அந்த இளைஞனின் முகம் கூட இப்போது புன்னகைக் கோட்டியது. அவனாகவே மாரப்பனை நோக்கி நடந்து வந்தவன் அவன் இடைக்கச்சையைப் பரிசோதித்தான்.

ஒரு சில வெள்ளி நாணயங்களும் ஒரு ஓலைக் குழலும் அந்த வாலிபன் கையில் சிக்குண்டன. நாணயங்களை மீண்டும் கச்சையில் வைத்தவன் அந்த ஓலைக் குழலை மேலும் கீழுமாக திருப்பி திருப்பி பார்த்தான்.

“ஐயா! நான் ராஜீய விவகாரமாக காஞ்சிக்கு போகிறேன், என் பயணத்தை நீங்கள் வழிமறித்து தாமதப்படுத்தியதே பெருந்தவறு, இதில் ஓலைக் குழலை வேறு எடுக்கிறீர்கள்!”

இவை எதையும் கருத்தில் கொள்ளாத அந்த வாலிபன் ஓலைக்குழலை மெதுவாக திறந்தான்.

“ஐயா! வேண்டாம்!” மாரப்பனின் பதறிய குரல் அந்த வாலிபன் காதிலேயே விழவில்லை. ஓலையைச் சாவகாசமாக படித்தான். அதில் கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தது.

‘தொலைந்து போன கனக புஷ்பராகம் மீண்டும் கிடைக்க பெற்றுள்ளது! தொலைத்தவரிடம் சொல்வதா வேண்டாமா என்று பெரும் குழப்பமாக இருக்கிறது! முடிவை உங்களிடம் ஒப்படைக்கிறேன்! சிம்ம பெயரோனைக் கருத்திற் கொண்டு முடிவெடுங்கள்.’

ஓலையைப் படித்து முடித்த அந்த இளைஞன் கடகடவென்று பலமாக சிரித்தான்.

“அடேய் மடையா!‌ இதையா ராஜீய ஓலை என்று பெரிதாக பீற்றிக்கொண்டாய்? இதில் என்ன எழுதி இருக்கிறது தெரியுமா?” விழுந்து விழுந்து சிரித்த அந்த வாலிபனே மீண்டும் தொடர்ந்தான்.

“யாரோ இரண்டு மாணிக்கக்கல் வியாபாரிகள் சம்பந்தப்பட்டது இந்த ஓலை, யாரோ தொலைத்ததை யாரோ கண்டு பிடித்திருக்கிறார்களாம்!”

“ஐயா, அந்த ஓலையில் எது எழுதப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை… எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உத்தியோகத்தைச் செய்கிறேன், அந்த ஓலையைத் தயவு செய்து என்னிடம் கொடுத்து விடுங்கள்.”

“சரி சரி இந்தா பிடி, விட்டால் இன்றைக்கு முழுக்க ஒப்பாரி வைப்பாய் போல் தெரிகிறது.” ஓலைக் குழலை மாரப்பனிடம் கொடுத்த அந்த வாலிபன் அவன் கட்டுகளையும் அவிழ்த்து விட்டான்.

“நீ இப்போது போகலாம்.” அந்த வாலிபன் சொன்னதுதான் தாமதம், மாரப்பன் தனது புரவி மீது தாவி ஏறிக்கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவனது இடது கை கச்சையில் ஓலைப் பத்திரமாக இருக்கிறதா என்று மீண்டுமொரு முறைச் சரிபார்த்து கொண்டது.

அதேவேளை தனது தலையிலிருந்த முண்டாசைக் கழட்டிய மார்த்தாண்டனின் முகத்தில் தீவிர சிந்தனைத் தெரிந்தது.

“இளவரசே!”

“ம்…” சிந்தனைக் கலைய திரும்பினான் மார்த்தாண்டன். அவன் படைத்தலைவர்களில் ஒருவனான உதிரன் அவன் எதிரே நின்று கொண்டிருந்தான். இருவருக்கும் இடையே நல்லதொரு நட்பு இருந்ததால் அவனைப் புன்னகையோடு பார்த்தான் மார்த்தாண்டன்.

“சொல் உதிரா!”

“ஓலையிலிருந்து ஏதாவது தகவல் கிடைத்ததா?”

“கிடைத்தது, நிரம்பவே கிடைத்தது.”

“அப்படியென்றால் எதற்காக அந்த வீரனைப் போக அனுமதித்தீர்கள்?”

“இல்லையில்லை… அவன் நிச்சயமாக காஞ்சிக்குப் போக வேண்டும்.”

“ஓஹோ!”

“ஆமாம், அவன் கொண்டு செல்லும் செய்தி சம்பந்தப்பட்டவர்களிடம் போய் நிச்சயம் சேரவேண்டும்.”

“அந்த செய்தியால் நமக்கேதும் ஆபத்து நேருமா?” உதிரனின் கேள்வியில் மார்த்தாண்டன் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறீர்கள் இளவரசே? நான் ஆபத்தைக் கண்டு பயப்படவில்லை, ஆனால் நடப்பது என்ன, அதில் நம் நிலைமை என்ன என்று புரிய வேண்டும் அல்லவா? அதனால்தான் கேட்டேன்.”

“இல்லை உதிரா… நான் உன் கேள்வியை நினைத்து சிரிக்கவில்லை, அந்த ஓலையை நினைத்து சிரித்தேன்.”

“ஏன்? அதில் கண்டிருக்கும் செய்தி அத்தனை முக்கியமானது இல்லையா? நாம் செய்த இத்தனை முயற்சியும் அப்படியென்றால் வீண்தானா?”

“இல்லையில்லை… ஓலையில் கண்டிருக்கும் செய்தி முக்கியமானது, மிக முக்கியமானது… அதை நான் சம்பந்தப்பட்டவர்களிடம் சிறிது ஊர்ஜிதம் செய்துகொள்ள வேண்டும்.”

“புரியவில்லை இளவரசே!”

“உதிரா… ஓலையில் கண்டிருக்கும் செய்தி பல்லவ சாம்ராஜ்யத்தையே புரட்டி போடக்கூடியது, ஒரு வேளை அது எதிரிகள் வசம் சிக்கும் பட்சத்தில் யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது என்று மறைமுகமாக எழுதப்பட்டுள்ளது.”

“ஓஹோ!”

“இப்போது என்னிடம் எதுவும் கேட்காதே, இன்றைக்கு இரவு எல்லாம் திட்டவட்டமாக தெரிந்துவிடும்.”

“அப்படியானால்…‌ இன்றைக்கு இரவு நாம் போட்ட திட்டம்?”

“அதில் எந்த மாற்றமும் இல்லை, கொற்கையின் சிறையிலிருக்கும் மைத்ரேயி இன்றைக்கு இரவு நிச்சயம் மீட்கப்படுவாள்.”

“ஏற்பாடுகள் அனைத்தும் நடந்த வண்ணமே இருக்கின்றன.”

“நல்லது, அனைத்தையும் துரிதப்படுத்து, இன்றைக்கு இரவு முதலாம் ஜாமம் முடியும் தறுவாயில் அனைத்தும் திட்டமிட்ட படி செவ்வனே நடக்க வேண்டும்.”

“உத்தரவு இளவரசே!” உதிரன் அப்பால் நகர தனது புரவியில் ஏறிக்கொண்ட மார்த்தாண்டன் ஆற்றங்கரையை நோக்கி புரவியைச் செலுத்தினான். அவன் சிந்தனை முழுவதும் மைத்ரேயியையே வலம் வந்தது.

‘கனக புஷ்பராகம்!’ வாய்க்குள் முணுமுணுத்தான் மார்த்தாண்டன்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!