PallavanKavithai-01

PKpic-514f8b29

PallavanKavithai-01

பல்லவன் கவிதை 01

நெடிதுயர்ந்த மரங்களால் அந்த காட்டுப்பகுதி நிறைந்திருந்தது. சூரியனின் கதிர்கள் உள்ளே நுழைய முடியாதபடி விருட்சங்களின் கிளைகளும் இலைகளும் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தன.

அந்த மரங்களுக்குக் கீழே ஒரு சாண் அளவிற்கு பசுமையாக படர்ந்திருந்த புற்களை இரு புரவிகள் அசைபோட்டுக் கொண்டிருந்த மதியவேளை.

அசுவ லட்சணம் பொருந்திய அந்த இரு புரவிகளையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது, அது சாதாரண குடிகளோ வணிகர்களோ பயன்படுத்தும் புரவியல்ல என்று. அதன் மேல் போடப்பட்டிருந்த சேணமும் அதன் பின்னந்தலை மயிரின் நேர்த்தியும் அதைக் கொண்டு வந்திருப்பவர்கள் மன்னர்குல மக்கள் என்று பறைசாற்றியது.

“அண்ணா!” தன்னை நோக்கி வந்த அந்த குரலில் தொனித்த கோபத்தை லவகேசமும் சட்டைச் செய்யவில்லை அந்த வாலிபன். தான் சாய்ந்தபடி வானம் பார்த்துப் படுத்திருந்த அந்த மரத்தின் வேரில் இன்னும் வாகாக சாய்ந்து கொண்டான். ஆனால் தலை மட்டும் லேசாக திரும்பிப் பார்த்தது.

“நான் பேசுவது உன் காதில் விழுகிறதா இல்லையா?” வரவழைத்த கோபத்தோடு தன் அண்ணனையே பார்த்தபடி நின்றிருந்தாள் அமரா தேவி.

பதினெட்டுப் பிராயம்தான் இருக்கும் அவளுக்கு. பெண்மையின் லட்சணங்களும் நளினங்களும் அவளிடம் நிரம்பி தெரிந்தன. இருந்தாலும் அவற்றை எல்லாம் உதறி தள்ளிவிட்டு தன் அண்ணனோடு வேட்டைக்குக் கிளம்பி வந்திருந்தாள்.

ராஜ குலத்தவர் மட்டுமே வேட்டையாட அனுமதிக்கப்பட்ட பகுதி அது. புடவையைப் பஞ்சகச்சம் போல அணிந்திருந்தாள் அமரா தேவி. கால்களிலும் இடுப்புப் பகுதியிலும் மான் தோல் கொண்டு அவள் புடவையை இறுக்கி கட்டி இருந்ததால் வேட்டைக்கு என்ன, போருக்குப் போவதற்கே அந்த உடை வெகு பொருத்தமாக இருந்தது.

அவள் அணிந்திருந்த பல்லவ நாட்டுப் பட்டு தயவு தாட்சண்யம் இல்லாமல் அவன் செழித்த அழகுகளை எல்லாம் மூடி மறைத்திருந்தது. கூந்தலை உயரத் தூக்கி கொண்டைப் போட்டிருந்தாள்.

“இது நியாயமில்லை அண்ணா.” மீண்டும் அமரா தேவியின் குரல் கோபத்தைக் காட்டியது. அப்போதும் மகேந்திர பல்லவன் தனது மோன நிலையைக் கலைக்காமல் தங்கையை நிமிர்ந்து பார்த்தான்.

“வேட்டைக்கென்று வந்துவிட்டு இப்படி வானம் பார்த்துப் படுத்துக் கொண்டால் என்ன அர்த்தமாம்?”

“அதுதான் வேட்டை முடிந்து விட்டதே அமரா, இன்னும் என்ன?” அப்போதும் அலட்சியமாகவே பதில் சொன்னான் மகேந்திரன்.

“சரியாக போய்விட்டது. நேரத்தைக் கவனித்தாயா? இப்போதே பசி வயிற்றைக் கிள்ளுகிறது. உணவு எப்போது தயாராவது, நான் எப்போது உண்பது? கொஞ்சம் எனக்கு உதவி பண்ணக் கூடாதா அண்ணா?” தங்கையின் வார்த்தையில் இருந்த போலிப் பணிவு மகேந்திர வர்மனின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது.

தங்கை பசி பொறுக்க மாட்டாள் என்பது அவனறிந்த விடயம் என்பதால் தனது சிந்தனைகளை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு எழுந்து வந்தான் மகேந்திரன். சிறு சிறு குச்சிகளைப் பொறுக்கி ஏற்கனவே நெருப்பு மூட்ட அனைத்து ஆயத்தங்களும் பண்ணி வைத்திருந்தாள் அமரா.

“அண்ணா, நீ தீயை மூட்டு. நான் மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன்.” என்று கூறிவிட்டு வேட்டையாடியவற்றை தீயில் சமைப்பதற்கு ஆயத்தமானாள் இளையவள்.

கை தன்பாட்டில் வேலைச் செய்தாலும் கண்கள் என்னவோ மகேந்திரனையே கவனித்த வண்ணம் இருந்தன.

இலங்கைக்குப் போய் வந்த நாளிலிருந்து தன் அண்ணன் இப்படியே சர்வசதா காலமும் சிந்தனையில் இருப்பது அமராவிற்கு அவ்வளவு உடன்பாடாக இருக்கவில்லை. அதனாலேயே இன்று வேட்டைக்குப் போகலாம் என்று மகேந்திரனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தாள்.

தங்கையை மகிழ்விக்க அவள் இட்ட பணிகளைச் செய்தாலும் மகேந்திரனின் மனதில் இன்பத்தின் சாயல் சிறிதும் இருக்கவில்லை.

“அண்ணா! இது நியாயம்தானா?”

“எது அமரா?”

“இலங்கைக்குப் போய் போரைப் பார்த்த நாளிலிருந்து இப்படியே இருக்கிறாயே? இது நீ பிறந்த குலத்திற்கு அழகாகுமா?”

“அமரா… என் வீரத்தை நீ சந்தேகப்படுகிறாயா?”

“ஐயையோ! இது என்ன பேச்சு அண்ணா? வீராதி வீரர் சிம்ம விஷ்ணு மகாராஜாவின் தவப்புதல்வர், பல்லவ குலம் கண்டெடுத்த மாபெரும் வீரர் மகேந்திர வர்மரின் வீரத்தை நான் சந்தேகிப்பதா? உலகம் இதை ஏற்றுக்கொள்ளுமா?”

“பின் ஏன் நான் பிறந்த குலத்திற்கு அழகு சேர்க்கவில்லை என்று சொன்னாய்?”

“போர் புரிவது மன்னர் குலத்தின் வழக்கம்தானே? இதற்காக நீ ஏன் இத்தனைத் தூரம் வருத்தப்படுகிறாய்?”

“மன்னர் குலத்தில் பிறந்துவிட்டால் வாளையும் கேடயத்தையும் தூக்கிக்கொண்டு ரத்த வெறியோடு அலைய வேண்டுமா அமரா?” மகேந்திரனின் குரலில் கவலைத் தொனி தெரிந்தது.

“புரியவில்லை அண்ணா.”

“அமரா… மன்னன் என்பவன் மக்களைக் காக்க பிறந்தவன். எந்தவொரு ராஜ்ஜியத்திலும் மக்கள் போரை விரும்புவதில்லை. அமைதியான வாழ்க்கையைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.”

“அப்படியானால் போரென்று வந்துவிட்டால்?”

“அப்போது நிலைமை வேறு. தன் ராஜ்ஜியத்தின் மீது ஒரு பகைப் படைத்தலைவன் போர் தொடுக்கும் போது தன் வாளை உருவுவது மன்னனின் கடமை. அதை விடுத்து மண்ணுக்கு ஆசைப்பட்டு வீணாக வீரர்களைப் பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம் அமரா?”

“ராஜ்ஜிய விஸ்தரிப்பு என்பது ஆண்டாண்டு காலமாக நடைபெறுவதுதானே அண்ணா?” தங்கையின் கேள்வியில் மகேந்திரன் இப்போது லேசாக புன்னகைத்தான். அவன் புன்னகை முழுவதும் கசப்பு வழிந்தது.

“இலங்கையில் நடந்த போரைப் பார்த்தாயா அமரா? எத்தனைக் கோரம்! அப்பப்பா! உருண்டோடிய ஆயிரம் தலைகள் யானைகளின் கால்களில் மிதிபட்ட போது இலங்கை மன்னனின் வெற்றியைக் குறித்து எனக்குப் பெருமிதம் தோன்றவில்லை. மாறாக உருண்டோடிய அந்த தலைகளால் எத்தனைப் பெண்கள் விதவைகள் ஆகியிருப்பார்கள், எத்தனைக் குழந்தைகள் அநாதைகள் ஆகியிருக்கும்… இவையெல்லாம்தான் என் மனக்கண்ணில் ஓடியது.”

“அண்ணா!”

“போதும் அமரா. இந்த போர்களையே நான் வெறுக்கிறேன். ராஜ்ஜியத்தை விஸ்தரித்துத் தங்கள் பெயர்களைக் கல்வெட்டுக்களில் பெருமையாக பொறித்துக் கொள்வதை விட இந்த மன்னர்கள் எல்லோரும் தங்கள் மக்களைச் சுபீட்சமாக வைத்திருப்பதில் ஊக்கம் காட்டலாமே.”

“நியாயமான பேச்சுதான், ஆனால் இதையெல்லாம் அவர்களிடம் யார் சொல்வது? சொன்னாலும்தான் ஏற்றுக் கொள்வார்களா?”

“யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் என் ராஜ்ஜியம் இப்படித்தான் இருக்கும். நம் தந்தை சிம்ம விஷ்ணு மகாராஜா நடத்தும் சிறப்பான ஆட்சியைப் போலத்தான் இந்த மகேந்திர வர்மனின் ஆட்சியும் இருக்கும்.”

“நல்லது அண்ணா. ஆனால் இலங்கை மன்னனின் ராணி என்னிடம் என்ன சொன்னாள் தெரியுமா?” தங்கையின் கேள்வியில் தொனித்த கேலியில் மகேந்திரனின் முகத்தில் சிந்தனைப் படர்ந்தது.

“உங்கள் ராஜ்ஜியத்தில் போரே நடந்ததில்லை என்றுதானே உங்கள் தந்தை உங்களிருவரையும் இங்கே போரைப் பார்க்க அனுப்பி வைத்திருக்கிறார் என்றாள். அதைச் சொல்லும்போது அந்த பொல்லாத ராணியின் முகத்திலிருந்த கேலியை நீ பார்த்திருக்க வேண்டுமே.” அமரா குறைப்பட்டுக் கொண்ட போது மகேந்திரவர்மன் புன்னகைத்தான்.

“நாட்டில் கல்வியையும் வித்தைகளையும் பேணி பாதுகாத்து, செல்வ செழிப்பு குறையாமல், நாணயத்தின் மாற்றைக் குறையவிடாமல் வணிகம் செய்து… இப்படி எத்தனையோ ஆக்கப்பூர்வமான வேலைகள் ஒரு மன்னவனுக்கு இருக்கும்போது எதற்கு அமரா தோள் தினவெடுத்து மக்களை அழிக்கவேண்டும்?”

“அண்ணா!”

“நான் ஒன்று சொல்லட்டுமா அமரா? சொன்னால் நீ கோபித்துக் கொள்ள மாட்டாயே?”

“ம்ஹூம்… மாட்டேன், நீ சொல்லு.”

“சில பொழுதுகளில் நான் நினைப்பதுண்டு. என் சிற்றன்னை மதிவதனி தேவியின் மகனாக உனக்குப்பதில் நான் பிறந்திருக்க கூடாதா என்று.”

“என்ன?! பார் போற்றும் சிம்ம விஷ்ணு மகாராஜாவின் பட்டமகிஷியான விஜயமகா தேவியிடம் நீ அப்படியென்ன குறையைக் கண்டாய் அண்ணா?”

“குறையென்று யார் சொன்னார்கள்?‌ என் அன்னையின் வயிற்றில் நான் முதலாவதாக பிறந்ததால்தானே இந்த முள் கிரீடம் என் தலைக்கு வரப்போகிறது. இல்லையென்றால் இந்த பல்லவ தேசத்திற்கு உன்னை ராணியாக்கிவிட்டு என் இஷ்டம் போல கலைகளை வளர்ப்பதில் நான் ஆர்வம் காட்டியிருக்கலாமே.”

“நன்றாக இருக்கிறது உன் பேச்சு.”

“ஏன்? என் பேச்சிற்கு என்ன குறை? நினைத்துப் பார் அமரா. கல்விக்குப் பெயர் போன இந்த காஞ்சி மாநகரிலே இன்னும் பல பல கல்விக்கூடங்களும் கலாசாலைகளும் அமைந்தால் எப்படி இருக்கும்? நகரேஷு காஞ்சி என்று புலவர்களால் வர்ணிக்கப்பட்ட இந்த காஞ்சிக்கன்னிக்கு சமஸ்கிருத கடிகைகளாலும் சைவ திருமடங்களாலும் புத்த மடாலயங்களாலும் இந்த மகேந்திர பல்லவன் ஆபரணம் பூட்டினால் எத்தனை அழகாக இருப்பாள்?!”

கண்களில் கனவு மிதக்க பேசிக்கொண்டிருந்த தன் அண்ணனைப் பார்த்த போது அமரா தேவிக்கு லேசாக கவலைப் பிறந்தது. அவன் பேசுவது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள்தான் என்ற போதும் உலகம் இதை ஏற்றுக் கொள்ளுமா?

மகாவீரரான சிம்மவிஷ்ணு மகாராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவன் சதா சர்வ காலமும் கலைகளை வளர்ப்பதிலேயே காலம் கடத்தினான் என்று வரலாறு இகழ்ந்து விட்டால்? அமரா தேவிக்கு உடம்பு நடுங்கியது.

“அண்ணா நீ சொல்வது எல்லாம் சரிதான். உன் மனம் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் கல்விக்கும் கலைகளுக்கும் பெயர் போன இந்த காஞ்சி சுந்தரியைக் கவர்ந்து கொள்ள மன்னர்கள் பலர் ஆசைக் கொண்டிருப்பதாக சதா ஒற்றர்கள் சேதி கொண்டு வருகிறார்களே, அதற்கு என்ன ஏற்பாடுகள் செய்ய போகிறாய்?”

தங்கையின் குரலில் கனவிலிருந்து மீள்பவன் போல திடுக்கிட்டுத் திரும்பினான் மகேந்திரன். அவன் நாசியிலிருந்து ஒரு பெருமூச்சுக் கிளம்பியது.

“கல்விக்கும் கலைகளுக்கும் செலவு செய்ய வேண்டிய பொன்னையும் பொருளையும் வாளுக்கும் வேல்களுக்கும் செலவு செய்ய வேண்டியதுதான். வேறு என்ன செய்ய?” மகேந்திரனின் குரலில் அத்தனை வெறுப்பு மண்டிக் கிடந்தது.

இதற்கு மேல் அண்ணனைப் பேச விடுவது அத்தனை உசிதமில்லை என்று புரிந்தது அமரா தேவிக்கு. எனவே பேச்சை மாற்றினாள்.

“அது போகட்டும் அண்ணா, நீ புதிதாக அமைத்திருக்கும் ‘நாதக்கூடம்’ எப்படி இருக்கிறது? நன்றாக போகிறதா? மாணவர்கள் ஆர்வத்தோடு வீணைப் பயில்கிறார்களா?” அந்த வார்த்தைகளைத் தங்கைக கேட்ட மாத்திரத்தில் மகேந்திரனின் முகம் மலர்ந்து விகசித்தது.

“அமரா! என்ன இப்படிக் கேட்டு விட்டாய்? காஞ்சி மாநகரில் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும் எத்தனை ஆர்வமாக வீணை கற்றுக் கொள்கிறார்கள் தெரியுமா?”

“என்ன? ஆண் பிள்ளைகளுமா?” அமரா தேவியின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.

“ஹா… ஹா… ஏன் அமரா? உன் அண்ணன் ஆண்பிள்ளை இல்லையா?” வீணையைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் அண்ணனின் குரலில் இருந்த குதூகலத்தை அமரா தேவி கவனிக்க தவறவில்லை.

பல்கலை வேந்தனாக இருந்த தன் அண்ணன் வீணை வாசிப்பதில் புலி என்பதில் அந்த தங்கைக்கு மிகவும் கர்வம்தான். இருந்தாலும் அந்த கலைப்பித்து அவனை ராஜ்ஜீய விவகாரங்களில் இருந்து விலக்கிவிட கூடாதே என்று அவள் மனம் சஞ்சலப்பட்டது.

“அப்படி சொல்லவில்லை அண்ணா. நீ ஒரு அபூர்வ பிறவி. கலைகளில் உனக்கிருக்கும் ஆர்வம் யாருக்கும் கிடைக்க பெறாத பேறு.”

“அப்படியல்ல அமரா. இன்று கலைகள் ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி எல்லோராலும் விரும்பப்படுகிறது. நம் நாதக்கூடத்தின் புகழ் காஞ்சியையும் தாண்டி வேறு ஊர்களிலும் பரவி இருக்கிறது. பிற ஊர்களிலிருந்தும் அதிக மாணவர்கள் இப்போது வருவதால் நம் அடிகளாரிடம் இன்னும் சில உபாத்தியாயர்களை பணிக்கமர்த்துமாறு சொல்லி இருக்கிறேன். நாளைக்கு அடிகளை எப்படியும் சந்திக்க வேண்டும். நல்ல வேளை ஞாபக படுத்தினாய்.”

பேச்சினூடே நெருப்பில் வாட்டிய உணவுப் பொருட்களும் தயாராகிவிட அண்ணனும் தங்கையும் அதை ருசித்துப் புசித்தார்கள்.

“அண்ணா எனக்குக் களைப்பாக இருக்கிறது. நான் வேட்டுவ மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்க போகிறேன். நீயும் வருகிறாயா இல்லை இங்கேயே ஓய்வெடுக்க போகிறாயா?”

“நான் இங்கேயே சிறிது நேரம் இருந்துவிட்டு வருகிறேன் அமரா. நீ உன் புரவியை எடுத்துக் கொண்டு போ.”

“ம்… சரி.” சொல்லிவிட்டு தன் புரவியை அவிழ்த்துக் கொண்ட பெண் அதில் லாவகமாக தாவி ஏறினாள். அவள் ஏறிய மாத்திரத்தில் தன் எஜமானியின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அந்த புரவியும் காட்டு முகப்பில் அமைந்திருந்த வேட்டுவர் மாளிகையை நோக்கி பாய்ந்தோடியது.

***

பொழுது புலர்ந்து இரண்டு நாழிகை கடந்திருந்தது. தன் காலை ஸ்நானத்தை முடித்துக்கொண்டு புத்தாடை அணிந்து கொண்டாள் அமராதேவி. எப்போதுமே ஆடை ஆபரணங்களில் அதிக பற்று இல்லாததால் ஒரு முத்துமாலை மட்டும் அவள் செழித்த வனப்புகளைத் தொட்டு அலங்கரித்திருந்தது.

“செல்வி.” அந்த ஒற்றை வார்த்தையில் அரசகுமாரியின் படுக்கையைச் சீர்செய்து கொண்டிருந்த பணிப்பெண் விரைவாக வந்தாள்.

“ஏன் அரசகுமாரி?”

“தந்தை எழுந்து விட்டாரா?”

“இது என்ன புதிதாக கேட்கிறீர்கள் அரச குமாரி. மகாராஜா என்றைக்குச் சூரிய உதயத்திற்குப் பிறகு தூங்கியிருக்கிறார்?” சிறு வயது முதற்கொண்டு தன் தோழியாக இருக்கும் செல்வி எதைச் சொன்னாலும் அமராதேவியின் முகத்தில் புன்முறுவல் படர்வது இயற்கை.

“சரி சரி, நான் தந்தையைப் பார்க்க வேண்டும். ஏற்பாடு பண்ணு.”

“இதோ, சேதி அனுப்புகிறேன் அரச குமாரி.” செல்வி அப்புறமாக அகன்றதும் அங்கிருந்த செங்கழுநீர் புஷ்பமொன்றைக் காதோரமாக சொருகி கொண்டாள் மன்னன் மகள்.

அந்தப்புரத்திற்கு அடுத்ததாக இருந்த நந்தவனத்தைக் காத்து நிற்பதுபோல இருந்தது மகாராஜாவின் மாளிகை. அதிகாலையிலேயே மகாராஜா ஸ்நானத்தை முடித்துக் கொண்டு தன் ராஜ்ஜீய அலுவல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுவார் என்பதால் அந்த மாளிகை எப்போதும் உயிர்ப்புடனேயே இருக்கும்.

நந்தவனத்தைக் கடந்துத் தந்தையின் மாளிகையை நோக்கி நடந்தாள் அமராதேவி. அப்போதுதான் கண்விழித்த இரண்டு தவிட்டுப் புறாக்கள் மன்னன் மகளை நோக்கி தலையைத் திருப்பின. பணிப்பெண்கள் போட்டிருந்த அகில் புகையின் வாசனை மாளிகையைத் தாண்டி நந்தவனத்திலும் மணம் வீசின.

மாளிகைத் தாழ்வாரத்தில் நடந்து வந்துகொண்டிருந்த அமராதேவியை எதிர்கொண்டாள் செல்வி.

“அரசகுமாரி, மன்னர் உங்களைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்.”

“அப்படியா?!” உற்சாகத்தோடு பதில் சொன்ன அரசிளங்குமரியும் தன் நடையின் வேகத்தைக் கூட்டிக்கொண்டு தந்தையைக் காண சென்றாள்.

தன் அறையின் ஓர் மூலையில் இருந்த பட்டுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஓர் ஓலையை எழுதியபடி இருந்த சிம்மவிஷ்ணு மகாராஜா தன் புதல்வியைக் கண்டதும் முகம் மலர அவளை நோக்கி தன் கையை நீட்டினார்.

“வா குழந்தாய்!”

“அப்பா! நலமாக இருக்கிறீர்களா?”

“என் நலத்திற்கு என்ன குறை அமரா. பயணம் எல்லாம் சௌக்கியமாக இருந்ததா?”

“அப்பா! அதை என்னவென்று சொல்வது?! அப்பப்பா! என்னமாதிரியான அனுபவம் அது! இப்போது நினைத்தாலும் என் உடம்பு சிலிர்த்து புது ரத்தம் பாய்வது போல இருக்கிறது அப்பா.” குதூகலித்து மகிழ்ந்த தன் மகளின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார் பல்லவ மகாராஜா.

“இலங்கை சிறிய நாடு என்று எல்லோரும் சொல்கிறார்களே, அப்படி என்ன பெரிதாக அங்கே போர் நடந்துவிட போகிறது என்றுதான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். ஆனால் போருக்கு நாடும் அதன் அளவும் முக்கியமல்ல, வீரமும் தைரியமும்தான் வேண்டும் என்று காட்டிவிட்டார் இலங்கை மன்னர்.” மகளின் பேச்சை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார் மகாராஜா.

“ஆனால் ஒன்று மட்டுந்தான் எனக்குப் பெரும் குறையாக இருந்தது அப்பா.”

“அது என்ன குழந்தாய்? இலங்கை மன்னர் எனக்கு அனுப்பியிருந்த ஓலையில் நீயும் உன் அண்ணனும் மிகவும் ஆர்வத்தோடு போரில் பங்குபற்றியதாகத்தானே எழுதி இருந்தார்?”

“ஆமாம்… அவர் சொன்னது எல்லாம் சரிதான். மந்திராலோசனை சபை முதற்கொண்டு வியூகம் வகுப்பது வரை அனைத்திலும் என்னையும் அண்ணனையும் சேர்த்துக்கொண்ட இலங்கை மன்னர் எங்களை வாள் பிடிக்க மட்டும் அனுமதிக்கவில்லையே அப்பா.” அமராவின் குரலில் தெரிந்த ஏக்கத்தில் வாய்விட்டுச் சிரித்தார் சிம்மவிஷ்ணு மகாராஜா.

“ஏன் அப்பா சிரிக்கிறீர்கள்? போர் முரசு கொட்டி இரு சைனியங்களும் ஒன்றோடு ஒன்று கை கலந்த போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? வாளை உருவிக்கொண்டு போர்க்களத்தில் குதித்து நான்கைந்து தலைகளையாவது சீவி வீழ்த்த வேண்டும் என்று என் உதிரம் கொதித்தது. வேல்களும் அம்புகளும் எதிரிகள் மீது பாய்ந்த போது அவை என்னைப் பார்த்து கேலியாக சிரிப்பது போல தோன்றியது எனக்கு. போரை வேடிக்கைப் பார்ப்பது போல கொடுமையான விஷயம் வேறு ஒன்றும் இல்லை அப்பா.”

“அது அப்படியல்ல அமரா. நீயும் உன் அண்ணனும் எத்தனை வித்தைகளைக் கற்றாலும், போர் பயிற்சிகளை மேற்கொண்டாலும் இதுவரை உங்களுக்குப் போரைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால்தான் என் சிபாரிசின் பேரில் சிரமம் பாராது இலங்கை மன்னர் தற்சமயம் உங்களை அவர் நாட்டுக்கு விருந்தினராக அழைத்தார். இருந்தாலும் அவர் நாட்டுப் போரில் நீங்கள் கலந்து கொள்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா?”

“ஆமாம், அண்ணன் அனுமதி கேட்ட போது அவரும் இப்படித்தான் ஏதேதோ காரணங்கள் சொன்னார். அது போகட்டும் அப்பா, இலங்கையில் இருக்கும் ஒரு மலைஜாதி குடிகள் அம்பெய்வதில் மிகவும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அம்பு முனையில் ஏதேதோ பச்சிலைகளை அரைத்து அதன் சாற்றை தடவி எய்து விடுகிறார்களாம். அந்த அம்புகள் பாய்ந்த மாத்திரத்தில் யானைகளுக்கு அப்படியொரு மதம் பிடிக்கிறது. புது வகையாகவும் அம்பெய்வதில் அவர்கள் மிகவும் வல்லவர்களாம்.”

“அப்படியா?”

“ஆமாம் அப்பா. அவர்களை இங்கு நாம் அழைத்து வரவேண்டும். நம் வீரர்களுக்கும் அது போன்று பயிற்சி அளிக்க வேண்டும். நானும் கூட அந்த புதுவகைப் பயிற்சியில் இணைந்து கொள்ள வேண்டும் அப்பா.”

“போதும் போதும்… இத்தனை நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் அப்பாவிற்கும் மகளிற்கும் பேச வேறு பேச்சே கிடைக்கவில்லையா?” குரல் வந்த திசையில் தந்தையும் மகளும் திரும்பி பார்த்தார்கள். பூக்கூடையைக் கையில் ஏந்தியபடி நின்றிருந்தார் விஜயமகா தேவி.

பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷி ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் அந்த மாதரசியிடம் குவிந்து கிடந்தன. அவர் நின்ற தோரணையே ஒரு அரசி நிற்பது போலவே இருந்தது. அழகான பட்டுச்சேலை அணிந்து அதற்கு ஏற்றாற் போல ஆபரணங்களும் அணிந்திருந்தார்.

“வாருங்கள் பல்லவ ராஜ்ஜியத்தின் பட்டமகிஷியே!” எழுந்து நின்று குறும்பாக வணக்கம் வைத்தாள் அமராதேவி. மகாராஜா முகத்திலும் இப்போது புன்னகை அரும்பியது.

மகாராஜாவின் இளைய தாரத்திற்குப் பிறந்திருந்தாலும் சீரும் சிறப்புமாக விஜயமகா தேவியின் கண்காணிப்பிலேயே அமரா வளர்ந்ததால் மகேந்திர வர்மனுக்கே தன் தாயிடம் இல்லாத சலுகைகள் இளையவளுக்கு உண்டு.

“பார்த்தீர்களா உங்கள் செல்ல பெண்ணின் குறும்பை. பெண் பிள்ளை இல்லையே என்ற ஆசையில் இவளை நான் அரவணைத்துக் கொண்ட போது மதிவதனி ஏதாவது சொன்னாளா? தன்னை விட தன் அக்கா குழந்தையை நன்றாக வளர்ப்பார்கள் என்றுதானே அமைதியாக இருந்தாள். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது? நான் பெண்ணை வளர்த்திருக்கும் லட்சணத்தைப் பார்த்து மதிவதனி என்னைக் குறைக் கூற மாட்டாளா?” கணவரிடம் முறைப்பட்டார் பட்டமகிஷி.

“அப்பா! இப்போது நான் என்ன குறும்பு செய்துவிட்டேன் என்று அம்மா என்னைக் கோபிக்கிறார்கள்?”

“என்ன செய்யவில்லை நீ அமரா? இரண்டொரு நாட்களுக்கு முன்புதானே இலங்கையிலிருந்து அண்ணனும் தங்கையும் வந்தீர்கள்? நான் அப்போதே என்ன சொன்னேன்? நன்றாக ஓய்வெடுத்துக் கொள், கொஞ்சம் மெலிந்தாற் போல தெரிகிறாய் என்று சொன்னேனா இல்லையா? அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் நேற்று மகேந்திரனையும் அழைத்துக்கொண்டு வேட்டைக்குப் போயிருக்கிறாய். பெண் பிள்ளைகள் போலவா நடந்து கொள்கிறாய்? இப்போது பார்… காலை ஸ்நானத்தை முடித்த பெண் லேசாக அலங்காரம் செய்து கொண்டாயா? தந்தையைக் காண வரும்போது ஒன்றிரண்டு ஆபரணங்களையாவது அணிந்து வரவேண்டும் என்று உனக்குத் தோன்றியதா?”

பட்டமகிஷி தன்னைப் பற்றி குற்றப் பத்திரிகைப் படித்த போது அமராதேவியின் தலைத் தானாக குனிந்தது. ஏதோ குறும்பு செய்து அகப்பட்டுக்கொண்ட குழந்தையைப் போல நின்றிருந்தாள். அன்னையும் தந்தையும் அவள் நின்றிருந்த கோலம் பார்த்து மௌனமாக சிரித்துக் கொண்டார்கள்.

“அம்மா சொல்வதும் நியாயம்தானே அமரா? நாளை இன்னொரு அரண்மனையில் வாழப்போகும் பெண். இதையெல்லாம் உன் தாய்மார்களிடம் இருந்து நீ கற்றுக்கொள்ள வேண்டாமா?”

“அப்பா…‌ நான் என்ன செய்யட்டும், எனக்கு இதன்மேலெல்லாம் ஈடுபாடு வரமாட்டேன் என்கிறதே.”

“ஆமாம்… வாள் வீச தெரிகிறது, படை நடத்த தெரிகிறது, மந்திராலோசனைச் சபையில் உட்கார்ந்து கொண்டு திட்டம் வகுக்க தெரிகிறது. ஆடை ஆபரணங்கள் அணியவும் அலங்காரம் பண்ணிக்கொள்ளவும்தான் தெரியவில்லை.” தன் மனைவியின் அங்கலாய்ப்பில் ஒரு பெருமையுடன் தன் பெரிய மீசையைத் தடவிக்கொண்டார் சிம்மவிஷ்ணு மகாராஜா.

தன் பெண் வீரத்தில் இணையில்லாது விளங்குவதில் அவருக்கு எப்போதுமே தனி கர்வம் உண்டு. ஆனால் அதைத் தன் மகளின் முன்பு வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்.

இது இப்படி இங்கே நடந்துக்கொண்டிருக்கே அங்கே மகேந்திர பல்லவன் தன் குதிரையை அந்த கட்டடத்தின் முன்பாக நிறுத்தினான். அந்த நாதக்கூடத்தைப் பராமரிக்க தான் அமர்த்தியிருந்த காவலாளி ஓடி வரவும் அவனிடத்தில் குதிரையை ஒப்படைத்துவிட்டுத் தன் குதிரையை நோக்கி,

“சித்தரஞ்சா, சிறிது ஓய்வெடுத்துக் கொள். இதோ வந்துவிடுகிறேன்.” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அந்த நாதக்கூடத்தின் சுவர்களிலெங்கும் மனதை மயக்கும் இன்ப நாதம் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. பல வயதுகளில் ஆடவரும் பெண்டிரும் தங்கள் திறமைகளுக்குத் தக்கபடி சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு வீணை கற்றுக் கொண்டிருந்தார்கள்.

இளவரசரைப் பார்த்த மாத்திரத்தில் உபாத்தியாயர்கள் எழுந்து வணக்கம் வைக்க போக அவர்களைக் கையமர்த்தி தடுத்த மகேந்திர பல்லவன்,

“பாடங்களில் என்னால் எந்த குழப்பமும் வரவேண்டாம்.” என்றான் அமைதியாக.

“வந்துவிட்டாயா இளவரசே!” தனக்குப் பின்னால் கேட்ட அந்த குரலில் திரும்பிய மகேந்திரன் தன் இடை வரைக் குனிந்து அங்கிருந்த மனிதருக்கு வணக்கம் வைத்தான்.

“நீ நீடூழி காலம் சிறப்புடன் வாழ வேண்டும் யுவராஜா.”

“தங்கள் ஆசீர்வாதம் அடிகளாரே!” மிகவும் பவ்வியமாக சொன்ன இளவரசன் தனக்கு முன்னால் நின்றிருந்த சுந்தரமூர்த்தி அடிகளாரை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தான்.

சர்வ சதாகாலமும் கலைகளையும் அதனோடு சம்பந்தப்பட்டவற்றையும் நினைத்துக் கொண்டே இருந்ததால் அவர் முகத்தில் உலக பற்றை விட்டெறிந்த அமைதி தெரிந்தது.

மிகவும் சாதாரணமான பருத்தியாடை அணிந்திருந்த அந்த மகானின் கைகள் வீணையை மீட்டி மீட்டி காய்த்துப் போயிருந்தது.

“வகுப்புகளைப் பார்வையிட்டாயா மகேந்திரா?”

“ஆமாம் அடிகளே. நாளுக்கு நாள் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் தெரிகிறதே?”

“ஆமாம் மகேந்திரா.”

“சௌகர்யஙகளுக்கு ஏதாவது குறை இருக்கிறதா அடிகளாரே?”

“மகேந்திர வர்மனின் நேரடி பார்வையின் கீழ் நடக்கும் இந்த கல்வி கூடத்திற்கு என்ன சௌகர்ய குறைச்சல் ஏற்பட்டுவிட போகிறது?” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வீணையொன்றின் தந்தி உச்சஸ்தாயியில் மீட்டப்பட மகேந்திர வர்மன் சிலைப் போல அதிர்ந்து நின்றான். அதைத் தொடர்ந்தாற் போல பைரவி ராகம் இசைக்கப்பட அந்த இசையின் நளினத்தில் இளவரசன் தன்னை மறந்து லயித்து நின்றான். அடிகளாரின் முகத்தில் இப்போது ஒரு இளநகை பரவியது.

“இளவரசே!”

“அடிகளாரே! வீணை மீட்டுவது யார்? இந்த நாதம் என் செவிகளுக்குள் எத்தனையோ இன்ப வெள்ளங்களை அள்ளி வீசுகிறதே. என் உயிரை அசைக்கிறதே.” மகேந்திர வர்மனுக்கு அதற்கு மேல் பேச நா எழவில்லை.

“என்னோடு வா மகேந்திரா.” அடிகளார் அழைத்த பாதையில் பசுவைத் தொடரும் கன்றைப் போல மறுபேச்சின்றி நடந்தான் மகேந்திர வர்மன்.

வகுப்புகள் நடக்கும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த அடிகளாரின் அறையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் கைகள் தொட பாக்கியம் செய்திருந்த அந்த வீணையிலிருந்துதான் அந்த இன்ப நாதம் கிளம்பி கொண்டிருந்தது.

“பரிவாதனி…” அடிகளாரின் குரலில் சட்டென்று திரும்பியது அந்த பெண். பல்லவ இளவலின் உலகம் ஒரு கணம் தன் இயக்கத்தை நிறுத்தியது. தேவலோக இரம்பையோ என்று… இல்லை இல்லை, வெண்பட்டுத் துகிலுடுத்தி வீணை ஏந்தி நிற்பவள் கலைவாணிதானே?!

“அடிகளே…” அவள் மீட்டிய வீணையின் நாதத்தைப் பழிக்கும் குரலில் உதிர்ந்தது பெண்ணின் வார்த்தைகள். இருந்தாலும் அங்கு நின்றிருந்த அந்நிய ஆடவனின் திடீர் விஜயத்தால் அவள் வார்த்தைகள் பாதியிலேயே நின்றுவிட்டன.

‘யாரிவள்?!’ மகேந்திர வர்மன் மங்கையின் அழகில் மதியிழந்து நின்றிருந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!