Pallavankavithai-04
Pallavankavithai-04
பல்லவன் கவிதை 04
அறைக்குள் நின்றிருந்த தோழிகள் இருவரும் உபாத்தியாயர் குரலில் திடுக்கிட்டு போனார்கள். பரிவாதனி சட்டென்று பேழையைப் பெட்டகத்தில் வைத்து மூட மகிழினியும் அறையை விட்டு வெளியே வந்தாள்.
“மகிழினி, பரிவாதனி எங்கே அம்மா?”
“இப்போதுதான் ஸ்நானத்தை முடித்து விட்டு அலங்காரம் செய்கிறாள் உபாத்தியாயரே. நானும் அவளுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தேன்.”
“அப்படியா… நல்லது நல்லது.” ஆசுவாசமாக அங்கிருந்த பஞ்சணையில் அமர்ந்தார் உபாத்தியாயர்.
“மகிழினி, காஞ்சியிலிருந்து இரண்டு காத தூரத்தில் புதிதாக ஒரு சமஸ்கிருத கடிகை உருவாகி இருக்கிறதாம். எனக்கும் அடிகளாரிற்கும் அங்கிருந்து விஷேட அழைப்பு வந்திருக்கிறது. போகலாமென்று எண்ணி இருக்கிறோம்.” உபாத்தியாயர் சொன்னதும் மகிழினிக்கு வானில் பறப்பது போல ஒரு மகிழ்ச்சி உருவானது.
“அப்படியா ஐயா? தாராளமாக சென்று வாருங்கள்.” மகிழினியின் உற்சாகம் அவள் முகத்திலும் குரலிலும் அப்பட்டமாக தெரிந்தது.
“ஆமாம் அம்மா, நானும் அப்படித்தான் முடிவு செய்திருக்கிறேன். இது போன்ற அற்புதமான இடங்களிலிருந்து அழைப்பு வருவது பெரும் பேறு அல்லவா. போக வர இரண்டு நாட்கள்தான் ஆகும்.”
“அதனால் பாதகமில்லை ஐயா. நான் பரிவாதனியைப் பார்த்துக்கொள்கிறேன். என் பாட்டியையும் இரவில் வந்து தங்க சொல்கிறேன்.”
“நல்லது மகிழினி. அடிகளாரும் மகாராஜாவிடம் சொல்லி இரு வீரர்களைக் காவலுக்கு அமர்த்துவதாக சொல்லி இருக்கிறார்.”
“பிறகென்ன? நான்கு நாட்கள் வேண்டுமானாலும் நீங்கள் தங்கிவிட்டு வரலாமே?”
“இல்லை மகிழினி. இரண்டு நாட்கள் பரிவாதனியைப் பாராமல் இருப்பதே என்னால் முடியாத காரியம். இதில் நானெப்படி நான்கு நாட்கள் தங்குவேன்?”
“உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள் ஐயா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பரிவாதனி அறையை விட்டு வெளியே வந்தாள்.
“என்ன அப்பா திடீரென்று பயணப்படுகிறீர்கள்?”
“தெரியவில்லை அம்மா. காஞ்சியை விட்டு வெளியேறி வெகு நாட்கள் ஆகிவிட்டதா? அடிகளார் கேட்கவும் சட்டென்று சம்மதித்து விட்டேன். நீ சமாளித்து கொள்வாயா பரிவாதனி?”
“தாராளமாக போய் வாருங்கள் அப்பா. எப்போது கிளம்ப வேண்டும்?”
“நாளை சூரிய உதயத்தோடு புறப்பட்டால் கடிகையில் முதலாம் பாடம் ஆரம்பிக்கும் போது போய் சேர்ந்து விடலாம் என்று அடிகள் சொன்னார்.”
“நல்லது அப்பா.” அத்தோடு பேச்சை முடித்துக்கொண்டு பெண்கள் இருவரும் வீட்டின் பின் கட்டிற்கு வந்தார்கள்.
“பரிவாதனி, உபாத்தியாயருக்கு அந்த ஆண்டவன் மோட்சங்களிலேயே சிறந்த மோட்சத்தைக் கொடுக்க வேண்டும். சரியான சமயத்தில் இப்படி வந்து நிற்கிறாரே என்று நினைத்தேன். ஆனால் மனிதர் எத்தனை நல்லவராக இருக்கிறார்?! எந்த அவசரமும் தேவையில்லை. நாளை நிதானமாகவே அந்த ஓலைகளைத் தேடி எடுக்கலாம்.” மகிழினி நிதானமாக திட்டம் போட்ட போதும் பரிவாதனி அமைதியாகவே நின்றிருந்தாள்.
தன் பிறப்பின் மர்மத்தை அறிய அவளுக்கு ஆர்வம் இருந்த போதிலும் இத்தனைப் பாசமாக தன் சொந்த மகளைப் போல வளர்த்த உபாத்தியாயரைத் தன் தந்தை இல்லை என்று சொல்ல அவளுக்கு மனது வரவில்லை. மௌனமாக நந்தவனத்தை நோக்கி நடந்துவிட்டாள்.
***
பல்லவ சாம்ராஜ்யத்தின் இணையில்லாத சக்கரவர்த்தியும் போர்களால் மக்களை வாட்டாமல் நல்லாட்சி புரிந்தவருமான சிம்மவிஷ்ணு மகாராஜா தன் அந்தரங்க அறையின் மஞ்சத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
முகத்தில் யோசனைப் பலமாக ஓடிக்கொண்டிருப்பதை புடைத்திருந்த அவர் நெற்றி நரம்பொன்று சொல்லியது. யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பவர் போல வாசலையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். வயோதிகத்தால் உடம்பு லேசாக நலிந்திருந்த போதும் அந்த கண்களின் தீட்சண்யம் குறையவில்லை.
உள்ளே நுழைந்த முதன் மந்திரி மன்னனைத் தலைத் தாழ்த்தி வணங்கினார்.
“தாமதித்து விட்டேனா மகாராஜா?”
“இல்லை முதலமைச்சரே. நீர் சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கிறீர். எனக்குத்தான் எல்லாவற்றிலும் சிறிது நாட்களாக படபடப்பு தோன்றி இருக்கிறது.”
“பல்லவேந்திரா, ஒற்றர்கள் ஏதும் பாதகமான தகவலைக் கொண்டு வந்திருக்கிறார்களா?”
“ஒற்றர்களின் சேதி என்றைக்கு சாதகமாக இருந்திருக்கிறது அமைச்சரே. அது போகட்டும், இன்றைக்கு அதை மந்திராலோசனை சபையில் விவாதிக்கலாம். உம்மை இப்போது நான் அழைத்தது வேறு விஷயம் பேச…”
“சொல்லுங்கள் பல்லவேந்திரா!”
“முதலமைச்சரே! எனக்குத் தெரிந்து நான் இந்த பல்லவ சிங்காதனத்தில் அமர்ந்த நாள் முதலாக நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த பல்லவ சாம்ராஜ்யத்திற்குச் செய்திருக்கும் சேவை அளப்பரியது. அதற்கு எங்கள் பல்லவ குலமே உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது.”
“பல்லவேந்திரா! அது இந்த அடிமைக்குக் கிடைத்த பாக்கியம்.”
“பொறும் முதலமைச்சரே. நான் முடித்து விடுகிறேன். இத்தனை நீங்கள் இந்த பல்லவ சாம்ராஜ்யத்திற்காக செய்திருக்கும் போதும் இன்னும் இன்னும் உங்களிடம் கையேந்தும் நிலைமையைத்தான் ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கிறான்.”
“மன்னர் மன்னா! இந்த வார்த்தை உங்கள் தகுதிக்கு ஆகாது. நீங்கள் என்னிடம் கையேந்துவதா? இணையற்ற பல்லவ குலத்தின் சக்கரவர்த்தி இந்த ஏழையிடம் கையேந்துவதா? கட்டளை இடுங்கள் மகாராஜா. நீங்கள் காலால் இட்டதைத் தலையால் தாங்கி செய்ய நாங்கள் இத்தனைப் பேர் இருக்கும் போது நீங்கள் எதற்குக் கவலைப்பட வேண்டும்?”
“முதலமைச்சரே! என் மேல் உமக்கு நம்பிக்கை இருக்கின்றதல்லவா?”
“மன்னவா! நான் உங்களைச் சந்தேகித்தால் என் தாயைச் சந்தேகித்ததற்குச் சமானம். என் தாய் என் மீது காட்டிய பாசத்தில் எத்தனைப் பரிசுத்தம் இருக்குமோ அதேயளவு பரிசுத்தம் உங்கள் அன்பிலும் இருக்கும் என்று நான் நன்கறிவேன். தங்கள் ஆக்ஞை என்னவோ?”
“அமைச்சரே! பெண் கேட்பதுதான் நம் பழக்கம். இருந்தாலும் பரவாயில்லை, நான் உம்மிடம் உன் மகனைக் கேட்கிறேன். நான் பெறாத மகளுக்காக உம் மகனை மாப்பிள்ளையாக கேட்கிறேன், கொடுப்பீரா?”
“அது என் பூர்வ ஜென்ம பாக்கியம் மன்னவா. பெறாத மகளென்றால்… நீங்கள் பரிவாதனியைச் சொல்கிறீர்களா?”
“ஆமாம் முதலமேச்சரே. அந்த குழந்தைக்கும் பதினெட்டு பிராயங்கள் கடந்துவிட்டது. இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் ஒரு நல்ல இடத்தில் மணமுடித்து வைத்துவிட்டால் என் பாரம் தீர்ந்துவிடும்.”
“உண்மைதான்.”
“அதற்காக ஒரு சாதாரண குடும்பத்தில் அந்த குழந்தையைக் கொடுக்க எனக்கு மனமில்லை. அமரா தேவிக்கென நான் தேர்ந்தெடுக்கும் மணாளன் எப்படி இருப்பானோ அதற்கு எந்த குறைவும் இல்லாமல் ஒரு வீரனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். பொதிகை மாறனை நான் நன்கறிவேன். உப சேனாதிபதியின் வீரம் அந்த குழந்தையைக் காத்து நிற்கும்.”
“எனக்கு இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை மகாராஜா.”
“உமக்கு இல்லை அமைச்சரே. ஆனால் பொதிகை மாறன்…” இப்போது பல்லவ மகாராஜா இழுத்தார்.
“உங்கள் பார்வையில் வளர்ந்த பையன். அப்படி எதைப் பெரிதாக சொல்லிவிட போகிறான். சம்மதம்தான் சொல்வான்.”
“நல்லது நல்லது. கலிப்பகையாரும் வந்துவிட்டால் மந்திராலோசனையை ஆரம்பித்து விடலாம்.”
“ஆகட்டும் பல்லவேந்திரா.”
அன்றைய மந்திராலோசனைக்கு வெகு சிலரை மாத்திரமே பல்லவ மகாராஜா அழைத்திருந்தார். பொதிகை மாறன் ஏற்கனவே வந்து மந்திராலோசனை நடைபெறும் சபையில் அமர்ந்திருந்தான்.
சற்று நேரத்தில் அமரா தேவியும் மகேந்திர பல்லவனும் ஒன்றாக சபையின் உள்ளே நுழைந்தார்கள். பொதிகை மாறனிற்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அமரா இயல்பாக அமர, இன்னொரு புறமிருந்த ஆசனத்தில் பல்லவ குமாரன் அமர்ந்து கொண்டான். பொதிகை மாறன் சற்று சங்கடமாக உணர்ந்தான்.
“உப சேனாதிபதி அவர்களே, ஜோடிப்பொருத்தம் வெகு பிரமாதம்.” மகேந்திரன் உப சேனாதிபதியின் பக்கம் லேசாக சாய்ந்து கொண்டு மெதுவான குரலில் சொன்னான். பொதிகை மாறன் ஆச்சரிய மிகுதியில் எழுந்து நின்றே விட்டான். அமராவின் ஆசனம் சற்று அப்பால் இருந்ததால் ஆண்கள் பேசுவது அவள் காதில் விழவில்லை. ஆனாலும் பல்லவ குமாரன் ஏதோ சொல்ல உப சேனாதிபதி தூக்கிவாரி போட்டுக்கொண்டு எழுந்து நின்றது அவளுக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
‘என்ன?’ என்பது போல இருவரையும் திரும்பி பார்த்தாள்.
“உட்காரும் உப சேனாதிபதியாரே. அன்று நந்தவன இருளில் அத்தனைத் தெளிவாக தெரியவில்லை. அதனால்தான் உங்கள் பொருத்தத்தை இன்று சிலாகிக்கிறேன்.”
“இளவரசே…” பொதிகை மாறனிற்கு வார்த்தைகள் சிக்கிக்கொண்டன.
“சிற்பம், சித்திரம் போன்றவற்றில் மகேந்திரன் பித்தாகி இருப்பதால் நாட்டையும் வீட்டையும் காக்க தவறி விடுவான் என்று நீயும் நினைத்துக்கொண்டாயா மாறா?” தன் வயதை ஒத்த உப சேனாதிபதியைச் சமயங்களில் இதுபோல உரிமையோடு ஒருமையில் விழிக்கும் பல்லவ இளவல் இப்போதும் அப்படியே அழைத்தான்.
“அப்படியில்லை இளவரசே.”
“அப்படியில்லாவிட்டால் அந்தப்புர நந்தவனத்தில் நுழையும் தைரியம் உனக்கெப்படி வந்தது மாறா?” இப்போது பொதிகை மாறனின் தலைத் தானாக குனிந்தது.
‘எவ்வளவு பெரிய அசாதாரண சூழ்நிலையாக இருந்திருந்தாலும் அன்று அந்தப்புரத்தில் நான் நுழைந்திருக்க கூடாது.’ பொதிகை மாறனின் மனம் அவனையே இடித்துரைத்தது.
“பொதிகை மாறா! நடந்த தவறு கடைசியாக இருக்கட்டும். ஆனாலும், எனக்காக உன் காதலியிடம் நீ வாதாடியது என்னை மிகவும் கவர்ந்தது.” சொல்லிவிட்டு மகேந்திரன் இடி இடியென்று சிரிக்க மாறனின் முகம் சிவந்து போனது.
இவர்கள் பேச்சு எதுவும் காதில் விழாததால் அமரா தன்பாட்டில் உட்கார்ந்திருந்தாள். சற்று நேரத்தில் முதலமைச்சரும் சேனாதிபதியும் கூட வர சபைக்குள் நுழைந்தார் சக்கரவர்த்தி. மூவரும் எழுந்து மன்னருக்குத் தலை வணங்கினார்கள். எல்லோரும் அவரவர் ஆசனத்தில் அமர்ந்துகொள்ள சிம்மவிஷ்ணு மகாராஜா அங்கிருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார். அவர் கண்கள் அனைவரையும் ஒரு முறை அளவெடுத்தது.
“முக்கியமான சில முடிவுகளை எடுப்பதற்காகவே அவசரமாக இந்த மந்திராலோசனையை ஏற்பாடு செய்திருக்கிறேன். பிற்பாடு அந்த முடிவுகளை மற்றைய அமைச்சர்களோடும் படைத்தலைவர்களோடும் கலந்தாலோசிக்கலாம் என்பது என் எண்ணம். சரிதானே முதலமைச்சரே?”
“ஆமாம் மன்னவா.”
“நல்லது. சேனாதிபதி அவர்களே, படைகளின் தற்போதைய நிலைமை என்ன? கோட்டைக் காவல் எந்த அளவில் இருக்கிறது?” கலிப்பகையாரை நோக்கி கேள்வி எழ அவர் பதில் பணிவாக வந்தது.
“பல்லவேந்திரா, படைகளின் நிலைமையில் பழுதொன்றும் இல்லை. ஆனால் சதா ஒற்றர்கள் கொண்டு வரும் செய்திகளைப் பார்க்கும்போது படைப் பலத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும் போல தோன்றுகிறது.”
“கோட்டைக் காவல்?”
“கோட்டையில் காவல் பலமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் கோட்டைச் சுவர்களை இன்னொரு முறை பழுது பார்ப்பது அதன் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும்.”
“நல்லது, நீங்கள் கேட்டவற்றைச் செய்வதற்குத் தேவையான தங்க நாணயங்களை வழங்கும்படி உரிய அமைச்சர்களுக்கு உத்தரவிடுகிறேன்.”
“நல்லது மன்னா.”
“முதலமைச்சரே, ஒற்றர்களின் புதிய தகவல் என்ன?”
“மன்னவா, வேங்கிக்கும் கங்க நாட்டிற்கும் இடையில் விவாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றனவாம்.”
“அப்படியா?”
“ஆமாம் பல்லவேந்திரா. எல்லாம் முடியும் தறுவாயில் உள்ளது என்றுதான் தகவல் வந்திருக்கிறது.” இதை முதலமைச்சர் சொன்னதும் சிம்மவிஷ்ணு மகாராஜாவின் முகத்தில் கவலைப் படர்ந்தது.
“கங்க நாட்டு மன்னன் துர்வீதனன் இதற்கு எப்படி ஒப்புக்கொண்டான் அமைச்சரே? அவன் நல்லவன் ஆயிற்றே?”
“மன்னவா, வேங்கியின் விஷ்ணுவர்த்தனன் வாதாபி புலிகேசியின் தம்பி என்றாலும் புலிகேசியைப் போல அத்தனை கொடியவன் இல்லையாம். அதுவுமல்லாமல் சமீப காலமாக அவனுக்கு புத்த பகவான் மேல் அதீத பற்று ஏற்பட்டிருக்கிறது. புத்த பிக்ஷூக்களின் போதனைகளால் அவன் மனதிலும் இப்போது கருணைச் சுரந்திருக்கின்றதாம்.”
“அப்படியென்றால் புத்த பிக்ஷூவாக போக வேண்டியதுதானே? எதற்கு விவாகம் செய்துகொள்ள போகிறார்?” சட்டென்று அமரா தேவி கேட்கவும் அனைவர் முகத்திலும் புன்னகைத் தோன்றியது.
“மன்னன் புத்த பிக்ஷூ ஆனால் நாட்டை யார் காப்பது இளவரசி?” முதலமைச்சர் ஒரு சிரிப்போடு பதில் கேள்வி கேட்க அமரா அமைதியாகிவிட்டாள்.
“எதிரி கரம் பலப்படுகிறதே அமைச்சரே.”
“ஆமாம் மன்னவா. விவாகம் நடந்து விட்டால் வேங்கி நாடும் கங்க நாடும் ஒன்று பட்டுவிடும். அது புலிகேசிக்கு அனுகூலம்.”
“ம்…” மகாராஜாவின் குரல் இப்போது உறுமலாக வந்தது.
“மன்னிக்க வேண்டும் மகாராஜா. அந்த வாதாபி புலிகேசியைப் பார்த்து தென் மண்டலமே அஞ்சுவது எதனால் என்று எனக்குப் புரியவில்லை.” மகேந்திர பல்லவன் திடீரென குறுக்கிட்டு பேசவும் எல்லோர் கவனமும் இளவரசன் மீது திரும்பியது.
“வீரனை எதிர்க்கலாம் இளவரசே. ஆனால் ராட்சசனை எதிர்க்க முடியாது.”
“அப்படியென்றால் வதம் செய்வோம் முதன் மந்திரியாரே.”
“நிச்சயம் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றாற் போல நம்மையும் நாம் ஆயத்தம் செய்ய வேண்டுமல்லவா மகேந்திரா?”
“நிச்சயமாக தந்தையே. அதற்கான ஏற்பாடுகளில் இப்போதிருந்தே இறங்கலாம். ஒவ்வொரு படைப்பிரிவையும் ஒவ்வொருவர் தலைமையில் விட்டு விடலாம். யானைப்படையை அனுபவம் மிக்க சேனாதிபதி கலிப்பகையார் தலைமையில் விட்டுவிடலாம். குதிரைப்படை என் தலைமையில் இயங்கட்டும். காலாட்படையை உப சேனாதிபதி பொதிகை மாறன் எடுத்து நடத்தட்டும்.” கம்பீரமாக எழுந்து நின்று கர்ஜித்த மகனை வாஞ்சையோடு பார்த்தார் பல்லவ மகாராஜா.
“உன் ஏற்பாட்டிற்கு பல்லவ சேனாதிபதி கலிப்பகையார் சம்மதிக்க வேண்டும் மகேந்திரா.” ஒரு புன்னகையோடு மன்னன் சொல்லிவிட்டு சேனாதிபதியைப் பார்க்க அவர் முகத்திலும் புன்னகைத் தோன்றியது.
“இளவரசரின் ஏற்பாட்டிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை பல்லவேந்திரா. படைத் தலைவர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும். படைகளுக்கு இன்னும் வீரர்களையும் சேர்க்க வேண்டும்.”
“சேனாதிபதி அவர்களே, படைத் தலைவர்களுக்கான பயிற்சிகளை இன்னும் கடுமையாக்குங்கள். வாதாபி மன்னன் மூர்க்கனாக இருக்கும் பட்சத்தில் அவன் படைகளும் மூர்க்கத்தனமாகத்தான் தாக்கும். எதிரி யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றாற்போல நமது படைத் தாக்குதலை நடத்த வேண்டும்.” மகேந்திரனின் பேச்சில் அமரா தேவி ஆசனத்தில் சாய்ந்து அமர்ந்து விட்டாள். பேசுவது அவள் அண்ணன்தானா என்ற சந்தேகமே அவளுக்கு வந்துவிட்டது.
“சேனாதிபதி அவர்களே, படைத்தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது அதில் அமரா தேவியின் பெயரும் இடம்பெறட்டும். படைகளை நடத்தும் பயிற்சியில் இனி இளவரசியும் இணைந்து கொள்ளட்டும்.” மகேந்திரன் கட்டளைப்போல சொல்ல இப்போது அனைவரது கண்களும் சிம்மவிஷ்ணு மகாராஜாவிற்காக திரும்பியது.
“இளவரசன் கட்டளைக்கு எந்த மறுப்புப் இல்லை. படைகளை நடத்துவதற்கு அமராவும் பயிற்சி எடுத்துக்கொள்ளட்டும்.” அத்தோடு சபைக் கலைந்தது என்பது போல மன்னர் தன் அரியாசனத்தை விட்டு எழும்பவும் அனைவரும் எழுந்து வணக்கம் வைத்தார்கள். மகேந்திரனும் எழுந்து விடுவிடுவென்று வெளியே போய்விட்டான்.
***
மறுநாள் பொழுது மிகவும் அழகாக விடிந்திருந்தது. பட்சிகளின் நானாவித ஒலிகள் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. சூரியன் உதயமாவதற்கு முன்பே எழுந்த உபாத்தியாயர் காலை ஸ்தானத்தை முடித்துக்கொண்டு பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டார்.
சற்று நேரத்தில் அடிகளாரும் வந்துவிட மிகவும் உற்சாகமாக இருவரும் கிளம்பிவிட்டார்கள்.
“மகிழினி, அதிகம் வெளியே சுற்றித்திரியாமல் இரண்டு பேரும் நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும்.”
“ஆகட்டும் ஐயா.”
“பரிவாதனிக்கு நீரில் அதிகம் நின்றால் உடம்புக்கு ஆகாது. ஆற்று நீரில் ரொம்ப நேரம் விளையாட கூடாது.”
“சரி ஐயா.” ஆயிரம் அறிவுரைகள் சொல்லிவிட்டுத்தான் வீட்டை விட்டு கிளம்பினார் உபாத்தியாயர். அவர் கிளம்புவதற்குள் மகிழினிக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. ஆனால் பரிவாதனி அமைதியாக நின்றிருந்தாள். தந்தை அவளை அதிகம் பிரிந்ததில்லை என்பதால் அவளுக்கும் அவரைப் பிரிவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
“அடடா! பக்கத்தில் இருக்கும் ஊரிற்குப் போகிறார். இரண்டு நாட்களில் திரும்பி வந்துவிட போகிறார். அதற்கு நீ ஏனம்மா இப்படி நிற்கிறாய்?”
“மகிழினி, அப்பா பாவம் இல்லையா.” பெண்ணின் குரலில் சோகம் விரவிக்கிடந்தது.
“நீ சோக ராகம் இசைக்க இது நேரமல்ல. வா, வந்து உன் அப்பாவின் அறையைத் திற. அந்த ஓலைகளை இப்போது பார்க்காவிட்டால் பிறகு சந்தர்ப்பம் வாய்க்காது.” பரிவாதனியை விடாப்பிடியாக அழைத்துச்சென்றாள் மகிழினி.
உபாத்தியாயரின் அறை எப்போதும் போல நேர்த்தியாக இருந்தது. பரிவாதனிக்கு அவர்கள் செய்வது தவறு என்று தோன்றியதால் அதிக உற்சாகமில்லாமல் நின்றிருந்தாள்.
“ஏனடியம்மா, உனக்கு இன்றைக்கு என்ன ஆகிவிட்டது? ஏனிப்படி அசமந்தாக நிற்கிறாய்? உன் அப்பாவின் பெட்டியை நீ திறக்கிறாயா இல்லை நானே திறக்கட்டுமா?”
“நீயே திற மகிழினி. அதோ… அந்த பெட்டிதான்.” பரிவாதனி காட்டிய திசையில் பழுப்பு நிறத்தில் மான் தோலால் ஆனது போல ஒரு பெட்டி இருந்தது. மகிழினி மெதுவாக அதைத் திறந்தாள்.
பெண்கள் இருவரின் உள்ளமும் லேசாக அடித்துக்கொண்டது. அந்த பெட்டியிலிருக்கும் ஓலையைப் படித்தால் பரிவாதனியின் பிறப்பு ரகசியம் என்னவென்று தெரிந்துவிடும்.
மகிழினிக்கு உற்சாகம் பீறிட்டதென்றால் பரிவாதனியின் நிலை இரண்டும் கெட்டானாக இருந்தது. வளர்ப்பு தந்தையாக இருந்தாலும் இதுநாள் வரைப் பாசத்தைக் கொட்டி வளர்த்தவரை நினைத்து மனது வேதனைப் பட்டது. யார் அவள் வாழ்க்கையில் இனி புதிதாக வந்தாலும் அவளைப் பொறுத்தவரை உபாத்தியாயர்தான் எல்லாமும்.
“பரிவாதனி, இங்கே வா.” அழைத்த மகிழினியின் குரலில் கோபம் இருந்தது.
“என்ன மகிழினி?”
“இந்த பெட்டியில் எந்த ஓலையையும் காணோமே?”
“இல்லையே… அங்கேதான் இருந்தது.”
“நீயே வந்து பார்.” மகிழினி அழைக்கவும் பரிவாதனி பெட்டியை நோக்கி ஓடினாள். பெட்டியில் ஒரு சில ஞாபகார்த்த பொருட்கள் அடுக்கப்பட்டிருந்தன. ஓலை அங்கு இருக்கவில்லை.
“ஓலையைக் காணவில்லை மகிழினி.”
“நாசமாய் போக! அந்த உபாத்தியாயர் சரியான பேர்வழியாகத்தான் இருக்கிறார். நீ பெட்டியைக் குடைந்திருப்பது மனிதருக்குத் தெரிந்திருக்கும். அதுதான் அவர் ரகசியத்தை இடம் மாற்றி விட்டார் போல.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது.
“அது யாரப்பா பொழுது விடிவதற்கு முன்பாக எங்கள் பிராணனை வந்து வாங்குவது?” எரிச்சல் குரலில் மண்ட வாசலுக்கு வந்தாள் மகிழினி. அங்கே ஒரு வீரன் நின்றிருந்தான்.
“யாரப்பா நீ?”
“இந்த ஓலையை உங்களிடம் கொடுக்க சொல்லி உத்தரவு அம்மா.” கையில் ஒரு ஓலைச் சுருளோடு பணிவாக நின்றிருந்தான் அந்த வீரன்.
“ஓலையா? யார் கொடுக்க சொன்னது?”
“சொல்ல உத்தரவில்லை. படித்தால் உங்களுக்கே புரியும் என்று சொன்னார்கள்.” ஓலையைப் பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு வீரன் நடையைக் கட்டிவிட்டான். மகிழினிக்கு தலை வேதனையாக இருந்தது.
“இன்றைக்கு நான் கண் விழித்த நேரம் நல்ல அமோகமாக இருந்திருக்கிறது. ஓலைச் சுருள்கள் எனக்கு கண்கட்டு வித்தைக் காட்டுகின்றன!” அங்கலாய்த்த மகிழினி ஓலையைப் பிரித்தாள்.
“அது யாரப்பா அத்தனைப் பெரிய மகாராஜா எனக்கு ஓலை எழுதி இருக்கிறார்?” சத்தமாக சொன்னபடி ஓலையைப் படிக்க ஆரம்பித்தவள் திகைத்து போனாள். ஓலையை எழுதி இருந்தது மகாராஜா அல்ல, யுவராஜா.
‘இன்னும் இரண்டு நாழிகைகளில் தேர் வரும். பரிவாதனி கிளம்ப சித்தமாக இருக்க வேண்டும். அலங்காரம் பிரமாதமாக இருக்கட்டும். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு மாளிகை திரும்பி விடுவாள்.’
மணி மணியான எழுத்துக்களில் மகிழினிக்கான ஆணை எழுதப்பட்டிருந்தது. கீழே மகேந்திர பல்லவனின் கையொப்பமும் பல்லவ இலச்சினையும் பொறிக்கப்பட்டடிருந்தது.
மகிழினி திகைத்து நின்றதெல்லாம் சிறிது நேரந்தான். அதன்பின் அவள் முகத்தில் நமுட்டு சிரிப்பொன்று தோன்றியது.
“இளவரசர் ஆள் படு கில்லாடியாகத்தான் இருக்கிறார்.” என்றாள் சத்தமாக.
“மகிழினி, யாரோடு பேசுகிறாய்? கதவைத் தட்டியது யார்?” கேட்டபடி வந்த பரிவாதனியை பெண் அதற்கு மேல் பேச விடவில்லை.
பரிவாதனி சொன்ன எந்த மறுப்பு மொழிகளும் பெண்ணின் காதில் ஏறவுமில்லை. செந்நிற பட்டுப்புடவை ஒன்றை அவளுக்கு உடுத்தி விட்டவள் உபாத்தியாயர் கொடுத்த பேழையில் இருந்த நகைகளை பரிவாதனிக்கு அணிவித்து விட்டாள்.
“மகிழினி, நீ என்ன செய்கின்றாய் என்று புரிந்துதான் நடந்து கொள்கிறாயா?” பரிவாதனியின் கோபத்தை மகிழினி சட்டைச் செய்யவில்லை. அவள் பாட்டில் தோழியின் குழலை அழகுற பின்னலிட்டு ஆங்காங்கே ஒன்றிரண்டு மயிர் கற்றைகளைச் சுருட்டியும் விட்டாள். தலை முழுவதும் மல்லிகைச் சரத்தை நெருக்கமாக வைத்தவள் நெற்றியில் செஞ்சாந்து திலகமும் இட்டாள்.
தோழியின் கண்களுக்கு லேசாக மையிட்டவள் அந்த மயிலைப் பாய்ந்த விழிகளில் ஒரு கணம் தன்னைத் தொலைத்து நின்றாள்.
‘இளவரசர் பாடு இன்று திண்டாட்டம்தான்.’ மனதிற்குள் நினைத்த மாத்திரத்தில் மகிழினியின் உதடுகளில் கேலிப்புன்னகை ஒன்று ஒட்டிக்கொண்டது. அலங்காரம் முடிந்த போது வாசலில் சத்தம் கேட்கவே ஓட்டமும் நடையுமாக அங்கு வந்தாள் மகிழினி. வீட்டு வாசலில் அழகான தேர் ஒன்று நின்றிருந்தது. உள்ளே தோழியிடம் ஓடி வந்தாள் பெண்.
“பரிவாதனி, தேர் வந்துவிட்டது கிளம்பு.”
“மகிழினி, இது சரிதானா?”
“சரியா தவறா என்று உன் மனதிற்குத் தெரியும் பரிவாதனி.”
“நீ என்ன சொல்கிறாய்?”
“இளவரசர் ஆணைக்கு நான் இப்போது கட்டுப்பட்டதாக நீ நினைக்கிறாயா? இல்லை பரிவாதனி. உன் வாழ்க்கையில் இனி இளவரசரைத் தவிர்த்து இன்னொரு ஆண் வருவதற்கு வாய்ப்புக்கள் இருந்தால் இப்போது நீ செய்வது தவறு. நீ செய்வது தவறா பெண்ணே?” அதற்கு மேல் பரிவாதனி விவாதம் பண்ணவில்லை. தேரை நோக்கி நடந்துவிட்டாள்.
“சாமர்த்தியமாக நடந்து கொள். இளவரசர் ஒருபோதும் வார்த்தைத் தவற மாட்டார்.”
அந்த தேர் நேராக காட்டு வழியில் பயணப்பட்டது. அன்று காலையிலேயே முத்தைய்யனுக்கு இளவரசனிடமிருந்து அழைப்பு வந்தது. முத்தைய்யன் இளவரசனின் நம்பிக்கைக்குரிய ஊழியன் என்பதால் இந்த பணியை மகேந்திரன் அவனிடம்தான் ஒப்படைத்திருந்தான்.
அன்று மகேந்திரனும் சிரத்தை எடுத்து அலங்காரம் பண்ணி இருந்தான். குளித்து முடித்து புத்தாடை அணிந்து நல் முத்துக்களால் கோர்க்கப்பட்ட மாலை ஒன்றையும் அணிந்து கொண்டான். வாசனைத்திரவியங்களைப் பூசிக்கொண்டு இடைக் கச்சையில் வைரப்பிடி கொண்ட குறுவாள் ஒன்றையும் சொருகிக்கொண்டான்.
குதிரையைப் பராமரிப்பவர்களிடம் சித்தரஞ்சனுக்கும் புது சேணம் அணிவிக்க சொல்லி இருந்தான். குதிரையின் கழுத்தை ஒரு முறை இறுக அணைத்தவன் அதில் தாவி ஏற குதிரையும் காட்டு வழியில் பயணப்பட்டது.
பல்லவ இளவல் காட்டை அடைந்த போது தேர் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனாலும் அவனை அதிகம் சோதிக்காமல் சற்று நேரத்திலெல்லாம் அவன் இன்பத்தைச் சுமந்துகொண்டு வந்து நின்றது தேர்.
புரவியை விட்டிறங்காமல் தேரையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான் இளவரசன். முத்தைய்யன் இறங்கி தேரின் கதவைத் திறந்து விட அதிலிருந்து இறங்கினாள் பரிவாதனி. இளவரசன் ஒரு நொடி திகைத்து நின்று விட்டான்.
அழகெல்லாம் உருவமெடுத்து ஒய்யாரமாக அந்த தேரிலிருந்து இறங்கி கொண்டிருந்தது. செந்நிற குழம்பு பூசப்பட்ட அவள் கால் விரல்களே அவனுக்கு உன்மத்தம் ஊட்ட போதுமானதாக இருந்தது.
பல்லவ குமாரனின் தீட்சண்யமான திருஷ்டியில் பெண் ஒரு கணம் தயங்கியது. அடுத்த நொடி தேரை விட்டு இறங்கியவள் மகேந்திரனை நோக்கி வந்தாள். குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி அவளையே இமைக்காமல் அவனும் பார்த்திருந்தான்.
நெடு நெடுவென வளர்ந்திருந்தான். அந்த உயரத்திற்கு ஏற்றாற் போல சதைப்பிடிப்பில்லாத உடம்பு. வாள் பிடிக்கவே பிறந்தது போல நீண்டிருந்த கைகள். பரிவாதனியின் தலைத் தானாக குனிந்தது. அவள் பார்வையைக் கவனித்த இளவரசனின் இதழ்கடையோரம் இன்பமான புன்முறுவல் ஒன்று பூத்தது.
“எசமான்.” முத்தைய்யனின் குரலில் கலைந்தான் மகேந்திரன்.
“முத்தைய்யா, சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக இதே இடத்திற்கு வந்துவிடு.”
“ஆகட்டும் எசமான்.” முத்தைய்யன் தேரோடு நகர்ந்துவிட அங்கே நின்றிருந்த இன்னொரு குதிரையின் கடிவாளத்தை பரிவாதனியிடம் நீட்டினான் மகேந்திரன். பெண் திருதிருவென விழித்தது.
“ஏறிக்கொள் பரிவாதனி.”
“இல்லை…”
“என்ன இல்லை?” இளவரசனின் குரலில் கண்டிப்பு தொனித்தது.
“எனக்கு… எனக்கு…”
“என்ன உனக்கு?”
“எனக்குக் குதிரை ஏற்றம் தெரியாது.”
“என்ன?!” ஆச்சரியத்தின் உச்சத்திற்குப் போன பல்லவ இளவல் வாய்விட்டு நகைத்தான்.
“பெண்கள் போரிற்குப் போகும் இந்த காலத்தில் உனக்குக் குதிரை ஏறக்கூட தெரியாதா? இந்த உபாத்தியாயரை இதற்காகவே கோதண்டத்தில் கட்டி கிட்டி அடிக்க வேண்டும்.”
“ஐயையோ!”
“என்ன ஐயையோ?” கேட்டபடியே அவள் அருகில் வந்தவன் புரவியில் இருந்த படியே குனிந்து அவள் இடைக்காக தன் கரத்தைக் கொடுத்தவன் அவளை அப்படியே அலாக்காக தூக்கி தனக்கு முன்னால் புரவியில் உட்கார வைத்தான்.
“அம்மா…” முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அலறினாள் பெண்.
“இங்கே அம்மா வரமாட்டார் பெண்ணே! இளவரசன்தான் வருவான்.” அவள் காதில் அவன் குரல் சரசமாக ஒலித்தது. சித்தரஞ்சன் வயிற்றில் லேசாக காலால் மகேந்திரன் ஒரு தட்டு தட்ட குதிரைச் சீரான குளம்படி ஓசையோடு காட்டுக்குள் நடந்தது.
காட்டுக்குள் எங்கும் நிசப்தம். பட்சிகளின் ஓசைகளைத் தவிர வேறேதும் சத்தமில்லை. உள்ளே செல்ல செல்ல காடு இன்னும் அடர்த்தியாகி கொண்டு போனது. பக்கத்தில் எங்கோ அருவியொன்று வீழும் பேரிரைச்சலும் கேட்டது.
பரிவாதனி லேசாக அசைந்தாள். அவள் அமர்ந்திருந்த நிலை அவளுக்கே சங்கடத்தைக் கொடுத்தது. பல்லவ குமாரனின் உடல் அவளை உராய்ந்து நின்றது. குதிரையின் ஒரு புறமாக அவள் இரண்டு கால்களையும் போட்டு அமர்ந்திருந்ததால் அவள் புடவை மகேந்திரனின் இடது கால் மேல் சுகமாக படர்ந்து கிடந்தது.
ஒரு ஆணின் இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தமானது. அது தெரிந்ததாலோ என்னவோ அந்த விஷமக்கார புடவை அவனது இடது தொடையில் இடம்பிடித்திருந்தது. அதை அகற்றிவிட பரிவாதனி மெதுவாக எத்தனித்தாள். அவள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பல்லவ இளவலும் சித்தரஞ்சனின் வயிற்றில் இப்போது இரண்டு முறைக் காலால் தட்டினான்.
இதுவரைச் சீரான ஒலியோடு நடைப் பயின்று கொண்டிருந்த புரவியும் இப்போது வேகமெடுத்து ஓட ஆரம்பித்தது. பரிவாதனி வெலவெலத்து போனாள்.
“இளவரசே…” அவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை. முகத்தில் வந்து மோதிய ஈரக்காற்றில் அவளுக்கு மூச்சு திணறியது. அதைத் தவிர்க்க அவன் தோள் புறமாக திரும்பியவள் அங்கேயே முகத்தைப் புதைத்து கொண்டாள்.
மகேந்திரனின் கை அவள் இடையை இழுத்து அவன் வயிற்றோடு அணைத்துக்கொண்டது. பெண்ணின் முழு சரணாகதியில் திருப்தியுற்ற இளவரசன் புரவியின் வேகத்தை இப்போது குறைத்தான். எத்தனைத் தூரம் உலகத்தை மறந்து இருவரும் அப்படியே பயணித்தார்களோ! சித்தரஞ்சன் ஓரிடத்தில் நின்று பலமாக கனைக்க இருவரும் சுயநினைவிற்கு வந்தார்கள்.
காட்டு மரங்கள் சூழ்ந்திருக்க அங்கே ஒரு அருவி ஓடிக்கொண்டிருந்தது. அத்தனை வேகம் இல்லை அதன் பிரவாகத்தில்.
குதிரையிலிருந்து குதித்த பல்லவ இளவல் அவளுக்காக கையை நீட்டினான். அவள் கண்களில் பயம்தான் தெரிந்தது. இரண்டு கைகளையும் இப்போது அவளுக்காக நீட்டியவன் பெண்ணை அணைத்து தூக்கினான்.
சித்தரஞ்சன் கண்களிலும் இப்போது ஒரு ஏளனம் தோன்றியதோ! தன் எஜமான் ஒற்றை ஜாடைக் காட்டினால் தன் முன்னங்கால்களை மடக்கி உட்கார அந்த உயர் ஜாதி புரவிதான் பயிற்சி பெற்றிருந்ததே!
சுற்றிவர அடர்ந்த காடு. குளுகுளுவென ஓடும் அருவி நீரின் மெல்லிய இசை. அவள் மூச்சுக்காற்று தன் மார்பில் உரசும் தூரத்தில் பெண். இத்தனையையும் இழக்க மகேந்திரன் என்ன முட்டாளா?
“பரிவாதனி…” வார்த்தைக்கு வலிக்கும் என்று அவன் ஐய்யப்பட்டானோ!
“ம்…” இந்த நாதத்தை இதுவரை அவன் வீணையில் கூட கேட்டதில்லையே!
“ஏன் பேச மாட்டேன் என்கிறாய்?” இதற்குப் பெண் என்னவென்று பதில் சொல்வாள்? ஆனால் ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகத்தான் அவனே பேசுகிறான் என்று பெண் அறிவாளா என்ன?!
“இங்கு…”
“ம்… மேலே கேள்.”
“இங்கு எதற்காக வந்திருக்கிறோம்?”
“சற்று நேரம் இன்பமாக இருக்க.”
“இது சரியா?”
“அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.”
“அரசாளும் மன்னனின் மகன் இப்படி பேசலாமா?”
“ஏன்? அந்த மன்னனின் மகனுக்கு மனதில்லையா? அதில் ஆசையில்லையா? காதல் இல்லையா?”
“இந்த காதலிற்கு ஆயுள் இருக்கிறதா?”
“மகேந்திரனின் ஆயுள் இருக்கும் வரை இந்த காதலிற்கும் ஆயுள் இருக்கும்.”
“மன்னவா! நான் ஒன்று சொல்லட்டுமா?” பெண் ஆரம்பித்த போதே பல்லவ குமாரன் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீர்கள்?”
“உன் மன்னவன் ஆசைக்கும் பங்கம் இல்லாமல் இந்த பல்லவ சாம்ராஜ்யத்திற்கும் பங்கம் வராமல் ஒரு யோசனை சொல்ல போகிறாய். சரிதானா என் பட்டமகிஷியே?”
“ஸ்வாமி, இது நியாயம் இல்லை.”
“ஏன் இல்லை? நாளை இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் அரியாசனத்தில் நான் அமரும் போது என் பக்கத்தில் அமரப்போவது நீதானே பரிவாதனி.”
“அப்படி நடப்பதால் யாரிற்கும் எந்த லாபமும் இல்லை மன்னவா.”
“வாழ்க்கைக்கும் ராஜ்ஜியத்திற்கும் முடிச்சுப்போடாதே பெண்ணே.”
“உங்கள் வாழ்க்கை இந்த ராஜ்ஜியத்தோடுதானே பின்னி கிடக்கிறது.”
“அந்த சிக்கலை அவிழ்க்க எனக்குத் தெரியும் பரிவாதனி. என் பட்டமகிஷியாக வேறு யாரையும் கொண்டு வரும் யோசையை இந்த அருவியோடு இப்போதே விட்டுவிடு.” இப்போது பரிவாதனியின் தலைத் தானாக குனிந்தது. உண்மையிலேயே அந்த யோசையைத்தான் அவள் இளவரசனிடம் சொல்ல ஆயத்தப்பட்டாள்.
“உனக்கும் எனக்கும் நடுவில் யார் குறுக்கே வந்தாலும் அவர்களை அப்புறப்படுத்த எனக்குத் தெரியும் பரிவாதனி. ஆமாம், உன் தந்தை எங்கே?”
“தந்தை காஞ்சியை விட்டு இரண்…” பேச்சை ஆரம்பித்தவள் அப்போதுதான் அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்து அதிர்ந்து பார்த்தாள்.
“புரிகிறதல்லவா? வீணை மீட்ட தெரிந்த மகேந்திரனிற்கு வாள் பிடிக்கவும் தெரியும். மனைவியைக் காபந்து பண்ண தெரிந்த பல்லவனிற்கு மக்களைக் காக்கவும் தெரியும். நீ எதற்கும் கவலைப்படாதே பெண்ணே. மகேந்திர வர்மன் இந்த மஞ்சள் கல் மங்கைக்குத்தான்.” இதைச் சொல்லும்போது அவன் விரல்கள் அவள் கழுத்தை முத்தமிட்டு கொண்டிருந்த கனக புஷ்பராக ஆபரணத்தை வருடியது.
“அதே நிற கற்கள். வாதாபிக்கும் வேங்கிக்கும் சொந்தமான அதே மஞ்சள் நிற கற்கள்!” அந்த வார்த்தைகளை அவன் உதிர்த்த போது இதுவரை அவன் அருகாமையை ரசித்திருந்த ஏந்திழை சட்டென்று விலகியது.
அவளை நிறுத்துவதற்காக நீண்ட அவன் கரத்திற்குள் அவள் கரம் அகப்படவில்லை. மாறாக புடவைத் தலைப்பே அகப்பட்டது. சட்டென நின்ற அவள் நடைப் புடவையைத் தனதாக்க முயன்றது. ஆனால் கிடைத்ததை இளவல் திருப்பி கொடுக்கவில்லை. முழுவதையும் தனதாக்க முயன்றது. விஸ்தரிப்பு ராஜ்ஜியத்திற்கு மட்டும்தானா? காதலிற்கு இல்லையா?
“மன்னவா, இது முறையல்ல.”
“கந்தர்வ விவாகம் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானே.”
“ஆனால் தமிழர் பண்பாடல்ல.”
“சத்திரியர் பண்பாடு. வீரர்கள் பண்பாடு.” கைக்குள் சிறைப்பட்டதை முழுதாக அபகரித்தான் பல்லவ குமாரன். அபகரித்த பொருள் இது நேரம் வரை மறைத்திருந்ததெல்லாம் அவன் திருஷ்டிக்கென்றே படைக்கப்பட்டது போல மலர்ந்து கிடந்தன.
நெடுநாள் முற்றுகையிட்டு கோட்டையைப் பிடித்த வீரன் அதைச் சூறையாடுவதுதானே வழக்கம். அங்கேயும் அதுதான் நடந்தது. பாவம்! அந்த கோட்டை என்ன செய்யும்! இதுநாள்வரைத் தான் சேர்த்து வைத்திருந்த ஐஷ்வர்யங்களை ஒவ்வொன்றாக களவு கொடுத்தது!
காக்க வேண்டியவனே கள்வனானான்!