Pallavankavithai-05

PKpic-174276ad
Azhagi

பல்லவன் கவிதை 05

அருவி நீரின் ஓட்டம் சலசலவென்று காதில் இன்ப நாதத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. பட்சிகளின் சத்தமும் அருவி நீரின் சலசலப்போடு இணைந்து கொண்டு அந்த இடத்தையே இன்பலோகம் ஆக்கியது.

சூரியன் உச்சிக்கு வர வெகு நேரம் இருந்ததால் மெல்லிய வெளிச்சம் அந்த மரங்கள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் நுழைய முயற்சித்து தோற்று போயிருந்தது.

அங்கிருந்த வெற்று பாறை ஒன்றின் மேல் சாய்ந்திருந்தான் பல்லவ இளவல். அவன் சாய்ந்திருந்த பாறைக்கும் அவன் மார்பிற்கும் அதிக வித்தியாசம் இருக்கவில்லை. அதை அவன் மார்பில் சாய்ந்திருந்த பரிவாதனி நன்றாக உணர்ந்தாள்.

என்றோ ஒரு நாள் உபாத்தியாயர் அவளுக்குச் சொல்லி கொடுத்த பாடம் இப்போதும் அவள் காதுகளில் ஒலித்து கொண்டிருந்தது.

கம்பன் ஓரிடத்தில் ராமனின் மார்பை வர்ணிக்கிறார். அதையும் சூர்ப்பனகையின் கண்கள் மூலமாக உலகிற்குக் காட்டுகிறார். அந்த பரந்து விரிந்த மார்பைப் பார்ப்பதற்கு என் இரு கண்களின் விசாலம் போதவில்லையே என்று சூர்ப்பனகை ஏங்கினாளாம்!

பரிவாதனிக்கு ஏனோ அந்த பாடம் இப்போது ஞாபகம் வந்தது. அந்த நினைவு கொடுத்த உன்மத்தத்தில் லேசாக அசைந்தது பெண். அந்த அசைவில் அவள் இடையைத் தழுவி இருந்த பல்லவ குமாரனின் அணைப்பு மேலும் இறுகியது.

‘அம்மா! இது கையா இல்லை மரமா?’ மனது அவனை வைதாலும் அந்த இன்ப வேதனை இப்போது அவளுக்கும் தேவைப்பட்டதாகத்தான் இருந்தது.

புடவைக்காக அவள் கைப் பாறையைத் துழாவியது. துழாவிய அவள் கையைப் பற்றி தடுத்த இளவல் அவள் முகத்தைக் குனிந்து பார்த்தான். அந்த பார்வையைத் தாங்கும் சக்தி அவளிடம் இல்லை. நாணத்தால் கன்னங்கள் சிவக்க இன்னும் தலையைக் குனிந்து கொண்டாள்.

“பரிவாதனி, இன்னும் எதற்கு என்னிடம் வெட்கம் உனக்கு?” இந்த கேள்வியில் பரிவாதனிக்குத் தலையில் அடித்து கொள்ளலாம் போலிருந்தது.

‘இவருக்கென்ன?‌ ஆண்பிள்ளை, சுலபமாக சொல்லி விடுவார்… என்பாடு எனக்கல்லவா தெரியும்!’

“வா பரிவாதனி, சித்தரஞ்சனை உனக்கு அறிமுகம் செய்கிறேன்.” பாறையை விட்டு எழுந்தவன் அவளையும் அழைத்தான்.

“இளவரசே!” அவள் குரல் பதறியது.

“ஏன்? எதற்குப் பதறுகிறாய்?”

“என் மேலாடை…” அதற்கு மேல் அவள் பேசவில்லை.

“மேலாடையா? அது எதற்கு?” இப்போது அவன் திருஷ்டி அவள் மார்புக்கச்சைக்காக நீள அவள் கரங்கள் ஆடையாகின.

“குதிரைக்குக் கண்கள் இருக்கின்றன.”

“இருக்கட்டுமே… என் வாள், மனைவி, குதிரை இது மூன்றிலும் எனக்குப் பேதமில்லை.”

“உங்களுக்கு இல்லை, ஆனால் நான் பெண்ணல்லவா?”

“ஓஹோ! குதிரைக்குப் பெண் பெயராக வைத்திருக்க வேண்டுமோ?”

“போதும் கேலி.” அவள் எவ்வளவு கெஞ்சியும் கேளாமல் முரட்டுத்தனமாக அவளைப் புரவிக்காக அழைத்து சென்றான் இளவரசன். இருந்தாலும் அவன் முதுகிற்குப் பின்னாலேயே நின்றிருந்தாள் பெண்.

“இப்படி நின்றால் எப்படி பெண்ணே உன்னை அறிமுகம் செய்வது?”

“குதிரைக்கு எதற்கு என்னை அறிமுகம் செய்ய வேண்டும்?”

“இது என்ன கேள்வி பரிவாதனி? சாதாரண புரவிகளைப் போன்று சித்தரஞ்சனையும் நீ நினைத்து கொண்டாயா?”

“ஏன்? இதில் ஏதேனும் விசித்திரம் இருக்கிறதா?”

“என்னையல்லாமல் வேறு யாராவது இந்த புரவியைத் தொட்டால் அவர்களை இது கடித்து குதறிவிடும்.”

“அப்படியா?! ஆனால் இன்று என்னை ஒன்றும் செய்யவில்லையே?”

“இன்று நீயாக புரவியை நெருங்கவில்லையே, நான்தானே உன்னைப் புரவிக்காக தூக்கினேன்.”

“ஓஹோ!” அவள் வியந்து நிற்க குதிரைக்கு அருகில் சென்ற இளவல் அதன் காதில் ஏதோ சொன்னான். அதன் முகத்தில் அவன் கைகளால் ஸ்பரிசத்து ஏதேதோ ஜாடைச் செய்தான். பின்பு பரிவாதனியின் கைகளை இழுத்து குதிரையின் முகத்தில் வைத்தான். இப்போது குதிரை பலமாக கனைத்தது. பெண் பயந்து போய் கைகளை இழுத்துக்கொள்ள போக மகேந்திரனும் பலமாக நகைத்தான்.

“சித்தரஞ்சா! புரிந்துகொண்டாயா? இந்த அழகிதான் என் உள்ளம் கவர்ந்தவள், எனக்கு மட்டுமல்ல இனி உனக்கும் இவள்தான் எஜமானி!” பல்லவ குமாரனின் குறும்பான வார்த்தைகளில் சங்கடப்பட்ட பெண் சற்றே நகர்ந்து மரங்கள் இருந்த பக்கமாக சென்றாள். பல்லவனின் பார்வையும் பெண்ணையே வட்டமிட்டது.

இது நேரம் வரைத் தான் சுகித்திருந்த அங்க லாவண்யங்கள் அவனை மீண்டும் அவளுக்காக இழுத்து சென்றன. இவ்வளவு காலமும் வீணையை மட்டுமே மீட்டிக்கொண்டிருந்தவன் முதன்முதலாக இன்று தான் மீட்டிய மங்கையின் ஸ்பரிசத்தில் மயங்கி போயிருந்தான்.

“மைத்ரேயி!” அவன் வார்த்தையில் குழம்பிய பரிவாதனி சட்டென்று திரும்பி பார்த்தாள்.

“மைத்ரேயியா? யாரது?”

“யாக்ஞவல்கியரின் மனைவி.”

“அவளை எதற்கு இப்போது நீங்கள் அழைக்கிறீர்கள்?”

“அவர் மனைவியை நான் எதற்கு அழைக்க போகிறேன்? நான் என் பெண்ணையல்லவா அழைத்தேன்!”

“உங்கள் பெண்ணா? உங்களுக்கு ஏது பெண்?!” பரிவாதனியின் கண்களில் இப்போது அனல் தெறித்தது. ஆனால் இளவரசன் அதைக் கிஞ்சித்தும் கவனிக்கவில்லை.

“என் பெண்தான். நாளை உனக்கும் எனக்கும் பிறக்கப்போகும் பெண், அவள்தான் மைத்ரேயி.”

“அப்படியென்றால் யாக்ஞவல்கியரை எதற்கு இழுத்தீர்கள்?”

“உன் பின்னழகைப் பார்த்த போது வீணை ஞாபகம் வந்தது, வீணை ஞாபகம் வந்த போது மைத்ரேயி மனதில் வந்தாள்.” இதைப் பல்லவன் சொன்னபோது பரிவாதனியின் முகம் வாடிப்போனது.

“கார்க்கியை மட்டும் மோட்சத்திற்கு அழைத்து சென்ற யாக்ஞவல்கியர் மைத்ரேயியை அழைத்து செல்லவில்லை.”

“அது யார் கார்க்கி?”

“அவரின் இன்னொரு மனைவி.”

“நல்ல அழகுதான்.” பெண் நொடித்து கொள்ள இளவரசன் நகைத்தான்.

“ஏன் அவளை மட்டும் அழைத்து செல்லவில்லை?”

“உன் வீணை வாசிக்கும் திறனால் மோட்ச லோகத்திற்கு நீ துணையின்றியே வரலாம் என்று சொன்னாராம்.”

“ஓ… அத்தனைத் திறனா அவளிடம்?”

“உன்னளவு இருந்திருக்காது பரிவாதனி.” அந்த வார்த்தைகளில் பெண் சொக்கி போனாள்.

“நாளை நமக்குப் பிறக்க போகும் பெண்ணும் மைத்ரேயிதான்.”

“ஏன்? ஆணாக இருக்க கூடாதா?” இதைக் கேட்டு முடிப்பதற்குள் அவளை வெட்கம் பிடுங்கி தின்றது.

“இல்லையில்லை… பெண்தான்! மகேந்திரனிற்கு பிறகு பல்லவருக்கு ராஜா இல்லை, ராணிதான்!” அந்த சொற்கள் அவர்கள் இருவரையுமே கனவுலகத்திற்கு அழைத்து சென்றது. இவையெல்லாம் போதாதென்று பல்லவன் அவளை அருவிக்குள்ளும் அழைத்து சென்றான்.

“என்னிடம் மாற்றுடை இல்லையே?”

“நானிருக்க உனக்கு மாற்றுடை வேறு வேண்டுமா பெண்ணே!” அவளை எந்த திக்கிலும் நிமிர விடாமல் அன்று ஆக்கிரமித்தான் மகேந்திரன். பரிவாதனிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நடப்பவை எதிலும் அவளுக்கு நாட்டமில்லை என்றால் ஒதுங்கி இருக்கலாம்.‌ ஆனால் அவள் உள்ளும் புறமும் அவனுக்காக ஏங்குகையில் அவள் எதைத் தவிர்ப்பாள்!

“பல்லவ குமாரா! ஏன் இத்தனை அவசரம்?” நீரிற்குள்ளும் அவன் லீலைகள் தொடர இருவரிற்கும் சேர்த்து கடிவாளம் போட நினைத்தாள் பெண்.

“இதில் அவசரம் ஏதுமில்லையே பரிவாதனி!”

“இருக்கிறது மன்னவா! உற்றாரை அழைக்கவில்லை, சாட்சிகள் ஏதுமில்லை…”

“உனக்கு பன்னிரெண்டு சாட்சிகளும் வேண்டுமா பரிவாதனி?”

“பன்னிரெண்டா?”

“ஆமாம், இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் பன்னிரெண்டு சாட்சிகள் உண்டு, அது அந்தரங்கமாக இருந்தாலும்.” அவன் கண்கள் அவளை நோக்கி ஒரு முறை விஷமத்துடன் சிமிட்டின.

“இப்போது உனக்கும் எனக்கும் பஞ்ச பூதங்கள் சாட்சி, இருதயம் சாட்சி, வேண்டுமானால் சித்தரஞ்சனையும் சேர்த்து கொள்.”

“உங்களிடம் பேசி தப்ப முடியாது.”

“பேச்சில் மட்டுமல்ல, எதிலிருந்தும் இன்றைக்கு நீ தப்ப முடியாது.”

சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை பல்லவ இளவல் அந்த காட்டிற்குள் பல கதைகள் படித்தான். பல கதைகள் பேசினான். அவன் ஆசைகள், கனவுகள் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டான். பல்லவ சாம்ராஜ்யத்தில் அவன் செய்ய இருக்கும் பல புதுமைகள் பற்றி அவளிடம் பிரஸ்தாபித்தான். அபிப்ராயங்கள் கேட்டான்.

குதிரையின் கழுத்திலிருந்த பையை அவிழ்த்து அதிலிருந்த கனிகளையும் உண்டிகளையும் பகிர்ந்துண்டான். அவ்வப்போது கனியைத் தவிர்த்து கன்னியையும் உண்டு மகிழ்ந்தான்.

‘பரிவாதனி…‌ பரிவாதனி…’ என்று அந்த காட்டின் மூலை முடுக்கெல்லாம் கேட்க பிதற்றினான் பல்லவ குமாரன்.

மாலை மங்கும் நேரம் அவன் சொன்ன இடத்தில் அந்த தேர் வந்து நின்ற போது அவள் இதழோடு இதழ் பொருத்தி உயிரை முழுதாக உறுஞ்சி எடுத்தான்.

“பரிவாதனி, நான் சொல்வதைக் கவனமாக கேள்.” அவன் பேச ஆரம்பித்த போது பெண்ணும் சோர்ந்து போனாள். பிரிவுத்துயர் அவளையும் வாட்டியது.

“நீயும் நானும் சேர்வது அத்தனைச் சுலபமல்ல அதை நான் நன்கறிவேன், எது எப்படியிருந்தாலும் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் மகேந்திர பல்லவனின் உடலில் உயிர் இருக்கும் வரை நீதான் என் பட்டமகிஷி! இது என் வாள் மீது ஆணை!” உணர்ச்சி பொங்க கூறியவன் தேரின் கதவை அவளுக்காக திறந்து விட்டான். அவன் செய்த காரியத்தில் முத்தைய்யன் கூட திகைத்து போனான்.

“எசமான்!”

“பாதகமில்லை முத்தைய்யா, என் மனைவிக்குத்தானே செய்கிறேன்.” அவன் பதிலில் முத்தைய்யன் தலையாட்டி சிரிக்க பரிவாதனி சங்கடப்பட்டு போனாள்.

தேரில் பெண் ஏறி உட்கார்ந்து கொள்ள அவன் இடது கரம் அவள் பொற்பாதங்களை வருடியது. சட்டென்று குனிந்து அவன் கரத்தை அவள் தடுக்க அவன் வலது கரம் அவள் மூக்கில் மூக்குத்தி போலிருந்த வளையத்தை வருடியது.

சித்தரஞ்சனும் தேரிற்குப் பக்கத்தில் வந்து சோகமாக நின்றது. பரிவாதனி அவள் கரத்தால் அதன் முகத்தை மெதுவாக வருடி கொடுத்தாள்.

“இந்த பாக்கியம் எனக்கு இல்லையா தேவி?” அவன் வார்த்தைகளில் அவள் கண்கள் குளமானது. அவள் விரல்கள் சுருண்ட அவன் கேசத்தை ஒரு முறைக் கோதி கொடுத்தது. கன்னத்தில் இறங்கிய கரம் அவன் இதழ்களையும் ஆசையோடு வருடியது. கழுத்தில் இறங்கி தோளில் வந்து நின்ற கையில் திரும்பி தன் இதழ்களைப் பதித்த இளவல்,

“ம்… கிளம்பு முத்தைய்யா!” என்றான் ஆணைப் போல. தேர் வேகமெடுத்தது.

***

அன்று இரவு போஜனம் மிகவும் விமர்சையாக இருந்தது. மாளிகையில் எப்போதும் பகல் போஜனம் விமர்சையாக இருப்பதுதான் வழக்கம். மன்னரைப் பார்க்க வரும் விருந்தினர்கள், புலவர்கள், வேற்று நாட்டு ராஜ உத்தியோகத்தர்கள் அத்தனைப் பேரும் உணவருந்துவதால் பகல் வேளைப் பரபரப்பாக இருக்கும்.‌

அதற்கு எதிர்மாறாக இரவு வேளை அமைதியாக கழியும். மன்னர் பெரும்பாலும் கனிகளும் பாலும் மாத்திரமே இராப்போஜனமாக உண்பதால் மற்றவர்களுக்கும் அந்த பொழுது சாதாரண உணவுடனேயே கழியும்.

இவை எல்லாவற்றிற்கும் மாறாக அன்று மிக உற்சாகமாக மன்னர் போஜன அறையில் வந்து உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் விஜயமகா தேவியும் அமர்ந்திருந்தார்.

மகேந்திர வர்மனுக்கும் அமரா தேவிக்கும் அழைப்பு போயிருந்ததால் அவர்களும் ஆச்சரியத்தோடு அந்த இடத்திற்கு வந்தார்கள். இதையெல்லாம் விட பெரிய விஷயமாக இரவு உணவிற்கு முதலமைச்சரும் உப சேனாதிபதியும் கூட அழைக்கப்பட்டிருந்தார்கள்.

தந்தையும் மகனும் உள்ளே நுழையவும் மகேந்திரனும் அமராவும் திகைத்து போனார்கள்.‌ ஆனால் மன்னர் தன் தேவியைப் புன்னகையோடு திரும்பி பார்க்க விஜயமகா தேவி விருந்தினர்களை வரவேற்றார்.

“வாருங்கள் முதலமைச்சரே!‌ உப சேனாதிபதியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பார்க்கும் பாக்கியம் இன்றுதான் கிடைத்திருக்கிறது.” மகாராணியின் வார்த்தைகளில் மகிழ்ந்த பொதிகை மாறன் அவருக்கு பணிவோடு வணக்கம் வைத்தான். மன்னரும் பட்டமகிஷியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். இருவர் கண்களிலும் திருப்தி இருந்தது.

“உட்காருங்கள் முதலமைச்சரே!” சொல்லிவிட்டு புவனமகா தேவி உள்ளே நோக்கி திரும்ப பணிப்பெண்கள் தங்க தட்டுகளில் உணவுப்பொருட்களைக் கொண்டு வந்து பரிமாறினார்கள்.

அறுசுவையும் அன்று விருந்தில் இடம்பெற்றிருக்க அனைவரும் அமைதியாக உண்டு கொண்டிருந்தார்கள். சற்று நேரம் ராஜ்ஜிய விவகாரங்களை அலசி ஆராய்ந்த மன்னர் இறுதியாக பேச்சை வேறு திசைக்கு மாற்றினார்.

“முதலமைச்சரே! பொதிகை மாறன் என்ன சொல்கிறான்?” என்றார் ஒருமையில். முதலமைச்சர் லேசாக சிரிக்க மாறனின் முகத்தில் கேள்வி தெரிந்தது. மகேந்திரனும் அமராவும் கூட தங்கள் அப்பாவை நிமிர்ந்து பார்த்தார்கள். சிம்ம விஷ்ணு மகாராஜாவும் இப்போது புன்னகைத்தார்.

“ஓஹோ! இன்னும் விஷயம் உப சேனாதிபதி அவர்கள் காதுகளுக்கு எட்டவில்லை போலிருக்கிறது?”

“மகாராஜா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எந்த விஷயம் என் காதுகளுக்கு இன்னும் எட்டவில்லை?” மிகவும் பணிவாக வந்தது பொதிகை மாறனின் கேள்வி.

“பொதிகை மாறா… இல்லையில்லை, வீட்டு மாப்பிள்ளையைப் பெயர் சொல்லி அழைக்க கூடாது, நான் சொல்வது சரிதானே தேவி?”

“சரிதான் மகாராஜா.” விஜயமகா தேவியும் புன்னகையோடு ஆமோதிக்க அந்த இடமே ஸ்தம்பித்தாற் போல ஆனது.

“வீட்டு மாப்பிள்ளையா?” மகேந்திரன் ஆச்சரியத்தோடு கேட்க அமராவின் முகத்திலும் மாறனின் முகத்திலும் சந்தோஷம் பீறிட்டது. அதற்குள் அவர்கள் மனதிலிருந்த ஆசைப் பெரியவர்களுக்குத் தெரிந்து விட்டதா?

பொதிகை மாறன் மகேந்திரனை திரும்பி பார்த்தான். சொல்வதாக இருந்தால் இளவரசன்தானே பெரியவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும்? ஆனால் அவர் முகத்திலும் ஆச்சரியம் தெரிகிறதே?! இப்போது மகாராஜாவே மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்.

“பொதிகை மாறா! நான் நேராகவே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.”

“சொல்லுங்கள் அரசே.”

“இந்த பல்லவ ராஜ்ஜியம் அறிந்து எனக்கு ஒரு பெண்பிள்ளைதான், ஆனால் உண்மையிலேயே எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.”

“என்ன?!” இளையவர்கள் மூவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. ஆனால் பெரியவர்கள் மூவர் முகத்திலும் புன்னகையே இருந்தது.

“ஆமாம் உப சேனாதிபதி! மன்னரிற்கு ஒரு வளர்ப்பு மகள் இருக்கிறாள், அவள் பெயர் பரிவாதனி.” உணவை அள்ளிய மகேந்திரனின் கை அந்தரத்தில் நின்றதென்றால் அமராவின் முகம் அச்சத்தால் வெளுத்தது.

“மகாராஜா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கொன்றும் புரியவில்லையே?”

“என் வளர்ப்பு மகள் பரிவாதனியைக் கட்டிக்கொள்ள உங்களுக்கு இஷ்டமா என்று கேட்கின்றேன் மாப்பிள்ளை.” ஏதோ பெரிய ஹாஸ்யத்தைச் சொல்லி விட்டது போல மகாராஜா இடி இடியென்று நகைக்க பொதிகை மாறன் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தான்.

அவர் முகத்திலும் தவழ்ந்த புன்னகை விஷயம் அவருக்கு புதிதல்ல என்று சொல்லாமல் சொல்லியது.

“முதலமைச்சரிடம் ஏற்கனவே விஷயத்தைச் சொல்லி விட்டேன், அவர் சம்மதித்து விட்டார்.”

“ஓஹோ!” பொதிகை மாறனிற்கு திடீரென்று தன் தலை மேல் யாரோ கல்லைத் தூக்கி போட்டது போல இருந்தது.

“மாப்பிள்ளைக்குப் பெண் யாரென்று தெரியாதில்லையா? இதுவரைப் பார்த்திருக்கிறாரோ என்னவோ? அதனால்தான் யோசிக்கிறார்.”

“நீ சொல்வதும் சரிதான் தேவி, பெண்ணைப் பார்த்துவிட்டே மாப்பிள்ளை பதிலைச் சொல்லட்டும்.” அத்தோடு விஷயம் முடிந்துவிட்டது என்பதைப் போல பெரியவர்கள் எழுந்து வெளியே போய்விட்டார்கள். ஆனால் அந்த போஜன அறையிலிருந்த மூவர் மனதிலும் அலையடித்தது. என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் அமரா தேவியின் பொறுமைப் பறந்தது.

“யாரந்த பரிவாதனி?” கேட்ட அமராவின் குரலில் வெறுப்பு மிதமிஞ்சி கிடந்தது.

“உபாத்தியாயர் மகள்.” அமைதியாக பதில் சொன்னான் மகேந்திரன். இளவரசன் மனதில் காதலிருப்பது மன்னன் மகளிற்கும் தெரியும், முதலமைச்சர் மகனிற்கும் தெரியும். ஆனால் அது யாரென்பது இருவரிற்கும் தெரியாது.

ஆனால் மகேந்திரன் விழித்து கொண்டான். பரிவாதனியின் மேல் தனக்கொரு அபிப்பிராயம் இருப்பது தந்தைக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். தெரிந்திருந்தும் இந்த ஏற்பாடுகளில் இறங்கி இருக்கின்றார் என்றால்…

தோன்றியிருக்கும் நேசத்தை முளையிலேயே கிள்ளிவிட நினைக்கிறாரா? அது முளையல்ல ஆல விருட்சம் என்று அவர் அறிவாரா?

“ஆக… இப்போது போட்டி இளவரசனிற்கும் உப சேனாதிபதிக்குமா?” நிதானமாக கேட்டான் பல்லவ இளவல்.

“இளவரசே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“பரிவாதனியின் மேல் என் மனம் லயித்திருப்பது தெரிந்தும் உன் தந்தையும் என் தந்தையும் இந்த ஏற்பாட்டில் இறங்கி இருக்கிறார்கள் என்றால்… அதற்கு என்ன அர்த்தம் உப சேனாதிபதி?”

“பல்லவ குமாரா?!” பொதிகை மாறன் திகைப்பின் உச்சிக்கே போய்விட்டான்.

“நடப்பது எதுவும் எனக்குத் தெரியாது.”

“புரிகிறது உப சேனாதிபதி.” ஆண்கள் இருவரும் பேசிக்கொள்ள அவர்களின் உரையாடலால் கோபம் கொப்பளிக்க அமர்ந்திருந்த அமரா தேவியின் வாயிலிருந்து அமில துளிகள் சிதறின.

“ஓஹோ! அத்தனைப் பெரிய பேரழகியா அந்த பரிவாதனி?” தங்கையின் குரலில் இருந்த கேலியை மகேந்திரன் ரசிக்கவில்லை. தங்கையை உற்று பார்த்தான்.

ஆனால் இதை எதையும் கவனிக்கும் நிலையில் பெண் இல்லை. அண்ணன் மனதில் இடம் பிடித்திருக்கும் முகம் தெரியாத யாரோ ஒரு காஞ்சி மாநகர பெண் மேல் அவளுக்கு வெறுப்பு ஏற்கனவே கொட்டி கிடந்தது. போதாததற்கு இப்போது அந்த பெண்ணே தன் வாழ்க்கைக்கும் உலை வைக்க வந்திருக்கிறாள் என்று தெரிந்த போது அவள் கோபம் கரையுடைத்திருந்தது.

“அமரா! வார்த்தைகளை அளந்து பேசு.”

“ஓஹோ! உங்களுக்கு அந்த மோகினியைப் பற்றி பேசியதும் கோபம் வருகிறதோ?”

“நீ பேசுவது உன் அண்ணனிடம், அது உனக்கு நினைவிலிருக்கட்டும்!”

“எனக்கு எல்லாம் நினைவில் இருக்கிறது, உங்களுக்குத்தான் எல்லாம் மறந்துவிட்டது… அது சரி பிசாசு பிடித்தால் வேறு…” அமரா பேசி முடிக்கும் முன்பாக மகேந்திரன் இருந்த ஆசனம் பின்னோக்கி பறந்தது. ஆவேசமாக எழுந்து நின்றான் இளவரசன்.

பொதிகை மாறனிற்கு என்ன செய்வது, என்ன பேசுவது எதுவுமே புரியவில்லை. திகைத்த படி அவனும் எழுந்து விட்டான். ஆனால் அமரா தேவி ஆங்காரமாக அவள் ஆசனத்திலேயே அமர்ந்திருந்தாள். கண்கள் மட்டும் தன் தமையனை உறுத்து விழித்தது! விம்மி தணிந்த அவள் மார்பு அவளின் உள்ள கொதிப்பை அங்கிருந்தவர்களுக்குச் சொன்னது.

“வார்த்தைகளை அளந்து பேசு என்று உன்னை நான் எச்சரித்து விட்டேன் அமரா!”

“அவளைச் சொன்னதும் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதா? கேவலம் ஒரு உபாத்தியாயர் மகள்…”

“அமரா!” மகேந்திரன் ஓங்கி அங்கிருந்த மேசையில் அடிக்க பாத்திரங்கள் துள்ளி குதித்தன.

“நீ விமர்சிப்பது இந்த மகேந்திர பல்வவனின் இதயம் தொட்டவளை! நீ கேவலப்படுத்துவது இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் நாளைய பட்டமகிஷியை!”

“ஓஹோ! அந்த அளவிற்குப் போய் விட்டதா?”

“அதையும் தாண்டிக்கூட போய்விட்டது.”

“அதனால்தான் அந்தப்புர தேர் மகாராணியின் சேவைக்குப் போனதோ?!” இப்போதும் அமராவின் குரலில் கேலி மிதமிஞ்சி கிடந்தது. அதை பொதிகை மாறன்கூட ரசிக்கவில்லை.

மகேந்நிர பல்லவன் அதற்கு மேல் என்ன செய்திருப்பானோ! தங்கையை நோக்கி மூர்க்கத்தனமாக வந்த மகேந்திரனை பாதியிலேயே வழி மறித்தான் மாறன்.

“இளவரசே! பொறுமையைக் கடைப்பிடியுங்கள், வீரரான நீங்கள் இப்படி உணர்ச்சி வசப்படலாமா?” பொதிகை மாறனின் வார்த்தைகள் அந்த காட்டாற்று வெள்ளத்திற்குக் கல்லணைப் போட்டது.

“மாறா! அங்கே உட்கார்ந்திருப்பது என் தங்கையாக இருந்தால் நடப்பதே வேறு… அவள் உன் காதலி என்பதால் அவளை விட்டு வைக்கிறேன், இது உனக்கு நான் செய்யும் மரியாதை! என் நன்பணுக்கு நான் செய்யும் மரியாதை!” உணர்ச்சி பொங்க சொல்லிவிட்டு சட்டென்று வெளியே போய்விட்டான்.

அமராவை கோபமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு இளவரசனைப் பின் தொடர்ந்தான் பொதிகை மாறன். மகேந்திரன் அவன் மாளிகைக்குச் செல்லவும் அவன் பின்னோடே உப சேனாதிபதியும் போனான்.

“இளவரசே!” அந்த வார்த்தைகளில் இளவரசனின் நடை நிதானித்தது.

“மன்னிக்க வேண்டும் பல்லவ குமாரா! கொஞ்சம் உங்களை நிதானப்படுத்தி கொள்ளுங்கள்.”

“அமரா பேசிய வார்த்தைகளைக் கேட்டாயா மாறா? இதே வார்த்தைகளை உன்னைப் பார்த்து நான் கூறினால் அவள் தாங்கி கொள்வாளா?”

“சிறுபெண்… ஏதோ அறியாமல் பேசிவிட்டார்கள், மன்னியுங்கள் இளவரசரே.”

“இல்லை மாறா… என் மனதில் என்ன இருக்கின்றது என்று தெரிந்தும் அத்தனைப் பேரும் இப்படி நடந்து கொள்வதுதான் எனக்கு வலிக்கிறது.”

“புரிகிறது இளவரசே.”

“நீ புரியாத அறியாத பல விஷயங்கள் எனக்குள் இருக்கின்றன மாறா.”

“இளவரசே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“பரிவாதனி சாதாரண பெண்ணல்ல உப சேனாதிபதி, அவள் பிறப்பிற்குப் பின்னே பெரிய ரகசியம் இருக்கிறது.”

“என்ன?!”

“ஆமாம்… அந்த ரகசியம் இங்கிருக்கும் பலருக்குத் தெரியும், ஆனாலும் சொல்ல மறுக்கிறார்கள்.”

“என் தந்தை?”

“அவருக்கும் தெரியும், தெரிந்துதான் இத்தனை ஏற்பாடும் செய்கிறார்.” இப்போது மாறனின் முகம் சிந்தனையைக் காட்டியது.

“இவர்கள் என்னிடமிருந்து பரிவாதனியை பிரிப்பதில் ஏதோ பலமான காரணம் இருக்கிறது மாறா.”

“ஓ…”

“ஆனால் காரணம் எத்தனைப் பலமாக இருந்தாலும் என் மனைவியை விட்டு கொடுக்க நான் தயாரில்லை.”

“மனைவியா? இளவரசே! என்ன சொல்கிறீர்கள்?”

“எந்த சக்தியாலும் எங்களைப் பிரிக்க முடியாதென்கிறேன்… மகாராஜா அல்ல, இந்த மண்டலமே எதிர்த்து நின்றாலும் எங்களைப் பிரிக்க முடியாது!” கர்ஜித்த பல்லவன் உப சேனாதிபதியை ஒரு முறை இறுக தழுவினான். அந்த அணைப்பின் உறுதி அவன் மனதின் உறுதியைச் சொன்னது.

கடகடவென்று படிகளில் இறங்கி தனது புரவிக்காக செல்லும் இளவரசனையே பார்த்திருந்தான் பொதிகை மாறன்.

“என்ன சொல்கிறார் உங்கள் ஸ்நேகிதர்?” தனக்குப் பின்னால் கேட்ட குரலில் திரும்பினான் உப சேனாதிபதி. அமரா தேவி நின்று கொண்டிருந்தாள். கண்கள் சிவந்து தடித்திருந்தன.

“அவர் மனதிலிருப்பதைச் சொன்னார், அதில் அவர் கொண்டுள்ள உறுதியைக் காட்டினார்.”

“ஓஹோ! நீங்களும் கையைக் கட்டிக்கொண்டு கேட்டு கொண்டிருந்தீர்களாக்கும்!”

“நான் வேறு என்ன செய்யட்டும் அமரா?”

“உன் தகுதிக்கு இது தேவைதானா என்று கேட்பதுதானே?”

“இல்லை… என் மனதில் காதல் இருக்கிறது, அது இன்னொரு காதல் கொண்ட மனதைப் புண்படுத்தாது.”

“மன்னனுக்கு காதல் என்…”

“போதும் அமரா! இன்று இளவரசனை மட்டுமல்ல, என்னையும் நீ புண்படுத்தி விட்டாய்.”

“நான் சொல்வது உங்களுக்குக் கூட புரியவில்லையா?”

“மன்னன் மகளாக உனக்கு நடக்க தெரியும் போது இந்த நாட்டின் இளவரசனாக நடக்க உன் அண்ணனுக்கும் தெரியும், நீ அமைதியாக இரு.” கொஞ்சம் உஷ்ணமாகவே சொல்லிவிட்டு மாளிகையை விட்டு வெளியேறி விட்டான் பொதிகை மாறன். கண்களில் நீர் திரள நின்றிருந்தாள் அமரா தேவி!

***

நந்தவன கோவிலின் மணி இரண்டு முறை அடிக்கவும் மகிழினிக்கு எதுவோ புரிந்தாற் போல இருந்தது. சட்டென்று பரிவாதனியை அண்ணார்ந்து பார்த்தாள். அவள் கண்களிலும் ஐயம் தெரிந்தது.

“அப்பப்பா! என்ன புழுக்கமாக இருக்கிறது! நான் கொஞ்ச நேரம் நந்தவனத்தில் உலவிவிட்டு வருகிறேன் பரிவாதனி.” ஒரு போலி நாடகத்தோடு மாளிகையை விட்டு வெளியே வந்தாள் மகிழினி.

அவள் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. கோவிலுக்குப் பக்கத்தில் மரங்களுக்குப் பின்னால் சித்தரஞ்சன் நிற்பது தெரிந்தது. மரத்திற்குப் பக்கத்தில் வந்த மகிழினி இளவரசனுக்கு வணக்கம் வைத்தாள்.

“இளவரசே! உபாத்தியாயர் மாளிகையில்தான் இருக்கிறார்… பரிவாதனியை எப்படியாவது அனுப்புகிறேன், புரவியைக் கொஞ்சம் மரங்களுக்குள் நிறுத்துங்கள், வெளியே தெரிகிறது.”

“அதிக நேரம் எடுக்காதே மகிழினி.”

“ஆகட்டும் பல்லவ குமாரா.” மகிழினி உள்ளே போய் சிறிது நேரத்திற்கெல்லாம் பெண்கள் இருவரும் சிரித்தபடி வெளியே வந்தார்கள். பரிவாதனியின் உதடுகள் சிரித்தாலும் கண்கள் பல்லவ இளவலையே தேடின. மரங்கள் அடர்ந்திருந்த பகுதிக்குள் தோழியை அனுப்பி விட்டு மகிழினி கோவிலுக்குப் பக்கத்தில் காவவலிற்கு நின்று கொண்டாள்.

“இளவரசே! என்ன இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள்? ஏதும் அவசரமா?”

“இன்றைக்கு யாராவது மன்னரிடமிருந்து உன் தந்தையைக் காண வந்தார்களா?”

“இல்லையே? ஏன் கேட்கிறீர்கள்?” பேசிக்கொண்டிருந்த பெண்ணைத் தன்னருகே அழைத்த பல்லவ இளவல் அவளை இதமாக அணைத்துக்கொண்டான்.

“ஒருவேளை நாளை வர வாய்ப்புள்ளது பரிவாதனி.”

“யார் வருவார்கள்?”

“தெரியாது… அடிகளார் வரலாம் அல்லாவிட்டால் முதலமைச்சர் கூட வரலாம்.”

“எதற்கு?”

“உன் திருமணத்தைப் பற்றி பிரஸ்தாபிப்பார்கள்.”

“என்ன?! என் திருமணமா?”

“ஆமாம்.”

“பல்லவ குமாரா! இது என்ன புது தலைவலி?!”

“ஆமாம் தேவி, தேவையில்லாத தலைவலியை உருவாக்கி உன்னையும் என்னையும் பிரிக்கிறார்களாம்!”

“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?‌!”

“நீ எதற்கும் லவகேசமும் அஞ்சாதே பரிவாதனி, இந்த மகேந்திரனை தாண்டி எதுவும் நடந்து விடாது.”

“மன்னவா!”

“பயப்படாதே தேவி!‌ உன்னையும் என்னையும் சுற்றி என்ன நடக்கின்றதென்று நான் நன்கறிவேன்… வீணாக நீ பயந்து போய்விட கூடாது என்பதற்காகத்தான் உன்னை எச்சரிக்க வந்தேன்.”

“ம்…” அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டாலும் அவள் முகம் குழம்பியே கிடந்தது.

“நேரமாகிறது, நீ உள்ளே போ.” அவன் கட்டளைக்கு அடிபணிந்து நகர்ந்தவள் சித்தரஞ்சனின் முகத்தை ஒரு முறை தடவி கொடுத்தாள். பல்லவன் முகத்தில் இப்போது ஒரு இளநகைத் தோன்றியது. எஜமான் முகத்தில் புன்னகையைப் பார்த்ததும் சித்தரஞ்சனும் ஒரு முறைக் கனைத்தான்.