pallavankavithai-12

PKpic-23352c77

பல்லவன் கவிதை – 12

அன்றைக்கும் மைத்ரேயி தன் புரவியிலிருந்து இறங்கும் போது அந்த வாலிபன் அவளுக்காக திடலில் காத்திருந்தான். அவன் முகத்தில் துலங்கிய மந்தகாச புன்னகைப் பெண்ணை ஒரு நொடி ஈர்த்தது. குரு என்ற ஸ்தானத்தில் அவனை வைத்திருந்ததால் குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தியது போல மனதையும் அடக்கினாள் மைத்ரேயி.

“கால் காயம் எப்படி இருக்கிறது?” அக்கறையாக வந்தது அவன் கேள்வி.

“அது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது உபாத்தியாயரே!” குழந்தைத்தனமான அவள் பதிலில் அவன் முகத்தில் இனம்புரியாத ஒரு மலர்ச்சி தெரிந்தது.

“ஏது… தியானத்திற்கு வரும்போது எப்போதும் வாளோடு வராத பெண் இன்றைக்கு வாள் கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது!” அவன் கண்கள் அவள் இடைக் கச்சையில் செருகியிருந்த வாளை நோக்கியது.

“என் குரு அவர் கழுத்தில் கிடக்கும் விலையுயர்ந்த ஆபரணத்தைக் கொடுத்தாலும் கொடுப்பார், ஆனால் அவர் வாளை நீட்டுவதற்கு மட்டும் ரொம்பவே கஞ்சப்படுகிறாரே!” அவள் பதிலில் அவன் பக்கென்று சிரித்தான்.

“ஒரு வீரனுக்கு அவன் வாள் எத்தனை அருமையென்று நீ கூட அறியமாட்டாயா பெண்ணே!”

“நன்றாக அறிவேன் குருவே! அதனால்தான் என் வாளோடு இன்றைக்கு வந்துவிட்டேன்.”

“நல்லது… உன் வாளை நுனியில் பிடித்து லேசாக வளைத்துப்பார்.” அவன் பேச்சில் மைத்ரேயி குழம்பினாள்.

“உபாத்தியாயரே! வாளை எப்படி…” வார்த்தைகளை அவள் முடிக்கவில்லை, அவன் குரல் சீறிக்கொண்டு வந்தது.

“சொன்னதைச் செய் மைத்ரேயி!”

“ஆகட்டும்…” அவள் வாளை அவன் சொன்னது போல நுனியில் பிடித்து வளைக்க முயன்றாள் மைத்ரேயி. அது அசைவேனா என்று அப்படியே நின்றது. இப்போது பெண் அந்த வாலிபனை ஏறிட்டு நோக்கியது.

அவன் அவளுக்கு வார்த்தைகளால் பதில் சொல்லவில்லை. அவன் வாளை விரலால் நுனியில் பிடித்து வளைத்தான். வாள்கூட அவன் பேச்சைக் கேட்டது. மைத்ரேயி வியப்பின் உச்சத்திற்குப் போனாள்.

“உபாத்தியாயரே!”

“பட்டாக்கத்தி பிடித்து சண்டைப் போட நீ ஒன்றும் ராட்சத உருவம் இல்லை, புரிகிறதா?”

“இந்த வாளை எப்படி…”

“உனக்கு வேண்டியதை, உனக்குத் தேவையானதை நீதான் சமைத்துக்கொள்ள வேண்டும், ஏன்? பல்லவ சாம்ராஜ்யத்தில் கொல்லன் பட்டறைகளே இல்லையா? அதைக் கூட உருவாக்காமலா உங்கள் சக்கரவர்த்தி சிற்பத்தையும் நடனத்தையும் வீணையையும் கட்டிக்கொண்டு அழுகிறார்?!” அந்த வார்த்தைகள் பெண்ணைக் கூரிய அம்பு போல தாக்கின. இருந்தாலும் பொறுத்துக்கொண்டாள்.

“இன்றைக்கே தாத்தாவிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் குருவே.” பணிவாக வந்த அவள் பதிலைக் கேட்டு அந்த வாலிபன் கூட திகைத்துப்போனான்.

பெண்ணின் இந்த புது அடக்கம் அவனுக்கு பெரு வியப்பாக இருந்தது. அவளைக் கொஞ்ச நாட்களாகவே அவனுக்குத் தெரியும். ராஜாங்க அலுவலாக பல்லவ தென் எல்லையின் காவிரிக்கு அருகில் வந்த முதல் நாளே அவன் கண்களில் பட்டுவிட்டாள் மைத்ரேயி.

இழுத்துக்கட்டிய பஞ்சகச்சமும், உயர்த்திக்கட்டிய கொண்டையுமாக வியர்க்க விறுவிறுக்க வாள் பிடித்து நின்ற பெண்ணைப் பார்த்த போது வீரனான எவன்தான் வீழ்ந்து போக மாட்டான்!

எப்போதும் திமிறிய படி கர்வமாகவே பதில் சொல்லும் அந்த ஏந்திழையாள் அன்று பணிவாக பகிர்ந்த பதில் அந்த வாலிபனை வியக்க வைத்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?!

“வாளை நீட்டு மைத்ரேயி!” அவன் கட்டளையில் பெண்ணும் தனது வாளை நீட்டியது.

“இப்போது என் போர் முறையை நன்றாக கவனி.”

“ஆகட்டும் குருவே.”

“என் வாள் இப்போது உன்னைப் பக்கவாட்டில் தாக்கப்போகிறது.”

“பக்கவாட்டிலா?”

“ஆமாம், பக்கவாட்டில்தான்… இதற்குப் பெயர் தந்திர வீச்சு.”

“ஓ…”

“என் வாளைத் தடுத்து நிறுத்து.” பக்கவாட்டில் வீழ்ந்த அடிகள் ஒவ்வொன்றும் வாளின் நுனியை உராயாமல் விசித்திரமாக மத்திய பகுதியைத் தொட்டு மீண்டது.

இந்த புதிய போர் முறையில் மைத்ரேயி சிறிது நேரம் திணறினாள். ஆனாலும் அந்த இளம் குரு பெண்ணின் கவனத்தைச் சிந்தாமல் சிதறாமல் ஓரிடத்தில் மையப்படுத்தினான்.

“சிந்தனைக்கு இது நேரமல்ல… என் வாள் வீச்சைக் கவனி!”

“ஆகட்டும் குருவே.”

“நான் தாக்குவது போல இப்போது நீயும் என்னைப் பக்கவாட்டில் தாக்க ஆரம்பி.”

“முயற்சிக்கிறேன் குருவே.”

“உன்னால் முடியும்! ம்… என் வாளின் மையப்பகுதியை உன் வாள் தாக்கட்டும்!”

“சரி குருவே.” அவள் முதல் வீச்சே கொஞ்சம் வேகமாக இருந்தது.

“பெண்ணே… இப்போது நீ இருப்பது பயிற்சியில், போரிலல்ல… உன் வாள் வீச்சில் இத்தனை வேகம் அவசியமில்லை.” அவளை எல்லா வகையிலும் செம்மைப்படுத்திவிடும் நோக்கத்தோடு வழிநடத்தி கொண்டிருந்தான் அந்த வாலிபன்.

தங்கள் பயிற்சியில் மும்முரமாக இருந்த இருவரும் தூரத்தே படைவீரர்கள் புடைசூழ வந்த புரவிகளை அவதானிக்கவில்லை. அந்த புரவிகள் தங்களை அண்மித்ததையோ அந்த புரவிகளின் ஒன்றில் வீற்றிருந்த பெண் தங்கள் பயிற்சியைச் சற்று நேரம் வியப்போடு பார்த்திருந்ததையோ அவர்கள் கிஞ்சித்தும் கவனிக்கவில்லை.

“போதும் நிறுத்துங்கள்!” கட்டளைப் பிறந்த திசையை நோக்கி இளையவர்களின் கண்கள் திரும்பின. மைத்ரேயி ஆர்வத்தோடு புதிதாக வந்தவர்களைப் பார்க்க அந்த இளைஞனின் கண்களோ அவர்களை ஆராய்ந்தது.

“யார் நீங்கள்?” தைரியமாக வந்தது அவன் கேள்வி.

“நீ யார்?” அமரா தேவியின் குரல் சட்டென்று வந்தது. அந்த கேள்வியில் தொனித்த அதிகாரத்தை அந்த வாலிபன் விரும்பவில்லைப் போல தெரிந்தது.

“உங்களை நான் மரியாதையுடன் அழைத்ததாக ஞாபகம்.”

“ஓஹோ! தாங்களுக்கு நான் மரியாதை கொடுக்காததில் தங்களுக்கு வருத்தம் போல தெரிகிறது!” அமரா தேவி பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த வாலிபனின் கண்கள் அவரை அளவெடுத்தது.

“வீரர்கள் வீரர்களை மரியாதைக் குறைவாக நடத்த மாட்டார்கள்.” பட்டென்று பதில் சொன்னான் வாலிபன். இப்போது மைத்ரேயி கூட கொஞ்சம் அதிசயித்த படி தன் குருவைப் பார்த்தாள்.

வந்திருப்பவர்களின் நடை, உடை, பாவனையிலிருந்து அவர்கள் ராஜாங்க உத்தியோகத்தர்கள் என்று சொல்லாமலேயே புரிந்தது. அப்படியிருக்க இவர் ஏன் இப்படி விவாதிக்கிறார்?!

“தாங்கள் வீரரோ?”

“இப்போது என்னைப் பார்க்கும் சிறு குழந்தைக் கூட அதை யூகித்து விடும்.” எந்த பணிவும் இல்லாமல் தன் கேள்விகளுக்கு சட் சட்டென்று பதில் சொல்லும் அந்த வாலிபனை அமரா தேவியின் கண்கள் கோபமாக பார்த்தன. தன் புவியிலிருந்து கீழே குதித்து இளையவர்கள் நின்ற இடத்திற்கு வந்தார் அமரா தேவி. மைத்ரேயி எதுவும் பேச தோன்றாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

“உன் பெயர் என்ன?” வாலிபனை விடுத்து இப்போது யுவதியின் புறமாக திரும்பியது கேள்வி.

மைத்ரேயிக்கு தன் எதிரில் நிற்கும் பெண்ணைப் பார்த்த போது அத்தனை வியப்பாக இருந்தது. தான் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பாளோ அதே போல, தன் கனவுருவின் நிஜமாக நிற்கும் பெண்ணைப் பார்த்த போது அவள் நா தானாக பதிலுரைத்தது.

“மைத்ரேயி.”

“இது யார்? உன் காதலனா?”

“ஐயையோ! அவர் என் உபாத்தியாயர்!” தவிப்போடு பதில் சொன்னாள் இளையவள்.

“மைத்ரேயி! அமைதியாக இரு!” வாலிபனின் குரலும் உறுதியாக வந்தது.

“உபாத்தியாயரா?! இந்த சிறுவனா?!” அமரா தேவியின் குரலில் இகழ்ச்சியும் ஆச்சரியமும் சேர்ந்து ஒலித்தன. அந்த கேள்வி தனது குருவை நிச்சயம் ஆத்திரப்படுத்தும் என்று உணர்ந்த மைத்ரேயி முந்திக்கொண்டு பதில் சொன்னாள்.

“ஆமாம் தேவி… அவர் என் உபாத்தியாயர்தான்.”

“உபாத்தியாயரின் பெயர் என்ன?” அமராவின் கேள்வியில் மைத்ரேயி திரு திருவென்று முழித்தாள். அவளுக்கே அது தெரியாதே! அப்படியிருக்க இந்த கேள்விக்கு எங்கனம் அவள் பதில் சொல்வாள்?!

“மார்த்தாண்டன்.” இளைஞனின் பதில் கனகம்பீரமாக வந்தது. மைத்ரேயியின் கண்கள் இப்போது அவனை ஆச்சரியமாக பார்த்தது. அவள் அறியாத அவன் பெயர்!

“ஊர் எது?”

“இங்கிருந்து மேற்கேயுள்ள ஒரு சிறிய கிராமம்.” இப்போதும் அவன் பதிலில் அதிகாரமே நிறைந்திருந்தது.

“எங்கே அந்த வாளைக் கொடு பார்க்கலாம்.” அமரா தேவி கேட்ட பிற்பாடும் அவர் சொன்னதைச் செய்யாமல் கல்லுப் போல நின்றிருந்தான் மார்த்தாண்டன்.

பிரதான படைத்தலைவரின் முகம் கோபத்தைக் காட்டியது. அவரின் கண்ணசைவில் வீரனொருவன் ஓடி வந்து மார்த்தாண்டனின் கையிலிருந்த வாளைப் பறித்து அமரா தேவியிடம் கொடுத்தான்.

“தாங்கள் யாரென்று இன்னும் சொல்லவில்லையே!” தன் வாளைப் பரிசோதித்து கொண்டிருந்த அமராவை பார்த்து கேட்டான் மார்த்தாண்டன்.‌ அமராவின் முழு கவனமும் அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாளில் இருக்க இப்போது படைத்தலைவன் பதில் சொன்னான்.

“பல்லவ நாட்டின் பிரதான படைத்தலைவர், பல்லவ உப சேனாதிபதியின் வீரமிகு சரிபாதி, பல்லவ முதலமைச்சரின் மரியாதைக்குரிய மருமகள் அமரா தேவி!”

“ஓ… மகேந்திர சக்கரவர்த்தியின் தங்கையா?” மார்த்தாண்டனின் குரலில் இருந்தது என்னவென்று மைத்ரேயியால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவள் தலை மரியாதை நிமித்தமாக அமரா தேவியை நோக்கி தாழ்ந்தது.

“யானைச் சின்னம்!” வாளை ஆராய்ந்து முடித்த அமரா தேவியின் உதடுகள் முணுமுணுத்தன.

“நீ கங்க நாட்டவனா?” கேள்வி கேட்ட பெண்ணை அலட்சியம் செய்துவிட்டு ஒரு புன்னகையோடு நின்றிருந்தான் மார்த்தாண்டன்.

“என் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் நான் உன்னைச் சிறைச் செய்ய வேண்டி இருக்கும்.” கடுமையாக ஒலித்தது அமரா தேவியின் குரல். ஆனால் இது எதற்கும் அந்த இளைஞன் அசைந்து கொடுக்கவில்லை.

“உபாத்தியாயரே! இது என்ன பிடிவாதம்? பிரதான படைத்தலைவர் கேட்கும் கேள்விகளுக்குத் தக்க பதிலைச் சொல்லிவிடுங்கள்.” மைத்ரேயி இப்போது தன் உபாத்தியாயரிடம் கெஞ்சினாள்.

“ஏன்? உன் உபாத்தியாயரைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாதா?”

“இல்லை தேவி.”

“நம்ப முடியவில்லையே!”

“அவளுக்கு வாள் வீசுவதில் ஆர்வம் உண்டு, அதனால் பயிற்சி அளிக்கிறேன்… என்னைப்பற்றி வேறு எதுவும் அவளுக்குத் தெரியாது.” மைத்ரேயியை குறிபார்த்து வீசப்படும் கேள்விகளுக்கு மட்டும் சட்டென்று பதில் சொன்னான் மார்த்தாண்டன்.

“அப்படியா… நேரடியாக உன்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்லமாட்டாய்… ஆனால் உன் மாணவியிடம் கேட்ட கேள்விகளுக்கு உன்னிடமிருந்து பதில் வருகிறது… விந்தைதான்!” தன் தாடையைத் தடவியபடி பேசிக்கொண்டிருந்த அமரா தேவி அந்த இளைஞனின் கண்களைக் கூர்ந்து பார்த்தாள்.

அந்த இளம் மாணவியை அவன் பார்த்த பார்வையில் காதல் பொங்கி வழிந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவன் கண்கள் அவளை ஆசையோடு வருடி கொடுத்தது.

“வீரர்களே! இந்த பெண்ணைக் கைது செய்யுங்கள்!” தடாலடியாக ஒலித்த அமரா தேவியின் குரலில் இளையவர்கள் இருவரும் திடுக்கிட்டு போனார்கள்.

“தேவி! எதற்காக என்னைக் கைது செய்ய உத்தரவிடுகிறீர்கள்?! நான் செய்த தவறு என்ன?” பதைபதைத்த படி மைத்ரேயி கேட்க மார்த்தாண்டனின் கண்களில் அனல் பறந்தது.

“ம்… வீரர்களே!” பிரதான படைத்தலைவரின் அடுத்த வார்த்தையில் ஸ்தம்பித்து நின்ற வீரர்கள் மைத்ரேயியை சூழ்ந்து கொண்டார்கள்.

“படைத்தலைவரே! எந்த குற்றத்தின் அடிப்படையில் இந்த பெண்ணைக் கைது செய்கிறீர்கள்?”

“மார்த்தாண்டரே! உமக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.” அமரா தேவியின் இதழ்களில் கேலிப்புன்னகைத் தவழ்ந்தது.

“பல்லவ ராஜ்ஜியத்தில் வீரத்திற்குத்தான் பஞ்சம் வந்துவிட்டது என்று இதுகாறும் நினைத்திருந்தேன், ஆனால் நீதிக்குக்கூட பங்கம் விளையும் என்று இப்போதுதான் புரிகிறது!” அமரா தேவியின் குரலுக்குக் குறையாத கேலி மார்த்தாண்டனின் குரலிலும் ஒலித்தது.

“பல்லவ ராஜ்ஜியத்தைப் பற்றி குறைக் கூறும் நாவை அறுத்து கழுகிற்குப் போட்டு விடுவேன் ஜாக்கிரதை! ம்… தாமதிக்க நேரமில்லை வீரர்களே!” தேவியின் துரிதமான நடவடிக்கையில் வீரர்கள் புடைசூழ மைத்ரேயி கைதி போல அழைத்து செல்லப்பட்டாள்.

“தேவி! இப்போது நீங்கள் செய்யும் இந்த அநியாயத்திற்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும்! எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று தெரிந்து விளையாடி பார்க்கிறீர்கள்!” மார்த்தாண்டனின் வார்த்தைகளைக் கிஞ்சித்தும் அமரா கணக்கில் கொள்ளவில்லை. அவள் முகத்தில் இருந்த இகழ்ச்சி புன்னகை இப்போது சற்றே அதிகப்பட்டிருந்தது.

“உபாத்தியாயரே!” மைத்ரேயியின் கலங்கிய குரல் மார்த்தாண்டனின் நெஞ்சில் சம்மட்டி கொண்டு அடித்தது.

“கலங்காதே பெண்ணே!” அந்த இரு வார்த்தைகளுக்கு மேல் இளைஞனின் நா வேலைநிறுத்தம் செய்தது. ஆச்சரியமாக போகும் இரு பெண்களையும் ஒரு நொடி கூர்ந்து பார்த்தான்.

கலங்கிய விழிகளோடு இவனைத் திரும்பி பார்த்த மைத்ரேயியின் முகமும், அலட்சியமாக இவனைத் திரும்பி பார்த்த அமரா தேவியின் முகமும் ஒரே அச்சில் வார்த்தது போல இருந்தது.

அந்த இரகசியம் மார்த்தாண்டனுக்கு மட்டும் தெரியவில்லை. அமரா தேவியுடன் வந்த படைத்தலைவனுக்கும் அது தெரிந்தது. தெரிந்தது முதல் அந்த மனிதனும் பிரமையுடன் நின்று விட்டார்!

***

மைத்ரேயியின் வீடு அந்த தகவலில் ஸ்தம்பித்து நின்றுவிட்டது. தங்கள் எதிரே நின்ற வாலிபனை அதற்கு முதல் அவர்கள் பார்த்தது கிடையாது. ஆனால் அவன் ஏதேதோ சொல்கின்றானே!

“அப்பனே! உன்னை இதற்கு முதல் நாங்கள் யாரும் பார்த்தது கூட கிடையாது, அப்படியிருக்க நீ ஏதேதோ சொல்கிறாயே?!” உபாத்தியாயர்தான் முதலில் வாயைத் திறந்தார்.

“ஐயா, நான் யார் என்பது இப்போது முக்கியமில்லை, உங்கள் பேத்தியைப் பல்லவ வீரர்கள் கைது செய்து கொண்டு போகிறார்கள்.”

“எதற்காக மைத்ரேயியை அவர்கள் கைது செய்தார்கள்? நீ சொல்வது எதுவும் நம்பத்தக்கதாக இல்லையே தம்பி?”

“உங்கள் பேத்தி என்னோடு வாட்போரில் ஈடுபட்டு கொண்டிருந்தாள், அதன் பேரிலேயே கைது செய்தார்கள்.”

“மைத்ரேயிக்கு வாட்போரில் ஆர்வம் உண்டுதான், அதற்காக எதற்கு அவளைக் கைது செய்ய வேண்டும்?” உபாத்தியாயரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று மார்த்தாண்டனுக்கு புரியவில்லை.

உண்மையை விளக்கி சொல்வதானால் அவனைப்பற்றி அனைத்தையும் அங்கே சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, மைத்ரேயி மேல் தான் கொண்டுள்ள அன்பையும் இவர்களிடத்தில் விளக்க வேண்டும்.

அதைச் சொல்வதில் அவனுக்கொன்றும் ஆட்சேபனை இல்லைதான்… இருந்தாலும் அதை முதல் முதலாக அவளிடமே சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான் இளைஞன்.

“ஐயா, பல்லவ பிரதான படைத்தலைவர் அமரா தேவி கொற்கைக்கு வந்துள்ளார்.” அந்த பெயரைக் கேட்ட போது அங்கிருந்த அனைவரும் சில நொடிகள் ஆடிப்போனார்கள்.

“தம்பி! கொற்கை அரச மாளிகையி்ல் தங்கி இருப்பது அமரா தேவியா?” மகிழினியின் முகத்தில் கிலி பரவியது.

“ஆம்.”

உபாத்தியாயர் முகத்தில் இப்போது கவலைக் குடி கொண்டது. ஆனால் பரிவாதனி முகத்தில் கோபம் தாண்டவமாடியது. அது தனது மகள் கைது செய்யப்பட்டிருக்கிறாள் என்பதால் உருவான கோபமல்ல, இந்த முட்டாள் பெண் எதற்கு அவர்களிடம் போய் மாட்டிக்கொண்டாள் என்பதால் உண்டான கோபம்.

“பரிவாதனி… இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” உபாத்தியாயரின் குரல் தீர்க்கமாக தன் மகளை நோக்கி வந்தது.

மிகவும் தர்மசங்கடமான நிலையை அவர்களுக்கு இப்போது உருவாக்கி வைத்திருந்தாள் மைத்ரேயி. உபாத்தியாயரோ அல்லது பரிவாதனியோ இப்போது அரச மாளிகைக்குச் சென்றால் இவர்கள் ரகசியம் அனைத்தும் அம்பலமாகிவிடும். அதிலும் அமரா தேவி?!

“அப்பா, எனக்கொரு மகள் இருந்தாள் என்பதையே நான் மறந்து விடுகிறேன், நீங்களும் மறந்துவிடுங்கள்.” நிதானமாக சொல்லிவிட்டு பரிவாதனி உள்ளே போய்விட்டார். மகிழினி பதறிப்போனாள்.

“ஐயா! இது நியாயமா?‌ உங்கள் பெண் பேசுவது நியாயமா?”

“என்னை என்ன செய்ய சொல்கிறாய் மகிழினி?‌ நான் யாரைப் பார்ப்பேன்? யாருக்காக பேசுவேன்? ஆண்டவா!” கண்களில் கண்ணீர் திரள முதுமையின் தளர்ச்சியோடு கலங்கி நின்றிருந்த உபாத்தியாயரைப் பார்த்த போது மகிழினிக்குமே வேதனையாக இருந்தது.

ஆனால் மார்த்தாண்டன் இதையெல்லாம் ஒரு வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தான். என்ன நடக்கிறது இங்கே? சொந்த மகளை மறந்துவிட்டேன் என்று ஏன் மைத்ரேயியின் அம்மா சொல்ல வேண்டும்?!

ஆனால் சட்டென்று மகிழினி அவனை நோக்கி சமிக்ஞை காட்டவும் வீட்டிற்கு வெளியே வந்தான் மார்த்தாண்டன். சில நொடிகளில் யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறமாக வந்தாள் மகிழினி.

“தம்பி, ஆற்றங்கரை மண்டபத்திற்கு உடனே வா, உன்னோடு நான் கொஞ்சம் பேச வேண்டும்.”

“சரி.” மார்த்தாண்டன் தாமதிக்காமல் மண்டபத்திற்கு விரைந்தான். சற்று நேரத்தில் மகிழினியும் அங்கு வந்து சேர்ந்துவிட்டாள்.

“யார் நீ?” கொஞ்சம் ஆக்ரோஷமாக வந்தது மகிழினியின் கேள்வி. மார்த்தாண்டனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும். கேள்வி கேட்பவர் மைத்ரேயியின் சொந்தக்காரர்.

“அம்மா, நான் சொல்வதை நீங்கள் கொஞ்சம் கவனமாக கேட்க வேண்டும், என் மேல் வீணாக சந்தேகப்படாதீர்கள்… மைத்ரேயி மேல் நான் வைத்திருப்பது உண்மையான நேசம்.”

“தம்பி! இது என்ன? நீ ஏதேதோ சொல்கிறாயே?” பதறினாள் மகிழினி.

“பதற்றம் தேவையில்லை தாயே… இப்போதைக்கு நான் யாரென்று வெளிப்படையாக சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறேன், ஆனால் நீங்கள் என்னை நம்பலாம், நான் உங்கள் குடும்பத்திற்கோ மைத்ரேயிக்கோ என்றைக்கும் தீங்கு நினைக்க மாட்டேன்.”

“எனக்கு எதுவுமே புரியவில்லையே… இதுவரை நான் பார்த்தே அறிந்திராத உன்னை எப்படி நம்புவது?” மகிழினி கேட்ட கேள்வியில் சுற்று முற்றும் ஒரு முறை அந்த வாலிபன் பார்த்தான்.

“அம்மா, என்னோடு இப்படி வாருங்கள்.” மகிழினியை அங்கிருந்த மரம் ஒன்றின் மறைவுக்கு அழைத்து சென்றவன் தன் கச்சையிலிருந்த ஒரு பதக்கத்தை எடுத்தான்.

“இதோ பாருங்கள்!” அந்த வாலிபன் நீட்டிய பதக்கத்தை உற்றுப்பார்த்தாள் மகிழினி. ஏதோ அரச வம்சத்தின் இலச்சினை அதில் பொறிக்கப்பட்டிருந்தது.

“இது என்னவென்று தெரிகிறதா?”

“இல்லையே அப்பனே, நான் அவ்வளவு படித்ததெல்லாம் கிடையாது.”

“பாதகமில்லை, இதைக் கூர்ந்து பாருங்கள்… இதில் யானை இலச்சினைப் பொறிக்கப்பட்டிருக்கிறது அல்லவா?”

“ஆமாம், அது எந்த நாட்டிற்குச் சொந்தமானது?” அந்த கேள்வியில் புன்முறுவல் கோட்டினான் இளவல். அந்த முறுவலைப் பார்த்த போது மகிழினியின் மனம் நிறைந்து போனது. மைத்ரேயிக்கு வெகு பொருத்தமான இணை இவன் என்று அவள் மனம் கணக்குப் போட்டது.

இப்போது இளையவன் இன்னுமொரு முறைச் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தி கொண்டான்.

“அம்மா, இது கங்க நாட்டிற்குச் சொந்தமான இலச்சினை.”

“ஓஹோ! அப்படியென்றால் நீ அந்த ராஜாங்கத்தில் உத்தியோகம் பார்ப்பவனா தம்பி?” மகிழினியின் கேள்விக்கு மர்மமான புன்னகை ஒன்றைப் பதிலாக தந்த இளவல் மேலும் தொடர்ந்தான்.

“அப்படியும் வைத்துக்கொள்ளலாம் அம்மா.”

“வைத்துக்கொள்ளலாம் என்றால்… திட்டமாக பதில் சொல்லு தம்பி.” கவலையோடு கேள்வி கேட்ட அந்த பெண்ணை இரக்கத்தோடு பார்த்தான் மார்த்தாண்டன். அவன் கை இயல்பாக மகிழினியின் கரத்தைப் பற்றிக்கொண்டது.

“அம்மா, நீங்கள் மைத்ரேயி மேல் வைத்திருக்கும் பாசமும் பற்றும் என்னை நெகிழ வைக்கின்றன, உண்மையை உடைத்து சொல்ல முடியாத நிலையில் இப்போது நான் இருக்கிறேன், ஆனால் ஒன்று மட்டும் உறுதி… உங்கள் பெண் நாளை என்னை மணக்கும் போது உயர்ந்த பதவியில் அமர்வாள்.” அவன் இவ்வளவு பேசியும் மகிழினியின் முகத்தில் கவலையின் சாயல் தெரிந்தது.

“வேண்டுமானால் இதையும் பாருங்கள், இது எங்கள் பரம்பரைச் சொத்து.” சொன்னவன் தனது கச்சையிலிருந்து இன்னுமொரு மோதிரத்தை எடுத்து காண்பித்தான். அந்த மஞ்சள் நிற கனக புஷ்பராக கல் மகிழினியை பார்த்து சிரித்தது.

இது… இது… கனக புஷ்பராகம் அல்லவா?” மகிழினி சொன்ன போது அந்த இளைஞன் அவளை வியப்புடன் பார்த்தான்.

“ஆமாம்.”

“இது வாதாபிக்குச் சொந்தமானது அல்லவா?” இப்போது மகிழினியின் குரலில் பயத்தின் சாயல் தெரிந்தது.

“ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரியும்?!”

“தம்பி, உண்மையைச் சொல்! நீ யார்? எதற்காக இந்த கொற்கைக்கு வந்தாய்?‌ உன்னால் மைத்ரேயிக்கு ஏதாவது அபாயம் வந்தால் உன்னைக் கொல்லவும் நான் தயங்க மாட்டேன்!”

“தாயே! இது என்ன பேச்சு?! எதற்கு என்னால் மைத்ரேயிக்கு அபாயம் வரப்போகிறது? அவள் என் உயிரல்லவா?”

“இப்படி ஏற்கனவே ஒருவர் கதைப்பேசி நாங்கள் ஏமார்ந்தது போதும் தம்பி, புதிதாக நீயும் ஆரம்பிக்காதே!” பெண்ணின் குரலில் இப்போது வெறுப்பு மிதமிஞ்சி இருந்தது.

“புரியவில்லை அம்மா!”

“புரியவேண்டாம், எனக்கு ஒன்றை மட்டும் தெளிவுபடுத்து… உனக்கும் வாதாபிக்கும் என்ன சம்பந்தம்?”

“யாதொரு சம்பந்தமும் இல்லை.”

“அப்படியென்றால் இந்த கனக புஷ்பராக மோதிரம்?”

“வாதாபிக்கு மட்டுமல்ல, வேங்கிக்கும் இது சொந்தமானது.”

“ஓஹோ!” மகிழினிக்கு இப்போது சட்டென்று ஞாபகம் வந்தது. அப்படித்தானே அடிகளாரும் சொன்னார்!

“கங்க நாடு என்கிறீர்கள்… இப்போது வேங்கி நாடு என்கிறீர்கள்…” மகிழினியின் பேச்சில் புதிதாக முளைத்த மரியாதையை மார்த்தாண்டனும் கவனித்தான்.

“இரண்டு ராஜ்ஜியங்களும் என்னோடு பின்னிக்கிடக்கின்றன தாயே!”

மகிழினி சற்று நேரம் எதுவுமே பேசவில்லை. அமைதியாக அந்த இளைஞனையே பார்த்தபடி சிந்தித்தாள். அந்த முகத்தைப் பார்த்த போது சந்தேகிக்க தோன்றவில்லை. ஏதோ ஓர் உள்ளுணர்வு அந்த வாலிபனிடம் தவறில்லை என்று அடித்து சொன்னது.

மார்த்தாண்டனும் சற்று நேரம் எதுவும் பேசாமல் அந்த சிந்தனையை அனுமதித்தான். தன் மேல் மைத்ரேயியை சார்ந்தவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டியது எத்தனை அவசியம் என்று அவனுக்கும் புரிந்தது.

“ஐயா! நீங்கள் சொல்லுவது அனைத்தையும் நம்பத்தான் என் மனம் சொல்கிறது… ஆனால் நாங்கள் கடந்து வந்த பாதையும் அனுபவித்த கசப்புகளும் கூடாது என்று என்னை எச்சரிக்கிறது.”

“நான் என்ன செய்தால் நீங்கள் என்னை நம்புவீர்கள் தாயே!”

“நீங்கள் அரசர் மரபில் பிறந்தவரா?”

“ஆமாம்.”

“அப்படியானால் உங்கள் வாளின் மீது ஆணையாக எனக்கொரு சத்தியம் செய்து கொடுங்கள்.”

“ஆகட்டும் அம்மா!”

“உங்களாலோ அல்லது உங்களைச் சார்ந்த ராஜ்ஜியங்களாலோ மைத்ரேயிக்கும் அவள் அன்னைக்கும் எந்த தீங்கும் நேரக்கூடாது.” மகிழினி வார்த்தையை முடிப்பதற்குள் அமரா தேவி கைப்பற்றியது போக அவன் இடையில் வைத்திருந்த இன்னொரு வாளைச் சட்டென்று உருவினான் மார்த்தாண்டன்.

“அம்மா… என் வீரத்திற்கும் பரம்பரைக்கும் சாட்சி சொல்லும் இந்த வாளின் மீது ஆணையாக! மைத்ரேயிக்கும் அவள் அன்னைக்கும் என் உயிர் இருக்கும் வரை யாராலும் எந்த தீங்கும் வர நான் அனுமதிக்க மாட்டேன்… இது சத்தியம்!” ஆணையிட்டவன் தன் பெரு விரலால் வாளின் நுனியில் கீறி அதிலிருந்து வடிந்த குருதியை வாளில் தடவினான்.

மகிழினியின் கண்கள் குளமாக அந்த இளைஞனை இரு கரம் கூப்பி வணங்கினாள். பரிவாதனி, மைத்ரேயி… இருவர் வாழ்விலும் பின்னி கிடந்த சிக்கல் தீர ஏதோவொரு வழி பிறந்துவிட்டது போல அவள் மனம் குதூகலித்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!