Pallavankavithai-15

PKpic-f86eacd2

Pallavankavithai-15

பல்லவன் கவிதை – 15

இரவு முழுவதும் எங்கேயும் தங்காமல் மாரப்பன் பொழுது விடிகின்ற வேளையில் காஞ்சி மாநகரை வந்து சேர்ந்தான். காஞ்சி மாநகரின் உயர்ந்த மாட மாளிகைகள் கொற்கை போன்ற சிறியதொரு ஊரில் இதுவரைக் காலம் வாழ்ந்த மாரப்பனுக்கு பெரு வியப்பாக இருந்தது.

இருந்தாலும் ஊரைப் பார்க்க இது உகந்த தருணமல்ல என்று உணர்ந்த அந்த வீரன் நேராக கோட்டையின் வடக்கு வாசல் வழியாக ராஜ வீதியில் நுழைந்தான்.

ஆங்காங்கே அவனைத் தடுத்து நிறுத்திய வீரர்களிடம் அமரா தேவி கொடுத்த இலச்சினை மோதிரத்தைக் காட்டவே எந்த தடையும் இன்றி அவனால் உப சேனாதிபதியின் மாளிகையை நோக்கி விரைவாக பயணப்பட முடிந்தது.

நேராக மாளிகையின் உள்ளே நுழைந்தவன் தன் புரவியை அங்கிருந்த வீரனொருவனிடம் கொடுத்துவிட்டு, தான் உடனடியாக உப சேனாதிபதியைப் பார்க்க வேண்டும் என்று ஆக்ஞாபித்தான்.

“நீ யார்?” கேட்ட வீரனிடம் தன்னிடமிருந்த இலச்சினை மோதிரத்தைக் காண்பித்தவன்,

“நான் கொற்கையிலிருந்து வருகிறேன், அமரா தேவி என்னை இங்கு ஒரு அவசர காரியமாக அனுப்பி இருக்கிறார்கள்.” என்றான். அதற்குப்பிறகு எந்த தாமதமும் இன்றி உப சேனாதிபதியின் முன்பு கொண்டு நிறுத்தப்பட்டான் மாரப்பன்.

உப சேனாதிபதியைப் பார்த்த மாத்திரத்தில் மாரப்பன் பயபக்தியோடு தலை வணங்கினான். அவரின் வீரமிகுந்த முகத்தைப் பார்த்த போது அவனையறியாமலேயே அவன் உள்ளத்தில் மரியாதை பொங்கியது.

“யாரப்பா நீ?”

“ஐயா! நான் கொற்கையிலிருந்து வருகிறேன்.”

“ஓ… தேவி ஏதாவது செய்தி அனுப்பினார்களா?”

“ஆமாம்… தங்களிடம் கொடுக்கச்சொல்லி ஓலையொன்று கொடுத்தார்கள்.”

“அப்படியா? ஓலை எங்கே?”

“இதோ இருக்கிறது ஐயா, வழியில் எங்கேயும் தங்காமல் வாயு வேகமாக சென்று இதை உங்களிடம் ஒப்புவிக்க சொன்னார்கள்.” பேசிய படியே தன் இடைக்கச்சையில் இருந்த ஓலையை எடுத்து கவனமாக பொதிகை மாறனிடம் நீட்டினான் மாரப்பன்.

“நல்லது, உன்னைப் பார்த்தாலே நீ வழியில் எங்கேயும் தங்கவில்லை என்று நன்றாக புரிகிறது, மிகவும் களைத்து தெரிகிறாய், போய் ஓய்வெடுத்து கொள்.”

“அப்படியே செய்கிறேன் ஐயா!”

மாரப்பனை அங்கிருந்த வீரன் ஒருவனோடு அனுப்பிவிட்டு சாவகாசமாக ஓலையைப் பிரித்தார் பொதிகை மாறன். அமரா தேவிதான் ஓலையை எழுதி இருந்தாள். ஆனால்… ஓலையில் எழுதி இருப்பது என்ன?!

“இது என்ன?! அமரா ஏதேதோ எழுதி இருக்கிறாளே?!” அதிசய மிகுதியில் வாய்விட்டு சொல்லிய பொதிகை மாறன் சட்டென்று எழுந்தார். விஷயத்தை அறிந்த போது அமரா தேவிக்கு இருந்த எந்த குழப்பமும் பொதிகை மாறனுக்கு இப்போது இருக்கவில்லை.

ஓலையை இன்னுமொரு முறைப் படித்து விஷயத்தை உள்வாங்கி கொண்டவர் நேராக சக்கரவர்த்தி பெருமானைத் தேடிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக சென்றார்.

சக்கரவர்த்தி அப்போதுதான் தன் நீராட்டத்தை முடித்துக்கொண்டு காலைப் போஜனத்திற்காக ஆயத்தம் ஆகவே, அவரை எந்த அனுமதியும் இன்றி அணுகினார் பொதிகை மாறன்.

உப சேனாதிபதி எப்போதைக்கும் இப்படி அனுமதியின்றி நடப்பவர் அல்ல என்பதால் சக்கரவர்த்தி ஆச்சரியமாக பொதிகை மாறனை பார்த்தார். ஆனால் பொதிகை மாறனின் கண்கள் அந்த அறைக்குள் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டது.

“மாறா, ஏன் இத்தனைப் படபடப்பாக தெரிகிறாய்? ஏதேனும் விசேஷம் உண்டா?” தன் தோழனை உரிமையாக அழைத்து கேட்டார் சக்கரவர்த்தி.

“பல்லவேந்திரா, இந்த ஓலையைப் படித்து பாருங்கள்.” மாறன் நீட்டிய ஓலையை வாங்கிய சக்கரவர்த்தி அதில் கண்களை ஓட்டினார். ஒரு நொடி அவர் கண்கள் அந்த ஓலையில் நிலைக் குத்தி நின்றன. அடுத்த நொடி அவரது இடது கைப் பிடிமானத்திற்காக எதையாவது பற்ற முயன்றது. அந்த கையைச் சட்டென்று பற்றி கொண்டார் பொதிகை மாறன்.

“பல்லவேந்திரா!”

“மாறா!‌ ஓலையில் கண்டிருப்பது அமராவின் கையெழுத்துதானா?”

“ஆமாம் பிரபு, அதில் சந்தேகமில்லை.”

“அப்படியென்றால்… அப்படியென்றால்…”

“உங்கள் தேடலுக்கு ஒரு முடிவு வந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.”

“இது பொய்யில்லையே?! நான் கனவேதும் காணவில்லையே?!”

“இல்லை பிரபு.”

“இன்னும் சிறிது நேரத்தில் நாம் கொற்கைக்கு கிளம்ப வேண்டும், ஏற்பாடுகள் துரிதமாக நடக்கட்டும்!” பரபரப்புடன் ஆணையிட்டார் சக்கரவர்த்தி. அவர் குரல் லேசாக உணர்ச்சி மிகுதியில் நடுங்கியது.

“ஆகட்டும் பிரபு.” அவசரமாக சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து வேகமாக நடந்தார் பொதிகை மாறன். மனது படபடவென்று அடித்து கொண்டது.

அடுத்த ஒரு நாழிகைக்குள்ளாக காஞ்சியிலிருந்து பத்து வீரர்கள் புடைசூழ இரண்டு வெண் புரவிகள் கொற்கைக்கு செல்ல தயாராக நின்றன. அதில் ஒன்றில் பொதிகை மாறன் அமர்ந்திருக்க இன்னொன்றில் சக்கரவர்த்தி மகேந்திர பல்லவர் அமர்ந்திருந்தார்!

கொற்கையை நோக்கி வாயு வேகத்தில் சில குதிரைகள் காஞ்சியிலிருந்து பயணப்பட்டன என்றால் அதேவேளை… கொற்கையிலிருந்து சில குதிரைகள் கங்க நாட்டின் தலைநகரான தலைக்காட்டை நோக்கி போய் கொண்டிருந்தன.

புரவி ஒன்றில் அமர்ந்திருந்த மைத்ரேயி அதை அமைதியாக நடத்தி சென்று கொண்டிருந்தாள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவளுக்கு அணுவளவும் புரியவில்லை. தன் சந்தேகங்களை உபாத்தியாயரிடம் அவள் கேட்ட போது,

“உன் கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் சொல்கிறேன் மைத்ரேயி, ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல.” என்று சொல்லிவிட்டு பயணத்திற்கான ஏற்பாட்டில் இறங்கி விட்டான் மார்த்தாண்டன்.

மகிழினி கொடுத்திருந்த மூட்டையைப் புரவி ஒன்றின் முதுகில் கட்டிய மார்த்தாண்டன் அதே குதிரையில் பெண்ணையும் ஏறச்சொல்லி கடிவாளத்தை அவள் கையில் கொடுத்தான். அதற்குமேல் அநாவசியமாக நேரத்தை விரயமாக்காமல் அவர்கள் பயணம் ஆரம்பித்துவிட்டது.

எங்கே போகிறோம், எதற்காக போகிறோம் என்று எதுவுமே தெரியாமல் அமைதியாக குதிரையைச் செலுத்தி கொண்டிருந்தாள் மைத்ரேயி.

பொழுது விடிந்த சில நிமிடங்களிலேயே சிரம பரிகாரம் செய்வதற்காக ஒரு சத்திரத்தில் புரவிகளை நிறுத்தினான் மார்த்தாண்டன். எப்போதுமே பரபரவென்று துடிப்பாக இருக்கும் மைத்ரேயி அன்று அமைதியின் உறைவிடமாக இருக்கவே அவளருகில் வந்தவன்,

“இங்கே சிரம பரிகாரம் செய்து கொள்ளலாம் மைத்ரேயி, குதிரையை விட்டு இறங்கு.” என்றான்.

“ம்…” எதுவுமே பேசாமல் குதிரையை விட்டிறங்கிய பெண் உபாத்தியாயரைப் பார்த்தாள். அந்த பார்வை அவனை என்னவோ செய்தது. மிக மென்மையாக அவள் கரத்தைப் பற்றியவன்,

“மைத்ரேயி… நீ என்னை நம்புகிறாய் அல்லவா?” என்றான்.

“அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு உபாத்தியாயரே?”

“அப்படியென்றால் ஏன் இத்தனை அமைதியாக வருகிறாய்?‌ இது உன் சுபாவம் அல்லவே?”

“எனக்கு எதுவுமே புரியவில்லை உபாத்தியாயரே… என் மனதில் இத்தனைக் குழப்பங்கள் இருக்கும்போது என்னால் எப்படி இயல்பாக இருக்க முடியும்?”

“புரிகிறது… இந்த பயணம் முடிந்துவிட்டால் உன் அனைத்து கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும்.”

“ஏன்? இப்போது அதைச் சொல்ல முடியாதா?”

“முடியும், ஆனால்… பயணத்தை முடித்துவிட்டால் உன்னிடம் மனம்விட்டு பேசலாம் என்பது என் எண்ணம், நான் எப்போதும் உன் நலனை மட்டுமே நினைப்பவன் மைத்ரேயி, புரிந்துகொள்.”

“ஆகட்டும் உபாத்தியாயரே… பயணம் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்றாவது சொல்ல முடியுமா?”

“இரண்டு நாட்கள்.” ஒரு புன்னகையோடு அவள் தலையைத் தடவி கொடுத்தான் மார்த்தாண்டன். அத்தோடு மைத்ரேயி அமைதியாகிவிட்டாள். மார்த்தாண்டனிடம் மேலும் அவள் எதையும் கேட்டு தொந்தரவு பண்ணவில்லை.

உபாத்தியாயர் தன் நலனில் மிகவும் அக்கறை உள்ளவர் என்று தெரிந்ததால் மௌனமாக இருந்துவிட்டாள். கொற்கையை விட்டு இதுவரை எங்கேயும் இப்படி நெடுந்தூரம் பயணம் செய்து அறியாதவள் என்பதால் அந்த பயணத்தை வெகுவாக ரசித்தாள் மைத்ரேயி.

சுற்றிவர இருந்த அடர்ந்த காடுகளைக் கடந்து பயணப்படுவது மிகவும் இன்பமாக இருந்தது. சில நேரங்களில் வயல்கள், குளங்கள், தோட்டங்கள், கிராமங்கள் என மாறி மாறி வந்து கொண்டிருந்தன.

மார்த்தாண்டன் அவளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டான். அதுவே மைத்ரேயிக்கு வெகு இதமாக இருந்தது. தாத்தாவைத் தவிர பெரிதாக வேறு யாரையும் ஆண்கள் என்று அவள் வாழ்க்கையில் அறிந்ததில்லை.

மகிழினியின் கணவனும் மகனும் அவள் வாழ்க்கையில் ஓர் அங்கம் என்றாலும் அதற்கு ஓர் எல்லை இருந்தது. இந்த இதத்தை தாத்தாவை விடுத்து இப்போது இவரிடம்தான் பார்க்கிறாள் பெண்.

ஒருவேளை என் தந்தை உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தான் என்னைக் கண்ணுக்குள் வைத்து பார்த்திருப்பாரோ?!

ஏதேதோ எண்ணங்களோடே இரண்டு நாட்கள் பயணம் செய்திருக்க அன்று இருள் கவிய இன்னும் இரண்டு நாழிகைகள் இருக்கும் சமயத்தில் மார்த்தாண்டன் நடத்தி வந்த புரவி ஒரு பெரிய கோட்டையின் வாசலில் வந்து நின்றது.

அந்த ஊரை நெருங்கும் போதே தூரத்தில் தெரிந்த நெடிதுயர்ந்த கோட்டை மதில்களை வைத்தே தாங்கள் வந்து சேர வேண்டிய இடத்தை நெருங்கிவிட்டதை உணர்ந்தாள் மைத்ரேயி. ஆனாலும் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

மார்த்தாண்டன் கோட்டை வாசலில் புரவியை நிறுத்தியதும் வாசலில் நின்ற காவலாளிகள் தாரைகளை எடுத்து பலமாக ஊதினார்கள்.

மைத்ரேயி ஒரு கணம் திடுக்கிட்டாள். வாயில் காவலாளி தாரைகளை ஊதுவதென்றால்… தன் உபாத்தியாயர் இந்த கோட்டையில் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறாரா? அப்படியென்றால் உபாத்தியாயர் என்று தன்னிடம் சொன்னது…

கோட்டைக் கதவுகள் மளமளவென எந்த தாமதமும் இன்றி திறக்க நான்கைந்து புரவி வீரர்கள் வந்து மார்த்தாண்டனை வரவேற்றதோடு அவனைப் புடைசூழ அழைத்து சென்றார்கள். மைத்ரேயி நடப்பது அனைத்தையும் ஒரு பிரமிப்போடு பார்த்து கொண்டிருந்தாள்.

ராஜ வீதியை நெருங்கியதும் மார்த்தாண்டன் தனது புரவியைத் தட்டிவிட அது நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து கொண்டு சென்று ஒரு மாளிகையின் முன்பாக நின்றது. அவனையே பின்பற்றி வந்த மைத்ரேயியும் புரவியை அந்த மாளிகையின் முன்பாக நிறுத்திவிட்டு அடுத்து என்ன செய்வது என்பது போல தனது உபாத்தியாயரைப் பார்த்தாள்.

மாளிகை வாசலில் நின்றிருந்த வீரர்கள் இருவர் ஓடிவந்து இவர்களின் புரவிகளை வாங்கிக்கொள்ள,

“வா மைத்ரேயி.” என்று அழைத்தான் மார்த்தாண்டன். மறு பேச்சின்றி அவனைத் தொடர்ந்தாள் பெண்.

அவர்கள் உள்ளே சென்ற மாளிகைக்கு அடுத்தாற்போல பல மாளிகைகள் வரிசையாக தென்பட்டன. உப்பரிகைப் படிகளில் ஏறிய உபாத்தியாயன் அங்கு வரிசையாக இருந்த அறைகள் ஒன்றின் கதவைத் திறந்தான்.

இப்போது இருள் நன்றாகவே கவிந்துவிட்டதால் மாளிகை முழுவதும் ஜாஜ்வல்யமாக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

கொற்கையின் ஆறறங்கரை ஓரமாக இருந்த சிறிய வீட்டில் இதுவரை வாழ்ந்த பெண்ணிற்கு காண்பது எல்லாமே விசித்திரமாக இருந்தது. இவர்கள் பின்னோடே வந்த பணிப்பெண் ஒருத்தி மைத்ரேயியின் துணி மூட்டையை அந்த அறையில் கொண்டு வந்து வைக்க,

“சற்று தாமதித்து வா பெண்ணே.” என்றான் மார்த்தாண்டன்.

“ஆகட்டும் பிரபு.” சொல்லிவிட்டு அந்த பெண் நகர்ந்துவிட ஏதும் புரியாமல் மலங்க விழித்துக்கொண்டு நின்றிருந்த மைத்ரேயியை அணுகினான் மார்த்தாண்டன்.

இயல்பாக அவன் கைகள் அவள் கரத்தைப் பற்றிக்கொள்ள அவன் கைகளைக் குனிந்து பார்த்தாள் மைத்ரேயி. இப்போதெல்லாம் அவள் கைகளை உபாத்தியாயர் வெகு உரிமையோடு பற்றி கொள்கிறாரே?!

“மைத்ரேயி…” வாள் சுழற்ற கற்றுக்கொடுக்கும் போது உபாத்தியாயரின் குரலில் எத்தனைக் கடுமை இருந்தது! ஆனால் இன்று இத்தனை மென்மையாக பேசுகிறாரே!

“என்ன யோசிக்கிறாய் மைத்ரேயி?”

“எல்லாமே குழப்பமாக இருக்கிறது உபாத்தியாயரே!”

“உன் மனநிலை எனக்கு நன்றாக புரிகிறது மைத்ரேயி, கவலைப்படாதே… இனி உன் வாழ்வில் எல்லாமே ஜெயம்தான்.”

“ஏன்? இதுவரை என் வாழ்க்கையில் என்ன குறை இருந்தது உபாத்தியாயரே?” கேள்வி கேட்டவளைப் பார்த்து பெருமூச்செறிந்தான் மார்த்தாண்டன்.

“சரி… இரண்டு நாட்கள் பயணம் செய்து வந்திருக்கிறோம், ஸ்நானத்தை முடித்துக்கொண்டு நன்றாக ஓய்வெடு மைத்ரேயி, இங்கு உனக்கு எந்த சௌகர்ய குறைவும் ஏற்படாது.”

“உபாத்தியாயரே, தாங்கள் எங்கே செல்ல போகிறீர்கள்?” பதட்டத்துடன் வந்தது கேள்வி.

“நாம் இருவரும் ஒரே அறையில் தங்கமுடியாது மைத்ரேயி… இதோ, இந்த மாளிகையின் வலது கோடியில் இருக்கும் அறையில் நான் தங்கி இருப்பேன், உனக்கு என்ன தேவை என்றாலும் இப்போது வந்த பணிப்பெண்ணிடம் சொன்னால் கொண்டு வந்து கொடுப்பாள்.”

“என் அம்மாவையுமா?” பெண் கேட்ட கேள்வியில் மார்த்தாண்டன் ஒரு நொடி திகைத்தாலும் அடுத்த நொடி அவன் முகம் காட்டிய பாவம் அந்த கேள்வியை அவன் அவ்வளவு தூரம் ரசிக்கவில்லை என்றே கூறியது. மார்த்தாண்டன் அவளை இன்னும் நெருங்கி வந்து அவள் தோள்கள் இரண்டையும் பிடித்துக்கொண்டு அந்த கண்களை ஆழ்ந்து பார்த்தான்.

“பதினெட்டு வருடங்கள் அம்மாவோடுதானே வாழ்ந்தாய், போதாதா மைத்ரேயி?”

“அது என்ன கணக்கு உபாத்தியாயரே?”

“உன் வயதை ஒத்த பெண்கள் எல்லாம் இன்னமும் தங்கள் அன்னையின் புடவையைப் பிடித்துக்கொண்டா அலைகிறார்கள்?”

“இல்லை… நான் அப்படி சொல்லவில்லை…”

“பின் என்ன சொல்ல வந்தாய்? சிறு குழந்தைப் போல இன்னமும் என் அம்மாவைக் கொண்டு வருவாளா என்று கேட்டால் வேறு எப்படி அர்த்தம் கொள்வது?” உபாத்தியாயர் குரலில் கண்டனம் தெரியவும் மைத்ரேயியின் கண்கள் குளமானது.

“அசடு போல நடந்துகொள்ள கூடாது மைத்ரேயி, உன் வீட்டில் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், ஆனால் இனி அப்படியில்லை.”

“வேறு எப்படி உபாத்தியாயரே?”

“உனக்கு எல்லாவற்றையும் விளக்கமாக நான் சொல்கிறேன், ஆனால் இப்போது அல்ல… நீ நன்றாக ஓய்வெடு, நான் நாளை உன்னை வந்து பார்க்கிறேன்.” சொல்லிவிட்டு தாமதிக்காமல் மார்த்தாண்டன் வெளியே போய்விட்டான். பெண்ணின் மனது கல்லெறிந்த குளம்போல கலங்கி நின்றது.

***

எங்கேயும் அதிகம் தாமதிக்காமல் பயணம் செய்த போதும் கொற்கைக்கு காஞ்சியிலிருந்து புறப்பட்டவர்கள் வந்து சேர இரண்டு நாட்கள் எடுத்தது. அதிவேகமான பயணத்தை பொதிகை மாறன் அனுமதிக்கவில்லை.

சக்கரவர்த்தி எவ்வளவோ துரிதமாக வர துடித்த போதும் பொதிகை மாறன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மகேந்திர பல்லவர் ஏற்கனவே உணர்ச்சிகளின் பிடியில் மிகவும் சிக்குண்டு இருந்ததால் அவர் நலனை முன்னிட்டு ஆங்காங்கே ஓய்வெடுக்க செய்தார்.

“மாறா, இத்தனைத் தாமதம் எதற்கு?” சலித்துக்கொண்ட நண்பரைச் சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது உப சேனாதிபதிக்கு.

“பல்லவேந்திரா, கொஞ்சம் அமைதியாக இருங்கள், எல்லாம் இனி தங்கள் சித்தப்படியே நடக்கப்போகின்றன, அப்படியிருக்க எதற்கு இத்தனை ஆவேசம்?”

“என்னை நீ கூட புரிந்து கொள்ளவில்லையா மாறா?”

“நன்றாக புரிகிறது பல்லவேந்திரா… அதனால்தான் நான் இத்தனை முன் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.”

மகேந்திர பல்லவர் சக்கரவர்த்தி என்பதையும் தாண்டி நண்பர், உறவினர் என்ற பல காரணங்களால் மிகவும் பத்திரமாக அவரை கொற்கைக்கு கொண்டுவந்து சேர்த்தார் உப சேனாதிபதி.

புழுதிப்படலத்தைக் கிளப்பிக்கொண்டு கொற்கைக்குள் நுழைந்த அந்த புரவிகளை உப்பரிகையின் சாளரத்தின் வழியாக அவதானித்த அமரா தேவி நிதானமாக மாளிகையின் வாசலுக்கு இறங்கி வந்தார்.

“வாருங்கள் அண்ணா!”

“அமரா… ஓலைக் கிடைத்தது!” அவசரமாக வந்தது சக்கரவர்த்தியின் குரல்.

“சிரம பரிகாரம் செய்துகொள்ளுங்கள், பிற்பாடு எல்லாவற்றையும் பேசலாம்.”

“இல்லையில்லை…”

“பல்லவேந்திரா, வாசலில் நின்று பேசுவது அத்தனை உசிதமல்ல, உள்ளே சென்று பேசலாமே.” நண்பனின் குரலில் சற்றே நிதானத்திற்கு வந்த மகேந்திர பல்லவர் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு உள்ளே மடமடவென்று நடந்தார். பொதிகை மாறனும் அமரா தேவியும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

“அமரா! ஓலையில் நீ எழுதி இருந்த செய்தியைத் தெளிவாக சொல்.”

“அண்ணா, கொற்கைக்கு வந்த மறுநாளே ஊரைச் சுற்றி பார்க்க வீரர்களோடு சென்றிருந்தேன்.”

“பிறகு?”

“காவிரிக்கு அண்மையிலிருந்த ஒரு பொட்டல் வெளியில் இருவர் வாள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.”

“யார் அவர்கள்? விசாரித்தாயா?”

“இளைஞனின் கையிலிருந்த வாளில் யானைச் சின்னம் இருந்தது.”

“என்ன? யானைச் சின்னமா? அப்படியென்றால் அவன் கங்க நாட்டவனா?” தன் சொந்த பிரச்சனையை ஒரு நொடி மறந்தார் சக்கரவர்த்தி.

“இளைஞன் கையிலிருந்த வாள் என்றால்… மற்றையது யார்?” தன் புத்திக்கூர்மையைக் காட்டினார் உப சேனாதிபதி.

“ஒரு யுவதி.”

“யுவதியா?!” பொதிகை மாறனின் குரலில் ஆச்சரியம் இருந்தது.

“ஆம்… அச்சு அசல் என்னைப் போலவே இருந்த ஒரு பெண்!” தன் அண்ணனைக் கூர்மையாக பார்த்துக்கொண்டு பதில் சொன்னார் அமரா தேவி.

“அமரா, நீ என்ன சொல்கிறாய்? உன்னைப் போல பெண்ணா? நமக்குத்தான் பெண் குழந்தைகள் இல்லையே?!” மனைவியுடன் ஹாஸ்யத்தில் இறங்கிறார் உப சேனாதிபதி.

“நமக்குப் பெண் பிள்ளைகள் இல்லைதான், ஆனால்… நரசிம்ம பல்லவனுக்கு பெண் வேடம் போட்டால் அச்சு அசல் உன்னைப்போலவே இருப்பான் அமரா என்று பலமுறை என்னிடம் நீங்களே கூறியிருக்கிறீர்களே!” பொதிகை மாறனை பார்த்து அமரா தேவி கூற ஆண்கள் இருவரும் மலைத்து போனார்கள்.

“அமரா! நீ என்ன சொல்கிறாய்?!” மனைவியின் பேச்சில் கணவன் திகைத்துப்போனார். மகேந்திர பல்லவர் பேசும் நிலையிலேயே இல்லை என்பது அவரைப் பார்த்த போதே புரிந்தது.

“அந்த பெண்ணை விசாரித்தாயா அமரா?”

“ஆமாம், தனக்குத் தந்தை இல்லையென்று சொன்னாள்.”

“என்ன?!” பொதிகை மாறன் இப்போது முழுதாக அதிர்ந்து போனார்.

“தாயின் பெயர்…” மேலே பேசாமல் அமரா தேவி இழுக்க இதுவரை அமைதியாக இருந்த மகேந்திர வர்மரின் தலைச் சட்டென்று நிமிர்ந்தது.

“பரிவாதனி என்று சொன்னாள்!” நிதானமாக உச்சரித்து தன் அண்ணனின் தலையில் இடியை இறக்கினார் அமரா தேவி. அங்கிருந்த மஞ்சத்தில் தொப்பென்று அமர்ந்த மகேந்திர பல்லவர் தன் இடது மார்பை அழுத்தி பிடித்தார்.

“பல்லவேந்திரா!” பொதிகை மாறன் அலறிய போதும் அமரா தேவி சிலைப் போலவே நின்றார். பரிவாதனி விடயத்தில் தன் மனைவியின் மனநிலையை மாறன் நன்கு அறிந்தவர் என்பதால் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை.

பணிப்பெண் ஒருத்தியை அழைத்து குளிர்ந்த நீர் கொண்டுவர செய்து சக்கரவர்த்தியை அருந்த செய்தார்.

“பல்லவேந்திரா… சற்று அமைதியாக இருங்கள்!”

“மாறா! அமரா ஏதேதோ சொல்கிறாளே? என்னால் எதையும் நம்ப முடியவில்லையே?”

“என்னாலும் கூட எதையும் நம்ப இயலவில்லை.”

“நான் எத்தனைப் பெரிய துரோகத்தை ஒரு பெண்ணுக்கு செய்திருக்கிறேன்!”

“இல்லை மன்னவா! இதில் தங்கள் தவறு ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”

ஆண்கள் இருவரும் பேசிக்கொள்ள அமரா தேவி அமைதியாக நின்றிருந்தார். அதற்கு மேல் தங்கையிடம் பேச சக்கரவர்த்திக்கு நா எழவில்லை. அதனால் பொதிகை மாறனே பேச்சைத் தொடர்ந்தார்.

“அமரா, அந்த பெண்ணை அழைத்துவர சொல்லு, நாங்கள் பார்க்க வேண்டும்.”

“அதில் சின்னதொரு சிக்கல் இருக்கிறது.”

“சிக்கலா? என்ன சிக்கல்?”

“அந்த பெண் இப்போது இங்கே இல்லை.”

“என்ன?! என்ன சொல்கிறாய் நீ? இங்கே இல்லை என்றால் வேறு எங்கே இருக்கிறாள்?” பொதிகை மாறன் ஆச்சரியப்பட மகேந்திர வர்மரின் கண்கள் தங்கையைக் கூர்மையாக கவனித்தன.

“சிறைப்படுத்தி இருந்தேன், தப்பிவிட்டாள்.”

“என்ன?!தப்பிவிட்டாளா? எப்படித் தப்பினாள்? இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?” பொதிகை மாறனின் குரல் லேசாக உயர்ந்தது.

“உப சேனாதிபதி அவர்களே!‌ இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? இருபது வீரர்கள் காவல் புரியும் ஒரு மாளிகையில் இருந்து தப்பிச்செல்வது ஒன்றும் அத்தனைப் பெரிய காரியமல்லவே!”

“பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரதான படைத்தலைவரின் பேச்சு எனக்கு அவ்வளவாக ருசிக்கவில்லை.” பொதிகை மாறனின் முகத்தில் இப்போது திருப்தியற்ற பாவம் தோன்றியது.

“ஆமாம் ஆமாம்… உங்களுக்கு உங்கள் நண்பர் என்று வந்துவிட்டால் என் பேச்சு ருசிக்காதுதான், புரட்சி நடக்கிறதா என்று ஆராய வந்தால் என்னையே புரட்டிப்போடும் விஷயங்கள் இந்த ஊரிலே நடக்கின்றன!” இப்போது கோபப்படுவது அமரா தேவியின் முறையானது.

“மாறா… போதும்! இந்த மாளிகையில் எனக்காவது தங்க இடம் இருக்கிறதா? அதை மட்டும் கேட்டு சொல்.” சக்கரவர்த்தியின் கேள்வியில் பல அர்த்தங்கள் தொக்கி நின்றன. அமரா தேவி பிடிபட்டது போல உணர்ந்தார்.

“பல்லவேந்திரா!” அதிர்ந்த தன் நண்பனைப் பார்த்து கசப்பாக புன்னகைத்து விட்டு மகேந்திர பல்லவர் அங்கிருந்து வெளியேறினார்.

மூளை வெகு துரிதமாக வேலைச் செய்து கொண்டிருந்தது. அமரா பார்த்த பெண் யாரென்று இன்னும் மகேந்திரருக்கு பிடிபடவில்லை. தந்தை இல்லையென்று சொன்ன பெண் தாயின் பெயர் பரிவாதனி என்று சொல்லி இருக்கிறாளே! ஒருவேளை அது வேறு யாராவது பரிவாதனியாக இருக்குமா?

சாத்தியமில்லையே! அருவிக்கரையில் அன்று அவளோடு தனித்திருந்த பொழுது பசுமையாக அவர் நெஞ்சில் இன்றும் பவனி வந்தது.

‘அன்றைய ஒரு நாள் ஸ்நேகத்தில் உதித்த உறவா இவள்?!‌ பெயர் என்னவோ?’ சிந்தனையில் இருந்த மகேந்திரரின் அறைக்குள் நுழைந்தார் பொதிகை மாறன்.

“பல்லவேந்திரா! அமரா சொல்வதை என்னால் நம்ப இயலவில்லையே!”

“மாறா…‌ அந்த பெண்ணின் பெயர் என்ன? விசாரித்தாயா? உனக்கு ஏதாவது தெரியுமா?”

“மைத்ரேயி என்று அமரா சொன்னாள்.” மாறன் சொல்ல அந்த ஒற்றை வார்த்தையில் நொறுங்கி போனார் சக்கரவர்த்தி.

“மாறா… ஓடி ஒளிந்து கொண்டு என் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள்.”

“பல்லவேந்திரா, உங்களுக்கு நிச்சயம்தானா?”

“நான் ஆசைப்பட்ட பெயரையே குழந்தைக்கு வைத்திருக்கிறாள், சந்தேகமே இல்லை… பரிவாதனி இந்த ஊரில்தான் இருக்கிறாள்.”

“அப்படியா! இதோ, இப்போதே வீரர்களை அனுப்பி தேட சொல்கிறேன்.”

“வேண்டாம் மாறா, என் வருகை அவளுக்குத் தெரிந்தால் இப்போதும் எங்காவது ஒளிந்து கொள்ளத்தான் பார்ப்பாள், இம்முறை நானே களத்தில் இறங்குகிறேன்.”

“ஆகட்டும் பல்லவேந்திரா, ஸ்நானத்தை முடித்துக்கொண்டு கிளம்புங்கள், அப்போது கொஞ்சம் களைப்பு தீரும்.”

“இல்லையில்லை… இந்த மாளிகையில் பணிபுரியும் வீரர்கள் அல்லது பணிப்பெண்கள் யாருக்காவது நிச்சயமாக பரிவாதனியை தெரிந்திருக்கும், சிறிய ஊர்தானே… உடனே விசாரிக்க ஏற்பாடு செய்.”

“ஆக்ஞை பிரபு!”

“காலதாமதம் வேண்டாம், எல்லாம் துரிதமாக நடக்கட்டும்.”

சக்கரவர்த்தியின் ஆணையால் பொதிகை மாறன் படுவேகமாக அந்த அறையை விட்டு வெளியேற சாளரத்தின் வழியாக தெரிந்த ஊரை தன் கண்களால் துளாவினார் மகேந்திர பல்லவர்.

தன் உயிரின் ஆணிவேரைக் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக சுமந்த மண் இதுதானா?! என்னைத் தழுவும் இந்த தென்றல்தான் அவள் மூச்சுக்காற்றை இத்தனைக் காலமும் சுமந்து நின்றதா?!

ஏய் தென்றல் காற்றே! ஏன் கொற்கையோடு நின்றுவிட்டாய்?! ஒரேயொரு கணம் காஞ்சிக்கு வந்து அவள் இருப்பு உன்வசம்தான் என்று என்னிடம் சொல்லி இருக்க கூடாதா?!

உள்ளுக்குள் உருகி தவித்தபடி மாறனின் வருகைக்காக காத்திருந்தார் மகேந்திர வர்மர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!