pallavankavithai14

PKpic-06267188

pallavankavithai14

பல்லவன் கவிதை – 14

மார்த்தாண்டனின் புரவி வேகமாக ஆற்றங்கரை மண்டபத்தை நோக்கி போய்க்கொண்டிருத்தது. சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு நிறைவேற்றி கொண்டிருந்தான் இளவல்.

அமரா தேவி, மைத்ரேயியை சிறைச் செய்தவுடனேயே மார்த்தாண்டனின் மூளைத் துரிதமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. மைத்ரேயியின் உறவினர்களின் உதவி தனக்குக் கிடைக்காது என்று தெரிந்தவுடனேயே களத்தில் குதித்துவிட்டான் அந்த வேங்கி நாட்டு இளவல்.

தன்னோடு வேங்கியிலிருந்து கிளம்பி வந்திருந்த தன் சகாக்களின் உதவியோடு கொற்கை அரச மாளிகையைக் கண்காணிக்க ஆரம்பித்தான். எப்படியும் அமரா தேவி ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்பது அவன் அறிந்ததே.

அதனாலேயே கொற்கையை அண்டிய வனப்பகுதியில் கைகலப்பு என்ற பெயரில் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே ஒரு வீரனும் அவன் கொண்டு வந்த ஓலையும் அவனுக்குக் கிடைத்தன. மார்த்தாண்டன் மகிழ்ந்து போனான்.

ஓலையில், தன்னைப் பற்றிய ஏதாவது செய்தி காஞ்சிக்குப் போகும் என்று அவன் எதிர்பார்த்திருக்க அங்கு கண்டிருந்த செய்தியோ அவன் முற்றிலும் எதிர்பாராததாக இருந்தது!

ஓலையில் கண்டிருந்த செய்தி மைத்ரேயியை பற்றியதுதான் என்பதில் அவனுக்கு உறுதி நிறையவே இருந்தது. ஆனால் அந்த ஓலையில் குறிப்பிடப்பட்டிருந்த கனக புஷ்பராகம் எதுவென்று அவனுக்கு விளங்கவில்லை. அதற்கு சொந்தக்காரர் யாரென்றும் பிடிபடவில்லை.

மைத்ரேயிக்கும் கனக புஷ்பராகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஆனால் நிச்சயமாக ஏதோ இருக்கிறது! இல்லாவிட்டால் எதற்காக அன்று மைத்ரேயியின் சித்தி தன் கனக புஷ்பராக மோதிரத்தைப் பார்த்த போது அப்படி ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்? அதிர்ந்து போக வேண்டும்? எதற்காக மீண்டும் மீண்டும் என்னால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமா என்று தீர விசாரிக்க வேண்டும்?! இதில் ஏதோ மர்மம் இருக்கிறது!

அவன் புத்தியில் முளைத்திருக்கும் அத்தனைக் கேள்விக்கும் பதில் சொல்லக்கூடிய ஒரே நபர் மகிழினி. அதனாலேயே அத்தனைக் காரியங்களையும் உதிரன் வசம் ஒப்படைத்துவிட்டு கிளம்பி விட்டான்.

மகிழினியின் வீட்டைக் கடக்கும் போதே வாசலில் நின்றிருந்த பெண்ணிற்கு சமிக்ஞை காட்டிவிட்டு ஆற்றங்கரை மண்டபத்தில் காத்திருந்தான் மார்த்தாண்டன். சற்று நேரத்திலெல்லாம் ஆவலே வடிவாக ஓடி வந்தார் மகிழினி.

“தம்பி… மைத்ரேயி பற்றி ஏதாவது தகவல் உண்டா? எதற்காக என்னை இங்கே சமிக்ஞை காட்டி அழைத்தாய்?”

“அம்மா, கவலைப்படாதீர்கள்… இன்றைக்கு இரவே மைத்ரேயியை சிறையிலிருந்து மீட்கும் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.”

“என்ன?! சிறையிலிருந்து மீட்க போகிறீர்களா?!” மகிழினி திகைத்துப்போனார்.

“ஆம் தாயே, எனக்கு வேறு வழி தெரியவில்லை.”

“அது மாபெரும் தவறல்லவா?”

“எது தவறு அம்மா? மைத்ரேயி மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்ன?”

“அவள் என்ன குற்றம் செய்தாள் அப்பனே?”

“எதுவுமேயில்லை… அப்படியிருக்க எதற்காக அவளைக் கைது செய்திருக்கிறார்கள்?”

“எதற்காக?” குழம்பினாள் மகிழினி.

“அவர்களின் இலக்கு மைத்ரேயி அல்ல… நான்.”

“நீங்களா?”

“ஆம், அமரா தேவி என்னோடு மோதாமல் மைத்ரேயியை கொண்டு என்னைத் தண்டிக்க முயல்கிறார்… இது மட்டும் நியாயமா? அப்படியிருக்க நாம் மட்டும் எதற்காக நியாய அநியாயம் பார்க்க வேண்டும்?”

“எதற்காக இப்படியெல்லாம் அவர்கள் நடக்கிறார்கள் தம்பி?”

“இந்த கேள்விக்கு இப்போது என்னால் பதில் சொல்ல இயலாது தாயே, ஆனால் நான் உங்களிடம் கேட்க வந்த விடயமே வேறு.”

“அது என்ன?”

“இப்போது அமரா தேவி அனுப்பிய வீரனொருன் காஞ்சியை நோக்கி ஓர் ஓலையோடு போகிறான்.” நிதானமாக சொன்னான் மார்த்தாண்டன்.

“அப்படியா?”

“ஆமாம், ஓலையில் என்ன எழுதி இருக்கிறது தெரியுமா?”

“என்ன எழுதி இருக்கிறது? அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?”

“ராஜ்ஜியத்தோடு சம்பந்தப்பட்டுவிட்டால் இதுவெல்லாம் சாதாரணம் அம்மா… அது போகட்டும், ஓலையில் என்ன எழுதி இருந்தது என்று நான் இன்னும் சொல்லவில்லையே!”

“என்ன எழுதி இருந்தது?”

“கனக புஷ்பராகம் பற்றி எழுதி இருந்தது.”

“என்ன? என்ன சொன்னீர்கள்?‌ எதைப்பற்றி எழுதி இருந்தது?” ஆச்சரியம் தாளாமல் சற்றே குரலை உயர்த்தி பேசினார் மகிழினி.

“உஷ்…‌ இரைந்து பேச வேண்டாம் அம்மா, சற்று அமைதியாக இருங்கள்.”

“தம்பி… என் மன வேதனையை நீ அறியமாட்டாய் அப்பனே! இந்த பாழும் மனதுக்குள் எத்தனைக் கவலைகள் இருக்கின்றன தெரியுமா?” சொல்லிவிட்டு தன் புடவைத் தலைப்பால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டார் மகிழினி.

“உங்கள் மனதில் இருக்கும் கவலைகள் தீரும் காலம் வந்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா தாயே?”

“ஐயா, அமரா தேவி ஓலையில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்?” ஆவலுடன் கேட்ட பெண்ணைச் சற்று கூர்ந்து நோக்கிவிட்டு பதில் சொன்னான் மார்த்தாண்டன்.

“தொலைந்த கனக புஷ்பராகம் மீண்டும் கிடைத்துவிட்டதாம்!”

“ஆஹா! அப்படியா எழுதி இருந்தார்?!” அந்த பதிலில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போனார் மகிழினி.

“அதைத் தொலைத்தவரிடம் சேர்ப்பதா வேண்டாமா என்று உப சேனாதிபதியை முடிவெடுக்குமாறு ஓலை அனுப்பி இருக்கிறார்.”

“ஆண்டவா! இப்போதாவது என் வேண்டுதல்களுக்கு நீ செவி சாய்த்தாயே! உன் கருணையே கருணை!” உணர்ச்சி பெருக்கால் கண்களில் கண்ணீர் வழிய இரு கைகளையும் உயர்த்தி வானத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தார் மகிழினி.

“வாதாபியோடும் வேங்கியோடும் சம்பந்தப்பட்டிருக்கும் கனக புஷ்பராகத்தைப் பற்றி அமரா தேவி ஏன் குறிப்பிட வேண்டும்? கனக புஷ்பராகத்திற்கும் காஞ்சிக்கும் என்ன சம்பந்தம் தாயே?” மிக மிக நிதானமாக மகிழினியை நோக்கி தன் கூரிய கேள்விகளை வீசினான் மார்த்தாண்டன். மகிழினி இப்போது திணறிப்போனாள்.

தன் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களோடே பயணித்து கொண்டிருந்த மகிழினி மார்த்தாண்டன் கேட்ட கேள்வியில் ஆடிப்போய் விட்டாள். பரிவாதனிக்கும் மைத்ரேயிக்கும் நல்லதொரு எதிர்காலம் அமையவிருப்பதில் மகிழ்ந்து கொண்டிருந்த அவள் மனம் தன் எதிரே நின்றிருந்த மார்த்தாண்டனை மறந்து போனது.

“தம்பீ…”

“உண்மையைச் சொல்லுங்கள் அம்மா… மைத்ரேயி யார்? அவளுக்கும் அந்த மஞ்சள் கல்லுக்கும் என்ன சம்பந்தம்?”

“சொல்ல அனுமதியில்லையே தம்பி.”

“என்னிடம் கூடவா?!”

“யாரிடமும்!” பிடிவாதமாக மறுத்தாள் மகிழினி.

“அம்மா… நிலைமை புரிந்துதான் பேசுகிறீர்களா? மைத்ரேயி சிறையில் இருக்கிறாள், இன்றைக்கு இரவு அவளை நான் அங்கிருந்து மீட்டே ஆகவேண்டும், காலதாமதம் பெரும் விபரீதங்களை உருவாக்கும்.”

“என்ன சொல்கிறீர்கள்? அப்படி என்ன விபரீதங்களை உருவாக்கும்?” மகிழினி ஒரு கணம் குழம்பி போனார்.

“காஞ்சிக்குப் போகும் ஓலையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி மைத்ரேயி சம்பந்தப்பட்டது என்பது எனக்குத் தெளிவு, ஆனால்…”

“ஆனால் என்ன?”

“அந்த ஓலை யாரிடம் சேர்ப்பிக்கப்பட போகிறது என்பது எனக்கு விளங்கவில்லை.”

“…………..”

“அந்த ஓலை உரியவரிடம் போய் சேரும்போது என்ன நடக்கும்?”

“சம்பந்தப்பட்டவர் நிச்சயம் கிளம்பி கொற்கைக்கு வருவார்.”

“அப்போது மைத்ரேயியின் நிலை எப்படி இருக்கும் தாயே?”

“உன்னதமாக இருக்கும்!” மகிழினியின் முகம் இப்போது மலர்ந்தது.

“வர இருப்பவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை தாயே! ஆனால் வரப்போவது ஒருவேளை அவள் தந்தையாக இருக்கும் பட்சத்தில் அவள் தாயைப் பற்றி நீங்கள் யோசித்து பார்த்தீர்களா?” மார்த்தாண்டனின் கேள்வியில் மகிழினிக்கு தூக்கி வாரிப்போட்டது.

‘பரிவாதனியை நான் எப்படி மறந்து போனேன்?!’ மகிழினியின் வெளுத்த முகத்தைப் பார்த்த மார்த்தாண்டன் மீண்டும் ஆரம்பித்தான்.

“இது காலம் வரை உயிரோடு இருக்கும் தந்தையைத் தன் மகளுக்குக் காட்டாமலேயே வளர்க்கும் தாய் இப்போது மட்டும் அதற்குச் சம்மதிப்பாரா? அது போக… அமரா தேவி…”

“அவருக்கு என்ன?” பெண்ணின் குரல் பதறியது.

“அவரைப் பார்த்தால் அத்தனை நல்லவர் போல எனக்குத் தெரியவில்லை… மைத்ரேயிக்கு ஒரு நல்லது நடக்க அவர் வழிவிடுவார் போலவும் தெரியவில்லை…”

“நிச்சயம் விடமாட்டார்!” கோபமாக வந்தது மகிழினியின் குரல்.

“அதனால்தான் சொல்கிறேன்… மைத்ரேயியை ஏதோ ஆபத்து சூழ்வது போல எனக்குத் தோன்றுகிறது, முடிந்தவரை அவளைக் கூடிய சீக்கிரமாக சிறை மீட்டு இவர்களிடமிருந்து அப்புறப்படுத்துவது உசிதம் என்று நான் நினைக்கிறேன்.”

மார்த்தாண்டனின் வார்த்தைகளில் மகிழினியின் மனம் மிக வேகமாக கணக்குகளைப் போட்டது. ஓலையில் இருக்கும் செய்தியைப் பார்த்தவுடன் சக்கரவர்த்தி அதி சீக்கிரத்தில் கொற்கைக்கு வந்து சேருவார். அவர் வந்து பரிவாதனியை பார்க்கும் பட்சத்தில் நிச்சயம் அவள் வாழ்க்கைக்கு விமோசனம் கிடைக்கும். ஆனால் மைத்ரேயி?! அவள் நிலைமை என்ன? சக்கரவர்த்தியின் நலனுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த பரிவாதனிக்கு தன் பெண்ணைத் தூக்கி எறிய எத்தனை நேரம் எடுக்கும்?! இப்போது கூட எனக்கொரு மகள் இல்லையென்று நினைத்து கொள்கிறேன் என்று அவள் வாயாலேயே சொல்லவில்லையா?!

இவையெல்லாம் போக சக்கரவர்த்தியின் பட்டமகிஷி?! அவர்கள் மகன்?! இவர்களெல்லாம் மைத்ரேயியை ஏற்று கொள்வார்களா? அவர்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளை இவளுக்கு விட்டு கொடுப்பார்களா?

“அம்மா!” மார்த்தாண்டனின் அழைப்பில் தன் யோசனைத் தடைப்பட திரும்பினாள் மகிழினி.

“நீங்கள் இன்னும் என்னை நம்பவில்லை என்று தோன்றுகிறது, என் வாள் மீது ஆணையிட்ட பின்பும் நீங்கள் என்னை நம்பவில்லை என்றால் நான் வேறு என்னதான் செய்வது? பரவாயில்லை…”

“தம்பீ…”

“இல்லை தாயே… நான் உங்களை வற்புறுத்தவில்லை, சங்கடத்திலும் ஆழ்த்த விரும்பவில்லை.”

“ஐயா…” மீண்டும் எதையோ சொல்ல ஆரம்பித்த பெண்ணைத் தடுத்தான் மார்த்தாண்டன்.

“எனக்கு இதற்கு மட்டும் விடைப் பகருங்கள் தாயே, மைத்ரேயியை சிறையிலிருந்து மீட்டு என்னோடு அழைத்து செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள், எனக்கு அது போதும்.”

“எங்கு அழைத்து செல்ல போகிறீர்கள்?!”

“அவளுக்கு எந்த ஆபத்தும் வராத பத்திரமான ஓரிடத்திற்கு.”

“அதுதான் எங்கே என்று கேட்கிறேன்?”

“அதை உங்களிடம் கூட நான் சொல்ல விரும்பவில்லை தாயே… ஆனால் உங்கள் செல்ல புத்திரியைப் பற்றி கூடிய விரைவில் உங்களுக்கு மகிழ்ச்சியான பல செய்திகள் கிட்டும்.”

“அப்பனே… நான் ஒன்றை மட்டும்… உன்னிடம் சொல்கிறேன்…” திக்கி தடுமாறினார் மகிழினி.

“சொல்லுங்கள் தாயே.”

“செய்தி கிட்டியவுடன் கொற்கைக்கு வர இருப்பவர்தான் மைத்ரேயியின் தந்தை.”

“ஓஹோ! உப சேனாதிபதி இங்கு வர சாத்தியங்கள் உண்டா?”

“நிச்சயமாக இல்லை, ஒருவேளை கூட வரலாம்…”

“சக்கரவர்த்தி திருமகளா அவள்?!” மார்த்தாண்டனின் அந்த வார்த்தைகளில் மகிழினி மெய்சிலிர்க்க நிமிர்த்து பார்த்தாள். கண்கள் ஆறென பெருகின. தலை ஆமென்பது போல ஆடியது.

“அதுதானே பார்த்தேன்! மார்த்தாண்டன் மனது அத்தனைச் சுலபத்தில் புலியை விட்டுவிட்டு பூனையிடம் போகாது!” தன் அரும்பு மீசையை லேசாக தடவிக்கொண்டான் இளவல். முகத்தில் இப்போது கம்பீரத்தையும் தாண்டி பெருமைத் தெரிந்தது.

“தாயே! கவலையை விடுங்கள்… அவள் தகுதிக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல!”

“நீங்கள்…”

“வேங்கி நாட்டு இளவரசன்!”

“என்ன?!” மகிழினி ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

“வேங்கி நாட்டின் முடிக்குரிய இளவரசன்… நாளை ராஜ்ஜிய பாரத்தை நான் ஏற்கும் போது என் பட்டமகிஷியாக என் பக்கத்தில் அமரப்போவது உங்கள் பெண்தான், கவலை வேண்டாம்.”

“ஐயா!”

“நான் புறப்படுகிறேன் தாயே… இன்னும் அதிக நேரம் என்னால் இங்கே தாமதிக்க முடியாது.”

“மைத்ரேயி…”

“அவளை அழைத்து செல்லும் முன்பு உங்களைப் பார்க்க ஏற்பாடு செய்கிறேன்.” அவசர அவசரமாக சொல்லிவிட்டு புரவியில் சட்டென்று ஏறி போய்விட்டான் மார்த்தாண்டன்.

மகிழினி கள்ளுண்ட வண்டு போல தட்டுத்தடுமாறி நின்றிருந்தாள். மனது பூரித்துப்போய் ஏதோ வானத்தில் பறப்பது போல இருந்தது.

‘இந்த வாலிபன் வேங்கி நாட்டு இளவரசனா? அப்படியென்றால்… நாளை மைத்ரேயி வேங்கி நாட்டின் ராணியா? நான் தூக்கி வளர்த்த என் செல்ல கண்மணி நாளை மகாராணியாக ஆகப்போகிறாளா?!’

நெஞ்சம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தது! கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடியே வீட்டினுள் நுழைந்த தோழியை ஆராய்ச்சியாக பார்த்தார் பரிவாதனி. ஆனால் மகிழினி அந்த பார்வையை அசட்டை செய்து விட்டு அப்பால் போனாள்.

“மகிழினி!”

“என்ன?”

“எதற்காக அடிக்கடி ஆற்றங்கரை மண்டபத்திற்குப் போகிறாய்?”

“எனக்கொரு பெண் இருக்கிறாள்… அவளை இப்போது அநியாயமாக சிறையில் பிடித்து போட்டிருக்கிறார்கள், என் நெஞ்சு அதனால் துடிக்கிறது, நான் ரத்தமும் சதையும் கொண்ட மனுஷி… ஒரு சிலரைப் போல ஜடமில்லை!” வேலாக வந்து வீழ்ந்தன வார்த்தைகள்.

“தேவையில்லாத பேச்சுக்கள் இப்போது வேண்டாம்!”

“பேச்சை நான் ஆரம்பிக்கவில்லை, அத்தோடு… யாரோடும் பேசவும் எனக்கு விருப்பமும் இல்லை.” முகத்தில் சொல்லொணா வேதனையோடு பேசிவிட்டு அப்பால் போகும் தன் தோழியை விழி அசைக்காமல் பார்த்திருந்தார் பரிவாதனி.

மகிழினி சொல்வதைப் போலத்தான் பரிவாதனியின் மனநிலை அப்போது இருந்தது. என்றைக்கு அந்த பல்லவ இளவல் மேல் தனது யௌவன வயதில் தீராத காதல் கொண்டாளோ அப்பொழுதிருந்தே அவள் மனநிலை இப்படித்தான் ஆகிப்போனது.‌

தன் பெண்ணா இல்லை அந்த பல்லவ இளவலா என்ற கேள்வி வந்தால் அவள் மனமெனும் துலாக்கோல் இன்றைக்கும் அந்த பல்லவ இளவல் பக்கம்தான் சாய்ந்தது.

தான் பெற்ற பெண் சிறையில் இருக்கிறாள் என்பதைக் காட்டிலும் தான் இருக்கும் இடம் அவள் பெற்றெடுத்த பெண்ணின் தந்தைக்குத் தெரிந்து விட்டால் என்னென்ன விபரீதங்கள் நிகழும் என்பதுதான் அவள் சிந்தையை வெகுவாக பாதித்தது.

தான் அன்றைக்கு இளவரசனாக பார்த்த இன்றைய பல்லவ சக்கரவர்த்தியின் நலன் மட்டும்தான் அவள் சிந்தையை வியாபித்திருந்தது.

பரிவாதனிக்கு அவள் வாழ்க்கையை நினைத்த போது இப்போது சிரிப்பு வந்தது. ஆற அமர உட்கார்ந்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பி பார்த்த போது அனைத்தும் விந்தையாகவும் சூனியமாகவும் இருந்தது. யாருக்காக எதைச் செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.

அவள் வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத பல பேறுகள் கிடைத்திருக்கின்றன… ஆனால் என்ன? அவை எல்லாவற்றிற்கும் ஆயுள்தான் அத்தனை அதிகமில்லை. தனக்கென இருந்த பெண்ணைக் கூட விதி இப்போது சதி செய்து அவளிடமிருந்து பறித்து கொண்டிருக்கிறது.

எதையும் சிந்திக்கும் நிலையில் பரிவாதனி இப்போது இல்லை. காலம் அவளை எதையும் அனுபவிக்க விடாமல் ஓட ஓட விரட்டி இருக்கிறது. அவள் பிறந்தது முதல் அதுதானே அவளுக்கு விதித்திருக்கிறது. இனி எங்கே ஓடுவது?! வயதான தந்தையையும் அழைத்து கொண்டு இனியும் ஓட அவள் உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை. நிராதரவான அபலைப் போல ஓய்ந்து உட்கார்ந்து விட்டாள் பரிவாதனி.

***

கொற்கையின் அரச மாளிகை அந்த முதலாம் ஜாம முடிவில் அதை அடுத்திருந்த அடர்ந்த வனங்களிலிருந்து கொஞ்சம் நிசப்தத்தைக் கடன் வாங்கி இருந்தது.

காவிரி ஆற்றிற்கு அருகிலிருக்கும் ஒரு சிறிய ஊரென்பதால் அங்கே எப்போதும் அதிக ஆர்ப்பாட்டம் இருந்ததில்லை. மக்கள் தொகை அதிகமில்லை என்பதாலேயே அரச குலத்தாரின் அமைதியை முன்னிட்டு அரச மாளிகை அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அன்றைக்கு ஏனோ அந்த அரண்மனையின் முன்பாக காபாலிகர்களின் சஞ்சாரம் சற்று அதிகமாகவே இருந்தது. மாளிகை வாயிலின் காவலாளிகள் கூட இதனால் அன்று சற்றே சலிப்படைந்திருந்தார்கள்.

அப்போதும் மண்டையோட்டு மாலைகளைக் கழுத்தில் அணிந்து கொண்டு கைகளில் மாட்டுக்கொம்புகளை ஏந்தி அதில் மதுபானம் அருந்தியபடி வந்த காபாலிகர்களைப் பார்த்த போது வாசலில் நின்றிருந்த காவலாளி அருவருப்பின் உச்சத்தை அடைந்தான்.

“அடேய்! இன்றைக்கு உங்கள் அட்டகாசம் அதிகமாகத்தான் இருக்கிறது, இத்தனைக் காலத்தில் இந்த மாளிகைக்கு இன்றைக்குத்தான் அரச குலத்தார் தங்க வந்திருக்கிறார்கள், இன்றைக்கென்று பார்த்தா நீங்களும் உங்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்?” சலிப்போடு அந்த வீரன் சொல்ல தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருந்த அந்த காபாலிகனுக்கு அப்படியொரு கோபம் வந்தது.

“டேய்! யாரைப் பார்த்து என்ன சொன்னாய்? இதோ! என்னைப் பார்த்து தவறாக பேசிய அந்த நாவை வெட்டி காளிக்குப் போடுகிறேன், எங்களை இழிவாக பேசிய உன்னை தேவி மன்னிக்கவே மாட்டாள், நீ இரத்தம் கக்கித்தான் சாகப்போகிறாய்.” வீராவேசமாக சொன்ன காபாலிகன் அந்த வீரன் மேல் பாய்ந்தான்.

“அடேய் அடேய்!‌ இப்போது நான் அப்படி என்ன சொல்லி விட்டேன் என்று உனக்கு இத்தனைக் கோபம் வருகிறது?” வீரன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த காபாலிகன் தன் வாயால் விசித்திரமாக ஒரு ஒலியை ஏழுப்ப தடதடவென்று இருபது காபாலிகர்கள் கையில் மதுவை ஏந்தியபடி நாலாபுறமும் இருந்து ஓடி வந்தார்கள்.

இதுவரை நேரமும் அமைதியோடு இருந்த அந்த அரண்மனை வாசல் இப்போது அமளி துமளிப்பட்டது. வாசலில் நின்றிருந்த வீரர்கள் தாக்கப்படுவதைப் பார்த்த அரண்மனை வீரர்கள் தாங்களும் வாசலுக்கு ஓடிவந்து அந்த முரட்டு காபாலிகர்களிடமிருந்து தங்கள் வீரர்களைக் காக்க முயன்றார்கள்.

வீரர்களின் கூச்சலும் காபாலிகர்களின் கோப‌ குரல்களும் என அந்த இடமே ஏதோ போர்க்களம் போல காட்சியளித்தது.

அப்போதுதான் தன் சிந்தனைகளையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு மஞ்சத்தில் சாய்ந்த அமரா தேவி சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். உப்பரிகைப் பலகனி வழியாக கீழே எட்டி பார்க்க அந்த இடமே அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருந்தது.

“யாரங்கே!” கூப்பிட்டு சில வினாடிகள் கழித்தே பணிப்பெண் ஒருத்தி உள்ளே ஓடி வந்தாள்.

“கீழே என்ன நடக்கிறது?”

“தேவி! காபாலிகர்கள் நம் வீரர்களோடு சண்டைப் போடுகிறார்கள், நம் வீரர்களைக் குடி போதையில் தாக்க ஆரம்பித்துவிட்டார்கள், நிலைமை மோசமாகிக்கொண்டு போகிறது!”

“கோட்டைத்தலைவன் எங்கே?”

“அவரும் வாசலில்தான் நிற்கிறார்.”

“சரி… இதோ நான் வருகிறேன்.” சொல்லிவிட்டு அமரா தேவி தன் உடைவாளை இடையில் கட்டிக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமானார்.

இது இங்கே இப்படி நடத்து கொண்டிருக்க அங்கே மாளிகையின் பின்புறமாக இருந்த அந்த உயர்ந்த சுவரின் மேல் ஏறி சத்தம் செய்யாமல் உள்ளே குதித்தான் மார்த்தாண்டன். அவன் திட்டமிட்டது போல அனைத்தும் மாளிகை வாசலில் நடந்தேறி கொண்டிருந்ததால் நிதானமாக உள்ளே நுழைந்தவன் சுற்றுமுற்றும் ஆராய்ந்தான்.

அது அத்தனைப் பெரிய மாளிகை இல்லை என்பதால் அங்கு எப்போதுமே வீரர்கள் அதிகமில்லை என்பதை இந்த ஊரிற்கு வந்த முதல் நாளே அவன் கண்டு கொண்டிருந்தான்.

இருபதுக்கு மேல் அங்கு வீரர்கள் எப்போதும் இருந்ததில்லை, இப்போதும் அப்படித்தான் இருந்தது. மாளிகையின் உள்ளே இருந்த வீரர்கள் அனைவரும் வாசலுக்கு ஓடி இருக்க சிறைக்காவலுக்காக ஒரு வீரன் மாத்திரமே அங்கு நின்றிருந்தான்.

அவன் பின்புறமாக ஓசையின்றி மெதுவாக சென்ற மார்த்தாண்டன் தன் வாளால் அவன் தோளை லேசாக தொட்டான். சரேலென்று வீரன் திரும்ப மார்த்தாண்டனின் கை முஷ்டி அவன் முகத்தில் இறங்கியது.

அவ்வளவுதான்… அந்த காவலாளி வேரறுந்த மரம் போல தடாலென்று நிலத்தில் வீழ்ந்தான். அவன் இடையை ஆராய்ந்த மார்த்தாண்டன் அதிலிருந்த சிறைக்கதவின் சாவியை எடுத்து கதவைத் திறந்தான்.

வெளியே கேட்ட கூச்சல் என்னவாக இருக்கும் என்ற யோசனையில் இருந்த மைத்ரேயி தன் உபாத்தியாயரை அப்போது அங்கே எதிர்பார்க்கவில்லை.

“உபாத்தியாயரே!” என்றாள் ஆச்சரியமாக.

“மைத்ரேயி, அதிக நேரமில்லை… என்னோடு புறப்படு.”

“எங்கே? எப்படி?”

“இந்த சிறைக்குப் பின்னாலிருக்கும் சுவரேறி குதித்து வந்திருக்கிறேன், வீரர்கள் திரும்பி வருமுன் நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும்.”

“உபாத்தியாயரே! இது என்ன? இது பெரிய குற்றமல்லவா?”

“நீயாக வந்தாயானால் எனக்கு சுலபம், இல்லாவிட்டால் அந்த காவலாளிக்கு ஒன்று கொடுத்தது போல உனக்கும் ஒன்று கொடுத்துத்தான் அழைத்து போக வேண்டுமென்றால் அதற்கும் நான் தயார்.” சுலபமாக சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பின்பக்க சுவருக்காக சென்றான் மார்த்தாண்டன்.

அவன் வாயால் ஏதோ விசித்திரமாக ஒலி ஒன்றை எழுப்பவே சுவருக்கு அப்பாலிருந்து ஒரு தாம்புக்கயிறு வந்து உள்ளே வீழ்ந்தது. அதை இழுத்து பார்த்த மார்த்தாண்டன் சுவருக்கு அப்பால் அது கெட்டியாக கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டு மைத்ரேயியை பார்த்தான்.

அவனுக்கு அதற்கு மேல் அதிகம் சிரமம் கொடுக்காமல் அந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு தன் கால்களை சுவரில் ஊன்றி அனாயாசமாக மேலே ஏறினாள் மைத்ரேயி. மார்த்தாண்டன் முகத்தில் இப்போது முறுவல் பூத்தது.

பல்லவ சக்கரவர்த்தியின் முதல் வாரிசு! அவள் நினைத்தால் நாளைக்கே இந்த சாம்ராஜ்ஜியத்தின் ராணியாக மாற அனைத்து தகுதிகளும் கொண்ட பெண்! இது எதுவுமே தெரியாமல் இன்றைக்கு இந்த காரிருளில் சிறைச்சாலை சுவரேறி குதிக்கிறாள்.

“உபாத்தியாயரே! என்ன சிந்தனை?” சுவரில் ஏறி உட்கார்ந்து கொண்டு மார்த்தாண்டனைப் பார்த்து கேட்டாள் மைத்ரேயி.

“இதோ வந்துவிட்டேன்.” சிந்தனைக் கலைந்த இளவலும் மளமளவென்று கயிற்றைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினான்.

சுவரின் அப்புறமாக பெரிதாக ஒரு ஏணி வைக்கப்பட்டிருக்க அதில் இருவரும் இறங்கி கீழே வந்தார்கள்.

“உதிரா, கயிற்றையுப் ஏணியையும் உடனே அப்புறப்படுத்து.”

“ஆகட்டும் எஜமான்.”

“இன்னும் ஒரு நாழிகைக்குள்ளாக நமது வீரர்களையும் அழைத்துக்கொண்டு வழமையாக நாம் சந்திக்கும் இடத்திற்கு வந்துவிடு.”

“அப்படியே செய்கிறேன்.”

குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்தபடி நின்றிருந்த உதிரனுக்கு கட்டளைகள் இட்டு விட்டு அந்த குதிரையில் தாவி ஏறினான் மார்த்தாண்டன். மைத்ரேயி திகைத்தபடி நின்றிருந்தாள்.

“ம்… குதிரையில் ஏறு பெண்ணே!”

“உபாத்தியாயரே?”

“உன்னோடு தர்க்கிக்க எனக்கு இப்போது நேரமில்லை, சீக்கிரமாக ஏறு.” மார்த்தாண்டனின் குரலில் இருந்த கடுமை பெண்ணை அவன் சொன்னபடி செய்ய வைத்தது.

குதிரையை அதி வேகமாக செலுத்திச் சென்ற மார்த்தாண்டன் அதை ஆற்றங்கரை மண்டபத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு மைத்ரேயியின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு கால்நடையாக அவள் வீடு நோக்கி நடந்தான். ஊரே அமைதியாக இருந்தது.

“உபாத்தியாயரே!”

“உஷ்… எதுவும் பேசாமல் அமைதியாக வா.” அவளை அடக்கியவன் மகிழினியின் வீட்டின் பின்புறம் சென்று அவர்கள் வீட்டின் பின்பக்க கதவில் இருமுறை மெதுவாக தட்டினான். சற்று நேரத்தில் கதவு திறக்க மகிழினி வெளியே வத்தாள்.

“சித்தி…”

“மைத்ரேயி… என் கண்ணே!” பெண்ணைக் கட்டிக்கொண்டு அழுதாள் மகிழினி.

“தாயே, தாமதிக்க நேரமில்லை.”

“புரிகிறது அப்பனே.” கண்களைத் துடைத்துக்கொண்ட மகிழினி தன் பெண்ணிடம் ஒரு மூட்டையைக் கொடுத்தாள்.

“மைத்ரேயி, இதில் உனக்கு வேண்டிய அனைத்தும் இருக்கின்றன, நீ இனி இங்கே இருப்பது அத்தனை நல்லதில்லை, உடனே கிளம்பு.”

“எங்கே சித்தி?”

“உன் உபாத்தியாயர் எங்கே அழைத்து செல்கிறாரோ அங்கே செல், அவர் எது செய்தாலும் அது உன் நன்மைக்காக மட்டுமே என்று நினைவில் வை.”

“உபாத்தியாயரை உங்களுக்கு எப்படி தெரியும்?”

“அந்த கதையை அவர் போகும் வழியில் உன்னிடம் சொல்வார், இப்போது அதிகம் பேச நேரமில்லை.”

“அம்மா…”

“அதை நான் பார்த்து கொள்கிறேன், நீ உடனேயே கிளம்பு.”

“சித்தி…” ஏதோ பேச வாயெடுத்த இளையவளை மார்த்தாண்டன் தடுத்தான்.

“மைத்ரேயி! பேசியது போதும் சீக்கிரம் வா.” அவள் கையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் ஆற்றங்கரை மண்டபத்தை நோக்கி நடந்தான் மார்த்தாண்டன்.

போகும் இருவரையும் கண்களில் நீர் வழிய பார்த்து கொண்டிருந்தாள் மகிழினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!