கதவு தட்டப்படும் ஓசையில் கண் திறந்தாள் கௌரி. அறை இருட்டாக இருந்தது. எழுந்து விளக்கை போட்டு கதவை திறந்தாள்.
“என்னைய்யா இந்நேரத்துல? மணி என்ன?”
“மூணாகுது. நேத்து நீ மாவு அரைக்கலல்ல? அப்பறம் இன்னைக்கு எப்படி இட்லி போடுறது? உப்புமா மாதிரி ஏதாவது செய்ய முடியுமா? அதெல்லாம் பண்ணணும்னா நேரமாகுமே… அதா கொஞ்சம் சீக்கிரம் எழுப்ப வந்தேன்”
“ஆமா… என்ன மாதிரி ஒரு கிறுக்கிய பாத்திருப்பியா? ஒண்ணுத்தையும் யோசிக்காம நேத்து படுத்து தூங்குனேன். இப்பையும் பாரு…”
“தலையில அடிச்சிட்டு நிக்குறதுக்கெல்லாம் நேரமில்ல. என்ன செய்யப் போற? அத யோசி. மாவு இல்ல. வேற என்ன இல்ல என்ன இருக்குன்னு ஒனக்குதா தெரியும்”
“சேகரண்ணன்ட சொன்னேன். இப்போதைக்கு பெருசா எதுவும் இல்ல”
“யாரு சத்தம் போட்டது?”
“தெரியல. இன்னைக்கு போனாதா தெரியும்”
கடையருகில் வந்திருந்தனர். ஷட்டரை திறந்த பாஸ்கர் விளக்கை போட்டு சில மூட்டைகளை தாண்டி உள்ளேச் சென்று ரவை பாக்கெட்டுகளை ஒரு கவரில் போட்டு எடுத்து வந்தான்.
“அதெல்லா எழுதிக்கலாம். நானும் கூட வரவா? நீ தனியா எதும் பண்ண நிக்காத”
“கடைய யாரு தொறப்பா”
“நா பாத்துக்க ஆரம்பிச்சதுலேந்து அப்பாவ கடத் தொறக்க விடுறதில்லன்னு கண்மணி கிட்ட பொலம்புனாராம். என்னத்துக்கு இவ்வளோ காலையில எந்திரிக்கணும், நல்லா தூங்கட்டும்னு நெனச்சது இப்போ நம்ம தப்பு. அவர்ட சொன்னா சந்தோஷமா தொறப்பாரு. நீ வீட்டுக்குப் போ. நா இன்னும் ஒரு மணி நேரத்துல வரேன்”
“மாமாகிட்ட எதுவும் சொல்லாத”
“சொல்லல”
“கெளம்புறேன்”
செந்தில் வீட்டினருகில் வந்தபோது சாம்பாரின் மனம் மூக்கை துளைத்தது. கேட்டின் உள்ளே நுழைந்து கதவை தட்டினான். கதவை திறந்த கௌரி உடனேயே அடுக்களைக்குள் சென்றுவிட்டாள். செந்தில் அவள் பின்னால் சென்று மேடை மீது கவரை வைத்தான்.
“மத்தியானத்துக்கு என்ன செய்ய?”
“வேணாம் விட்டுடு. எப்படியும் பாத்திரமெல்லாம் நேத்து நைட் குடுத்தனுப்பியாச்சு. அதோட மொதல்ல அங்க என்ன நடக்குதுன்னுப் பாப்போம்”
“ஆமால்ல… நா யோசிக்கவே இல்ல…”
“கௌரி அடுப்ப ஆப் பண்ணிட்டு ஒரு நிமிசம் என்ன பாரு”
“ஏன்? என்னாச்சு?” என்று கேட்டவள் அடுப்பை அணைத்திருந்தாள்.
“நா ஒன் கூட இருக்கேன். இருப்பேன். என்ன பிரச்சன வந்தாலும் நீ தனியா சமாளிக்க தேவையில்ல. பிரச்சனைய பாத்து பயப்படாம நீ ஒன் வேலைய பாக்குறது… சாப்பிடுறது தூங்குறது தப்பில்ல. அப்படிதா இருக்கணும்.
ஆனா நா ஒன் கூட இருக்கேன்றதுக்காக எத பத்தியுமே யோசிக்காம இப்படி மூளைய மழுங்கடிக்குற பாரு… இது தப்பு. அடுத்து என்னன்னு யோசி. அத நா ஒனக்காக யோசிக்கணும்னு எதிர்ப்பாக்காத.
நா இல்லாதப்போ எப்படி இருந்தியோ நா கூட இருக்கப்போவும் அப்படியே இரு. வாழ்க்கப் பூரா யாரோ ஒரு ஆள நம்பி இருந்தேப் பழகிட்ட. மாத்திக்கோ.
ஒங்கிட்ட அன்னைக்கே சொன்னேன்… என்னைக்கு யாரும் இல்லாமப் போவாங்க, என்னைக்கு எல்லாம் நம்ம தலையில வந்து விழும்னு நம்மளால சொல்லவே முடியாது. தனியா யோசி. சுயமா முடிவெடு”
“என்னால முடியுமா?”
“நீ திருடுனன்னு சொன்னாங்க. போங்கடா நீங்களும் ஒங்க வேலையும்ன்னு தூக்கி எறிஞ்சுட்டு அந்த வீட்ட விட்டு வெளில வந்த. அடுத்த வேள சோத்துக்கே வழியிருக்காதுன்னு தெரியும். இருந்தாலும் தெளிவா யோசிச்சல்ல… மானம் தா பெருசுன்னு. நா எங்கூட வர சொன்னேன். கட்டாயப்படுத்தலையே. இப்போதைக்கு இத விட்டா வேற வழியில்லன்னு என்ன நம்பி வந்த. முடிவெடுக்குற தைரியம் இருந்துதுல்ல? ஆனா இந்த கொஞ்ச நாளா நீ அப்படியில்ல”
“இல்லதா… யோசிக்க மாட்டேங்குறேன். ஒனக்கு தெரியாததான்னு தோணுது. ஒன்ன கேக்காம எந்த முடிவும் எடுக்குறதில்ல. எடுக்கக் கூடாதுன்னு இல்ல. ஒங்கிட்ட கேக்காம எதுவும் செய்ய கூடாதுன்னு நெனைக்குறேன். அம்புட்டு மரியாத வெச்சிருக்கேன். இதுல என்ன தப்பிருக்கு?”
“தப்… நா என்ன சொல்லுறேன்? நீ என்ன பேசிட்டிருக்க? நேரமாகுது. நீ அடுப்ப பத்த வை. வேல பாத்துட்டே பேசு”
“ரவைய எடுத்து குடு. நீ தனியா இருந்தே பழகிட்ட. கேள்வி கேக்குறதுக்கும் இன்னது பண்ணு வாழ்க்கையில நல்லா வருவன்னு சொல்லுறதுக்கும் கூடவே ஒரு ஆள் இருந்திருந்தா நீயும் என்னைய மாதிரி தா இருப்ப”
“ஏன் எங்க மாமா குடும்பம் இல்ல?”
“அவர நீ எங்க கூட சேத்துக்குற? இந்த பாத்துரத்துல தண்ணி புடிச்சு அடுப்புல வை”
“அப்போ எங்க மாமா கூடவே இருந்தா அவர கேட்டு கேட்டுதா எல்லாம் பண்ணுவேன்னு சொல்லுறியா?”
“இப்போ அதுல என்ன தப்பு கண்டுப்புடிச்சுட்ட?”
“அத்தன பேரு முன்னாடி ஒருத்தன் தெருவுல வெச்சு சத்தம் போட்டப்போ என்ன பண்ணணும்னு சரியாதான யோசிச்ச? வீட்டுக்கு வந்ததுக்கப்பறம் எனக்கு என்ன வந்துச்சுன்னு யோசிக்குறதையே விட்டா?”
வீட்டின் அழைப்புமணி அடித்தது.
“ஆமாய்யா இந்த வீட்டுக்கு வந்தா ஒன் பக்கத்துல இருந்தா மூள மழுங்கி மங்குனி ஆயிடுறேன். போதுமா? யாரோ பெல் அடிக்குறாங்க போயி பாரு போ”
செந்தில் சென்று கதவை திறந்தான். பாஸ்கர் வந்திருந்தான்.
“உள்ள வா. அதான் ஏன்னு கேக்குறேன்”
“என்ன கேக்குற? இப்பதான உள்ள வரேன்”
“ஒன்ன இல்ல. அவள. நீ உக்காரு”
அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்தவள் “வாங்க” என்று பாஸ்கரிடம் கூறி செந்திலை பார்த்தாள்.
“அவனும் கூட வரேன்னு சொன்னான். டீ போடுறியா? ஒங்கூட பேசி தல வலி வந்ததுதா மிச்சம்”
“பால் கொதிச்சிட்டிருக்கு. நா சொல்லுறத நீ காது குடுத்து கேக்குறியாய்யா?”
“என்ன பஞ்சாயத்து ஒங்க ரெண்டு பேருக்கும்?”
“காலையில என்ன சமைக்கணும்னு யோசிக்கல. பாத்திரம் இல்லாம மத்தியான சாப்பாடு எப்படி எடுத்துட்டுப் போகணும்னு யோசிக்கல. அங்க என்ன பிரச்சன வரும்… எடுத்துட்டு போன சாப்பாடு வீணாகாம இருக்குமா யோசிக்கல… இப்படி மண்ணு மாதிரி இருந்தா?”
“என்னம்மா? ஏன் காலங்காத்தால வாங்கிக் கட்டிக்குற?”
“எல்லாத்தையும் யோசிக்க இவக இருக்காக… நா கவலையில்லாம இருக்கேன்னு சொன்னா என்ன நம்பி ஏன் இருக்கன்னு குதிக்குறாக. டீ குடிங்க. நீயும் எடுத்துக்கோ”
“எனக்கு ஒன்ன கேள்விக் கேட்டெல்லாம் பழக்கமில்ல. நீ இவ்வளோ உரிமையா எங்கப்பாக்கிட்ட கூட பேசுனதில்ல. அது ஒனக்குப் புரியுதா?”
“திடீர்னு ஒரு நாள் தனி ஆளா நிக்க வேண்டி வந்தப்போ எவ்வளோ கஷ்டப்பட்டேன்னு எனக்குதா தெரியும். அவ அப்படி ஆயிடக் கூடாதுன்னு நெனைக்குறேன். அவ்வளோதா. இது ஒண்ணும் உரிமையில பேசுறதில்ல. அக்கறை இருக்கு…”
“சொல்லணும்னு தோணுச்சு. சொல்லுறேன். நீ நெனைக்குற மாதிரியெல்லாம் எதுவுமில்ல”
“போலாமா? நல்லவேள தூங்கிட்டு இருந்தான். எல்லாம் எடுத்துட்டேன்”
கௌரி ராஜாவுடன் வர இருவரும் அமைதியானார்கள். செந்தில் தட்டை எடுத்துச் சென்று அடுக்களையில் வைத்து கை கழுவி வந்தான். அவன் வீட்டை பூட்ட அவள் வீட்டு சாவியை நீட்டினாள் கௌரி.
பாஸ்கரை பார்த்தவன் “நீயே வெச்சுக்கோ” என்று எரிச்சலாகக் கூற “புடிய்யா” என்று சாவியை அவன் கையில் திணித்தவளின் முகத்திலும் எரிச்சல் மண்டிக் கிடந்தது.
பாஸ்கர் ராஜாவை வாங்கிக் கொள்ள செந்திலும் கௌரியும் சேர்ந்து வண்டியை தள்ளினர். அவர்கள் கடை போடுமிடத்தில் எப்போதும் போல் கூட்டமிருந்தது. கௌரி வியாபாரத்தை கவனித்தாள்.
உள்ளூர பயம் தான். வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. சுற்றி பார்த்துக் கொண்டே இருந்தாள். யாரையோ தேடும் ஆவல். தேடும் நபர் அவள் எடுத்து வந்த உணவு தீர்ந்தப் பின்னே கண்ணில் பட்டான். பதட்டப்பட்டாலும் உணவு வீணாகவில்லையென்ற நிம்மதி. செந்திலை பார்த்தாள்.
“ஒனக்கு நேத்தே சொன்னேன்ல? என்ன தெனாவட்டு இருந்தா இன்னைக்கு கடப் போட்டிருப்ப?”
“யாருங்க நீங்க? எதுக்கு கலாட்டா பண்ணுறீங்க?”
“நீ யாரு? அவ புருஷனா?”
“அதெல்லாம் ஒங்களுக்குத் தேவையில்லாத விஷயம். இங்க கடப் போடுறதுல ஒங்களுக்கு என்ன பிரச்சன?”
செந்தில் கண்களை மூடி சில நொடிகள் அப்படியே நின்றான். பாஸ்கர் கிளம்புமாறு கௌரிக்கு சைகை செய்தான். செந்திலை திரும்பி திரும்பி பார்த்தபடி பாத்திரங்களை தள்ளுவண்டியில் எடுத்து வைத்தாள்.
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss