Pidi Kaadu 25

Pidi Kaadu 25

பிடி காடு – 25

இரவு வீடு வந்து சேர்ந்தபோது மணி பத்துக்கும் மேலாகியிருந்தது. பாஸ்கர் பைக்கில் செந்திலை சேகர் வீட்டில் விட்டுச் சென்றிருந்தான். அங்கிருந்து நடந்தே வந்தனர். ராஜாவை இன்னும் அவன் அவள் கைகளில் தரவில்லை. பிள்ளை இல்லாமல் எப்படி அவள் மட்டும் போக முடியும்? கௌரி அவன் வீட்டிற்குள் வந்தாள்.

“கொஞ்சம் தண்ணி குடேன்…”

“நெறைய அலஞ்சியா? மொகமெல்லாம் ஒரே புழுதியா இருக்கு. இந்தா… தண்ணிய குடிச்சுட்டு முகத்தக் கழுவிட்டு வா முதல்ல”

“இரு வரேன்”

அறைக்குள் சென்று பாயை எடுத்து விரித்து அதில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாவை கிடத்தி பேன் ஆன் செய்து வெளியே வந்து தண்ணீர் குடித்தான்.

“இங்க ஏன் படுக்க வெக்குற?”

“போகும்போது தூக்கிட்டுப் போ”

“இப்பப் போகதானப் போறேன்”

“கொஞ்ச நேரம் இரு. அப்பறம் போலாம்”

“ஏன் என்னாச்சு? சாப்பிட்டியா நீ?”

“வாசல்லப் போய் உக்காரலாம் வா. காலையிலேந்தே சாப்பிடல. நீ சாப்பிட்டியா?”

“ம்ம்ஹும்”

“கல்யாணத்துக்கு விரதம் இருப்பாங்களாம்”

“அது அன்னைக்குக் காலைல மட்டும். இப்டி மொத நாள்லேந்தா சாப்புடாமத் திரியுவாங்க?”

“உனக்கு பசிக்குதா?”

“உனக்கு?”

“இல்ல. எல்லாம் வாங்கிட்டியா?”

“கண்மணி கடைய வாரி கையிலக் குடுத்துடுச்சு. வேணாம் வேணாம்னு சொல்ல சொல்லக் கேக்காம அத்தனைய வாங்குச்சு. வந்து… அதுல ஒரு சிலதுக்கு அதான்யா காசு குடுத்துச்சு. உங்க மாமா குடுக்க சொன்னாகளாம். எவ்வளவோ சொல்லிப் பாத்தேன். கேக்க மாட்டேன்னுடுச்சு. சண்டைக்கு நின்னுச்சு. நானும் அதுக்கு மேல பேச முடியாம… நீ…”

“விடு… அது கல்யாணத்துக்கு சேத்து செஞ்சுக்கலாம். வாங்குனதெல்லாம் புடிச்சுதா? இல்ல யாரு எத கை காட்டுனாலும் அத வாங்கிட்டு வந்துட்டியா? காலையில புடவை ஒண்ணுக்கூட நீ பாக்கல. நா காமிச்சத எடுத்துக்கிட்ட. பட்டுப் புடவ புடிச்சிருக்கா?”

“யாரு எடுத்தா என்னைய்யா? ஏன் நீ எடுத்தத நா கட்டக் கூடாதா?”

“இதான் புடிச்சிருக்கு. இததான் என் கல்யாணத்துக்குக் கட்டணும் இப்படியெல்லாம் உனக்குத் தோணவே இல்லையா?”

“எனக்கு நடக்குற எதாவது நா நெனச்ச மாதிரி நடக்குதாய்யா? இந்த ஊரு… இந்த வீடு… நீ… எனக்குப் புடிச்ச மாதிரி நடக்குதான்னு எனக்கு சொல்லத் தெரில. ஆனா எல்லாம் நல்லதா நடக்குதுன்னு மட்டும் மனசு சொல்லுது. இதான் வேணும்னு அடம் புடிக்குற நெலமைலையா நா இருக்கேன்? இதாவது கெடைக்குதேன்னு சந்தோஷப்பட்டுக்குறேன்”

“அப்போ இஷ்டம் இல்லாமதான் கட்டிக்குறேன்னு சொன்னியா? புடிக்கலன்னா…”

“புடிக்காமப் போறதுக்கு என்ன இருக்கு? புடிச்சிருக்கான்னும் தெரில. அதான் சொன்னனே நா ஒன்ன அப்படியெல்லாம் யோசிச்சதில்லன்னு. நீ மட்டும் என்ன… புடிச்சா கட்டிக்குற? ஏதோ…”

“புடிச்சுதான் கட்டிக்குறேன்”

“அது… சும்மா சொல்ல…”

“நெஜமாதா சொல்லுறேன். உன்னதான் கட்டிக்கணும்னு முடிவு பண்ணிதான் கட்டிக்குறேன்”

“நீ ஏன் இப்படியெல்லாம் பேசுற? வேற ஏதாவது பேசு”

“வேற பேசுறதா? நீ ஒழுங்கா பதில் சொல்லு. அன்னைக்கு என்னமோ கேக்க ஆள் இல்லன்னா என்ன வேணா பேசுவியான்ன… இப்போ என்னமோ இதாவது கெடச்சுதேங்குற… என்ன? என்னைய பாத்தா எப்படி இருக்கு உனக்கு?”

“அய்யோ அப்படியெல்லாம் இல்ல. நா போறேன். நேரமாகுது”

“ஒக்காரு ஒழுங்கா”

“முடியாது. புள்ளையத் தூக்கிட்டு நா கெளம்புறேன்”

“நாளைக்கு எத்தன மணிக்குக் கெளம்பணும்…. எங்கப் போகணும் எதுவும் சொல்ல மாட்டேன் பாத்துக்கோ. மரியாதையா ஒக்காரு”

“அறிவிருக்காய்யா ஒனக்கு? சொல்லாம என்ன விட்டுட்டுப் போயி… நீ மட்டும் தனியா என்ன பண்ணப் போற?”

“இதெல்லாம் தெளிவா யோசி என்ன… பதில் சொல்லிடாத”

“தூங்கு போ. காலையில எத்தன மணிக்குக் கெளம்பணும்? இவன் அழவே இல்லையா இன்னைக்கு? என்ன தேடவே இல்லையா? ஒங்கிட்ட வந்ததும் என்ன மறந்துட்டான் இல்ல?”

“ஏன்? ஒங்கிட்ட இருந்தா என்ன? எங்கிட்ட இருந்தா என்ன? தூங்கு. நானே வந்து எழுப்புறேன். வாங்குனதெல்லாம் எடுத்துட்டுப் போகலையா? கவர் எல்லாம் உள்ளயே இருக்கு?”

“ச்ச… கவர் எடுக்கல. சாவி எடுக்கல. நாம்பாட்டுக்குப் போறேன் பாரு. எடுத்துட்டு வந்து குடேன்…”

“போ. எடுத்துட்டு வரேன்”

அவள் வீட்டு கதவைத் திறந்துவிட்டான். ராஜாவை படுக்க வைத்தாள்.

“வரேன்”

“எல்லா கவரும் எடுத்துட்டு வரலையா? இன்னும் நாலு புடவ வாங்குனோமே?”

“அத இங்க எடுத்துட்டு வந்து?”

“எனக்குதா வாங்குனியா இல்ல…”

“நாளையிலேந்து நீ எங்க இருக்கப் போற?”

“ஏன் இங்க… நா இங்கயே… எங்க இருக்கணும்?”

“எங்க?”

“காலையில எழுப்பு”

“எதுக்கு எழுப்ப சொன்னன்னாவது உன் மனசுலப் பதிஞ்சுதா இல்லையா?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒன்ன சாவி எடுத்துட்டு வர சொன்னனே… இதுக்கு முன்னாடி நா இதெல்லாம் பண்ணதில்லையா? இல்ல பண்ண முடியாதா? ஒங்கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கணும்னுத் தோணுச்சு. ஆனா நீ என்ன கேள்விக் கேட்டுட்டே இருந்தியா…

இன்னைக்கு முழுக்க எனக்கு நடந்த கல்யாணம் ஒரு வாட்டிக் கூட நெனப்பு வரல… இப்போ உங்கிட்ட சொல்லுற வரைக்கும்.

எங்கப்பாரு எனக்கு எல்லாம் வாங்கித் தருவாரு… இப்டி ஒவ்வொரு விஷயத்துக்கும் புடிச்சிருக்காப் புடிச்சிருக்கான்னு ஒன்ன மாதிரிக் கேட்டதில்ல.

கொஞ்ச நாள்தான்னாலும் ஒம்பக்கத்துல இருந்து பழகிட்டேன். எதுன்னாலும் ஒங்கிட்டக் கேட்டு செஞ்சாதான் திருப்தியா இருக்கு.

நாளையோட எல்லாம் மாறப் போகுதுன்னு புரியுது. எல்லாம்னா எதெல்லாம்னு எனக்கு யோசிக்கத் தெரில. பயமா இருக்கு. நீ கூடவே இருப்பன்னு நெனச்சாக் கொஞ்சம் தெம்பா இருக்கு. ஆனா எம்புருஷனா… உன்ன அப்படி…”

“இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டு நின்னன்னு வையி… எனக்குக் கிறுக்குப் புடிச்சுடும்”

“நா சொல்லுறத…”

“நல்லா தெளிவா புரிஞ்சுடுச்சு. ஒனக்கு இன்னும் புரியலன்னும் புரிஞ்சுச்சு. தூங்கு”

தூங்க முடியவில்லை. கண் சொருகும்போதெல்லாம் காலை எழாமல் போனால் எனாகுமோ என்ற பயம். விழித்திருக்கவும் முடியவில்லை. நாள் முழுதும் அலைந்த அலுப்பு. எதற்கிந்தத் தவிப்பென்ற ஆராய்ச்சி முடிவுப் பெறும் முன் பொழுது புலர்ந்திருந்தது.

செந்தில் சொன்னதுபோல் அவன் வந்து எழுப்பவில்லை. கண்மணி வந்திருந்தாள்.

“என்னக்கா? மூஞ்சி இப்படியிருக்கு? தூங்குனீங்களா இல்லையா?”

“தூங்குனேன். நீ அதுக்குள்ள வந்துட்ட?”

“அப்பறம் உங்களுக்கு யாரு புடவ கட்டி விடுறது? அலங்காரம் பண்ணுறது? குளிங்கக்கா சீக்கிரம்”

“புதுசா அக்கான்னுக் கூப்பிடுற?”

“இத்தன நாள் எப்படிக் கூப்பிடுறதுன்னு தெரியாமயே பேசிட்டு இருந்தேன். அதான் இப்போ எங்க மாமாவக் கட்டிக்கப் போறீங்கல்ல? அப்போ அக்காதான?”

“குளிச்சுட்டு வரேன்”

கண்மணி புடவை கட்டிவிட்டுக் கொண்டிருந்தபோதே ரத்தினமும் வாசவியும் வந்தனர். கௌரி அவர்கள் எது செய்தாலும் வேண்டாமென்று சொல்ல “இதக்கூடப் பண்ணலன்னா எப்படி?” என்று கேட்டே அவளை சம்மதிக்க வைத்தனர்.

அவள் தயாராகி செந்தில் வீட்டிற்கு வந்தபோது வீடு முழுவதும் ஆட்கள். உள்ளே நுழையத் தயங்கியவளை கை பிடித்து அழைத்து வந்தாள் கண்மணி.

செந்தில் ஹாலில் இல்லை. அறைக்குள் இருப்பானாயிருக்கும். வெளியே சென்றிருக்கிறானா? இதுவரை எப்போதும் மனம் அவனை இவ்வளவு தேடியதில்லை. என்ன செய்வதென்றக் குழப்பம். சேகரும் பரசுராமனும் மட்டுமே தெரிந்த முகங்கள். நிமிர்ந்துப் பார்க்க கூடத் தோன்றவில்லை. நேற்றிரவு வரை செந்திலையும் அவனைச் சுற்றியிருந்த நான்கு பேரை மட்டும் பார்த்துப் பழகியவளுக்கு இப்போது மூச்சு முட்டியது.

“இங்க வந்து உக்காருங்க”

கண்மணியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவள் அருகிலேயே உட்கார்ந்தாள்.

“பேரென்ன?”

“கௌரி”

“அவங்க எங்கம்மா”

கண்மணி சொன்னப்  பிறகுதான் நிமிர்ந்துப் பார்த்தாள். பரசுராமன் அருகில் உட்கார்ந்திருந்த பெண் அவள் போட்டிருந்த நகைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு மேல் அவர் எதுவும் பேசாததால் மீண்டும் தலை குனிந்தாள்.

“இவக எப்போ வந்தாக?”

“வீட்டுலேந்து நாங்க நாலு பேரும் ஒண்ணாதான் வந்தோம். அம்மா உங்கள வந்து பாக்காம இங்கயே… அவங்க அப்படிதான் கா”

“அவக எங்க?”

“மாமாவா? ரூமுள்ள பாஸ்கரோட இருக்காங்க. எங்கப்பாவோட ஒண்ணுவிட்ட தம்பி குடும்பமும் அண்ணன் குடும்பமும் வந்திருக்காங்க. அவங்க யாரோடையாவது பேசிட்டு இருப்பாங்களா இருக்கும்”

“இப்போ கெளம்புனா சரியா இருக்கும்”

“கெளம்புவோம் சேகர். எல்லாரும் எந்திரிச்சு அப்படியே ஒவ்வொருத்தராப் போய் வண்டில ஏறுங்க”

பரசுராமன் சொன்னதும் கூட்டம் மொத்தமும் எழ கௌரியும் எழுந்தாள். கண்மணியுடனும் அவள் தாய் கஸ்தூரியுடனும் நடக்கும்படியானது. கதவருகில் வந்ததும் கஸ்தூரி நின்றுத் திரும்பி அவளைப் பார்த்தார். கௌரி தாமாக ஓரடிப் பின்னால் எடுத்து வைத்தாள்.

“கூடக் கூட வர?”

தன் கையை யாரோ பிடிக்க அதை கெட்டியாகப் பிடித்துத் திரும்பிப் பார்த்தாள். செந்தில் பிடித்திருந்தான்.  கண்கள் கலங்கின.

“நீ என்ன இப்போவே அவ கையப் புடிச்சுக்கிட்ட? பாக்குறவங்க என்ன நெனப்பாங்க?”

“சரி நா கைய விட்டுடுறேன். அவ அம்மா ஸ்தானத்துல இருந்து நீங்க புடிச்சுட்டு வாங்க”

சொன்னதோடு நில்லாமல் அவர் கையை இழுத்துப் பிடித்து அதில் கௌரியின் கையைத் திணித்து நகர்ந்துவிட்டான்.

அம்மா என்றதும் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கொட்டிவிடத் தாமாக அவர் கையை இறுக்கப் பிடித்தாள்.

கஸ்தூரி திகைத்துப் போனார். செந்தில் அவரிடம் அதிகம் பேசியதில்லை. ஒதுங்கியே இருப்பான். முன்னால் சென்றவர்கள் நின்றுத் திரும்பி அவர்களைப் பார்க்க கண்மணி கண்களால் கெஞ்ச கையை விளக்கிக் கொள்ளாமல் நடந்தார். கௌரிதான் அவர் கை பிடித்திருந்தாள்.

வாசலில் வேன் ஒன்று நின்றிருந்தது. கண்மணி அவளை தன்னுடன் உட்கார வைத்தாள். இதெல்லாம் சீக்கிரம் முடியவேண்டுமென்ற வேண்டுதலுடன் கௌரி வேடிக்கை பார்த்தாள்.

“ஐயோ ராஜா…”

“ஏன் கா பதறுறீங்க? அண்ணன் தூக்கி வெச்சிருக்கு”

“குளிக்கக் கூட வெக்கலையே…”

“சரியாப் போச்சுப் போங்க… கனவுல மெதந்துட்டே இருக்கீங்களா?”

“ம்ம்… கவனிக்கல…”

“எதையும் யோசிக்காதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். இன்னைக்கு எங்க மாமா ஒரு முடிவுலதான் இருக்கு. முதல் தடவையா எங்கம்மாவுக்கு பதில் சொல்லியிருக்கு. எங்கம்மா கொஞ்சம் ஆடிதான் போயிட்டாங்க…”

“அப்படியெல்லாம் சொல்லாத கண்மணி. எனக்கு பயமா இருக்கு”

“சரி சரி நா எதுவும் சொல்லல”

கோவிலில் இறங்கியது, ஏதோவொரு ஹோட்டலில் எல்லோரும் போய் சாப்பிட்டது, கோவிலினுள் சென்றது எல்லாம் எப்படி சொல்லப்பட்டதோ அப்படியே செய்தாள். கண்மணி அவள் கையில் மாலையைக் கொடுத்தபோதுதான் நடப்புப் புரிந்தது. நிமிர்ந்து செந்திலை பார்ப்பதற்குள் எதிரில் நின்றிருந்தவன் அவள் கழுத்தில் மாலை அணிவித்திருந்தான்.

“போடும்மா… என்ன பாத்துக்கிட்டே நிக்குற?”

ரத்தினம் அவள் காதில் சொல்ல அவன் கழுத்தில் மாலையை போட்டாள்.

“நெக்லஸ் அழகாயிருக்கு”

அதைச் சொன்னவரை எங்கோ பார்த்த நியாபகம். கொஞ்சம் யோசித்ததும் நினைவு வந்தது. பக்கத்து வீட்டு பெண். நிஜமாகத்தான் சொன்னானா அக்கம் பக்கம் சொல்ல வேண்டுமென்று… லேசாக தலையசைத்தாள்.

ஐயர் சொன்ன மந்திரங்கள் அவள் காதில் விழவில்லை. பெயர், நட்சத்திரம், குலம், கோத்திரம் கேட்டார். எல்லோரும் கௌரியை பார்த்தனர்.

“பேரு, ராசி, நட்சத்திரம் மட்டும் கேட்டுக்கோங்க போதும்”

யாரும் பேசும் முன் வந்தது செந்திலின் பதில். அவனுடைய பெயர், ராசி, நட்சத்திரம் சொன்னான். கௌரியும் சொன்னாள்.

“என்ன ஜாதியோ… ஒண்ணுத்தையும் விசாரிக்காம…”

“கஸ்தூரி இப்படி முனங்குறத நிறுத்துன்னு சொல்லிதான் கூட்டிட்டு வந்தேன். சும்மா கோவில்ல நின்னு என்கிட்ட வாங்கிக் கட்டிக்காத”

“வர வர என்ன சும்மா என்னைய திட்டுறீங்க? ஜாதி கூடத் தெரிஞ்சுக்காம உங்க அக்கா மவன்…”

“ஒருத்தரோட ஜாதியத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறோம்? தெரிஞ்சுக்காம விட்டா என்ன கொறஞ்சு போகப் போறோம்? இதுக்கப்பறம் எதுக்குத் தெரிஞ்சுக்கணும்? இன்னும் ஒரு வார்த்த நீ பேசுன… புடி அட்சதைய. வாழ்த்தி போடு. பொருமிக்கிட்டே போடாத”

“நீங்களாப்பா இப்படியெல்லாம் பேசுறீங்க?”

“சத்தமா சொல்லாத கண்மணி. இவள அடக்கணும்னா நா கொஞ்சம் கொரலேத்தி பேசுனாதான் ஆச்சு. அவன் ஆசைப்பட்டுக் கேக்குறான். சந்தோஷமா இருந்துட்டுப் போறான்னு விடுவாளா… நீ போய் கௌரி பக்கத்துல நில்லு”

நேற்று வாங்கிய தாலி. தொட்டுகூடப் பார்க்கவில்லை. இன்று கழுத்தில் தொங்கியது. தாலி கட்டிய பிறகு செந்தில் அவள் கையை விடவில்லை.

வேனில் அவனருகில் உட்கார சொன்னாள் கண்மணி. வீட்டுக்கு வந்ததும் சேகரும் பாஸ்கரும் நேற்று சொல்லி வைத்திருந்த இடத்திலிருந்து சாப்பாடு வாங்கி வந்தனர். சாப்பிட்டக் கொஞ்ச நேரத்தில் மற்ற உறவினர்கள் கிளம்பிவிட பரசுராமன் குடும்பத்தினரையும் சேகர் குடும்பத்தினரையும் கூடக் கிளம்பச் சொன்னான். வீடு காலியான பிறகுதான் கௌரிக்கு மூச்சு வந்தது.

“சாயந்தரமா சைட் போர்ஷன்ல இருக்க எல்லாத்தையும் நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடலாம்”

‘அது என் வீடு இல்லையா? சைட் போர்ஷனா? இது நம்ம வீடுன்னு சொல்லுறாக? ஆமா… இனியாவது எல்லாத்தையும் கவனிக்கணும். மண்ணு மாதிரி ஆயிட்டேன் ச்ச’

“என்ன யோசிக்குற?”

“இன்னைக்கே எடுத்துட்டு வரணுமா?”

“நாளைக்கு வேலைக்குப் போகணும். அப்பறம் நேரம் கெடைக்காது. அதோட அந்த வீட்டு சாவிய நாளைக்குக் கொண்டு வந்து தரேன்னு மாமாகிட்ட சொல்லிட்டேன். அட்வான்ஸ் திருப்பி வாங்குனாதான் இந்த மாசம் காருக்கு ட்யூ கட்ட முடியும்”

“நானும் கட…”

“நாளன்னைக்கு ஆரம்பி. நாளைக்கு சனிக்கிழம. அதனால வேண்டாம்னு சேகரண்ணன் சொன்னாரு”

“இம்புட்டுப் பேரு வந்திருந்தாக… எனக்கு யாருமே இல்லன்னு சொன்ன?”

“இப்போ இருக்காங்களேன்னு வருத்தப்படுறியா?”

“என்ன இப்படிக் கேக்குற? பக்கத்து வீட்டம்மாவெல்லாம் கூப்பிட்டிருக்க”

“வந்த சொந்தக்காரவங்கள்ல சிலர எனக்கு அடையாளம் கூடத் தெரியல. மத்தவங்கள நா பாத்தே பல வருஷம் ஆகுது. எங்க மாமாவையே ஒதுக்கி வெச்சிருந்தேன்… அப்பறம் இத்தனப் பேத்த நா கூப்பிட்டேனா? எல்லாம் மாமா பண்ண வேல. நேத்து அவரும் சேகரண்ணனும் சுத்தி இருக்க வீட்டுலல்லாம் போய் அழைச்சிருக்காங்க. அந்தம்மாவதான் பாத்தியா? அவங்க வீட்டுக்காரர்கூட வந்திருந்தாரு”

“நா அவரப் பாத்ததில்ல…”

“ஒரு போட்டோவுல கூட நீ சிரிக்கலையாம்… பாஸ்கர் சொன்னான்”

“போட்டோவா?”

“நேத்து நானும் பாஸ்கரும் வரதுக்கு ஏன் அவ்வளோ லேட் ஆச்சுன்னு நெனச்ச? அம்மா தாயே… கல்யாணம் முடிஞ்சுப் போச்சு. இனிமேயாவது…”

“திடீருன்னு அத்தனப் பேரப் பாத்ததும் ஏதோ தனியாயிட்ட மாதிரி இருந்துது. அதான் எதையும் கவனிக்கல”

“ஏன்? அதான் நா இருக்கேன்ல?”

“நீ இல்லாத எங்கப் போயிடப் போற? கொஞ்ச நேரமாவது தூங்கனும். ராத்திரி தூக்கமே வரல”

“தூங்கலாம். சாயந்தரமா சாமானெல்லாம் எடுத்துட்டு வந்துடுவோம்”

“சரி நா என் வீட்டுக்குப் போயி… இல்ல உள்ளப் போயி புடவைய மாத்திக் கட்டிக்கிட்டுப் படுக்குறேன். நீயும் வந்து படு”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!