பிடி காடு – 26

காலை செந்தில் வேலைக்குக் கிளம்பிச் சென்றான். கௌரிக்கு அடுத்து என்ன செய்வதென்ற யோசனை. அவன் வர இரவாகும். பழகிய இடம். இன்று புதிதாகத் தெரிந்தது. அரை மணி நேரத்தில் மனம் சோர்ந்துவிட்டது. மொபைல் அடிக்க எடுத்துப் பார்த்தாள்.

“என்னய்யா எதுனா மறந்து விட்டுட்டுப் போயிட்டியா? இப்போதாப் போன… அதுக்குள்ள கூப்பிடுற?”

“வெட்டியா ஒக்காந்திருக்கேன். நீ என்ன பண்ணுற?”

“பண்ணுறதுக்கு என்ன இருக்கு? நானும் வெட்டியாதா ஒக்காந்திருக்கேன். என்னமோ இத்தன நாள் இல்லாம இன்னைக்கு ரொம்ப சலிப்பா இருக்கு. எதாவது வேலப் பாத்தாதா சரி வரும். என்ன செய்யட்டும்?”

“நாளைக்குக் கடத் தொறக்கணும்னா அதுக்கு எல்லாம் ரெடி பண்ணணும்ல?”

“அதெல்லாம் மத்தியானத்துக்கு மேலப் பாத்துக்கலாம். இப்போவே என்ன?”

“நாளைக்குப் போய் பிரிட்ஜு பாத்து எடுத்துட்டு வந்துடலாம்”

“ம்ம்… நாலு நாளைக்கு ஒரு வாட்டி இதையேதான் சொல்லுற… என்னைக்கு வாங்கித் தரன்னு நானும் பாக்குறேன்”

“ஏன் பேச மாட்ட? ஒன்னக் கூட்டிட்டு வந்ததுலேந்து செலவு மேல செலவு. ஒரு வேலைய செஞ்சு முடிச்சு ஓஞ்சு ஒக்காரதுக்குள்ள இன்னொன்னு… நானும் வாங்கிக் குடுத்துடணும்னு தான் பாக்குறேன். எங்க?”

“இதுக்குதா அன்னைக்கே என்ன விட்டுரு நா போறேன்னு சொன்னேன்”

“சரி இப்பக் கெளம்பு. வெச்சுடவா?”

“என்ன பாத்தா எப்டித் தெரியுது? நீயா தலையில எத்தி வெச்சுக்கிட்டது. இனி நீயே நெனச்சாலும் எறக்கி வெக்க முடியாது”

“போக சொல்ல மாட்டேன்றத் திமுருலப் பேசுறியா?”

“எனக்குன்னு யாருமில்ல… எனக்கு ஒண்ணுன்னாக் கேள்விக் கேக்க ஆள் இல்ல… இப்டி நெறைய நெனச்சு எத்தினி நாள் அழுதுருக்கேன் தெரியுமா? இனி அழுவல்லாம் மாட்டேன். என்ன ஆனாலும் நீ இருக்கன்றத் திமிரு. அப்டிதா பேசுவேன். என்னன்ற இப்போ?”

“ஒன்னப் போயி பாவம்னு நெனச்சு எங்கூட வரியான்னுக் கேட்டேன் பாரு…”

“அன்னைக்கு என் நெலம அப்டி இருந்துது. அதுக்காக வாழ்க்கப் பூரா அப்டியேவா இருக்க முடியும்? சரி இப்ப நா என்ன பண்ணட்டும்? அத சொல்லு மொதல்ல”

“ரொம்ப நாளாக் கேட்டல்ல… வீடு மொத்தமும் சுத்தம் பண்ணுறேன்னு… இன்னைக்குப் பண்ணு. முடிஞ்ச வரைக்கும் பண்ணு. மீதிய நா வந்தப்பறம் பாத்துக்கலாம்”

“நெஜமாவா? உன் ரூம் கூடவா?”

“அந்த வீட்டுல இப்போ எங்க இருக்கு என் ரூம்?”

“உன்னோடதுன்னு சொல்லிக்குற மாதிரி எதுவுமே இல்லாமப் பண்ணிட்டேனா?”

“அதுல என்ன ஒனக்கு இவ்வளோ சந்தோஷம்? எதுக்கு இப்படி சிரிக்குற நீ?”

“தெரில… உம்மூஞ்சி இப்ப எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாத்தேன். எல்லாத்தையும் ஏதோ நா ஒங்கிட்டேந்து புடுங்கிக்கிட்ட மாதிரிப் பேசாதய்யா. நீயாதானக் குடுத்த?”

“என்னோடதுன்னு சொல்லிக்குறத பெருமையா நெனச்சேன். நா சம்பாதிக்குறேன், நா எனக்காக வாங்கிக்குறேன்னு சொல்லும்போதே எப்படி இருக்கும் தெரியுமா? ஆனா இப்போ நம்மளோடதுன்னு சொல்லும்போது சந்தோஷப்படுறேன். கல்யாணத்துக்கு அப்பறம் இப்படிதா மாறிடுவாங்க போல”

“ஆமாமா… நீ இப்படியே வெட்டியா ஒக்காந்துப் பேசி என் நேரத்த வீணடிக்காத. எனக்கு தலைக்கு மேல வேலக் கெடக்கு. வீடு சுத்தம் பண்ணணும்”

“இன்னைக்கு ஏதோ உன் நேரம் நல்லாருக்கு… பொழச்சுப் போ. வெக்குறேன்”

“என்ன செந்தில் இங்க இருக்க?”

சேகர் அவன் கார் பக்கத்தில் அவருடைய ஆட்டோவை நிறுத்தி இறங்கினார்.

“ஒரு ட்ரிப் எடுத்தேன். அடுத்து எதுவும் வரல. அதான் இங்கயே வண்டிய போட்டு உக்காந்துட்டேன்”

“கௌரி வீட்டு சாவிய திருப்பிக் குடுத்துட்டியாம்… சாமான் வாங்கப் போனப்போ பாஸ்கர் சொன்னான்”

“ஆமா. இனி அந்த வீடு எதுக்கு? இந்த மாசம் வண்டிக்கு ட்யூ கட்டணும்”

“கைல வெச்சிருந்தாக் குடு. நா அந்தப் பக்கம் தான் போறேன்”

கார் டேஷ்போர்டில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினான்.

“இனிமே லாங் ட்ரிப் கூடப் போலாம்னு யோசிக்குறேண்ணே”

“ஏம்பா?”

“அடுத்தவன் கைய நம்பி நிக்கக் கூடாதுன்னா என் கையிலக் கொஞ்சமாவது காசு சேத்து வெச்சாகணும். பெட்ரோல் விலை வேற ஏறிப் போச்சு. தூரமாப் போய் சவாரி ஏத்தணும்னா யோசிக்க வேண்டியிருக்கு. வேற வழியில்ல”

“என்ன பண்ண முடியும்னுப் பாக்குறேன் செந்தில். உங்கள விருந்துக்கு வீட்டுக்குக் கூப்பிடணும்னு எங்க வீட்டம்மா ஒரே நச்சரிப்பு. இந்த வாரத்துல ஒரு நாள் சொல்லுப்பா. கெளம்புறேன் நேரமாச்சு”

செந்தில் மொபைலை பார்த்தான். பக்கத்தில் காட்டிய அடுத்த ட்ரிப்பை எடுக்க முடிவு செய்தான்.

கௌரி கையிலிருந்த போட்டோவை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். செந்திலின் பெற்றோராய் இருக்க வேண்டும். உடன் இருக்கும் சிறுவன் அவன்தான் என்று முக ஜாடை சொல்லிற்று. அவன் தாய் தந்தை மட்டும் இருந்த இன்னொரு படம் கூட இருந்தது.

‘வீட்டுல எங்கயும் பெத்தவக போட்டோவ வெக்கவேயில்ல. இத ஏன் இப்படி உள்ள எடுத்து வெச்சிருக்காகளோ? கொஞ்சம் பெருசுப் பண்ணி ப்ரேம் போட சொல்லணும். இத எங்கயாவது வெக்கணுமே… எங்க?’

அறையை விட்டு வெளியே வந்தவள் சாமி படங்களுக்குப் பக்கத்தில் கையிலிருந்த போட்டோவை வைத்தாள். இருட்டத் துவங்கியிருந்தது. விளக்கேற்ற வேண்டும். முதலில் குளிக்க வேண்டும். ராஜாவை தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் போனாள்.

செந்தில் கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான். மூன்றாவது முறைத் தட்டியபோது கௌரி அவசரமாகத் திறந்தாள்.

“ரொம்ப நேரமா நிக்குறியா? குளிக்கப் போயிட்டேன்”

“இப்பதா வந்தேன். இந்நேரத்துல எதுக்குக் குளிக்குற?”

“காலையிலேந்து வேல சரியா இருந்துது. அடுப்புல நின்னது வேற… வெளக்கேத்தணும். நீயும் முகம் கழுவிட்டு வரியா?”

“சேந்து சாமிக்கு ஐஸ் வெப்போம்னு சொல்லுறியா?”

“ஆமா அப்டிதா வெச்சுக்கோ. சீக்கிரம் போ”

செந்தில் உடை மாற்றினான். முகம் கழுவி துண்டால் துடைத்தபடி கௌரியின் அருகில் வந்து நின்றான்.

“இந்த போட்டோ எங்கேந்து எடுத்த?”

“ஏன் உள்ளத் தூக்கி வெச்சிருந்த?”

“அத பாக்கும்போதெல்லாம் எனக்கு யாருமில்லன்னுத் தோணும்”

“அப்ப… உள்ளயே வெச்சுடவா?”

“இருக்கட்டும். இனிமே அப்படித் தோணாது”

“பெருசா சொவத்துல மாட்டி வெக்கலாமா?”

“இப்போதைக்கு இதுவே போதும்”

கௌரி விளக்கேற்றி கைக் கூப்பி கண் மூடி நின்றாள். மகனைத் தூக்கிக் கொண்டான். அவளை போலவே செய்தான் ராஜா.

விபூதி எடுத்துத் தன் நெற்றியில் வைத்து மகனுக்கும் அவனுக்கும் வைத்துவிட்டாள். குங்குமம் எடுத்து மகனுக்கு வைத்தாள். செந்தில் தலையைப் பின்னுக்கு இழுக்க அவனுக்கு வைத்துவிடாமல் அவள் நெற்றி வகிட்டில் வைத்துக் கொண்டாள்.

“வெளியப் போவோம். கெளம்பு”

“இப்பயா?”

“நேத்தே போகணும்னு நெனச்சேன். நேரங்கெடைக்கல”

செந்தில் போன சாலையில் முன்பொரு முறைப் பயணித்த ஞாபகம்.

“இது… அன்னைக்குக் கூட்டிட்டுப் போனியே… கார் பூஜப் போட்டதும் மொதப் போனோமே…”

“ம்ம்…”

“ஒரு டீக்கட இருந்துதே…”

“ம்ம்… பழனியோட கட”

“அவர கல்யாணத்துக்குக் கூப்பிடலையா?”

“ரொம்ப சூப்பர். எனக்கிருக்க ஒரே நண்பன் இவன் தான். கூப்பிடலன்னாக் கொன்னுடுவான். காலைலயே வீட்டுக்கு வந்துட்டான். மத்தியானம் சாப்பிட்டுதான் போனான். நீ எததான் கவனிச்சியோ? கழுத்துல தாலிக் கட்டுனது யாருன்னு பாத்தியா? இல்லத் தெரியாம எம்பின்னாடி சுத்திட்டு இருக்கியா?”

“ரொம்பத்தான்… எல்லாம் பாத்தேன்”

காரை பழனியின் கடையைத் தாண்டிக் கொஞ்ச தூரம் சென்று நிறுத்தி இறங்கினான்.

“ஏன் இங்க நிறுத்திருக்க?”

“வா. ராஜாவ நா வெச்சுக்குறேன். பாத்து வா”

ரோட்டின் பக்கத்தில் சரிவாய் இருந்த மண் பாதையில் அவள் கைப் பிடித்து இறங்கினான். சிறிது தூரம் போனதும் நின்று ஓரிடத்தை வெறித்தான்.

“ஒன்ன பெத்தவக…”

“இங்கதான் கார் இருந்துது. ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு அடுத்த நாள் வந்து பாத்தேன். அப்பப்போ வருவேன்”

சில நிமிடங்களுக்குப் பிறகு செந்தில் திரும்பி நடந்தான்.

பழனி இன்றும் செந்திலிடம் கேட்டான். “வாழ்க்கைல எது நடந்தாலும் இங்கதான வர?”

திரும்பி வரும்போது அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன எம்மூஞ்சியவே பாத்துட்டு வர?”

“நா ஒண்ணுக் கேட்டா… தப்பா நெனச்சுக்காத… என்ன யாருன்னே தெரியாது. வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த. சொந்த கால்ல நிக்கணும்னுத் தொழில் வெச்சுக் குடுத்த. இப்ப கட்டிக்கிட்டியே… ஆனாலும் நாளைக்குக் கடையத் திரும்பத் தொறக்க சொல்லுற. ஏன்?”

“வீட்டுல உக்காந்து என்ன பண்ணப் போற? இன்னைக்கு ஒரு நாள் சும்மா இருந்ததுக்கே ஏதாவது வேல சொல்லுன்னு கேக்குற…

நானாவது கார்ல உக்காந்திருக்க நாலுப் பேர மட்டும் சமாளிச்சாப் போதும். நீ… அசால்டா ரோட்டுல நின்னு எத்தனப் பேர சமாளிக்குற? ஒன்னப் பாத்து நா நெறையக் கத்துக்கிட்டேன் தெரியுமா?

கடப் போடுன்னு சொல்லிட்டனே தவிர நீ எப்படி சமாளிப்பியோன்னுக் கொஞ்சம் பயம் இருந்துது. இப்ப இல்ல. ஒனக்கு இஷ்டம் இல்லையா?”

“மொதல்ல நீ சொன்ன மாதிரி பயமா இருந்துது. இப்ப இது புடிச்சிருக்கு. என்னால என்ன வேணா செய்ய முடியும்னு ஒரு நெனப்பு. பிரச்சன வந்தா நீ பாத்துக்க மாட்டியா என்ன?”

“அது சரி… சேகரண்ணன் அவரு வீட்டுக்குக் கூப்பிட்டாரு. விருந்துக்கு. மாமாவும் கூப்பிட்டாங்க. அடுத்த வாரம் போணும்”

“உங்க அத்தை…”

“மாற மாட்டாங்க. வீட்டுக்குப் போனாக் குத்திப் பேசதா செய்வாங்க. இத்தன வயசுக்கப்பறம் அவங்களத் திருத்துறதெல்லாம் நமக்குத் தேவையில்லாத வேல. எனக்குப் பழகிடுச்சு. எப்பயோ கொஞ்ச நேரம் பாக்கப் போற. எனக்காகக் கொஞ்சம் பொறுத்துப் போ”

“அதுக்கென்னயா? என்ன வேணாப் பேசிட்டுப் போகட்டும். வீட்டுக்குக் கூப்பிட்டாகன்னு சொன்னியே… உன் அத்தைக்குத் தெரியுமான்னுக் கேக்கதான்…”

“எல்லாம் தெரியும்… நா ஒண்ணு சொன்னாக் கேப்பியா?”

“என்ன?”

“உன் அப்பத்தாவப் போய்ப் பாப்போம். நம்மளோடவே கூட்டியாந்துடலாம்”

“ஊருக்கா? கடனெல்லாம்…”

“பாத்துக்கலாம்”

“பாத்துக்கலாம்னா எப்படிய்யா?”

“எப்பதா போய்ப் பாப்ப? அடுத்தப் புள்ள பொறந்ததுக்கப்பறமா?”

“ம்ம்கும்… அப்படிப் பாத்தாலும் இன்னும் பத்து மாசத்துலப் போய்தான ஆகணும்?”

“அப்படியா?”

“நீ நேராப் பாத்து ஓட்டு… அப்படியே ஒண்ணுந்தெரியாத மாதிரிதா கேப்ப…”

“பேச்ச மாத்தாத. இந்த மாசக் கடைசிலப் போறோம்”

வீட்டுக்கு வந்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டும் வட்டிக்காரர்களின் நினைவு அச்சுறுத்தியது. செந்திலிடம் என்ன சமாதானம் சொல்வது?

“அனாதையா சாவட்டும்னு விட சொல்லுறியா?” அவன் ஒரு நாள் கேட்டக் கேள்வி. அதன் பிறகு வேறு எந்த யோசனையுமில்லை. போய் பார்த்தேயாக வேண்டுமென்று முடிவு செய்தாள்.

அடுத்த நாள் காலை ஊருக்குக் கிளம்ப வேண்டும். துணிகளை பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் எதாவது எடுத்து வெக்கணுமா?”

“அவ்வளோதான். சீக்கிரம் தூங்கு. விடியக்காலைல எந்திரிக்கணும்”

“ஊருக்கு கார்ல போறோமா?”

“அம்மா தாயே… நா சொந்தமா கார் வெச்சிருக்குற டிரைவர். அதுக்குக் கூட ட்யூ கட்டுது. நீ டிரைவர் பெண்டாட்டி. கார்லயே சுத்தணும்னெல்லாம் எதிர்ப்பாக்காத. பஸ்ல தான் போறோம்”

“இப்ப நா என்ன கேட்டேன்? கார்ல போயே ஆகணும்னு சொன்ன மாதிரிப் பேசுற?”

“நீயெல்லாம் சொன்னாலும் சொல்லுவ”

“சொன்னா அப்பத் தெரியும். காலைல நீதா எழுப்பணும்”

“வர வர சவுண்டு ஓவராகுது… நல்லதுக்கில்ல…”

“என்னய்யா… எழுப்ப மாட்டியா?”

“ஒடனே நல்லவ மாதிரி எப்டிடி இப்டி பம்முற?”

“எல்லாம் ஒனக்கு பயந்துதான்”

“ரொம்ப பயந்தவதா நீ. எழுப்புறேன். அலாரம் வெச்சுட்டேன்”

அவன் எழுப்ப அவசியமிருக்கவில்லை. ஏதேதோ நினைவுகள். சிறு வயது முதல் ஊரை விட்டு வந்த அன்று நடந்தது வரை எல்லாம் நினைத்துப் பார்த்தாள். விழித்தே இருந்தாள்.

அதிகாலை பேருந்து பயணத்தை செந்தில் ரசித்தான். ராஜாவுடன் விளையாடியபடி உட்கார்ந்திருந்தான். கௌரி எதையும் கவனிக்கவில்லை. அவன் தோளில் சாய்ந்து கண் மூடியிருந்தாள். அப்பத்தாவை உடனே பார்க்க வேண்டுமென்ற ஆவல். எத்தனை கஷ்டங்களைத் தனியே சமாளித்தாரோ என்ற தவிப்பு.

வீட்டருகேப் போகப் போக செந்திலின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். ராஜாவைத் தூக்கியிருந்தவன் அவளிடம் வழிகேட்டு நடந்து கொண்டிருந்தான்.

வீடு என்று சொல்ல முடியாது. கூரை வேய்ந்து மண் பூசி நின்றிருந்த சுவற்றில் பழைய மரக் கதவு இன்னும் கொஞ்ச நாளில் உளுத்து விழுந்துவிடும் நிலையில் இருந்தது.

அதற்குள்ளே வீட்டைச் சுற்றிக் கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டது. கதவில் கை வைக்கும் நொடிவரை உள்ளே அப்பத்தா இருக்க வேண்டுமென்ற வேண்டுதல். பையைக் கீழே வைத்துவிட்டு கதவைத் திறந்தாள்.

சதை சுருங்கி உடல் முழுதும் சுருக்கம் விழுந்து கூன் முதுகுடன் உட்கார்ந்து அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தார் ஒரு மூதாட்டி.

“அப்பத்தா…”

கையை நெற்றியில் வைத்து கண் இடுக்கிப் பார்த்தவர் அரிசி இருந்த தட்டைக் கீழே வைத்துவிட்டு சுவரைப் பிடித்து எழுந்தார். கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்த கௌரியின் தோளைச் சுற்றி கைப் போட்டு அழுத்திப் பிடித்துக் கொண்டான் செந்தில்.

“இவங்கள இத்தன நாள் இங்க தனியா விட ஒனக்கு எப்டி மனசு வந்துது? பாக்கவே பாவமா இருக்கு கௌரி”

“நீ சொல்லிருகலன்னா இப்ப கூட வந்து பாத்திருக்க மாட்டேன். என்ன பத்தி மட்டும் யோசிச்சுட்டேன்ல? ஊர விட்டு வந்தன்னைக்கு அப்பத்தாவையும் கூட்டி வந்திருக்கணும்ல? நா…”

“ஏன் அழுவுற?”

“தப்புப் பண்ணிட்டேன்யா…”

“இப்பயும் பாரு… அப்பத்தான்னுக் கூப்பிட்டியே தவிர நடக்க முடியாம அவங்க தா நடந்து வராங்க. நீ இன்னும் என்னைய விட்டு நகர மாட்டேங்குற”

“நீ… நீ புடிச்சு வெச்சிருக்க…”

“எங்க? நான்லாம் புடிச்சு வெக்கல”

“விடு என்ன… நா போறேன்”

“சேந்தே போவோம் வா. ஒன் அப்பத்தா அநியாயத்துக்கு ஸ்லோ மோஷன்ல நடக்குறாங்க”

“அதால முடில… இப்பயும் திக்கு திக்குன்னு அடிச்சுக்குது… எப்ப எவன் வந்து வீட்டு வாசல்ல நின்னு கத்தப் போறானோ…”

“எல்லாம் பாத்துக்கலாம். நா பேசிக்குறேன்”

“கௌரி… நல்லாருக்கியா தாயி… புள்ள என்னம்மா வளந்துடுச்சு… ஒன்ன ஒரு வாட்டியாவது பாத்துப்புடணும்னு உசுர கையிலப் புடிச்சுக்கிட்டு ஒக்காந்திருக்கேன் ராசு… வாய்யா… இதாரு?”

“ஆசீர்வாதம் பண்ணுங்க”

செந்தில் ராஜாவை அவர் கையில் கொடுத்து கௌரியின் கை பிடித்து இழுத்து காலில் விழுந்தான்.

“எவங்கண்ணுலயும் படாம ஒன்ன ஊர வுட்டுத் தப்பிச்சுப் போக வெச்சா… ஏதோ ஓடிப் போயி கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்த மாதிரி காலுல வுழுற?”

“இது பாவமா? பேச்சப் பாத்தியா?”

“உண்மையதான சொல்லுறாங்க. எந்திரி”

செந்திலின் முகம் நோக்கி அவர் கையைக் கொண்டு வர குனிந்தான்.

“எங்காலத்துக்குப் பொறவு இதப் பாத்துக்க ஆளில்லாமப் போவும்னு நெனச்சு வேண்டாத சாமியில்ல…”

“அவ தான் என்ன பாத்துக்குறா”

“சீனி கொண்டாறேன் செத்த இருங்க…”

இடுப்பில் இருந்த ராஜா அவர் முகத்தைத் வருடி கொண்டிருந்தான்.

“இப்ப சொல்லு… இன்னும் ஒரு வருஷம் கழிச்சு என்ன பண்ணப் போற?”

“எப்பாடுப்பட்டாவது கடனையெல்லாம் அடச்சுப்புடணும்யா”

“அப்போ பத்து வருஷம் கழிச்சு?”

“கடைசி வரைக்கும் ஒங்கூட இருப்பேன்யா. வேற வழியில்லாம இல்ல. நீ எனக்கு ஒதவிப் பண்ணேன்றதுக்காக இல்ல. ஒன்னப் புடிச்சுப் போச்சு. ஒங்கூடவே இருக்கணும்னுத் தோணுது”

அவள் சொல்லிக் கேட்க ஆசைப்பட்டது. கேட்டாயிற்று. செந்தில் அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

அவன் வருஷக்கணக்கைப் பேசுகிறான். அடுத்த பத்து நிமிடங்களில் அவள் வாழ்வில் என்ன நடக்குமென்று தெரியாது. ஆனால் அவன் இருப்பான். இப்போது நிற்பது போல் அவள் கை பிடித்தபடி. அவளுக்காக.

முற்றும்

 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!