கௌரி கை காட்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்தான் செந்தில். கை காட்ட அவள் தயங்கினாள். கடன். தெருவில் நின்ற அவளுக்கு உதவி செய்பவனிடம் எவ்வளவு கேட்பதென்ற அளவுகோல் பிடிபடவில்லை. வாங்கித் தர செந்திலும் தயங்கினான். திருப்பித் தருவாளாத் தெரியாது. தந்தாலும் எப்போதென்று தெரியாது. அதற்குள் ஏதேனும் முக்கியச் செலவு வந்தால் எப்படி சமாளிப்பது?
“எங்க இருந்தா என்ன? ஒனக்கு செய்யாமையா? ஆமா இந்த போன் நம்பர் என்ன சொன்ன? ஒன் நம்பரையும் மனப்பாடம் பண்ணணும்”
“அதெல்லா எழுதித் தரேன். ஆமா ஒனக்கு உங்கூர்ல ஒரு அடையாள அட்ட கூட இல்லையா? அதெப்படி? சிம் வாங்க ப்ரூப் கேட்டா முழிக்குற? இப்டி எல்லாத்தையும் எம்பேருல எடுக்க முடியாது. ஒழுங்கா வீட்டுக்குப் போனதும் பையிலத் தேடு. ஒரு அடையாள அட்டக் கூடவா இல்ல?”
“அது… நா… தேடிப் பாக்குறேன்”
ஏதோ கேட்க வந்தவன் அவனது கைபேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தான். சேகர் அழைத்திருந்தார்.
“சொல்லுங்கண்ணே”
“நல்ல நாள் பாக்க சொல்லியிருந்தல்ல… நாளன்னைக்கு நாள் நல்லா இருக்கு. அத வுட்டா அடுத்த வாரம் புதன் கிழம நல்லாருக்கு. அப்பறம்…”
“இல்லண்ணே. நாளன்னைக்கே வெச்சுக்கலாம். தள்ளிப் போட்டு ஆவப் போறது எதுவுமில்ல. நீங்க கட்டாயம் வரணும். வீட்டுலையும் சொல்லுங்க”
“சரிப்பா. வெக்குறேன்”
சேகர் கட்டிலில் அமர்ந்திருந்தார். சோர்ந்திருந்தார். இன்று வெயில் அதிகம். இரவு வரை ஆட்டோ ஓட்டத் தெம்பில்லாமல் மாலையே வீடு வந்திருந்தார். ரத்தினத்திடம் பேச வேண்டும். எப்படி ஆரம்பிப்பதென்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்து மனைவியை அழைத்தார்.
“வெளியில வந்து ஒக்காரலாம்ல? ஏன் இப்படி வந்ததுலேந்து ரூமுள்ளயே அடைஞ்சுக் கெடக்குறீங்க?”
“நீ கொஞ்சம் இங்க ஒக்காரு. பேசணும்”
“என்னாச்சு?”
“நா ஒண்ணுக் கேப்பேன். எனக்காக செய்வியா?”
“பெருசா ஏதோ கேக்கப் போறீங்கன்னு மட்டும் தெரியுது”
“இல்ல ரத்தினம். நம்ம செந்திலு இருக்கான்ல… அவன் ஒரு பொண்ணக் கூட்டியாந்தானே… கௌரி…”
“அதுக்கென்ன?”
“நீ இப்டி வெடுக்கு வெடுக்குன்னு கேள்விக் கேட்டா நா எப்படிப் பேச சொல்லு… கொஞ்சம் பொறுமையாத்தாக் கேளேன்…”
“சொல்லுங்க”
“அந்தப் பொண்ணுக்கு ஒரு தள்ளு வண்டி வாங்கி குடுத்துருக்கான் சாப்பாட்டுக் கட போட. நாளன்னைக்கு ஆரம்பிக்குறதுக்கு நாந்தா நாள் பாத்து இப்போ செந்திலுக்கு சொன்னேன்”
“ஒங்களுக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம்?”
“இதுல என்ன தப்பிருக்கு? ஏதோ சொந்தமாத் தொழில் பண்ணா அந்தப் பொண்ணு அது பொழப்பப் பாத்துக்கும்னு நெனைக்குறான். நல்லது தான? அதும் நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சுதுன்னா அது வழியப் பாத்துட்டுப் போயிடும்ல?”
“பின்ன? ஏதோ ஆதரவில்லாம நின்னுச்சேன்னு ஒதவி பண்ணுறான். அந்த புள்ளைக்குந்தா யாரு இருக்கா? அது வாழ்க்கையிலையும் ஒரு நல்லது நடக்குது. கூட நாலுப் பேரு இருந்தா அதுக்கும் தெம்பா இருக்கும்ல? அவன் என்ன காசு பணமாக் கேக்குறான்? இல்லக் கூடவே இருந்து பாத்துக்க சொல்லுறானா? அது…”
“இப்ப எதுக்கு இவ்வளோ இழுக்குறீங்க?”
“பத்தியா? இப்பதான சொன்னேன்?”
“சரி சரி… முழுசா சொல்லுங்க”
“நாளன்னைக்கு அது கடத் தொறப்புக்கு நீயும் வருவியா?”
“அப்பறம் என்னைய மட்டும் எதுக்குய்யாக் கூப்பிடுற? நம்ம வூட்டுலயும் ஒரு பொண்ணிருக்குது. நியாபகம் இருக்கா? ஊரு என்னாப் பேசும்… செந்திலோட அத்தையே வரல. நா மட்டும் போயி மின்ன நிக்க முடியுமா? யாராவது கேட்டா அந்த பொண்ணு யாருன்னு சொல்லுறது?”
“ஊர் வம்புப் பேசுற எவளாவது வந்து கேப்பா… அவனோட சொந்தக்காரப் பொண்ணுன்னு சொல்லு”
“அதா நானும் கேக்குறேன். அவன் சொந்தக்காரப் பொண்ணுன்னா அவன் அத்தை ஏன் வரலன்னுக் கேப்பாங்களே… என்ன சொல்லுறது?”
“அய்யோ என்னடி இது ஒன்னோட ரோதனையாப் போச்சு… செந்தில எனக்கு எத்தினி வருஷமாத் தெரியும்? இது வர அவன் என்னைக்காவது ஒன்ன அவன் வூட்டுக்குக் கூப்பிட்டிருக்கானா? இன்னைக்குக் கூப்பிடுறான். அதும் என்ன பண்ணுறதுன்னு அவனுக்கே தெரியாத சூழ்நிலையிலக் கூப்பிடுறான். அத்தை ஆத்தான்னு ஏதோ சாக்கு சொல்லிக்கிட்ருக்க…
எங்கையிலக் காசில்லாதப்போ ஒம்பொண்ணுக்கு பீஸ் கட்டுனானே… அப்போ ஊருக் கேக்கலையா? அவன் யாருன்னு? அவன் என்ன எனக்கு தம்பியா இல்ல ஒனக்கு தம்பியா? என்னாத்துக்கு நம்ம வாசவிக்கு பீஸ் கட்டுனான்?
இன்னைய வரைக்கும் அந்த காச அவன் திருப்பிக் கேட்டதில்ல. காரு வாங்குனானே… அப்போ கூடத் தரேன்னேன். உங்க கையிலயே காசு இல்ல… இப்போதைக்கு வேணான்னுட்டான்.
மனுஷனுக்கு மனுசன் ஒதவிப் பண்ணுறதுக்கு ஊரு அனுமதிக் கொடுக்கணுமோ? நமக்குன்னா ஊருக் கேக்காது… அடுத்தவனுக்குப் பண்ணும்போது மட்டும் ஊருக் கேக்குமோ? நல்லதா ஒரு சீலையக் கட்டிக்கிட்டு வந்து பத்து நிமிசம் சிரிச்ச மூஞ்சியா நின்னுட்டு போ. அவ்வளவுதா நா கேக்குறேன். முடியுமா முடியாதா?”
“என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க? செந்திலுக்கு ஒதவின்னா செய்யாமையா? அந்த தம்பி பத்தி எனக்குத் தெரியாதாங்க? அதுக்கு என்னா வேணா செய்யலாங்க. ஆனா நீங்க அந்த தம்பிக்குக் கேக்கலையே…”
“நமக்கொரு பொண்ணிருக்குன்னு எனக்கு மட்டும் நெனப்பில்லாத போயிடுமா? அப்படியெல்லா ஒன்ன கொண்டு போயி நிப்பாட்டிடுவேனா ரத்தினம்? செந்திலு நல்ல பையன். அந்த பொண்ண ஒரு வாட்டிப் பாரு. பேசு. எனக்கென்னமோ நல்ல மாதிரியாதாத் தெரியுது.
“நீ என்ன சின்னப் பொண்ணா? நடக்குறதயெல்லா பாக்குறல்ல?”
“இதே மாமா ஒரு பையன கூட்டிட்டு வந்து ஒதவி பண்ணா இம்புட்டு பிரச்சன இல்லல்ல?”
“இப்…”
“நாளைக்கு நீங்க எல்லாரும் என்ன விட்டுப் போயிட்டீங்கன்னா… கடவுள் புண்ணியத்துல அப்படியொரு நெலம எனக்கு வரக் கூடாது. அப்படி வந்து நா நடுத் தெருவுல நின்னு இப்படியொருத்தன் எனக்கு ஒதவிப் பண்ணா அப்பயும் ஊருத் தப்பாதாப் பேசும் இல்லப்பா?”
“கண்மணி…”
அவள் அறைக்குள் சென்றுவிட்டாள். பாஸ்கருக்கு விஷயம் இன்னதென்று தெரியாவிட்டாலும் கௌரியை பற்றிய பேச்சென்பது புரிந்தது. இந்நேரம் வீட்டில் அவன் அம்மா இல்லையென்பது நிம்மதியைத் தந்தது. அமைதியாக அவ்விடம் விட்டு நகர்ந்தான்.