Pidikaadu24

Pidikaadu24

பிடி காடு – 24

சேகரிடம் சொன்ன எல்லாம் வாங்க வேண்டும். செந்தில் ராஜாவை கௌரியிடம் தர மறுத்தான். செலவுக் கணக்குப் பார்த்து பெட்டியிலிருந்து எடுத்த பணத்தை ஐந்தாவது முறையாக எண்ணினான். சரியாகத்தான் இருந்தது. ஆனால் பெட்டியிலிருக்கும் பணம் குறைந்துகொண்டே வருகிறதே என்ற கவலை.

சில செலவுகளுக்குக் கணக்குப் பார்க்க முடியாது. வரும் எல்லா செலவுகளும் இந்த ‘சில’வற்றிலேயே அடங்கிப் போனால்?

கௌரி அணிந்திருந்த பருத்தி புடவையில் அங்கங்கே சாயம் ஒட்டிக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டுமுறை அலசினால் மிச்சமிருக்கும் வண்ணங்கள் கூட புடவை மீதானப் பற்றுதலைத் துறந்து நீரோடு போய்விடக்கூடும்.

செந்தில் பூட்டியிருந்த வீட்டைத் திறந்து உள்ளே போக “என்னைய சீக்கிரம் சீக்கிரம்னு சொல்லிட்டு இப்போ நீ எதுக்கு உள்ளப் போற? ராஜாவ குடுக்க மாட்டியா?” என்று கௌரி கத்தியது காற்றில் கரைந்தது.

காலையிலிருந்து இப்படித்தானிருக்கிறான். அவள் பேசுவது காதில் விழாமல் எங்கோ பார்த்தபடி. இரண்டு வார்த்தையில் பதில் சொல்லியபடி.

கௌரிக்கு இன்று அவன் தன்னுடன் நிறைய பேச வேண்டுமென்ற ஆர்வம். அடிக்கடி அவன் முகம் பார்த்தாள். எங்கே போகிறோம் என்று கேட்கவில்லை.

செந்தில் முன்னால் நடந்தான். சில இடங்களில் மெல்ல நடக்கும் கௌரிக்காக நிற்க வேண்டியிருந்தது. வேகத்தைக் கொஞ்சம் குறைத்தான்.

பஸ் ஸ்டாண்டில் கூட்டம் குறைவாயிருந்தது. இன்று விடுமுறை தினம் இல்லை. மணியும் பத்துக்கு மேலாகியதால் பேருந்துக் கூட காலியாகவே வந்தது.

“நா முன்னாடி ஏறிக்கவா?”

“எங்க எறங்கணும்னு உனக்குத் தெரியாது. எங்கூடவே வா. போற வழியிலக் கூட்டமாயிடுச்சுன்னாக் கஷ்டம்”

அவன் பக்கத்தில் உட்கார்ந்து சென்ற பயணம் புதிது. நீண்ட நேரம் வேடிக்கைப் பார்த்தவள் அவன் கையிலிருந்த பையை கவனித்தாள்.

“எதுக்கு இவ்வளோ பெரிய பை? என்ன வெச்சிருக்க?”

“ராஜாவோட டிரஸ். பால் இருக்கு. கொஞ்சம் பிஸ்கட் எடுத்துக்கிட்டேன். என்னல்லாம் எடுத்து வெக்கணும்னு எனக்குத் தெரில. நீ குளிச்சுட்டு இருந்த. அதான் இருந்த எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தேன்”

“மறந்தே போயிட்டேன். டிரஸ் எப்படி எடுத்த? வீட்டுக்கு வந்தியா?”

“அதான் சொன்னனே குளிச்சுட்டு இருந்தன்னு. காலையிலேந்து என்ன நெனப்புலத் திரியுறியோ? வீட்டுக் கதவத் தாப்பாப் போடாம எதுக்குக் குளிக்கப் போற?”

“என்னமோ யோசனையிலயே இருந்துட்டேன். ராஜாவ குடுக்கவே மாட்டேங்குறியா… அதுவே கஷ்டமா இருந்துது”

“என்னென்ன வாங்கணும்னு யோசிச்சியா?”

“எதுக்கு?”

“ஒண்ணுல்ல. அடுத்த ஸ்டாப்ல எறங்கணும்”

“பை நான் தூக்கிக்குறேன்”

“நீ கொஞ்சம் வேகமா நடந்தா நல்லாயிருக்கும். பையெல்லாம் நான் தூக்கிக்குறேன். எந்திரி”

இறங்கிய இடத்தில் கூட்டம் அதிகம். அவன் சொன்னதுபோல் வேகமாக நடப்பது அத்தனை சுலபானதாக இல்லை. சில இடங்களில் ஓட வேண்டியிருந்தது.

துணிக்கடைக்குள் நுழைந்தான். கௌரிக்கு எதற்காகக் கூட்டி வந்திருக்கிறானென்று புரிந்தது. இரவு சொன்னான் தான். சம்மதிக்கவைக்க சொல்கிறானென்ற அலட்சியம். நிஜமாகவே நாளை திருமணமா?

பட்டுப் புடவைக் கட்டி எத்தனை நாட்களிருக்குமென்றக் கணக்குக் கிட்டத்தட்ட மறந்து போயிருந்தது. இதெல்லாம் தேவையா என்ற கேள்வி. இதிலிருந்து தப்பிப்பது சாத்தியமா என்ற ஆராய்ச்சி. இத்தனைக்கும் நடுவில் பிடித்த கலரில் புடவைத் தேடியலைந்த மனம். தலையிலடித்துக் கொண்டாள்.

“என்ன?”

“ஒண்ணுல்ல”

“சரி வா. பை நீ வெச்சுக்கோ” என்றவன் பட்டுப் புடவைப் பார்க்கவில்லை. நூல் புடவையும் பாலியஸ்டர் புடவையையும் அலசினான்.

‘இருக்குற செலவுலப் பட்டுப் பொடவைக்கு ஆசப்படுறேன் பாரு… புத்திக் கெட்டுப் போச்சு. மொதல்ல எனக்கு எதுக்கு ஆசையெல்லாம் வருது? அது…’

“இங்க வா. இந்த நாலு பொடவையும் நல்லாயிருக்கு. புடிச்சிருக்கா? பொம்பளைங்களப் பொடவ கடைக்குக் கூட்டிட்டு வர ஆம்பளைங்கப் பாவம்னுக் கேள்விப்பட்டிருக்கேன்… நீ என்னமோ பராக்குப் பாத்துட்டு நிக்குற? உனக்குதா பாக்குது. மண்டையில ஒரைக்குதா?”

“ம்ம் ம்ம்… நாலுல இது ரொம்பப் புடிச்சிருக்கு. இத எடுத்துக்குறேன்”

“சரி அப்போ இன்னும் மூணு நாலு புடவை பாத்து எடு”

“எதுக்குய்யா இத்தன?”

“நீ கட்டியிருக்குறதப் பாரு”

“ஐயோ… இது வீட்டுலக் கட்டுறதுக்காக வெச்சிருந்தது. இன்னைக்கு எனக்கு என்ன ஆச்சோ… மறந்து இதக் கட்டிட்டு வந்துட்டேன்யா”

“வீட்டுலக் கட்டுறதுன்னாலும் இவ்வளோ கேவலமாவா? ஒனக்கு எல்லாம் செஞ்சுக் குடுத்துடணும்னு நெனச்சேன். ஒரு நாளும் நீ நல்ல துணிப் போட்டிருக்கியான்னுப் பாத்ததில்ல. வேற என்னல்லாம் வேணுமோ எடுத்துக்கோ. அதுக்குன்னு என் தலைய மொட்ட அடிச்சுடாத. இன்னும் வாங்க வேண்டியது நெறைய இருக்கு”

“அப்போ இதெல்லாம் வீட்டுலக் கட்டவா?”

“நீ கடைக்குப் போனாலும் கட்டுறதுக்கு. அதுக்கேத்த மாதிரி எடு. தெனம் வெளிலப் போறல்ல… இன்னும் ரெண்டு வேணும்னாலும் எடுத்துக்கோ”

“நீ கையில வெச்சிருக்க நாலும் நல்லாயிருக்கு. இது போதும். காட்டன் தான் இப்படி சாயம் போயிடுது. வீட்டுல வாயில் புடவ ரெண்டு இருக்கு. அது நல்லாதான் இருக்கு. மாத்திக் கட்டிக்குவேன்”

“சரி”

“ஒனக்கு ட்ரெஸ் எடுக்கலையா?”

“அப்பப்போ எடுத்துட்டுதான் இருக்கேன். தேவையான அளவு இருக்கு. ஒனக்கு இது மட்டும் போதுமா?”

“இங்கயே இருக்கியா… இதோ வந்திடுறேன்”

“எங்கப் போற?”

“பாவடை ப்ளௌஸ் எல்லாம் எடுக்கணும்… இங்கயே இரு. புடவையக் குடு. நா போய் எடுத்துட்டு வரேன்”

கையிலிருந்த புடவைகளை நீட்டினான். சேர் தேடி அதில் உட்கார்ந்தான். ராஜாவுக்கு செந்தில் சட்டை காலரை பிடித்து இழுப்பது ஒரு விளையாட்டு. அவன் இவ்வளவு நேரம் தன் கையில் அழாமல் இருப்பது செந்திலுக்கு ஆச்சரியம்.

பதினைந்து நிமிடங்களில் கௌரி வெறும் கையுடன் திரும்பி வந்தாள்.

“ஒண்ணும் எடுக்கலையா?”

“பில்லு போட குடுக்குறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போயிட்டாங்க. புடவையும் குடுத்துட்டேன். நெஜமா ஒனக்கு ட்ரெஸ் எதுவும் எடுக்கலையா? எனக்கு எம்புட்டுதான்யா செலவு பண்ணுவ? இந்த கடனையெல்லாம்…”

“கடனெல்லாம் தள்ளுபடி பண்ணிட்டேன்னு வெச்சுக்கோ”

“அது எப்படி முடியும்? கொஞ்ச நஞ்சமா செஞ்சிருக்க?”

“அத வேணா உன்னக் கட்டிக்க நா குடுக்குற வரதட்சணையா வெச்சுக்கோ”

“சீதனமா?”

“ஆமா… பின்ன நீ ஓவரா பிஹு பண்ணா நா குடுத்துதான ஆகணும்?”

“எதுக்கு? என்னைய போலிஸ் புடிச்சுட்டுப் போகவா?”

“பாருடா… இதெல்லாம் தெரியுமா?”

“நாங்கல்லாம் செய்தி வாசிக்கலன்னாலும் கேப்போமாக்கும். போன்ல ரேடியோ எப்டி கேக்குறதுன்னு பழக்கட பாட்டி சொல்லிக் குடுத்துச்சு”

“எழுத படிக்கத் தெரியும்தான? நா தெனம் பேப்பர் வாங்குவேன். கார்ல கடக்கும். அப்பறம் தூக்கிப் போட்டிருவேன். இன்னையிலேந்து படிச்சு முடிச்சதும் தரேன்”

“எல்லாம் படிக்கத் தெரியும். ஏன்? தனியா எனக்கொரு பேப்பர் வாங்கித் தரது…”

“வீட்டுல ரெண்டு பேப்பர் வாங்குற அளவுக்கெல்லாம் எனக்கு வசதி பத்தாது ஆத்தா. ஒன்ன சீதனம் குடுத்துக் கட்டிக்கிட்டுத் தனியா பேப்பர் வேற வாங்கிக் குடுக்கணுமாக்கும்?”

“அத சீதனம்னு சொல்லாத. என்னைக்கா இருந்தாலும் எங்கடன். திருப்பிக் குடுத்துடுவேன்”

குடு குடு. ஒனக்கு முதல்ல புடவை எடுத்துடலாம்

அதான் எடுத்தாச்சே

கல்யாணத்துக்கு

இருவரிடத்திலும் மௌனம். கௌரியின் ஒதுக்கம் செந்திலை முஹூர்த்த புடவை தேர்வு செய்ய வைத்தது. முகம் பார்த்து விருப்பம் அறியலாமென்றால் தலைகுனிந்தே நின்றாள். செந்திலுக்குப் பட்டு வேஷ்டி எடுத்தபோதும் நிமிரவில்லை. பட்டு சட்டை வேண்டாமென்று காட்டன் சட்டையே எடுத்தான். ராஜாவிற்கு எத்தனை உடைகள் எடுத்தானென்று கௌரிக்குத் தெரியாது. பார்த்த எல்லாவற்றையும் எடுத்தான்.

எதுக்கு இத்தனைய எடுக்குற? கொஞ்சம் வளந்தாக்கூடப் போட முடியாதுய்யா. வேணும்னா அப்பறம் எடுத்துக்கலாம். இரு… இவ்வளோ வேணாம். இது மட்டும் போதும்

கௌரி கொடுத்த உடைகளை மட்டும் பில் போட கொடுத்தனுப்பினான். பில் போடுமிடத்தில் கொஞ்சம் கூட்டமிருந்தது.

நீ போய் பணத்தக் கட்டி வாங்கிட்டு வா. ரொம்ப நேரமாச்சு. நான் இவனுக்கு பிஸ்கட்டும் பாலும் குடுக்குறேன். பையக் குடுத்துட்டுப் போ

பணத்தைக் கொடுத்து பையை வாங்கி இடம் தேடி உட்கார்ந்தான். கௌரி வந்ததும் அடுத்து நகைக் கடைக்குப் போகலாமென்றான்.

எதுக்குய்யா அதெல்லாம்? வேணாம் வீட்டுக்குப் போகலாம்

தாலி வாங்க வேண்டாமா? வெறும் புடவையும் வேஷ்டியும் கட்டிக்கிட்டு?”

எதுவும் வேணாம். வீட்டுக்குப் போகலாம்

வெளையாடுறியா? காலைல அவ்வளோ சொன்னேன்… திரும்பவும் முதல்லேந்து ஆரம்பிக்குறியா?”

இல்லல்ல…

பின்ன?”

தங்கத்துலதான் போடணுமா? எதுக்கு இவ்வளோ செலவுப் பண்ணுற?”

அந்தக் கணக்கெல்லாம் நான் பார்த்துக்குறேன். செயின் என்னால இப்போ வாங்கித் தர முடியாது. தாலியாவது தங்கத்துலப் போடு

“இவ்வளோ…”

“பேசாம வா”

நகைக்கடையில் தாலிப் பார்த்து எடுத்தான். பில் கவுண்டரில் கொஞ்சம் பணமும் காகிதத்தில் மடித்து வைத்திருந்த இன்னொரு தாலியையும் கொடுத்தான்.

“இந்த தாலி…”

“அம்மாவோடது. செயின் ரெண்டு வாட்டி அடகு வெச்சேன். அப்பறம் ஒரு நாள் விக்க வேண்டியதாப் போச்சு. இன்னும் கொஞ்சம் நகை இருந்துது. எல்லாம் வித்தாச்சு. இத மட்டும் அடகு வெக்க கூட மனசு வரல”

“அப்பறம் ஏன் இப்போ குடுத்த?”

“உனக்கு தாலி வாங்குறேன். இப்போ கூடக் குடுக்கலன்னா எப்பயும் அதக் குடுக்க மனசு வராது. இன்னும் கொஞ்சம் டைம் இருந்திருந்தா அதையே உருக்கி உனக்கு தாலி செய்ய சொல்லியிருப்பேன்”

“இப்போவும்…”

“வேணாம். பரவால்ல”

“என்னாலதான?”

“உனக்காகதான? வருத்தமெல்லாம் இல்ல”

செந்திலின் மொபைல் அடித்தது. வாங்கிய பைகளையெல்லாம் ராஜாவை தூக்கியிருந்த கைக்கு மாற்றினான். தாலி இருந்த சிறிய நகைப் பெட்டியை மட்டும் எடுத்து பக்கெட்டில் வைத்துக் கடையைவிட்டு வெளியே வந்து மொபைலை எடுத்தான்.

“சொல்லுங்கண்ணே”

“எங்கப்பா இருக்க?”

“இப்பதான் தாலி வாங்குனேன்”

“ஏன் செந்தில் இப்படிப் பண்ணுற? கூப்பிடக் கூடாதா? ட்ரெஸ் எடுக்கணும்ல?”

“எடுத்தாச்சுண்ணே”

“நீ பண்ணுறதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா? காலையில நீ கடைக்குப் போகணும்னு சொன்ன… போறப்பக் கூப்பிடுவன்னு நெனச்சுதான் சவாரிக்குப் போனேன். அப்போக்கூடப் பக்கத்துலயே போற மாதிரி சவாரி மட்டும்தான் எடுத்தேன். எங்க வீட்டம்மா சும்மாதான் ஒக்காந்திருக்கு. அதக் கூப்பிட்டிருக்கலாம்ல? உங்க மாமாவையாவது கூப்பிட்டிருந்தா வந்திருப்பாருல்ல? தாலி கூட நீங்க ரெண்டுப் பேரு மட்டும் போயி வாங்குறதா? பெரியவங்களக் கூப்பிடலன்னாலும் பாஸ்கர் கண்மணிவாவது கூப்பிடக் கூடாதா? ஏம்பா இப்படிப் பண்ணுற? கடைசி வரைக்கும் யாருமே வேணாம்னு முடிவுல இருக்கியா? எங்க…”

“அண்ணே… அண்ணே இன்னும் மாலை, பூ எதும் வாங்கல. ட்ரெஸும் தாலியும் தான் வாங்கியிருக்கு. மஞ்சக் கயறு வாங்கணும். கோவில்ல முன்னாடியே சொல்லணுமாத் தெரியாது. அதக் கொஞ்சம் விசாரிங்க. பாஸ்கர கடைய பாத்துக்க சொல்லிட்டு மாமாவக் கூட்டிட்டுப் போங்க.

முஹூர்த்த புடவையில ப்ளவுஸ் துணி இருக்கு. இப்போ ராத்திரிக்குள்ள தெக்கணும்னா… அதெல்லாம் நமக்குத் தெரியாது. நா கௌரிய கொண்டு போய் உங்க வீட்டுல விடுறேன். எங்கத் தெக்குறதுன்னு பாத்துக் கொஞ்சம் கூட்டிட்டுப் போக சொல்லுங்க.

நகக்கடையில நிக்கும்போது தான் தோணுச்சு… காதுல கழுத்துல கவரிங்காவது போட வேண்டாமா? அதப் பத்தியும் எனக்கு எதுவும் தெரியாது. கண்மணிக்கிட்ட தான் கேக்கணும். காலேஜூலேந்து வந்ததும் இவளக் கூட்டிட்டுப் போய் வாங்கித் தர சொல்லணும். இன்னும் நாளைக்கு எல்லாரும் எப்படிப் போறது, அங்க சாப்பாடு… எல்லாம் கொஞ்சம் பாருங்க”

“இப்படி சொன்னா எவ்வளோ நல்லாயிருக்கு. நீ வீட்டுக்குப் போ. கௌரியக் கொண்டு போய் எங்க வீட்டுல விடு. நா போன் பண்ணி சொல்லிடுறேன். கண்மணி வந்தா எங்க வீட்டுலேந்து கௌரிய அழச்சுக்கும். நான் உங்க மாமாவக் கூட்டிட்டு முதல்ல கோவில் போறேன். அங்கயே மாலை பூ எல்லாம் கெடைக்கும். ஒரு அர நாள் கடைய மூட சொல்லு… ஒண்ணும் கொறஞ்சுப் போகாது. பாஸ்கர கூட்டிக்க. நாளைக்குக் காலையிலயும் மத்தியானத்துக்கும் வரவங்களுக்கு வெளில சாப்பாடு சொல்லிட்டு வாங்க. வெக்குறேன் செந்தில்”

இவ்வளவு நேரம் பொறுமையாக எல்லாம் செய்து கொண்டிருந்தான். சேகரிடம் தான் சொல்லியதையும் அவர் சொன்னவற்றையும் யோசித்தவனுக்கு மீதமிருக்கும் நேரம் போதுமா என்ற சந்தேகம். முன்பைவிட வேகமாக நடந்தான். இம்முறை கௌரியின் கை பிடித்து நடந்தான்.

‘இம்புட்டு விஷயம் யோசிச்சிருக்காக… எனக்குக் கூடத் தோணல… ஆமா… காலையிலேந்து என்னத்ததான் தோணுது? பொம்மையாட்டம் இவக இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடுறேன். இப்பயும் இழுத்துட்டுதானப் போறாக. கொஞ்சம் மெதுவா நடந்தா என்ன?’

“நடக்க முடியலையா?”

“இவ்வளோ வேகமா…”

“சுத்தமா டைம் இல்ல கௌரி. இன்னும் கொஞ்ச தூரம்தான். பஸ் ஸ்டாப் வந்துடும். பஸ் ஸ்டாண்ட் போனதும் நடக்க வேண்டாம். வேற பஸ் புடிச்சுப் போயிடலாம் என்ன”

“ஏதோ சின்னப் புள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லுறய்யா”

“நீ சின்னப் புள்ள மாதிரிதான் மெதுவா நடக்குற. பேசுனதெல்லாம் கேட்டல்ல? இன்னும் இவ்வளோ வேலையிருக்கு. மொதல்ல நம்ம என்ன பண்ணிட்டு இருக்கோம்னுக் கொஞ்சம் யோசி”

“வேகமா நடக்குறேன். உடனே கோச்சுக்குறப் பத்தியா”

வீடு வரும் வரை செந்திலிடம் அமைதி. வீட்டு வாசலில் ரத்தினம் நின்றிருந்தது எதிர்ப்பாராதது. உள்ளே வந்ததும் பட்டு புடவையை மட்டும் பார்த்தார். அழகாய் இருந்தது. கௌரியை அழைத்துச் செல்வதாக சொல்ல ராஜாவைப் பார்த்தாள்.

“நானே பாத்துக்குறேன். நீ போற எடத்துலப் புள்ளையப் பாத்து யாராவது எதாவது கேட்டு… நீ வந்து என்னைய கேள்விக் கேட்டு… தேவையே இல்ல. ராத்திரி வேலையெல்லாம் முடிஞ்சதும் போன் பண்ணிட்டு வந்து கூப்பிட்டுக்குறேன். அது வரைக்கும் உங்க வீட்டுலயே இருக்கட்டும்”

“சரிப்பா”

“ஒரு நிமிஷம் உள்ள வா”

அறைக்குள் சென்றவன் கௌரி வந்ததும் கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

“என்ன புடிக்குதோ வாங்கிக்கோ. காசு கொஞ்சம் அதிகமாவே குடுத்திருக்கேன். பத்தலன்னா போன் பண்ணு”

“இதுவே போதும். வரேன்”

காலையிலிருந்து ராஜாவிற்கு வெறும் பாலும் பிஸ்கட்டும் மட்டமே ஆகாரம். தயிர்சாதம் வாங்கி வந்து ஊட்டினான். பாஸ்கருக்கு கால் செய்தான்.

“எப்போ செந்தில் வர? நீ வந்ததும் கடைய சாத்திட்டுக் கெளம்பிடலாம்”

“சேகரண்ணன் சொன்னாரா?”

“அவரு அப்பாவக் கூட்டிட்டுப் போக வந்திருந்தாரு. அப்பா அப்போவே கடைய மூடிடலாம்னு சொன்னாரு. மனுஷனுக்குத் தல கால் புரியல. நீ சீக்கிரம் வா”

செந்தில் சென்றபோது பாஸ்கர் கடையை மூடப் பொருட்களை ஒதுக்கிக் கொண்டிருந்தான்.

“வா வா. இவன நீ தூக்கிட்டு வர? அழ மாட்டானா?”

“காலைலேந்துத் தூக்கி வெச்சிருக்கேன். இப்போ வரைக்கும் அழல”

“அதுக்குள்ள உன்கிட்ட ஒட்டிக்கிட்டானா? அப்பா கண்மணிக்கு கால் பண்ணி சொல்லிட்டாரு. காலேஜுலேந்து நேரா கௌரிய பாக்கப் போறேன்னு சொல்லிடுச்சு. அப்பாவும் கெளம்பிட்டாங்களா… எனக்கு இங்க தனியா உக்கார கடுப்பா இருந்துது. உன் கல்யாணத்துக்கு எவ்வளோ வேலை இருக்கும்… பத்து நாளாவது அலைய வேண்டியிருக்கும்னுனு நெனச்சேன்? நீ என்னடான்னா ஒரே நாள்ல எல்லாரையும் ஓட விடுற?”

“ஒரு நாள் பத்தாதா?”

“எப்படிப் பத்தும்? ஆனாலும் உன் மனசு யாருக்கு வரும்? நீ உதவிப் பண்ணுறதே எவ்வளோ பெரிய விஷயமா நெனச்சேன் தெரியுமா? நீ வாழ்க்கையே குடுக்குற…”

“இப்படியெல்லாம் ஏதாவது பேசிக் கொழப்பத்த உண்டாக்கிடாத. நா அவளுக்கு வாழ்க்கக் குடுக்குறேன்னெல்லாம் சொல்லல. எனக்குத் துணையா இருப்பியான்னுக் கேட்டேன்.

எல்லாருக்கும் ஒரு வாழ்க்க இருக்கு பாஸ்கர். அவங்கவங்களோட வாழ்க்கைய வாழ்ந்துட்டுதான் இருக்காங்க. யாரும் யாருக்கும் வாழ்க்கக் குடுக்க முடியாது. வாழ வழி செஞ்சு வேணாக் குடுக்கலாம்”

“இப்படி எல்லாராலையும் யோசிச்சுட முடியுமா?”

“இதான் உண்ம. பைக் சாவி குடு”

“கொஞ்சமாவது மாப்ள மாதிரி இரு செந்தில். உனக்குக் கல்யாணம்னு எனக்கிருக்க நெனப்பே போயிடும் போலருக்கு”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!