pm4

pm4

 

ஃபீனிக்ஸ் – 4

 

‘வீட்டுப் பக்கமா வந்து பாரு மேன்! என்னைப் பத்தி அக்குவேறா, ஆனிவேரா புட்டுப்புட்டு வைக்க என் கேங்க் ஆளுங்க இருக்காணுங்க. (எல்லாம் தம்மாத்தூண்டுன்னு தப்பா எடை போட்றக்கூடாது, ஆமா..)  வந்து கேட்டா தெரிஞ்சிரப்போகுது! அப்புறமா ரொம்ப ஃபீலானாகூட பரவாயில்லை.  ஆனா என்னை விட்டுட்டு சத்தியமா ஓடிறக்கூடாது!  ஆஹான்…!’

‘ஆனா வீட்டுக்குள்ள கேட்டுறாத, அப்புறம் ஊமை சாமியாரிணி வேணானு போயிருவ!’

எவ்ளோ தூரம் நான் சேட்டை பண்ணாலும், பெருசுங்க தான் மூஞ்ச மூச்சா போற மூஞ்சுறு கணக்கா வச்சிக்குவாங்க!

ஆனா, தெருவில இருக்கிற எல்லா சின்ன புள்ளைகளுக்கும் நான்னா உசிரு! என் தலைமேல இருக்கிறது ஒன்னு விழுந்தாலும் உசிரையே விட்டுருவானுங்கன்னா பாத்துக்கோ!

எங்கது ஸ்மார்ட் கேங்க்.  அடிச்சிக்கவே முடியாது.

ஆனா, எங்கப்பாரு வீட்டுக்குள்ள இருந்தா, நான் அவளல்ல எனும்படியாக அமைதியாய்… அசப்பில் அம்மாஞ்சி வேசமிட்டு அக்கடானு அடுக்களையில் அம்மாவோடு பம்மியவாறே இருப்பேன்.

தலையைத் தொங்கப் போட்ட நிலையில், ‘அப்பா இருக்கும்போது எலி, அவரு இல்லனா நாந்தான் புலி என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு’

சித்துப் பெண்ணாக இருப்பதால் சின்னப் பசங்க அவங்க செட் விளையாட்டுப் பிள்ளைமாதிரிதான் என்னையும் நடத்துவாங்க.

என்ன, வயசுக்கு மரியாதை தந்து லீடர்னு அன்பா கூப்பிடுவானுங்க.(பெருமையாக உணர்கிறேன்)

வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில்தான் எங்களின் அனைத்து சாகசங்களின் திட்டங்களைத் தீட்டுவோம்.

அப்பா தெரு முக்குல வரது தெரிஞ்சவுடனே எப்டி வீட்டுக்குள்ள வரேன்னு எனக்கே தெரியாது.  அவ்வளவு தைரியம் எனக்கு!

“உங்க வீடு இப்ப எங்க இருக்குனு கண்டு பிடிச்சிட்டேங்க!”

‘என்ன சொல்ற! எப்டி?’, என் விழி பிதுங்கி பயத்தோடு பார்த்தேன். பயத்தைக் கண்டு இதமாக இன்னும் நாலு கேள்விகளோடு சென்றுவிட்டான்.

“நாம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து தெருவுலதான் இருக்கோமுங்க!”

‘என்னாது! இது எப்டி?’ இது தற்செயலாகவே அமைந்ததோ என எனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தேன் சிலநாள்கள்.

“உங்களைப் பத்தி எங்கம்மா இன்னிக்கு பேசிட்டு இருந்தாங்க!

‘என்னானு பேசினாங்க’, திருதிருவென திருவிழாவில் காணாமல் போன சிறுபிள்ளைபோல விழியகலாமல் அவனைப் பார்த்து வைத்தேன்.

அன்றும் கூடுதலாக, இதமாக நான்கு வார்த்தைகள் பேசினான்.

‘ரொம்ப அடக்க, ஒடுக்கமா, அமைதியா, அழகா.. நீங்க உண்டு, உங்க வேலையுண்டுன்னு இருக்கீங்களாம்.  இந்தக் காலத்தில இப்டியும் ஒரு பொண்ணானு எங்கம்மா ஆச்சர்யப்படறாங்க’னு சொன்னான்.

உச்சி வெயில் நடுமண்டையை பிச்சிட்டு போற நேரத்திலயும், நடு மண்டைல ஐஸ் வச்சிட்டான்.

“நீங்க ரொம்ப தூரத்துச் சொந்தம்னு சொன்னாங்க!”

‘என்ன ஒரு நாலு கிலோ மீட்டர் தூரம் இருக்குமா? இல்லை அதவிடக் கூடுதலா?’, என அவனது கேள்விக்கு அப்போதே ரிவிட் அடித்து பதில் கூறியிருந்தாலும்

அடி மனதிற்குள், ‘அப்ப, எங்கப்பா என்ன சொல்லுவார்?’, யோசனையோடு இருந்தேன். 

அடுத்து வந்த நாளில் பிட்டு பிட்டாக சில வார்த்தைகளை நேர்த்தியாகப் போட்டு ஃபாதரிடம் ஆசிர்வாதத்தோடு, சிலபல அவனது குடும்ப விசயங்களையும் வாங்கினேன்.

‘ஒன்னுந் தேறலை!’

எனது தந்தை, ‘அவங்கல்லாம் பரம்பரையா பணங்காசுனு வாழ்ந்தவங்க!  நம்மையெல்லாம் ஏறெடுத்துக்கூட பாக்க மாட்டானுங்க! நம்ம தெரு முக்குலகூட அவங்க இடம் கிடக்கு! அதுல வேலை நடக்குது.  அப்ப இடம்பக்கமா வந்துபோகும்போது பாத்து சிரிச்சாகூட கண்டுக்காதமாதிரி போயிருவாரு அந்தாளு!’, என்ற வார்த்தையில் புஷ்ஷென்று ஆனது என் மனது!

அதற்கடுத்து வந்த தந்தையின் கேள்வியில் என் உயிரே போனது போலானது.

‘ஆமாஆஅஅஅஅ இதையெல்லாம் வந்து இப்ப நீயேன் கேக்குறஅஅஅ’, என்று ‘கேட்டாரு பாரு ஒரு கேள்வி’ துளைத்தெடுத்த பார்வையோடு கண்களை ஊடுருவ, சமாளித்து வெளிவருவதற்குள் போதும்போதும் என்றாகியிருந்தது.

“ஏங்க எனக்கு மாதிரி உங்களுக்கும் எங்கிட்ட பேசணும்னு தோணாதா?”

‘அதெப்படி தோணாம?  போங்க… நீங்க வேற! வெந்ததுல வந்து வெந்நிய ஊத்தாம!’ சலித்துக் கொண்டது மனது.

“எந்தம்பிய நீங்க முறைச்சுப் பாத்திங்களாம், சொன்னான்!”

‘யாரு? அந்தக் கலியுகக் கண்ணனா? 

அவனும் அவன் முறைச்ச மூஞ்சும்! உங்க அளவுக்கு ஷாஃப்ட் நேச்சர் இல்ல. அவன் அப்டித்தான பாக்கான், மாக்கான்.  அப்புறம் பதிலுக்கு என்ன செய்வாங்க!

அவனால உங்களுக்கும் கெட்ட பேரு! பெரிய இலண்டன் இளவரசன்னு நினப்பு!

என்னாஆஆஅஅ நக்கலாஆஆஅஅஅ ஒரு பார்வை பாக்கறான்.  உந்தம்பிங்கற ஒரே காரணத்துக்காக அவனை மன்னிச்சு விடறேன்.  இல்லைனாஆஅஅஅ என்ன செய்வேன்னு எனக்கேஏஏ தெரியாது’, வீராவேசமாகப் பேசி ‘அதாவது என் மனசுக்குள்ளயேதாங்க’ அவன் தம்பி மீதிருந்த கோபத்தைத் தணித்துக் கொண்டேன்.

ஹிஹிஇஇஇ

“நீங்க எப்பவுமே இப்படித்தானா?”

‘மிடில… (மனதிற்குள் அழுகை) உங்கிட்ட மட்டுந்தான் ஊமை வேசம்.  மத்தபடி ஐ’ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்! தூக்கத்துல கூட நிறைய பேசுவேன்னா பாத்துக்கங்க…’

“அன்னிக்கு நீங்க சிரிச்சப்ப பாத்தேங்க!  ரொம்ப அழகா இருந்தீங்க!”

‘அப்பஅஅ இனிஇஇ அடிக்கடி சிரிச்சிறேன்! ஈஇஇஇஇ  நீங்க சொன்னா அதுக்குபின்ன அப்பீலே இல்ல! ஈஈஈஈஈ…’

இதுபோன்ற எனை மீறிய செயல்களின் வழியே என் மனதை அறிந்து கொண்டிருப்பானோ?

இருக்கலாம்!

“உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லுங்க.  பேச ஷையா இருந்தா, தலைய அசைச்சா கூடப் போதும்! நான் புரிஞ்சிப்பேங்க!”

‘அசைச்சாஆஆ அத்தோட சேராத நம்மைப் பிரிச்சதோட… அன்னிக்கே எங்கப்பா என் தலைய திருகி, வீட்டு புழக்கடையிலேயே புதைச்சிருவாறே!’

‘எட்டாப்பு படிக்கும்போது ஒருத்தன் எம்பின்னாடியே வந்தான்னு அப்பாகிட்ட போய் சொன்னதுக்கு, அவன் வந்தது உனக்கெப்டித் தெரிஞ்சதுன்னு கேட்டு.. எங்கண்ணுல பச்சை மிளகாய வச்சிட்டாருங்க…! ரொம்பக் காந்தல்!

இப்ப நினைச்சாலும் அழுவையா வருது!

என்னை நினச்சில்ல! அவனை நினச்சு!

ஒரு நாளு முழுக்க கண்ணுல எரிச்சல்! அத்தோட எனக்கு சரியாகிட்டு!

அதுக்கப்புறமா ஸ்கூலுக்கு போகும்போது பாத்தா, அவனைக் காணாம்!  அங்கிட்டு இங்கிட்டு விசாரிச்சா அவங்காலுல வண்டி ஏறிருச்சாம்.  காலு ரெண்டும் இனி கட்டைக் காலுதானாம்.  சொல்லிக்கிட்டாங்க!’

‘எனக்கே ரொம்ப பாவமாப் போச்சு. அவனை நினைச்சுத்தான்!’

இது புரியாம, மூடுன பானைக்குள்ள போட்ட நண்டு கணக்கா வந்து நீ குடையுற! பாத்துட்டு போயி எவனாவது வத்தி வச்சா, வத்திகுச்சி இல்லாம கண்ணாலயே எரிச்சிருவாரு எங்கப்பா.

“ஏங்க என்னை பேசாமலேயே கொல்றீங்க!”

‘பேசினா உன்னைக் கொன்னுருவாங்களே!’, என மனதிற்குள் சோக கீதம் இசைக்க

‘நீ செத்தா தாலி கட்டாமலேயே நான் விதவை ஆகிருவேனே! உஹூம்..ஹ்ம்ம்’, இது ரொம்ப ஓவருன்னு அறிவுக்கு புரிஞ்சாலும் பாத்த படங்கள் அப்டித்தான் எனக்குள்ள மாற்றத்தை விதைச்சிருக்கு! 

‘லூசாடா நீயி?’, முறைத்துப் பார்த்துவிட்டுக் கடந்தேன்.

“என்னைப் பிடிக்கலைனு மட்டும் சொல்லீறாதீங்க, அவ்ளோதான் உசுரே போயிரும்!”

‘இங்க மட்டும் என்னவாம்!’

“இன்னிக்கு படத்துக்கு ஃபிரண்ட்ஸ்கூட போறேங்க!”

‘ஹிஇஇஇ நீங்க படத்துக்கெல்லாம் போவீங்களா? அதுவும் ஃபிரண்ட்ஸ்கூட! நீங்க என்னையே நெனைச்சுட்டு தனியா இருக்கீங்கனு நெனச்சிட்டுருந்தேன்!’, சோகங்கள்.

கடுப்ஸ் வந்துச்சு. 

‘ஒன்னும் பேசாம இருந்திட்டு, திடீர்னு யாருகூடயும் நீ பேசக்கூடாது, பழகக்கூடாது, அது ஆம்பிளையா இருந்தாலும் சரினு கத்தத் தோணுச்சு! ஆனா அடக்கிக்கிட்டேன்.

ஏன்னா, பஸ்ஸூல எதாவது நல்ல மனுசன், நான் அவங்கிட்ட பேசறதைப் பாத்துட்டுப் போயி எங்கப்பாருகிட்ட பத்த வச்சா!

அடுத்து உசிரோடவே எனக்குக் கொள்ளிதான்!

“இந்த சுடியில நீங்க செமையா இருக்கீங்க!”

‘அப்டியா?  அப்ப இனி அடிக்கடி இதையே போட்டுட்டு வரேன், (துவைச்சுத்தான்…) ஹிஹிஇஇஇ’

“நீங்க ஹோம்லி லுக்குங்க!”

‘எங்கம்மா என்னைத் துக்கிரினு தூங்கும்போது திட்டுறாங்க! அப்ப யாரு சொல்றது உண்மை!’ யோசிக்கிறேன் சிறிது நேரம். 

பின்பு நானாக, ‘அது தூங்கும்போது துக்கிரிபோல. இப்ப ஹோம்லிபோல!’ என முடிவெடுத்துவிட்டேன் எனக்குச் சாதகமாக.

இப்படி, இன்னும் எத்தனை கேள்விகள், புகழாரம் வந்தாலும் பதில் கூற பிரயத்தனம் மேற்கொள்ளவில்லை. எனக்குள் பதிலைச் சொல்லி சொல்லியே பேசாமல் வளர்த்தேன் காதலை!

அவன் பேசுவதையும், கேட்பதையும் நிறுத்தியபாடில்லை!

ஒரு கை தட்டியதால் ஓசை எழவேயில்லை.

ஆனாலும், அவன் முயற்சிகளைக் கைவிடவில்லை.

முடிவாக, நான் வாக்களித்த இருவருமே மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருந்தார்கள்!

வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை!

வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் தேர்தல் தொடர்ந்து நடக்கிறது!

வருடங்கள் கடந்தும், வெற்றி எட்டாக் கனியாகவே இருக்கிறது அவனுக்கு!

வீட்டில் அப்பா கண்டிப்பு என்பதால், ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என அவனிடமிருந்து ஒதுங்கியே இருக்கப் பழக்கினேன் என்னை.

அவனிருக்கும் இடங்களில் மறந்தும் சிரிக்க மாட்டேன்.  பேச மாட்டேன்.

புரிந்து கொள்வான் என நினைத்தால், என்னை அறிந்து கொண்டு வந்தான்.

கூறாமலேயே, என்னைத் தெரிந்து கொண்டான்.

அருகே விசாரித்து, எனது குடும்ப நிலையை அறிந்து கொண்டான்.

அருகருகே உள்ள தெருக்களில்தான் இருவரது வீடும் என்றதும், இன்னும் மகிழ்ந்துபோனான்.

வீடுவரை விசயம் வந்தால், வினையாகப் போகும் என பயந்திருந்தேன்.

சற்று நாளில் அதே தெருவில், அவர்களின் இடத்தில் புதிதாக வீடு கட்டி குடிவந்திருந்தது அவனது குடும்பம்.

காதலில் கட்டுண்ட பிறகு, அவர்களின் வீடும் அதே தெருவில் குடிவந்த பின், எங்களது கேங்க் வருத்தத்தோடு கலைக்கப்பட்டது.

நீலிக் கண்ணீர் வடித்து, ஐஸ்க்ரீம் வாங்கி உண்டு அதனை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தோம்.

படிப்பில் மட்டுமன்றி, அனைத்திலும் நேர்த்தியாக இருப்பதாக அவ்வப்போது உரைப்பான்.

அவந்தான் வந்து அப்பப்போ எஃப்எம் இல்லாமலேயே ஒலிபரப்பு செய்கிறானே!

அதனால் அங்குள்ளவர்களால் கொண்டாடப்பட்டானோ என்னவோ, நான் கொண்டாடினேன்.

வயதொத்த தோழிகள்கூட, அவனிடம் சரசமாகவும், தோழமையாகவும், இன்னும் பல விதங்களில் பேசுவதைக் கண்டிருக்கிறேன்.

கேட்ட கேள்வியைத் தவிர ஒற்றை பதில்கூட கூடுதலாக நின்று கூறாமல், கேள்விக்கான பதில் கூறிவிட்டு அக்கனமே அகன்றுவிடுவான்.

கஜினி முகமதுவின் வாரிசாய் எனது விசயத்தில் மட்டும் அவன்!  படையெடுப்பதை இன்றுவரை நிறுத்தவில்லை! வெல்லும்வரை விடமாட்டான் போலவே!

என்ன செய்யப் போகிறான்?

————————

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!