pm5

ஃபீனிக்ஸ் – 5

 

சந்தோசமாக இருந்தாலும், சில நேரங்களில் சங்கடமாகவும் தோன்றியது! 

அதிகம் அவனை அலைக்கழிக்கிறோமோ?

எதையும் கவனத்தில் கொள்ளாமல், என்னைப் பற்றிய சிந்தனைகளிலேயே கவனத்தை வைத்திருந்தான்.

அத்தோடு கல்வியிலும், விளையாட்டிலும் சளைக்காமல் மதிப்பெண்களையும், பரிசுகளையும் குவித்த வண்ணமிருந்தான்.

அவன் வார்த்தை உபயம்!

அனைத்திலும் வெற்றி வாகை சூடினாலும், எனது விசயத்தில் இன்னும் தோல்வியே!

எமை வெல்லத் துவங்கியதை அறியாத மாவீரன்!

இந்திரனின் சீடன்!

படிப்ஸ்ஸாக இருந்தாலும், பாதை மாறிய பயணத்தில் எனை சந்தித்தவன்!

அவன் சிந்தைக்கு சரியெனப்பட்டதால், அவனின் இதய ராணியாக நான் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதை அவனது செயல்களில் அறிவேன்.

நான் அரைமனதாய் வழிமொழிந்ததை அறியாத வழிப்போக்கன்!

அவனின் நினைவுகளை நெஞ்சுக் குழிக்குள் மறைத்து ஒளித்து வைத்திருப்பதை என்னையன்றி இறைவன் மட்டுமே அறிவார்!

என்னிதயம் அவனை சிந்திப்பதையும், எண்ணிச் சிரிப்பதை, எனக்குள் களிப்பதைப் பற்றி அறியாத சிந்தனையாளன்!

வெவ்வேறு கல்லூரியாயினும், ஒரே பேருந்தில் பயணிப்பு!

அவன் வீட்டுல வண்டியெல்லாம் இருந்தாலும், அதில போக மாட்டாரு.  ரொம்ப சிம்பிள்.

அவனது சிம்பிளிசிட்டியை டெம்பிள்சிட்டி முழுக்க பேசாதவனே கிடையாது.

‘அவனுக்கு இருக்கிற வசதிக்கு சொந்தமா காரென்ன, பஸ்ஸே வாங்கி ஓட்டுவான்’, என அவனது பின்புலம் அறிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

பணக்கார வீட்டுப் பையன், ஜாலிக்கு வந்து பேசுறானோ என அவ்வப்போது மனதில் தோன்றும்.

ஆனாலும், அவன்மீது பித்து முத்திய நிலையில் இருந்த நான், அவனை அவ்வாறு எண்ணவே பயந்தேன்.

வாழ்நாளில் அவனைத் தள்ளி நிறுத்தியோர் எவருமில்லை என்னைத்தவிர!

தவிர்த்தவர்கள் யாருமில்லை!

தவிப்பவர்கள் வரிசையில் உண்டு!

அவனை வசமாக்கத் தவிப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான் அவன்!

அவனுக்கே சிம்ம சொப்பனமாக, சொதப்பாததால் நான்!

பழிபோட விருப்பமில்லை.  ஆனாலும் பெற்றோர்களுக்கு ஒற்றைப்  பெண்ணாக இருந்தவளுக்கு, வேறுவழி தோன்றவில்லை!.

நிராகரிப்புகள் இதயத்தை ரணமாக்கும்!

தெரிந்தும் ரணத்தோடு வலம் வந்தேன்!

இடையில் ஒருமுறை வீடுவரை வந்தவனை விழி மூட மறந்து பார்த்திருந்தேன்.

அவன்தாய் ஏதோ கொடுத்துவிட்டதாக வந்து தந்ததை, வாங்கிக் கொண்ட எனது தாய், அமர வைத்து, பொது விசயம் பேசி, டீயை குடிக்கச் செய்து வழியனுப்பி வைத்தார்.

அறைக்குள் அமர்ந்தபடியே அனைத்தையும் யூகித்தேன்.

கேளாமலேயே அவன் புகழ் பாடினார், எனது தாய்.

தந்தை வந்ததும் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

‘கெத்து பாக்காத புள்ளை, நல்ல குணம்போல.  அவங்கப்பாவே நம்மகிட்ட நின்னு பேச யோசிப்பாரு.  ஆனா, இந்தப்புள்ளை ரொம்ப சாந்தமா வந்து ஊருக்குப் போன அவங்கம்மாகிட்ட நம்ம சொந்தக்காரங்க குடுத்துவிட்ட பத்திரிக்கைய வந்து வீட்டுல கொடுத்துட்டுப் போகுது’, என சிலாகிக்க

தந்தை ஏனோ எனது முகத்தை ஊடுருவுவதுபோல தோன்றியது.

‘அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பேயி மாதிரினு சொல்வாங்களே! அப்டித்தானா? இல்லை இது உண்மையானு எனக்குத் தெரியலை! ஆண்டவா என்னைய மட்டுமில்ல, அவனையும் காப்பாத்து!’

அதன்பின் அடிக்கடி எதாவது ஒரு விசயத்தை முன்னிட்டு அவனது தாய் அனுப்பியதாகவோ, அல்லது வேறு விசயமாகவோ நான் இருந்தாலும், இல்லையென்றாலும் எனது வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.

சிலநேரங்களில் நேரிலும், பல நேரங்களில் வீட்டில் பேச்சுவாக்கிலும் அதைக் கேட்கும்போது மனதில் இதமான சாரல்!

நம்பிக்கை துளிர்விடத் துவங்கியிருந்தது!

எனது தாயின் முன்பே அவன் சில கேள்விகளை கல்வி சார்ந்தோ, கல்லூரி சார்ந்தோ கேட்கும்போது நல்ல பிள்ளையாக பதில் கூறத் துவங்கியிருந்தேன்.

சாதித்துவிட்டான்!

பேசாதவளை பேசச் செய்த சந்தோசம் அவன் முகத்தில் கண்டேன்!

முறைத்ததும், முற்றுப் பெற்றிருந்தது பேச்சு!

அறைக்குள் சென்று முறுவலித்துக் கொண்டேன்.

அப்டியே சில மாதங்கள் விரைந்தது!

பேச்சுகள் காரண காரியமில்லாமல், காதலர்களுக்கானதாய் இல்லாமல், சப்பென்று ஆனாலும் சந்தோச வானில் பறக்கும் வகையில் அமைந்து இருவரையும் ஆர்ப்பரித்தது என்னவோ உண்மை.

பொதுவான பேச்சுகள் மட்டுந்தானே!

எனது தாயின் மனதில் நல்லதொரு மனிதனாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தான்.  அவர் இல்லாத வேளைகளில் வந்தால்கூட, அதை எண்ணிப் பதறாத வகையில் நம்பிக்கை வைத்திருந்தார்.

ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை.

ஆனாலும் காதல் வளர்ந்தது!

எனக்கு மூன்றாம் ஆண்டு துவங்கியபோது, கல்லூரிக் கல்வியை நிறைவு செய்திருந்தான்.

வேலைக்காக வேண்டி அலைய வேண்டிய நிர்பந்த நிலையிலில்லை.

சொந்தத் தொழிலைப் பார்க்கச் சென்றுவிட்டான்!

அதன்பிறகும் அவ்வப்போது பேருந்தில் என்றாவது வந்து போனான்.

எனக்கு கர்வம் பிறந்தது.

எனக்காகவே வந்து செல்கிறான் இன்றும்!

திருமண வயது வந்துவிட்டது என எங்கள் வீட்டிற்கு வரன்கள் வரிசை கட்டி நின்றது.

குறைவற்ற தோற்றம். நல்ல நிறம். வசியமான வட்ட முகம், எனக்கு!

ஆகையால், பெற்றவர்களுக்கு எனை கரையேற்றுதலில் வரும் பின்னடைவுகளைப் பற்றிய பயமில்லாது இருந்தார்கள்.

வரன் வந்தால், பரணில் அமர்ந்து வேண்டுவதை வாடிக்கையாக்கியிருந்தேன்.

‘இறைவா, இந்தத் திருமணம் கைகூடாமல் நிற்க வேண்டும்!’, எனது வேண்டுதல்கள் அனைத்தும் பலிதமானது.

கேட்டதைக் கொடுக்க இயலாததால் கைகூடாமல் போனது.

அழகிருந்தாலும், அணிய ஆபரணம் அதிகம் இல்லாத பெண்ணை யாரெடுப்பார் என்பது அப்போதுதான் சற்று உரைத்ததுபோலும்.

புலம்பல்கள் நீண்டது.

புதுத்தெம்பு வந்திருந்தது எனக்கு!

பணிக்கு அவன் செல்லத் துவங்கியிருந்தாலும், தமக்கைக்குப் பிறகே இவனது திருமணம் பற்றிய பேச்சு துவங்கும்.

அதனால் இன்னும் முழுமையாக மனதைத் திறக்கவில்லை.

அதைக் கூறச் சென்றால், வினையாகக் கூடும் என கூறாமலேயே தவித்தாலும், தவிர்த்து நின்றேன்.

தங்களைப்போல வரவிற்கும், செலவிற்கும் பெண் கஷ்டப்படாமல் இருக்க, எங்கள் வீட்டில் நல்ல வரனை வலைவீசித் தேடுகிறார்கள்.

வலையில் வந்து விழும் வரன் அனைத்தும், அவன் கஷ்டப்படாமல் இருக்க வரதட்சணை எனும் திமிங்கலத்தை எதிர்நோக்கி வலை விரிக்க…

இதற்கிடையே அவனது வரவுகள் வரவு வைக்கப்பட்டது. சந்தேகம் எழவே இல்லை.

சேமிப்புகள் பெரியளவில் இல்லாததால் திருமணம் தள்ளிப் போனது.

உள்ளம் களிப்பானது!

எனது நிலை அறியாத பெற்றோர்கள் புலம்பித் தவித்தனர்.

“ஒத்தப் புள்ளைதான் வச்சிருக்கோம்.  அதுக்கு ஒரு நல்ல பையனா தகைஞ்சு வந்தா, புடிச்சுக் குடுத்துட்டு நிம்மதியா இருக்கலாம்னா எதாவது ஒன்னு சொல்லி தட்டிப் போகுதே”

“முப்பது பவுனுக்கு மேல நம்மால போட முடியாது.  இவளுக்கு முப்பது பையனுக்கு ஒரு அஞ்சு. அதுக்குமேல எங்க போறது”

இதையே தரகரிடமும் சொல்லி வைத்தாயிற்று.

வரக்கூடிய வரனின் சம்பளம், நிலபுலன்கள் இவற்றைப் பொறுத்து கல்யாணச் சந்தை விறுவிறுப்பாக இருந்தது.

நம்பிக்கை தளர்ந்துபோகும் அளவிற்கு இன்னும் பெற்றோர்கள் களைக்கவில்லை.

அதனால் உற்றார், உறவுனர் மட்டுமல்லாது தூரத்துச் சொந்தத்திலும் சொல்லி வைக்கப்பட்டது.

மாதம் இரண்டு வரன்களாவது வந்து சென்றது.

இது தகைந்துவிடாதா, அடுத்து வரக்கூடியதாவது தகைந்து விடாதா என்கிற எதிர்பார்ப்பு பெரியவர்களிடம் மண்டிக் கிடந்தது.

ஆனால் அதற்கு முற்றிலும் மாறான மனதோடு நான் வலம் வந்தேன்.

இதை அறியாமல் பெற்றோர்!

இரு மனமும் வெவ்வேறு விதமான தவிப்பிலேயே உழன்றது!

எண்ணம் அவனுக்குள் ஊடுருவியதோ?

அவனது தமக்கைக்கு திருமணம் கைகூடிய சேதி கேட்டதும், நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

அவரும் இலகுவாகக் பேசும் பழக்கம் இல்லாதவர்.

எங்கேனும் வெளியில் சந்திக்க நேர்ந்தால் புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அவர், அதாவது எனது வருங்கால நாத்தனார் திருமணமாகிச் சென்றுவிட்டால், இனியும் அதிகம் தாமதிக்க வேண்டி வராது.

அவனது தமக்கைக்கு முடித்த சில மாதங்களிலேயே இவனுக்கும் திருமணம் பேச வாய்ப்புள்ளது.

சேமித்த மகிழ்ச்சியைக் கொண்டாட சேலை கட்டத் துவங்கிவிட்டேன்!

அம்மாதான் யோசனையோடு பார்த்தார்.

“கட்டு, கட்டுனு கழுதையா கத்துனப்பல்லாம் மாட்டேனுட்டு, இப்ப எதுக்குடீ சுத்திட்டு தெரியற?”

“இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு, எது எப்பத் தோணும், எப்ப என்ன செய்வாளுங்கன்னே ஒன்னும் புரிய மாட்டுது”, என்றபடியே கடந்திருந்தார்.

மகிழ்ச்சி நீடித்ததா?

————————