PNV-16
PNV-16
இதழ்-16
நாமக்கல்லின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து பேருந்து மூலம் ஒருமணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருக்கும் பரங்கிப்பூப்பட்டி என்னும் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் கலைவாணி.
செல்வராகவன் காவல் துறையில் வாகன ஓட்டுநராக சேலம் உருக்கு ஆலையில் இருக்கும் காவல்துறையின் சிறப்புப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
சொந்த வீடு, இருவர் சம்பாத்தியம், எளிமையான வாழ்க்கை முறை, ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரண்டு பிள்ளைகள் என நிம்மதியான நடுத்தட்டு வாழ்க்கை அவர்களுடையது.
வெளி உலகைப் பற்றி எதுவும் அறியாத மிகவும் அப்பாவியான பெண் அவர்கள் மகள் வசுமித்ரா.
நன்றாகப் படித்து, விருப்பப்பட்ட கணினியியல் துறையைத் தேர்ந்தெடுத்து இறுதி ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்தான் வசந்த்.
கேம்பஸ் செலெக்ஷனில், மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு தேர்வாகியிருந்தான்.
வெளிநாட்டு வாழ்க்கையை எதிர்கால கனவாகக் கொண்டு, நிகழ் காலத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து பகுதி நேரமாக வேலையும் செய்துகொண்டிருந்தான் அவன்.
இத்தனை பெருமைகளுடனும், பெற்றவர்கள் மனம் கோணாமல் நடந்துகொள்ளும் பிள்ளை என்ற பெருமையையும் சேர்த்து அவர்களுக்குள் விதைத்திருந்தான் வசந்த்.
வசுமித்ராவை பொறுத்தவரை அவளுடைய அவளுடைய குடும்பம்தான் அவளுடைய உலகம்.
***
சில வருடங்களுக்கு முன்பாக, அவருடைய வகுப்பில் நன்றாகப் படிக்கும் உஷா என்ற மாணவி, தொடர்ந்து பள்ளிக்கு வராமல் போக, அப்படியே விட்டுவிட மனமின்றி, அவளது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சில மாணவர்கள் மூலம், அவளையும் அவளுடைய பெற்றோரையும், பள்ளியில் தன்னை வந்து சந்திக்குமாறு கூறி தகவல் அனுப்பினார் கலைவாணி.
இரு தினங்களுக்குப் பிறகு, தன் மகள் உஷாவை அழைத்துக்கொண்டு, அவரை சந்திக்க வந்தார் மாரி.
ஒரே குழுவாக வசிக்கும், தெலுங்கு பேசும், சேலத்து ஒட்டர்கள் என்ற ஆதி பழங்குடி இன வகுப்பைச் சேர்ந்தவர் மாரி.
கிணறு தோண்டுவது, இவர்கள் பரம்பரையாகச் செய்துவரும் தொழில். கடப்பாரையை கைகளில் பிடித்தால், ஆண்களுக்கு குறைவில்லாமல் மிக வலிமையுடன் பெண்களும் வேலை செய்வார்கள்.
கிணறுகள் எடுப்பது வெகுவாக குறைந்துவரும் இப்போதைய காலகட்டத்தில், ஒப்பந்ததாரர்கள் மூலம் வீடு கட்ட கடைக்கால் குழிகள் எடுப்பது, சாலையில் பள்ளங்கள் தோண்டுவது என அவர்கள் அனைவரும் தினக் கூலிக்கு வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கென்று சம்பிரதாய பழக்கவழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட கோட்பாடுகள் உண்டு.
மாரியைப் பார்த்தவுடன் ஓரளவுக்கு அவரை பற்றிப் புரிந்துவிட, “நல்லா படிக்கற பொண்ணு! அவளை என் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம வீட்டுல வெச்சிருக்கீங்க” என கொஞ்சம் கோபமாகக் கலைவாணி கேட்க, பழக்கம் காரணமாக, நன்றாகவே தமிழில் பதில் சொன்னார் மாரி.
“என் பெரிய பொண்ண, என் வூட்டுக்காரு அக்கா மவனுக்கே கட்டி கொடுத்தோம் மா!
ஆனா அந்த புள்ளைய நல்ல படியா வெச்சு வாழம, குடிச்சிட்டு வந்து கொடுமை செஞ்சவன், ஒரு மாசம் முன்னால நெருப்பு வெச்சி கொளுத்திட்டான் எங்க மறுமவன்.
என் வூட்டுக்காரன், அவனும் ஒரு குடிகார படுபாவி; எல்லாம் தெரிஞ்சே, ஆறாயிரம் பணத்தை வாங்கிட்டு, அந்த புள்ள செத்து போனதைக்கூட பெருசா எடுத்துக்காம, அவனுகள ஒண்ணும் செய்யாம அப்படியே உட்டுட்டான் மா!” எனச் சொல்லி அழுகையில் குலுங்கியவர்,
“இப்ப இந்த புள்ளையையே அவனுக்கு ரெண்டாந்தாரமா கொடுக்க ஒத்துக்கிட்டு வந்து நிக்கறான்!
நல்லா பெரிய குடும்பத்து புள்ள மாதிரி என்ன அழகா இருக்குமா இந்த பொண்ணு;
இந்த பச்சை புள்ளைய உசுரோட பலி கொடுக்க எனக்கு மனசு வரலம்மா;” எனப் படிப்பறிவில்லாமல் இருந்தாலும் தெளிவாகப் பேசியவர்,
“அத அந்த ஆளுகிட்ட சொன்னதுக்கு; சண்டையும் சச்சரவுமா போயிடுச்சு;
வேற வழி தெரியாம எங்க குல வழக்கப்படி நான் அந்த ஆளை அத்துவுட்டுட்டு, இந்த புள்ளைய கூட்டிட்டு தனியா வந்துட்டேன்;
இருந்தாலும் அவங்க குடும்பத்து ஆளுங்கள ஒண்ணு சேர்த்துக்கிட்டு; பொண்ண அவன்கிட்ட ஒப்படைக்க சொல்லி தினமும் வந்து சண்டை பிடிக்கிறான்.
இவளை தனியா உட பயமா இருக்கு; கொரங்கு குட்டிய மடில கட்டிட்டு சுத்துமே அத மாதிரி சுத்திட்டு இருக்கேன்.
இத புள்ளையையாவது நல்ல படியா படிக்கவெச்சு, நல்ல ஒழுக்கமான பையனா பார்த்து கட்டிக்கொடுக்கணும்னு நினைக்கிறேன்.
எங்க ஜனங்களை தாண்டி எங்க போறதுன்னே தெரியல!’ என மாரி தன் வேதனையைக் கொட்ட, அத்த பதிமூன்று வயது பெண்ணின் நிலையை எண்ணி பதறிப்போனது கலைவாணிக்கு.
உடல் உழைப்பால் கச்சிதமாக இருக்கும் உடற்கட்டுடன் இருக்கும் மாரியை பார்க்க, அவருக்கே முப்பத்தைந்து வயதிற்குள்ளாகத்தான் இருக்கும் என தோன்றியது வாணிக்கு.
அவரை பற்றிய சில அடிப்படைத் தகவல்களைப் பெற்றுக்கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவராக தன் வீட்டு விலாசத்தை அவருக்குக் கொடுத்து தன்னை வீட்டில் வந்து சந்திக்கச் சொன்னார் கலைவாணி.
***
தங்கள் வீட்டிலேயே அவர் தன் மகளுடன் குடியிருக்க ஏற்பாடு செய்தவர், ராகவனுக்குத் தெரிந்தவர் மூலம், ஒரு மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தில் மாரிக்கு நிரந்தர வேலைக்கும் ஏற்பாடு செய்தார்.
ராகவன் உதவியுடன் காவல்துறையினர் மூலம் மாரியின் கணவரை, அவர் மேலும் இவர்களைத் தொல்லை செய்யாதவண்ணம் அடக்கியும் வைத்தார்.
அதன் பின் அவர்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே ஒன்றிப்போன மாரி, கலைவாணியையும் ராகவனையும் தெய்வமாகவே பார்க்கத் தொடங்கிவிட்டார்.
அவர்களுடைய வழிகாட்டுதலுடன் உஷா பன்னிரண்டாம் வகுப்பில் நல்லபடியாகத் தேர்ச்சி பெற்றுவிட, அரசு கல்லூரியிலேயே சேர்த்து பி.எஸ்.சி செவிலியர் படிப்பில் இறுதி ஆண்டில் இருக்கிறாள் அவள்.
***
அரங்கநாதன் சுகாதாரத்துறையில் வேலை பார்க்கும் ஒரு அரசு அலுவலர். பணியிட மாற்றம் காரணமாக ராகவன் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில், நான்கைந்து மதத்திற்கு முன்பாக குடிவந்திருந்தது அவர்களுடைய குடும்பம்.
அருணா ஒரு இயல்பான, கலகலப்பான குடும்பத்தலைவி.
அவர்களுடைய மகன் தீபப்ரகாசன் விடுதியில் தங்கி, சென்னை ஐ.ஐ.டீயில், தங்கப்பதக்கத்துடன் பீ.டெக் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்து, அதே பிரிவில் அங்கேயே இரண்டாம் ஆண்டு எம்.டெக் படித்துக்கொண்டிருந்தான்.
அவர்களுடைய மகள் சரிகா இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி மைக்ரோ பயாலஜி படிப்பை நாமக்கல்லில் தொடர்கிறாள்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது முக்கியப் பண்டிகை சமயங்களிலோ, சென்னை சென்று, அங்கே இருக்கும் அவர்களுடைய சொந்த வீட்டில் இரண்டு மூன்று தினங்கள் தங்கி வருவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருப்பதால், நாமக்கல் வரவேண்டிய அவசியமே தீபனுக்கு ஏற்படவில்லை.
அங்கே வந்த சில தினங்களிலேயே இரு குடும்பங்களுக்கிடையே இனிமையான ஒரு நட்பு உருவானது.
மித்ராவும் சரிகாவும் ஒத்த வயதிலிருந்ததால், அவர்களுக்கே உரிய துருதுருப்புடன் பழகத்தொடங்கி, நாட்களின் ஓட்டத்தில் ஒருவருடைய அந்தரங்கங்களை மற்றவரிடம் வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு மிகவும் நெருங்கிப்போனார்கள்.
***
“கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்!” என மெல்லிய குரலில் பாடிக் கொண்டே மித்ரா கீழே இறங்க,
மறுபடியும் அவளுடைய முதுகில் ஒரு அடி வைத்தவள், “தரும அடி வாங்க போற பக்கீ!” என்றாள் சரிகா கண்டனமாக.
வேண்டுமென்றே, “சரி…காக்கா” என அழைத்தவள், அவளுடைய முறைப்பைப் பதிலாகப் பெற்றுக் கொண்டு, ஓடி வந்து, மாடிப்படியின் அருகில் உயர்ந்து வளர்ந்திருந்த மாமரத்தின் நீண்ட கிளையில் தொங்கிய ஊஞ்சலில் துள்ளி உட்கார்ந்த மித்ரா, ” நீ எங்கண்ணாவ சைட் அடிக்கவே இல்லைன்னு சொல்லு பார்க்கலாம்!” எனக் கிசுகிசுப்பான குரலில் கேட்க,
“உங்க அண்ணா அப்படியே கிருஷ் படத்துல வற ஹ்ரித்திக் ரோஷன் மாதிரி சூப்பர் ஹீரோ பாரு; பொண்ணுங்க பார்த்த உடனே மாமனோட அழகுல அப்படியே மயங்கி விழ” என வடிவேலு போல் சொல்லி நொடிந்து கொண்டவள், “நீ எங்க தீபன் அண்ணாவை பார்த்ததில்ல…ல அதான் இவ்வளவு அலட்டிக்கற!” என்றாள் சரிகா பெருமை பொங்க.
அதில் சுறுசுறுவென கோபம் ஏற, “உங்கண்ணா மட்டும் என்ன ஹ்ரித்திக் ரோஷன் மாதிரி சூப்பர் ஹீரோவா?” எனப் பதிலுக்கு தானும் சீறினாள் மித்ரா.
“சொன்னாலும் சொல்லாட்டியும் எங்கண்ணா சூப்பர் ஹீரோதான் தெரிஞ்சிக்கோ!
அவங்க ஐ.ஐ.டி கோல்ட் மெடலிஸ்ட் தெரியுமா? படிப்பை முடிச்ச உடனே ஐ.எஸ்.ஆர்.ஓ இல்லனா டீ.ஆர்.டீ.ஓ ல அவங்களுக்கு ஈஸியா வேலை கிடைச்சுடும்! அவங்க சைன்டிஸ்ட் எண்ட்ரன்ஸ் டெஸ்ட் எழுத பிரிப்பர் பண்ணிட்டு இருகாங்க!” என தன் அண்ணனின் பெருமையைத் தொடர்ந்தவள், “அவங்க சிக்ஸ் ஃபீட் ப்ளஸ் ஹைட்; டெய்லி ஜிம் போய் ஃபிட்டா இருப்பாங்க!
உங்க பேமிலி மாதிரி பிஸ்ஸா பர்கர் சாப்பிட்றவங்கன்னு நினைச்சியா, ‘எப்பவுமே ஹெல்தியா சாப்பிடணும்; ஹெல்தியா திங்க் பண்ணனும்னு’ சொல்லுவாங்க தீபன் அண்ணா! எல்லாத்தையும் விட ரொம்ப கேரிங்” என சொல்லி அவளை அறியாமல் தீபனை பற்றிய எண்ணத்தை மித்ராவின் மனதில் விதைத்திருந்தாள் சரிகா!
கற்பனையாக அவனது உருவத்தை மனதிற்குள் வரைந்தவள், அதை வெளிக்காண்பிக்காமல், “ப்பா! முடியல காது கொய்ங்னுது !” என சொல்லி தன் சுண்டு விரலால் காதை குடைந்தவள், “நல்லவேளை ரத்தம் வரல!” என்றாள் மித்ரா.
“எல்லாம் பொறாமை!” என மறுபடியும் சரிகா அவளைச் சீண்ட, “ம்! நான் ஏன் உங்கண்ணனை பார்த்து பொறாமை படணும்;
வசந்த் அண்ணா கூடத்தான் மெரிட்ல வந்தாங்க; அவங்களுக்கும் கூடத்தான் காம்ப்ஸ்ல வேலை கிடைச்சிருக்கு; ஃபாரின்லாம் போகப்போறாங்க!
இப்பவே ஃப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து பிஸினஸ் பன்றாங்க! சொந்த சம்பாத்தியத்துல பைக்; லேப்டாப்; ஆண்ட்ராய்டு போன்; எல்லாமே வங்கியிருக்காங்க!” என பதிலுக்கு தன் அண்ணனின் புகழ் பாடியவள், “எங்க பேமிலி ஒண்ணும் பிஸ்ஸா பர்கர் பேமிலி இல்ல ம்க்கும்! எனக்கு பிடிக்கும்னு அண்ணா வாங்கிட்டு வந்து தராங்க அவ்வளவுதான்!
அம்மா அப்பாவுக்கு அதெல்லாம் பிடிக்காது தெரிஞ்சிக்கோ!” என அவளிடம் பாய்ந்தாள் மித்ரா!
அனைத்தையும் வசந்த் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருக்க, அதை உணர்ந்து தயக்கத்துடன் மேலே பார்த்தாள் சரிகா.
தங்கை அறியாவண்ணம், சரிகாவிடம் “போதும்! அவளை உள்ளே அனுப்பு” என அவன் ஜாடையில் சொல்ல,
“மித்து! போதும்; நீ சொன்னதை நான் அக்சப்ட் பண்ணிக்கறேன்; நீ ஏதோ ரெக்கார்ட் எழுதணும்னு சொன்ன இல்ல! போய் அதை முடி!” என சரிகா சொல்ல, மேற்கொண்டு ஏதும் பேசாமல் உள்ளே போனாள் மித்ரா.
அவள் சென்றதும் கீழே இறங்கி வந்தவன், மாடிப்படியில் நின்றுகொண்டே, “அவ கிட்ட நம்ம மேட்டர்லாம் சொல்லி வைக்காத. அவ ஒரு ஓட்ட வாய்! எல்லாத்தையும் அம்மா கிட்ட உளறிடுவா!” என சரிகாவை எச்சரித்துவிட்டு, நாளைக்கு த்ரீ ஓ க்ளாக் காலேஜ் பக்கத்துல இருக்கற ஐஸ்க்ரீம் பார்லர்ல வெயிட் பண்ணு! நான் வந்து பிக் அப் பண்ணிக்கறேன்!” என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, அக்கம்பக்கம் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவளது கன்னத்தை மென்மையாக வருடிவிட்டுச் சென்றான் வசந்த்.
***
வேடிக்கையும் விளையாட்டுமாக சரிகா – மிதராவுடனான நட்புடனும், யாரும் அறியாவண்ணம் இலைமறைகாயாக சரிகா – வசத்துடனான காதலுமாக சில நாட்கள் கடந்திருக்க, ஒரு நாள் பரபரப்பான காலை நேரத்திலேயே மூச்சிரைக்க சரிகாவின் வீட்டிற்குள் வந்தவள், சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த அருணாவிடம் சென்று, “அத்தை; சரிகாக்கா எங்க” என படபடக்க கேட்டாள் மித்ரா
“அவ ரூம்ல காலேஜ் போக கிளம்பிட்டு இருக்கா பாரு!” என அருணா சொல்லிக்கொண்டிருக்க, அவர் முடிப்பதற்குள்ளாகவே மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள் மித்ரா.
“மித்து! என்ன இவ்வளவு அவசரம்; கீழ விழுந்துற போற கண்ணு; மெதுவா போ!” என அவர் சொன்ன வார்த்தைகள் அவளது செவிகளை எட்டியதாகவே தெரியவில்லை.
வேகம் குறையாமல் வந்து சரிகாவின் அறைக்கதவை அவள் தடதடவென தட்ட, பட்டென கதவைத் திறந்தவள், அந்த நேரத்தில் அவளை அதுவும் பள்ளி சீருடையில் அங்கே எதிர்பாராமல் கண்டதில் வியத்து போய், “ஏய்! என்ன பிரச்சினை!” என, வசந்துடனான அவளது காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரிந்துவிட்டதோ என்ற பதட்டத்துடன் சரிகா கேட்க,
“க்கா! உங்களுக்கு நிரஞ்சனா அக்காவை தெரியுமில்ல!” என மித்ரா மூச்சுவாங்க கேட்கவும், வேறு ஏதோ பிரச்சினை என்பதில் அமைதியுற்றவளாக, நெற்றியைச் சுருக்கி யோசித்த சரிகா, “யாரு; நம்ம ஆப்போசிட் சைட்ல லாஸ்ட் வீட்டுல இருக்காங்களே, சென்னை ஐடி கம்பெனில வேலை செய்யற அந்த அக்காவா?” என்று கேட்க,
“ஆமாம்..கா; வீக் எண்ட் லீவுல இங்க வந்திருப்பாங்க போலிருக்கு; என்ன பிரச்சனைன்னு தெரியல; தூக்கு போட்டு சூசைட் பண்ணிக்கிட்டாங்க;
போலிஸ்லாம் வந்திருக்கு!
பாடியை ஏத்த ஆம்புலன்ஸ் வந்திருக்கு!” என வருத்தத்துடன், கண்களில் கண்ணீர் அணையிடச் சொன்னாள் மித்ரா.
ஏதோ எண்ணம் தோன்றவும் அவளைத் தள்ளிக்கொண்டு கீழே ஓடியவள், வேகமாக வெளியில் சென்று காம்பௌண்ட் கேட்டை பிடித்து நின்றவாறு, அந்த பெண்ணின் வீட்டைப் பார்க்க, வீதியில் கும்பலாக மக்கள் திரண்டிருப்பது தெரிந்தது.
மிதாராவும் அங்கே வந்து அவளது தோளைப் பற்றிக் கொண்டு நிற்க, சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணின் சடலத்தை ஏற்றிக்கொண்டு அந்த ஆம்புலன்ஸ் அவர்களைக் கடந்து போனது.
மனதில் பாரம் ஏறிய உணர்வுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர் பெண்கள் இருவரும்.
***
சிறு வயது முதலே, பார்த்துப் பழகிக் கூடவே வசித்து வந்த அந்த பெண்ணின் மரணமும், அதைத் தொடர்ந்த அவளது ஈமச்சடங்குகளும், அவளுடைய பெற்றோரின் கதறலும் அந்த தெருவில் வசித்து வந்த பலரையும் வெகுவாகவே பாதித்திருந்தது.
அதுவும் வசுமித்ராவை பொறுத்த வரை அந்த பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்தது எனலாம்.
நாள் முழுவதும் அவளைப் பற்றியே மித்ரா பேசிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அதனால் எரிச்சலுற்ற வசந்த், “மித்ரா! அந்த பெண்ணை பத்தி பேசறதை நீ நிறுத்த போறியா இல்லையா!
நீ இப்படியே இருந்தால் நான் வீட்டுக்கே வரமாட்டேன்!” என்று சொல்ல,
“ஏற்கனவே அப்பா பிள்ளை ரெண்டு பேரும் எதாவது சாக்கு சொல்லிட்டு வீட்டுக்கு லேட்டாதான் வரீங்க!
அவராவது சேலத்துல வேலைக்கு போறாரு; உனக்கு என்ன வந்தது?
அதுவும் நீ சனி ஞாயிறுன்னா வீட்டுக்கே வறதில்ல; கேட்டா ஆபிஸ்ல வேலைனு சொல்ற;
இப்ப இது வேறயா” எனப் புலம்பிய கலைவாணி, “வசும்மா! அவன் சொல்ற மாதிரி இப்படியே இருந்தால் அது நல்லதில்லை; வேற வழி இல்ல; இதையெல்லாம் கடந்துவந்துதான் ஆகணும்” என்றவர், “இந்த காலத்து பிள்ளைங்களுக்கு எதையும் ஃபேஸ் பண்ற தைரியமே இல்ல!
அதனாலதான் ஒண்ணுமே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் இப்படி தற்கொலை பண்ணிக்கறாங்க” என முணுமுணுத்தவாறே சமையலைத் தொடர்ந்தார் கலைவாணி.
***
சில தினங்களாகவே மாரியின் போக்கில் எதோ மாற்றங்கள் உண்டானதுபோல் தெரிந்தது வாணிக்கு.
எதார்த்தமான அவரது பேச்சு மாறிப்போயிருந்தது. ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதே இல்லை மாரி. எப்பொழுதுமே எதோ சிந்தனையிலேயே இருப்பது போல் தோன்றியது அவருக்கு.
அதைப் பற்றி ராகவனிடம் புலம்பிக்கொண்டிருந்தவர், ஒரு நாள் தானே மாறியிடம் கேட்டுவிடலாம் எனக் கலைவாணி எண்ணி இருக்க, கையில் பழங்கள் மற்றும் இனிப்புகள் அடங்கிய தாம்பூலத் தட்டுடன் தானே அவரை தேடி வந்த மாரி, “பொண்ணுக்கு மாப்பிளை பார்த்துட்டேன் வாணிம்மா! என்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பா மகன்தான்! நம்ம உஷா அளவுக்குப் படிப்பு இல்லனாலும், நல்ல ஒழுக்கமான பையன்; எங்க மத்த ஆளுங்க மாதிரி சாராயம் குடிக்கிற பழக்கமெல்லாம் இல்லாம ஒழுங்கா வேலைக்கு போறான்” எனச் சொல்லி, அந்த தட்டை அவரிடம் நீட்டினார்.
தன்னிடம் கலக்காமல் அப்படி ஒரு முடிவை மாரி எடுத்ததைச் சுத்தமாக நம்பவே முடியவில்லை வாணியால்.
“என்ன மாரி! இப்படி திடுதிப்புனு வந்து சொல்ற; உஷாவுக்கு இன்னும் படிப்பு முடியலையே?” என அவர் உள்ளே போன குரலில் சொல்ல, “இல்ல வாணிம்மா! என் தம்பி பொண்ணோட படிப்பு முடியரவரைக்கும் அவளைத் தொந்தரவு பண்ணமாட்டேனு சொல்லியிருக்கான்; அதோட அவளுக்கு எங்க வேலை கிடைக்குதோ அங்கேயே தொழிலை பார்த்துட்டு போறேன்னும் அவன் சொன்னதாலதான் இந்த கல்யாணத்துக்கே உஷா ஒத்துக்கிச்சு” என்றவர், “இந்த காலத்துல யாரை நம்பறது; யாரை நம்பக்கூடதுன்னு ஒண்ணுமே புரியல வாணிம்மா! அப்பன் துணை இல்லாம இந்த பொண்ண இவ்வளவுதூரம் கொண்டுவந்ததே நீங்கத் துணையா இருந்ததாலதான்! அதுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன்;
அதுக்காக நான் என்ன வேணா செய்வேன் வாணிம்மா: ஆனா உஷாவை இனிமேல் என்னால இங்க வெச்சுக்க முடியாது” என நா தழுதழுக்கச் சொல்லி முடித்த மாரி, ஒரே வாரத்திற்குள் மகளுடைய திருமணத்தை நடத்தி முடித்து அவளைப் புகுந்த வீடு அனுப்பி வைத்தார்.
***
சிறப்பு வகுப்புகள் இல்லாத காரணத்தால் மாலை சீக்கிரமே பள்ளியிலிருந்து வந்த மித்ரா, ‘அம்மா ஸ்கூல்ல இருந்து இன்னும் வந்திருக்க மாட்டங்களே; வீடுவேற திறந்தே கிடக்கே’ என்ற யோசனையுடன் வீட்டிற்குள் நுழைய, வானம் இருட்டிக்கொண்டு வரவும், காயவைத்த துணிகளை எடுக்க அவசரமாக மாடிக்கு வந்தாள்.
மகளின் திருமணம் முடிந்ததும், தானும் சில தினங்கள் மகளுடன் தங்கியிருக்கப்போவதாகச் சொல்லிவிட்டு மாரி சென்றிருக்க, அந்த வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது.
எதார்த்தமாக அவளது பார்வை அந்த வீட்டின் பக்கவாட்டில் செல்ல, அங்கே சுவரில் சாய்ந்தபடி வசந்துடன் மிக நெருக்கமாக உட்கார்ந்துகொண்டு சரிகா எதோ பேசிக்கொண்டிருக்க, அதைப் பார்த்து அதிர்ந்துபோய் சில நொடிகள் நின்றவள், பின் விளைவுகள் எதை பற்றியும் சற்றும் யோசிக்காமல், “சரிகா… அண்ணீஈஈஈ” என்றவாறு ஓடி வந்து அவளை அணைத்துக்கொண்டாள் வசுமித்ரா தான் எவ்வளவு பெரிய தவறுக்குத் துணைபோகிறோம் என்பதை உணராமல்!
அந்த நேரத்தில் அவளை அங்கே எதிர்பார்க்காத வசந்தும் சரிகாவும், கையும் களவுமாக அவளிடம் மாட்டிக்கொண்ட பயத்தில் மிரட்சியுடன் அவளைப் பார்த்தனர்.