PNV-19
PNV-19
இதழ்-19
அந்த இளம் காலை நேரத்தில் சரிகாவின் அண்ணன் அப்படி புயல் போல் அங்கே ஏன் வந்தான், அவ்வளவு கோபத்துடன் வசந்தை ஏன் தேடினான் என எதுவுமே புரியவில்லை வசுமித்ராவுக்கு.
மிரண்டு போய் அவள் அப்படியே உட்கார்ந்திருக்க, தண்ணீரை எடுத்துவந்து கலைவாணியிடம் கொடுத்து, “வாணிம்மா! முதல்ல இதை குடிங்க” என் மாரி சொல்ல, வறண்டிருந்த தொண்டையைக் கொஞ்சம் நனைத்துக்கொண்டு, “யாரு மாரி அவன்! வசந்த் மேல ஏன் இவ்வளவு கோவமா இருக்கான்!
அவனோட கூட காலேஜ்ல படிக்கற பையனா இருக்குமோ?” எனக் குழப்பத்துடன் கலைவாணி கேட்க, மாரிக்குமே அவன் யார் என்ன என்பது தெரியாத காரணத்தால் யோசனையுடன், “நிரஞ்சனா பொண்ணுக்கு அண்ணன் தம்பி யாரும் இல்ல…ல்ல! அது அவங்களுக்கு ஒரே பொண்ணுதான?” என்று கேட்டார் அவர்.
மாரி ஏன் சம்பந்தமில்லாமல் இறந்துபோன நிரஞ்சனாவை பற்றிப் பேசுகிறார் என கலைவாணி குழம்ப, “அவங்க சரிகாவோட அண்ணா! மாரிம்மா” என்றாள் மாரி சொன்னதைக் கவனித்துக்கொண்டிருந்த மித்ரா அந்த யானையை பார்த்துக் கொண்டே.
“என்ன சரிகா அண்ணாவா! ஐயோ அப்படினா அந்த புள்ளைக்கும் எதாவது ஆகிப்போச்சா?” என மாரி பதற, ‘அந்த புள்ளைகளும்’ என அவர் சொன்ன வார்த்தையால், அவரை விசித்திரமாகப் பார்த்த கலைவாணி, “மாரி! சரிகாவுக்கு நேத்து ஒரு சின்ன ஆக்சிடென்ட்! நீ இங்க இல்ல..ல்ல அதனால உனக்கு தெரியல” என்றார் கலைவாணி.
அதை கேட்டு, “ஐயோ! ஆண்டவா!” எனப் பதறிய மாரி, ஏதோ சொல்ல எத்தனித்து, அங்கே மித்ரா இருப்பதை உணர்ந்து, “பாப்பா! பள்ளிக்கூடம் போக நேரம் ஆகுது இல்ல! போய் குளி; போ” என அவளை அதட்ட, தயக்கத்துடன் அன்னையின் முகத்தில் படர்ந்திருந்த வேதனையை அளந்துகொண்டே குளிக்கச்சென்றாள் மித்ரா.
மித்ரா அங்கிருந்து சென்றதும், சோபாவில் உட்கார்ந்திருந்த கலைவாணிக்கு அருகில் தரையில் அவரை நெருங்கி உட்கார்ந்துகொண்டு, மெல்லிய குரலில், “வணிம்மா! தம்பியோட போக்கு கொஞ்ச நாளாவே சரியில்ல! நானு படிப்பறிவில்லாதவ; காலத்துக்கு ஏத்தமாதிரி இருக்கற புள்ளய நானா எதாவது தப்ப நினைச்சுகிட்டு, எதையாவது உங்க கிட்ட சொல்லக்கூடாதுனு பயந்துட்டு சும்மா இருந்தேன்; ஆனா இப்ப நெலம கைமீறி போன மாதிரி இருக்கு” என்றவர், அவர் அறிந்த அனைத்தையும், தான் வசந்த்திடம் பேசியது உட்பட, அவரிடம் சொல்லிவிட்டு, “நானு அப்பக்கூட தம்பிய பார்த்து பயப்படல வாணிம்மா! இந்த பொம்பள புள்ளைங்கள மாதிரி உஷாவுக்கும் பயம் உட்டு போயிடுமோன்னுதான் அவசர அவசரமா கல்யாணத்த முடிச்சேன்;
சரிகா பொண்ணும் தம்பியும் பழகறது அவங்க வீட்டுல தெரிஞ்சுபோச்சுனு நினைக்கறேன்! எதுக்கும் தம்பிய கவனமா பார்த்துக்கோங்க” என்று சொல்லி முடித்துவிட்டு, தன வீட்டை நோக்கிப் போனார் மாரி.
அவர் சொன்னதைக் கேட்டு அதனை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்துப்போனார் கலைவாணி.
அவர் இருந்த மனநிலையில் பள்ளிக்கு செல்ல எண்ணமில்லாமல், விடுப்பு எடுத்தவர், மகளை மட்டும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டிலேயே இருந்தார் கலைவாணி. அவருடைய நிலை உணர்ந்து, வேலைக்குச் செல்லாமல் கலைவாணிக்குத் துணையாக அங்கேயே இருந்தார் மாரி.
வசந்தின் நிலையும் அவனைத் தேடிச்சென்ற தீபனின் நிலையும் என்ன எனப் புரியாமல் தவித்தவர், மகனைக் கைப்பேசியில் அழைக்க, அது தொடர்பு எல்லைக்குள்ளேயே இல்லை.
கணவரிடம் நிலைமையைச் சொல்லலாம் என ராகவனை அழைக்க, அவர் அதனை ஏற்கவில்லை.
அவருடைய அலுவலக எண்ணிற்குத் தொடர்புகொண்டு விசாரிக்க, அவர் அவர்களுடைய மேலதிகாரி ஒருவருக்காகக் காரை ஓட்டிக்கொண்டு எங்கோ சென்றிருப்பது தெரிந்தது. மேலதிகாரியுடன் பணியின் நிமித்தம் சென்றிருக்கும் பட்சத்தில் மாலை வரை ராகவன் அழைப்பை ஏற்கமாட்டார் என்பது புரிந்தது கலைவாணிக்கு.
அருணாவிடமாவது ஏதாவது கேட்கலாம் என எண்ணியவர், அவருக்கு அழைக்க, அந்த அழைப்பை ஏற்காமல் துண்டித்துக்கொண்டே இருந்தார் அவர்.
பரீட்சை முடிந்து மதியம் மித்ரா வீடு திரும்பும் வரை பொறுத்துப்பார்த்தவர், மகளையும் மாரியையும் அழைத்துக்கொண்டு, கால் டாக்சி மூலம் சரிகாவை அனுமதித்திருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தார் கலைவாணி.
ஒருவழியாக சரிகா அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டை கண்டுபிடித்து, கலைவாணியும் மற்ற இருவரும் அங்கே செல்ல, அங்கே அரங்கநாதனும் அருணாவும் ஓய்ந்துபோய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவர்களை நோக்கிப் போனார்கள் மூவரும்.
பெண்கள் மட்டுமாக வருவதைப் பார்த்துவிட்டு, ‘நீ போ’ என அரங்கன் ஜாடை செய்யவும், ஆவேசமாக அவர்களை நோக்கி வந்த அருணா, “உன்னை முழுசா நம்பினேனே! என்னை இப்படி ஏமாத்தி என் கழுத்தை அறுத்துட்டயே!
நீயும் ஒரு பொண்ணை பெத்து வெச்சிருக்கியே! அந்த பயம் வேண்டாம்!” என ஆத்திரத்துடன் வார்த்தைகளைத் தணலாக அள்ளி கலைவாணியின் தலையில் கொட்ட,
“ஏன் சரிகாம்மா இப்படியெல்லாம் பேசறீங்க; அவங்க செஞ்சது தப்புதான்; வயசு பிள்ளைங்க இப்படி காதல் கத்தரிக்கான்னு ஏதோ புத்திகெட்டு செஞ்சுட்டாங்க;
நாம பெரியவங்க; எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்! இப்படியெல்லம் பேசாதீங்க” என காதல் பிரச்சினைதானே, பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் கலைவாணி இறங்கிவந்து பேச,
“காதலா! காதல்! அந்த பேரைச் சொல்லித்தானே உன் புள்ளை ஊர் குடியையெல்லாம் கெடுத்துகிட்டு இருக்கான்” என்றவர் மயக்கம் தெளிந்து மகள் சொன்ன அனைத்தையும் அவரிடம் சுருக்கமாகச் சொல்ல, அதிர்ச்சியில் கால்கள் தோய்ந்துபோக, அங்கே உட்கார இடம் கூட இல்லாமல், அப்படியே சுவரில் சாய்ந்து நின்றார் கலைவாணி. அவரை பிடித்துக்கொண்டு உறைந்துநின்றார் மாரி.
இடி தாங்கிய பசுமையான மரத்தைப் போல, ஒரே நொடியில் மனம் கருகிப்போய் தனிமைப்படுத்தப்பட்டு நின்றாள் வசுமித்ரா.
“இப்படி ஒரு புள்ளைய பெத்து அடுத்தவ குடியை கெடுக்கறதுக்கு நீயெல்லாம் நாண்டுக்கிட்டு சாகலாம்!” இறுதியாக ஒலித்த அருணாவின் வார்த்தைகளைச் சுமந்துகொண்டு வீடு திரும்பினார் கலைவாணி.
மாலை மங்கி இருள் பரவத் தொடங்கியிருந்த நேரம், கலைவாணிக்கு ஒரு தொலைப்பேசி செய்தி வந்தது, அன்றைய அதிர்ச்சி அத்துடன் முடியவில்லை என்பதுபோல.
தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு, நாமக்கல்லிலேயே ஒரு மருத்துவமனையில் இருப்பதாகவும், மேற்கொண்டு பரிசோதனைகள் செய்ய வேண்டி இருந்ததால், பணத்தை எடுத்துக்கொண்டு அங்கே வருமாறும் ராகவன் கலைவாணியிடம் சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காமல் வீட்டில் வைத்திருந்த பணத்தையெல்லாம் திரட்டி எடுத்துக்கொண்டு, மகளையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினார்அவர்.
அந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் உடன் வந்தார் மாரி.
அதன் பின் மருத்துவமனையில் சென்று அவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்த ராகவனைப் பார்க்க, நடந்தவற்றை மனைவியிடம் சொல்லத்தொடங்கினார் ராகவன்.
அவர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம், அவர்கள் பகுதியின் காவல் நிலையத்தில் வேலை செய்யும் அவரது நண்பரான தலைமைக் காவலர் ஒருவர் அவரை கைப்பேசியில் அழைத்திருந்தார்.
எதோ முக்கியமான விஷயம் என்பதால்தான் அவர் அழைத்திருக்கிறார் என எண்ணியவர், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, “சொல்லு துரை! இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க! எதாவது முக்கியமான விஷயமா?” என ராகவன் கேட்க,
எதிர்முனையில், ‘எப்படி சொல்றதுன்னு புரியல ராகவா !” எனத் தயக்கத்துடன் தொடங்கியவர், “தீபன்..ன்னு யாரையாவது உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, சற்று யோசித்தவர், “யாரைப் பத்தி கேக்கற; எங்க பக்கத்துவீட்டுல குடிவந்திக்காங்க இல்ல அவங்க பையன் பேரும் தீபன்தான்; ஆனா அவனை நான் நேரில் பார்த்ததில்லையே” என்றார் ராகவன்.
“ஐயோ! அதே பையன்தான் ராகவா! அவன் மூணு நாலு செல் போன்; அதுவும் எல்லாமே காஸ்டலி செட்; எடுத்துட்டு இன்னைக்கு மதியம் ஸ்டேஷனுக்கு வந்தான்.
முக்கியமா வசந்தோட பேரைத்தான் சொன்னான் பா அவன்; ஆனா வசந்தோட போன் அதுல இல்ல;
உன் பையன் வேலை செய்யற ஆபிஸ்க்கு அவனை தேடிட்டு போயிருப்பான் போல இருக்கு,
அவன் அங்க இல்லாததால, அங்க இருந்த பசங்களை அடிச்சு உதைச்சு; அவனுங்க போனை எல்லாம் மட்டும் எடுத்துட்டு வந்திருக்கான்.
கொஞ்ச நாளாவே நாலஞ்சு பசங்க ஒண்ணா சேர்ந்துக்கிட்டு, இங்க அக்கம்பக்கத்து ஊர்ல இருக்கற பொண்ணுங்களையெல்லாம் ஆபாசமா படம் எடுத்து மிரட்டிட்டு இருக்கானுங்க.
அவனோட தங்கை சரிகாவையும், காதலிக்கற மாதிரி நடிச்சு ஏமாத்தி, வசந்துதான் நேத்து மயக்கமருந்து கொடுத்து கார்ல கடத்திட்டு போய் மத்த பசங்களுக்கு… அந்த புள்ளைய; நான் எப்படி சொல்வேன் ராகவா! .” என வெகுவாக தயங்கியவர், “அசிங்கமா வீடியோ எடுத்து மிரட்டி இருக்கான்;
திரும்ப வீட்டுக்கு வரும்போதுதான் அந்த புள்ள கார்ல இருந்து குதிச்சிடுச்சாம்; எல்லாத்தையும் தெளிவா எழுதி கம்பளைண்ட் ஃபைல் பண்ணியிருக்கான்.
கொஞ்ச நாளைக்கு முன்னால உங்க தெருவில இருக்கற ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சு இல்ல; அதோட வீடியோ படமும் அந்த போனுல இருக்கு;
அந்த போன்ல இருக்கற ஒரு வீடியோல இருக்கற பையனைப் பார்த்தால், வசந்த் மாதிரிதான் இருந்தது.
உன் வீட்டுல போய் விசாரிக்க என்னைத்தான் அனுப்பினாங்க; அங்க போனா வீடு பூட்டியிருந்திச்சு. உன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லலாம்னுதான் போன் பண்ணேன்” என்றவர், “எனக்கு ஒண்ணுமே புரியல ராகவா; அந்த கருமத்தையெல்லாம் என்னாலேயே பார்க்க முடியல; அதை கூசாமல் எப்படி செஞ்சாங்களோ;
உனக்கு இப்படி ஒரு பையன் வந்து பிறந்திருக்க வேண்டாம்!
யாரையாவது பிடிச்சு, எதாவது செஞ்சு உன் பையனை காப்பாத்திக்கோ!” என வருத்தத்துடன் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.
அந்த அதிர்ச்சி துளியும் விலகாமல், தன்னை மறந்த நிலையில் அவர் வாகனத்தைச் செலுத்த, அவரது கவனம் சிதறிப்போய் அது தன் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதி, விபத்திற்குள்ளானது.
பெரிதாகக் காயம் ஒன்றும் இல்லை என்றாலும், ஸ்டியரிங் மார்பில் மோதி, அதிகமாக வலி கொடுக்கவும், மிக முயன்று தானே வாகனத்தைத் திருப்பி, அந்த இடத்திலேயே ஓரமாக நிறுத்திப் பூட்டிவிட்டு, ஆட்டோ பிடித்து மருத்துவமனை சென்ற ராகவன், அங்கிருந்து கைப்பேசியில் மனைவியை அழைத்திருந்தார்.
அனைத்தையும் கேட்டு, அங்கே ஓரமாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் உட்கார்ந்த மித்ரா, துப்பட்டாவால் தன் முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் குலுங்க, எதையும் சிந்திக்கவோ அழவோ கூட நேரம் இல்லாமல், கணவருக்காக மருத்துவ பரிசோதனைகளுக்குப் பணத்தைக் செலுத்த சென்றார் கலைவாணி.
மார்பில் பலமாக அடிபட்டதால், அவருடைய இதயம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததால், அங்கேயே அவரை அனுமதிக்க வேண்டியதாக சூழ்நிலை உண்டாகி இருந்தது.
அதைத் தொடர்ந்துவந்த மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்கவேண்டியதாக ஆகிப்போனது.
செய்தியறிந்து அவர்களுடைய சொந்தக்காரர்கள் எல்லோரும் பெயருக்கு அவரை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்களே தவிர, வேறு எந்த உதவிக்கும் யாரும் வரவில்லை.
வசந்த் பற்றிய செய்தி வேறு வெளியே கசியத்தொடங்கவும், அக்கம் பக்கம் இருப்பவர்கள்கூட யாரும் அங்கே வரவில்லை.
வந்த ஒன்றிரண்டு பேரும், நடந்த சம்பவங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில் வந்தவர்களாகவே தெரிந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகளை வீட்டில் தனியாகவோ, உறவினர் வீட்டிலோ விட விரும்பவில்லை கலைவாணி. மருத்துவமனையிலேயே கூடவே வைத்துக்கொண்டார்.
அந்த குற்ற பின்னணியில், வசந்த் போன்ற குற்றம் செய்ய அஞ்சும் நடுத்தட்டு இளைஞர்கள் சிலரை முன்னிறுத்தி, மனசாட்சியைச் சுத்தமாகக் கழற்றி எறிந்துவிட்டு, சர்வ சாதாரணமாக உயிரை கூறுபோடும் இதுபோன்ற செயல்களை செய்ய அவர்களுக்குத் துணிவைக் கொடுத்து, பின்னாலிருந்து அவர்களை இயக்கிக்கொண்டிருக்கும் பெரிய இடத்துப் பிள்ளைகளும், அரசியல் வாரிசுகள் சிலரும் சம்பந்தப்பட்டிருந்ததாலும், அரசியல் அதிகாரத்திற்கும் பணத்திற்கும் துணைபோகும் ஒரு சில அதிகாரிகளாலும், அதில் சிக்கியிருந்த பெண்கள், ஒருவர்கூட அதை வெளியில் சொல்ல முன்வராத காரணத்தாலும், அந்த மூன்று நாட்களுக்குள்ளாகவே அந்த வழக்கு பிசுபிசுத்துப்போயிருந்தது.
***