PNV-23

PNV-23

இதழ்-23

ஜவஹர் வயிற்றில் உதைத்ததால் உண்டான வலியைப் பற்களைக் கடித்துப் பொறுத்துக்கொண்டு விழிகளை மூடி சுவர் ஓரமாகச் சுருண்டு கிடந்த தீபனை பார்த்து, “டேய்! செத்துக்கித்து தொலைஞ்சிட்டானா என்ன!

இப்ப இவனுக்கு எதாவது ஆச்சுன்னா நம்ம நிலைமை மொத்தமா கோவிந்தாதான்!” என திவாகர் அலற,

“அண்ணா! இவன் செத்தாதான் என் வெறி அடங்கும்!

நான் இந்த பொண்ணுங்க கிட்ட ஏற்படுத்திவெச்சிருந்த பயத்தை ஒரே நாளுக்குள்ள காலி பண்ணிட்டான்!

என்னையே பயந்து ஓடி ஒளியவெச்சுட்டான்!

கொஞ்சம் வீடியோஸ் வேற இவன் கிட்ட மாட்டியிருக்கு!

இவனை இப்படியே பெட்ரோலை ஊத்தி கொளுத்திட்டு போயிட்டே இருக்கலாம்!” என ஜவஹர் வெறியுடன் கத்தியபடி தீபனை காலால் உதைக்க வர,  இழுத்துப் பிடித்து மிக முயன்று அவனை அடக்கியபடி, “டேய்! கொஞ்சம் பொறுமையா இருடா!

நேரடியா ஹோம் மினிஸ்டர் வரைக்கும் போற அளவுக்கெல்லாம் இவங்க குடும்பம் ஒர்த் இல்லன்னு தோணுது!

யார் மூலமா போயிருக்காங்கன்னு விசாரிக்க சொல்லியிருக்கேன்;

யாருன்னு கண்டுபிடிச்சு அவங்கள ஆஃப் பண்ணா போதும்! ஒரு மூணு மாசம் வெயிட் பண்ணு!

அப்பறம் இவனை வெச்சு செய்யலாம்!” என்றான் திவாகர், தீபன் மயக்கமாக இருக்கிறான் என்ற எண்ணத்தில்.

அந்த நேரம் அவன் அறிந்திருக்க நியாயமில்லை பழி தீர்க்க அந்த மூன்று மதமே தீபனுக்கு போதுமானது என்று ஏனென்றால் அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட இயலாத அளவிற்கு ஒரு வன்மத்தை தீபனின் மனதில் உண்டாகியிருந்தது.

பேசிக்கொண்டே தீபனின் அருகில் சென்று அவனுடைய சுவாசத்தைக் கவனித்துவிட்டு, “டேய்! உண்மையிலேயே செதுக்கித்து தொலையப்போறான்! இவனை இப்படியே தூக்கிட்டு; எங்க சித்தப்பாவோட ஹாஸ்பிடல் இருக்கு இல்ல அங்க போய்; நான் சொன்னேன்னு சொல்லி  இவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க சொல்லுங்க!

அட்மிட்லாம் பண்ண வேணாம்!

ஏன்னா இவன் பொழுது விடியறதுக்குள்ள அவங்க வீட்டுல இருக்கணுமாம்! கமான் பாஸ்ட்!” என அவர்களுடைய அடியாட்களிடம் கட்டளையாகச் சொல்லிவிட்டு, வசந்தை ஏளனமாகப் பார்த்துக்கொண்டே, “டேய்!  உனக்கு வேற தனியா சொல்லனுமா? இவனையெல்லாம் இப்படியே கை கழுவி விட்டுட்டு; மொதல்ல கிளம்பி நம்ம மெட்ராஸ் வீட்டுக்கு வரசொன்னாரு அப்பா! இங்க இருந்து ஏழரைய கூட்டாத!

எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம்; இவனோட தங்கை இருக்கற வீடியோ!” என சொல்லிவிட்டு நிறுத்தியவன், எதோ நினைவில் வர, “இல்ல அது மட்டும் இல்ல; எந்த ஒரு வீடியோவும் இனிமேல் நீ ஷேர் பண்ண கூடாது! எல்லாத்தோட ஒரிஜினல் ஃபுட்டேஜையும் கூட டிஸ்போஸ் பண்ணிடு; இல்லன்னா உன்னோட சேர்ந்து நாங்களும் களி தின்ன வேண்டியதுதான்!

கருமம் கருமம்! இன்னும் என்ன என்னவெல்லாம் பண்ணி தொலைச்சிருக்கியோ! மூடி மறைக்க என்னவெல்லாமோ செய்ய வேண்டியதா இருக்கு” எனத்  தம்பியிடம் எரிந்து விழுந்தான் திவாகர்.

வசந்தை வைத்துக்கொண்டே அதுவும் தன் அல்லக்கைகளின் முன்னிலையில் அண்ணன் தன்னை இகழ்வாகப் பேசியதில் முகம் கன்றிப் போக, “வசந்த்! இங்க இருக்கற எல்லா திங்க்ஸையும் யார் கைக்கும் கிடைக்காத மாதிரி பக்கவா பேக் பண்ணி! எங்கயாவது புதைச்சிட்டு கொஞ்ச நாள் நீ உன் வேலையை பாரு!

சீக்கிரமே திரும்பி வந்துடுவேன்!” என வசந்த்திடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றான் ஜவஹர் எதிர்காலம் தீபன் மூலம் அவனுக்கு என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை அறியாமலேயே!

***

திவாகர் சொன்னதை போலவே, அவர்கள் வந்த அந்த ஸ்கார்பியோவிலேயே அவனை அங்கே ஏதோ ஒரு  மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, அவனுடைய காயங்களுக்கு மருந்து போட்டு, அதிகாலை நேரத்தில் அவனை அவர்கள் வீட்டின் வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றனர் ஜவஹருடைய அந்த ஆட்கள்.

தீபன் அவர்கள் வீட்டின் கதவைத் தட்ட, சந்தோஷ்தான் எழுந்துவந்து திறந்தான்.

ஓய்ந்து போய் அங்கே தரையிலேயே படுத்துக்கொண்டிருந்த அரங்கநாதன் மகனைப் பார்த்ததும் பதறியவாறு, “அருணா! புள்ள வந்துட்டான் பாரு!” எனக் குரல் கொடுத்துக்கொண்டே, அவனது காயம் பட்ட உதட்டிலிருந்து கசிந்த ரத்தத்தைத் துடைத்தவர், அழுகையில் குலுக்கினார்.

அழுது தேம்பிய அருணாவையும் சரிகாவையும் கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் போதும் போதும் என் ஆகிப்போனது அவனுக்கு.

வீட்டிலிருந்தவர்களுக்குமே அதன் பின்னணி தெரியாத காரணத்தால், ஹோம் மினிஸ்டர் சொன்னதன் பேரில்தான் அவர்கள் அவனை விடுவித்தனர் என்ற தகவலைக் கேட்டுக் குழம்பித்தான் போனார்கள் அனைவரையும்.

ஆனால் அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் எனக் கொஞ்சம் கூட விளங்கவில்லை அவர்களுக்கு.

அரங்கநாதன் கேட்டுக்கொண்டதால் மறுவார்த்தையின்றி கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றான் தீபன். மகனுடைய அந்த அமைதி அவரையே குழப்பத்தான் செய்தது.

அடுத்த இரு தினங்களிலேயே, அவருடைய வேலையிலிருந்து விலகிக்கொள்வதாக விருப்ப ஓய்விற்கு எழுதிக்கொடுத்துவிட்டு, அந்த வீட்டை காலி செய்துகொண்டு சென்னைக்கே கிளம்பியது அரங்கநாதன் குடும்பம்.

நடைப்பிணம்போல் இருக்கும் தங்கையைப் பார்த்து மனம் ஆறாமல், எப்படியும் வசந்த் அவனுடைய வீட்டிற்கு வந்திருப்பான் என்ற எண்ணத்தில் அவனைத் தேடி அங்கே போனான் தீபன்.

அவனைப் பார்க்க முடியாமல், அதே கோபத்தில் அவன் ஏதேதோ பேச, அதற்கு “வசந்த் வந்த உடனே நீ சொன்னதை அப்படியே அவன்கிட்ட சொல்றேன்; நீ பத்திரமா போயிட்டு வா” என அவனுடைய அம்மா சொன்ன வார்த்தைக்கும், அந்த நேரத்தில் அவரது முகத்தில் தோன்றிய உணர்வுக்கும் என்ன அர்த்தம் என்பது புரியாமல் அங்கிருந்து அமைதியாகத் திரும்பினான் தீபன்.

***

சென்னை வந்த பிறகும் கூட அவர்கள் வாழ்க்கை ஒரு இயல்புநிலைக்குத் திரும்பாமல், சுமை நிறைந்ததாகவே சென்றது.

என்னதான் தன்னம்பிக்கையுடன் தீபன், ‘என் தங்கையை எப்படி பாதுகாக்கணும்னு எனக்குத் தெரியும்’ எனச் சொல்லவிட்டு வந்தாலும் நிதர்சனத்தில் அது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.

என்னதான் அவளைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டாலும் கடந்துவந்த கேடுகெட்ட சம்பவங்களின் தாக்கம் அவளிடம் கொஞ்சமும் குறையவேயில்லை.

கூடவே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களுடைய கேள்விகளையும் ஆராயும் பார்வைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியதாக இருந்தது.

அரங்கன் வேலையை விட்டுவிடவே வீட்டுக்குள்ளேயே முடிங்கிவிட, அருணா செய்வது அறியாமல் கோவில் கோவிலாகச் சென்று மகளுக்காக பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.

இதற்கிடையில் விடுதியை காலி செய்துவிட்டு வீட்டிலிருந்தே கல்லூரிக்குச் செல்லத்தொடங்கினான் தீபன்.

உடல் நல குறைபாடு எனச் சிறப்பு அனுமதி பெற்று, நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு, இறுதி பரீட்சைகள் மட்டும் எழுத அவள் படித்த கல்லூரியில் அனுமதி வங்கியிருந்தனர் சரிகாவுக்கு.

படிப்பில் கவனம் செலுத்த இயலாமல், யாருடனும் பேசாமல் தன்னிலை மறந்து பிதற்றியவாறு சரிகா ஒரு பித்துப் பிடித்த நிலையில் இருக்க, அவளுக்கு மனோதத்துவ சிகிச்சைகளை வேறு மேற்கொண்டனர்.

அதையும் மீறி அவள், மீண்டும் மீண்டும் தொடர்ந்து இரண்டு முறை தற்கொலைக்கு முயல, அதிர்ஷ்ட வசமாக அவளைக் காப்பாற்றியிருந்தனர்.

அந்த சூழ்நிலையில் தீபனாலும் கூட படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை.

தீபனை பொறுத்தவரை மிகவும் ஒழுக்கம் கட்டுப்பாடு போன்ற குணங்கள் இயல்பாகவே அமையப்பெற்றவன்.

தன் செயல்பாடுகளில் மிகவும் தெளிவாக இருப்பவன். ஒரு செயலில் இறங்கிவிட்டால் அதைச் செய்து முடிக்கும் வரை அவனது சிந்தனை வேறு எதிலுமே செல்லாது.

எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு சுலபமாக அவனது தோல்வியை ஒப்புக்கொள்ளவே மாட்டான் அவன்.

சரிகாவின் நிலையும்,  திரும்ப அடிக்க இயலாத நிலையில் வைத்து அவனை அடித்து உதைத்துத் துன்புறுத்தியதால் அவன் பட்ட அவமானங்களும் அவனது உறக்கத்தை முற்றிலுமாக கெடுக்க, ‘ஒரு மூணு மாசம் வெயிட் பண்ணு!  அப்பறம் இவனை வெச்சு செய்யலாம்!’ என அன்று திவாகர் சொன்ன வார்த்தை வேறு அவனது செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்க, பழி வெறி அவனைக் கொல்லாமல் கொன்றுகொண்டிருந்தது.

எந்தவித மாற்றங்களும் இன்றி மூன்று மாதங்கள் கடந்திருக்க, மனதிற்குள்ளே கனன்று கொண்டிருந்த கோபத்தையும் அது கொடுக்கும் வலியையும் கொஞ்சமும் குறையாமல் அதனைப் பத்திரமாகப் பொத்தி பாதுகாத்து வைத்திருந்தவன், வசந்த் ஒருவன் மட்டும் எங்கே போனான் என்ன ஆனான் என்றே கண்டுபிடிக்க இயலாமல் போன காரணத்தால், அவனை  தவிர, ஜவஹர் மற்றும் மற்ற மூன்று பேர்களைப் பொறுத்த மட்டும், அவன் நினைத்ததை வெற்றிகரமாகவே செயல்படுத்தி முடித்திருந்தான் தீபன்.

எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் உடலில் உயிரை மட்டும் விட்டுவிட்டு அவர்களுடைய ஜீவசக்தி அனைத்தையும் மொத்தமாகச் செயலிழக்கச் செய்திருந்தான் அவர்களுக்கே தெரியாமல்! அதனை அவர்கள் உணர்ந்த போது, காலம் வெகுவாக கடந்துபோயிருந்தது.

***

இதற்கிடையில் ஒரு நாள், “இல்ல என்னால மறுபடியும் நாமக்கல் வர முடியாது! அங்கே போய்தான் எழுதணும்னா நான் எக்ஸாம் எல்லாம் எழுதவே மாட்டேன்!” என சரிகா பிடிவாதம் பிடிக்க, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது குட்டிமா! அண்ணா உனக்குத் துணையா வருவேன்” என அவளைச் சம்மதிக்க வைக்க முயன்றுகொண்டிருந்தான் தீபன்.

அப்பொழுது அரங்கன் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, ‘பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அருணகிரிநாதனுடைய மகன் சுகன்; குடிபோதையில் அவர்கள் வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது இருபத்தி இரண்டு!’ என்ற செய்தி ஒளிபரப்பானது.

அதைக் கவனித்த சரிகா, “அண்ணா! இவன்; இவன்; அவன்தான் அண்ணா!

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு;

அன்னைக்கு அந்த ஃபார்ம் ஹவ்ஸ்ல இருதவங்கள்ல ஒருத்தன்தான் அண்ணா இவன்!” என உடல் நடுங்க மகிழ்ச்சி கலந்த படபடப்புடன் சொல்ல, தீபனுடைய இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது.

கண்களில் வெற்றி களிப்புடன், “குட்டிமா! நீ கவலையே படாத; இதே நிலைமைதான் மத்தவங்களுக்கும் வரும்” என்றவன், “இப்ப சொல்லு! இனிமேல் உன்னால பரிட்சை எழுத முடியும் இல்ல?” எனக் கேட்க, அண்ணனுடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை உணர்ந்தவள், சம்மதமாகத் தலை அசைத்தாள் சரிகா!

***

ஒவ்வொரு பரீட்சைக்கும் இடையே சில நாட்கள் இடைவெளி இருந்ததால் அங்கேயே சென்று தங்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை. அதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சலும் இல்லாமல் போனது.

பரீட்சை தினங்களிலெல்லாம் சந்தோஷ் அவனுடைய காரை எடுத்துக்கொண்டு தீபனுக்கு உதவியாக அவர்களுடன் நாமக்கல் வந்துவிடுவான்.

அதிக அலைச்சல் இல்லாமல், அவளால் கொஞ்சம் நிம்மதியாக அந்த பரீட்சைகளை எழுத முடிந்தது.

எதோ குறைவான மதிப்பெண்களுடனாவது  அந்த வருடப் படிப்பை அவளால் முடிக்க முடிந்தது.

ஒரு வழியாக தீபனும் அவனுடைய படிப்பை முடித்தான்.

ஆனால் அந்த அசம்பாவித சம்பவங்களுக்கு பிறகு அவனுடைய லட்சியங்களும் குறிக்கோள்களும் திசைமாறிப் போயிருந்தது.

பள்ளிப் படிப்பு முடித்த உடனேயே விளையாட்டாக ‘ஏத்திக்கல் ஹாக்கிங்’ சம்பந்தமான பயிற்சியில் சேர்ந்து, அதை அப்படியே விட்டுவிடாமல் தொடர்ந்து பகுதி நேர வேலையாகவும் அவன் அதில் ஈடுபட்டிருந்த காரணத்தால், அதில் அவனுடைய அறிவை மேலும் மேலும் அவனால் பெருக்கிக்கொள்ள இயன்றது.

‘ஏத்திக்கல்’ என்ற வார்த்தைக்கேற்ப நெறிமுறை தவறி அவன் அந்த கணினியியல் கலையை அதுவரை பயன்படுத்தியதில்லை.

ஆனால் அதனைக் கொண்டே எதிரிகளைப் பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அந்த சிறிது நாட்களுக்குள் அவன் வந்திருந்தான்.

அன்று ஜவஹரின் முகத்தில் தாண்டவமாடிய அந்த வெறி, எதிர்காலத்தின் அவன் இவர்கள் குடும்பத்தைப் பழிவாங்காமல் விடமாட்டான் என்கிற அச்சத்தை அவனுக்குள் புகுத்தியிருக்க, அவர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமல் அடிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருந்தான் தீபன்.

‘அவர்கள் ஒன்றும் நல்லவர்கள் எல்லாம் இல்லை! அவர்களை அடிக்க தயக்கமே தேவை இல்லை! நேர்மையுடன் அவர்களை எதிர்ப்பது என்பது கொஞ்சமும் நடைமுறைக்கு ஒத்துவராது! இதுதான் ஒரே வழி!’ என தீபனின் மனசாட்சி அவனுக்குத் தீர்ப்பு வாழங்கிவிட, அதன் முதல்கட்டமாக இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லோரையும் பல்வேறுவிதமான தொடர்புகொண்டு பேசினான் தீபன்.

அதில் பலர் இது தொடர்பாக அவனுக்குத் துணை நிற்கச் சம்மதிக்கவே இல்லை. அவ்வளவு பயமும் குற்ற உணர்ச்சியும் இருந்தது அவர்களிடம்.

அவர்களுடைய குடும்பத்தாரிடமே அனைத்தையும் மறைக்க வேண்டிய சூழலிலிருந்தனர் அனைவரும்.

ஆனால் அதில் ஒரு மருத்துவர் மட்டும் மறைமுகமாக அவனுக்கு உதவி செய்ய முன்வரவும், ‘எதைக் கொண்டு அவர்கள் இந்த அவலமான காரியங்களில் ஈடுபட்டார்களோ அதையே அழித்தால் என்ன?’ என்ற ஒரு வித்தியாசமான சிந்தனை உருவானது தீபனுக்கு.

அதன் முடிவுதான், ‘கெமிக்கல் கேஸ்ட்ரேஷன்’ அதாவது ரசாயன மருந்துகளைச் செலுத்தி, அதன் மூலம் செய்யப்படும் ஆண்மை நீக்கம்!

பெண்மையைக் களங்கப்படுத்தும் ஒருவனுக்கு அவனது ஆண்மையை அழிப்பதுதான் சரியான தண்டனையாக இருக்கமுடியும் என்றே தோன்றியது தீபனுக்கு!

ஒரு சில அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த தண்டனையே கொடுக்கப்படுகிறது.

மாதத்திற்கு ஒன்று என மூன்று ஊசிகளை ஒருவருக்கு செலுத்தினால் போதும், அந்த நபருக்கு பாலியல் உணர்வே இல்லாமல் அடங்கிப்போய் அவர்களுடைய ஆணவம், மொத்தமாக ஒடுங்கிப்போகும்.

ஒரு சிலருக்குப் பெண் தன்மை ஏற்படுவதுடன், ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு அடர்த்தி குறைவால் பாதிப்பு, இதய நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள், உடல் பருமன் போன்ற பக்கவிளைவுகளை எல்லாம் இதற்காகச் செலுத்தப்படும் ரசாயனம் ஏற்படுத்தும்.

உடல் வலிமையும் பண வலிமையும் கொடுக்கும் ஆணவத்தில் அடிப்படை மனித இயல்பைக் கூட மறந்து இரக்கமின்றி பல பெண்களுக்கு இழைத்த தீங்கிற்கு இவர்கள் இதனை அனுபவித்தே தீரவேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்ததும், தான் நினைத்ததை அழகாகச் செயல்படுத்தி முடித்தான் தீபன் மூன்று மாதங்களில்.

அதற்காக அவன் பெரிய அளவிலெல்லாம் முயற்சிகள் எடுக்க வேண்டிய அவசியமே அவனுக்கு ஏற்படவில்லை.

அவர்கள் அனைவருமே போதை பழக்கத்தின் பிடியிலிருந்ததால், வெகு எளிமையாக அந்த மருந்தை அவர்களிடம் சேர்த்திருந்தான்.

போதை மருந்துதான் என்ற எண்ணத்தில் அந்த ஊசிகளைக் கூட அவர்களாகவே செலுத்திக்கொண்டதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உச்சபட்ச தண்டனையே!

அந்த ரசாயன மருந்துக்கான விலை, மற்றும் அதனைக் கொண்டு சேர்ப்பதற்காக அவர்களைச் சேர்ந்த அடிமட்ட ஊழியர்கள் சிலருக்கான விலை  என அதை செயல்படுத்துவதற்காக ஆன செலவுகளுக்கான தொகையும் கூட புஷ்பநாதனின் கருப்புப் பணத்திலிருந்து எடுக்கப்பட்டதே!

மொத்தத்தில் அவர்கள் கையை கொண்டே அவர்களுடைய கண்ணைக் குத்தியிருந்தான் தீபன் அதையும் அவர்கள் அறியாமலேயே.

(ஒரு பெண் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகும் பட்சத்தில், அது அவளது விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நடந்திருந்தாலும் கூட அவள் பெண்மையை இழந்ததாகச் சொல்லி அவளைக் குற்ற உணர்ச்சிக்குள் நிறுத்தும் இந்த சமூகம் குற்றம் செய்யும் ஒருவனை ஆண்மை தவறியவனாக எந்த ஒரு நிலையிலும் சொல்வதே இல்லை.

பெண்மையைக் களங்கப்படுத்தும் ஒருவனுக்கு அவனது ஆண்மையை அழிப்பதுதான் சரியான தண்டனையாக இருக்கமுடியும்.

அதன் மூலம் அவனைத் திருத்தி நல்வழி படுத்திவிட முடியுமா என்ற கேள்வி எழலாம்?!

இதன் நோக்கம் திருத்தி நல்வழிப் படுத்துவதெல்லாம் கிடையாது.

சமூகத்தில் ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தண்டனை அவனைப் பார்த்து மற்றவர்கள் அந்த தவறைச் செய்யவே அஞ்சி நடுங்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்!

மொத்தத்தில் சமுதாயத்தில் அத்தகைய குற்றங்கள் குறைய வேண்டும்!

2012 டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்முறைக்கு எதிராகப் பேசிய அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கூட இத்தகைய ஒரு தண்டனை சட்டம் நிறைவேற்றப் படவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்திருந்தார்.

ஆனால் இன்றுவரை அதுபோன்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்படவே இல்லை.

இந்தோனேஷியாவில் இத்தகைய தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு குற்றவாளி, “இந்த தண்டனைக்கு மரண தண்டனையே மேல்! அதையே கொடுங்கள்!” என நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது!)

error: Content is protected !!