PNV-26

இதழ்-26

திலீப் மித்ராவை அவனுடைய பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச்செல்ல, அவர்கள் அன்பாக அவளிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எதோ பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.

அதைப் பார்த்ததும் வயிற்றில் எழுந்த புகைச்சலை அணைக்க மதுவின் அடுத்த சுற்றையும் முடித்தான் தீபன்.

முழு ஒப்பனையுடன் அதி ஆடம்பரமாக அங்கே வந்திருந்த ஒரு பெண் மித்ராவிடம் சென்று அவளை அணைத்துக்கொண்டு, எதோ கேட்க, இன்முகமாகத் தலையை ஆட்டி அவன் பதில் சொல்லவும், அடுத்த சுற்று, இப்படி சில நிமிடங்களுள்ளாகவே சுற்றுகளை முடித்திருந்தான் தீபன்.

கொஞ்சம் கொஞ்சமாக விருந்தினர்கள் வருகை அதிகரிக்ககவும் பார்ட்டி களை கட்ட தொடங்கியது.

தெரிந்தவர் பலரும்  தீபனை பார்த்துவிட்டு அவனை விசாரிக்க, அதில் ஒரு பெண்மணி, “பொண்ணு செம்ம அழகா இருப்பாளாமே! நீங்க பார்த்திருக்கீங்களா தீபன்!  அவளோட அப்பா அம்மாவுக்காக வெயிட்டிங்காம்! அவங்க வந்த உடனே அனௌன்ஸ்மென்ட் கொடுப்பாங்களாம்! அதுவரைக்கும் வெயிட் பண்ணிதான் ஆகணும் ப்ச்!” என திலீப் மணக்கவிருக்கும் பெண்ணை காணும் ஆவலில் பேசிக்கொண்டே போனார்.

ஒரு கட்டத்தில் நிலை கொள்ளாமல் அங்கே இருக்கவும் பிடிக்காமல், திலீப்பை இருந்த இடத்திலிருந்தே ஜாடை செய்து அழைத்த தீபன், அவன் அருகில் வரவும், “என்னவோ உடம்புக்கு முடியல திலீப்; நான் கிளம்பறேன்; என்ஜாய் தி பார்ட்டி! ஹவ் எ ஒண்டர்புல் மொமெண்ட்!” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல எத்தனிக்க, “ஹேய்! ரொம்ப முடியலையா! நான் வேணா யாராவது ட்ரைவரை அனுப்பட்டுமா?” என்று திலீப் அக்கறையுடன் கேட்க, “இட்ஸ் ஓகே! நானே மேனேஜ் பண்ணிப்பேன்! பை!” என்று சொல்லிவிட்டுத் தள்ளாடியபடி அங்கிருந்து சென்றான் தீபன்.

அவனை தாத்தா அவசரமாகக் கூப்பிட, தீபனுடைய தள்ளாட்டம் கூட மனதில் பதியாமல் அவரை நோக்கிச் சென்றான் திலீப்.

அவன் அந்த விடுதியை விட்டு வெளியில் வர, மழை வேறு பிசுபிசுத்துக்கொண்டிருந்தது.

‘வேலட் பார்க்கிங்’ காரணமாக அவனுடைய காரை அந்த விடுதியின் பணியாளர் ஓட்டி வந்து நிறுத்தவும், அதில் ஏறி அமர்ந்தவன், அதை ஓட்டிச்சென்று ஓரமாக நிறுத்திவிட்டு, கார் ஸ்டியரிங்கிலேயே தலையைச் சாய்த்து படுத்துக்கொண்டான்.

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நினைவினை கடந்துவிடு

நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு

நிஜங்களை துறந்துவிடு

 

கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ

வெண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ

கண்ணீரில் காதல் வாழுமா

 

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நினவினை கடந்துவிடு

நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு

நிஜங்களை துறந்துவிடு

 

பெண்ணே பெண்ணே உன் வளையல்

எனக்கொரு விலங்கல்லவோஓஓஓஒ

காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ

தன்மானத்தின் தலையை விற்று

காதலின் வால் வாங்கவோ

கண் மூடி நான் வாழவோ

உன்னை எண்ணி முள் விரித்து

படுக்கவும் பழகிக்கொண்டேன்

என்மேல் யாரும் கல் எறிந்தால்

சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

உள்ளத்தை மறைத்தேன்

உயிர்வலி பொறுத்தேன் என்

சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன் (ரட்சகன் திரைப்படப் பாடல்)

கார் ஆடியோவில் ஒலியைச் சுத்தமாகக் குறைத்து வைத்திருந்ததால், மிக மெலிதாக அந்த பாடல் அவன் செவிகளைத் தீண்ட மனதின் கனம் மேலும் கூடிப்போனது அவனுக்கு.

காரின் கண்ணாடி தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் அந்த அரைகுறை வெளிச்சத்தில் பார்க்க, தூறலில் நனைந்தபடி அங்கே நின்றுகொண்டிருந்தாள் வசுமித்ரா.

அவளைப் பார்த்ததும் கண்ணாடியை இறக்கிவிட்டு, “கொண்டாட்டமெல்லாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல; அதுக்குள்ள வந்துட்ட!” எனப் போதையில் குளறலாக நக்கல் குரலில் அவன் கேட்கவும், அது காதிலேயே விழாததுபோல் உள்ளே கைவிட்டு கார் கதவின் பூட்டை விடுவித்தவள், அதைத் திறந்துகொண்டு உள்ளே வந்து உட்கார்ந்த மித்ரா, “ட்ரின்க் அண்ட் டிரைவ்க்கு இப்ப பத்தாயிரம் ஃபைன் தெரியுமா?” எனக் காரமாகக் கேட்க,

அவளது அந்த செய்கையை விசித்திரமாக பார்த்துக்கொண்டே, “ப்ச்… பாத்தா…யிரம்! அது என்னோட டூ மினிட்ஸ் இன்கம் அது தெரியுமா உனக்கு!

அந்த மினிஸ்டர் பையனோட வீடியோ பாக்கல நீ!

என்னை மாதிரி ஆளுங்க கிட்டயெல்லாம்,  பணத்தை வாங்கிட்டு பைன் கூட போடாம அனுப்பிருவாங்க; அது தெரியாதா உனக்கு!

அதுவும் நான் இப்ப இருக்கற மூடுக்கு சிக்னலுக்கு சிக்னல் பத்தாயிரம் கொடுப்பேன் எனக்கு ஓகேதான்! அது தெரியுமா உனக்கு!” கேட்டுக்கொண்டே போனான் தீபன்.

அதையெல்லாம் லட்சியம் செய்யாமல், “எதாவது ஆக்சிடென்ட் ஆனா என்ன பண்ணுவீங்க! ப்

ளீஸ் வேணாம்!

உங்க ட்ரைவரை வரச்சொல்லுங்க!” என அவள் கெஞ்சலாகச் சொல்ல, “என்ன என்னோட கரை வேற ஒருத்தர ஓட்ட சொல்றதா! நெவெர்!” என்றவாறு வண்டியைக் கிளப்பியவன், “நீ சொல்லாம இருந்திருந்தால் கூட ஒரு வேளை ட்ரைவர் கிட்ட சொல்லி அப்பாவோட காரை கொண்டுவரச் சொல்லியிருப்பேன்!

சொல்லிட்ட இல்ல அதனாலேயே ஓட்டப்போறேன்!

நீ முதல்ல கீழ இறங்கு! உனக்கு வேண்டியவங்க எல்லாரும் உள்ள காத்துட்டு இருப்பாங்க” பிடிவாதமாக அவன் பேச,

புரிந்துகொள்ளாமல் இப்படிப் பேசுகிறானே என்ற ஆதங்கத்துடன், “முடியாது! மாட்டேன்! நீங்க ட்ரைவரை வரச்சொல்லுங்க!” அவளும் பிடிவாதமாக மறுக்க, தோள்களைக் குலுக்கியவன், “உன் இஷ்டம்!” என்று சொல்லிவிட்டு வாகனத்தை வேகமாகச் செலுத்தத் தொடங்கினான் தீபன் இறக்கிவிடச்சொல்லி அவள் கெஞ்சுவாள் என்ற எண்ணத்துடன்.

‘அவளை அருகில் வைத்துக்கொண்டு அவன் வேறு எங்கும் செல்ல மாட்டான்; எப்படியும் யூ-டர்ன் எடுத்து மறுபடியும் அங்கேயே வந்துவிடுவான்’ என்ற நம்பிக்கையில் அதை சிறிதும் பொருட்படுத்தாமல், அந்த இருக்கையில் வாகாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் மித்ரா அவனது எண்ணத்தைப் பொய்யாக்கி!

மணி இரவு பத்தை கடந்திருக்க, போக்குவரத்து மிதமாக இருக்கவும், ‘ப்பா! சரியான அடங்காப்பிடாரி; என்ன ஒரு தெனாவெட்டு இவளுக்கு!’ என்ற எண்ணம் தோன்ற, சற்றும் வேகம் குறையாமல் வாகனத்தை செலுத்தினான் தீபன். அவளுடைய எண்ணத்தை பொய்யாக்கி!

சில நிமிடங்களில் அவனது காரின் வேகம் குறைய, அதை உணர்ந்தவள் கண்களை திறந்து பார்க்கவும், அவனுடைய வீட்டை அவர்கள் நெருங்கிக்கொண்டிருப்பது புரிந்தது அவளுக்கு.

அருணாவையும் சரிகாவையும் எண்ணி அதுவரை இருந்த தைரியம் அனைத்தும் காணாமல் போக, “ஐயோ! இங்க ஏன் வந்திருக்கீங்க?” என அவள் உள்ளே போன குரலில் கேட்க, அதற்குள்  அவர்கள் வீட்டு முக்கிய வாயிலை நெருங்கியிருத்தவன், அவளது கேள்வியால் உண்டான எரிச்சலுடன், “நான் அப்பவே உன்னை இறங்கச்சொல்லி சொன்னேன் இல்ல?” என்று கேட்டவாறே கோபம் முழுவதையும் காண்பித்து கார் ஹாரனை தொடர்ந்து ஒலிக்க செய்ய, காதை பொத்திக்கொண்டாள் மித்ரா!

அவர்கள் வீட்டின் காவலாளி பதறியபடி கேட்டை திறக்கவும், கண்ணாடியை இறக்கியவன், “நீ தூங்கறதுக்கா உனக்குச் சம்பளம் கொடுக்கறேன்! அதுக்கு வீட்டுலயே தூங்கியிருக்கலாம் இல்ல!” என அவனிடம் சிடுசிடுக்க, அவன் தலை கவிழவும், வாகனத்தை ஓட்டிச்சென்று வீட்டின் ‘போர்டிகோ’வில் நிறுத்திவிட்டு, ‘டமால்!’ என வேகமாக அதன் கதவை மூடியவன்,  நேராக உள்ளே நுழைந்தான் தீபன்.

காரிலிருந்து இறங்கியவள், தயக்கத்துடன் அங்கேயே நிற்கவும், மறுபடி அவன் வெளியில் வந்து, “தைரியமா சுடுகாட்டுக்குள்ள எல்லாம் போறீங்க! ஏன் மஹாராணி எங்க வீட்டுகுள்ள வரமாட்டீங்களோ!” என எள்ளலாக அவன் கேட்க,

“அருணா அத்தை! சரிக்காக்கா! எல்லாரும் இருப்பாங்க இல்ல! வேணாம்! தேவை இல்லாத குழப்பமெல்லாம் வரும்!” என அவள் உள்ளே போன குரலில் சொல்லவும், “அவ்வளவு பயம்! ஹும்!” என்றவன், “அவங்க யாரும் இல்ல! நீ பயப்படாம உள்ள வரலாம்!” என சொல்லிக்கொண்டே அவன் உள்ளே சென்றுவிட, அவனை பின் தொடர்ந்து வந்தவள், உள்ளே போகாமல் கதவின் அருகிலேயே நின்றுகொண்டு, “நீங்க எக்கச்சக்கமா ட்ரிங்க் பண்ணிட்டு, தள்ளாடிட்டு போனதை பார்த்து, அப்படியே ட்ரைவ் பண்ணுவீங்கன்னு பயந்துபோய்  உங்க பின்னாலயே வந்துட்டேன்;

அவசரத்துல என்னோட ஹாண்ட் பேக்; செல் போன் எதையுமே எடுத்துக்கல;

அன்னைக்கு மாதிரி உங்க ஆபிஸ் ‘கேப்’க்கு சொல்றீங்களா? என்னை காணாமல் பராதிம்மா டென்ஷன் ஆகியிருப்பிங்க! ப்ளீஸ்!” என்றாள் மித்ரா உள்ளே போன குரலில்!

அந்த வார்த்தையில் கோபம் எல்லையை தொட, “என் மேல அவ்வளவு அக்கறை ம்” என்றவன்,  “பராதிம்மா! அவங்கதான் எனக்கு முதல் ஸ்பீட் பிரேக்கர்; அடுத்தது இப்ப நீ!” என்றவாறு அவளது தோள்களை பற்றி, கதவோடு அவளை நிறுத்தியவன், “இவ்வளவு தைரியமா எல்லாம் செய்யற இல்ல! போ! போய் அதே தைரியத்தோட உங்க பாரதிம்மா கிட்ட சொல்லு” என அவன் இடைவிட, வார்த்தைகள் தந்தி அடிக்க “என்ன! என்ன சொல்லணும்!” என கேட்டாள் மித்ரா!

அவனுடைய சுவாசம் அவளது செவிகளை தீண்ட, “ம்ம்… எனக்கு திலீப் வேணாம்னு சொல்லு!” என மென் குரலில் ஆனால் அதிகாரமாக அவன் சொல்ல, அதில் அவளுடைய தயக்கமெல்லாம் ஓடிப்போக, “நான் நேற்றைக்கே அவங்க கிட்ட சொல்லிட்டேனே!” என்றாள் மித்ரா உற்சாகத்துடன், “என்ன!!!  திலீப் வேண்டாம்னு சொன்னியா?” என அவன் ஆச்சரிய குரலில் கேட்க, ‘ம்ஹும்’ என அவள் தலை அசைக்க, அந்த கணம் புதிதாக அவள் முகத்தில் பூத்திருந்த வெட்கத்தை படித்தவன், “அப்ப வேற என்ன சொன்ன?” எனத் துள்ளலான கேட்க, “ம்ம்… எனக்கு தீபன்தான் வேணும்னு சொன்னேன்” என்றாள் திக்கித்திணறி.

ஆவலுடன் “அப்படியா சொன்ன? பட் ஒய்?” என அவன் தொடர, அவனை கேள்வியாக பார்த்தவள், “நீங்கதானே தீபனை பத்திரமா பார்த்துக்கோன்னு உங்க ட்ரைவர் கிட்ட பிட் எழுதி கொடுத்து அனுப்பினீங்க! அதனாலதான்” என அவள் தோரணையாகச் சொல்ல, “பிட்டு; ஆஹான்; டீச்சரம்மான்னு நிரூபிக்கிற! ம்ம்” என அவன் கிண்டலில் இறங்க, அந்த நேரம் அவள் முகத்தில் தெரிந்த வெட்கத்திலும், கண்களில் நிறைந்திருந்த காதலிலும் மதுவின் போதையுடன் சேர்ந்து அவனுடைய கோபமும் மொத்தமாய் வடிந்துபோய், காதலின் போதை மட்டுமே தீபனிடம் விஞ்சியிருக்க, “வித் யுவர் பெர்மிஷன்!” என்றவாறு அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் தீபன் அவளை வென்றுவிட்ட கர்வத்துடன்.