PNV-7

PNV-7

இதழ்-7

“ஏன் வசும்மா நீ பாட்டுக்குத் தனியா அந்த இடத்துக்கெல்லாம் போன!” எனப் பரிதவிப்புடன் ராகவன் மகளிடம் கேட்கவும், “பயப்படாதீங்கப்பா! எனக்கு ஒண்ணும் ஆகாது” என துணிவுடன் சொன்னவள், “உங்களுக்கு யாரு தகவல் சொன்னாங்க?” எனக் கேட்க,  “உன் ஸ்டூடெண்ட், அதாம்மா படிக்க நம்ம வீட்டுக்கெல்லாம் கூட வந்திருக்காளே செல்வி, அந்த பொண்ணுதான் உன்ன இங்க அட்மிட் பண்ணி இருக்கும் தகவலைச் சொன்னாள்.

நம்ம அம்மாவை இங்கதான் காண்பிக்கிறோம்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு. அதனாலதான் இங்க உன்னை கொண்டுவந்திருக்காங்க.

நான் பராதிம்மாக்கு தகவல் சொல்லிட்டு, இங்கே வந்தேன்.

செல்வி, அவளோட அம்மா, அப்பா இன்னும் சிலபேர் உனக்குத் துணையா இங்கேயே இருந்தாங்க.

நான் வந்ததும்தான் கிளம்பி போனாங்க” என அவர் விளக்கிக்கொண்டிருக்க, அவளை நெருங்கி வந்த பாரதி, “நாலஞ்சு தையல் போட்டிருக்காங்க கண்ணு! ரொம்ப வலிக்குதா?” என அவளுடைய தலையை மென்மையாக வருடியபடி கேட்க, “இல்லம்மா! பசங்க கஞ்சா” என அவள் ஏதோ சொல்ல முற்படுகையில், அவளைப் பேசவிடாமல், “இவளுக்கு இந்த வேலையெல்லாம் தேவையான்னு கேளுங்க சித்தி.

யாராவது எப்படியாவது போகட்டும்னு விடாம;

இவளுக்கு என்ன பெரிய வீராங்கனைனு நினைப்பா.

இவ ஸ்கூல்ல இந்த வாட்டர் பிளாண்ட் போட்ட மாதிரி அங்க படிக்கற பசங்களுக்கு ஸ்பான்சர் செய்யறது,  லைப்ரரிக்கு புக்ஸ் வாங்கறதுன்னு எதாவது செய்யணும்னா சொல்ல சொல்லுங்க பணமா கொடுத்துடலாம்.

இந்த வேலையெல்லாம் வேண்டாம்” என திலீப் காட்டமாக பாரதியிடம் சொல்வதுபோல் அவளிடம் சொல்லவும், ‘இவன் இந்த நேரத்தில் எப்படி இங்கே வந்தான்? மேலும் தேவை இல்லாமல் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறான்?’ என்பதுபோல் அவளுடைய கண்கள் கேள்வியடன் பாரதியை பார்த்தன.

அது புரிந்தவராக, “ஹேய் திலீபா! அவளே டயர்டா இருக்கா; நீ வேற ஏன் இப்படி அவளை டென்க்ஷன் பண்ற?” என மகனை அடக்கியவர், “உங்கப்பா போன் பண்ணும்போது நான் இவங்க வீட்டுலதான் இருந்தேன் வசு.

கேள்விப்பட்டவுடனே ரொம்பவே பதறிட்டான்.

இவன் கூடத்தான் இங்கே வந்தேன்” என்றார் பாரதி.

அவர் அப்படி சொல்லவும், ஏதோ கேட்க எண்ணி தயங்கியவளாக, “ஓ!” என்றாள் வசுந்தரா ஏமாற்றம் கலந்த குரலில்.

பின்பு அந்த பேச்சை மாற்றும்  பொருட்டு, “அப்பா என்னோட செல் போன் எங்க?” என அவள் கேட்க, அதை தனது சட்டை பையிலிருந்து எடுத்து கொடுத்த ராகவன், “செல்வியோட அப்பா குடுத்தாரு!” என்றார் சுருக்கமாக.

திலீபன் அங்கே இருக்கும்போது அன்று நடந்த அனைத்தையும் பாரதியிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கம் வேறு அவளுடைய மனதில் சுழன்றுகொண்டே இருந்தது.

“இப்பவே மணி ஒன்பது! சித்தி இவளை எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க?

இந்த ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் எனக்கு கொஞ்சமும் பிடிக்கல!

லேட்டா ஆகும்னா வேற நல்ல ஹாஸ்பிடலுக்கு மாத்திடலாம்.

பணம் எவ்வளவு செலவானாலும் நான் கொடுக்கறேன்” என்றான் திலீப் ஒரு முகச்சுளிப்புடன்.

அவனுடைய இந்த பேச்சு பாரதிக்கே பிடிக்கவில்லை. அவர் வசுந்தராவின் முகத்தைப் பார்க்க, அதில் வேதனையின் சாயல் அப்பட்டமாகத் தெரிந்தது.

“சாரி திலீப் சார்! எனக்கு இங்கேயே கம்ஃபர்டபுலா இருக்கு. என் பிள்ளைகளுக்காக நீங்க செய்த உதவியே போதும். தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த உதவியும் வேண்டாம் திலீப் சார்!” என சார் என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுத்து அவனைத் தள்ளி நிறுத்தினாள் வசுந்தரா.

அதை அவன் உணர்ந்தானோ இல்லையோ பாரதி நன்றாகவே உணர்ந்தார்.

அவனை அங்கிருந்து அனுப்பிவிடுவதிலேயே குறியாக, “திலீப் நீ வேணா வீட்டுக்குக் கிளம்பு.

இந்த ட்ரிப்ஸ் முடிஞ்சதும் இவளை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கனு நினைக்கிறேன்.

என்னோட ட்ரைவரை வரச்சொல்லி இவளை வீட்டில் விட்டுட்டு, நான் என் வீட்கு போறேன்!” என்றார் பாரதி.

“ஆர் யூ ஸ்யூர் சித்தி! அப்படினா நான் கிளம்பட்டுமா? நீங்க பத்திரமா வீட்டுக்கு போயிடுவீங்களா?” எனக் கேட்டான் திலீப். ஆமாம் என்பதுபோல் தலை அசைத்தார் பாரதி.

மேலும் தாமதிக்காமல் மற்ற இருவரிடமும் சொல்லிக்கொண்டு அவன் அங்கிருந்து கிளம்பவும், அவனுடனேயே வெளியில் வந்தவர்,

“திலீப்! உங்க அம்மா அப்பா கிட்ட, வசுந்தராவை பத்தி பேசத்தான் உங்க வீட்டுக்கு வந்தேன். நீ இப்படி எடுத்தேன் கவுத்தேன்னு பேசற விதமே சரி இல்ல.

உங்க அம்மா அப்பாவே சம்மதிச்சாலும் இவ சம்மதிக்க மாட்டா தெரிஞ்சுக்கோ” என அவனை எச்சரிக்கும் விதமாக பாரதி சொல்ல,

“வாட் சித்தி! என்னைப் போய் ஒரு பொண்ணு; அதுவும் வசுந்தரா மாதிரி ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு; வேண்டாம்னு சொல்லுவாளா?” எனக் கொஞ்சம் அதிகப்படியான கர்வத்துடன்  கேட்ட திலீப், “நான் வசுவை மேரேஜ் பண்ணிக்க ஆசை படறேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றும் கேட்டான்.

“அதெல்லாம் அப்பறம் சொல்றேன்” என்றவர், “வசு நீ நினைக்கற மாதிரி பொண்ணு இல்ல திலீப் முதல்ல அதை புரிஞ்சுக்கோ; உண்மையிலேயே அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு உனக்கு ஆசை இருந்தால், கொஞ்சம் கவனமா பேசு!” என்றார் அவர் கொஞ்சம் அழுத்தமாக.

அவர் சொன்னதைக் கேட்டு அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவன், “பை சித்தி!” என்றவாறு அங்கே தயாராக நின்றிருந்த அவனது காரில் ஏற அது சீறிக்கொண்டு கிளம்பியது.

யோசனையுடன் அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு அவர் நிற்க, அதே இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தி அதிலிருந்து இறங்கினான் தீபன்.

அவனை அந்த நேரத்தில் அங்கே எதிர்பார்த்திராத காரணத்தால் பாரதியின் முகத்தில் மெல்லிய திரை விழ அதைக் கண்டும் காணாதவன் போல, “என்ன மேம்! லேட் நைட்ல இங்க இருக்கீங்க! உடம்பு ஏதாவது சரி இல்லையா?

வழக்கமா நீங்க அப்பல்லோதான போவீங்க?” என அவன் கேள்விமேல் கேள்விகளாகக் கேட்கத் தொடங்கினான் அவர் பேசுவதற்கு முன்பாக.

“என்னை கேக்கற! நீ இந்த நேரத்துல இங்க வந்திருக்கியே; உனக்கு உடம்பு சரி இல்லையா? ஆனா உங்க வீடு சிட்டிக்குள்ளதான இருக்கு?” என அவன் வார்த்தைகளை அவனுக்கே திருப்பினார் பாரதி.

“என்னோட ஸ்டாஃப்; அதாவது இந்த ஏரியா நீட் கோச்சிங் சென்டர் இன்சார்ஜா இருக்கறவரோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இங்க அட்மிட் பண்ணியிருக்காங்க!

என் வேலையெல்லாம் முடிஞ்சு இப்பதான் டைம் கிடைச்சுது. ஸோ… வந்திருக்கேன்” என அவன் தெளிவாகச் சொல்லவும்,

‘இவன் நிஜமாத்தான் சொல்றானா இல்லை நம்மையே போட்டு வாங்கறானா?’ எனத் தடுமாறியவர், “வசுந்தராவுக்கு ஒரு சின்ன இஞ்சுரி! இங்கதான் அட்மிட் பண்ணியிருக்காங்க!” என்று உண்மையை சொல்லவும், அப்பட்டமாக அதிர்ச்சியை முகத்தில் காண்பித்தவன், “ஏன் மேம் முன்னாலேயே என் கிட்ட சொல்லல?” என்று கேட்க, “ஏதோ பதட்டத்துல தோணல?” என்றார் பெரியவர் அவனைச் சமாளிக்கும்பொருட்டு.

“இந்த நேரத்துல உங்க டிரைவர் இருக்க மாட்டாரே! நீங்களேவா டிரைவ் பண்ணிட்டு வந்தீங்க” என்ற அவனது கேள்வியில், ‘ஐயோ! அடங்கவே மாட்டானா இவன்’ என்ற எண்ணத்தில், அவர் திலீப்புடன் அங்கு வந்ததையும், அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

நெற்றியைத் தேய்த்தவாறே, “சரி விடுங்க! நீங்க வசுந்தரா கூட போய் இருங்க;

நான் என் ஸ்டாஃப்பை பார்த்துட்டு அங்கே வரேன்!” என்றவன் அந்த மருத்துவமனையின் வேறு பகுதியை நோக்கிச் சென்றான்.

அவனை பார்த்துவிட்டு ஒருவர் ஓட்டமும் நடையுமாக அங்கே வரவும், “உங்க ஃபாதர் இப்ப எப்படி இருக்கார்?” என அவன் விசாரிப்பது அவருக்குத் தெளிவாகக் கேட்க, அவன் உண்மையைத்தான் சொல்கிறான் என்பது நன்றாகவே புரிந்தது பாரதிக்கு.

***

சில நிமிடங்களில் வசுந்தரா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு வந்தவன், கண்களால் அவளை பார்துகொண்டே, “நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன்! கல் ஆழமா குத்தி நிறைய பிளட் போனதுனால கொஞ்சம் மயக்கம் வந்திருக்கு அவ்ளோதான்;

மத்தபடி பயப்படும் அளவுக்கு ஒண்ணும் இல்லையாம்;

வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க;

உங்க புத்திரன் பணத்தை கட்டிட்டானாம்; வாங்க இவங்க ரெண்டுபேரையும் அவங்க வீட்டுல விட்டுட்டு நாம கிளம்பலாம்” என அவன் மற்றவர் பேச இடம் கொடுக்காமல் பாரதியிடம் அனைத்தையும் சொல்லி முடிக்க, அங்கே வந்த செவிலியர் சில மாத்திரைகளையும் வசுந்தராவின் மருத்துவ அறிக்கைகளையும் அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அங்கிருந்து சென்றுவிடும் அவசரத்துடன் வசு கட்டிலிலிருந்து இறங்கவும், அவள் சற்று தடுமாற, அனிச்சை செயலக அவளைத் தாங்கி பிடித்தவன், கண்கள் சிவக்க அவளை முறைத்தவாறு, அந்த கட்டிலிலேயே அவளை உட்காரவைத்துவிட்டு வெளியில் சென்றான்.

சில நொடிகளில் சக்கர நாற்காலியுடன் ஒரு செவிலியர் அங்கே வந்தார் அவளை அழைத்துச்செல்ல.

***

தந்தை மகள் இருவரையும் பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு மற்ற இருவரும் கிளம்பிவிட, கதவை தாளிட்டு வந்தவர், “புடவைல எல்லாம் ப்ளட்டா இருக்கு பாரு! போய் ரெப்னஷ் பண்ணிட்டு வா வசும்மா!” என்றவாறு ஆயாசத்துடன் கட்டிலில் போய் உட்கார்ந்தார் வரதன்.

“பத்து நிமிஷம் இருங்கப்பா இட்லியும் சட்டினியும் ரெடி பண்ணிடறேன்” என்று சொல்லிவிட்டு, அவளது அறைக்குள் சென்றாள் வசுந்தரா தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள.

அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்க, மெதுவாகச் சென்று கதவைத் திறந்தவர், வீட்டிற்கே உணவு கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனம் ஒன்றின் சீருடை அணிந்து உணவு பொட்டலத்துடன் நின்றவரைக் கண்டு திகைத்தவறாக, “நாங்க ஃபுட் எதுவும் ஆர்டர் பண்ணலையே” என ராகவன் சொல்ல, “தீபன்னு ஒருத்தர் ஆர்டர் பண்ணியிருக்காரு. இந்த அட்ரஸ்தான் சார்!” என்றார் அந்த பணியாளர்.

அதற்கான தொகையையும் அவன் செலுத்தியிருந்தது தெரிந்தது.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அதைப் பெற்றுக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு கதவை தாளிட்டார் ராகவன்.

நேரம் உணர்ந்து எளிய உணவாக வரவழைத்திருந்தான் தீபன்.

அவனது இந்த அக்கறையில் அவரது கண்களில் நீர் கோர்த்தது.

அதே நேரம் தீபனுடைய காரில் அவனுடன் பயணித்துக்கொண்டிருந்தார் பாரதி.

அவனிடம் பேச்சுக் கொடுக்கவே யோசனையாக இருந்தது அவருக்கு.

ஆனால் அவனாகவே அவரது மவுனத்தை உடைத்தான், “வசுந்தராவோட அப்பா பேரு  செல்வராகவன்; கரக்ட்டா?

எனக்கு இன்னைக்குதான் தெரியும்.

அவளோட அம்மா பேர் என்ன மேம்?” என்ற வில்லங்கமான கேள்வியுடன்.

அவனது குரலில் தெரிந்த அளவுக்கு அதிகமான பணிவினால் உண்டான எரிச்சலுடன்  “அவளோட அம்மா பேரு, பாட்டி பேரு இதெல்லாம் ரொம்ப முக்கியம் பாரு உனக்கு” எனப் பற்களைக் கடித்தார் அவர்.

“ஒரு சாதாரண கேள்வி; உங்களை ஏன் இவ்…வளவு இரிட்டேட் பண்ணுதுன்னு புரியல” எனத் தோளைக் குலுக்கியவன், “நான் எய்ம் பண்ணிட்டேன்னா ஒரு விஷயத்தை அடையாம விட மாட்டேன்னு உங்களுக்கே தெரியும்!

ஆரம்பத்துல இருந்தே வசுந்தரா விஷயத்துல என்னை நீங்க தள்ளி நிறுத்திட்டே இருக்கீங்க; அதுக்கு நியாயமான காரணம் இருக்கும்னு புரியுது.

ஆனாலும்  அவ விஷயத்தில் ஒரு க்யூரியாசிட்டி உண்டாவதை என்னாலயே தடுக்க முடியல.

நான் என் வழியில போய் அதைக் கண்டுபிடிக்க எனக்கு செகன்ட்ஸ் போதும் மேம்.

பட் உங்களை பைபாஸ் பண்ணிட்டு போக என் மனசு இடம் கொடுக்கல.

உங்களாலயும் ரொம்ப நாள் இதை மூடி மறைக்க முடியாது. அதனால பொறுமையா இருக்கேன்” என்று சொல்லி அவரை அதிரவைத்துவிட்டு அவர் வீட்டு வாயிலில் அவரை இறக்கிவிட்டவன் அவருக்காக ஆங்கே காத்திருந்த ரயிலம்மாவிடம், “மேடம் ரொம்ப டென்ஷனா இருக்காங்க. பத்திரமா பார்த்துக்கோங்க!” என்று சொல்லிவிட்டு அவனது வாகனத்தைக் கிளப்பினான் தீபன்.

“தீபன் ஒரு நிமிஷம்!” என அவனை நிறுத்திய பாரதி, “வசு ரொம்ப நல்ல பொண்ணுப்பா! அவ ஒரு இன்னொசண்ட்! உன்னால அவளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது!” என அவர் தீவிரமாகச் சொல்ல, “இன்னசன்ட்! ம்! உங்க பாஷையிலேயே சொன்னால் நானும் கூட ஒரு விக்டிம்தான்; அதாவது பாதிக்கப்ட்டவன்!” என அனலாய் தகித்தவன், “ஆனால் மறந்தும் பழி தீர்த்துக்க ஒரு அப்பாவியை பயன்படுத்திக்க மாட்டேன் மேம் அவங்க உண்மையாவே அப்பாவியாய் இருக்கும் பொருட்டு! அது உங்களுக்கே தெரியும்!” என்று சற்று குளிர்ந்துவிட்டு அவனுடைய வீட்டை நோக்கிப் பறந்தான் தீபன்.

***

தந்தையுடன் சேர்ந்து உணவை உண்டுவிட்டு, அவரது வற்புறுத்தலால் மாத்திரைகளை உட்கொண்டு, தன் படுக்கையில் வந்து படுத்தவள், அன்று மாலை அவள் பதிவு செய்த காணொளியைப் பார்க்க எண்ணி கைப்பேசியில் அதைத் தேட, அந்த காணொளி அதில் பதிவாகவில்லை.

‘அந்த வீடியோ ரெக்கார்ட் ஆகாமல் இருக்க சான்ஸே இல்லையே! ரெக்கார்ட்டே ஆகலையா இல்ல கை பட்டு டெலீட் ஆயிடுச்சா?’ எனக் குழம்பிப்போனாள் வசுந்தரா!

அந்த காணொளியை ஆதாரமாகக் காண்பித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்ற எண்ணம் நிறைவேறாமல், அவளது முயற்சிக்குப் பலன் இல்லாமலேயே போய்விட்டதே என்ற ஏமாற்றத்தில் அவளது கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

தலையில் தையலிடப்பட்டிருந்த இடம் வேறு வலியில் தெறித்தது.

தனது வேதனையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூட இயலாமல் அவள் துடித்துக்கொண்டிருக்க,  அப்பொழுது வியந்த குரலில், “வசும்மா சீக்கிரம் வந்து பாரேன்!” என அவளை அழைத்தார் ராகவன்.

‘இந்த நேரத்தில் என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வியுடன் அவள் வரவேற்பறைக்கு வர, தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டினார் அவர்.

அதில், ‘சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள இடுகாட்டில் அமோகமாக நடக்கும் கஞ்சா வியாபாரம்!

அதிகம் பாதிக்கப்படும் பள்ளிச் சிறுவர்கள்.

டீ.பீ லீக்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோ ஆதாரம்!

குற்றப் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்குமா காவல்துறை?’ என்ற செய்தி சுழன்றுகொண்டிருக்க, அன்று மாலை அவள் பதிவு செய்த அதே காணொளி அதில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் திகைத்தவளாக அசைவற்று நின்றாள் வசுந்தரா.

***

 

error: Content is protected !!