Poi Poottu 10

Poi Poottu 10

19
மொபைலை கீழே வைத்த மீனா “காமாட்சியம்மா நாளைக்கு நாள் பூரா நீங்க தான் எல்லா வேலைய பார்த்துக்கணும். ரோஷன் தூக்கிட்டு வரப் போறேன்” என்றாள்.
“அதுக்கென்னம்மா… குட்டி பையன் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்? அவங்கம்மாவ விட்டுட்டு இருந்துப்பானா?”
“நம்ம எல்லார்கிட்டயும் அழாம வரான். இந்த வீடும் அவனுக்குப் பழக்கம் தான். பார்க்கலாம். இருந்துப்பான்னு நினைக்குறேன்”
தலையசைத்து காமாட்சியம்மா நகர்ந்துவிட்டார்.
கௌதம் இப்போவே அவன் இன்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்ணுற எல்லாத்தையும் என்கிட்ட குடுத்து பத்திரமா எடுத்து வெக்க சொல்லுறான். அதுல சிலதுக்கு புக்ஸ் ரெபர் பண்ணி என்னை நோட்ஸ் எடுத்து தர சொல்லுவான்.
எனக்கு என்னோட படிப்பு, ரெக்கார்ட், நோட்ஸ், அவனோட இண்டர்வ்யூன்னு வேற எதப் பத்தியும் யோசிக்க நேரம் இல்லாம இருக்கு.
ஆனா என்னை எப்படி டென்ஷன் ஆகாம வெச்சுக்கணும்னு கௌதமுக்கு தெரியும். அப்பப்போ கால் பண்ணி என்கிட்ட ஏதாவது பேசி சிரிக்க வெப்பான்.
அவன் கோவப்பட்ட நாட்களும் உண்டு. அவன் சொன்ன வேலைய முடிக்காம விளையாட்டுத்தனமா இருந்தா நல்லாத் திட்டு விழும். அப்பறம் அவனே சமாதானமும் செய்வான்.
மொத்தத்துல என்னோட உலகத்துல நானும் என் கௌதமும் மட்டும் தான்.
இன்னைக்கு அவன் பிரண்ட் கூடப் படத்துக்குப் போயிருக்கான். என்னையும் இன்னைக்கு ஒரு நாள் எதுவும் படிக்காம ரிலாக்ஸ் பண்ண சொல்லிட்டுப் போனான்.
எனக்குத் தான் இத்தன நாள் பரப்பரப்பா ஏதாவது செஞ்சுக்கிட்டே இருந்துட்டு இப்போ சும்மா இருக்க முடியல. அதான் டைரி எடுத்து வெச்சு உட்கார்ந்துட்டேன்.
இத்தன நாள் நான் எழுதி இருக்கேனே தவிர எழுதினதப் படிச்சுப் பார்த்ததில்ல. இன்னைக்கு முதல்லேருந்துப் படிச்சுப் பார்த்தேன்.
நான் இந்த டைரி எழுத ஆரம்பிச்சப்போ நான் தான் கௌதம் மேல பைத்தியமா இருந்தேன். ஆனா இப்போ என்னால உறுதியா சொல்ல முடியும்… நான் அவன விரும்புறத விட அவன் என்னை ரொம்ப அதிகமா நேசிக்குறான்.
-ரேணு
இன்னைக்கு காலேஜூல ப்ரேக் அப்போ கௌதம் என் கிளாஸுக்கு வந்தான். அவன் முதல் தடவ என்கிட்ட பேச வந்தப்போ என் கிளாஸுக்கு வந்ததோட சரி. அதுக்கப்பறம் காலேஜூல நாங்க பேசுற இடம் பைக் ஸ்டாண்ட் இல்லன்னா எப்பயாவது புட்பால் கிரௌண்டுக்கு வெளில இருக்க அந்தப் பெஞ்ச்…
அவன நான் ஆச்சரியமாப் பார்த்தப்போ “என் கூட வா… இன்னைக்கு மதியானம் காலேஜ் கட் அடிச்சுடு” னு சிரிச்சுட்டே சொன்னான்.
அவன் கிளாஸுக்கு வந்தத விட அவன் சொன்ன விஷயம் இன்னும் ஆச்சரியமா இருந்துது. ஏன்னா கௌதம் இது வர என்னை கிளாஸ் கட் அடிக்கச் சொன்னதில்ல. பிரண்ட்ஸ் படத்துக்குப் போகலாம்னு சொன்னப்ப கூட அவன் விட்டதில்ல… திட்டி இருக்கான்.
“முழிக்காத… பேக் எடுத்துட்டு வா. ஈவ்னிங் அப்படியே உங்க வீட்டுல விட்டுடுறேன்” னு சொன்னான்.
நான் தலைய மட்டும் ஆட்டி உள்ள போய் ஜென்னிகிட்ட சொல்லிட்டு பேக் எடுத்துட்டு வெளில வந்தேன். என் பின்னாடியே வந்தவ “இதெல்லாம் சரியே இல்ல கௌதம் அண்ணா. வர வர நீங்க என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குறீங்க… இப்பயும் ரேணுவ மட்டும் கூட்டிட்டுப் போறீங்க” னு சொல்லி அவன முறைச்சா.
“உன்னை நான் என்னைக்கு ஜென்னி மறந்திருக்கேன்” னு கேட்டு அவ கையில ஒரு பெரிய டைரி மில்க் சாக்லேட் குடுத்தான். இது போதுமே அவளுக்கு… குதிக்காத குறையா அவனுக்கு தாங்க்ஸ் சொன்னா.
இவன் எப்படி எல்லாரையும் கைக்குள்ள போட்டு வெச்சுக்குறான்?
என்னை அவன் பைக்ல ஏற சொன்னப்போ இது தான் அவன்கூட பைக்ல போகுறது ரெண்டாவது தடவைன்னு ஞாபகம் வந்துச்சு.
என்னைக்குமே கௌதம் என்னை அவன் கூட பைக்ல வர சொல்லி கம்பெல் பண்ணது இல்ல. நானும் அவன் கூட பைக்ல போகணும்னு ஆசைப்பட்டது இல்ல.
போற இடத்த அவனா சொல்லட்டும்னு நான் அமைதியா இருந்தேன். அவன் எதுவும் பேசாம வண்டி ஓட்டிட்டு இருந்தான்.
சிட்டி விட்டு வெளில வந்ததும் பைக் ஓரமா நிறுத்தி என்னை ரெண்டு சைடும் கால் போட்டு உட்கார சொன்னான். ரொம்பத் தூரம் போகணும்… இப்படியே உட்கார்ந்து வந்தா கஷ்டமா இருக்கும்னு சொன்னான். நானும் அவன் சொன்ன மாதிரியே உட்கார்ந்தேன். எனக்கு இது எல்லாமே புதுசா இருந்துது.
கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் பைக்ல போயிருப்போம். கௌதம் ரொம்பச் சந்தோஷமா இருக்கான்னு அவன் முகத்தைப் பார்க்காமயே எனக்குத் தெரிஞ்சுது. என்னமோ மனசுக்கு ரொம்ப இதமா இருந்துது அந்த லாங் டிரைவ்.
ஒரு இடத்துல வண்டிய நிறுத்தி என்னை இறங்க சொன்னான். என் கையோட அவன் கை கோர்த்து பைக்ல சாய்ஞ்சு உட்கார்ந்து “இது என் தாத்தா என் பேர்ல எழுதி வெச்சிருக்க இடம் ரேணு. என் படிப்பு முடிஞ்சதும் இந்த இடத்த வித்துட்டு சிட்டிக்குள்ள ஒரு வீடு கட்டப் போறேன்…” னு சொல்லி என்னைத் திரும்பிப் பார்த்து “உனக்காக…” னு சொல்லி அவன் பிடிச்சுருந்த என்னோட கைய எடுத்து கிஸ் பண்ணான்.
எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல. அமைதியா இருந்தேன். “எ பேலஸ் பார் மை க்வீன்” னு சொல்லி கண்ணடிச்சான்.
கொஞ்ச நேரம் அமைதியா ரெண்டு பேரும் அந்த இடத்த வேடிக்கை பார்த்துட்டு இருந்தோம். “இந்த இடம் உன் தாத்தா உனக்குக் குடுத்தது கௌதம். இத விக்க வேண்டாம்” னு சொன்னேன்.
“இது சிட்டிக்கு வெளில இருக்க இடம் ரேணு. இத வெச்சு வேற எதுவும் செய்ய முடியாது. உன்னை லவ் பண்ணுறேன்னு உன்கிட்ட சொன்ன அன்னைக்கே இத முடிவு பண்ணிட்டேன். இன்னும் ஒரு செமஸ்டர்… என் படிப்பும் முடிஞ்சுடும். அப்பறம் இத வித்திடுவேன். அதுக்குள்ள உன்னை இங்க கூட்டிட்டு வந்து காமிக்கணும்னு தோணுச்சு” னு சொன்னான்.
நான் அவன் கைய இன்னும் இறுகப் பிடிச்சுக்கிட்டேன். அவன் என் கைய விட்டுட்டு என் தோள்ல கை போட்டு அமைதியா திரும்பிட்டான்.
கொஞ்ச நேரம் கழிச்சு போகலாமான்னுக் கேட்டான். அவனுக்கு அங்கேருந்து வர மனசே இல்லன்னு அவன் குரல்லயே தெரிஞ்சுது.
“எனக்கு உன்கிட்டயே இப்படியே இருந்திடணும் போல இருக்கு ரேணு… கல்யாணத்துக்கு அப்பறம் லைப்ல ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டுட்டு இருக்க மாட்டேன் ரேணு. ஐ லவ் யூ…” னு சொன்னான்.
எனக்குக் கண்ணு கலங்க ஆரம்பிச்சுடுச்சு. அவன் தோள்லயே சாய்ஞ்சு அமைதியா இருந்தேன். அவன் என் தோளை அழுத்தி என் நெத்தில கிஸ் பண்ணான்.
இரண்டு நிஷத்துக்கு அப்பறம் போகலாம்னு சொல்லிட்டு பைக் எடுத்தான். அவன் பின்னாடி உட்கார்ந்து அவன் இடுப்ப சுத்தி கை போட்டு அவன் முதுகுல தலை வெச்சு உட்கார்ந்துட்டு வந்தேன்.
எங்க வீட்டுல என்னை இறக்கி விட்டதும் “ஐ லவ் யூ கௌதம்…” னு சொன்னேன். பை சொல்லிட்டுக் கிளம்பிப் போயிட்டான்.
அவன் எனக்காக வீடு கட்டுறேன்… தாத்தா சொத்த விக்குறேன்னு சொன்னதெல்லாம் எனக்குப் பெருசாத் தெரியல.
என்னை அவன் மதிக்குறான். என் விருப்பத்த கேட்குறான். எனக்குப் பிடிச்சத செய்யுறான். எனக்காக யோசிக்குறான். எனக்கு அது தான் பெருசா தெரியுது.
அவன் சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு நிமிஷம் கூட அவன விட்டுப் பிரிய மாட்டேன். ஐ லவ் யூ கௌதம்…
-ரேணு
இன்னைக்கு கௌதமுக்கு இண்டர்வ்யூ. காலையிலிருந்து நான் தான் டென்ஷனா இருந்தேன். அவனுக்கு நூறு மெசேஜ் அனுப்பி இருப்பேன். ஆயிரம் கால் பண்ணி இருப்பேன். இத எடுத்துக்கோ… அத மறந்துடாத… இந்தக் கேள்விக்குப் பதில் ஞாபகம் இருக்குல்லன்னு அவன ஒரு வழி பண்ணிட்டேன்.
என் இம்சை தாங்க முடியாம இண்டர்வ்யூக்கு போகுறதுக்கு முன்னாடி என்னை ஒரு தடவ பார்க்கணும்னு சொல்லி அவன் கிளாஸ் பக்கத்துல இருக்க லேபுக்கு வர சொன்னான்.
இன்னைக்கு பைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் எல்லாருக்கும் இண்டர்வ்யூ இருக்குறதால அந்த ப்ளாக்கே கிட்டத்தட்ட காலியா இருந்துது. நான் அந்த லேபுக்கு பக்கத்துல போனதும் கௌதம் “உனக்கு இப்போ என்ன பிரச்சன? எதுக்குக் காலையிலிருந்து இவ்வளவு டென்ஷன் ஆகுற?” னுக் கேட்டான்.
நான் மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிச்சு படப்படன்னு பேச ஆரம்பிச்சேன். கௌதம் வேகமா என்கிட்ட வந்து என் கைய பிடிச்சு இழுத்து இறுக்கி கட்டிப்பிடிச்சு என் உதட்டுல அழுந்த கிஸ் பண்ணான்.
முதல்ல திமிறின நானும் கொஞ்ச நேரத்துல அவன கட்டிப்பிடிச்சேன். மெதுவா என்கிட்டேருந்து தள்ளி நின்னு “எனக்குக் காலையிலிருந்து இருந்த டென்ஷன் போயிடுச்சு. இனி நீயும் ஒழுங்கா இரு…” னு சொல்லிட்டு திரும்ப என் உதட்டுல லேசா கிஸ் பண்ணிட்டு வெளிலப் போயிட்டான்.
ச்ச… இப்படியா அவன போட்டு படுத்துவோம்… பாவம் அவனும் காலையிலிருந்து இண்டர்வ்யூ டென்ஷன்ல இருந்திருப்பானுத் தோணுச்சு. ஆல் தி பெஸ்ட் மட்டும் சொன்னேன். பதிலுக்குத் தலை ஆட்டினான்.
கௌதம் இன்டர்வ்யூல செலக்ட் ஆகிட்டான். அவன விட எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருந்துது. ஈவ்னிங் எங்க வீட்டுக்கு வந்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஸ்வீட் குடுத்துட்டுப் போனான். ஐயோ அடுத்த வருஷம் எனக்கும் இண்டர்வ்யூ இருக்குமே… நெனச்சாலே பீதி ஆகுது.
-ரேணு
இன்டர்வ்யூல செலக்ட் ஆனதுலேருந்து கௌதமோட நடவடிக்கை எதுவும் சரி இல்ல. ஓவரா பேசுறான்.
இன்னைக்கு அவன் வீட்டுக்குப் போயிருந்தப்பயும் அப்படித் தான் பண்ணான். “ஹே எனக்கு வேலைக் கெடச்சுடுச்சும்மா… வேணும்னா சொல்லு இன்னைக்கு ஈவ்னிங் உங்க வீட்டுல வந்து பேசுறேன்” னு கூலா சொல்லுறான்.
கடவுளே… வேலை கெடச்ச அன்னையிலிருந்து இவன் இதையே தான் சொல்லுறான். இவன அடக்கி வெக்குறதுக்கு நான் படுற பாடு… இதுக்கு ஜென்னி வேற சப்போர்ட். “ஆமா கௌதம் அண்ணா நீங்க இப்பயே பேசுங்க” னு அப்பப்போ சொல்லி ஏத்தி விட்டுக்கிட்டு இருக்கா.
அவன முறைச்சுட்டு நான் கிச்சன்குள்ள போயிட்டேன். அங்க வந்து ஆன்ட்டிகிட்ட என்னமோ கேட்டுட்டு என் இடுப்ப பிடிச்சு கில்லிட்டுப் போயிட்டான். கத்தாம இருக்க நான் என்ன பாடுப்பட்டேன்னு எனக்குத் தான் தெரியும்.
ஜென்னி வேற அத பாத்துட்டு சிரிச்சுட்டே இருந்தா. ஐயோ… எனக்கு அங்கேருந்து ஓடிப் போயிடலாமான்னு இருந்துது. கௌதம்… நீ எப்பையிலிருந்து இப்படி ஆன?
வீட்டுக்குக் கிளம்பினப்போ பை சொல்ல அவன் பக்கம் திரும்பினா கண்ணடிச்சு பை ரேணு னு சொல்லுறான். இவன இன்னும் ரெண்டு வருஷம் எப்படிச் சமாளிக்கப் போறேனோ தெரியல.
-ரேணு
கௌதமுக்கு இன்னைக்கு காலேஜ் லாஸ்ட் டே. எனக்கு அவன விட்டுப் பிரியுறது என்னமோ ரொம்பக் கஷ்டமா இருந்துது. அவன இனி தினம் பார்க்க முடியாதே… அழுதுட்டே இருந்தேன்.
பேர்வல் முடிஞ்சு என் கையப் பிடிச்சு தர தரன்னு இழுத்துட்டு பைக் ஸ்டாண்டுக்கு போனான். போற வழியிலயே ஜென்னிக்கு கால் பண்ணி “ரேணுவ என்கூட எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அவங்க வீட்டுல சொல்லிடு” னு சொன்னான்.
அமைதியா வண்டி ஓட்டுனான். அவங்க வீட்டுக்குள்ள போனதும் ஆன்ட்டி என் முகத்த வெச்சே ஏதோ சரியில்லன்னு புரிஞ்சுக்கிட்டாங்கன்னு நினைக்குறேன்… எதுவும் பேசாம சிரிச்சுட்டே எந்திரிச்சு உள்ள போயிட்டாங்க.
கௌதம் என்னை அவனோட ரூம்க்கு கூட்டிட்டு போய் “இன்னைக்கு நீ சாரீல எவ்வளோ அழகா இருக்கத் தெரியுமா. காலையில தர்ட் இயர் எல்லாம் சேர்ந்து தான் எங்களுக்கு பேர்வல் குடுக்கப் போறாங்கன்னு தெரிஞ்சதும் நான் உன்ன தான் தேடுனேன்.
எனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்னு தான நீ சாரீ கட்டுறத என்கிட்ட சொல்லல… உன்னப் பார்த்துக்கிட்டே இருக்கணும்னு எனக்கு அவ்வளவு ஆசையா இருந்துது. ஆனா உன்னப் பார்த்தப்ப எல்லாம் நீ அழுதுட்டே தான் ரேணு இருந்த.
லைப்ல சில விஷயம் திரும்பக் கிடைக்காது ரேணு. இன்னைக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். என் ரேணு முதல் தடவ என் முன்னாடி சாரீ கட்டி நிக்குறான்னு யோசிச்சா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?
அது எதையும் என்ன ரசிக்க விடாம ஏன் ரேணு இப்படி அழுது என்னைக் கொல்லுற? நான் என்ன உன்ன விட்டுட்டு ஓடியாப் போயிடப் போறேன்? இனி தினம் பார்க்க முடியாது. அவ்வளவு தான? அதுக்கு இப்படி அழணுமா?” னு கேட்டான்.
எனக்கு என் தப்பு புரிஞ்சுது. தேவயில்லாம அவனையும் கஷ்டப்படுத்திட்டேன். அதுக்கு மேல அவனப் பேச விடாம கிஸ் பண்ணிட்டேன். கௌதம் என்னை அவ்வளவு இருக்கமா கட்டிப்பிடிச்சதே இல்ல…
அதுக்கப்பறம் பேசி என்னைச் சிரிக்க வெச்சு ஆன்ட்டிகிட்ட கூட்டிட்டுப் போய்க் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கச் சொல்லி என்னைக் கொண்டு வந்து வீட்டுல விட்டான். என்னைச் சந்தோஷமா வெச்சுக்க இவனுக்கு மட்டும் தான் தெரியும்.
-ரேணு
இன்னைக்கு எனக்கு இண்டர்வ்யூ. எப்படி இத்தன நாள் ஒடுச்சுன்னே தெரியல. கௌதம் வேலையில ஜாயின் பண்ணி, ஒவ்வொரு வீக்கெண்டும் நானும் ஜென்னியும் அவன் வீட்டுக்குப் போய்ப் பார்த்து, போன்ல பேசி, கௌதம் எனக்கு அவனோட முதல் மாச சம்பளத்துல சுடிதார் வாங்கிக் கொடுத்து… எல்லாமே கனவு மாதிரி இருக்கு.
ஆனா இன்னைக்கு கௌதம் பண்ணது… இத நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல.
ஜென்னியும் நானும் ஒரே கம்பனில செலக்ட் ஆகிட்டோம். அத சொல்ல சந்தோஷமா அவனுக்கு கால் பண்ணப்போ அவன் அத எடுக்கல.
பைக் ஸ்டாண்ட் வந்தப்போ அங்க அவன பார்த்ததும் எனக்குச் சந்தோஷம் தாங்கல. அவன்கிட்ட ஓடிப் போனதும் கை குடுத்து வாழ்த்துச் சொன்னான். ஜென்னிக்கு எப்பயும் போல ஒரு பெரிய டைரி மில்க்.
“எனக்கு எதுவும் கிடையாதா?” னு நான் கேட்டதும் வா னு மட்டும் சொல்லிட்டு வண்டி எடுத்தான். நானும் ஜென்னிகிட்ட சொல்லிட்டு அவன்கூடப் போனேன்.
கௌதம் எங்க வீட்டுக்கு முன்னாடி பைக் நிறுத்துனதும் “எனக்கு கிப்ட் குடுக்குறேன்னு சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு வந்து எங்க வீட்டுல இறக்கி விட்டுட்டல்ல…” னு கோவமாக் கேட்டேன்.
அவன் என் கைய பிடிச்சு உள்ளக் கூட்டிட்டு வந்து எங்க அப்பா முன்னாடி உட்கார்ந்து நாங்க லவ் பண்ணுறத சொல்லி அவங்க வீட்டுல சம்மதம்னும் சொல்லி உங்க பொண்ண எனக்குக் கட்டிக் குடுப்பீங்களான்னு கேட்டான்.
எனக்கு மூச்சே நின்னுடுச்சு.
ஆனா எங்கப்பா கூலா சரி பா நான் உங்க வீட்டுல பேசுறேன்னு சொன்னாங்க. எங்கம்மாவும் அவனுக்கு காபி கொண்டு வந்து குடுத்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல…
கௌதம் முதல் தடவ எங்க வீட்டுக்கு வந்தப்பயே என் அப்பாக்கிட்ட எங்க கல்யாணத்தப் பத்தி பேசிட்டானாம். அவனோட அப்பாக்கிட்ட இன்னும் பேசாததால என்கிட்ட சொல்லலையாம். அவனுக்கு வேலை கிடைச்ச அன்னைக்கு அவன் அப்பாக்கிட்டயும் பேசி சம்மதம் வாங்கிட்டானாம்.
எவ்வளவு விஷயம் நடந்திருக்கு… இவன் என்கிட்ட எதுவும் சொல்லல. எனக்குக் கோவம் வந்துது. அவன்கிட்ட பேசாம அமைதியா இருந்தேன்.
அவன் கிளம்பினப்போ பைக் கிட்ட போய் நின்னேன். “சாரி ரேணு… இது எல்லாம் உன்கிட்ட முன்னாடியே சொன்னா நீ டென்ஷன் ஆயிடுவன்னு தான் எல்லாம் சரி ஆனதும் சொல்லலாம்னு விட்டுட்டேன். இதுக்கு மேலயும் உனக்கு என் மேல கோவம் குறையலன்னா நான் வேணா இங்கயே ஒரு கிஸ் குடுக்கவா?” னு கேட்டான்.
நீ முதல்ல கிளம்புன்னு சொல்லிட்டு உள்ள வந்துட்டேன். வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா எனக்கு கால் பண்ணி என்னை முழுசா சமாதானம் பண்ணதுக்கு அப்பறம் தான் அவன் தூங்கப் போனான்.
வேலை கிடைச்சது… எனக்கும் ஜென்னிக்கும் ஒரே கம்பனில கிடைச்சது… எங்க கல்யாணத்துக்கு ரெண்டு பேரு வீட்டுலயும் சம்மதிச்சது… இன்னைக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.
-ரேணு
இன்னைக்கு எங்களுக்கு பேர்வல். கௌதம் காலேஜ் வந்தான். என்னை வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டுப் போனான். இன்னையோட என்னோட காலேஜ் லைப் முடியுது.
இன்னும் ஒரு மாசத்துல நான் வேலையில ஜாயின் பண்ணணும். கௌதம் சொன்னான் “ஒரு வருஷம் வேலைக்குப் போ ரேணு. உடனே கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற? அதுக்கப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பறம் வேலைக்குப் போறதும் போகாததும் உன் இஷ்டம்”னு.
பார்ப்போம்… ஒருவேளை எனக்குப் பிடிச்சிருந்தா நான் கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்குப் போறேன்னு சொன்னேன். என்ன இருந்தாலும் இன்னும் ஒரு வருஷத்துல எங்க கல்யாணம்.
-ரேணு
20
     பொழுது சாய்ந்து இருட்டத் துவங்கிய நேரம் மாலை ஆறு மணிக்கு சீத்து மாமி கவிதாவின் வீட்டிற்குள் நுழைந்தார். தோட்டத்தில் யாரோ நிற்பது தெரிய “செண்பா நிற்குறா போலருக்கு” என்று நினைத்தவர் நேராக வீட்டினுள் செல்லாமல் தோட்டத்திற்குச் சென்றார்.
“இங்க என்ன செண்பா பண்ணுற? ஆத்துல கவி இல்லையா?”
பதில் இல்லை. “என்னடிமா நான் கேட்டுண்டே இருக்கேன்… ஒண்ணும் பேசாம நின்னுண்டிருக்காய்?”
அதற்கும் எந்தப் பதிலும் வராமல் போகவே “என்னமோ போ” என்று கூறி வீட்டை நோக்கி நடந்தார். போர்ட்டிகோ அருகில் வந்தபோது “வாங்க மாமி” என்று கையில் செல்வத்திற்கு கொடுக்க வேண்டிய காபி பிளாஸ்குடன் நின்றாள் செண்பகம்.
“என்னடி இங்க நிக்குற? அப்போ அது?”
“எது மாமி?”
சீத்து மாமி வேகமாகத் தோட்டத்தை எட்டிப்பார்த்த போது அங்கே யாரும் இருக்கவில்லை.
“கஷ்டம்” என்று கூறி தலையில் அடித்துக் கொண்டவர் “இன்னைக்குக் கண்ணாடி போட்டுண்டு வரலடி செண்பா… காலையிலயும் இப்படித் தான்… என் ஆத்துக்காரர் கிட்ட பேசுறதா நெனச்சுண்டு தூண்கிட்ட பேசிண்டு இருந்தேன்… அப்பறம் அவர் வந்து கண்ணாடி எடுத்து மாட்டுன்னு சத்தம் போட்டதுக்கு அப்பறம் தான் எனக்கே புரிஞ்சுத்து” என்று கூறிப் பெரிதாகச் சிரித்தார்.
‘இவ்வளவு வெள்ளந்தியா இருக்காங்களே…’
“உள்ள போங்க மாமி. அக்கா இருக்காங்க. நான் செல்வம் அண்ணாக்கு காபி குடுத்துட்டு வந்திடுறேன்” என்று கூறி கேட்டை நோக்கி நடந்தாள்.
அரை மணி நேரம் நாட்டு நடப்பைப் பற்றியும் தன் குடும்பக் கதையையும் கவிதாவிடம் பேசிய சீத்து மாமி கிளம்புகையில் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்தார்.
“அவங்க வீட்டுக்கு ஒரு நாள் போயிட்டு வாங்க கா. எத்தன நாளாக் கூப்பிடுறாங்க?”
“போகணும் செண்பா… ஒரு நாள் போயிட்டு வரணும்”
கைபேசியின் சிணுங்களில் டைரியை மூடி வைத்துவிட்டு எழுந்தாள் மீனா. ராஜேஷ் அழைத்திருந்தான். “மீனு இன்னைக்கு நான் வர லேட் ஆகும். நீ சாப்பிட்டு படு”
“நீங்க வாங்க ராஜேஷ். நான் வெயிட் பண்ணுறேன்”
மொபைலை அணைத்து பாக்கெட்டில் வைத்து மீட்டிங் ஹாலிற்குச் சென்றான்.
‘ஹ்ம்ம்… நமக்கு இருக்க ஒரே துணை இந்த டைரி தான் போலயே…’
மீனா காமாட்சியிடம் “நீங்க சாப்பிட்டு தூங்குங்கம்மா… இன்னைக்கு அவங்க வர லேட் ஆகுமாம். நான் அப்பறமா அவங்க கூடச் சாப்பிட்டுக்குறேன்…” என்று கூறி ஹாலிற்கு வந்து டைரியை திறந்தாள்.
இன்னைக்கு முதல் நாள் ஆபீஸ். ஒரு மாசம் எப்படி ஓடுச்சுன்னே தெரியல. எப்பயும் நானும் ஜென்னியும் ஒண்ணா தான் இருந்தோம். நிறைய ஷாப்பிங் போனோம். கௌதம் வீட்டுக்குப் போனோம்.
அவனும் இப்போ எல்லாம் வேலையில ரொம்ப பிஸி ஆகிட்டான். ஆனா இன்னைக்கு என்னை அவன் தான் ஆபீஸ்ல ட்ராப் பண்ணான்.
எனக்கு இருந்த டென்ஷன் கொறஞ்சு… பயம் போய்… கௌதம் எனக்காக யோசிச்சு தான் இத செஞ்சான்னு எனக்குத் தெரியும்.
வழியெல்லாம் ஏதாவது பேசி சிரிக்க வெச்சு… ஆபீஸ்ல எப்படி இருக்கணும்னு அட்வைஸ் பண்ணி… அவன் கூட இருக்கப்போ மட்டும் எனக்கு எந்தக் கவலையும் வரதில்ல.
என் ப்ராஜக்ட்ல இருக்க எல்லாரையும் எனக்குப் பிடிச்சுது. என்னையும் ஜென்னியையும் ஒரே ப்ராஜக்ட்ல போட்டுட்டாங்க. நல்லவேளை… சோ எனக்கு எதுவும் வித்தியாசமா தெரியல.
ஈவ்னிங் வீட்டுக்கு வந்து கௌதம்கிட்ட இன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் சொன்னேன். “அப்போ கல்யாணத்துக்கு அப்பறமும் வேலைக்குப் போவ போல” னு சொல்லிட்டு வெச்சுட்டான். பார்ப்போம்…
-ரேணு
இன்னைக்கு முதல் தடவ கௌதம் கூட தியேட்டர் போனேன். அவன் தான் கூப்பிட்டான். அவன் வீட்டுல உட்கார்ந்து எத்தனையோ படம் பார்த்திருக்கோம்… ஆனா இப்படி தியேட்டர்ல அவன் கை கோர்த்து உட்கார்ந்து படம் பார்க்குறது புதுசா இருந்துது. எனக்குப் பிடிச்சுது. மார்னிங் ஷோ போனோம். மத்தியானம் வெளியில சாப்பிட்டு என்னைக் கொண்டு வந்து வீட்டுல இறக்கி விட்டுட்டான்.
– ரேணு
ஜென்னி இன்னைக்கு இப்படிச் சொல்லுவான்னு நான் நினைக்கவே இல்ல. அவளுக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. அதாவது பரவாயில்ல… அவ கல்யாணத்துக்கு அப்பறம் யூஎஸ்  போயிடுவாளாம். நான் எப்படித் தனியா இருப்பேன்?
இன்னைக்கு புல்லா அழுதுட்டே இருந்தேன். அவ வீட்டுல மாப்பிள்ளைப் பார்க்குறாங்கன்னு எங்களுக்குத் தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரம் பிக்ஸ் ஆகி பிரிஞ்சுப் போவான்னு நாங்க நினைக்கல.
கௌதம்கிட்ட சொன்னப்போ “இது என்ன ரேணு இப்படிச் சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு? நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆகும். நான் உன்ன யூஎஸ் கூப்பிட்டா ஜென்னிய விட்டு வர முடியாதுன்னு சொல்லுவியா? அவ லைப் ரேணு. எதுக்கு அழுது அவளையும் கஷ்ட்டப்படுத்துற? இருக்குற கொஞ்ச நாள் அவ கூட ஜாலியா இரு ரேணு” னு சொல்லிட்டு கட் பண்ணிட்டான்.
எனக்குத் தெரியும். அவன் என்கிட்ட இப்படி எல்லாம் சொன்னாலும் ஜென்னிய பிரிஞ்சுப் போறதுக்கு அவனும் எவ்வளவு பீல் பண்ணுவான்னு… அவன் சும்மா பேச்சுக்கு தங்கச்சின்னு சொல்லல… உண்மையில அவள தங்கச்சியா தான் நினைக்குறான்.
கௌதம் கிட்டப் பேசுனதுக்கு அப்பறம் நான் ஜென்னி முன்னாடி அழல. முடிஞ்ச வரைக்கும் அவளையும் சிரிக்க வெக்க ட்ரை பண்ணேன். ஈவ்னிங் வீட்டுக்கு வந்ததும் எங்கம்மா கிட்ட சொல்லி அவங்க மடில படுத்து அழுதுட்டேன்.
பொண்ணுங்கன்னா இன்னொருத்தர் வீட்டுக்குப் போய்த் தான் ஆகணும். நீ கல்யாணம் ஆகி போனாலும் எங்களுக்கு இப்படித் தான் இருக்கும்னு அம்மா சொன்னாங்க. உண்மை தான…
-ரேணு
இன்னைக்கு ஜென்னிக்கு கல்யாணம். நான் நேத்துலேருந்து அவ கூடியே அவங்க வீட்டுல தான் தங்கி இருந்தேன். காலையில கௌதம் சர்ச் வந்திருந்தான். அவளுக்கு கிப்ட் குடுத்துட்டு கூடவே ஒரு பெரிய டைரி மில்க் சாக்லேட் குடுத்தப்போ ஜென்னி கண் கலங்கிட்டா. கௌதம் கஷ்ட்டப்பட்டுச் சிரிச்சான்னு எனக்குத் தெரியும். எனக்கும் அழுகையா வந்துது.
காலேஜ் லைப் திரும்ப வராதான்னு எனக்கு ரொம்ப ஏக்கமா இருந்துது. எவ்வளவு அழகான நாட்கள்… ஜென்னியும் கௌதமும் கூட அதையே தான் யோசிச்சிருப்பாங்க.
என்னை வீட்டுல கொண்டு வந்து விடுறப்போ கௌதம் எதுவுமே பேசல. வண்டி விட்டு இறங்கி ஒரு தடவ அவன நிமிர்ந்துப் பார்த்து அவன் கையப் பிடிச்சு அழுத்தினேன். அவன் பை சொல்லிட்டுக் கிளம்பிட்டான்.
-ரேணு
இன்னைக்கு ஜென்னி யூஎஸ் கிளம்பிட்டா. ஏர்போர்ட்ல நாங்க அழுத அழுக இருக்கே… கௌதம் தான் எங்கள அதட்டி அடக்கி வெச்சான். ரெண்டு பேருகிட்டயும் மாறி மாறி ஏதாவது பேசிட்டே இருந்தான்.
ஜென்னி கிளம்பினதுக்கப்பறம் வீட்டுக்குக் கூட்டிட்டு வராம ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் என்னைச் சாப்பிட வெச்சு உனக்கு நான் இருக்கேன் ரேணு. இப்படி எல்லாம் அழாத என்னால பார்க்க முடியலன்னு சொல்லி என்னைச் சமாதனம் செஞ்சான்.
இப்போ வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் நான் கொஞ்சம் தெளிவா யோசிக்குறேன். இனி அழ மாட்டேன். அது அவனுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்குன்னா நான் இனி அழவே மாட்டேன்…
-ரேணு
கார் வரும் சத்தத்தில் வேகமாக எழுந்துச் சென்று பார்த்தாள் மீனா. மணி நள்ளிரவைத் தாண்டியிருந்தது. காரை விட்டு இறங்கிய ராஜேஷ் “சாரி மீனு… ரொம்ப லேட் ஆகிடுச்சு. நீ சாப்பிட்டியா?” என்று கேட்டான்.
“இல்ல நீங்க உள்ள வாங்க…” அவன் கையிலிருந்த பேகை வாங்கிக் கொண்டாள்.
“சாரி மீனு…” என்று மீண்டும் கூறி அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் “பைவ் மினிட்ஸ். நீ எடுத்து வை. டிரஸ் மாத்திட்டு வந்திடுறேன்” என்று கூறி மாடிப் படிகளை இரண்டிரண்டாகத் தாவி ஏறிச் சென்றான்.
‘லேட்டா வர வேண்டியது… அப்பறம் இப்படி சாரி சொல்லி சமாளிக்க வேண்டியது…’ பையை ஹாலில் வைத்தவள் சாப்பாட்டை எடுத்து டைனிங் டேபிளில் அடுக்கினாள்.
ராஜேஷ் அவசரமாக வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து “இன்னைக்கு நானே என் மீனு குட்டிக்கு ஊட்டி விடுவேனாம்” என்று கூறி இருவருக்கும் சேர்த்தே ஹாட் பேக்கிலிருந்து தனது தட்டில் எடுத்து வைத்தான்.
“ஒண்ணும் வேண்டாம். ரொம்பத் தான் அக்கறை… நீங்க சாப்பிடுங்க ராஜேஷ். நான் சாப்பிட்டுக்குறேன்”
“அட நீ வா… என்னைக்கோ தான நானே ஊட்டி விடுறேன்” அவள் கையைப் பிடித்து அருகிலிருந்த நாற்காலியில் அமர்த்தி ஊட்டத் துவங்கினான்.
“அப்பறம் மீனு… சொல்லு… இன்னைக்கு என்ன பண்ண?”
“வேற என்ன? டைரி படிச்சேன்” என்றவள் தான் படித்தவரை அவனிடம் கூறினாள்.
“இந்த ரேணு பொண்ணு ஏன் ராஜேஷ் கௌதம இவ்வளவு லவ் பண்ணுறா?”
“பொண்ணுங்க மனச என்னைக்கு மீனு புரிஞ்சுக்க முடிஞ்சிருக்கு?”
“ஆமாமா…” என்று கூறி தட்டை அவன் கையிலிருந்து வாங்கினாள்.
ஹாலிற்கு வந்து டைரியை கையிலெடுத்தவன் அவள் வந்ததும் “தூங்கலாம் மீனு. நேரம் ஆச்சு” என்று கூறி மாடிக்கு எழுந்து சென்றான்.
டைரியை எடுத்து வந்து கட்டிலின் அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டுப் படுத்த மீனா அப்போது தான் ஞாபகம் வந்தவளாக “ராஜேஷ் நாளைக்கு ரோஷன் இங்க நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு வர போறேன். கவிதாகிட்ட கேட்டுட்டேன். பாவம் அவளும் அவன தனியா வெச்சு சமாளிச்சு நைட் எல்லாம் தூக்கம் இல்லாம கஷ்ட்டப்படுறா” என்றாள்.
“என்னது?”
“நாளைக்கு ஆபீஸ் போக மாட்டீங்களே?”
“தான்க் யூ மீனு” அவள் முகம் பற்றி அருகில் இழுத்து அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்.
நல்ல உறக்கத்திலிருந்த கவிதா பாத்திரங்கள் உருளும் சத்தத்தில் கண் விழித்து வேகமாக எழுந்தமர்ந்தாள். அருகில் ரோஷன் அசையவும் அவனைத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்துவிட்டு கீழே சென்றாள்.
ஹாலில் யாரும் இல்லை. செண்பகத்தின் அறையில் விளக்கு எதுவும் எரியாமல் அமைதியாக இருந்தது.
ஹாலின் விளக்கைப் போட்டுப் பார்த்தாள். பின் டைனிங் ஹாலிற்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கும் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தது. சமையலறையுள் சென்று விளக்கைப் போட்டாள். சில பாத்திரங்கள் கீழே சிதறிக் கிடந்தன.
காலில் தட்டுப்பட்ட பாத்திரத்தை முதலில் எடுத்து வைத்துவிட்டு சுற்றிப் பார்த்தாள். ஒரு ஜன்னல் மட்டும் திறந்திருந்தது. அதை மூடித் தாழிட்டாள். ‘நேத்தே இத சாத்தி வெக்க சொன்னேன். செண்பா மறந்துட்டாப் போல…’
அவள் திரும்பிய நேரம் சமையலறையின் ஒரு மூலையில் வைத்திருந்த மினரல் வாட்டர் கேனிலிருந்து தண்ணீர் கீழே இறங்கும் சத்தம் கேட்டது.
கவிதா வேகமாகத் திரும்பவும் அந்த கேன் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. “ச்சீ” என்று வாய் விட்டுக் கூறி அந்த கேனின் மேல் கை வைத்து அது ஆடுவதை நிறுத்திவிட்டு மீதி இருந்த பாத்திரங்களை எடுத்து வைத்தாள். மீண்டும் அறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு விளக்கை அணைத்தாள்.
ஹாலிற்கு வந்தவள் ஏதோ தோன்ற கதவைத் திறந்து வெளியே சென்றாள். செல்வம் கேட்டின் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் அருகில் சென்று “செல்வம் அண்ணா… அந்தப் பூனையைக் கண்டுப்பிடிச்சுட்டீங்களா?” என்று கேட்டாள்.
“இல்ல கவிதா மா… நேத்துலேருந்துத் தேடிட்டு தான் இருக்கேன்… கண்ணுல அகப்பட மாட்டேங்குது…”
“இன்னைக்கும் கிச்சன்ல பாத்திரத்த எல்லாம் உருட்டிடுச்சு செல்வம் அண்ணா… நாளைக்கு முதல்ல அத கண்டுப்பிடிக்கணும்”
“தேடுறேன் மா” அவனிடம் சொல்லிக் கொண்டு வீட்டினுள் வந்தவள் கதவைத் தாழிட்டு சோபாவில் அமர்ந்தாள்.
சிறிது நேரம் ஏதேதோ யோசனையில் இருந்தவள் மகன் தனியாக உறங்குவது நினைவு வரவே எழுந்து மாடிக்குச் சென்றாள். அவனருகில் அமர்ந்து அவன் தலையை வருடிக் கொடுத்துவிட்டு படுத்தாள். ஏனோ வெகு நேரம் உறக்கம் வரவில்லை. அமைதியாகப் படுத்திருந்தவள் மெல்ல உறங்கியும் போனாள்.
யாரோ தன்னைத் தட்டி எழுப்புவதை உணர்ந்து மெல்ல கண் விழித்த கவிதா அருகில் மீனாவைக் கண்டதும் பதறி எழுந்தமர்ந்தாள்.
“ஏய் நான் தான்டி… ஏன் இப்படிப் பதறுற?”
“மணி என்னடி ஆச்சு? அவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?” வேகமாக மொபைலை எடுத்துப் பார்த்தாள்.
“அட நீ வேறடி… மணி ஆறு தான் ஆகுது” சலித்தபடி அவள் அருகில் மெத்தையில் அமர்ந்தாள் மீனா.
“ஒஹ்ஹ்” மெல்ல போர்வையை விளக்கினாள் கவிதா.
“என்ன ஓ? எல்லாம் உன் அண்ணன் படுத்துன பாடு தான். ரோஷன் நாளைக்கு நம்ம வீட்டுக்குத் தூக்கிட்டு வர போறேன்னு நைட் சொன்னதுலேருந்து ஒரு மார்க்கமா தான் இருக்காங்க… நைட் தூங்குனாங்களான்னுக் கூடச் சந்தேகம் தான். என்னையவே தூங்க விடல…” என்று கூறியவள் சட்டென்று தோழியைத் திரும்பிப் பார்த்தாள்.
“ம்ம்ஹும்ம்…”
“போடி… அது கூடப் பரவாயில்ல… காலையில… அப்போ தான் நானே தூங்க ஆரம்பிச்சேன்… என் கைய சொரண்டி மீனு எந்திரி மீனு… ரோஷன் கூப்பிடப் போகணும்லன்னு சொல்லி அஞ்சு மணிக்கே எழுப்பி விட்டுட்டாங்கடி…” என்று கூறியவளைப் பார்க்க கவிதாவிற்கு பாவமாக இருந்தது.
“விடுடி… அண்ணா ஏதோ ஆசையா ரோஷன பார்க்கணும்னு உன்ன எழுப்பி இருப்பாங்க…”
“இப்பயும் உங்கண்ணன விட்டுக் குடுக்குறியா நீ? மனுஷனத் தூங்க விடாமப் படுத்திக்கிட்டு இருக்காங்கன்னு சொல்லுறேன்…”
கப்போர்டிலிருந்து பேஸ்ட்டும் ப்ரஷும் எடுத்தாள் கவிதா.
“சரி சரி இவன சீக்கிரம் கிளப்பி விடு…”
“அவன முதல்ல எழுப்பு…”
“உன் பையன பாரு… எல்லாம் ராஜேஷுக்கு ஏத்த ஜோடி தான்…”
ரோஷன் விழித்துக் குப்புறக் கவிழ்ந்து படுத்து இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அடப்பாவி…”
“சீக்கிரம் கவி”
“ஏன்டி பறக்குற? நான் இன்னும் அவனுக்கு எதுவும் எடுத்து வெக்கல… இரு…”
“ஐயோ அம்மா தாயே… எனக்கு ஒரு மணி நேரம் தான் டைம் குடுத்திருக்காங்க… அவனோட திங்க்ஸ் எந்த கப்போர்ட்ல இருக்குன்னு சொல்லு. நான் எடுத்து வெக்குறேன். நீ அவன ரெடி பண்ணு… இல்லன்னா யாரு வாங்கிக் கட்டிக்குறது?”
கவிதா அவனுடைய கப்போர்டைக் காண்பித்து என்னென்ன எடுத்து வைக்க வேண்டும் என்று கூறி அவனைக் குளிக்க வைத்து உடை மாற்றி விட்டாள்.
மீனா ஒரு பை நிறைய அவனுக்குத் தேவையானவற்றை எடுத்து காரில் வைத்துவிட்டு ரோஷனை முன் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்கும் சிறிய சீட் ஒன்றை வைத்து அதில் அமர வைத்து சீட் பெல்ட் மாட்டி விட்டாள்.
மாலை தானே வந்து அவனைக் கூட்டி செல்வதாகக் கூறி விடைக் கொடுத்தாள் கவிதா.
“உங்களுக்குத் தான் பொழுது போகாது இல்ல கா…”
“ஆமா செண்பகம்… ஆனா அவளுக்கும் ஆசை தான்… அவனக் கூட்டிட்டு போய் வெச்சுக்கணும்னு. நைட் கிச்சன்ல ஜன்னல் சாத்தலையா செண்பா? நேத்தும் பூனை உள்ள வந்துடுச்சு”
“ஐயோ மறந்துட்டேன் கா. நேத்து நல்ல தூக்கம். சத்தம் கூடக் கேட்கல…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!