வீட்டின் வாசலிலயே நின்று மீனாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தான் ராஜேஷ். அவள் காரை நிறுத்தி இறங்கியதும் ஓடி சென்று கதவைத் திறந்து சீட் பெல்ட்டை கழட்டி குழந்தையைத் தூக்க அவன் கழுத்தைச் சுற்றி கைப் போட்டு இறுக பற்றி “ம்ம்… ம்ம்…” என்றான் ரோஷன்.
“செல்லக் குட்டி…” ராஜேஷ் வீட்டினுள் செல்ல அவன் கன்னத்தைப் பற்றிக் குதிக்க ஆரம்பித்தான்.
பெருமூச்சொன்றை வெளியேற்றி பின் இருக்கையில் இருந்த பேகை கையில் எடுத்து காரை லாக் செய்துவிட்டு “அட்லீஸ்ட் இத தூக்கிட்டு வரதுக்காவது ஹெல்ப் பண்ணுறாங்களா? நாளைக்கு நமக்குப் புள்ள பொறந்தாலும் இப்படித் தான் போலயே?” என்று புலம்பியபடி வீட்டினுள் சென்றாள்.
குட்டி பையனுடன் சோபாவில் அமர்ந்து “டிஷ்யூம்… டிஷ்யூம்…” என்று குத்துச் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தான் ராஜேஷ். வீட்டில் ரோஷனின் சிரிப்புச் சத்தம் மட்டுமே பெரிதாகக் கேட்டது.
“இப்பவே வீட்டுல இருக்குறவங்கள எல்லாம் அடிக்குறதுக்குத் தயார் பண்ணுறதப் பாரு…” என்று முனுமுனுத்து பையைக் கீழே இருந்த அறை ஒன்றில் வைத்துவிட்டு வந்தாள்.
கவிதாவிற்கு மகன் இல்லாமல் வீடே வெறிச்சோடி போனது.
“ரோஷன் குட்டி இருந்த வரைக்கும் அவன் கூட விளையாடி பொழுதுப் போயிடுச்சா… இப்போ அவன் இல்லாம என்னமோ வீட்டுல வேலையே இல்லாத மாதிரித் தெரியுது கா…” அழுக்குத் துணிகளை வாஷிங் மஷினில் போடுவதற்காக எடுத்துச் சென்றாள் செண்பகம்.
கவிதாவிற்கும் என்னவோ போல் இருக்க எழுந்து மாடியறைக்குச் சென்றாள். காலை ரோஷனின் பொருட்களை எடுத்த மீனா அவற்றுள் சிலவற்றை வேண்டாம் என்று மெத்தை மீதே வைத்து விட்டுச் சென்றிருக்க அவற்றை எடுத்து கப்போர்டில் அடுக்கத் துவங்கினாள்.
பொம்மைகளை அட்டைப்பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் தனக்குப் பின்னால் ஏதோ அரவம் கேட்டு வேகமாகத் திரும்பிப் பார்த்தாள்.
கார்த்திக் தன் வசீகரப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.
அவனை அந்த நேரத்தில் அங்குச் சற்றும் எதிர்ப்பார்க்காதவள் விழி விரித்து அவனையே பார்த்தபடி அசையாமல் நிற்க மெல்ல தன் வலது கை தூக்கி வா என்றழைத்தான்.
ஒரு நொடியும் தாமதிக்காமல் அவனை நோக்கி வேகமாக ஓடியவள் தன் கரங்களில் அவன் முகத்தை ஏந்தி முகம் முழுதும் முத்தமிட்டாள்.
தன்னை வந்து அணைத்துக் கொள்வாள் என்று எண்ணியிருந்தவன் அவளின் இந்தச் செயலால் முதலில் அதிர்ந்து, பின் நீட்டியிருந்த தன் வலது கையால் அவள் இடையைச் சுற்றி வளைத்துக் கண் மூடி அவள் தரும் முத்தங்களை ரசிக்கத் துவங்கினான்.
சில நொடிகளுக்குப் பின் நிமிர்ந்துப் பார்த்தவளை மெல்ல விழித் திறந்து நோக்கியவன் அவளைத் தூக்கி ஒருமுறை சுற்றி இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவள் “நேர்ல மட்டும் இதெல்லாம் செய்யுங்க. ஆனா எங்கயாவது விட்டுட்டுப் போனா கண்டுக்கவே கண்டுக்காதீங்க. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு கார்த்திக்” என்றாள்.
“கவி… உனக்கே தெரியும்ல… நான் வேலைன்னு வந்துட்டா என்னைச் சுத்தி இருக்க எல்லாத்தையும் மறந்திடுவேன். ஏன் என்னையே நான் மறந்திடுவேன். எத்தன நாள் சாப்பிடாம இருந்திருக்கேன்னு உனக்குத் தெரியாதா. நான் உன்கிட்ட பேசலன்றதால உன்னைப் பத்தி நினைக்கல… உன் மேல அக்கறை இல்லைன்னு அர்த்தமா கவி?”
“ஐ லவ் யூ கார்த்திக்”
“ஐ லவ் யூ” அவள் முகம் பற்றி நிமிர்த்திக் குனிந்து அவள் இதழில் முத்தமிட்டான்.
“புள்ள நெனப்பே இப்போ தான் வருதாக்கும்? மீனா வந்து காலையிலயே தூக்கிட்டுப் போயிட்டா கார்த்திக். அவங்க வீட்டுல இருக்கான்” மெத்தையில் மிச்சம் இருந்த துணிகளை எடுத்து கப்போர்டில் வைத்தாள்.
“ஆப்போ ரோஷனும் இல்லையா?”
இத்தனை நேரம் பேசியவனுக்கும் இப்போது இந்தக் கேள்வியைக் கேட்பவனுக்குமான வித்தியாசம் உடனே கவிதாவிற்கு உரைத்தது. பேசுபவன் அவள் கணவனாயிற்றே…
“ஆமா. நீங்க போய்க் குளிச்சுட்டு வாங்க முதல்ல. சாப்பிடலாம்”
“இப்போ அதுவா முக்கியம்?” இத்தனை நாட்கள் மனைவியைப் பிரிந்திருந்தவனுக்கு முக்கியமாகப்பட்டதைச் செய்ய ஆரம்பித்தான்.
“இன்னும் ஒரு வாய் வாங்கிக்கிட்டா ரோஷன் குட்டிய நான் குதிர சவாரி செய்ய வெப்பேனாம்…” ராஜேஷ் பேரம் பேச மீனா கையில் ஸ்பூனுடன் எப்போதடா அவன் வாயைத் திறப்பான் என்று காத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் போக்குக் காட்டியவன் மீனா கொடுத்ததை வாங்கிக் கொண்டான்.
“ரொம்பப் புலம்பாத. இன்னும் ஒரு வருஷம் தான். அப்பறம் நீயும் இதெல்லாம் தெனம் செய்ய வேண்டி இருக்கும். இல்லடா ரோஷன்?”
“இந்த ஊட்டி விடுற வேலைய மட்டும் உங்ககிட்ட குடுத்திடுவேன். சூப்பரா கதை சொல்லி நீங்க தான் பொறுமையா ஊட்டி விடுறீங்க” அவன் கன்னத்தில் முத்தமிட்டு வேகமாக எழுந்துச் சென்றாள்.
“பாத்தியாடா இவளுக்குக் கொழுப்ப…”
ரோஷன் கை தட்டி சிரிக்க “உனக்கும் ஒரு நாள் இந்த நிலைமை வரும்டா…” என்றான். மீனா பீடிங் பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்து அவனுக்குப் புகட்டினாள்.
குளித்துவிட்டு வந்த கார்த்திக் “சீக்கிரம் கிளம்பு கவி. ராஜேஷ் வீட்டுக்குப் போவோம்” என்று கூறி கப்போர்ட்டை திறந்து அவள் கையில் ஒரு சுடிதாரை எடுத்து நீட்டினான்.
அவன் வாங்கி வந்திருந்தது. அழகிய ஆகாய நீல வண்ணத்தில் வெள்ளையில் நூல் வேலைப்பாட்டுடன் இருந்ததைக் கவிதாவிற்கு பார்த்ததும் பிடித்துவிட்டது. “தேங்க்ஸ் கார்த்திக்” என்று கூறி அவன் இதழில் முத்தமிட்டாள்.
அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தவன் “இப்படி எல்லாம் பண்ணா அப்பறம் நம்ம நாளைக்குத் தான் கிளம்புவோம். பரவாயில்லையா?” என்றான்.
“ஆள விடுங்க…” அவன் பிடியிலிருந்து நழுவி வேகமாகக் குளியலறைக்குள் ஓட கண்ணாடி முன் நின்று தலை சீவினான்.
“அவன நீங்களே வெச்சு இப்படிக் கொஞ்சிக்கிட்டு இருந்தா… நானும் எவ்வளவு நேரமா கேக்குறேன்? என்கிட்டக் குடுக்கவே மாட்டேங்குறீங்க. நீங்க ரெண்டுப் பேருமே விளையாடுறீங்க. என்னைச் சேர்த்துக்கவே மாட்டேங்குறீங்க. நான் போறேன்” ஹாலை விட்டு வெளியேறினாள் மீனா.
அவள் சத்தம் போடவும் கையில் இருந்த பொம்மையைக் கீழே வைத்துவிட்டு ராஜேஷையும் வெளியே செல்லும் மீனாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரோஷன்.
“இப்போ எதுக்குடா இவ இப்படிக் கோச்சுக்கிட்டுப் போறா? சரி வா… நம்ம போவோம. ” ரோஷனை தூக்கிக் கொண்டு கீழே இருந்த ஒரு அறைக்குள் சென்றான்.
மீனா வெளியே போர்ட்டிகோவிற்கு வர அங்கே கார் வந்து நின்றது. அதிலிருந்து கார்த்திக் இறங்கவும் முதலில் ஆச்சப்பியப்பட்டாள். மறுநொடியே உள்ளே ராஜேஷ் தன்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது நினைவு வந்து அவனைக் கோபமாக முறைத்து அவனருகில் வந்தாள்.
“அண்ணா…” என்று அவள் அலறவும் ஒரு அடிப் பின்னால் நகர்ந்தான் கார்த்திக்.
“இப்போ எதுக்கு வந்தீங்க?”
“வீட்டுக்கு வந்தவங்ககிட்ட முதல்ல கேக்க வேண்டிய கேள்விதான் மீனா…”
“இத்தன நாள் எதுக்கு என் பிரண்ட தனியா விட்டுட்டுப் போனீங்க?”
“அதுக்கு அவளே இவ்வளவு கோவப்படல… நீ ஏன் கத்துற?”
“அவ கேக்க மாட்டா…” கவிதாவை முறைத்தாள் மீனா.
“எல்லாம் உள்ள இருக்காங்களே… அவங்களால வந்தது. அவங்க என்கூட இருக்கணும்னு தான நீங்க கவிதாவ தனியா விட்டுட்டு போனீங்க?”
“இல்ல… வந்து மூனு மணி நேரம் ஆகுதுன்னு சொல்லுற… இப்போதான் இங்க வரீங்க… இன்னும் சாப்பிட கூட இல்லன்னா…”
“ஏய் ச்சீ… உனக்கு வேற வேலையே இல்ல போடி…” தன்னைத் தாண்டி நடந்தவளின் கையைப் பற்றித் தடுத்து “ஒழுங்கா சொல்லு… என்ன நடந்துது?” என்று விடாமல் கேட்டாள்.
“ஐயோ… வா மா தாயே…” தன் கையை உருவி கொண்டு வேகமாக ஓடினாள் கவிதா. அறை வாயிலுக்குச் சென்றதும் அப்படியே நின்றவளைக் கண்டு மீனா அவள் அருகில் வந்து அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
ராஜேஷும் கார்த்திக்கும் எதிர் எதிரில் சிறு இடைவெளி விட்டு நின்று ரோஷனை மாறி மாறி தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
“ஐயோ பிள்ளை…” என்று அலறி கார்த்திக்கின் கையில் இருந்தவனை வாங்குவதற்காக அவன் அருகில் சென்றாள் மீனா.
“ஆமா…” என்று ராகம் பாடியவன் மகனை நண்பனிடம் தூக்கிப் போட்டான். அவனை அழகாக கேட்ச் பிடித்த ராஜேஷ் “யாருடா இவங்க?” என்று கேட்டான்.
“விளையாடாதீங்க ராஜேஷ்…” அவன் அருகில் சென்றாள் மீனா.
“நிக்குறா பாரு மரம் மாதிரி… வந்து புள்ளைய வாங்குடி எரும…” மீனா சத்தம் போடவும் தான் அவள் வேகமாக கார்த்திக்கின் அருகில் வந்தாள்.
“போடி… நான் குடுக்க மாட்டேன்… இல்லபா…” ரோஷனின் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டான் கார்த்திக். “நம்ம வெளில போய் கண்டின்யூ பண்ணுவோம்டா செல்லம்…” அவன் கன்னத்தைப் பிடித்துக் கில்லி முத்தமிட்டான் ராஜேஷ்.
“இங்க பிசாசுகளோட நடமாட்டம் ஓவரா இருக்கு…”
“ஆமாடா…”
“பார்த்தியா ரெண்டையும்… என்ன கொழுப்பிருக்கும்? நாம பிசாசுங்களா?”
“வா ஹாலுக்குப் போவோம். திரும்பவும் தூக்கிப் போட்டு கேட்ச் பிடிச்சு விளையாடப் போறாங்க…” அவள் கையைப் பிடித்து ஹாலிற்கு இழுத்து வந்தாள் கவிதா.
சோபாவில் அருகருகில் அமர்ந்து ரோஷனிடம் எதுவோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தனர்.
“இப்படியா பண்ணுறது?”
“அய்யய்யோ பிசாசுக் கூட்டம் இங்கயும் வந்துடுச்சு…”
“போச்சு போச்சு…”
“அண்ணா இது சரியே இல்ல…”
“என்ன்ன்னாப் பண்ணுவ?”
“நீ எதுவும் கேட்க மாட்டியா கவி?”
“நாங்க அவள சொல்லவே இல்லையே…” ராஜேஷ் கூற அவனைத் திரும்பி முறைத்தாள் மீனா.
“உன் பிரண்ட் எதுவும் கேட்க மாட்டா… ஏன்னா அவளோட அண்ணன் அப்படி…” என்று நண்பனை கைக் காட்டிய கார்த்திக் “எங்க கல்யாணத்துல எங்கள ஓட்டுறேன்னு என்னை என்ன பாடு படுத்தின? வைபோட பிரண்ட்னு உன்ன எதுவும் சொல்ல முடியாமப் போச்சு.
ஆனா என் பிரண்ட் வந்து உன்னப் பிடிச்சுருக்கு… கல்யாணம் பண்ணிக்க ஆசப் படுறேன்னு என்கிட்ட சொன்னப்பவே முடிவுப் பண்ணிட்டேன்டி… ஆயுசுக்கும் நீ என்கிட்டத் தொலஞ்சன்னு… இனி யாரையாவது ஓட்டுவ நீ? எனக்குத் தங்கச்சியாகி சிக்கிட்டல்ல…” என்றான்.
“அண்ணா… ஏதோ கல்யாணத்தன்னைக்குக் கொஞ்சூண்டு ஓட்டுனதுக்கு என்னைப் பாக்குறப்போலாம் இப்படியா?”
“என்னங்க… இப்போ கூட என்னை ஓட்டுனாங்க…” கார்த்திக்கின் அருகில் வந்தமர்ந்தாள் கவிதா.
‘ஐயோ இப்படிப் போட்டுக் குடுக்குறாளே…’
“அப்படியாடா செல்லம்? என்ன தைரியம் உனக்கு? இன்னும் நீ திருந்தல… அப்படித் தான?” ரோஷனை ராஜேஷிற்கும் கவிதாவிற்கும் நடுவில் தான் அமர்ந்திருந்த இடத்தில் அமர வைத்து விட்டு அவள் எதிரில் வந்து நின்றான்.
“உங்க பொண்டாட்டி என்னை எப்படி எல்லாம் கிண்டல் பண்ணுறான்னுத் தெரியுமா?”
“அதுக்காக அவள திருப்பிக் கிண்டல் பண்ணுவியா நீ?”
“அங்க பாருங்கண்ணா… அண்ணனும் தங்கச்சியும் அமைதியா ஒரே ரியாக்ஷன் குடுக்கறத…”
“அங்க மட்டும் என்ன வாழுதாம்… ரெண்டுப் பேரும் அடிச்சுக்கல?”
“சரி சரி… அண்ணா நீங்க காலையிலிருந்து சாப்பிடவே… இல்லையாம்…”
“நீ அடங்கவே மாட்டியா மீனா?”
சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்தமர்ந்ததும் “ஏதோ டைரி படிக்குறீங்களாமே…” என்று கேட்டான் கார்த்திக்.
“ஆமா அண்ணா… இருங்க எடுத்துட்டு வரேன்…” வேகமாக எழுந்து மாடிக்கு ஓடினாள் மீனா.
“ஏன்டா… வாய வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? அவளே ஏதோ காலையிலிருந்து தான் அத மறந்துட்டு இருக்கா… இப்போ வருவாப் பாரு… செத்த நீ”
“பாத்துக்கலாம்… விடுடா…”
அதற்குள் அங்கு வந்த மீனா முதலிலிருந்து தான் படித்தவரைக் கூற ஆரம்பித்தாள். இடையில் குறுக்கிட்ட கார்த்திக்கை அவள் பேச விடவில்லை.
அவன் திரும்பி ராஜேஷைப் பார்க்கவும் “என்னமோ பாத்துப்பேன்ன?” என்றான் அவன். அவர்களின் எதிரில் இருந்த சோபாவில் மீனா அருகில் அமர்ந்திருந்தாள் கவிதா.
ஒரு வழியாக முழுவதும் கூறி முடித்ததும் “நீங்க மட்டும் தான் இன்னும் இந்த டைரி படிக்கல… நீங்க கொஞ்சம் படிச்சு சொல்லுங்கண்ணா…” என்று அவன் கையில் டைரியைத் திணித்தாள்.
கவிதாவும் ஆர்வமாக அவன் முகம் நோக்க அதிர்ச்சியாகி இருவரையும் பார்த்தவன் திரும்பி அருகில் இருந்த ராஜேஷை பார்த்தான்.
“தேவையா உனக்கு இது? இத்தன நாள் இதுங்கள வெச்சுக்கிட்டு நான் எவ்வளவு அல்லாடினேன்னு இப்போ புரியுதாடா? படி… வேற வழியில்ல. இல்லன்னா உன் அருமை தங்கச்சி விட மாட்டா”
“தெய்வம்டா நீ”
“ஐ நோ” காலரை தூக்கி விட்டுக் கொண்டான் ராஜேஷ்.
வேறு வழியின்றி டைரியைத் திறந்து முதல் பக்கத்தை அமைதியாக வாசித்துப் பார்த்தவன் மீனா விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தான்.
ஜென்னி போனதுக்கு அப்பறம் எனக்கு வேற க்ளோஸ் பிரண்ட் யாரும் இல்ல. இதுக்கப்பறம் யார்கிட்டயும் அந்தளவுக்குப பேசிப் பழக முடியும்னு எனக்குத் தோணல.
அவ இல்லாததால நான் எல்லாத்தையும் கௌதம்கிட்ட தான் சொல்லுறேன். இதுக்கு முன்னாடியும் அப்படித் தான். ஆனா இப்போ மாதிரி ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சொன்னதில்ல. எங்களுக்குள்ள இருந்த நெருக்கம் அதிகமான மாதிரி ஒரு பீல்…
22
ஜென்னி அப்பப்போ மெயில் பண்ணுவா. ரெண்டு தடவ ஸ்கைப்ல பேசுனோம். என்ன இருந்தாலும் அவப் பக்கத்துல இருக்க மாதிரி இல்ல.
பொண்ணுங்களுக்கு நடுவுல இருக்க பிரண்ட்ஷிப் இப்படித் தானோ? ஆயுசுக்கும் ஒண்ணாவே இருக்க முடியாதோ?
நான் இத நெனச்சு வருத்தப்படுவேன்னு கௌதம்கு தெரியும். எப்பயும் என்கிட்டப் பேசிட்டே இருப்பான்.
என் வாழ்க்கையில கௌதம் தவிர வேற யாருமே இல்லாத மாதிரி இருக்கு. எந்நேரமும் அவனப் பத்தி யோசிச்சு… அவன் கூடப் பேசி…
நான் பேசணும்னுக் கூட அவசியம் இல்ல. அவனே எல்லாத்தையும் புரிஞ்சுப்பான். எப்படித் தான் அவனால முடியுதோ?
இப்போ யோசிச்சுப் பார்த்தா அவன் எனக்காகச் செஞ்ச அளவுக்கு அவனுக்காக நான் எதுவும் பெருசா செய்யவே இல்லையோன்னுத் தோணுது. ஐ லவ் யூ கௌதம்.
-ரேணு
இன்னைக்கு நான் உண்மையில பறந்துக்கிட்டு இருக்கேன். கௌதம் வீட்டுலேருந்து எங்க வீட்டுலப் பேசி எங்கக் கல்யாண டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்.
கௌதம் செஞ்ச முதல் வேலை என்ன தெரியுமா? எங்க ரெண்டுப் பேருக்கும் சேர்த்து ஒரு ஜாயின்ட் அகௌன்ட் ஓபன் பண்ணான்.
எதுக்கு இதெல்லாம்னு கேட்டதுக்கு “யூ ஆர் மை பெட்டர் ஹாப்… இனி எல்லாத்துலயும் உனக்கும் பங்கு உண்டு. நீ என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும் ரேணு. அதுக்கு என்னால என்னலாம் செய்ய முடியுமோ செய்வேன்”னு சொன்னான். எனக்குக் கண்ணுக் கலங்கிடுச்சு. நான் இப்படி அழறத இன்னும் நிறுத்தின பாடில்ல…
வீட்டுக்கு வந்ததும் அவனை இறுக்கி அணைச்சு அழுதுட்டேன். “இப்போ தான நீ சந்தோஷமா இருக்க நான் என்ன வேணா செய்வேன்னு சொன்னேன். நானே நீ அழறதுக்குக் காரணமா இருக்க மாட்டேன் ரேணு. ப்ளீஸ் இனி இப்படி அழாத”னு சொல்லி என் நெத்தில கிஸ் பண்ணான்.
வாழணும்… இவனோட… ஒரு நிமிஷம் கூடப் பிரியாம…
-ரேணு
போன வாரம் எங்கக் கல்யாணம் முடிஞ்சுது. ஜென்னி வந்திருந்தா. அவளப் பார்த்ததுல கௌதம்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும்னு எனக்குப் புரிஞ்சுது.
பின்ன… அவளுக்கு போன் பண்ணி மெரட்டி இல்ல வர வெச்சான். அவ வரலன்னா நான் பீல் பண்ணுவேன்னு அவனுக்கு நல்லாத் தெரியும்.
அவ இந்தியா வந்ததுக்கு அப்பறம் அவ கூடச் சேர்ந்து ஷாப்பிங் போறேன் ஊர் சுத்த போறேன்னு அவனக் கண்டுக்கவே இல்ல.
முதல் இரண்டு நாள் பொறுத்துப் பார்த்தவன் அப்பறம் எங்கக் கூடயே வர ஆரம்பிச்சுட்டான். எங்களுக்குத் தான் பார்க்க பாவமா இருந்துது.
கல்யாணத்தன்னைக்கு முதல் தடவ அவன வேஷ்டி சட்டையில… என்னமோ புதுசா தெரிஞ்சான். என்னைப் பார்த்ததும் ரெண்டு புருவத்தையும் மாறி மாறித் தூக்கி சிரிச்சான்.
கல்யாணம் முடிஞ்சு முதல்ல அவன் வீட்டுக்கு தான் போகணும். ஆனா கௌதம் என்னை வேற ஒரு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். எங்களோட வீட்டுக்கு.
கார ஒரு பெரிய வீட்டுக்கு முன்னாடி நிறுத்தி இறங்க சொன்னப்போ எனக்கு ஒண்ணும் புரியல. என் கையப் பிடிச்சு உள்ளக் கூட்டிட்டுப் போனான். ஆன்ட்டி எங்களுக்கு ஆரத்தி எடுத்தாங்க. இன்னும் நிறையச் சொந்தக்காரங்க இருந்தாங்க. என்னோட அம்மா அப்பாவும்.
உள்ளப் போனதும் என் கைய விடாம வீட்டை சுத்திக் காமிக்க ஆரம்பிச்சான். “ரேணு… நான் அன்னைக்குச் சொன்னேன்ல… என் தாத்தா எனக்குக் குடுத்த இடத்த வித்துட்டு வீடு கட்டப் போறேன்னு… இது தான் அந்த வீடு.
ஒரு வருஷமாப் பார்த்து பார்த்து கட்டினது. உனக்குப் பிடிச்ச எல்லாமே இருக்கணும்னு யோசிச்சு தான் ஒவ்வொண்ணும் செஞ்சேன். உனக்குப் பிடிச்சிருக்கும்னு நினைக்குறேன்…” னு சொல்லி மாடில எங்களோட ரூம திறந்துக் காமிச்சான்.
ரூம் அவ்வளவு அழகா ஸ்கை ப்ளூ கலர்ல இருந்துது. ஏதோ மேகத்துல மிதக்குற ஒரு பீல். “பிடிச்சுருக்கா? இது நம்ம ரூம்… இந்த’ரேணு இல்லம்’நம்மளோட வீடு”னு சொல்லி என்னைத் தூக்கி சுத்தினான்.
எப்படிப் பிடிக்காமப் போகும்? என் கௌதம் பார்த்துப் பார்த்துக் கட்டின வீடாச்சே… ஆன்ட்டி அங்கிள் எங்ககூடத் தான் இருக்காங்க.
-ரேணு கௌதம்
“அண்ணா’ரேணு இல்லம்’உங்க வீட்டுப் பேரு இல்ல? இந்தப் பேர படிச்சப்போ எங்கயோ கேள்விப்பட்ட மாதிரியே இருந்துது. உங்க வீட்டு முன்னாடி போர்ட் இருக்கே…”
கார்த்திக் டைரியை எடுத்து வேகமாகப் பக்கங்களைப் புரட்டி கடைசிப் பக்கம் வரை ஒரு முறை மேலோட்டமாக வாசித்தான்.
பின் அதை மூடி அருகில் வைத்து முன் நெற்றியைத் தடவியபடியே கண்களை மூடி யோசித்தவன் “ராஜேஷ்… இந்த வீட்ட வாங்கின ஆள நீ தான எனக்கு இன்ட்ரோட்யூஸ் பண்ணி வெச்ச… தில்லி கிளம்புறதுக்கு முன்னாடி அவன் சாவுக்குப் போயிருந்தேன். அந்த ஆளப் பத்தி விசாரிடா…” என்றான்.
“ஆமா போயிருந்தேன்னு சொன்னியே. என்னடா? ஏதும் பிரச்சனையா?”
இருவருக்கும் ஜூஸ் எடுத்து வந்து டேபிளில் வைத்தாள் மீனா. “பரவாயில்லயே… அதுக்குள்ள ஜூஸ் ரெடி ஆயிடுச்சு?” அவனைத் திரும்பி முறைத்து விட்டுச் சென்றாள்.
“பார்த்து… அடிச்சுடப் போறா…”
“ஏன்டா? அனுபவமா?”
“டேய்…”
கவிதா ஹாலிற்கு வரவும் மீனா தங்கள் இருவருக்கும் ஜூஸ் எடுத்து வந்து ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தாள்.
“அப்பறம் அண்ணா… உங்க ட்ரிப் எப்படி இருந்துது?”
“அதெல்லாம் சூப்பர் மீனா. எல்லாமே ஓகே ஆயிடுச்சு…”
“அப்பாடா… எத்தன நாள் கவி தனியா இருப்பா? இனிமேலாவது அவக்கூடயே இருங்க”
மனைவியைப் பார்த்தபடியே “இல்ல மீனா. இன்னும் ஒரு வாரம் நான் போயாகணும். என்னால கவிதாவையும் ரோஷனையும் பார்க்காம இருக்க முடியலன்னு தான் இன்னைக்கு வந்தேன்…” என்று மெதுவாகக் கூறினான் கார்த்திக்.
கவிதாவின் முகம் சுருங்கிவிட்டது. சட்டென்று எழுந்து “நான் ரோஷன் எழுந்துட்டானா பார்த்துட்டு வரேன்…” என்று கூறி வேகமாக அவன் படுத்திருந்த அறையுள் புகுந்துக் கொண்டாள்.
“கவிதாகிட்ட சொல்லலையா கார்த்திக்?”
“இல்லடா… வந்ததும் எதுக்குச் சொல்லணும்னு சொல்லல”
“என்னண்ணா… பாவம் அவ எப்படித் தனியா இருப்பா?”
“அதான் அவ பிரண்ட் நீ இருக்க… அவ அண்ணன் தோ… இவன் இருக்கான்… அவளுக்கென்ன மீனா? அவக் கோவப்பட மாட்டா. நான் போய்ப் பேசிட்டு வரேன்”
மீனா முகம் வாட்டமாக இருக்கவும் எழுந்து அவள் அருகில் சென்றமர்ந்து அவள் தோளில் கை போட்டு “என்ன மீனு?” என்றான் ராஜேஷ்.
“பாவம் கவி”
“கார்த்திக் சொன்னாலும் கேக்க மாட்டான். அவன் சொன்ன மாதிரி அதான் நம்ம இருக்கோம்ல… பார்த்துக்கலாம் மீனு. நீ அதுக்காக இப்படி இருந்தா பார்க்க எனக்குக் கஷ்டமா இருக்கு மீனு. சிரி ப்ளீஸ்”
“ஆமா நாள் பூரா வம்பிழுக்க வேண்டியது… அப்பறம் மூஞ்சிய தூக்கி வெச்சிருந்தா மட்டும் சிரின்னு கெஞ்ச வேண்டியது…” ராஜேஷ் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அறை வாயிலில் ஒரு நிமிடம் தயங்கி நின்ற கார்த்திக் வேகமாகச் சென்று கவிதாவை இழுத்தணைத்துக் கொண்டான்.
“கவி ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. நமக்குக் கல்யாணம் ஆனப்போ ராஜேஷ் தான் வெளியூருக்குப் போனான். இப்போ அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகல. கல்யாணத்துக்கு அப்பறம் அவனும் போயிட்டு தான் இருக்கான்.
அவன் என் பிரண்ட் கவி… அவனுக்காக நான் கொஞ்ச நாள் உன்ன விட்டுட்டுப் போனா நீ இருந்துக்க மாட்டியா? நீ இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டங்குற தைரியத்துல தான நான் போறேன்னு அவன்கிட்ட சொன்னேன்.
“எனக்குக் கோவம் இல்ல கார்த்திக். இதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன? என்னமோ உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு. நீங்க திரும்பப் போறேன்னு சொன்னதும் கஷ்டமா இருந்துது. அதான் அவங்க என் முகத்தப் பார்க்குறதுக்குள்ள எந்திரிச்சு வந்துட்டேன். சாரி கார்த்திக்”
அவள் முகம் பற்றி நிமிர்த்தியவன் “ஐ லவ் யூ கவி” என்று கூறி அவள் இதழில் முத்தமிட்டான். “அச்சச்சோ ரோஷன் முழிச்சுட்டான்… ஐயோ விடுங்க கார்த்திக்…” என்று கூறி அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள்.
ரோஷன் மெத்தையில் அமர்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். “ஆமாடி… அவனுக்கு அப்பா அம்மாவ கிஸ் பண்ணுறாங்கன்னுத் தெரியும் பாரு… ஒரு கிஸ்ஸுக்கு ஓவராப் பண்ணாத…” என்று கூறி மீண்டும் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு விலகி ரோஷனை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
ராஜேஷ் மீனாவின் தோளில் கை போட்டு அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் எதிரில் கார்த்திக் அமர கவிதா அவன் அருகில் அமர்ந்தாள்.
மீனாவின் முகம் வருத்தத்தில் இருக்கவும் கார்த்திக் நண்பனிடம் என்ன என்று கண்களால் கேட்டான். “நீ தான்” என்று அவனும் சைகையில் பதில் சொல்ல “மீனா…” என்று ராகம் படியவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“எதுக்குடி போன?” மீனாவின் தோளில் போட்டிருந்த கையால் அவளைத் தன் பக்கம் திருப்பி “அடியேய்…” என்றான் ராஜேஷ்.
இரவு வெகு நேரமானதும் “சரி ராஜேஷ். நாங்கக் கிளம்புறோம்… நாளைக்குக் காலையில நான் கிளம்பிடுவேன்டா… அங்க போயிட்டு கால் பண்ணுறேன்…”
“ஆமா பிரண்ட்டுக்கு மட்டும் கால் பண்ணுங்க…”
“ம்ம்கும்… யாரு இவனா? கால் பண்ணா பிசினஸ் தவிர ஒரு வார்த்த எக்ஸ்ட்ராவாப் பேச மாட்டான் மா”
“அதான் உங்கக்கூடப் பேசுறதுக்கு நான் இருக்கேன்ல…”
“நீ எப்போடா வாய மூடுவன்னுல்ல நான் பார்த்துட்டு இருக்கேன்…”
“வேணாம்… நான் நாளைக்கு கால் பண்ணுறேன் கவிதா”
அவர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்துக் கிளம்பி வீடு வரும் வழியெங்கும் அமைதியாக இருந்தான் கார்த்திக். வீட்டினுள் காரை நிறுத்தி “உள்ள போ கவி… வந்துடுறேன்” என்று கூறி ரோஷனின் பொருட்கள் அடங்கிய பையை மட்டும் ஹாலில் எடுத்து வந்து வைத்துவிட்டு வெளியே வந்தான்.
“ரோஷன் குட்டி… ஹப்பா காலையிலிருந்து இவனப் பார்க்காம எவ்வளவு கஷ்டமா இருந்துது தெரியுமா கா…” கவிதாவின் கையிலிருந்து அவனை வாங்கிக் கொள்ள அவள் கன்னத்தைக் கிள்ள ஆரம்பித்தான்.
கேட் அருகே வந்த கார்த்திக் “செல்வம் அண்ணே… கேட்ட க்ளோஸ் பண்ணுங்க…” என்று கூறி வெளியே சென்று தெருவில் நின்றான். செல்வமும் கேட்டை மூடினான்.
“பூட்டுங்க செல்வம் அண்ணா…” ஒன்றும் புரியாமல் கேட்டை பூட்டினான் செல்வம்.
கார்த்திக் சற்றுத் தள்ளி நடந்து சென்று ’ரேணு இல்லம்’என்றிருந்த போர்டின் முன் நின்றான். அந்த போர்டில் இருந்த ’இல்லம்’என்ற வார்த்தையை நகற்றியதும் அது கதவு போல் திறந்து கொண்டது. உள்ளே இருந்த ஒரு ஸ்விட்சை போட்டதும் கேட் தானாக வலமிருந்து இடமாக நகர்ந்து அந்தப் பக்கம் இருந்த சுவற்றுக்குள் சென்று மறைந்தது.
“என்னங்கய்யா இது? பூட்டுப் போட்டு போட்டுனா… கதவு அந்தப் பூட்டோட சேர்ந்து தானாத் திறக்குது?”
“அமேஸிங்… இது வேற யாருக்கும் தெரியாமப் பார்த்துக்கோங்க அண்ணா. ஜாக்கிரதை” என்று கூறி வீட்டினுள் சென்றான்.
‘கௌதம் பயங்கரமான ஆளு தான். உண்மையில நான் கூட கவிதாவுக்காக இவ்வளவு செயவேனான்னுத் தெரியல’அவன் உடை மாற்றி வர அதற்குள் ரோஷனை தூங்க வைத்திருந்தாள் கவிதா.
“இன்னைக்கு அங்க தூங்கலன்றதால ஏதோ இப்போவே தூங்கிட்டான். இப்பயும் நடுவுல முழிக்காம இருக்கணும்” கார்த்திக் ரோஷனின் மறுபுறம் சென்று படுத்தான்.
“கவி… உனக்குக் கோபம் இல்லையே…” தலையசைத்து இல்லை என்றாள். மகன் மீதிருந்த அவள் கையை எடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டவன் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் விடியலிலேயே எழுந்து கிளம்பினான் கார்த்திக். ரோஷனும் அந்த நேரத்தில் விழித்துக் கொள்ளப் புறப்பட்டுச் செல்லும் வரை அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சியபடியே இருந்தான்.
காலை எழுந்தது முதல் ராஜேஷ் மீனாவை முத்தமழையில் நனைத்துக் கொண்டிருந்தான்.
“இன்னைக்கு உங்களுக்கு என்ன தான் ஆச்சு ராஜேஷ்?”
“நேத்து என் செல்ல மீனு டல்லா இருந்தாளா… அதான்…” என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“நேத்து டல்லா இருந்ததுக்கு இன்னைக்கு முத்தமா?”
“எனக்குக் குடுக்கணும்னுத் தோணுறப்போ நான் குடுப்பேன்…” என்று கூறி அவள் மறு கன்னத்தில் முத்தமிட்டான்.
அவன் நெற்றியில் முத்தமிட்டவள் “சரி சரி… சீக்கிரம் கிளம்புங்க…” என்றாள். அவனை ஆபீஸ் அனுப்பிவிட்டு கவிதாவிற்கு கால் செய்து சிறிது நேரம் பேசியவள் டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
இன்னைக்கு நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செஞ்சேன் தெரியுமா?
நானும் கௌதமும் அவனுடைய பிரண்ட் கல்யாணத்துக்குப் போனோம். ஆன்ட்டியும் அங்கிளும் வேற ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தாங்க.
திரும்பி வந்து கேட் திறக்க என் ஹான்ட் பேக்ல சாவியத் தேடுனா அத காணும். நான் டென்ஷன் ஆனதப் பார்த்துட்டு “விடு ரேணு… அம்மாகிட்ட இன்னொரு சாவி இருக்குல்ல… அவங்க வர வரைக்கும் கார்ல வெயிட் பண்ணுவோம்…”னு சொன்னான்.
இருந்தாலும் என்னால தேவயில்லாம வெளில அர மணி நேரம் காக்க வேண்டியதாப் போச்சேன்னு எனக்குக் கஷ்டமா இருந்துது.
வீட்டுக்குள்ள வரும்போது “ஏன் ரேணு… என்னைக்காவது நீ வெளிலப் போயிட்டு வரப்போ இப்படிச் சாவித் தொலைஞ்சா நீ கேட் உள்ள கூட வர முடியாதுல்ல… தெருவுல நிக்கணும்…”னு சொல்லி ஏதோ யோசிச்சுக்கிட்டே மாடிக்குப் போயிட்டான்.
-ரேணு கௌதம்
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss