Poi poottu 4

Poi poottu 4

7
கதவு தட்டப்படவும் டைரியை அவசரமாக மூடி வைத்து எழுந்து சென்று கதவை திறந்தான் ராஜேஷ்.
“டைரி படிச்சீங்களா?”
“இல்ல மீனு… நா…”
“பொய் சொல்லாதீங்க ராஜேஷ். உங்கள படிக்கக் கூடாதுன்னு நான் சொல்லலையே… எனக்கும் படிச்சு சொல்லலாம்ல?”
“எனக்கு இப்படி வாய் விட்டுப் படிக்குறது பிடிக்கவே இல்ல மீனா. அதுல ஒரு பீலே இல்ல…”
“சரி… நானே படிச்சுக்குறேன். குட் நைட்”
வேகமாகச் சென்று மெத்தையில் படுத்தவளின் அருகில் படுத்து “கோவமாடா” என்று கேட்டான்.
“ம்ம்ஹும்… நீங்களும் கவிதாவும் சொல்லுற மாதிரி நான் எழுத்துக் கூட்டிப் படிக்கறதுக்குள்ள…”
“புரிஞ்சா சரி…” என்றவனின் நெஞ்சில் அடித்து அவன் மீது கை போட்டு “தூங்குங்க” என்று கூறி கண்களை மூடிக் கொண்டாள்.
“ம்ம்ஹும்… தூக்கம் வரலையே”
“ராஜேஷ்… பேசாம தூ…” அதற்கு மேல் பேச விடாமல் அவளைச் சீண்ட ஆரம்பித்தான்.
கவிதா படுக்கையறை பால்கனியில் நடந்து கொண்டிருந்தாள். மணி பதினொன்றை தாண்டி இருந்தது. தூக்கம் வரவில்லை.
‘பக்கத்துலயே இருந்தா நல்லா பேசுறாங்க. ஆனா பிஸினஸ்னு வந்துட்டா என்ன மறந்தே போயிடுறாங்க. இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம் எப்படி என்கிட்டயே இருந்தாங்க… இப்போ ஒரு போன் கூடப் பண்ணுறதில்ல’
சரியாக அந்த நேரம் அவள் கையிலிருந்த கைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவளுக்கு ஆச்சரியம்.
“சொல்லுங்க கார்த்திக்”
“மேடம் ரொம்பச் சந்தோஷமா இருக்கீங்க போல… பேரெல்லாம் சொல்லுறீங்க?”
“போங்க கார்த்திக். நீங்க தான் என்ன கண்டுக்குறதே இல்ல”
“சாப்பிட்டியா கவி?”
“ம்ம்… நீங்க?”
“ம்ம்”
“என்ன அதிசயமா இந்த நேரத்துல கூப்பிடுறீங்க?”
“நீ தூங்கியிருக்க மாட்டன்னு தோணுச்சு. வீடு பிடிச்சிருக்கா? ரோஷன் தூங்கிட்டானா? பத்தரமா இரு கவி…”
“வீடு ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்கள ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. ரோஷன் தூங்கிட்டான். நான் பத்தரமா தான் கார்த்திக் இருக்கேன். நீங்க நிம்மதியா ஒழுங்கா தூங்குங்க”
“ம்ம். குட் நைட்”
“குட் நைட்”
“கவி…”
“சொல்லுங்க…”
“ஐ லவ் யூ கவி”
இவ்வளவு நேரம் இருந்த பாரம் குறைந்து மனம் லேசானது. அதற்கு மேல் அங்கு நடக்க அவசியமில்லாமல் வந்து படுத்து உடனே உறங்கியும் போனாள்.
திடீரென்று கண் விழித்தவள் இன்றும் தன் வலது புறம் ஜில்லிடுவதை உணர்ந்தாள்.’ரெண்டு நாளா ஏஸிய குறைக்க மறந்துட்டோம்னு இன்னைக்கு அத போடவே இல்லையே…’
ஏஸி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.’பின்ன எப்படி?’சுற்றிப் பார்த்தவள் பால்கனி கதவு திறந்திருப்பதைக் கண்டாள்.
‘போன் பேசிட்டு கதவச் சாத்தாமையா படுத்தோம்?’என்று யோசித்தவளுக்குச் சரியாக நினைவு வரவில்லை.’இனி இதையும் ஒழுங்கா பார்க்கணும்’மெத்தையிலிருந்து எழுந்து கதவை தாழிட்டு ரோஷனிடம் வந்தாள்.
தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவனின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டுக் கைபேசியில் மணி பார்த்தாள். மணி நாலு. உறக்கம் வரவே மீண்டும் படுத்துவிட்டாள்.
காலை ராஜேஷ் கிளம்பிச் சென்றதும் முதல் வேலையாக டைரியை எடுத்தாள் மீனா.
இன்னைக்கு ரெண்டாவது நாள் காலேஜ் போனேன். கேட் கிட்ட வந்ததுமே அவன தான் என் கண்ணு தேடுச்சு. அதுக்கப்பறம் ப்ரேக், லஞ்ச்சுன்னு காண்டீன் சுத்தி சுத்தி வந்தேன். ம்ம்ஹும். அவன பார்க்க முடியல. எதுக்குடா இன்னைக்குக் காலேஜ் போனோம்னு இருக்கு.
-ரேணு
இன்னைக்கு மூணாவது நாள் காலேஜ். இன்னைக்கும் என்னால அவன பார்க்க முடியல. ஜென்னியோட மொக்கைய கேட்டு, கிளாஸ் கவனிச்சு, பிரண்ட்ஸோட அரட்டை அடிச்சது தான் மிச்சம்.
– ரேணு
இன்னையோட அவன பார்த்து 4 நாள் ஆகுது. இன்னைக்கு வெள்ளிக் கிழமை. இனி திங்கக்கிழமை தான் காலேஜ். எனக்குப் பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு. யாருக்கிட்டயும் பேசாம அமைதியா இருக்கேன்.
காலேஜுல ஜென்னி என்னை எப்படியாவது பேச வைக்க முயற்சி பண்ணா. முயற்சி பண்ணுறேன்னு என்னைக் கடுப்பேத்திட்டு இருந்தா. எனக்கு வந்த கோபத்துக்கு…
கௌதம் எங்க இருக்க?
– ரேணு
இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. ரெண்டு நாள் வீட்டுல வெட்டியா இருந்ததுல மூளைய கசக்கி யோசிச்சு ஒரு ஐடியா கண்டுப்பிடிச்சுட்டேன்.
ப்ளாப் ஆனாலும் ஆகலாம்…
எதுக்கு நெகடிவ்வா யோசிக்கணும்? நாளைக்கு மண்டே. எப்படியும் கௌதம பார்ப்பேன்.
மணி பதினொன்னு ஆகுது. ஆனா நான் இன்னும் தூங்காம உன்ன நெனச்சுக்கிட்டு இருக்கேன். நீ என்னைப் பார்க்கவாவது செஞ்சிருக்கியா கௌதம்? ஹ்ம்ம்…
– ரேணு
பயந்தது மாதிரியே பிளான் சொதப்பிடுச்சு. நானும் என் கிளாஸ் பிரண்ட்ஸ பிடிச்சு… அவங்களோட பிரண்ட்ஸ தெரிஞ்சுக்கிட்டு… அவங்களோட பிரண்ட்ஸுக்கு பிரண்டாகி… கிளாஸ் கிளாஸா அலஞ்சு…
மொத்த பர்ஸ்ட் இயர் பொண்ணுங்களும் இப்போ எனக்குப் பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க. ஒரே நாள்ல… ஆனா கௌதம் எந்தப் பர்ஸ்ட் இயர் கிளாஸ்லயும் இல்ல.
– ரேணு
‘அடிப்பாவி ரேணு… இதெல்லாம் பண்ணியா நீ? ஒரே நாள்ல மொத்த பர்ஸ்ட் இயர் பொண்ணுங்களையும் பிரண்ட் புடிச்சு… ஸ்கூல் பர்ஸ்ட் வந்த பொண்ணு பண்ணுற வேலையா இதெல்லாம்?
அது சரி… காதல் யார வேணா கிறுக்காக்கும் போலருக்கு. நம்மளும் அப்பப்போ இப்படி ஏதாவது செஞ்சிருக்கோம் தான்’
கவிதா ரோஷனுடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். “ம்ம்… ஊ…” என்று சப்தம் எழுப்பிப் பெரிய ரோஜா செடியை கை காட்டினான்.
“செல்லத்துக்கு அந்தச் செடி தான் பிடிச்சிருக்கா? இங்க பாருங்கடா தங்கம்… இன்னும் நிறையக் கலர் கலரா ரோஸ் இருக்கே…” என்று வேறுபுறம் சென்று அங்கிருந்த ரோஜா செடிகளைக் காட்டினாள்.
ரோஷன் அவற்றைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவளும் வேறு வழியில்லாமல் அந்தப் பெரிய சிவப்பு ரோஜா செடியின் முன் போய் நின்றாள்.
அமைதியாக அதிலிருந்த பூக்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு ரோஜா பூவை முள் இல்லாமல் சிறிய காம்புடன் பறித்து அவன் முன் நீட்டினாள்.
அதை முதலில் தன் பிஞ்சுக் கரங்களால் வருடியவன் கையில் வாங்கிப் பார்த்து “ஊ… ஊ…” என்று ஏதோ கூறினான்.
“பிடிச்சிருக்கா செல்லத்துக்கு? சரி வாங்க உள்ள போகலாம்”
வீட்டினுள் வந்தாள். ரோஷன் ஹாலில் விளையாடினான். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து கார்ட்டூன் பார்த்தான். மதியம் அவனுக்கு உணவூட்ட வந்தபோது அவன் கையில் இன்னும் அந்த ரோஜா மலர் இருப்பதைக் கண்டாள்.
“இன்னுமா இத கையில வெச்சிருக்க?”
அதை அவன் கையிலிருந்து வாங்க முயன்றாள். உடனே வீரிட்டு அழ ஆரம்பித்தான்.
“விடுங்க கா. அவன் அத வாய்ல வெக்கல. நான் பார்த்துட்டு தான் இருக்கேன். வெச்சுக்கிட்டுப் போறான்” அவன் அழுவது பொறுக்காமல் கவிதாவை தடுத்தாள் செண்பகம்.
மீனாவிற்கு இன்று மதியம் உறக்கம் வரவில்லை.’இந்த டைரிய படிச்சு முடிக்குறதுக்குள்ள நான் நல்லா தமிழ் படிக்கக் கத்துக்குவேன் போலருக்கு… நல்லது தான்’
என்னடா ஒரு வாரமா ஜென்னி எதுவும் கேக்கலயேன்னு நெனச்சேன். இன்னைக்கு ப்ரேக்ல அவக்கிட்ட சிக்கிட்டேன்.
காண்டீன்ல மதியானம் சாப்பிட உட்கார்ந்திருந்தோம். எங்கள தாண்டி போன எல்லாப் பொண்ணுங்களும்’ஹாய் ரேணு’னு சொல்லிட்டுப் போனாங்க.
“எப்படி ரேணு ஒரே நாள்ல இத்தன பேர தெரிஞ்சுக்கிட்ட”னு கேட்டா. நான் அமைதியா இருந்தேன்.
“நானும் உன்ன ஒரு வாரமா பார்த்துட்டு தான் இருக்கேன். உன்னோட மிஷன் கௌதம் எந்த அளவுல இருக்கு”னு கேட்டா.
இவளால மட்டும் எப்படி எல்லாத்தையும் கண்டுப்பிடிக்க முடியுது? இதுக்கு மேல எதையும் மறைக்க வேண்டாம்னு தோணுச்சு. அவன் பர்ஸ்ட் இயர்ல இல்லைன்னு சொன்னேன். எதுக்காக அவன தேடுறன்னு கேட்டா.
தெரியல. அவன பார்க்கணும். ஒரே ஒரு தடவ பார்க்கணும்.
எதுவும் சொல்லாம அமைதியா இருந்தேன். திடீர்னு “அவன் இப்போ உன் கண்ணு முன்னாடி வந்தா என்ன பண்ணுவ ரேணு?”னு கேட்டா. அவ எனக்குப் பின்னாடி பார்த்துட்டு இருந்தா. திரும்பிப் பார்த்தப்போ கௌதம் ஒரு ஸ்டாப் கூடப் பேசிட்டே வந்தான்.
ஒரு நிமிஷம் மூச்சே நின்னுடுச்சு எனக்கு. கையில இருந்த ஸ்பூன இறுக்கிப் பிடிச்சு அவன் எங்கள தாண்டி போற வரைக்கும் அவனையே பார்த்துட்டு இருந்தேன்.
யார் இவன்? அவனோட பேரு கௌதம் தானான்னு கூட எனக்குச் சரியா தெரியாது. பேசுனது கிடையாது. ஆனா என்னை ஏன் இப்படி ஆட்டி வைக்குறான்?
அவன் தாண்டி போனதும் ஜென்னி கேட்ட முதல் கேள்வி…”அவன லவ் பண்ணுறியா ரேணு?”
வேகமா இல்லன்னு தலை ஆட்டிட்டு இனி அவன பத்தி நினைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி சாப்பிட ஆரம்பிச்சேன். எல்லாம் கண்டீன் விட்டு வெளிய வர வரைக்கும் தான்.
தல குனிஞ்சு யோசிச்சுட்டே வந்த நான் அவன் மேல மோதிட்டேன். அவனும் திரும்பி அவன் பிரண்ட் கிட்ட பேசிட்டே வந்ததால என்னைக் கவனிக்கல.
“சாரி”னு சொல்லிட்டு வேகமா போயிட்டான்.
என்னால தான் அந்த இடத்த விட்டு நகர முடியல. என்னாச்சுன்னு ஜென்னி கேட்டப்போ எனக்கு அழுக தான் வந்துது.
காண்டீன் பக்கத்துல இருக்க பென்ச்ல உக்காந்து ஜென்னி மடில படுத்து அழுதேன். எதுக்குன்னே தெரியாம… யாருன்னே தெரியாத ஒருத்தனுக்காக… அதுக்கப்பறம் ஜென்னி எதுவும் கேக்கல.
-ரேணு
8
எனக்கு இன்னைக்கு ஜூரம். காலேஜ் போகல. ஒருவேளை நேத்து அழுததுனால இருக்கலாம். வீட்டுல இருக்க வெறுப்பா இருக்கு. அம்மா காலையில லீவ் போட சொன்னப்போ அவன பார்க்காம இருந்தா நான் தெளிவா யோசிப்பேன்னு நெனச்சு தான் ஒத்துக்கிட்டேன்.
ஆனா இப்போ காலேஜ் போயிருந்தா அவன ஒரு முறையாவது பார்த்திருக்கலாமேன்னு ஏக்கமா இருக்கு. தல வலி அதிகமானது தான் மிச்சம். மதியானம் அம்மாவும் தூங்கிட்டாங்க. எனக்குத் தான் என்ன பண்ணுறதுன்னு தெரியல.
மணி ஆறு. டைரி எழுதிட்டே அப்படியே படுத்துத் தூங்கிட்டேன் போல… அம்மா வந்து எழுப்பினாங்க. ஜென்னி கால் பண்ணியிருந்தா. நாளைக்கு காலேஜ்ல ஒரு முக்கியமான விஷயம் சொல்லுறேன்னு சொன்னா. ஏன் அத இப்போ சொன்னா என்னவாம்? ஜென்னி எப்பயும் இப்படித் தான்.
-ரேணு
“என்னம்மா இன்னைக்கு ரொம்ப நேரமா படிக்குறீங்க?” என்று கேட்டபடியே ஹாலிற்கு வந்தார் காமாட்சி.
“ஆமா. படிச்சு படிச்சு டயர்ட் ஆகிட்டேன்” டைரியை மூடி வைத்து கவிதாவை தொடர்பு கொண்டு தான் படித்தவரை அவளிடம் கூறினாள்.
மொபைலை அணைத்த கவிதாவிற்கு வீட்டிற்குள் இருக்கப் பிடிக்கவில்லை. அதிகம் பேசி பழக்கமில்லாதவள். இருப்பினும் இப்போது கணவன் அருகில் இருந்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்று தோன்றியது. மொட்டை மாடிக்கு சென்றாள்.
வெயில் அதிகம் இல்லாமல் சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. “ம்மா… ஊ… பா…” என்று எல்லாத் திசையையும் கை காட்டி எதேதோ கூறினான் ரோஷன். “அட… ஆமாடா தங்கம்…” என்று அவனுக்கேற்ப பதில் கூறியவள் சிறிது நேரத்திற்குப் பின் இருட்டத் துவங்கவே கீழே இறங்கி வந்தாள்.
ஒரு கையில் தேநீர் கோப்பை மறுகையில் டைரியுடன் தோட்டத்திற்கு வந்தாள் மீனா. எப்படியும் இரவு ராஜேஷ் வர தாமதமாகும் என்பதால் விளக்கைப் போட்டு ஊஞ்சலில் அமர்ந்தாள்.
இன்னைக்குக் காலையில ஜென்னி எங்க வீட்டுக்கு என்னை பிக்கப் பண்ண வந்ததும் நான் அவக்கிட்ட கேட்ட முதல் கேள்வி – “என்ன விஷயம்?”
சொல்லுறது என்ன… காட்டவே செய்யுறேன்னு சொல்லி வண்டிய எடுத்துட்டா. இவ இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது என்கிட்ட நல்லா வாங்கப் போறான்னு நெனச்சுட்டே நானும் அமைதியா அவப் பின்னாடி வண்டில உட்கார்ந்திருந்தேன்.
காலேஜ் வந்ததும் வண்டிய நிறுத்திட்டு எங்க கிளாஸுக்கு போகாம வேற பக்கம் போனா. எங்க போறோம்னு கேட்டதுக்கு “நான் சொல்லுற கிளாஸ திரும்பிப் பாரு”னு சொல்லிட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சா.
எங்கெங்கயோ சுத்தி ஏதோ ஒரு ப்ளாக்குல மூணாவது மாடி ஏறி அவ நடந்தப்போ எனக்குப் பொறுமை பறந்திருந்துது. இவ இப்போ எதுக்கு நமக்குக் காலேஜ சுத்திக் காமிச்சுட்டு இருக்கான்னு எரிச்சலா வந்துது.
திடீருன்னு கொஞ்சம் மெதுவா நடக்க ஆரம்பிச்சவ “இந்த கிளாஸ்குள்ள பாரு ரேணு”னு சொன்னா.
கௌதம்… இன்னும் கொஞ்சம் பசங்களோட சேர்ந்து அரட்ட அடிச்சுட்டு இருந்தான். நான் அவன பார்த்த நொடி சரியா அவனும் என்னைப் பார்த்தான். எனக்குப் பதட்டமா இருந்துது. உடனே திரும்பி முன்னாடி போய் ஜென்னி கைய இறுக்கிப் பிடிச்சு வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.
படில இறங்குறதுக்கு முன்னாடி ஒரு தடவ திரும்பி அவன் கிளாஸ் இருந்த திசையப் பார்த்தேன். கௌதம் அவன் கிளாஸ் வாசல்ல நின்னு எங்களைத் தான் பார்த்துட்டு இருந்தான்.
ஜென்னிய இழுத்துட்டு மூணு மாடியோட படியையும் ஒரு நிமிஷத்துக்குள்ள இறங்கி வந்தேன்.
நான் இழுத்த வேகத்துக்கு அவ படில உருளாம இருந்ததே பெரிய விஷயம். அவளும் கௌதம பார்த்ததால கொஞ்சம் வேகமா தான் வந்தா.
ஆனா அந்த ப்ளாக் விட்டு வெளில வந்ததுக்கு அப்பறமும் நான் ஓடாத குறையா அவள இழுத்துட்டு நடந்ததால கத்த ஆரம்பிச்சுட்டா. “கைய விடு ரேணு… விடுடி…”னு எவ்வளவோ கெஞ்சியும் நான் விடல.
கிளாஸ்ல வந்து உட்கார்ந்து ஒரு பாட்டில் தண்ணிய ஒரே மடக்குல குடிச்சு முடிச்சுட்டு என்னைப் பார்த்து “எதுக்குடி இப்படித் தல தெறிக்க ஓடி வந்த? நீ ஓடுற சரி… என்னையும் ஏன்டி இப்படித் தர தரன்னு இழுத்துட்டு ஓடி வந்த?”னு கேட்டா.
நான் எதுவும் பேசாம அவளையே பார்த்து முழிச்சுட்டு இருந்தேன். தண்ணிய குடுத்துக் குடிக்கச் சொன்னா.
அவள நேத்து ஒரு ஸ்டாப் அந்த ப்ளாக்குல இருக்க ஒரு லேப்கு போய் ஏதோ நோட் வாங்கிட்டு வர சொன்னாங்களாம். அப்போ அவ கௌதம் கிளாஸ பார்த்தாளாம். அவன் செகண்ட் இயர் E. C. E. படிக்குறானாம். நான் தண்ணி குடிச்சு முடிக்கறதுக்குள்ள அவ இது எல்லாத்தையும் சொல்லி முடிச்சுட்டா.
இவ்வளவு நேரமும் அவ கௌதமுக்கு மரியாதை குடுத்து பேசுனது எனக்குப் பிடிச்சுது. ஆனா அவனுக்கு மரியாதை குடுக்கணும்னு எனக்குத் தோணல. அவன் என்ன படிச்சா எனக்கு என்ன? இனி அவனப் பத்தி பேசாதன்னு சொன்னேன்.
அப்பறம் எதுக்கு இத்தன நாள் தேடி அலஞ்சன்னு ஜென்னி கேட்டப்போ எனக்குப் பதில் சொல்ல தெரியல.
கொஞ்ச நேரம் என் முகத்த குருகுருன்னு பார்த்துட்டு “அதெல்லாம் சரி… கௌதம் அண்ணா சீனியர்னு சொல்லிட்டேன்… நான் அண்ணான்னு கூப்பிடுறேன்… நீ என்னமோ அவன் இவன் னு பேசுற?”னு கேட்டா.
கடவுளே… இவளை எல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா? அது எப்படித் தேவயில்லாத விஷயத்த எல்லாம் கரெக்டா யோசிக்குறாளோ? பிரண்ட்ஸ்னாலே இப்படித் தான் இருப்பாங்களோ?
இப்போ இவக்கிட்ட என்ன சொல்லி சமாளிக்கப் போறேன்னு யோசிச்சுட்டு இருந்த நேரம் ஸ்டாப் உள்ள வந்து கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.
நல்லவேளை தப்பிச்சேன்னு நெனச்சு நிம்மதி பெருமூச்சு விட்டேன். என் நிம்மதி இன்னும் ரெண்டு மணி நேரத்துல மொத்தமா கெடப் போறது தெரியாம.
“மீனு… மணி என்ன ஆகுது தெரியுமா? ஏன் இங்க உக்காந்திருக்க?” அவள் அருகில் ஊஞ்சலில் வந்தமர்ந்தான் ராஜேஷ்.
“வந்துட்டீங்களா? கார் வந்த சத்தம் கூடக் கேக்கல?”
“எப்படி மேடம் கேக்கும்? நீங்க தான் இந்த டைரில மூழ்கிப் போயிட்டீங்களே…”
“வந்ததும் ஆரம்பிக்காதீங்க ராஜேஷ். உள்ள வாங்க”
“நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன்” மீனாவின் கன்னத்தில் முத்தமிட்டு கைபேசியை எடுத்து எண்களை அழுத்தியபடியே நடந்தான் ராஜேஷ்.
“இப்போ தான வந்தீங்க… அதுக்குள்ள யாருக்கு போன் பண்ணுறீங்க?”
“கவிதாவுக்கு” என்று அவன் கூறிய நேரம் கவிதா காலை அட்டென்ட் செய்திருந்தாள்.
“சொல்லுங்கண்ணா… வீட்டுக்கு வந்துட்டீங்களா?”
“இப்போ தான்மா வந்தேன். ரோஷன் என்ன பண்ணுறான்?”
“தூங்கியாச்சுண்ணா”
“வேற ஏதும் பிரச்சனை இல்லையே?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைண்ணா. இன்னைக்கு புல்லா மீனா இங்க தான இருந்தா. எனக்குப் பொழுது போயிடுச்சு”
“சரி மா… வெக்குறேன்”
கைபேசியை அணைத்த கவிதா “செண்பா நீயும் தூங்கு. காலைல பாக்கலாம்” என்று கூறி மாடிக்குச் சென்றாள். தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ரோஷனை பார்த்துவிட்டு பால்கனி கதவை திறந்து வெளியே வந்து நின்றாள்.
அவள் வெளியே வரவும் கார்த்திக் அழைக்கவும் சரியாக இருந்தது.
“ஹலோ”
“என்ன கவி பண்ணுற?”
“கொஞ்ச நேரம் வெளில நிக்கலாமேன்னு பால்கனிக்கு வந்தேன்”
“என்ன கவி… ரொம்பச் சந்தோஷமா இருக்கப் போல?”
“ம்ம்… இன்னைக்கு புல்லா மீனா இங்க இருந்தா. பொழுதுப் போயிடுச்சு. அதோட…”
“அதோட?”
“பால்கனில நிக்குறப்போ எல்லாம் இந்த வீட்டுக்கு வந்தன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் இங்க நின்னு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தது தான் ஞாபகம் வருது”
“ம்ம்ஹும்… என்ன பேசினோம்னு ஞாபகம் இருக்கா?”
“…”
“கவி?”
“ரோஷன பத்தி பேசுனீங்க. நம்ம லைப் எப்படி இருக்கணும்னு சொன்னீங்க. உங்க கனவப் பத்தி சொன்னீங்க” என்றவள் இரண்டு நொடி அமைதிக்குப் பின்னர் “அப்பறம் என்ன எவ்ளோ லவ் பண்ணுறீங்கன்னு சொன்னீங்க” என்றாள்.
“உண்மையிலயே நான் ரொம்ப லக்கி கவி. பிசினஸ் விஷயமா உன்ன விட்டுட்டு எவ்ளோ அலையுறேன்… உனக்குக் கஷ்டமா தான் இருக்கும். ஆனாலும் என்ன அதிகம் தொந்தரவு பண்ணாம… வீட்ட பாத்துக்கிட்டு… ரோஷனையும் சமாளிச்சு… எனக்கு மறுபடியும் அந்த பால்கனில உன்கூட நிக்கணும். உன் கண்ண பார்த்து ஐ லவ் யூ னு சொல்லணும் “
“ம்ம்கும்… நீங்க எங்க வீட்டுல இருக்கீங்க? உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன் தெரியுமா?”
“நீ இப்படிச் சொல்லுறத நேர்ல கேக்கணும் போல இருக்குக் கவி”
“அப்போ சீக்கிரம் வீட்டுக்கு வாங்க”
“இத கேக்குறதுக்காகவே சீக்கிரம் வரேன். குட் நைட்”
உள்ளே வந்த கவிதா ரோஷனின் நெற்றியில் முத்தமிட்டு “குட் நைட்” என்று கூறி மெத்தையில் படுத்தாள்.
ராஜேஷின் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்த மீனா அன்று அவன் ஆபீஸில் செய்த வேலைகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் கவிதாவின் வீட்டில் ரோஷன் செய்த குறும்புகளைக் கூறினாள்.
“நாளைக்கும் போவியா மீனு?”
“ம்ம்… பாவம் கவி. தனியா இருக்கால்ல… அதனால காலைல போயிட்டுச் சாயந்தரம் தான் வருவேன்”
திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் கவிதா. இன்றும் தன் வலதுபுறம் சில்லிடுவதை உணர்ந்து அறையைச் சுற்றிப் பார்த்தாள். பால்கனி கதவு திறந்திருந்தது.
‘இது என்ன மடத்தனம்? ஏன் இப்படிக் கதவச் சாத்த மறக்குறோம்? அப்படி என்ன அலட்சியம் நமக்கு? ரோஷன் மேல அக்கறையே இல்லையா?’
எழுந்துச் சென்று கதவைத் தாழிட்டாள். ஏனோ உறக்கம் கலைந்திருந்தது. ரோஷனை தொட்டுப் பார்த்தாள். அவன் உடலும் லேசாகச் சில்லிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!