Poi Poottu 8

Poi Poottu 8

15
கவிதா அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவுடன் “என்னடி பண்ணுற?” என்றான் கார்த்திக். அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் நேரங்களில் அவளை இப்படிச் சீண்டுவதுண்டு. இன்று என்னவாயிற்று இவனுக்கு என்ற யோசனையுடன் நிமிர்ந்து மீனாவை பார்த்தாள்.
“அச்சச்சோ என்னடி கன்னமெல்லாம் ரெட் ஆயிடுச்சு?” என்று நக்கலாகக் கேட்டு அவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கி “போன் எடுத்ததும் என்னண்ணா சொன்னீங்க? உங்க பொண்டாட்டி மூஞ்சி இப்படிச் செவந்துடுச்சு?” என்று கேட்டாள்.
“காலையில நான் பண்ணதுக்குப் பழி வாங்குறியா? குடுடி…” தன் கையிலிருந்து மொபைலை பிடுங்க முயற்சித்த தோழியிடமிருந்து லாவகமாகத் தப்பித்து ஓடினாள்.
“ஹேய் நீ எங்க வீட்டுல தான் இருக்கியா?”
“சரியாப் போச்சு போங்க… உங்க பொண்டாட்டி எங்க இருக்கான்னுக் கூடத் தெரியாதா உங்களுக்கு? அவ தான் எங்க வீட்டுக்கு வந்திருக்கா…”
“அது எங்களுக்கும் தெரியும். இப்போ தான் உன் புருஷன்கிட்ட பேசுனேன்… புலம்பித் தள்ளுறான்… ஏன் மீனா என் பிரண்ட இந்த டார்ச்சர் பண்ணுற நீ?”
“யாரு? நான் டார்ச்சர் பண்ணுறேனா? அடேங்கப்பா… பிரண்ட்ஸ் ரெண்டுப் பேரும் சரியான ஊம குசும்பனுங்க தான… உங்க வண்டவாளம் எல்லாம் அவங்கவங்க பொண்டாட்டிக் கிட்ட கேட்டா தான் தெரியும். சரி நீங்க எப்போண்ணா வரப் போறீங்க? என் பிரெண்ட் பாவம். எவ்வளவு நாள் தனியா இருப்பா?”
“சீக்கிரம் வந்துடுவேன் மீனா. அவக்கிட்ட குடேன்…”
“ஏதோ ரொம்பக் கெஞ்சுறதாலக் குடுக்குறேன்” கவிதாவிடம் கைபேசியை நீட்டினாள் மீனா.
அதை வாங்கியவள் இதற்கு மேல் அங்கே நின்று பேசினால் மீனா கிண்டல் செய்வாள் என்று தெரிந்து வீட்டிற்கு வெளியில் செல்ல நினைத்தாள்.
“உன் அம்மா உன் அப்பா கூடப் போன்ல கடல போட ஓடுறாடா செல்லம்” ஹால் கதவருகில் சென்றிருந்தவள் திரும்பி வந்து மீனாவின் தலையில் அடித்து “குழந்தைக்கிட்ட பேசுற மாதிரியா பேசுற?” என்று கேட்டு விட்டு வெளியே சென்றாள்.
“என்னங்க ஆச்சு உங்களுக்கு? இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கீங்கப் போல?”
“ம்ம்… இன்னைக்கு புல் டே ப்ரீ தான் கவி. வேலை எதுவும் இல்ல. அதான் உன்கூடப் பேசலாம்னு நெனச்சேன். எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கக் கூடாதுன்னு ராஜேஷுக்கு போன் பண்ணி ஆபீஸ் வேலை பத்தியும் பேசி முடிச்சுடலாம்னு அவனுக்குக் கூப்பிட்டேன். அப்போ தான் தெரிஞ்சுது… நீ அவன் வீட்டுக்கு வந்திருக்குறது. இன்னைக்குன்னு பார்த்தாடி நீ அங்க போவ? ச்ச…”
“அதனால என்ன கார்த்திக்? நீங்க பேசுங்க… எவ்வளவு நேரம் வேணா நம்ம பேசுவோம்” நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுக்காய்த் தோன்றி தன்னிடம் பேசுவதற்காகவே அழைத்திருக்கிறான் என்றதும் அவளுக்குச் சந்தோஷம் தாளவில்லை.
“உன் பிரெண்ட் உன்னை ஓட்டியே கொன்னுடுவா… பரவாயில்லையா?”
“அவக் கிடக்குறா… நான் சமாளிச்சுக்குறேன்”
“ரெண்டு பேரும் ஏதோ டைரி படிக்குறேன்னு ராஜேஷ படுத்தி எடுக்குறீங்களாமே?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல கார்த்திக்” என்றவள் மீனா அவர்கள் வீட்டிற்கு வந்து அந்த டைரி எடுத்துச் சென்ற நாள் முதல் இந்த நிமிடம் வரை நடந்தவை அனைத்தையும் ஒப்பித்தாள்.
அவள் கூறி முடித்த நேரம் மீனா வந்து “என்னத்தடி ரெண்டு மணி நேரமா பேசுறீங்க? ரோஷன் தூங்கியே எழுந்துட்டான். உள்ள வா…” என்றழைத்தாள்.
“சரி கவி. ரொம்ப நேரமா பேசுறோம். இவ இதுக்கு மேல பேசவும் விட மாட்டா. நீ வீட்டுக்குப் போயிட்டு நைட் கால் பண்ணு. ஒரு தடவ ரோஷன்கிட்ட போன் குடு கவி. அவன் குரல் கேட்டே ரொம்ப நாள் ஆச்சு. ஆசையா இருக்கு…”
கவிதா எழுந்து மீனாவின் கையிலிருந்த மகனின் காதில் மொபைலை வைத்தவுடன் “குட்டி செல்லம்… என்னடா பண்ணுறீங்க?” என்றான் கார்த்திக்.
“பா பா” என்று குதிக்க ஆரம்பித்த ரோஷன் “பா… ஊ… மா…” என்று ஏதோ சீரியசாகப் பேசினான். “ம்ம்… ஓஹோ…” என்று ஏதோ ஒன்றைக் கூறிக் கேட்டுக் கொண்டான் கார்த்திக்.
சில நிமிடங்களுக்குப் பிறகு ரோஷனின் காதிலிருந்து போனை எடுத்த கவிதா “போதும் போதும். விட்டா அப்பாவும் பையனும் இன்னைக்கு புல்லா பேசுவீங்க” என்றாள்.
“உனக்குப் பொறாமைடி… நைட் கால் பண்ணு. பை”.
உள்ளே வந்ததும் கவிதாவின் கையில் டைரியை கொடுத்து வாசிக்கச் சொன்னாள் மீனா.
மணி ரெண்டாகுது. இப்போ தான் சாப்பிட்டு முடிச்சேன். நேத்து நான் சொதப்பினதே போதும். இன்னைக்கும் கால் பண்ணி உளற வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.
ஆனாலும் காலையிலேருந்து கையில மொபைல வெச்சுப் பார்த்துட்டே இருக்கேன். ஒருவேளை கௌதம் கால் பண்ணா…
மணி நாலாகுது. எனக்கு அவன்கிட்ட பேசணும் போல இருக்கு. கௌதம் கால் பண்ணு ப்ளீஸ்…
ஐயோ நான் மனசுக்குள்ள நினைக்குறது எல்லாத்தையும் இவன் எப்படி ஒட்டுக் கேட்குறான்? நான் நெனச்சு முடிச்ச செகண்ட் எனக்கு அவன்கிட்டேருந்து கால் வந்துது.
நான் எடுத்து ஹலோ சொன்னதும் “என்ன பண்ணுற ரேணு?” னு கேட்டான். “இப்போ தான் அசைன்மென்ட் எழுதி முடிச்சேன்” னு சொன்னேன்.
அதுக்கப்பறம் அரை மணி நேரம் என்ன அசைன்மென்ட், எனக்கு இருக்க சப்ஜெக்ட்ஸ், கிளாஸ் எப்படிப் போகுது… இப்படி காலேஜ் பத்தி, படிப்புப் பத்தி நிறையக் கேள்விக் கேட்டான்.
அவன் கேட்டக் கேள்வி எல்லாத்துக்கும் நானும் விளக்கமா பதில் சொன்னேன். நான் டுவல்துல ஸ்கூல் பர்ஸ்ட்டுன்னு சொன்னதும் எவ்வளவு சந்தோஷப்பட்டான் தெரியுமா? எனக்கு என்னமோ பெரிய அவார்ட் வாங்குன மாதிரி இருந்துது.
அப்பறம் கொஞ்ச நேரம் அமைதியா இருந்தான். எனக்கு ஏதாவது பேசணும்னுத் தோணுச்சு. “வீட்டுல இத்தன நாள் என்ன பண்ண கௌதம்? உங்க வீட்டுல யார் யாரெல்லாம் இருக்காங்க?” னு கேட்டேன்.
“வீட்டுல நான், அப்பா, அம்மா மட்டும் தான். எனக்கு ஒரு அக்கா. கல்யாணம் ஆகிடுச்சு. இப்போ தில்லில இருக்காங்க. வீட்டுல சுத்த போர் ரேணு… உன்னப் பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்” னு சொன்னான்.
ஏன்டா அந்தக் கேள்வியக் கேட்டோம்னு ஆயிடுச்சு.
“சரி நான் வெச்சுடவா?” னு கேட்டேன். அவன் சிரிக்க ஆரம்பிச்சுட்டான்.
எதுக்குச் சிரிக்குறான்னு கேட்டேன். “படிப்பு பத்தி பேசுனா அர மணி நேரம் பேசுற… நம்மளப் பத்தி பேச ஆரம்பிச்சா உடனே வெக்குறன்னு சொல்லுற? அவ்வளவு பயமா ரேணு?” னு கேட்டான்.
எனக்குக் கோபம் வந்துச்சு. “எதுக்குப் பயம்?”னு கேட்டேன்.
“இப்படியே பேசுனா எங்க இவன லவ் பண்ணுறத இவன்கிட்ட சொல்லிடுவோமோன்னு…”
இவன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு தோணுச்சு. “நான் உன்னை லவ் பண்ணல. பை கௌதம்” னு சொல்லிட்டுக் கட் பண்ணிட்டேன்.
இவன் கூடப் பேசுனது தப்போ? போன் வெச்ச அடுத்த நொடி மெசேஜ் பண்ணி இருந்தான். “யூ வில் அக்செப்ட் ஒன் டே ரேணு” அத படிச்சதும் எனக்கு அழறதா சிரிக்குறதான்னுத் தெரியல…
-ரேணு
இன்னைக்கு காலேஜூக்குள்ள போனதுலேருந்து நான் வேண்டுனதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்… நான் கௌதம் கண்ணுலப்படக் கூடாது. அதுக்கேத்த மாதிரி லஞ்ச் வரைக்கும் அவனை நான் பார்க்கல.
ஆனா அதுக்கப்பறம் ஒரே ஒரு தடவ அவனைப் பார்க்கணும்னு வேண்ட ஆரம்பிச்சுட்டேன். அவனப் பார்த்து ஒரு வாரம் ஆகுது. எப்படி இத்தன நாள் இருந்தேன்னு எனக்கே தெரியல.
லஞ்ச் முடிச்சு லாப் இருந்துது. எல்லாத்தையும் தப்புத் தப்பா செஞ்சு… கூட நின்ன பாட்ச்மேட்ஸ் கிட்ட நல்லா திட்டு வாங்கினேன். எனக்கே நான் ஏன் இப்படி இருக்கேன்னு தெரியல. லாப் முடிஞ்சதும் முதல் ஆளா வெளில வந்து வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.
கொஞ்ச தூரம் நடந்ததும் கௌதம் என் பின்னாடி வந்து “என் கூட வா” னு சொல்லிட்டு என்னைத் தாண்டி ஒரு லாப் உள்ள போனான். நானும் அமைதியா அவன் பின்னாடிப் போனேன். எனக்கு அவனப் பார்த்த சந்தோஷம்.
உள்ள வந்ததும் தான் தெரிஞ்சுது அங்க யாருமே இல்லன்னு. வெளில நிறைய ஸ்டூடண்ட்ஸ் நடந்து போயிட்டு இருந்தாங்க. அதனால எனக்கு அவன்கூடத் தனியா இருக்கப் பயமா இல்ல.
“ரேணு உனக்கு என்னை எப்போ பார்க்கணும்னு தோணினாலும் என் நம்பருக்கு ஒரு மேசேஜோ மிஸ்ட் காலோ குடு. நான் வந்து உன்னைப் பார்க்குறேன். இன்னைக்குக் காலையிலிருந்து எனக்கு லாப். ரெக்கார்ட் முடிக்கணும்னு உட்கார்ந்து எழுதிட்டு இருந்தேன். அதான் லஞ்சுக்கு கண்டீன் வரல.
இப்படி டென்ஷன் ஆகி லாப்ல தப்பு பண்ணுற அளவுக்கு அது உன்ன பாதிக்கும்னு நான் நினைக்கல. சாரி ரேணு. இனி இப்படிச் செய்யாத. பை” னு சொல்லிட்டு கதவுக்கிட்ட போனவன் திரும்பிப் பார்த்து “ஐ லவ் யூ ரேணு” னு சொல்லிட்டுப் போயிட்டான்.
ஐயோ… இவன் பாட்டுக்கு இப்படிச் சொல்லிட்டு போறானே… வெளில இருக்க யாரு காதுலயாவது விழுந்தா என்ன ஆகும்னு யோசிச்சு எனக்குப் படப்படப்பா இருந்துது. அது எதப் பத்தியும் கவலைப்படாம கௌதம் வேகமா நடந்து போயிட்டான். நல்லவேளை யாரும் அவன் சொன்னதக் கவனிக்கல.
இது எல்லாம் ஜென்னி வேலைன்னு புரிஞ்சுது. எப்படியோ கௌதம் பார்த்ததுக்கு அப்பறம் தான் எனக்கு நிம்மதியா இருந்துது.
இனி அவனப் பார்க்கணும்னா அவனுக்கு மெசேஜ் பண்ணலாமான்னு யோசிச்சேன்… வேணாம் பா… அப்பறம் இவன் கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாம நான் தான் முழிக்கணும்.
சாயந்தரம் வண்டி எடுக்கப் போனப்போ கௌதம் என்கிட்ட வந்து “சாரி. இன்னைக்கு உன்னக் கஷ்டப்படுத்துனதுக்கு” னு சொல்லி ஒரு பெரிய சாக்லேட்ட என் கையில குடுத்துட்டு அமைதியாப் போயிட்டான்.
முதல் வேலையா அத என் கையிலேருந்துப் பிடுங்கி எனக்குப் பாதிக் குடுத்துட்டு அப்பவே அதைச் சாப்பிட்டு முடிச்சு தான் ஜென்னி வண்டி எடுத்தா.
எத்தனையோ தடவ இந்த சாக்லேட் நான் சாப்பிட்டுருக்கேன். ஆனா இன்னைக்குப் பாதிச் சாப்பிட்டதே எனக்குத் தெகட்டுச்சு… இன்னுமும் அந்த இனிப்பு என் நாக்குக்கு அடில ஏதோ ஒரு மூலைல இருந்துட்டு தான் இருக்கு.
-ரேணு
இன்னைக்கு வெள்ளிக்கிழமை. ஒரு வாரமா நான் டைரி எழுதவே இல்லை. கௌதம் ஏன் இவ்வளவு அமைதியா இருக்கான்னு யோசிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு.
லஞ்ச்ல காண்டீன் வருவான். அமைதியா என் பக்கத்துல உட்கார்ந்து குனிஞ்ச தலை நிமிராம சாப்பிடுவான். அப்பறம் என்னை ஒரு தடவ திரும்பிப் பார்த்துட்டு எந்திரிச்சுப் போயிடுவான்.
அவனோட செயலுக்கான அர்த்தம் எனக்குப் புரியல… அவன் பார்வைக்கான அர்த்தம் எனக்குப் புரியல… அவன் பேசாதது மட்டும் என்னைப் பாதிக்குதுன்னு புரியுது.
ஒவ்வொரு தடவ அவன் என்னைப் பார்க்கும்போதும் “ஐ லவ் யூ” சொல்லப் போறான்னு நெனப்பேன்… அவன் அத சொல்லுறது எனக்கு எவ்வளவு பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
இப்போ ஏன் சொல்லலன்னுக் கேக்கவும் முடியல… சொல்லாதது ரொம்பச் சந்தோஷம்னு சொல்லவும் முடியல… என்னைப் படுத்துறானே…
-ரேணு
“அக்கா இருட்ட ஆரம்பிச்சுடுச்சு… நம்மக் கிளம்புவோமா?” என்று செண்பகம் கேட்டப் பின்பு தான் மணியைப் பார்த்தாள் கவிதா.
“மணி ஆறரை ஆகுது மீனா. நாங்கக் கிளம்புறோம்டி”
“இப்போ கிளம்பிப் போயி… ஒரு வழியா நைட் சாப்பிட்டுப் போ கவி”
சில நொடி யோசனைக்குப் பிறகு “அதுவும் கரெக்ட் தான். சரி வா. சீக்கிரம் செய்வோம்” என்று கூறி கட்டிலை விட்டு இறங்கினாள்.
“நீ பறக்குறதப் பார்த்தா ஏதோ விஷயம் இருக்கும் போலயே… இப்போ எதுக்கு வீட்டுக்குச் சீக்கிரம் போகணும்னு குதிக்குற?” சந்தேகமாக அவளைப் பார்த்தாள் மீனா.
“காலையிலிருந்து கிச்சன் பக்கமே போகல… பாவம் செண்பாவும் காமாட்சி அம்மாவும்… எல்லா வேலையும் அவங்களே செய்யுறாங்க. வா ஹெல்ப் பண்ணுவோம்” என்ற கவிதா’ரேணு எழுதியிருக்க மாதிரி பிரண்ட்ஸ வெச்சுக்கிட்டு ஒரு வேலைப் பார்க்க முடியலபா… சொந்த புருஷன்கிட்ட பேசுறதுக்கு இவ்வளவு சமாளிக்க வேண்டி இருக்கு’என்று மனதிற்குள் புலம்பினாள்.
“ஹ்ம்ம்… சரி வா” என்று அப்போதும் நம்பாமல் கவிதாவை ஒரு பார்வைப் பார்த்து விட்டு ரோஷனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள் மீனா.
பின் ஏதோ தோன்றியவளாக “செண்பா ரோஷன பிடி” என்று அவனை அவள் கையில் கொடுத்துவிட்டு “காமாட்சி அம்மா நீங்களும் போய் அவங்க கூடக் கொஞ்ச நேரம் இருங்க. நானும் கவியும் பார்த்துக்குறோம்” என்றாள் மீனா.
மறுத்துப் பேசிய காமாட்சி அம்மாளை சரி கட்டி வெளியே அனுப்பி வைத்தாள் கவிதா.
“நீ சொன்னதுக்கு அப்பறம் தான் கவி எனக்கும் தோணுச்சு. இன்னைக்கு அவங்களே எல்லா வேலையும் செஞ்சுட்டாங்கல்ல… கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்”
அவர்கள் சமைத்து முடித்த நேரம் ராஜேஷ் உள்ளே வந்தான். “இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா? என்னைக்காவது இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கீங்களா? இன்னைக்கு ரோஷன் இன்னும் கிளம்பலன்னு சொன்னதும் அடுத்த அரை மணி நேரத்துல வந்து நிக்குறீங்க?”
மீனா கத்தியதெதையும் காதில் வாங்காமல் ரோஷனைத் தூக்கிக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்று விட்டான்.
“வாயத் திறக்குறாங்களா பாரு…”
தன்னை அழைக்க மாடிக்கு வந்தவளை அறைக்குள் பிடித்து இழுத்து கதவை தாழிட்டான் ராஜேஷ்.
“ராஜேஷ் என்ன பண்ணுறீங்க? கவி பார்த்தா அவ்வளவு தான்…” அவள் கூறுவது எதையும் கேட்காமல் அவளை இறுக்கி அணைத்தான்.
“ரோஷன் இருக்கான் ராஜேஷ்… விடுங்க…”
“அவன் இருந்தா என்ன? அவனுக்கு எதுவும் புரியாது. அப்படியே புரிஞ்சாலும் நாளைக்கு நம்ம பொண்டாட்டிக் கோவப்பட்டா எப்படிச் சமாதானம் செய்யணும்னு தெரிஞ்சுப்பான்” என்று கூறி அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்.
“ம்ம்கும்ம்… கீழ வாங்க”
“இன்னும் கோவம் போகலையா?”
அவனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்ட மீனா “போயிடுச்சு. வாங்க” என்றாள்.
கிளம்பும்வரை ரோஷனை கீழே விடாமல் தூக்கி வைத்திருந்தான் ராஜேஷ். கவிதா கிளம்புவதாகக் கூற “டைம் ஆகிடுச்சு கவிதா. இரு நான் வந்து உங்கள டிராப் பண்ணிடுறேன்” என்றான்.
“அப்பறம் நீங்க எப்படி அண்ணா திரும்பி வருவீங்க? நான் ஓட்டிடுவேன்”
“நான் எங்க கார் எடுத்துட்டு வரேன் கவி. உங்கள வீட்டுல விட்டுட்டு நாங்க திரும்பி வந்துடுறோம். உன்ன விட நான் நல்லா கார் ஓட்டுவேன். சோ பயம் இல்ல…” என்றாள் மீனா.
வேண்டாமென்ற கவிதாவை பேச விடாமல் கிளம்பினான் ராஜேஷ். அவள் வீட்டில் அவர்களை இறக்கி விட்டவன் மனைவியுடன் உள்ளே சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினான்.
வேகமாகச் சென்று உடை மாற்றி வந்த கவிதா கார்த்திக்கிற்கு அழைத்தாள்.
“எவ்வளவு நேரம்டி? விட்டா உன் அண்ணன் வீட்டுலயே இருந்துடுவ போல?”
“உங்க பிரண்ட் வீடு தான?”
“உன் பிரண்ட் வீடுன்னு சொல்லு…” என்ற கார்த்திக் தான் தில்லி வந்தது முதல் நடந்தவற்றை அவளிடம் கூறினான். அவள் அன்று மீனாவின் வீட்டில் நடந்தவற்றைப் பற்றிக் கூறினாள்.
“உனக்கு அந்த டைரி இருக்குறது நல்லா பொழுதுப் போகுதுன்னு சொல்லு”
“ம்ம்… இருந்தாலும் நீங்க பக்கத்துல இல்லாதது ரொம்பக் கஷ்டமா இருக்கு கார்த்திக்”
“ரோஷன் என்ன கவி பண்ணுறான்?”
“தூங்கிட்டாங்க…”
“எனக்கு அவனைப் பார்க்கணும் போல இருக்கு கவி… எவ்வளவு நாள் ஆச்சு?”
“ஆமாமா… அப்போ உடனே கிளம்பி வாங்க…”
“வரேன் வரேன். ரொம்ப நேரம் ஆச்சு கவி. தூங்கு. குட் நைட்” அவனுடன் இவ்வளவு நேரம் பேசிய திருப்தியில் நிம்மதியாக உறங்கினாள் கவிதா.
தன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்த மீனாவின் நெற்றியில் முத்தமிட்டு “டைரி திரும்ப வாங்கிட்ட போல?” என்றான் ராஜேஷ்.
“ம்ம்…” என்றவள் அவன் கழுத்தைச் சுற்றி கைப் போட்டு அவனை இன்னும் நெருங்கிப் படுத்தாள்.
“குட் நைட்”
அவன் கன்னத்தில் முத்தமிட்டு “குட் நைட்” என்று பதிலுக்குக் கூறினாள் மீனா.
காலை எழுந்ததும் அனைத்து வேலைகளையும் முடித்து ராஜேஷை அனுப்பி வைத்துவிட்டு டைரியை எடுத்தாள் மீனா.
என்ன தான் இரண்டு நாட்களாகத் தான் வாசித்த அனைத்தையும் கவிதா கூறி இருந்தாலும் அதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தாள். பின் நேற்று அவள் வாசித்துக்காட்டிய பகுதியை விடுத்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
16
நேத்து சனிக்கிழமை. காலேஜ் லீவ். ரெக்கார்ட் முடிக்காததால காலேஜ் போயிருந்தேன். ஜென்னி அவங்க வீட்டோட எங்கயோ வெளிலப் போறதால நான் ரம்யா கூட பஸ்ல போயிருந்தேன்.
எங்க கிளாஸ்ல உட்கார்ந்து ரெக்கார்ட் எழுதி முடிச்சுட்டு லாபுக்குப் போய் நோட்ட வெச்சுட்டு திரும்பினப்போ கதவுக்கிட்ட கௌதம் நிப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல.
ரம்யாவும் அப்பவே எழுதி முடிச்சு நோட் சப்மிட் பண்ணிட்டுக் கிளம்பிட்டா.
நான் கௌதம் கூடப் பேசி இருக்கேன் தான். ஆனா அப்போ எல்லாம் எங்கப் பக்கத்துல ஆள் இல்லன்னாலும் சுத்தி பல பேர் இருந்தாங்க. நேத்து அப்படித் தனியா அவன் முன்னாடி நின்னதும் கொஞ்சம் பயம் வந்துது.
என்னோட பயம் நான் கையில ஒரு நோட்ட எடுத்து அதோட கவரக் கொஞ்சம் கொஞ்சமாக் கிழிச்சதுலயே தெரிஞ்சிருக்கும்.
நேரா என் கண்ணையே பார்த்தான். என்னால அந்தப் பார்வைய சந்திக்க முடியல. தலக் குனிஞ்சு நின்னேன்.
கௌதம் ஒரு அடி முன்னாடி எடுத்து வெச்சதுமே வேகமா அவன நிமிர்ந்து பாத்தேன். அவன் என்கிட்ட வர வர என்னோட பயம் அதிகமாச்சு. ரெக்கார்ட் நோட்ட நெஞ்சோட இறுக்கிப் புடிச்சு பின்னாடி இருந்த டேபிள்ல சாஞ்சு நின்னேன்.
அவனுக்கும் எனக்குமான இடைவெளி இரண்டடியா கொறஞ்சப்போ என் கை நடுங்க ஆரம்பிச்சுது.
ரெக்கார்ட் நோட்ட மெதுவா வாங்கி டேபிள் மேல வெச்சான். கைலப் பிடிமானத்துக்கு இருந்த ஒரு பொருளும் போனதுக்கப்பறம் என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சேன்.
அவன் இன்னும் ஒரு அடி முன்னாடி எடுத்து வெச்சான். என்னால அவனோட வாசனைய உணர முடிஞ்சுது. தல சுத்துற மாதிரி இருந்துது.
அங்கேருந்து ஓட நெனச்சேன்… ஆனா அவனோட அந்தப் பார்வை… அதுல என்ன இருந்துதுன்னு எனக்குச் சொல்லத் தெரியல… என்னால அசைய கூட முடியல.
கௌதம் இன்னும் என்னை நெருங்கி வந்தான். அவன் சட்டை என் சுடிதார்ல உரசுற அளவுக்கு… அவனோட மூச்சுக் காத்து என் முன் நெத்தி முடியக் கலைக்குற அளவுக்குப் பக்கத்துல நின்னான்.
அவனுக்கு ஏன் மூச்சு வாங்குதுன்னு எனக்கு அப்போ புரியல. எவ்வளவு முயற்சிப் பண்ணியும் என்னால அவன் கண்ணுலேருந்து என் பார்வைய அகற்ற முடியல.
இவ்வளவு நெருக்கத்துல அவன் வந்து நிப்பான்னு நான் நினைக்கல. அந்தச் சில நொடிகள் நான் என்ன எதிர்ப்பார்த்தேன்னு எனக்குத் தெரியல. என் மூச்சும் தாறு மாறா ஏற ஆரம்பிச்சுது.
கௌதமோட பார்வையிலேருந்து அவன் என்ன நினைக்குறான்னு என்னால கண்டுப்பிடிக்க முடியல.
அவனோட இடது கையத் தூக்கி என் வலது கன்னம் பிடிச்சப்போ அதுக்கு மேல அங்க நிக்க முடியாதுன்னு தோணுச்சு.
தள்ளிப் போன்னு சொல்ல நெனச்சேன். என் உதடு துடிச்சுதே தவிர வார்த்தை வரல…
என் முகத்துக்கிட்ட அவன் குனிஞ்ச ஒவ்வொரு நொடியும் அவனோட மூச்சுக் காத்த நான் ஸ்வாசிச்சேன்.
என்னோட உதட்டுல அவன் உதடு பட்டப்போ கண்ண இறுக்கி மூடினேன். அவனோட உதடு அழுத்தினப்போ வெளில எவ்வளவு கரடு முரடாத் தெரியுற ஒரு ஆணோட உதடு இவ்வளவு ம்ருதுவா இருக்குமான்னு ஆச்சரியமா இருந்துது…
இப்போ நெனச்சாலும் என்னால அவனோட ஸ்பரிசத்த உணர முடியுது. அந்தத் தாக்கத்திலிருந்து வெளி வரவே எனக்கு ஒரு நாள் ஆகிடுச்சு. அதனால தான் நேத்து நடந்தத இன்னைக்கு டைரில எழுதுறேன்.
எவ்வளவு நேரம் அந்த முத்தம் தொடர்ந்துதுன்னு கேட்டாத் தெரியாது. சுத்தி என்ன நடந்துதுன்னு கேட்டா எனக்குத் தெரியாது. நான் என்ன பண்ணேன்னு கேட்டா உண்மையிலேயே எனக்குத் தெரியாது.
என் உதட்டுலேருந்து அவனோட உதட்டப் பிரிச்சு என் முகத்தோட முகம் வெச்சு “உனக்கே இப்போ புரிஞ்சுருக்கும்… நீ என்ன எந்த அளவுக்கு லவ் பண்ணுறேன்னு… இதுக்கு அப்பறமும் மறைக்காத ரேணு…” னு சொன்னான்.
எனக்குச் சிலிர்த்திடுச்சு. இப்பையும் என் காதல உனக்குப் புரிய வெச்சுட்டேன்னு சொல்லாம உன் காதல நீ உணரணும்னு சொல்லுறான்.
அவன் என்ன விட்டு விலகுனப்போ கண்ணத் திறந்து அவனப் பாத்தேன். என் கண்ணு கலங்கி இருந்தது எனக்கு நல்லா தெரிஞ்சுது. அவன் கண்ணும் கலங்கி இருந்துதோ? முதல் முத்தம்.
-ரேணு
மீனா டைரியிலிருந்து பார்வையை விளக்கி தரையை வெறித்தபடி சில நொடிகள் அமர்ந்திருந்தாள். பின் நிமிர்ந்து மணியைப் பார்த்தாள். பத்தாகியிருந்தது. வேகமாக மேலே சென்று தயாராகி வந்து ராஜேஷிற்கு போன் செய்தாள்.
“நான் கவிதா வீட்டுக்குப் போயிட்டு மதியம் வந்துடுறேன் ராஜேஷ்”
“என்னாச்சு மீனு? எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற? கவிதாவுக்கு ஏதாவது ஆகிடுச்சா? ரோஷனுக்கு…”
“ஐயோ அதெல்லாம் இல்ல ராஜேஷ். இது வேற… ம்ம்… நீங்க நைட் வந்ததும் படிச்சுக் காமிக்குறேன்”
முக்கியமான பைல் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தவன் கையிலிருந்த பைலைக் கீழே வைத்தான்.
“டைரி படிச்சியா?”
“ம்ம்ம்ம்ம்ம்ம்… ஐயோ நீங்க வந்ததும் சொல்லுறேன். பை பை” அவசரமாகக் காலை கட் செய்தவள் அடுத்த அரை மணி நேரத்தில் தோழியின் வீட்டிலிருந்தாள்.
மீனா புயல் வேகத்தில் வீட்டினுள் நுழைய ரோஷனுடன் அமர்ந்திருந்த கவிதா எழுந்து நின்று “என்ன மீனா?” என்றாள். அவள் கையைப் பிடித்து இழுத்து வந்து சோபாவில் அமர்த்தி “இத படி” என்று தான் படித்த பக்கத்தைச் சுட்டிக் காட்டினாள். ஒன்றும் புரியாமல் அவள் சொன்னதை வாசித்தவள் படித்து முடித்துப் பிறகு தலையைச் சிலுப்பி நிமிர்ந்தாள்.
“என்ன? உன்னோட பர்ஸ்ட் கிஸ் ஞாபகம் வந்துடுச்சா?”
“போடி… இதுக்குத் தான் அவசரமா கெளம்பி வந்தியாக்கும்?”
“சும்மா மழுப்பாத… ஞாபகம் வந்துச்சா? இல்லையா?”
“ம்ம்… ம்ம்… வந்துச்சு…”
“இதப் படிச்சதும் நான் மட்டும் தான் இப்படி யோசிக்குறேனா இல்ல நீயும் இப்படி யோசிக்குறியான்னு தெரிஞ்சுக்கத் தான் வந்தேன்”
“ஏன்… இத ராஜேஷ் அண்ணாக்கிட்டப் படிச்சுக் காட்டி கேக்க வேண்டியது தான?”
“ஒஹ்ஹ்… அவங்க வீட்டுக்கு வந்ததும் படிச்சுக் காமிப்பேனே…”
“ம்ம்… ம்ம்…”
அருகில் இருந்த பொம்மையை எடுத்து அவள் மீது எறிந்தாள். ““ஏய் ச்சீ… நீ இத கார்த்திக் அண்ணாக்கிட்ட சொல்ல மாட்டியா?”
“சொல்லுவேன் சொல்லுவேன்” என்ற கவிதா தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தாள்.
என்ன சொன்னாலும் அவள் வாசிப்பதை நிறுத்த போவதில்லை என்பதை உணர்ந்து இவ்வளவு நேரமும் தங்களின் வாக்குவாதத்தைச் சுவாரசியமாகக் கவனித்துக் கொண்டிருந்த ரோஷன் அருகில் சென்றமர்ந்தாள் மீனா.
இன்னைக்கு காலேஜ் போனதுலேருந்து ஏதோ ஒரு பதட்டம். கௌதம் முன்னாடி வந்து நின்னா என்ன செய்யறதுன்னு…
ஜென்னி கூடக் கேட்டா “என்னாச்சு ரேணு?” னு. கண்டிப்பா கௌதம் அன்னைக்கு நடந்ததப் பத்தி அவக்கிட்ட எதுவும் சொல்லியிருக்க மாட்டான்னு எனக்குத் தெரியும். நானும் எதுவும் சொல்ல விரும்பல. சிரிச்சு மழுப்பிட்டேன்.
கிளாஸ்ல உட்கார்ந்திருந்தாலும் என்னால எதுலயும் கான்சென்ட்ரேட் பண்ண முடியல. லஞ்ச் முடிச்சு காண்டீன்லேருந்து நேரா புட்பால் கிரௌண்ட்கிட்டப் போனேன்.
எனக்குத் தனியா இருக்கணும். லஞ்ச் ப்ரேக் முடிஞ்சிருந்துது. அதனால கிரௌன்ட்ல யாரும் இல்ல.
கொஞ்ச நேரம் கழிச்சு கௌதம் வந்து என் பக்கத்துல உட்கார்ந்தான். அன்னைக்கு மாதிரி அந்த பெஞ்சோட ரெண்டு ஓரத்துல நாங்க ரெண்டுப் பேரும்…
என்னால அவன் பக்கம் திரும்ப முடியல. அங்கேருந்து எழுந்துப் போகவும் முடியல. இது ஜென்னியோட வேலைன்னுத் தெரியும். கைப்பிடிய இறுக்கிப் பிடிச்சு உட்கார்ந்திருந்தேன்.
கௌதம் என்னையே பார்த்துட்டு இருந்தது எனக்கு இன்னும் அன்கம்பர்டபிளா இருந்துது. “ரேணு” னு அவன் கூப்பிட்டப்போ திரும்பிப் பார்க்குறதத் தவிர எனக்கு வேற வழித் தெரியல. கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துட்டே உட்கார்ந்திருந்தோம்.
“நான் இப்போ என்ன பண்ணணும் ரேணு? அன்னைக்கு உன்ன கிஸ் பண்ணதுக்காக சாரி கேட்கணுமா? இல்ல இப்போவாவது உன் காதல என்கிட்ட சொல்லுவியா?னு கேட்கணுமா?” னுக் கேட்டான்.
எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல. அவன் இப்படி நேரடியாக் கேட்பான்னு நான் நினைக்கல. அமைதியா இருந்தேன்.
“ஒருவேளை இன்னொரு கிஸ் வேணுமான்னு கேக்கணுமோ?” னு சிரிச்சுட்டே கேட்டான்.
தைரியம் தான் அவனுக்கு. எப்படி இப்படியெல்லாம் கேட்கத் தோணுது? எவ்வளவு முயற்சிப் பண்ணியும் என்னால சிரிப்ப அடக்க முடியல. அவன் முன்னாடி சிரிக்கவும் முடியாம எந்திரிச்சு ஓடி வந்துட்டேன்.
நான் க்ளாஸுக்கு வரதுக்கும் அந்த ஹவர் முடியறதுக்கும் சரியா இருந்துது. வேகமா என்னோட இடத்துல போய் உட்கார்ந்தேன்.
“நீ ஏன்டி எப்போ பாரு இப்படிப் பேயறஞ்ச மாதிரியே வர?” னு ஜென்னிக் கேட்டா. “போடி” னு சொல்லி நோட் எடுத்து அடுத்த ஹவர் நோட்ஸ் எடுக்க ரெடி ஆனேன். அவ என்னை ஒரு மாதிரிப் பார்த்தா.
ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சு கிளம்பினப்போ கௌதம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துது. மெசேஜ் அனுப்பலாம்னு யோசிச்சேன். என்ன அனுப்புறதுன்னு தெரியல.
ரொம்ப யோசிச்சு எம்டி (Empty) மெசேஜ் அனுப்பினேன். அடுத்த ரெண்டாவது நிமிஷம் கௌதம் என் முன்னாடி இருந்தான்.
அவனப் பார்த்ததும் அய்யோ தெரியாம இவனைக் கூப்பிட்டுட்டோமே… இப்போ என்ன பேசுவானோன்னு பயமா இருந்துது.
கௌதம் அமைதியா கையக் கட்டி நின்னான். எங்க ரெண்டுப் பேரையும் பார்த்த ஜென்னி “நான் போய் வண்டி எடுக்குறேன்” னு சொல்லிட்டு போயிட்டா.
சுத்தம்… தனியா வேற இவன்கிட்ட மாட்டிக்கிட்டோமேன்னு முழிச்சேன்.
கௌதம் “உனக்கு அப்படி என்ன ரேணு என்னைப் பார்த்தா பயம்? நான் அன்னைக்கு உன்ன கிஸ் பண்ணது சரியாத் தப்பா எனக்குத் தெரியாது… ஆனா நீ இன்னுமும் எந்தப் பதிலும் சொல்லலன்னா கண்டிப்பா நான் செஞ்சது தப்பாகிடும். என்னைப் பிடிக்கலன்னாலும் சொல்லு ரேணு” னு சொன்னான்.
அவன் பேசுன விஷயம் எவ்வளவு சீரியசான விஷயம்? இப்போ எழுதும் போதும் அவ்வளவு பீல் பண்ணி பேசியிருக்கான்னுத் தோணுது. ஆனா அவன் அதுக்கு நேர் மாறா சிரிச்சுக்கிட்டே இத சொன்னான். நான் பிடிக்கலன்னு சொல்ல மாட்டேன்னு அவ்வளவு நம்பிக்கையா?
இதுக்கு மேலயும் இவன்கிட்ட மறைச்சு மட்டும் என்ன ஆகப் போகுது? “பிடிச்சுருக்கு கௌதம். எங்க வீட்ட சமாளிக்க முடியுமான்னு இத்தன நாள் யோசிச்சேன். ஆனா இப்போ நீ இல்லாம இருக்க முடியாதுன்னு எனக்கு நல்லாத் தெரியுது” னு சொல்லிட்டு வேகமாத் திரும்பி நடக்க ஆரம்பிச்சுட்டேன்.
ஜென்னியோட வண்டிக்கிட்டப் போய்த் திரும்பினப்போ கௌதம் அங்க இல்ல. ஜென்னி என் முகத்தையே பார்த்துட்டு இருந்தா. தலக் குனிஞ்சு சிரிச்சுட்டே “கௌதம்கிட்ட அவன லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டேன்”னு சொன்னேன். அவ ரொம்பச் சந்தோஷப்பட்டா.
சந்தோஷத்த என்கூடப் பகிர்ந்துக்க வேண்டியவனோ எங்க இருக்கான்னுத் தெரியல.
-ரேணு
இன்னைக்குக் காலையில கௌதம் பார்க்கல. ஜென்னிக்கும் எதுவும் தெரியல. அவனுக்கு கால் பண்ண சொல்லி அவகிட்ட சொன்னேன்.
முதல் தடவ அவன் எடுக்கல. அடுத்த முறை எடுத்து நேத்து வண்டில வரப்போ கீழ விழுந்துட்டதாவும், டாக்டர்கிட்ட போய்க் காமிச்சதாவும், இப்போ மாத்திரை போட்டு ரெஸ்ட் எடுக்குறதாவும் சொன்னானாம். ஜென்னி இத என்கிட்ட சொன்னப்போ எனக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னுடுச்சு.
என்னால தானோ? நான் நேத்து என் காதல சொன்னதும் அவனுக்கு இப்படி ஆகிடுச்சோ? நான் அவனுக்கு ராசி இல்லையோ?
இப்படி என்னென்னமோ யோசிச்ச என்னால நிம்மதியா காலேஜூல உட்கார்ந்திருக்க முடியல. ஜென்னி எவ்வளவோ சமாதானம் சொல்லி பார்த்தா. எனக்கு அவன பார்த்தே ஆகணும்னு பிடிவாதமா சொல்லிட்டேன். அவளும் வேற வழியில்லாம அவனுக்கு கால் பண்ணி அவன் வீட்டு அட்ரெஸ், வழி எல்லாம் கேட்டா.
ஈவ்னிங் கௌதம் வீட்டு முன்னாடி போய் நின்னப்போ உள்ள போனா அவன் வீட்டுல இருக்கவங்க என்ன சொல்லுவாங்களோன்னு யோசனையா இருந்துது. ஜென்னி என்னை முறைச்சு என் கையப் பிடிச்சு உள்ள இழுத்துட்டு போனா.
கௌதம் அம்மாவப் பார்த்தோம். எனக்கு அவங்களப் பார்த்ததும் பிடிச்சுது. ஜென்னி அவங்கக்கிட்ட “நாங்க கௌதம் அண்ணாவோட ஜூனியர்ஸ். அவங்கள பார்க்க வந்திருக்கோம்”னு சொன்னதும் உள்ளக் கூப்பிட்டு அவனோட ரூம் காமிச்சாங்க.
எங்களப் பார்த்ததும் கௌதம் எவ்வளவு ஷாக் ஆனான் தெரியுமா? ஜென்னி நாங்க வரத அவன்கிட்ட சொல்லலன்னு அப்போ தான் புரிஞ்சுது.
அவன் கையில சின்னதா ஒரு கட்டுப் போட்டிருந்தான். முகம் வாடி இருந்துது. எனக்கு அவன இந்த நிலமையில பார்த்ததும் அழுக முட்டிக்கிட்டு வந்துது.
கௌதம் அம்மா எங்களுக்குச் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு வெளில போயிட்டாங்க. ஜென்னி அவன்கிட்ட ரெண்டு நிமிஷம் பேசிட்டு வெளிலப் போயிட்டா.
அவ போனதும் அவ்வளவு நேரமும் அடக்கி வெச்சிருந்த அழுகை வெடிக்க ஓடிப் போய் அவன கட்டிப் பிடிச்சுக்கிட்டேன்.
கௌதம் “எனக்கு ஒண்ணும் இல்ல ரேணு… சின்ன அடி தான். மணல்ல ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன் அவ்வளவு தான். ரெஸ்ட் எடுக்கத் தான் இன்னைக்கு வரல”னு சொன்னான். நான் எதையும் காதுல வாங்காம அழுதுட்டே அவன இன்னும் இருக்கமா கட்டிப்பிடிச்சுக்கிட்டேன்.
“ரேணு என்னைப் பாரு” னு சொல்லி ரொம்ப நேரமா என்னை அவன்கிட்டேருந்துப் பிரிக்க முயற்சி பண்ணான்.
“என்னால தான கௌதம். நான் லவ் பண்ணுறேன்னு சொன்னதும் உனக்கு இப்படி ஆகிடுச்சு. சாரி கௌதம். நான் உனக்கு வேண்டாம்” னு அழுதுட்டே சொல்லி அவன்கிட்டேருந்து விலக நெனச்சேன். அப்போ கௌதம் என்னை ஒரு கையால இறுக்கி அணைச்சுப் பிடிச்சான்.
எதுவுமே பேசாம கட்டுப் போட்டிருந்த கையால என் முதுகுல லேசாத் தட்டிக் குடுத்துட்டே இன்னொரு கையால இறுக்கிப் பிடிச்சு நின்னான்.
எனக்கு அது எவ்வளவு ஆறுதலா இருந்துதுன்னு எனக்குச் சொல்ல தெரியல. ஏதோ ஒரு நிம்மதி. பாதுகாப்பா உணர்ந்தேன். கொஞ்ச நேரத்துல என் அழுகையும் நின்னுடுச்சு.
அவனுக்கும் அது தெரிஞ்சிருக்கும். மெதுவா என் காதுக்கிட்டக் குனிஞ்சு “இனி என்னை விட்டு பிரிஞ்சுப் போறதப் பத்தி பேசாத ரேணு. எப்பயுமே…” னு சொல்லி என் கன்னத்துல கிஸ் பண்ணான்.
அவனக் கட்டிப்பிடிச்சு நிக்குறத அப்போ தான் நான் உணர்ந்தேன். விலக நெனச்சப்போ அவன் என்னை விடல.
“இவ்வளவு தூரம் எங்க வீட்டுக்கு வந்து என்னைப் பார்ப்பன்னு நான் நினைக்கவே இல்ல ரேணு. தேங்க்ஸ். ஐ பீல் பெட்டர் நவ். இவ்வளவு தூரம் வந்துட்ட… அப்படியே ஐ லவ் யூவும் சொல்லிடேன்… ப்ளீஸ்…” னு சொன்னான்.
எனக்குமே சொல்லணும்னு ரொம்ப ஆசையா இருந்துது. “ஐ லவ் யூ கௌதம்” னு சொன்னப்போ எனக்கு எப்படிச் சிலிர்த்துச்சுத் தெரியுமா…
ஒரு தடவ என்னை இன்னும் இருக்கமா அணைச்சு என் நெத்தில கிஸ் பண்ணி என்னை விட்டு விலகி நின்னான். அவன் முகம் நான் வரும்போது எவ்வளவு வாடி இருந்துதோ அந்தளவு பிரகாசமா இருந்துது.
சரியா அந்த நேரம் ஆன்ட்டி உள்ள வந்து எங்களுக்குச் சாப்பிடக் குடுத்துட்டுப் போனாங்க. ஜென்னி இந்நேரம் அவங்க வீட்டுல ஒருத்தியா ஐக்கியம் ஆயிருப்பான்னு எனக்கு நல்லாத் தெரியும். அதான் அந்தப் பக்கமே வராம கிச்சன்லயே இருக்கான்னு தோணுச்சு. பேசி பேசியே ஆளக் கொல்லுறவளாச்சே.
ஆன்ட்டி போனதும் கௌதம் என்னை அவனோட பெட்ல உட்கார சொல்லிட்டு என் எதிர்ல ஒரு சேர் இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். அவனோட தட்ட பக்கத்துல இருந்த டேபிள்ல வெச்சுட்டு என் தட்டுலேருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட ஆரம்பிச்சான்.
என்னால இப்போ வரைக்கும் நம்ப முடியல… ஒரே நாள்ல கௌதம் வீட்டுக்குப் போய்… அவன்கிட்ட ஐ லவ் யூ சொல்லி… அதுக்கு முன்னாடியே அவனக் கட்டிப்பிடிச்சு… ஒரே தட்டுல சாப்பிட்டு…
கௌதம் எதுவுமே பேசல. நாங்கக் கிளம்புற வரைக்கும்…
அமைதியா சாப்பிட்டு முடிச்சு ஒரு தடவ அவனோட வலது கையோட என் இடது கை கோர்த்து அழுத்தி தலையசச்சு ஹாலுக்குக் கூட்டிட்டு வந்தான்.
கொஞ்ச நேரம் அங்க உட்கார்ந்து ஆன்ட்டியும் ஜென்னியும் பேசுறதக் கேட்டுட்டு இருந்தோம். அப்பறம் கிளம்பி எங்க வீட்டுக்கு வந்துட்டோம். கிளம்பும்போது எனக்கு மனசே வரல… அங்கயே கௌதம் பக்கத்துலயே இருந்துடணும் போல இருந்துது.
வீட்டுல இறக்கி விட்டுட்டு “அன்னைக்கு’அம்மா கௌதம் வந்துருக்கான். நான் கிளம்புறேன்’னு கத்துனியே… அந்த மாதிரி எதுவும் உளறி உங்க வீட்டுல என்னை மாட்டி விட்டுடாதடி…” னு சொல்லிட்டு ஜென்னி கிளம்பிட்டா.
இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி அவனுக்கு குட் நைட் மெசேஜ் அனுப்பினேன். குட் நைட். ஐ லவ் யூ ரேணு. சீ யூ டுமாரோ இன் காலேஜ் னு ரிப்ளை அனுப்பினான். நாளைக்கு அவன காலேஜூல பார்க்கப் போற நிம்மதியோட நான் தூங்கப் போறேன்.
-ரேணு
“போதும் கவி படிச்சது. மதியமும் என்னை வீட்டுக்கு விடல. இப்போ மணி நாலு டி. நான் கிளம்புறேன் கவி” என்று மீனா கெஞ்சவும் மனமே இல்லாமல் டைரியை அவள் கையில் கொடுத்தாள் கவிதா. அதுவரை தான் படித்தவற்றை அவளிடம் கூறவும் மறக்கவில்லை.
“அப்பாடா ஒரு வழியா ஒத்துக்கிட்டாளா இந்த ரேணு?” என்ற மீனா அவளிடம் சொல்லிக் கொண்டு ரோஷனைத் தூக்கி முத்தமிட்டு அங்கிருந்துக் கிளம்பி வீடு வந்து சேர்ந்தாள்.
அன்றிரவு ராஜேஷிடம் டைரியை கொடுத்துப் படித்துப் பார்க்க சொன்னாள்.
“இதுக்குத் தான் அப்படி வேகமா கவிதா வீட்டுக்குப் போனியா? உனக்கு ஞாபகம் இருக்கா நம்மளோட பர்ஸ்ட் கிஸ்?”
“எல்லாம் இருக்கு இருக்கு… உங்ககிட்ட சொல்லுறேன்னு சொன்னேன். சொல்லிட்டேன். படுத்துத் தூங்குங்க ராஜேஷ்”
அவன் கையிலிருந்து டைரியை வாங்கி டேபிள் மீது வைத்து விளக்கை அணைத்துவிட்டு படுத்தாள் மீனா.
“இதுக்கப்பறம் நான் பேசாமத் தூங்குவேன்னு வேற உனக்கு நெனப்பு இருக்கா?” என்று கேட்டவன் அதன் பிறகு அவளைப் பேச விடவில்லை.
கவிதா அன்றிரவு இதே விஷயத்தை கார்த்திக்கிடம் கூறியபோது “எப்போடா உன்ன பார்ப்பேன்னு இருக்கு கவி” என்று ஒரு நீண்டப் பெருமூச்சை வெளியேற்றினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!