Poi Poottu 9

Poi Poottu 9

17
    கையில் டைரியை எடுத்தபோது முன் தினம் ராஜேஷுடன் நள்ளிரவு வரை பேசியது நினைவு வந்தது.’நானும் இப்போ எல்லாம் வேகமா படிக்க ஆரம்பிச்சுட்டேன்’தன்னைத் தானே பாராட்டிக் கொண்ட மீனா பக்கங்களைத் திருப்ப ஆரம்பித்தாள்.
இன்னையோட நான் கௌதம்கிட்ட என் காதல சொல்லி ஒரு வாரம் முடிஞ்சுடுச்சு. இந்த ஒரு வாரம் எப்படிப் போச்சுன்னே தெரியல… டைரி எழுதணும் அப்படிங்குறதையே மறந்து போயிட்டேன். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. வீட்டுல இருக்குறதால எழுதுறேன்.
அடுத்த நாள் காலேஜ் வந்ததுலேருந்து கௌதம் என்னைப் பார்த்தா சின்னதா ஒரு சிரிப்பு சிரிப்பான். அதுல ஒளிஞ்சிருக்கச் சந்தோஷத்தோட அளவு எனக்கு மட்டுமே தெரிஞ்ச ஒண்ணு… மறக்காம லஞ்ச் எங்கக்கூடத் தான் சாப்பிடுவான். என் பக்கத்துல உட்கார்ந்து எந்தப் பேச்சும் இல்லாம அமைதியா சாப்பிட்டுப் போகும்போது லேசாத் தலை அசைச்சுட்டுக் கிளம்பிடுவான்.
எனக்கு அவனோட இந்த அமைதி பிடிச்சுது. அவனோட அக்கறையும்.
எனக்காக அவனோட பர்ஸ்ட் இயர் நோட்ஸ் எல்லாம் எடுத்துக் குடுத்தான். நான் கேட்காமலேயே… நான் ஒழுங்கா சாப்பிடாம எழுந்திரிக்கப் போனா என் கைய லேசாப் பிடிச்சு அழுத்தி “சாப்பிடு ரேணு” னு மட்டும் தான் சொல்லுவான். அத மீறி என்னால எழுந்திரிக்க முடிஞ்சதில்ல.
நேத்து என்னையும் ஜென்னியையும் கௌதம் அவனோட வீட்டுக்குக் கூப்பிட்டான். காலேஜ் அர நாள் தான். மதியானம் கிளம்பி அவன் வீட்டுக்குப் போனோம். அவன் எங்களுக்கு முன்னாடியே கிளம்பிப் போயிட்டான்.
அவங்க வீட்டுக்குப் போனதும் ஜென்னி நேரா கிச்சன் உள்ளப் போய் ஆன்ட்டி கூட அரட்டை அடிக்க ஆரம்பிச்சுட்டா. நான் அவங்களப் பார்த்து சிரிச்சதோட சரி… ஆன்ட்டி என் கன்னத்த வருடிட்டு உள்ளப் போயிட்டாங்க.
கௌதம் ஹால் சோபால என் பக்கத்துல உட்கார்ந்தான். கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவன் என் பக்கம் திரும்பி பேச ஆரம்பிச்சான்.
“உன்ன முதல் நாள் பைக் ஸ்டாண்ட்லப் பார்த்தப்போவே எனக்கு ரொம்பப் பிடிச்சுது ரேணு. எதுக்குடா இந்தப் பொண்ணு நம்மளப் பார்க்குதுன்னு யோசிச்சேன். என்னைப் பார்த்தப்போ எல்லாம் நீ மெய் மறந்து நின்னது எனக்கு என்னமோ மாதிரி இருந்துது.
அதுக்கப்பறம் உன்ன கவனிக்க ஆரம்பிச்சேன். அன்னைக்கு என் மேல இடிச்சப்போ எனக்கு முதல்ல கோவம் வந்துது. அப்பறம் தப்பு என் மேலயும் இருக்குன்னு புரிஞ்சு நான் திரும்பிப் பார்த்தப்போ நீ அழுதுட்டு இருந்த. எனக்கு அப்போ உன் முகத்த என் கையில ஏந்தி உனக்கு ஆறுதல் சொல்லணும் போல இருந்துது.
அப்பறம் உன்னப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு நான் யோசிச்சப்போ நீ என் கிளாஸ் தாண்டிப் போன. எனக்கு ஆச்சர்யமா இருந்துது. உன் பேரு கிளாஸ் எல்லாம் கேட்டு உன்கிட்ட வந்து பேசுனேன். அன்னைக்கு நீ ஓடிப் போனியே… அப்போ நீ என்னைப் பார்த்து வெட்கப்படுறது பிடிச்சுது.
நான் உன்கிட்ட வந்து பேசாதது வரைக்கும் என்னையே பார்த்த நீ, நான் வந்து பேசுனதுக்கு அப்பறம் என்னை அவாய்ட் பண்ணது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துது ரேணு. உன்னப் பார்க்காம இருக்க முடியல. ஒரு வாரம் எனக்கு ஜுரம் வந்தப்போ அவ்வளவு தவிச்சேன்.
நீயும் அப்படித் தான் தவிச்சிருப்பன்னுத் தோணுச்சு. அதான் அன்னைக்கு ஜென்னி நீ காலேஜ் போயிருக்கன்னு சொன்னதும் கிளம்பி வந்தேன். நீ தனியா இருப்பன்னு நான் எதிர்ப்பார்க்கல. உன்ன கிஸ் பண்ணது… தப்பு தான் ரேணு. சாரி. எனக்கு உன் பக்கத்துல இப்படி இருந்தாலே போதும் ரேணு… மைன்ட் எவ்வளவு பீஸ்புல்லா இருக்குத் தெரியுமா? இப்படியே வாழ்க்கைப் பூரா உன் கூடவே இருந்துடணும் ரேணு…” னு சொல்லி என் கையப் புடிச்சுக்கிட்டான்.
எனக்கு ஏதோ கனவு காணுறது மாதிரி இருந்துது. நான் கேட்க நெனச்ச எல்லாக் கேள்விக்கும் நான் கேட்காமலேயே பதில் சொல்லிட்டான்.
எனக்குப் பெருமையா இருந்துது. இப்படி ஒருத்தன லவ் பண்ணுறதுக்கு. இப்படி ஒருத்தனோட காதல் எனக்குக் கிடைக்குறதுக்கு.
எப்பயுமே நான் கௌதம் கேட்குற எதுக்கும் பதில் சொல்லுறதில்ல. அப்போ எனக்கு அது உறுத்துச்சு. நான் மனசுல நெனச்ச எல்லாத்தையும் அவன்கிட்ட வாயத் திறந்து சொல்லிட்டேன்.
“இன்னைக்குத் தான் நீ நேர்ல என்கிட்ட இவ்வளவு பேசுற” னு சொல்லி என்னோட கையப் புடிச்சுக்கிட்டே உட்கார்ந்து டீ வீ பார்க்க ஆரம்பிச்சுட்டான்.
ஆன்டி வந்து சாப்பிடக் கூப்பிட்டதும் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டோம். நேத்தும் வீட்டுக்குக் கிளம்பினப்போ எனக்கு அவன் வீட்டிலேருந்து வர மனசே வரல.
இன்னைக்குக் காலையில கால் பண்ணான். அர மணி நேரம் பேசினோம். அப்பறம் அவன் பிரண்ட்ஸ் கூட வெளிலப் போறதா சொல்லிட்டுக் கிளம்பிப் போயிட்டான்.
காதல் வந்தா காதலிக்குறவங்க எல்லாரும் இப்படித் தான் இருப்பாங்களான்னு எனக்குத் தெரியாது. எப்படி இருப்பாங்கன்னும் எனக்குத் தெரியாது.
ஆனா கௌதம் என்கிட்ட இவ்வளவு இயல்பாப் பழகுறத நான் ரசிக்குறேன். உண்மையில எனக்கு அது சந்தோஷத்தைக் குடுத்துது.
உனக்காக நான் இதையெல்லாம் தியாகம் செஞ்சேன்… இப்படியெல்லாம் மாறினேன்னு சொல்லாம அவனோட உலகத்துக்குள்ள என்னை இழுத்தான்… என்னோட உலகத்த அவனோடதா ஆக்கிக்கிட்டான்… ஐ லவ் யூ கௌதம்.
-ரேணு
அடுத்த வாரம் எனக்கு பர்ஸ்ட் செமெஸ்டர் எக்ஸாம் வருது. இன்னையோட காலேஜ் லீவ் விடுறாங்க. ஸ்டடி ஹாலிடேஸ்.
இன்னைக்கு ஈவ்னிங் கௌதம் பைக் ஸ்டாண்ட் வந்து “என் கூட வா ரேணு. ஜென்னி நீ இங்கயே ஒரு பிப்டீன்  மினிட்ஸ் வெயிட் பண்ணு” னு சொல்லிட்டு வேகமா அவனோட பைக் எடுத்தான். எனக்கு ஒண்ணும் புரியல. ஜென்னி அங்கயே வெயிட் பண்ணுறதா சொன்னா.
கௌதம் கூட முதல் தடவ அவன் பைக்ல அவன் பின்னாடி உட்கார்ந்துப் போனேன். அவ்வளவு சந்தோஷமா இருந்துது. கூடவே யாராவது தெரிஞ்சவங்கப் பார்த்துடுவாங்களோன்ற படப்படப்பும்…
அவன் ஒரு ஸ்டேஷனரி ஷாப் முன்னாடி பைக் நிறுத்தி இறங்க சொல்லி உள்ளக் கூட்டிட்டுப் போனான். சுத்தி சுத்தித் தேடி ரெண்டு பென் வாங்கி அதுக்கு பில் போட்டு அதை என் கையில கொடுத்தான்.
“எக்ஸாம் நல்லா எழுது ரேணு. ஆல் தி பெஸ்ட். வேற எதையும் யோசிக்காத. என்கூடப் பேசணும்னுத் தோணுனா கால் பண்ணு. தனியா உட்கார்ந்து எதையும் யோசிக்காத” னு சொல்லிட்டு பைக் எடுத்தான்.
ரோட்னு கூடப் பார்க்காம எனக்கு அவனக் கட்டிப்பிடிச்சு தேங்க்ஸ் சொல்லணும் போல இருந்துது. நான் அமைதியா உட்கார்ந்து வரதப் பார்த்து என்னாச்சுன்னு கேட்டான். முதல்ல கொஞ்சம் தயங்கினாலும் நான் நெனச்சத சொன்னேன்.
“நீ எக்ஸாம் முடி… நானே உன்னை வந்து கட்டிப்பிடிக்குறேன்” னு சொன்னான். அய்யோ… தேவயில்லாம வாயக் குடுத்துட்டோமோ…
காலேஜ் வந்து இறங்கினதும் தேங்க்ஸ்னு சொல்லி ஜென்னி கூட வண்டில வந்தேன். கௌதம் பென் வாங்கிக் கொடுத்தத அவக்கிட்ட சொன்னேன். கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டா. இவ ஒருத்தி… எப்பப் பார்த்தாலும் எல்லாத்துக்கும் நேரம் காலம் பார்க்காம ஓட்டுவா…
வீடு வந்து சேர்ந்து இன்னைக்கு டைரி கௌதம் வாங்கிக் குடுத்த பென்ல தான் எழுதுறேன். டைரி எழுதறதுக்கு முன்னாடி அவன் பேர எழுதிப் பார்த்தேன். எனக்கே கிறுக்குத்தனமாத் தெரியுது. ஆனாலும் இத எல்லாம் ரசிக்குறேன்.
-ரேணு
எக்ஸாமுக்கு படிக்கும்போது எனக்கு எப்போ எல்லாம் டென்ஷனா இருக்கோ அப்போ எல்லாம் கௌதமுக்கு கால் பண்ணி பேசுனேன். எடுத்ததும் எக்ஸாம் பத்தி பேசாம அன்னைக்கு அவன் என்னல்லாம் செஞ்சான், காலேஜ்ல என்ன நடந்துது இப்படி ஏதாவது பேசுவான்.
அப்பறம் எனக்கு இருக்க டௌட் என்னன்னுக் கேட்டு அதத் தீர்த்து வெப்பான். அப்பறம் கொஞ்ச நேரம் சும்மா என்னை ஏதாவது பேச சொல்லுவான். நான் எப்படிப் படிச்சேன், என்னல்லாம் படிச்சேன்னு சொல்லுவேன். என்னோட பயம் டென்ஷன் எல்லாம் கொறஞ்சுடும். அப்பறம் தெளிவா படிக்க ஆரம்பிச்சுடுவேன்.
எனக்கு அவன் கூட மத்த நாள்ல பேசுனத விட இந்த எக்ஸாம் டைம்ல அவன்கூடப் பேசுனது தான் ரொம்பப் பிடிச்சுது… என்னால தயக்கம் இல்லாம அவன்கூடப் பேச முடிஞ்சுது.
நாளைக்குக் கடைசிப் பரீட்சை. கௌதம் நாளைக்கு என்னைப் பார்க்க வரேன்னு சொல்லியிருக்கான். எனக்கு எக்ஸாம் ஆரம்பிச்ச நாள் முதல் நான் இன்னும் அவனை நேர்லப் பார்க்கல.
-ரேணு
இன்னைக்கு கௌதம் செஞ்ச வேலை இருக்கே… இத்தனை நாள் எவ்வளவு நல்லவன் மாதிரி இருந்துட்டு இன்னைக்கு அதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு என்னைப் படுத்தி எடுத்துட்டான்.
எக்ஸாம் முடிஞ்சு மதியானம் ஜென்னி கூட வண்டி எடுக்க வரப்போ கௌதம் பைக் ஸ்டாண்ட்ல இருந்தான். அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டான். ஜென்னியும் உடனே சரி போகலாம்னு சொல்லிட்டா.
இதுங்க ரெண்டும் சேர்ந்து எதுவோ ப்ளான் பண்ணிடுச்சுங்கன்னு எனக்கு அப்போவே தோணுச்சு. கௌதம் வீட்டுக்குள்ளப் போனதும் ஜென்னி வழக்கம் போல ஆன்ட்டிகூட கிச்சன்குள்ள போயிட்டா.
கௌதம் அன்னைக்கு மாதிரி ஹால்ல உட்காருவான்னு நெனச்சா வா னு சொல்லிட்டு அவன் ரூமுக்குப் போனான். நான் உள்ள போனப்போ அவனோட ஷெல்ப்ல துணிக்கு பின்னாடி எதையோ தேடி எடுத்தான். ஒரு சின்ன கிப்ட் பேக்.
“எக்ஸாம் முடிச்சதுக்கு என்னோட கிப்ட்” னு சொல்லி என் கைலக் குடுத்தான். உள்ள ஒரு குட்டி ரவுண்டு கண்ணாடி ஸ்டாண்ட்ல ஒரு கண்ணாடி ரெட் ஹார்ட்டும், அதுக்குள்ள இன்னொரு கண்ணாடி ஹார்ட்டும் இருந்துது.
என் முகத்துக்கு நேரா அதத் தூக்கிப் பார்த்தப்போ அதிர்ச்சியாகி திரும்பிப் பார்த்தேன். இது உனக்காக ஸ்பெஷலா செஞ்சதுன்னு சொன்னான்.
அந்தக் குட்டி ஹார்ட்குள்ள என்னோட ஒரு சின்ன போட்டோ இருந்துது. என்னால நம்பவே முடியல. கௌதம்கு தேங்க்ஸ் சொல்லத் திரும்பினப்போ என் கைய புடிச்சு இழுத்து இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கிட்டான்.
நான் முதல்ல அதிர்ந்தாலும் எனக்கும் அப்போ அது ரொம்பப் பிடிச்சுது. ஒரு கைல அவனோட கிப்ட் வெச்சு இன்னொரு கைய அவன் கழுத்த சுத்தி போட்டு அவனக் கட்டிப்பிடிச்சேன்.
கொஞ்ச நேரம் அமைதியா நின்னவன் “கிப்ட் குடுத்ததுக்கு எனக்கு எதுவும் கிடையாதா?”னுக் கேட்டான். நான் அப்போ இருந்த மன நிலைல யோசிக்காம என்ன வேணும்னுக் கேட்டுட்டேன்.
உடனே வேகமா நிமிர்ந்து என்னைப் பார்த்து “ஒரு கிஸ்?” னு கேட்டான். அப்போ தான் மடத்தனமா இவன்கிட்ட வாயக் குடுத்துட்டோமேன்னு தோணுச்சு. ஆன்ட்டி வந்துடப் போறாங்க நான் போறேன்னு சொல்லி அங்கேருந்து ஓடப் பார்த்தேன்.
கௌதம் அதுக்கு முன்னாடி என் கையப் பிடிச்சு கிப்ட வாங்கி டேபிள்ல வெச்சுட்டு ஒண்ணே ஒண்ணு ப்ளீஸ்னுக் கெஞ்ச ஆரம்பிச்சுட்டான். ப்ளீஸ் கௌதம் விட்டுடுன்னு நானும் கெஞ்சுனேன்.
இப்படியே மாத்தி மாத்தி ரெண்டுப் பேரும் கெஞ்சிட்டு இருந்த நேரம் “நான் உள்ள வரலாமா?”னுக் கேட்டு ஜென்னி உள்ள வந்தா. சாப்பாடு ரெடி ஆகிடுச்சுன்னு சொல்லி எங்களக் கூப்பிட்டா.
ஆன்ட்டியும் எங்களோட உட்கார்ந்து சாப்பிட்டாங்க. கௌதம் அமைதியா சாப்பிட்டாலும் யாரும் பார்க்காதப்போ கண்ணாலயே கெஞ்சுறதும், பக்கத்துல உட்கார்ந்து என் கைய சொரியறதுமா அவன் பண்ண வேலை இருக்கே… முடியல… சாப்பிடவும் முடியாம நெளியவும் முடியாம அவஸ்தைப்பட்டேன். எப்படியோ வேகமா சாப்பிட்டு எந்திரிச்சுக் கை கழுவப் போனேன்.
கௌதம் என் பின்னாடியே வரதப் பார்த்ததும் எனக்குப் பயமா இருந்துது. நான் கிச்சன்ல தட்ட வெச்சுட்டுக் கை கழுவித் திரும்பினப்போ அவன் என் பின்னாடி நின்னு என் ரெண்டு பக்கமும் கை வெச்சு “ஒண்ணு தானக் கேக்குறேன்… ப்ளீஸ் ரேணு”னு சொன்னான்.
நான் கஷ்டப்பட்டு நெளிஞ்சுத் திரும்பி அவனப் பார்த்து “ஆன்ட்டிகிட்ட என்னன்னு சொல்லி எங்க ரெண்டுப் பேரையும் உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த?” னுக் கேட்டேன்.
கௌதம் என் இடுப்ப சுத்தி கைப் போட்டு இன்னும் கிட்ட வந்து “அவசியம் தெரிஞ்சுக்கணுமா?” னுக் கேட்டான். இவன் ஏன் இவ்வளவு பக்கத்துல நிக்குறான்னு யோசிச்சு நெளிஞ்சுட்டே தலை ஆட்டினேன்.
“இதுக்கு முன்னாடி நீங்க வந்தன்னைக்கு’உங்களோட பொண்ணையும் மருமகளையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வரவா’ன்னு கேட்டேன். சரின்னு சொல்லிட்டாங்க. இன்னைக்கு அவங்க தான் உங்க ரெண்டுப் பேரையும் வர சொன்னாங்க”னு சிரிச்சுக்கிட்டே சொன்னான்.
ஆன்ட்டிக்கு எல்லாம் தெரியும்னு அவன் சொன்னதுமே எனக்கு ஒதறல் எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. இவன் வேற இப்படிக் கட்டிப்பிடிச்சு நிக்குறானேன்னு யோசிச்சு அவனைத் தள்ளிவிட்டு “அப்போ ஆன்ட்டிக்கு எல்லாம் தெரியுமா கௌதம்? ஐயோ என்ன நினைப்பாங்க?” னு நான் பதறுனேன்.
“அவங்களுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு ரேணு” னு சொன்னான். அப்பயும் நான் புலம்பிட்டே இருந்தேன்.
“நீ சரி வர மாட்ட… வா”னு சொல்லி என் கைய பிடிச்சு இழுத்துட்டு வெளில வந்து “அம்மா நான் ரேணுக்கு மாடி சுத்திக் காட்டிட்டு வரேன்”னு சொல்லிட்டு தர தரன்னு இழுத்துட்டு மாடிக்கு போய் அங்க இருந்த ஒரு ரூம்குள்ள என்னைத் தள்ளி கதவச் சாத்தினான்.
“இங்க பாரு ரேணு… அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கும் தான்… என்னைக்கா இருந்தாலும் இத சொல்லி தான் ஆகணும். அதான் சொல்லிட்டேன். அப்பாக்கிட்ட சொல்ல எனக்கு இன்னும் தைரியம் வரல. ஆனா சீக்கிரம் சொல்லிடுவேன். நீ இப்படி டென்ஷன் ஆகாம இரு.
கீழ இருந்தா அம்மா வந்துடுவாங்கன்னு நீ பயந்துட்டே இருப்ப. அதான் மேலக் கூட்டிட்டு வந்தேன். இங்க அம்மா வர மாட்டாங்க. இப்போ ஒழுங்கு மரியாதையா கிஸ் குடு”னு சொன்னான்.
“அது எப்படி கௌதம் எல்லாத்தையும் ஒரே மாதிரி, ப்ளோவா, சீரியசா பேசுற?”ன்னு கேட்டேன். “பேச்ச மாத்தாத”னு சொல்லி என்கிட்ட வந்தான். இதுக்கு மேல என்னால அவனை ஏமாத்த முடியாதுன்னு தெரியும்.
எப்படியும் நான் குடுக்கலன்னா விடவாப் போறான்? நானே அவன் முகத்தைப் பிடிச்சுக் கிட்ட இழுத்து அவன் உதட்டுல கிஸ் பண்ணேன்.
ஆரம்பிச்சது என்னமோ நான் தான்… ஆனா அதுக்கப்பறம் அவன் தான் அந்த முத்தத்தைத் தொடர்ந்தான். விலக மனசே இல்லாம என்னை விலக்கி நிறுத்தினான். “தேங்க்ஸ் ரேணு”னு அவன் சொன்னப்போ என்னால அவன் முன்னாடி நிக்க முடியல. வேகமாக் கீழ ஓடி வந்துட்டேன்.
அதுக்கப்பறம் ஆன்ட்டிகூடப் பேசிட்டு இருந்துட்டு நானும் ஜென்னியும் கிளம்பினோம். ஆனா இந்தக் கொஞ்ச நேரத்துல எப்போ எல்லாம் நான் தனியா மாட்டினேனோ அப்போ எல்லாம் கௌதம் என் கன்னத்துல கிஸ் பண்ணிட்டே இருந்தான். நானும் அவன்கிட்டேருந்துத் தப்பிக்க எவ்வளவோ முயற்சிப் பண்ணேன்… ம்ம்ஹும்ம்…
இன்னைக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். கௌதம் குடுத்த கிப்ட் என் டேபிள்ல இருக்கு.
-ரேணு
செமஸ்டர் ஹாலிடேஸ் பத்து நாள் இருந்துது. இந்தப் பத்து நாளும் கௌதம் கூட போன்ல பேசி, ஜென்னி வீட்டுக்குப் போய், அவ எங்க வீட்டுக்கு வந்து, நாங்க கௌதம் வீட்டுக்குப் போய்… இப்படியே பொழுதுப் போயிடுச்சு.
இப்போ எல்லாம் நான் ஆன்ட்டிக்கூட நல்லா பேச ஆரம்பிச்சுட்டேன். நடுவுல ஒரு நாள் நாங்க போனப்போ அங்கிள் வீட்டுல இருந்தாங்க. அவங்கக் கூடயும் பேசினேன்.
கௌதம் பத்தி நான் நல்லாப் புரிஞ்சுக்க இந்தப் பத்து நாள் ரொம்ப உதவியா இருந்துது. நாளைக்கு காலேஜ் போகணும். நாளையிலிருந்து தினமும் கௌதம் பார்ப்பேன்னு நினைக்கும்போதே ரொம்பச் சந்தோஷமா இருக்கு.
– ரேணு
இன்னைக்குக் காலேஜ்ல கௌதம் எப்பயும் போலச் சிரிச்சான். எங்க கூட லஞ்ச் சாப்பிட்டான். அவனோட நடவடிக்கைல எந்த மாற்றமும் எனக்குத் தெரியல. நான் லவ் பண்ணுறேன்னு சொன்னதும் அவன் மாறிடுவான்னு நான் நெனச்சேனோ?
என்ன ஒரே ஒரு வித்தியாசம்… இப்போ எல்லாம் ஜென்னிக்கு தெரியாம, யாருக்கும் கேட்காத மாதிரி ஐ லவ் யூ சொல்லுறான். ஜென்னி கவனிக்கலைன்னா நானும் பதிலுக்குச் சொல்லுவேன். லைப் இவ்வளவு ஹாப்பியா இருக்கும்னு நான் நினைக்கல.
– ரேணு
வர வர எனக்கு டைரி எழுத நேரமே கிடைக்குறதில்ல. காரணம் கௌதம்.
எப்பயும் அவனப் பத்தியே யோசிக்குறேன். அவன் என்னை எப்படித் தாங்குறான் தெரியுமா? எதுக்காகவும் என்னைப் பீல் பண்ண விடவே மாட்டான். அவன் என் கூடவே இருக்குறப்போ ஏதோ பாதுகாப்பா உணருறேன்.
இதோட ரெண்டாவது செமஸ்டர் முடிஞ்சுடுச்சு. இன்னைக்கும் கௌதம் வீட்டுக்குப் போனோம். இந்தத் தடவ எனக்குப் படிக்குறதுக்கு ஹெல்ப் பண்ணதுக்காக… என்னை இந்த அளவுக்கு லவ் பண்ணுறதுக்காக… நான் அவனுக்கு கிப்ட் குடுத்தேன்.
ஆன்ட்டியும் ஜென்னியும் மும்முரமா பேசிட்டு இருந்த சமயம் கௌதமுக்கு கண்ணக் காட்டிட்டு நான் அவன் ரூமுக்கு போனேன். அவனும் கொஞ்ச நேரத்துல அங்க வந்தான். என்ன ரேணு னு அவன் கேட்டு முடிக்குறதுக்குள்ள அவனக் கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணி என் எக்ஸாம் முடிஞ்சதுக்கு என்னோட கிப்ட்னு சொல்லிட்டு வேகமா கிச்சன்குள்ள ஓடிட்டேன்.
அதுக்கப்பறம் கௌதம் என்னைப் பார்த்த பார்வையே வித்யாசமா இருந்துது. ஜென்னி கூட உட்காருறதுக்காகப் போனேன். ஹால் கிட்ட வந்தப்போ திடீர்னு பின்னாடிலேருந்து என்னைக் கட்டிப்பிடிச்சு “தேங்க்ஸ் ரேணு”னு சொல்லி என் காதுல கிஸ் பண்ணிட்டு அவன் ரூமுக்கு போயிட்டான்.
ஆன்ட்டி பாத்திருந்தா என்ன நினைப்பாங்க… நல்லவேளை அவங்க கிச்சன்ல இருந்தாங்க. ஜென்னியும் திரும்பி உட்கார்ந்திருந்தா. நான் அமைதியா அவ பக்கத்துலப் போய் உட்கார்ந்துட்டேன்.
கொஞ்ச நேரத்துல கௌதம் வந்து என் பக்கத்துல உட்கார்ந்தான். என் கையோட கை கோர்த்துப் பிடிச்சு டீ வீ பார்க்க ஆரம்பிச்சான்.
என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் அழகா இருக்குன்னா அது கௌதம்னால… அப்போவும் அத நான் உணர்ந்தேன். நானும் அவன் கைய இறுக்கிப் பிடிச்சுக்கிட்டேன். இன்னைக்கும் அவன் வீட்டுலேருந்துக் கிளம்பும்போது அங்கயே இருந்திட மாட்டோமான்னு இருந்துது.
– ரேணு
நான் ஒரு வருஷம் கழிச்சு டைரி எழுதுறேன்னு என்னால நம்பவே முடியல. இன்னைக்கு டைரிய தேடி தான் எடுத்தேன். எங்க வெச்சேன்னே மறக்குற அளவுக்கு நான் இதப் பத்தி நினைக்கக் கூட இல்ல.
இந்த ஒரு வருஷத்துல நான் எங்க வீட்டுல கௌதம் என்னோட சீனியர்னு சொல்லி, அவன் வீட்டுக்கு தான் போறேன்னு உண்மைய சொல்லிட்டுப் போக ஆரம்பிச்சுட்டேன்.
அப்பயும் டவுட் கேட்கப் போறேன்னு தான் சொல்ல வேண்டியதா இருக்கு. அப்பா அவன ஒரு நாள் வீட்டுக்கு வர சொன்னாங்க. அவனும் வந்தான். அன்னைக்கு எனக்கு எப்படி இருந்துது தெரியுமா? அம்மாவுக்கும் அவன பிடிச்சுது. அதுக்கப்பறம் நான் அவன் வீட்டுக்குப் போறேன்னு சொன்னா எங்க வீட்டுல எந்தக் கேள்வியும் கேட்குறதில்ல.
கௌதமும் எனக்குப் படிப்புல நிறைய உதவி செஞ்சான். நிஜமாவே அவன்கிட்ட டவுட் கேட்குறதுக்காக அவன் வீட்டுக்குப் போனதும் உண்டு. நானும் இப்போ எல்லாம் ஆன்ட்டிக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணுறேன். அங்கிள்கிட்டயும் நல்லா பேச ஆரம்பிச்சுட்டேன்.
இன்னைக்கு நாலாவது செமஸ்டர் கடைசி எக்ஸாம் முடிச்சு அவன் வீட்டுக்குப் போனப்போ கௌதம் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தான்.
அவன் அடுத்த வருஷம் பைனல் இயர் இல்ல… நிறைய வேலை இருக்குமாம்… ப்ராஜக்ட் பண்ணணுமாம்… இண்டர்வ்யூக்கு ப்ரிபேர் பண்ணணுமாம்… எனக்கு உன்னை லவ் பண்ணுற வேலை மட்டும் தான்பா னு நான் சொன்னப்போ ஒழுங்கா படின்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான். ஷப்பா…
– ரேணு
18
      நல்ல உறக்கத்தில் இருந்த கவிதா பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டு திடுக்கிட்டுக் கண் விழித்தாள். வேகமாகக் கைபேசியை எடுத்து மணிப் பார்த்தபோது அது இரண்டரை என்று காட்டியது.
ரோஷன் தொட்டிலில் நல்ல உறக்கத்தில் இருந்தான். மெல்ல எழுந்து அறையை விட்டு வெளியே வந்து அறை கதவை லேசாக மூடினாள்.
மாடிப்படி அருகில் சென்று விளக்கைப் போட்டவள் படிகளில் வேகமாக இறங்க செண்பகம் தூக்கக் கலக்கத்துடன் ஹாலில் நிற்பது தெரிந்தது.
கவிதா இறங்கி வருவதைப் பார்த்து “நீங்களும் எந்திரிச்சுட்டீங்களா கா? நான் லைட்ட போட்டு இப்போ தான் வெளில வந்தேன். பெரிய சத்தமாக் கேட்டுதுல்ல?” என்று கேட்டபடியே டைனிங் ஹாலிற்குள் சென்று விளக்கைப் போட்டு அதையடுத்திருந்த சமையலறையுள் நுழைந்தாள்.
“ஆமா செண்பா… தூக்கம் கலஞ்சுடுச்சு. அதான் எந்திரிச்சு வந்துட்டேன்”
இரவு செண்பகம் சின்க் அருகில் கழுவி கவிழ்த்து வைத்திருந்த பாத்திரங்கள் அனைத்தும் கீழே உருண்டுக் கிடந்தன.
“எல்லாப் பாத்திரமும் எப்படிக் கீழ விழுந்துது?” அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து மீண்டும் சின்க் அருகில் வைக்காமல் அதனதன் இடத்தில் வைக்க ஆரம்பித்தாள்.
கவிதாவும் அவளுக்கு உதவியாய் பாத்திரங்களை எடுத்து வைக்க ஜன்னல் அருகே நிழலாடுவது தெரிந்து வேகமாக அருகில் சென்று “யாரு?” என்று சற்று உறக்கவே கேட்டாள்.
“நான் தான் கவிதா மா… செல்வம்…” கையில் இருந்த டார்ச்சின் ஒளியைத் தன் முகத்திற்கு நேராகப் பிடித்துக் காட்டினான் செல்வம்.
“என்ன செல்வம் அண்ணா இந்த நேரத்துல? சத்தம் கேட்டு வந்தீங்களா?”
“இல்ல மா… ஒரு பூனை கேட்டுலேருந்து என் மேல குதிச்சுது. அது இந்தப் பக்கம் ஓடி வந்துது. அதத் தொரத்திட்டு வந்தேன். அது தான் ஜன்னல் வழியா குதிச்சுப் பாத்திரத்தைத் தள்ளி விட்டுருக்கும் போல… இங்க எங்கயும் காணும் மா”
“ஒஹ்ஹ் பூனையா? இனி நைட்ல இந்த ஜன்னல் கதவச் சாத்தி வெக்குறேன் கவிதா கா. மீதி பாத்திரத்த நான் எடுத்து வெச்சுக்குறேன். நீங்க போய்ப் படுங்க”
“இங்க ஒண்ணும் காணும் மா. நான் முன்னாடி போறேன” என்று கூறி நடக்க ஆரம்பித்தான் செல்வம். இதற்கு மேல் அங்கு நின்றும் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதால் “சரி செண்பா… நான் போய்ப் படுக்குறேன்” என்று கூறி மாடிக்கு வந்தாள் கவிதா.
மாடிப்படியின் விளக்கை அணைக்கப் போன சமயம் ரோஷனின் சிரிப்பொலிக் கேட்டது.’ஐயோ இவன் வேற முழிச்சுட்டானா? இனி தூங்குன மாதிரி தான்’தூக்கம் பறிபோனதன் சலிப்பு.
அறை கதவை மெல்லத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள். ரோஷன் தொட்டிலில் அமர்ந்து கதவை பார்த்துக் கை தட்டி சிரித்துக் கொண்டிருந்தான்.
“டேய்… என்ன விளையாட்டு இது?” இன்னும் பெரிதாகச் சிரித்துத் தன் கையால் முகத்தை மூடிக் கொண்டான்.
“வர வர உன் சேட்ட தாங்க முடியல… இப்போ யாரு உன்ன முழிக்கச் சொன்னா?” அவனைத் தூக்கிக் கொண்டாள்.
அவள் கன்னத்தைக் கடித்தவன் அவள் கழுத்தைச் சுற்றிக் கைப் போட்டு இறுக அணைத்துக் கொண்டான். “என்னடா செல்லம் ஆச்சு… தூங்குறீங்களா?” அவளை நிமிர்ந்துப் பார்த்து விட்டு மீண்டும் அவள் தோள் வளைவில் தலையை வைத்து அவளைப் பிடித்துக் கொண்டான்.
“ஹ்ம்ம்… அப்போ தூங்க மாட்டீங்க… அப்படித் தான?” அவளை விட்டு கீழே இறங்கினான் ரோஷன்.
வேகமாகத் தவழ்ந்துச் சென்று தொட்டிலின் அருகில் இருந்த அவனுடைய பொம்மைகள் அடங்கிய அட்டைப் பெட்டியை இரு முறை அடித்து, திரும்பி “ம்மா… ஊ” என்று அந்த அட்டைப் பெட்டியை கைக் காட்டினான்.
“டேய் ராத்திரி ரெண்டே முக்கால் மணிக்கு விளையாடணுமா உனக்கு?” கேள்வி கேட்டாலும் ஒன்றிரண்டு பொம்மைகளை எடுத்து அவன் கையில் கொடுத்து அருகில் அமர்ந்தாள் கவிதா.
ரோஷன் கையில் பொம்மையை எடுத்துத் தீவிரமாக ஏதேதோ கதை கூற “இதுவாடா செல்லம்… அச்சச்சோ…” என்று அவளும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
இடையில் தன்னுடைய தண்ணீர் பாட்டிலை கை காட்டி “ம்மா…” என்றான். “தண்ணி வேணுமாடி செல்லம்?” பாட்டிலில் இருந்த நீரை புகட்டினாள். அதைக் குடித்து விட்டு மீண்டும் கதை சொல்ல ஆரம்பித்தான்.
இப்படியே பேசிப் பேசி அவளுக்குத் தூக்கம் வந்தது. எழுந்துச் சென்று கைபேசியில் மணியைப் பார்த்தாள். “ரோஷன் குட்டி… மணி நாலே கால் ஆச்சுடா. அப்பப்போ தண்ணி குடிச்சுட்டு நீ தெம்பா பேசுற. என்னால முடியலடா செல்லம். ப்ளீஸ்டா குட்டி… வாங்கத் தூங்கலாம்” அவன் கையில் இருந்த பொம்மையை வாங்கி வைத்துவிட்டு அவனைத் தூக்கி வந்து கட்டிலில் தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவனின் பேச்சும் குறைந்து மெல்ல உறங்கத் துவங்கினான்.’அது எப்படிடா நைட்ல இப்படி முழிக்குற நீ…’இவ்வளவு நேரம் தன் மகனின் மழலையைக் கேட்டு ரசித்தவள் அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுப் படுத்த நேரம் கைபேசியில் மெசேஜ் டோன் கேட்டது. இந்நேரத்தில் யாராக இருக்கும் என்று எடுத்துப் பார்த்தாள்.
கார்த்திக் “குட் நைட் கவி. ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று அனுப்பியிருந்தான்.’அப்பாவுக்கும் புள்ளைக்கும் வேற வேலையே இல்ல. இன்னும் ஒரு மணி நேரத்துல எந்திரிக்கப் போறேன்… இப்போ வந்து குட் நைட் சொல்லுறதப் பாரு…’
“பேசாம படுத்து தூங்குங்க கார்த்திக்” என்று பதில் அனுப்பிவிட்டு கைபேசியைத் தலையணைக்கு அடியில் வைத்தாள்.
அடுத்த நொடி அது ஒலிக்கவே எடுத்துப் பார்த்தாள். கார்த்திக் அழைத்திருந்தான். அருகில் உறங்கும் ரோஷனை ஒரு முறைப் பார்த்தவள்’இவ்வளவு நேரம் இவன்கூடப் போராடித் தூங்க வெச்சேன்… இப்போ இவன் அப்பாவ சமாளிக்கணுமா…’என்று எண்ணமிட்டபடியே அழைப்பை ஏற்றாள்.
“என்ன கவி பண்ணுற?”
“மணி என்ன ஆகுதுத் தெரியுமா?”
“அதான் இந்நேரத்துல தூங்காம என்ன பண்ணுறன்னுக் கேட்டேன்”
“இவ்வளவு நேரம் ரோஷன் கூடப் போராடி இப்போ தான் அவனைத் தூங்க வெச்சேன்…”
“அப்பறம் நீ தூங்கலையா?”
‘நான் என்ன சொல்லுறேன்… இவங்க என்ன கேக்குறாங்க…’
“இப்போ நான் தூங்க மாட்டேன்”
“அப்பறம் கவி…”
‘நம்ம பேசுறதெல்லாம் இவங்க காதுல விழுதா இல்லையா?’கையிலிருந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள்.
“கார்த்திக்… என்ன ஆச்சு உங்களுக்கு? இப்போ… எத்…”
“ஏதாவது பேசேன் கவி… எப்பயும் நான் பேசுறதக் கேட்கவே மாட்டேங்குறீங்கன்னு சண்டப் போடுறல்ல…”
“ஹைய்ய்ய்யய்யோ…” என்று சிணுங்கி மெத்தையில் எழுந்தமர்ந்தவள் “அது எப்படிங்க… அர்த்த ராத்திரில தான் உங்களுக்கு என் மேல பாசம் காதல் எல்லாம் பொங்கி வழியுமா? ஏன்… இதுவே கொஞ்சம் பகல்ல நான் ஏதாவது விஷயம் சொல்ல வரப்போ பொங்குனா தான் என்னவாம்… மணிப் பாருங்க கார்த்திக்” என்றாள்.
“போ கவி… அதெல்லாம் எப்பயும் உன் மேல இருக்க லவ் எல்லாம் குறையாது… சரி நீ பேசலன்னா என்ன? நான் இங்க நடந்தத சொல்லுறேன்…”
அன்று காலையில் நடந்த ஒரு மீட்டிங் குறித்து அவன் கூற கவிதா ஒரு நீண்டப் பெருமூச்சை இழுத்துவிட்டுத் தலையில் கை வைத்து அமர்ந்துக் கேட்டாள்.
என்ன தான் தூங்க விடாமல் பேசுகிறானே என்றிருந்தாலும் சிறிது நேரத்தில் கணவனின் உற்சாகத்தில் மெய்மறந்து தானும் அவன் பேச்சில் கலந்துக் கொண்டாள்.
முதலில் மீட்டிங் என்று ஆரம்பித்தது, பின் வீடு, ரோஷன், சீத்து மாமி, ராஜேஷ்-மீனா, டைரி, தங்களின் திருமண வாழ்க்கை என்று நீண்டு கொண்டே போனது அவர்களின் உரையாடல்.
லேசாகக் கதவு தட்டப்படும் ஒலியில் எழுந்துச் சென்று கதவை திறந்துப் பார்த்தாள் கவிதா.
“முழிச்சு தான் இருக்கீங்களா கா? எப்பயும் ஆறு மணிக்கே கீழ வந்துடுவீங்களே… இன்னைக்கு ஏழாகப் போகுது இன்னும் வரலயே ஒடம்பு ஏதும் சரி இல்லையோன்னுப் பார்க்க வந்தேன்” என்று கூறிக் கீழே சென்றாள் செண்பகம்.
வேகமாக மணியைப் பார்த்த கவிதா “கார்த்திக் மணி ஏழாகப் போகுது. இவ்வளவு நேரமாவா பேசுனோம்? அச்சோ… நான் வெக்குறேன் கார்த்திக்” என்று படப்படத்தாள்.
“என்னைக்கோ ஒரு நாள் தான பேசுறோம்? விடு கவி. ஐ அம் சோ ஹாப்பி. பை”
மொபைலை மெத்தையில் வைத்து குளியலறைக்குள் நுழைந்தாள்.
“மீனா லேட் ஆகுது? சீக்கிரம்… என்ன பண்ணுற?” டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த ராஜேஷ் கத்த பதட்டத்தில் மீனாவின் கைப் பட்டுச் சாம்பாரில் இருந்த கரண்டிக் கீழே விழுந்தது.
“நீங்க போங்க மீனாம்மா… வேற கரண்டிக் குடுக்குறேன் இருங்க…” என்று கூறி அவள் கையில் தோசையையும் சாம்பாரையும் கொடுத்து அனுப்பினார் காமாட்சி.
“அப்படி என்ன அவசரம்? காலையிலிருந்து எதுக்கு என் பேர இப்படி ஏலம் விட்டுட்டு இருக்கீங்க?” அவன் தட்டில் இரண்டு தோசைகளை வைத்து சாம்பாரை ஊற்றினாள்.
“மனுஷன் அவசரம் புரியாம… போ… என் பேக் மேல ரூம்ல இருக்கு… அத எடுத்துட்டு வா. கார் கீ எடுத்து வை”
“இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல…” என்று முனகியபடியே அவன் கூறியதனைத்தையும் செய்து முடித்தாள். கை கழுவி வெளியே வந்தவன் ஷூ மாட்டி “தான்க் யூ சோ மச் மீனு…” என்று கூறி அவளை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு “பை” என்று கூறி வெளியேறினான்.
வீட்டில் புயல் அடித்து ஓய்ந்ததாக உணர்ந்தாள் மீனா. பொத்தென்று சோபாவில் சரிந்து கண்களை மூடினாள்.’ஒரு ரெண்டு மணி நேரத்துல என்ன பாடு படுத்தி எடுத்துட்டாங்க…’
பத்து நிமிடங்களில் எழுந்து காலை வேலைகளை முடித்து டைரியை எடுத்தாள்.
கௌதம என்னால புரிஞ்சுக்கவே முடியல. நேத்து தான் படிப்பு ரொம்ப முக்கியம். ஒழுங்கா படின்னு அவ்வளவு பேசுனான். சரி அடுத்த செமஸ்டருக்கு என்ன புக்ஸ் தேவைன்னுக் கேட்க அவன் வீட்டுக்கு இன்னைக்கு ஜென்னியோட போனேன்.
ஜென்னி… அவளப் பத்தி நான் எழுதியே ரொம்ப நாள் ஆச்சு. காதல் வந்தா சுத்தி இருக்க யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க போல.
அவ எங்களுக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கா… நான் கௌதம் கூடப் பேச ஆரம்பிச்சதுக்குக் காரணமே அவ தான…
கௌதம் வீட்டுல என்னை விட அவ தான் செல்லப் பிள்ளை. அவங்க வீட்டுக்குப் போனதுலேருந்து ஆன்ட்டி கூடயே தான் சுத்திட்டு இருப்பா. அதுவும் ஒரு விதத்துல எங்களுக்குத் தனியா உட்கார்ந்துப் பேசுறதுக்கு வசதியா தான் இருந்துது.
கௌதம் கூடச் சேர்ந்து உட்கார்ந்து அவங்க வீட்டுல எத்தன படம் பார்த்திருப்பேன் தெரியுமா? சில சமயம் ஏதாவது ஒரு படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீ எங்க வீட்டுக்கு வா. நம்ம சேர்ந்து உட்கார்ந்துப் பார்ப்போம்னு சொல்லியே என்னை அவங்க வீட்டுக்குக் கூப்பிடுவான். ஜென்னிய கூட்டிட்டு நானும் கிளம்பிப் போயிருக்கேன்.
இன்னைக்கு அவங்க வீட்டுக்குப் போனதும் ஜென்னி நான் சமைக்கப் போறேன்னு சொன்னா. எனக்கு அடி வயறு கலக்க ஆரம்பிச்சுடுச்சு. இவ என்னைக்குமே கிச்சன் பக்கம் போன மாதிரி சொன்னதே இல்லையே…
ஆனா கௌதம் “இன்னைக்கு என் தங்கச்சி கையால சாப்பிடப் போறேன். உனக்கு என்ன வேணுமோ சொல்லு… நான் வாங்கிட்டு வந்து தரேன்” னு சொன்னான். அவ குடுத்த பெரிய லிஸ்ட வாங்கிட்டுப் போய் ஏதேதோ வாங்கிட்டும் வந்தான்.
நான் ஜென்னிய சந்தேகமாவே பார்த்துட்டு இருந்தேன். ஹால்ல உட்காரப் போன என் கையப் பிடிச்சு இழுத்துட்டு அவனோட ரூமுக்குப் போனான்.
“சொல்லு ரேணு” னு அவன் சொன்னதும் அடுத்த செம்முக்கு என்னென்ன புக்ஸ் ரெபர் பண்ணணும்னுக் கேட்டேன்.
“அய்யய்யே… இதுக்குத் தான் ஸ்கூல் பர்ஸ்ட் வந்த பொண்ண எல்லாம் லவ் பண்ணக் கூடாது… எப்பப் பாரு படிப்பு, புக்ஸ், எக்ஸாம்… ஏன் ரேணு இப்படி இருக்க?” னு கேட்டு அவனோட பெட்ல உட்கார்ந்தான்.
“அட பாவி… நேத்து அவ்வளவு நேரம் அட்வைஸ் பண்ண… இப்போ இப்படிப் பேசுற?” னுக் கேட்டேன். “அது நேத்து. உனக்கு என்னமோ படிக்குற வேலையே இல்ல… என்னை லவ் பண்ணுற வேலை மட்டும் தான் னு நீ சொன்னப்போ ஒழுங்கா படிக்கச் சொன்னேன்… அதுக்காக என்னை லவ் பண்ண வேண்டாம்னு அர்த்தம் இல்ல மா… நான் பாவம் இல்ல… என்னையும் கொஞ்சம் கவனி ரேணு…” னு கண்ண சுருக்கிக் கெஞ்சுனான்.
“இது சரி வராது” னு சொல்லிட்டு நான் வெளிலப் போகத் திரும்புன நேரம் அவன் எழுந்து வந்து என் கைய பிடிச்சு இழுத்து என் இடுப்ப சுத்தி கை போட்டு பிடிச்சு நின்னான்.
“விடு கௌதம். ஆன்ட்டி வந்துடுவாங்க…” னு நான் நெளிஞ்சேன். “அதெல்லாம் வர மாட்டாங்க… அதுக்குத் தான என் தங்கச்சி இருக்கா” னு சொன்னான்.
நான் புரியாமப் பார்த்தேன். “இந்த அண்ணனுக்கு உன் கையால சமச்சுக் குடுக்க மாட்டியா ஜென்னி? னு நேத்துக் கேட்டேன். அவளும் இன்னைக்கு வீட்டுக்கு வரப்போ கண்டிப்பா செஞ்சுத் தரேன்னு சொன்னா. ஆனா எனக்கு ஒண்ணும் தெரியாதேன்னு அவ சொன்னப்போ எங்க அம்மாட்ட கேளு சொல்லித் தருவாங்கன்னு சொன்னேன். இப்போதைக்கு ரெண்டு பேரும் கிச்சன் விட்டு நகர மாட்டாங்க…” னு சொன்னான்.
என்னமா ப்ளான் பண்ணுறான்…”இப்படி முட்டக் கண்ண உருட்டி உருட்டிப் பார்த்தா என்ன அர்த்தம்? இதுவரைக்கும் நான் உனக்கு எத்தன கிஸ் குடுத்திருக்கேன்? நீ அன்னைக்கு ஒரு கிஸ் குடுத்துட்டு ஓடிப் போனதோட சரி… அதுக்கப்பறம் என்னைக்காவது நீயா எனக்கு கிஸ் குடுத்திருக்கியா ரேணு… ப்ளீஸ்டி ஒண்ணே ஒண்ணு…” னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டான்.
ஐயோ இப்போ இவன்கிட்டேருந்து எப்படித் தப்பிக்குறதுன்னு யோசிச்சேன். எந்த ஐடியாவும் தோணல…
“ப்ளீஸ் ப்ளீஸ்” னு சொல்லி என் தாடையைப் பிடிச்சு கெஞ்ச ஆரம்பிச்சான். எனக்கும் அவனப் பார்த்தா பாவமா இருந்துது. எப்படியோ மனச திடப்படுத்தி ஒரு கிஸ் குடுத்தேன்.
ஆனா அதுக்கப்பறம் கௌதமும் குடுத்தான்… ஒரு கிஸ் தான்… அது எத்தன நிமிஷம் நீடிச்சுதுன்னு தான் தெரியல… ஜென்னியோட பேச்சுக் குரல் கேட்டு மனசே இல்லாம என்ன விட்டு விலகி நின்னான்.
ஜென்னி உண்மைல இவ்வளவு நல்லா சமைப்பான்னு நான் நினைக்கல… எப்படியும் ஆன்ட்டி தான் எல்லாம் செஞ்சிருப்பாங்க… இருந்தாலும் அவ ட்ரை பண்ணதே பெரிய விஷயம் தான்.
அத கௌதம் பயங்கரமா புகழ்ந்துத் தள்ளுனது தான் எனக்குச் சிரிப்புத் தாங்கல… நானும் ஆன்ட்டியும் அவளுக்குத் தெரியாம ஒருத்தர ஒருத்தர் பார்த்து சிரிச்சுக்கிட்டோம்.
இன்னைக்கு கௌதம் வீட்டுலேருந்துக் கிளம்பும்போது எப்போடா இந்த வீட்டுலயே வந்து இருக்கப் போறேன்னு இருந்துது.
வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் கௌதம் கால் பண்ணான். அவன் கூட இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தேன். கடைசி வரைக்கும் அடுத்த செம்முக்கு என்ன புக்ஸ் ரெபர் பண்ணணும்னு அவனும் சொல்லல… அதுக்கப்பறம் நானும் கேக்கல…
-ரேணு
டைரியை மூடி வைத்த மீனா கவிதாவிற்கு கால் செய்தாள்.
“நைட் எல்லாம் தூங்கவே இல்ல மீனா”
“கவி… பேசாம நாளைக்கு ரோஷன் இங்க தூக்கிட்டு வந்துடறேன். நீ ரெஸ்ட் எடு. நாளைக்கு ராஜேஷும் ப்ரீ தான். அவங்களையும் வீட்டுல இருக்கச் சொல்லுறேன். ரோஷன் தூக்கிட்டு வரேன்னு சொன்னா அவங்களே ஆபீஸ் போகாம வீட்டுல இருந்திடுவாங்க”
“வேண்டாம் மீனா… பார்த்துக்க முடியாது” என்றவளை கெஞ்சி மிரட்டி சம்மதிக்க வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!