Poi Poottu final

Poi Poottu final

 31
கல்யாண மண்டபத்தில் கார்த்திக்கும் ராஜேஷும் ஆளுக்கொரு மூலையில் அலைந்துக் கொண்டிருந்தனர். வந்தவர்களை வரவேற்று, உபசரித்து, மற்ற ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு என்று இருவருமே ஓட வேண்டியிருந்தது.
“கார்த்திக்… டேய்… நான் பொண்ண பெத்தவன். நிக்க நேரம் இல்லாம வேலை பாக்குறேன். நீ ஏன்டா இப்படி ஓடிக்கிட்டு இருக்க? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா…”
“போடா… நீ பொண்ண பெத்தா என்ன? எங்க வீட்டுக்கு வரப் போற பொண்ணு தான? இங்க ஏதாவது குளறுபடி நடந்துது… அவ்வளவு தான். ரோஷன் என்னைக் கொன்னுடுவான். அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ போய் அவன் ரெடி ஆகிட்டானான்னு பாரு போ” திரும்பி மேடை அலங்கரிப்பவரிடம் பேச ஆரம்பித்தான்.
“நான் போய்ப் பாக்கவா? ஏன்? நீ இப்போ அவன் ரூம்லேருந்து தான வர? அப்பறம்…” புருவத்தைச் சுருக்கியவன் சட்டென்று நிமிர்ந்து “டேய்… என்னைக் கோர்த்து விட்டு வந்திருக்க நீ. மரியாதையா சொல்லு… என்ன கேட்டான் உன் பையன்?” என்றான்.
“ம்ம்கும்… என் பையன்? பேருக்கு தான்டா அவன் என் பையன். ஆனா எல்லாத்தையும் உன்கிட்ட தான கேட்குறான்” தான் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில விவரங்களைச் சொல்லி அவரை அனுப்பி வைத்தான் கார்த்திக்.
“ஆமா… இங்க மட்டும் என்ன வாழுதாம்? என் பொண்ணு ரீமா உன்கிட்டயும் கவிகிட்டயும் கேட்கல? அப்படித் தான் இதுவும். இப்போ ரோஷனுக்கு என்ன வேணுமாம்? அத மட்டும் சொல்லு”
“நீயே வந்து கேளு வா” அவன் கையைப் பிடித்து மணமகன் அறைக்கு அழைத்துச் சென்று உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டான்.
“என்னடா?” என்று ரோஷனிடம் கேட்டான் ராஜேஷ்.
அவன் எதிரில் வந்து நின்று அவன் வயிற்றருகில் சட்டையைப் புடித்து ஆட்டியபடியே “ராஜ்… நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்…” என்றான் ரோஷன். ராஜேஷ் திரும்பி கார்த்திக்கை பார்த்தான்.
அவன் தோளைக் குலுக்கி “எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல” என்றான்.
“அதான… சிக்க மாட்டியே நீ… ஹ்ம்ம்… சொல்லு ரோஷன்”
“ராஜ்… எனக்கு ரீமாவ பாக்கணும் ராஜ்”
“என்னது? ரீமாவ பாக்கணுமா? டேய் இன்னும் அரை மணி நேரத்துல முகூர்த்தம். இப்ப கூட உன்ன டிரஸ் மாத்திட்டு வர சொல்லி தான் ஐயர் உள்ள அனுப்பி இருக்காரு. இப்ப வந்து ரீமாவ பாக்கணும்னா என்ன அர்த்தம்?
கார்த்திக் இதுக்குத் தான் என்ன இங்க கூட்டிட்டு வந்தியா? ஏன்டா இப்படிப் பண்ணுற? உன் பையன சமாளிக்க எப்ப தான் கத்துக்கப் போறியோ? ரோஷன்… டேய் ரோஷன் என்ன நிமிர்ந்து பாரு… என் சட்டைய விடுடா முதல்ல… கிழிச்சு வெச்சுடாத”
“ஏன் ராஜ் இவ்வளவு டென்ஷன் ஆகுற? பொண்ண பெத்தவன்கிட்ட தான பொண்ண பாக்கணும்னு சொல்ல முடியும்? நீ உன் பொண்ண என் கண்ணுலையே காட்ட மாட்டேங்குற… போ இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”
இவ்வளவு நேரம் அறையின் மூலையில் கையைக் கட்டி அமைதியாக இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக் “அப்பாடா… ரீமா தப்பிச்சா ராஜேஷ்… வா நம்ம போய் வேற நல்ல மாப்பிள்ளையா பார்ப்போம்” என்று கூறி ராஜேஷின் கையைப் பிடித்து இழுத்தான்.
“டேய் அப்பாவும் பையனும் சேர்ந்து ஏன்டா எனக்குப் பைத்தியம் பிடிக்க வெக்குறீங்க? ரோஷன் என் சட்டைய விடுடா… கார்த்திக் கைய விடு முதல்ல… ரெண்டு பேரும் எதுக்கு என்னை ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்குறீங்க…”
வேகமாகச் சட்டை கையை மடித்து விட்டபடியே “சரி ராஜ்… நான் போய் மீனாகிட்ட கேக்குறேன்… எனக்கு உங்க பொண்ண பாக்கணும்னு…” என்றான் ரோஷன்.
“டேய் டேய் டேய்… இப்போ ஏன்டா அவக்கிட்ட பேசப் போற? அவ வாயத் தொறந்தா உனக்குப் பேரன் பேத்தி பொறக்குற வர மூட மாட்டாடா. நானே அவளுக்குப் பயந்து தான் உன் அப்பாகூடச் சுத்திக்கிட்டு இருக்கேன். வேணாம்டா செல்லம்”
“முதல்ல கன்னத்துலேந்து கைய எடு ராஜ்… எப்போ பாரு… நான் என்ன சின்னக் குழந்தையா? கன்னத்த புடிச்சு கிள்ளிக்கிட்டே இருக்க? மீனாகிட்ட இப்ப நீ சொன்னதையும் சேர்த்து சொல்லிடுறேன்” என்று கூறி இரண்டு அடி எடுத்து வைத்தான் ரோஷன்.
“என் சட்டைய புடிச்சு ஆட்டுனப்ப தெரிலையா? நீ இன்னும் வளரவே இல்லன்னு… நீ குழந்தையா இருந்தப்போ எல்லாரையும் கிள்ளுன. இப்போ நான் உன்ன கிள்ளக் கூடாதா? அடங்க மாட்டியாடா நீ? வேணும்னா கவிகிட்ட போய்க் கேளு போ…”
“என்னது? ரோஷன் கவி பேரையே சொல்லலையேடா… அப்பறம் எதுக்கு அவனுக்குத் தப்பு தப்பா ஐடியா குடுக்கற? ரோஷன்… பொண்ண பாக்கணும்னா பொண்ண பெத்தவங்கள்ட தான் கேக்கணும். நீ இவங்க ரெண்டு பேருக்கிட்டயே கேட்டுக்கோ” என்றான் கார்த்திக்.
“ம்ம்… இப்போ தெரியுதா? நீ மட்டும் அலறுற? எனக்கும் அப்படித் தான இருக்கும்?” என்று அவனிடம் கூறிய ராஜேஷ் ரோஷனிடம் திரும்பி “இன்னும் அரை மணி நேரத்துல தாலி கட்டி ஆயுசு பூரா பார்த்துக்கோப்பா… இப்போ முடியாது. சும்மா ஏழரைய கூட்டாம இங்க வா நீ… தல கலஞ்சு இப்படியா திரியுவ? மாப்பிள்ளைன்னா எப்படிச் சீனா இருக்கணும்…” டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் அழைத்துச் சென்று அவன் தலையைச் சீவி விட்டான்.
“ம்ம்ச்ச்… உனக்குச் சீவவே தெரியல ராஜ்… இங்க குடு” சீப்பை வாங்கி விசில் அடித்துக் கொண்டே முடியை சீவினான் ரோஷன்.
“பாத்தியா? இதுக்குத் தான் சொல்லுறது… அவன உன்னால தான் சமாளிக்க முடியும்னு…” என்று ராஜேஷின் காதை கடித்தான் கார்த்திக்.
அவன் ஏதோ சொல்ல வாய் திறந்தபோது பெண்ணின் பெற்றோரை மணமேடையில் அழைப்பதாக ஒருவர் வந்து கூறினார்.
“தப்பிச்சேன்டா சாமி… இனி நீயாச்சு உன் பையனாச்சு” வேகமாக அறையிலிருந்து வெளியேறினான் ராஜேஷ்.
“பா…” என்று கத்தி வேகமாக ரோஷன் திரும்பவும் தூக்கிவாரிப் போட நெஞ்சில் கை வைத்து “ஏன்டா இப்படிக் கத்துற?” என்றான் கார்த்திக்.
“கல்யாணத்தன்னைக்கு அம்மாவ திருட்டுத்தனமா மீட் பண்ணேன்னு சொன்னியே பா… எப்படி மீட் பண்ண?” தந்தையின் தோளில் கை போட்டு சுற்றிப் பிடித்தான்.
“ஆள விடு” தோளைக் குலுக்கி அவன் கையைத் தட்டி விட்ட கார்த்திக் “எதுக்கு உங்கம்மா நான் தான் ஐடியா குடுத்தேன்னு கண்டுப்பிடிச்சு என்னைத் தேடி வரதுக்கா?” என்றான்.
“உஷாரா தான்பா இருக்கீங்க நீயும் ராஜும்… ஒரு சின்னப் பையன இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தக் கூடாது”
சந்தனத்தைக் குழைத்து எடுத்து வந்த கார்த்திக் “பேசாம இரேன்டா… உன்ன வெச்சு சமாளிக்க முடியலபா…” என்று கூறி மகனின் நெற்றியில் ஒரு சிறிய கீற்றுச் சந்தனத்தை வைத்தான்.
மணமகள் அறையில் ரீமா அமைதியாக அமர்ந்திருந்தாள். “நேரா பாருடி… எத்தன தடவ சொல்லுறது? உனக்கு மேக் அப் பண்ணுற இவங்க பாவம்ல…” அவளுக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்த பெண்ணைக் கை காட்டிக் கூறினாள் மீனா.
“ஏய் உன்ன யாரு இங்க வர சொன்னா? அங்க வெளில பொண்ணோட அம்மாவ கூப்பிடுறாங்களாம் பே…” மீனாவை நகற்றி அந்த இடத்தில் ரீமாவின் அருகில் நின்றாள் கவிதா.
“வந்துடுவியே உடனே… அவங்களும் எவ்வளவு நேரமா அவ கண்ணுல காஜல் போட ட்ரை பண்ணுறாங்க… பாவம் கவி அவங்க… இவ இப்படிப் பண்ணா?”
“நீங்க இந்தப் பால குடிங்க. ரெண்டு நிமிஷம் நான் அவ கூடப் பேசுறேன்” ஒப்பனை செய்யும் பெண்ணின் கையில் பாலைக் கொடுத்து அவரைக் கட்டிலில் அமர வைத்து டிரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்திருந்த ரீமாவின் அருகில் குனிந்து “என்னடா?” என்று கேட்டாள்.
அவளை நிமிர்ந்துப் பார்த்த ரீமா “பயமா இருக்கு கவிமா” என்றாள்.
“லூசு மாதிரி பேசாத ரீமா… என்னடி பயம் உனக்கு? ரோஷன பிடிச்சு தான கல்யாணம் பண்ணிக்குற? கவி வீடே கதின்னு இருந்துட்டு இப்போ அவங்க வீட்டுக்குப் போகப் பயமா இருக்கா? உனக்கே…” பொரிந்துத் தள்ள ஆரம்பித்த்தாள் மீனா.
“மீனா… உன்ன வெளில கூப்பிடுறாங்கன்னு சொன்னேன்ல… நீ போ முதல்ல…”
“ம்ம்கும்… என் பொண்ண திட்டுறதுக்குக் கூட எனக்கு உரிமை இல்லாம போச்சு” வாய்க்குள் முனகியபடி அமைதியாக நின்றாள்.
“என்னடா பயம் உனக்கு? நம்ம வீட்டுக்கு தான வரப் போற? நான் உன்ன பாத்துக்க மாட்டேனா? கார்த்திக்க மீறி ரோஷன் உன்ன ஏதாவது சொல்லிட முடியுமா? ரோஷனுக்கு நீன்னா உயிருடா…” அவள் தலை வருடினாள் கவிதா.
உடனே ரீமா அவள் இடையைச் சுற்றிக் கைப் போட்டு அவள் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் முடிஞ்சுடும்… இப்போ வந்து இப்படிக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”
“ம்ம்… அப்படியே ஒரு பிளாஷ்பாக் ஓட்டிப் பாரு… உன் கல்யாணத்தன்னைக்கு நீயும் இதே டயாலாக் சொல்லி என்னை இப்படித் தான் கட்டிப்பிடிச்சுட்டு இருந்த. என்ன… நீ ஓன்னு ஒப்பாரி வெச்ச. உன் பொண்ணு பரவாயில்லடி. அழாம இருக்கா. தாயைப் போலப் பிள்ளை”
“சரி சரி… பொண்ணோட அம்மாவ வெளிலக் கூப்பிடறாங்களாம்” வேகமாகக் கையில் ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் மீனா.
ரீமாவின் கன்னம் வருடி “அவ கெடக்குறா விடு… நீ சீக்கிரம் ரெடி ஆகுறியா?” என்று கேட்டாள். சரியென்று தலையாட்டி கவிதாவின் கழுத்தை சுற்றி கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“இத மட்டும் என் பையன் பாக்கணும்… எத்தன வாட்டி மா சொல்லுறது இந்தப் பழக்கத்த மாத்த சொல்லின்னு என்கிட்ட சண்டைக்கு வருவான்…” கவிதா வெளியே செல்ல ரீமாவிற்கு மீண்டும் ஒப்பனை செய்ய ஆரம்பித்தனர்.
“ரோஷன் ரெடியா? வா சீக்கிரம்…” அவன் கையைப் பிடித்து மணமேடைக்கு அழைத்துச் சென்றான் கார்த்திக்.
“அங்க ரீமா இருக்காளாபா?”
“முடியலடா டேய்… வருவாடா…” என்று கூறி அவனை அமர வைத்தான்.
மணமேடையில் அமர்ந்திருந்த ரோஷன் ரீமாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.’என் ரீமா… பொறந்ததுலேருந்து என் கூடவே தான் இருக்கா. அது என்னமோ அவளையும் அவங்க வீட்டையும் பிரிச்சுப் பாக்கத் தோணல…
எப்போ எந்த நிமிஷம் அவள லவ் பண்ண ஆரம்பிச்சோம்? தெரியல… ஆனா அவ இல்லாம ஒரு லைப் யோசிச்சு பார்க்கவே முடியாதுன்னு தோணுச்சே…
என் ரூம் பால்கனில அவ எதிர்ல நின்னு அவ ரெண்டு கையையும் புடிச்சு என் வாழ்க்க பூரா என் கூட இருப்பியான்னு கேட்டப்போ பின்ன வேற எங்க போகப் போறேன்னு கேட்டு சிரிச்சா… லூசு…
என் காதல சொன்னப்போ எப்படி நடுங்கினா? எதிர்ப்பார்க்கவே இல்ல… ஒரு நிமிஷம் வேற என்ன பண்ணணும்னு புரியாம முழிக்க வெச்சுட்டா… அப்பயும் அவளுக்கு ஆறுதலா இருக்கணும்னு மட்டும் தான தோணுச்சு.
நெஞ்சுல சாய்ச்சு தட்டி குடுத்தப்போ அவ சொன்னது… என்னையும் மீறி எவ்வளவு இறுக்கி அணைச்சேன்… அவள என் கைக்குள்ளயே வெச்சு பாத்துக்கணும்… எப்பயுமே…
ஆனாலும் இவக்கிட்ட லவ் பண்ணுறேன்னு சொல்லுறதுக்குள்ள நான் பட்ட பாடு… முடியலடா சாமி… எத்தன நாள் சொல்லணும்னு நெனச்சு… எத்தன தடவ ரிஹர்ஸல் பார்த்து… எத்தன வாட்டி சொல்ல வந்து சொதப்பிப் பேச்ச மாத்தி… ஆனா வீட்டுல சொன்னப்போ உடனே ஒத்துக்கிட்டாங்க… ரொம்ப நல்லவங்க….’
சிறிது நேரத்தில் ரீமா மணமேடையை நோக்கி வரவும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான் ரோஷன்.
அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவன் செய்வது தான்… எப்போதும் போல் இன்றும் “அது எப்படி ரெண்டு புருவத்தையும் மாத்தி மாத்தி தூக்கி கண் அடிக்குறானோ? முதல்ல இத கத்துக்கணும்…” என்றெண்ணியபடியே அவனருகில் வந்தமர்ந்தாள்.
‘இவன் எப்போ எனக்கு இவ்வளவு நெருக்கமானான்? அப்பா எவ்வளவு பிரண்ட்லியா இருந்தாலும் அது என்னமோ இவன்கிட்ட சொல்லி தான் எந்த ஒரு விஷயமும் வீட்டுல கேட்க தோணி இருக்கு. இவன் செஞ்ச ஒவ்வொரு விஷயமும் உனக்காக நான் எல்லாமே செய்வேன்னு சொல்லாம புரிய வெச்சுதே…
எத்தனையோ தடவ இவன் வீட்டுக்கு போயிருக்கோம்… இவன் ரூம்ல உக்காந்து பேசி சிரிச்சுச் சண்டை போட்டிருக்கோம்… ஆனா அன்னைக்கு… பால்கனில கைய பிடிச்சு என் வாழ்க்க பூரா என் கூட இருப்பியான்னு கேட்டப்போ ஏன் இவன் அப்படிக் கேக்குறான்னு புரியவே இல்ல.
பிரிஞ்சுப போறத பத்தி நான் என்னைக்கும் யோசிச்சதில்லயே… வேற எங்க போகப் போறேன்னு கேட்கும்போது சிரிப்பு தான் வந்துது.
ரீமா என் வாழ்க்க பூரா என்னோட சரி பாதியா என்கூடவே இருப்பியான்னு கேட்டானே… அப்பா… ஒரு நிமிஷம் சிலிர்த்து உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு.
உடனே நெஞ்சுல சாய்ச்சு ஒரு கையால தலைய வருடிட்டே முதுகுல தட்டிக் கொடுத்தான். என் நடுக்கம் குறைய என்ன செய்யணும்னு அவனுக்கு எப்படித் தெரிஞ்சுது?
அந்த நிமிஷம் எனக்கு அவனோட அந்த அணைப்பு ஆயுசுக்கும் வேணும்னு தோணுச்சே… எவ்வளவு பாதுகாப்பா உணர்ந்தேன். அத அவன்கிட்ட சொல்லவும் செஞ்சேன்.
சொன்னதும் ரெண்டு நிமிஷம் இறுக்கி கட்டிப்பிடிச்சு முகத்த நிமிர்த்தி நெத்தில கிஸ் பண்ணானே… அது போதும். உனக்காக என்னைக்குமே நான் இருக்கேன்னு உணர்த்தின முத்தம். நான் உன்ன பூ மாதிரி பார்த்துப்பேன்னு சொல்லாம சொன்ன முத்தம்’
மணமக்களுக்குப் பின்னால் நின்ற கார்த்திக், கவிதா, ராஜேஷ், மீனா நால்வரும் அவர்களையே தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“டேய் நிஜமா சொல்லு… என் பொண்ணு தான் ரேணுவா?”
“அதுல என்னண்ணா உங்களுக்கு டவுட்டு? அவ தான்”
“நான் தான் என் பையனே தேடி கண்டுப்பிடிச்சுடுவான்னு சொன்னேனேடா”
“அவன் எங்கண்ணா தேடி அலஞ்சான்? அதான் நாங்களே பெத்துக் குடுத்துட்டோமே?”
“வாய மூடுடி… என்னைக்குத் தான் நீ அமைதியா இருக்கேன்னு நானும் பாக்குறேன்”
“அவங்களாம் பேசுனப்ப ஒண்ணும் சொல்லல… ஏன் நீங்க பேசலாம்? நான் பேசக் கூடாதா?”
“நம்ம இவங்கக்கிட்ட எந்த உண்மையும் சொல்ல வேண்டாம்னு எடுத்த முடிவு சரின்னு எனக்கு இப்பயும் தோணுது”
“சொல்லி இருந்தா அவங்க இப்படிச் சந்தோஷமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணுற அளவுக்கு வந்திருக்க மாட்டாங்க கார்த்திக். நம்ம எடுத்த முடீவு சரி தான்டா…”
கெட்டி மேளம் முழங்க ரீமாவின் கழுத்தில் தாலி கட்டினான் ரோஷன். அவள் கை பிடித்து அக்கினியை வளம் வந்தபோது அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளருகில் குனிந்து “என்ன பாக்குற? அதான் சொன்னேன்ல… எத்தன ஜென்மம் ஆனாலும் தேடி வந்து தூக்கிட்டு போயாவது தாலி கட்டுவேன்னு…” என்றான் ரோஷன்.
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!