காலை எழுந்தது முதல் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் கவிதா. “செண்பா சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு ராஜேஷ் அண்ணாவும் மீனாவும் வராங்க. ரோஷன குளிப்பாட்டி தூங்க வெச்சுட்டு சமையல் வேலைய பாப்போம். அவங்க வந்துட்டா என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது. செல்வம் அண்ணாகிட்ட சிக்கன் மட்டும் வாங்கிட்டு வர சொல்லிடு” என்று கூறி அவள் கையில் காசைக் கொடுத்தாள்.
“அதெல்லாம் கவலையேப்படாதீங்க. முதல்ல போய் குட்டி பையனுக்கு டிரஸ் எடுத்துட்டு வாங்க. நான் ஹீட்டர் ஆன் பண்ணிட்டு செல்வம் அண்ணாவ கடைக்கு போக சொல்லுறேன்” கீழே இருந்த படுக்கையறைக்குள் சென்றாள் செண்பகம்.
கவிதா மாடியறைக்குச் சென்று கப்போர்டிலிருந்து உடைகளை எடுத்துத் திரும்பியபோது ரோஷனின் பொம்மைகள் கீழே இறைந்துக் கிடப்பதைக் கண்டாள்.’இவன் விளையாட்டு சாமான் எடுத்து வெச்சே பெண்டு கழலுது… எல்லாம் அவங்கப்பாவ சொல்லணும். எத்தன பொம்மை தான் வாங்கிக் குடுப்பாங்களோ?’
அலுப்பாக இருந்தது. அனைத்தையும் எடுத்து எப்போதும் வைக்கும் அட்டைப் பெட்டியில் வைத்து அதை ஓரமாக நகற்றி விட்டுக் கீழே வந்தாள்.
ரோஷனை உறங்க வைத்தவர்கள் அவனைச் சுற்றி தலையணைகளை அடுக்கி வைத்தார்கள்.
விருந்தினர் வந்தால் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்பதால் காய்கறிகள் நறுக்கி, செல்வம் வாங்கி வந்த சிக்கனை சுத்தம் செய்து மசாலா தடவி வைத்தாள் கவிதா. செண்பகம் சாதம் வடித்த சமயம் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
“அவங்க வந்துட்டாங்கன்னு நெனக்குறேன் செண்பகம். நான் போய் பாக்குறேன்” அவசரமாகக் கை கழுவி ஹாலிற்கு வந்தவள் “வாங்கண்ணா… வா மீனா…” என்று வரவேற்றாள்.
“எப்படிம்மா இருக்க?”
“என்னடி பண்ணுற தனியா?”
“நல்லா இருக்கேண்ணா” என்று ராஜேஷிடம் கூறிய கவிதா அருகில் வந்து தன்னை அணைத்த மீனாவிடம் மெதுவாக “மண்டக் காஞ்சுக்கிட்டு இருக்கேன்டி” என்றாள்.
“ஏம்மா உள்ள நுழஞ்சதும் ரகசியம் பேசணுமா? நீயும் இப்படி பண்ணுற பாத்தியாமா? இதுக்கு எதுக்குடி என்னை கூட்டிட்டு வந்த? நீ மட்டும் வந்திருக்க வேண்டியது தான?”
“ஏன்? நீங்க வர மாட்டீங்களா? உங்க பார்ட்னர தான இவ கூட இருக்க விடாம டெல்லி துரத்தி விட்டிருக்கீங்க?”
“அடிப்பாவி… நான் எங்க துரத்துனேன்? அவன்’நான் தான் போவேன்’னு அடம் புடிச்சா நான் என்ன பண்ணட்டும்?”
“நீ சொல்லு கவி… எல்லாம் ராஜேஷால வந்தது தான?”
“நானும் உன் இம்சையிலேருந்து கொஞ்ச நாள் தப்பிக்கலாம்னு பாத்தா அவன் எங்க விடுறான்…” பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தான் ராஜேஷ்.
“ஏன்டி… வந்ததுலேருந்து நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருக்கோம். நீ வாயே தொறக்க மாட்டேங்குற? சொல்லு… நீ யாருக்கு சப்போர்ட் பண்ணுற? எனக்கா? இல்ல உன் அண்ணாவுக்கா?”
“ராஜேஷ் அண்ணா என் ஹஸ்பண்டோட பிரண்ட். நீ என் பிரெண்ட். இதுல நான் யாருக்குன்னு சப்போர்ட் பண்ணட்டும்?”
“அவ உன் வாய கிளற பாக்குறா கவிதா. அவளுக்கு எப்ப பாரு நீ எனக்கு சப்போர்ட் பண்ணி அவளுக்கே அட்வைஸ் பண்ணுறன்னு காண்டு. அதான்” சோபாவின் மீதிருந்த ஒரு வார இதழை கையில் எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.
“பொண்டாட்டிய யாருக்கும் விட்டுக் குடுக்கக் கூடாதுன்னு கொஞ்சமாவது தோணுதா பாரு… நீ வந்து உக்காரு கவி” அவள் கையைப் பிடித்து அழைத்து வந்து அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் தன் அருகில் அமர்த்திக் கொண்டாள் மீனா.
“ரோஷன் எங்கம்மா?”
“கீழ ரூம்ல தான் தூங்குறாண்ணா…” பத்திரிக்கையைக் கீழே வைத்துவிட்டு எழுந்தான்.
“ஆரம்பிச்சுட்டா… சரி நான் போய் அவன் கூட விளையாடுறேன். எப்படியும் நீங்க பேச ஆரம்பிச்சா என்னக் கண்டுக்க மாட்டீங்க”
“என்ன மீனா சின்னபுள்ள மாதிரி?”
வேகமாக திரும்பி கணவன் அறையினுள் சென்றுவிட்டதை உறுதி செய்துக் கொண்டவள் “போயிட்டாங்களா… அப்பாடா… அடியேய் உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம கூட படிச்சாளே திவ்யா… அவளுக்கு கல்யாணம்டி…” என்றாள்.
“இத சொல்ல தான் அண்ணாவ இங்கேருந்து கிளப்பி விட்டியா?”
ரோஷன் இரு கைகளையும் தட்டி சிரிக்கவும் “பத்தியா குழந்தைக்கு கூட தெரிஞ்சிருக்கு நீ காமடி பீஸ்னு. எப்படி சிரிக்குறான் பாரு” என்றான் ராஜேஷ்.
“ம்ம்… அப்போ இவ்வளவு நேரம் உங்கள பாத்து சிரிச்சானே… அது? நீ முதல்ல இவனுக்கு கொண்டு வா கவி”
கவிதா வெளியே சென்றதும் வேகமாக மீனாவின் இடையை இரண்டு கைகளாலும் பிடித்து அருகிலிழுத்து ரோஷன் இருவருக்கும் இடையில் வருமாறு அணைத்தான் ராஜேஷ்.
“என்ன பண்ணுறீங்க ராஜேஷ்? விடுங்க… கவி பாத்தா என்ன நெனப்பா?”
“எனக்கும் இப்படி ஒண்ணு வேணுமே…”
“ம்ம் ம்ம்… இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இன்னும் ஒரு வருஷம்”
“நான் இப்போவே வேணும்னு கேக்கவே இல்லையே…”
“உங்கள… விடுங்க ராஜேஷ்…” அவனிடமிருந்து விலகி ரோஷனை தூக்கிக் கொண்டு மீனா வெளியேற ராஜேஷ் அவள் பின்னால் சென்றான்.
சாப்பிட்டு முடித்தப் பிறகு “கவி நீ புக்ஸ் வெச்சுருக்கேன்னு சொன்னல்ல… குடு கவி. வீட்டுல போர் அடிக்குது” என்றாள் மீனா.
“மாடில அந்த சைட் ரூம்ல இருக்கு மீனா. போய் எடுத்துக்குறியா? நான் செண்பகத்துக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணிட்டு வரேன்”
“சரிடி”
தோழி சொன்ன அறையினுள் நுழைந்தாள் மீனா. அறை சுத்தம் செய்யப்பட்டு அதிகப் பொருட்கள் இல்லாமல் காலியாக இருந்தது. ஒரு மேஜையும் மர அலமாரியும் மட்டுமே இருந்தன.
அலமாரியில் நிறைய கதை புத்தகங்கள் இருக்க அதைத் திறந்து ஒருமுறை மேலிருந்துக் கீழ்வரை நோட்டமிட்டவள் தோளைக் குலுக்கி’எந்த புக்கா இருந்தா என்ன?’என்று நினைத்து ஒரு ஷெல்பிலிருந்து கை கொள்ளும் அளவிற்கு புத்தகங்களை எடுத்தாள்.
அங்கிருந்த ஒரு கவரினுள் அவற்றை போட்டு கீழே எடுத்து வந்தவள் அதன் நடுவில் இருந்த டைரியை கவனிக்கவில்லை.
4
புத்தகங்கள் அடங்கிய கவருடன் கீழே வந்த மீனா “அங்கேருந்து கொஞ்ச புக்ஸ் எடுத்துக்கிட்டேன் கவி” என்று கூறி ஹாலில் ரோஷன் அருகில் தரையில் அமர்ந்தாள்.
தன்னுடைய பொம்மைகள் ஒவ்வொன்றாக எடுத்து வந்து மீனாவின் கையில் கொடுத்த ரோஷன் அனைத்தையும் அவளிடம் கொடுத்து முடித்ததும் தவழ்ந்துச் சென்று அவள் எதிரில் அமர்ந்திருந்த ராஜேஷின் மடியில் அமர்ந்தான்.
ரோஷனை அவனுக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாகவே குழந்தைகளைப் பிடிக்கும் என்றாலும் ரோஷன் மீது தனிப் பாசம் உண்டு. கார்த்திக்கின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவனை விட்டு அகலவே மாட்டான். எப்போதும் அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவதில் ராஜேஷிற்கு அலாதி பிரியம்.
கவிதாவும் மீனாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“இத எதுக்குடா செல்லம் எங்கிட்ட குடுத்தீங்க?”
ராஜேஷை நிமிர்ந்துப் பார்த்தான் ரோஷன். ராஜேஷ் அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனைப் பின்னாலிருந்து அணைத்து அவன் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டான்.
“ம்ம் ம்ம்…” என்று மீனாவின் மடியில் இருந்த பொம்மையைக் கை காட்டி கைகளைத் தூக்கி ராஜேஷின் முகத்தைப் பிடித்துக் கொண்டான்.
“விளையாடணுமா ரோஷனுக்கு?”
தலையை ஆட்டியவன் திரும்பி அவளுக்கு முதுகுக் காட்டி அமர்ந்து ராஜேஷின் டி ஷர்ட்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவனைத் தன்னோடு சேர்த்தணைத்து லேசாக ஆடியபடி “அவனுக்கு உங்கூட எல்லாம் விளையாட பிடிக்கலையாம். எங்கூட மட்டும் தான் விளையாடுவானாம்” என்றான் ராஜேஷ்.
என்ன புரிந்ததோ… மீனாவை திரும்பிப் பார்த்த ரோஷன் நிமிர்ந்து ராஜேஷின் கன்னத்தில் முத்தமிட்டான். “அப்படிச் சொல்லுங்கடா என் செல்ல குட்டி” பதிலுக்கு அவன் கன்னத்தில் முத்தமிட்டான் ராஜேஷ்.
“உங்க ரெண்டு பேரையும்…”
“விடு மீனா. சும்மா தான சொல்றாங்க”
“ஆமான்டி… உடனே வந்துடுவியே என்ன அடக்குறதுக்கு”
“நாங்க கொஞ்ச நேரம் கார்டன்ல நடக்கப் போறோம். இல்லடா குட்டி?”
ரோஷன் அவன் மடியில் அமர்ந்தவாறே குதிக்க ஆரம்பித்தான்.
“நம்ம போவோம்டா” அவனைத் தூக்கிக் கொண்டு எழுந்து சென்றான் ராஜேஷ்.
சிறிது நேரம் என்றவன் ஒரு மணி நேரமாகியும் திரும்பி வராததால் அவனைத் தேடி வந்தாள் மீனா.
தோட்டத்தில் ரோஷனிடம் அங்கிருந்த பெரிய ரோஜா செடியைக் காட்டி ஏதோ கூறிக் கொண்டிருந்தான் ராஜேஷ்.
“என்ன பாடம் நடத்துறீங்க?”
“நீ வேற மீனு… ஒரு மணி நேரமா இந்த ரோஜா செடிய விட்டு நகர விட மாட்டேங்குறான். வேற எந்தச் செடியும் பாக்க வேணாமாம்”
“என்னடா செல்லம் இது?”
அவளிடம் தாவிய ரோஷன் “ம்ம் ம்ம்” என்று அதிலிருந்த ரோஜாவை கை காட்டினான்.
“ரொம்ப நேரமா வெளில நிக்குறோம் மீனா. உள்ள தூக்கிட்டு போ”
அவள் திரும்பி நடக்க ஆரம்பித்ததும் ரோஷன் அவள் தோளில் தன் தாடையை வைத்து அந்த ரோஜா செடியைப் பார்த்தான்.
சிறிது நேரம் தோட்டத்தில் உலாவிய ராஜேஷ் காவலாளி செல்வத்திடம் வந்தான். “இங்க ரூம் எல்லாம் வசதியா இருக்கா செல்வம்?”
“ம்ம். நைட்ல மட்டும் தூங்காம காவல் இருங்க. வேற எது வேணும்னாலும் எனக்கு கால் பண்ணுங்க. கார்த்திக் என் நம்பர் குடுத்திருக்கான்ல?”
“இருக்குங்க சார். அதெல்லாம் கார்த்திக் சார் வர வரைக்கும் பத்திரமா பாத்துக்குவேன்”
“சரி செல்வம். வரேன்…” என்ற ராஜேஷ் வீட்டிற்குள் நுழைந்தான்.
“போலாமா ராஜேஷ்?”
“நாங்க கிளம்புறோம் கவி. எதுனாலும் கால் பண்ணு”
கவிதா மகனை மீனாவிடம் இருந்து வாங்கிக் கொள்ள போர்ட்டிகோவில் இருந்த அவர்களின் காரில் ஏறிச் சென்றனர் இருவரும்.
“கொஞ்ச நேரம் இப்படி வந்து உக்காரு ஷேன்பா” போர்ட்டிகோ அருகில் தோட்டத்தில் இருந்த சேரைக் கை காட்டினாள் கவிதா.
“இன்னைக்கு உங்களுக்குப் பொழுது போயிருக்கும் இல்லக்கா?”
“ம்ம்… ஆமா செண்பகம். மீனாவ பாத்தே ரொம்ப நாள் ஆச்சு. என்கூடப் படிச்சவ. ராஜேஷ் அண்ணா ரோஷன் அப்பாவோட க்ளோஸ் பிரண்ட்”
“நீங்க எங்கயாவது வெளியில போயிட்டு வாங்க கா”
“இவன வெச்சுக்கிட்டா?”
சீத்து மாமி கேட்டைத் தாண்டி உள்ளே வந்தார்.
“என்னடிம்மா இங்க உக்காந்துண்டிருக்க? குட்டி பையன நான் இன்னைக்குத் தான் பாக்குறேன்”
“வாங்க. டீ போட்டுக் கொண்டு வா செண்பகம்”
“சரி கா” என்றவள் உள்ளே சென்றாள்.
“வாடா ராஜா வாடா ராஜா…” ரோஷனை ஆசையாகத் தூக்கிக் கொண்டார் சீத்து மாமி. அவர் கையில் சென்றதும் அவர் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான்.
“அச்சச்சோ… நீ ச்சமத்து கொழந்தன்னு நெனச்சேன். இப்படி வாலா இருக்கியேடா…” மெல்ல அவன் கைகளைக் கன்னத்திலிருந்து எடுத்துவிட்டார் சீத்து மாமி.
“அவன் எப்பயுமே இப்படித் தான் கிள்ளி வெக்குறான்” ரோஷனை அவரிடமிருந்து வாங்கித் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் கவிதா.
“பரவாயில்ல கவி… என் பேரன் இப்படித் தான் கிள்ளுவான். இவன பாக்குறச்ச நேக்கு அவன் ஞாபகம் வரர்து”
செண்பகம் எடுத்து வந்த கோப்பைகளைக் கவிதாவிடமும் சீத்து மாமியிடமும் கொடுத்தாள். “குட்டி பையன குடுங்க கா. நீங்க டீ குடிங்க” அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“அப்போ நான் வரேன் கவி. சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன். டைம் கிடைக்குறச்சே நம்மாத்துக்கு வா என்ன…” என்று கூறி எழுந்தார்.
அவர் எதற்கு வந்தாரென்று தெரியாது. எப்போதும் தனியாக இல்லாமல் இப்படி யாரோ ஒருவர் உடன் இருப்பது இதம் தந்தது. கவிதா வீட்டை நோக்கி நடந்தாள். ரோஷன் செண்பகத்தின் முடியை பிடித்து இழுத்து அவளை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தான்.
அவள் ஹாலினுள் நுழையவும் அவளின் கைபேசி சிணுங்க அதை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.
“சொல்லு மீனா”
“கவி… உன் புக் ஷெல்ப்ல என்னென்ன புக்ஸ் இருந்துதுன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?”
“ஆமா கவி. அதுல ஒரு டைரியும் இருந்துது. அதான் கேக்குறேன்”
“டைரியா? யாரோடது? நான் எழுத மாட்டேன். எனக்குத் தெரிஞ்சு அவங்களுக்கு அந்தப் பழக்கம் இல்லையே மீனா. அப்பறம் எப்படி…”
“இது உன் கையெழுத்து மாதிரி இல்ல. எனக்குத் தெரியாதா? இது கார்த்திக் கையெழுத்து மாதிரியும் இல்லன்னு ராஜேஷ் சொன்னாங்க. ஒருவேள இதுக்கு முன்னாடி இந்த வீட்டுல இருந்தவங்க விட்டுட்டுப் போயிருக்கலாம். அதோட இது டைரி மாதிரி தேதி வாரியா தெனம் எழுதாம நிறைய வருஷ நிகழ்வுகள ஒரே புக்ல எழுதி வெச்சுருக்காங்க கவி”
“போடி. இது யாருன்னே தெரியாது. அதோட நான் படிச்ச முதல் பக்கத்த உனக்கு வாசிச்சு காட்டுறேன். அப்பறம் நீயே சொல்லு… இத படிக்கலாமா வேணாமான்னு” அதை வாசித்துக் காட்டினாள் மீனா.
“ஹே கேக்கவே இண்டரெஸ்ட்டிங்கா இருக்கு”
“இருக்குல்ல… சரி நான் படிக்கப் படிக்க உனக்கு போன் பண்ணி சொல்லுறேன் கவி”
“மறக்காம எவ்ளோ படிச்சாலும் உடனே எனக்குச் சொல்லுடி. அந்த சீதா மாமி இப்போ வந்திருந்தாங்க. சும்மா பேசிட்டு போக வந்தாங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேக்க சொன்னாங்க”
“ஹ்ம்ம்… அக்கம் பக்கம் யாராவது உதவிக்கு இருக்குறது நல்லது தான் கவி. நாளைக்கு வீட்டுக்கு வரேன். ராஜேஷ் கிளம்பினதுக்கு அப்பறம் வீட்டுல நாள் பூரா தனியா இருக்க எனக்கு போர் அடிக்குது. நீயும் தனியா இருக்கல்ல… வெக்கட்டா…”
கைபேசியை அணைத்த கவிதா “விடுடா அவள… வலிக்கலையா செண்பா? அவன் கைய விளக்கி விட வேண்டியதுதான?” என்று ரோஷனை தூக்கினாள். அவளுக்கு அந்த டைரியில் என்ன இருக்கிறது என்றறியும் ஆவல் அதிகரித்தது.
மீனா அருகில் அமர்ந்திருந்த ராஜேஷ் தலையில் அடித்துக் கொண்டான். “ஏன்டி உனக்கு வேற வேலையே இல்லையா? இப்படி யாருதுன்னே தெரியாதவங்க டைரிய படிக்குற?”
“சும்மா இருங்க ராஜேஷ். எப்போ பாரு என்ன கொற சொல்லுறதே வேலையா வெச்சுக்கிட்டு இருக்கீங்க. கவிதாவே படிக்கச் சொல்லிட்டா. அப்பறம் என்ன? நீங்களும் வேணும்னா படிச்சு பாருங்க” டைரியை அவன் கையில் திணித்து எழுந்துச் சென்றாள் மீனா.
சமையலுக்கு உதவியாய் காமாட்சியம்மாள் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தார். இரவு உணவு தயார் செய்ய அவருக்கு உதவியவள் தான் படித்ததை மீண்டும் நினைவுக் கூர்ந்தாள்.’அடுத்து என்ன இருக்குன்னு சீக்கிரம் படிச்சு தெரிஞ்சுக்கணும்’
மீனா சென்றதும் ராஜேஷ் அந்த டைரியைப் பார்த்தான். அவள் போனில் படித்துக் காட்டியதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். அதை வாசித்துப் பார்க்க வேண்டும் என்று அவனுக்குமே தோன்றியது.
மீனா அருகில் இல்லாததை உறுதி செய்து கொண்டு டைரியை திறந்தான். முதல் பக்கத்தில் அழகிய கையெழுத்தில் ஒரு பத்தி எழுதப்பட்டுக் கீழே கையெழுத்திடப் பட்டிருந்தது.
எல்லோரும் டைரி எழுதுவதில்லை.
வாழ்க்கையில் நாம் கடந்து வரும் சில அழகிய தருணங்கள் நம்மை எழுதத் தூண்டுகின்றன.
எனக்கு டைரி எழுதும் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை.
நான் எழுதுவேன் என்று நினைத்ததும் இல்லை.
தென்றலாய் வந்தான்.
என் வாழ்வை புரட்டிப் போட்டான்.
என்னுள் காதலாய் நிறைந்தான்.
முதல் பார்வையிலேயே என்னை வீழ்த்தினான்.
நான் இதுவரை அறிந்திடாத உணர்வை
என்னை உணரச் செய்தான்.
அவனுக்காக…
அவனைப் பற்றிய குறிப்புகள்…
என் டைரி.
-ரேணு
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss