5
ராஜேஷ் டைரியை மூடி வைத்து எழுந்தான்.’இனி இதப் படிச்சு முடிக்குற வரைக்கும் இவ அடங்க மாட்டாளே…’தங்களறைக்குள் சென்று சில பைல்களை எடுத்து வைத்து வேலைப் பார்க்க ஆரம்பித்தான்.
இரவு உணவிற்கு என்ன செய்ய வேண்டுமென்று காமாட்சி அம்மாளிடம் சொல்லிவிட்டு ஹாலில் வந்தமர்ந்து டைரியை கையில் எடுத்தாள் மீனா.
என்னோட வாழ்க்கைல நிறையச் சந்தோஷம் இருந்துது. நான் டுவல்த்ல ஸ்கூல் பர்ஸ்ட் வந்தத எங்க வீட்டுல கொண்டாடுனாங்க. எனக்குக் கத்திய தூக்கிட்டு எதையாவது கிழிச்சு ஆராய்ச்சி பண்ணுறது… தலகாணி சைஸ்ல இருக்க புக்க படிக்குறது… இதுல எல்லாம் சுத்தமா விருப்பமே இல்ல.
நல்ல மார்க் எடுத்திருந்தாலும் என்னோட சாய்ஸ் இஞ்சினியரிங் தான். எந்த காலேஜ்ல வேணா சேர்த்துவிட எங்க வீட்டுல ரெடியா இருந்தாங்க. எனக்குக் குழப்பமா இருந்துது. தப்பா செலக்ட் பண்ணிட்டா நாலு வருஷம் கஷ்டப்படணுமேன்னு பயமா இருந்துது.
என்னோட வீட்டுல எனக்கு புல் சப்போர்ட் பண்ணாங்க. என்னோட வீடு… என்னைப் பொறுத்த வரைக்கும் என் உலகம். எங்க வீட்டுல நான் அப்பா அம்மா மட்டும். அப்பா ரயில்வேஸ்ல வேலை பார்க்குறாங்க. அம்மா ஹவுஸ் வைப். எங்களோடது ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பாமிலி. ஆனா என்னைப் பெத்தவங்க என்னை அப்படி வளக்கல.
சிரிப்பு தான் வருது. இந்த டைரி நான் எழுத ஆரம்பிச்சதுக்குக் காரணமே வேற. ஆனா நான் அவன பத்தி எழுதாம இப்போ வரைக்கும் எங்க வீட்ட பத்தி தான் எழுதியிருக்கேன்.
எனக்கு என் அப்பா அம்மா அவ்வளவு புடிக்கும். ஒருவேளை நாளைக்கு லைப்ல இவங்க ரெண்டு பேருல யார சூஸ் பண்ணணும்னு கேட்டா நான் எங்க வீட்ட தான் சூஸ் பண்ணுவேனோ?
ச்சச்ச… இன்னைக்குத் தான் அவன முதல் தடவ பார்த்தேன். முதல் பார்வையே என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. ஆனா நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்குறேன்? தெரியல. அவன் என்னை அந்த அளவுக்குப் பாதிச்சுருக்கான்னு நினைக்குறப்போ ஆச்சரியமா இருக்கு.
“மீனா வா சாப்பிடலாம்”
“அய்யய்யய்ய… நான் ஒரு வேல செஞ்சா பொறுக்காதே. அதுக்குள்ள என்ன சாப்பாடு வேண்டிக் கிடக்கு?” கையிலிருந்த டைரியை மூடினாள் மீனா.
“அடியேய் மணி ஒன்பதாச்சு” சோபாவில் அமர்ந்த ராஜேஷ் அவள் தோளில் தன் இடது கையைப் போட்டு வலது கையால் அவள் தாடையைப் பற்றி “பசிக்குது மீனு… ப்ளீஸ்” என்றான்.
“சரி சரி… சாப்பிடலாம்”
எழ முயன்றவளை அவள் தோளில் போட்டிருந்த தன் இடது கையால் அழுத்தி அமர வைத்தான். “ஆமா… உனக்குத் தமிழ் படிக்கத் தெரியாதுல்ல… அதான் எழுத்து கூட்டி கூட்டி ஒரு மணி நேரமா ஒரு பக்கத்த படிச்சியா?”
அவன் கையைத் தட்டி விட்டு “ராஜேஷ் வேணாம்…” என்றாள்.
“ஒஹ்ஹ்… உனக்குத் தமிழ் படிக்கத் தெரியாதுன்னு சொன்னா கோவம் வேற வரும்ல…”
“பேசாம இருக்க மாட்டீங்களா? எழுந்து வாங்க”
“இன்னும் ஒரு வாய்டா செல்லம்… ஆ காட்டுங்க… தோ பாத்தீங்களா… முயல் பொம்ம… ஹை அழகா இருக்கே… ரோஷன் குட்டி மாதிரியே புசு புசுன்னு ரவுண்டு ரவுண்டு கண்ணோட இருக்கே… ஆ காட்டுங்க செல்லம்…” ரோஷனை சுற்றி பொம்மைகளைப் பரப்பி அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் கவிதா.
“குட்டி இங்க பாருங்க… கார்…” என்று ஒருபுறம் செண்பகம் அமர்ந்து அவனுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.
“இன்னும் ஒரே வாய்டா செல்லம். வாயத் தொறங்க வாயத் தொறங்க… அப்பாடா… முடிஞ்சுது” நீண்ட பெருமூச்சை விட்டு ரோஷனின் வாயைத் துடைத்தாள்.
மொபைல் அடித்தது. அழைப்பது கார்த்திக் எனவும் உடனே அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க”
அந்தப் பக்கம் முத்த மழைப் பொழிந்தான் கார்த்திக். கவிதாவின் முகம் உடனடியாகச் சிவந்தாலும் எதிரில் செண்பகம் இருப்பதால் கஷ்டப்பட்டு முகத்தை இயல்பாக வைக்க முயன்றாள்
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் “என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டேவிட்டாள்.
“ஒண்ணும் இல்லையே. என் பொண்டாட்டிக்கு குடுக்கணும்னு தோணுச்சு. குடுத்தேன்”
“ஆமா… விட்டுட்டு போனீங்கல்ல. போய் ஒரு போன் கூடப் பண்ணல. நான் போன் பண்ணாலும் ஒழுங்கா பேசல. இப்போ மட்டும் என்னவாம்?”
“ஹே… டென்ஷன்ல இருந்தேன் கவி. அதோட நீ தனியா சமாளிச்சுடுவன்னு தான் விட்டுட்டு வந்தேன். என்ன பண்ணுற? ரோஷன் என்ன பண்ணுறான்?”
“அவனுக்குச் சாப்பாடு ஊட்ட தான் இவ்வளவு நேரம் போராடிட்டு இருந்தேன். இப்போ தான் சாப்பிட்டு முடிச்சான்”
“ம்ம்… இந்த ஆர்டர் நமக்குக் கெடச்சுடுச்சுக் கவி”
“அது போன் எடுத்ததும் புரிஞ்சுது”
“ம்ம்ஹும்”
“சரி அப்போ வீட்டுக்கு வந்துடுவீங்களா?”
“இல்ல கவி. இன்னும் ஒரு வாரம். எல்லாம் சைன் பண்ணி பக்காவா ரெடி பண்ணிட்டு வரேன்”
“ஹ்ம்ம்… சரி கார்த்திக். சாப்பிட்டீங்களா?”
“இல்ல. அதுக்குத் தான் கிளம்புனேன். அப்பறம் பேசுறேன். பை”
“பை”
‘போன் எடுத்ததும் அப்படிப் பேசுனாங்க. நான் அவங்கள சாப்பிட்டீங்களான்னு கேட்டேன். வெக்குறதுக்கு முன்னாடி பதிலுக்கு என்னைக் கேக்கணும்னு தோணவே இல்ல அவங்களுக்கு’
“அந்த டைரில என்ன படிச்ச மீனா?” என்று கேட்டான் ராஜேஷ்.
“ரேணு காலேஜ் சேர்ந்தத பத்தி இருந்துது ராஜேஷ். அவ அந்தப் பையன பத்தி எழுதி இருந்தத படிக்குறதுக்குள்ள தான் நீங்க சாப்பிட கூப்பிட்டுட்டீங்களே…”
“ம்ம்கும்… அடுத்தவங்க விஷயம்னா என்ன ஆர்வமா இருக்க நீ?”
“அங்க மட்டும் என்ன வாழுதாம்?’அந்த டைரில என்ன படிச்ச மீனா?’”
“சரி சரி படிச்சுட்டு சொல்லு”
“எப்போ பாரு திட்டிக்கிட்டு…”
“சும்மா வம்பிழுத்தேன்டி” அவள் கன்னத்தில் முத்தமிட்டு எழுந்து சென்றான்.
“தெரியும் தெரியும்”
கவிதா ரோஷனை தூக்கிக் கொண்டு மாடி ஏறினாள். அவன் அரைத் தூக்கத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தான். “தூக்கம் வந்துடுச்சா செல்லத்துக்கு? தூங்குவோமா?” அவனிடம் பேசியபடியே அறையினுள் வந்து அவனை மெத்தையில் கிடத்தினாள்.
அவன் அருகில் படுத்து தட்டிக் கொடுத்து உறங்கச் செய்தாள். அவளுக்கும் கண்கள் சொருகின. அவனை அணைத்தபடியே படுத்துக் கண் மூடினாள்.
தன் வலது புறம் மட்டும் சில்லிடுவதை உணர்ந்து மெல்ல விழித்தாள் கவிதா. நல்ல உறக்கத்தில் இருந்ததால் தான் எங்கிருக்கிறோம் என்று புரிவதற்கே சில நொடிகள் தேவைப்பட்டன. அறையைச் சுற்றி பார்த்தவள் ஏ ஸியை திரும்பிப் பார்த்தாள்.
இன்றும் மிகக் குறைந்த வெப்பநிலையில் இருந்தது. அதை அணைத்தவள் ரோஷனிற்கு உடை மாற்றி அவனைத் தொட்டிலில் கிடத்திவிட்டு வந்து படுத்தாள். தூக்கம் கலைந்திருந்தது.
‘ச்ச… இப்படிப் பொறுப்பில்லாம இருக்கோமே. நேத்து தான் ஏ ஸி டெம்பரேச்சர் கொறச்சு வெச்சு படுத்தோம். இன்னைக்கும் ஏன் இப்படி? ரோஷன் தூங்குறான்னு கொஞ்சம் கூட யோசிக்காம… அவன் ஞாபகமே நமக்கு வரமாட்டேங்குதே. இனி கவனமா இருக்கணும்’
படுக்கையறையுள் கையில் டைரியுடன் நுழைந்தாள் மீனா. “ஓகே மீனா… குட் நைட்” வேகமாகப் போர்வையை இழுத்து மூடி படுத்தான் ராஜேஷ்.
“விளையாடாதீங்க ராஜேஷ். காலைல நீங்க ஆபீஸ் போயிடுவீங்க. ப்ளீஸ். எனக்குக் கொஞ்சம் படிச்சு காமிங்களேன்…”
“விட மாட்டியே… இதுக்குப் பயந்து தான் நான் அப்போவே வந்து படுத்தேன்” போர்வையை விளக்கி எழுந்து அமர்ந்தான். அருகில் அமர்ந்து அவன் கையில் டைரியை கொடுத்தாள்.
“இன்னைக்கு மட்டும் தான் மீனு… இனி என்ன படிக்கச் சொல்லாத. எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை கிடையாது”
“சரி” அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் “படிங்க…” என்றாள். அவள் விட்ட இடத்திலிருந்து அவன் வாசிக்க ஆரம்பித்தான்.
காலேஜ் செலக்ட் பண்ணுறதுல எனக்கிருந்த குழப்பத்த என் பிரண்ட் ஜென்னி தீர்த்து வெச்சா. அவ தான் இந்த காலேஜ் பத்தி சொன்னது. அவ என்னோட க்ளோஸ் பிரண்ட். தர்ட் ஸ்டாண்டர்ட்லேருந்து ஒண்ணா படிக்குறோம். அவ அந்த காலேஜ் சேரப் போறேன்னு சொன்னதும் நானும் முடிவு பண்ணிட்டேன்… அங்க சேரணும்னு.
முதல் நாள் காலேஜ். யூனிபார்ம் இல்லாம… ரெட்ட ஜட இல்லாம… ஏதோ ஒரு விடுதலை உணர்வு. நானும் ஜென்னியும் சேர்ந்து அவளோட ஸ்கூட்டில போனோம். காலேஜ்குள்ள நுழையும்போது ஏதோ ஒரு புது உலகத்துக்குள்ள நுழையுற மாதிரி இருந்துது.
அவ வண்டிய நிறுத்த பார்க்கிங் ஏரியா போனப்போ தான் அவன பார்த்தேன். பைக் கண்ணாடிய பார்த்து அவன் முடிய கையால கோதிட்டு இருந்தான். அவன் பைக் பக்கத்துல ஜென்னி அவ வண்டிய நிறுத்துனதும் நிமிர்ந்து எங்கள பார்த்தான்.
ஒரு பார்வை ஆள வீழ்த்தும்னா… அது அவனோட அந்தப் பார்வை தான். நான் விழுந்துட்டேன்.
6
சலனமற்ற பார்வை… அது ஏன் என்னை இந்த அளவு அலகழிக்குதுன்னு புரியல.
ஒரு தடவ என்னையும் ஜென்னியையும் பார்த்தான் அப்பறம் திரும்ப என்னைப் பார்த்தான்.
அவன் உதடு புன்னகைல விரிய ஆரம்பிச்சதும் எதுக்குன்னே தெரியாம எனக்குச் சந்தோஷமா இருந்துது. அவன் இன்னும் பெருசா சிரிக்க ஆரம்பிச்சதும் எனக்கு வெட்கம் வந்து நான் தலக் குனிஞ்சுட்டேன்.
எங்களத் தாண்டி ஒரு பையன் அவன்கிட்ட போனான். “கௌதம் இன்னும் கிளாஸ்கு போகலயாடா?”ன்னுக் கேட்டான்.
அப்போ தான் எனக்குப் புரிஞ்சுது… அவன் என்னைப் பார்த்து சிரிக்கல. என் பின்னாடி வந்த அவன் பிரண்ட பார்த்து சிரிச்சிருக்கான்னு…
நல்லவேளை நானும் பதிலுக்குச் சிரிச்சு பல்பு வாங்காம இருந்தேன்.
தலையில அடிச்சு திரும்பிப் பார்த்தா ஜென்னி ஒரு கைல பேக் பிடிச்சு ஒரு கைய இடுப்புல வெச்சு என்னையே பார்த்துட்டு நின்னா.
செத்தேன்னு அப்போவே முடிவு பண்ணிட்டேன்.
மெதுவா “போகலாமா?”ன்னுக் கேட்டேன். எனக்கே நான் பண்ணுறதெல்லாம் விநோதமா இருந்துது. இவ இப்போ கிண்டல் பண்ண ஆரம்பிச்சா விடிஞ்சாலும் நிறுத்த மாட்டாளேன்னு உள்ளுக்குள்ள பயம் வேற…
“வா”ன்னு சொல்லி அமைதியா நடக்க ஆரம்பிச்சா. எனக்கு இன்னும் ரொம்பப் பயம் வந்துடுச்சு. இவ இப்படி அமைதியா இருக்கான்னா நான் அவக்கிட்ட தனியா சிக்க டைம் பார்க்குறான்னு அர்த்தம். பார்க்கிங் ஏரியால நிறையப் பேர் இருந்ததால அப்போதைக்கு நான் தப்பிச்சேன்.
க்ளாஸுக்கு போகாம நேரா காண்டீன் கூட்டிட்டுப் போனா. எதுக்கு இங்க போறோம்னு கேட்டேன். க்ளாஸுக்கு போக வழி கேக்க வேணாமான்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு நடந்தா.
இதுக்கு மேல பேசுனா எனக்குத் தான் ஆபத்துன்னு தெரியும். அமைதியாவே போய் அவ எதிர்ல உட்கார்ந்தேன்.
“மீனா நாளைக்குப் படிச்சுக்கோடா. தூக்கம் வருது…”
“அதுக்குள்ளையா? என்ன ராஜேஷ்?”
“இந்த டைரியே நாலு கிலோ இருக்கும் போல… எவ்வளவு பெருசா வெய்ட்டா இருக்கு. மடியில வெச்சு படிக்க முடியல மீனு. காலைல வேலை இருக்கும்மா… சீக்கிரம் போகணும்”
“சரி… நாளைக்குப் படிச்சுக்குறேன்” அவன் கையில் இருந்த டைரியை வாங்கி மெத்தையின் அருகில் இருந்த மேஜையில் வைத்து விளக்கை அணைத்துப் படுத்தாள்.
அடுத்த நாள் காலை சொன்னது போல் சீக்கிரமே கிளம்பிச் சென்றான் ராஜேஷ். கவிதாவின் வீட்டிற்குப் புறப்பட்ட மீனா வழியில் காரை நிறுத்தி பழக்கடை ஒன்றினுள் நுழைந்து தோழிக்கு அழைத்தாள்.
“என்னென்ன ப்ரூட்ஸ் வேணும் கவி? நான் வாங்கிட்டு வரேன். ரோஷனுக்கு என்ன குடுப்ப?”
“ஆப்பிள் வாங்கு மீனா. வாழைபழம் இருந்தா காயா பாத்துக் கொஞ்சம் வாங்கிக்கோ”
பழங்களை வாங்கி மீண்டும் காரை எடுத்தவள் கவிதாவின் வீட்டருகில் வர செல்வம் கேட்டை திறந்துவிட்டான்.
போர்ட்டிகோவில் காரை நிறுத்தி வாங்கி வந்த பழங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.
“வாங்க மீனா கா…”
“கவிதா எங்க செண்பகம்?” கையிலிருந்த கவரை அவளிடம் கொடுத்தாள்.
“மாடிபடில ரோஷனோட உக்காந்திருக்காங்க கா. போய்ப் பாருங்க”
“இங்க உக்காந்து என்னடி பண்ணுற? ஹே குட்டி…” ரோஷனை தூக்கிக் கொண்டாள்.
“அத ஏன்டி கேக்குற? இவன்கூட ஹால்ல உக்காந்து விளையாடிட்டு இருந்தேன். இவன் எப்போ பாரு இந்த மாடிப்படிக்கிட்ட தான் வரான். அதான் இங்கயே வந்துட்டேன்”
“ஏன்டா தங்கம் இங்க வரீங்க? ம்ம்…”
“படிக்க ஆரம்பிச்சுட்டியா? என்ன இருந்துது அதுல?”
“மறந்தே போயிட்டேன். இரு எடுத்துட்டு வரேன். இவனப் புடி” ரோஷனை அவளிடம் கொடுத்துவிட்டு காரை நோக்கி விரைந்து சென்று முன் இருக்கையில் இருந்த பெரிய டைரியை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள்.
“இது வர தான் நான் படிச்சேன். நீயும் அது வர தான் படிக்கணும்”
“சரி சரி… இவன பாத்துக்கோ…”
மீனா சொன்ன இடம் வரை படித்த கவிதா “ஹே மீனா… ப்ளீஸ் ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் மட்டும் படிச்சுக்குறேனே…” என்றாள்.
“நோ வே… நான் தான் முதல்ல படிப்பேன்” அவள் கையிலிருந்த டைரியைப் பிடுங்கி தன் அருகில் வைத்தாள்.
“நீ எழுத்துக் கூட்டி எந்தக் காலத்துக்குப் படிச்சு முடிக்குறது?”
“உங்க அண்ணன் மாதிரியே பேசாத… நான் சீக்கிரம் படிச்சிடுவேன்”
செண்பகம் ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் எடுத்து வர பேசி பேசி பொழுதை கழித்த மீனா, மாலை ஆறு மணிக்கு கவிதாவின் வீட்டிலிருந்து கிளம்பினாள்.
இரவு வீட்டினுள் நுழைந்ததிலிருந்து டைரி ராஜேஷின் கண்ணை உறுத்தியது. மீனா மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க மெதுவாகப் படுக்கையறைக்கு வந்து கதவைத் தாழிட்டு டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
ஜென்னி அமைதியா என்னைப் பார்த்துட்டே உட்கார்ந்திருந்தா. அவளா ஏதாவது கேட்டா அதுக்கேத்த மாதிரி சமாளிச்சுப் பதில் சொல்லியிருப்பேன்.
அவ இப்படி அமைதியா இருக்கவும் அவ என்ன கேட்க நினைக்குறா? எத தெரிஞ்சுக்க என்னைக் கூட்டிட்டு வந்திருக்கா? நான் என்ன சொல்லணும்னு எதிர்ப்பார்க்குறா? நான் எத சொல்லணும்? எத விடணும்? எதுவும் புரியாம அமைதியா இருந்தேன்.
“ஜென்னி நீ நினைக்குற மாதிரி ஒண்ணும் இல்லடி”னு சொன்னேன். “நான் நினைக்குற மாதிரின்னா என்ன ரேணு?”னு திருப்பிக் கேட்டா.
கிராதகி… இப்படி என் வாயக் கிளறுவான்னுத் தெரிஞ்சு தான அவ்வளவு நேரம் எதுவும் பேசாம இருந்தேன்.
கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு நான் ஏன் அவன அப்படிப் பார்த்தேன்னு கேட்டா.
எனக்கே பதில் தெரியாத கேள்வி. ஏன் பார்த்தேன்? அவன்கிட்ட எது எனக்குப் பிடிச்சுது? எது என்ன ஈர்த்துச்சு? தெரியாது…
காதல்… சினிமால நான் பார்த்த விஷயம். கதைகள்ல படிச்ச விஷயம். காதலிக்குறவங்கள நான் நேர்ல பார்த்தது கிடையாது. ஸ்கூல்ல நிறையப் பேசுவோம். ஆனா அந்தக் கதை எதுவும் உண்மை இல்லன்னு எனக்குத் தெரியும். யாரையாவது ஓட்டுறதோட சரி.
எனக்கு அவன பாத்ததும் வந்த உணர்வுக்குப் பேரு காதலான்னு அப்போ நான் ஆராய்ச்சி பண்ண விரும்பல. ஒரே ஒரு தடவ பார்த்தத வெச்சு என்னால என் மனச புரிஞ்சுக்க முடியும்னு எனக்குத் தோணல.
அதனால தானோ என்னவோ இன்னைக்குத் திரும்பவும் அவன பார்த்தேன். ஒரு தடவ இல்ல… பல தடவ…
இப்படி நான் சுய அலசல்ல இருந்த நேரம் ஜென்னி என்னை ஆராய்ச்சி பண்ணி இருக்கா. ஒரு வழியா யோசிச்சு முடிச்சு நிமிர்ந்துப் பார்த்தப்போ ஒரு கைல பேகோட ஒரு கைய இடுப்புல வெச்சு என்னை மொறச்சுட்டு இருந்தா.
“கனவு கண்டது போதும். எத்தன வாட்டி போலாமா? போலாமா?னு கேக்குறது? எந்திரிச்சு வாடி”னுக் கத்திட்டு முன்னாடி நடக்க ஆரம்பிச்சுட்டா.
காண்டீன் வாசல நாங்க நெருங்கினப்போ மறுபடியும் அவன பார்த்தேன். பார்க்கிங்க்ல பார்த்த அவன் பிரண்டோட பேசிக்கிட்டே உள்ள வந்தான்.
கையில ஒரே ஒரு நோட். அதோட சேர்த்து ஹெல்மெட்டும் பிடிச்சிருந்தான். இன்னொரு கையில பைக் சாவியைச் சுத்திட்டே… ப்ளாக் போர்மல் பாண்ட், கிரே கலர் புல் ஹாண்ட் ஷர்ட் போட்டு சிரிச்சுக்கிட்டே எங்களத் தாண்டிப் போனான்.
அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்துது தெரியுமா? “பரவசம்” – இந்த வார்த்தைக்கான அர்த்தத்த வாழ்க்கையில முழுசா அனுபவிச்சதா உணர்ந்தேன்.
அவன் கடந்து போற வரைக்கும் அவனையே தான் பார்த்தேன். ஜென்னி என்னையே பார்த்தான்றது திரும்புனதுக்கு அப்பறம் தான் எனக்குத் தெரிஞ்சுது. ஷ்ஷ்ஷ்… பிரண்ட்ஸ பக்கத்துல வெச்சுக்கிட்டு சைட் அடிக்கக் கூட முடிய மாட்டேங்குது…
மறுபடியும் தல குனிஞ்சு வா போகலாம்னு சொல்லிட்டு இப்போ நான் அவளுக்கு முன்னாடி நடந்து கிளாஸ் விசாரிச்சு போய் உட்கார்ந்துட்டேன்.
முதல் வருஷம் E. C. E, E. E. E. ஒண்ணா உட்கார வெச்சிருந்தாங்க. நானும் ஜென்னியும் E. C. E எடுத்திருந்தோம். அவ சொன்னது தான்.
இப்போ என்கிட்ட பேசுன பொண்ணுங்க பேரெல்லாம் கேட்டா எனக்குத் தெரியாது. மறந்துடுச்சு. மனசுல பதியவே இல்லைன்றது தான் உண்மை.
எனக்கு அப்போ ஞாபகம் இருந்த ஒரே பேரு கௌதம்…
யார் யாரோ ஸ்டாப்ஸ் வந்து பேசுனாங்க. எங்க எல்லாரையும் பேச சொன்னாங்க. எல்லாமே கனவு மாதிரி இருந்துது.
ப்ரேக் அப்போ கிளாஸ் விட்டு வெளியில வந்தோம். கொஞ்ச தூரத்துல கௌதம் ஒரு கைய பாண்ட் பாக்கெட்ல விட்டு வேகமா நடந்து போயிட்டு இருந்தான்.
ஜென்னி என் கையப் புடிச்சு இழுத்து “ஏன்டி இப்படி மிட்டாய் கடைக்காரன் பட்டணத்தப் பார்க்குற மாதிரி பார்க்குற? சுத்தி எல்லாரும் கேக்குறாங்க… அவன் உனக்குத் தெரிஞ்சவனான்னு… ஒழுங்கா வா”னு என் காதுல சொன்னா.
அப்போ தான் எனக்கு ஒரச்சுது. நாங்க கும்பலா நடந்து போறோம்னு… அவனப் பார்த்தா மட்டும் நான் ஏன் இப்படிச் சுத்தி நடக்குறத மறந்திடுறேன்னு தெரியல.
நல்லவேள நான் அவக்கிட்ட தனியா சிக்கல. கூட்டமாப் போனதால அவளாலையும் அதிகம் பேச முடியல. எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து அரட்டை அடிச்சு ஆளுக்கு ஒரு ஜூஸ் குடிச்சோம்.
நாங்க காண்டீன்லேருந்து க்ளாஸுக்கு திரும்பி வந்தப்போ கௌதம் எங்களுக்கு எதிர்ல வந்தான். ஆனா நான் தலைக் குனிஞ்சுட்டேன். எனக்குத் தெரியும் அவனப் பார்க்க ஆரம்பிச்சா என்னால அவன் முகத்துலேருந்து கண்ண எடுக்க முடியாதுன்னு…
ஈவ்னிங் திரும்ப வண்டி எடுக்கப் போனப்போ கௌதம் அவன் பிரண்ட்ஸ் நிறையப் பேரோட பார்க்கிங் ஏரியால பைக்ல உக்காந்து பேசிட்டு இருந்தான்.
ச்ச… காலையில ஜென்னி அவளோட வண்டிய அவன் பைக் பக்கத்துல தான நிறுத்தினா… அவன் பைக்ல உட்கார்ந்து பேசியிருந்தா அவன கிட்ட பார்த்திருக்கலாம். ஆனா அவங்க எல்லாருமே கொஞ்சம் தள்ளி, தூரத்துல இருந்த பைக்ல உட்கார்ந்திருந்தாங்க.
வீடு வர வரைக்கும் ஜென்னி அமைதியா வந்தா. எனக்கும் காலையிலேருந்து கௌதம பார்த்தத யோசிக்க டைம் கெடச்சுது.
எனக்கு நான் நினைக்குறத யார்கிட்டயாவது சொல்லணும். எப்பயுமே.
இப்போ என்னால கௌதம் பத்தி ஜென்னிகிட்ட சொல்ல முடியாது. அவள விட க்ளோஸ் பிரெண்ட் வேற யாரும் எனக்குக் கிடையாது.
அப்போ முடிவுப் பண்ணேன். டைரி எழுதணும்னு.
ஜென்னி என்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறப்போ “நீ சரியே இல்ல ரேணு”னு மட்டும் சொல்லிட்டு போனா.
வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரம் கழிச்சும் என்னால கௌதம் தவிர வேற எதையும் யோசிக்க முடியல.
ஜென்னி சொன்ன மாதிரி நான் சரியே இல்ல தான்…
– ரேணு

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!