Pokisha pezhai – 13

Pokisha pezhai – 13

இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் எப்படி? என்று நினைத்தவன்… காற்றில் ஆடும் ராட்சத மயில் பீலியைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினான். அதிலும் கொட்டும் மழையில் இறங்குவது சிரமத்திலும் சிரமமாக இருந்தது.

எனினும் இறங்கிவிட்டான். வேர்களின் ஊடே வந்து நின்றுகொண்டு, தன் ஸ்வீட் ஹார்ட்டைத் தேடினான்.

அங்கு அவன் கண்டது!!

ஸ்வீட் ஹார்ட், அந்தப் பொம்மையைக் கீழே போட்டு, அதன் மேலே ஏறி நின்று கொண்டிருந்தாள்.

முதலில் தான் நினைத்தபடி, அந்தப் பொம்மையால் ஆபத்து இல்லை என்ற விடயமே அவனுக்குச் சந்தோஷம் தந்தது. அது தன் தேவையில்லாத கற்பனை என்று நினைத்தான்.

என்ன செய்கிறாள் இவள்? என்று கேள்வியோடு பார்த்தான்.

அந்தப் பொம்மையின் மேல் ஏறிக் கொண்டு, கைகளுக்கு எட்டாமல் காற்றில் ஆடும் மயில் பீலியை எட்டிப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு முயற்சியிலும் கீழே விழுந்தாள். பின்னரும், விடாமல் முயற்சியைத் தொடர்ந்தாள்.

அவனுக்குப் புரிந்தது. அவள் மேலே வர எண்ணுகிறாள் என்று!

விறுவிறுவென அந்தப் பச்சை வர்ண பாறைகளின் ஊடே ஓடிச் சென்று, தன்யா முன் நின்றான்.

அவளுக்கு ஆச்சரியம்!

கண்ணீர் நிரம்பிய காதலன், காதலி விழிகள் ஒருவரை ஒருவர் சந்தித்தன. மடையைத் தாண்டி வரும் வெள்ளம் போல, கண்களைத் தாண்டி காதல் கண்ணீராய் வழிந்தது.

“ரோமியோ” என்று அழைத்து, கணவனின் நெஞ்சத்தில் மனைவி சாய்ந்து கொண்டாள்.

ரோமியோவிற்கு புல்லரித்துப் போனது!

“ரோமியோ… கீழே தனியா இருக்க பயமா இருக்கு. அதான் மேலே வரப் பார்த்தேன்” என்று புலம்ப ஆரம்பித்தாள்.

ரோமியோ, அவள் நிலைமை புரிந்து பரிதவித்தான்!

“ஆனா மேலயும் வர முடியல ரோமியோ! எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. இங்கே பாரு” என்று கீழே விழுந்ததில் கைகளில் ஏற்பட்டக் காயத்தைக் காட்டினாள்.

காதலியின் காயம் கண்டதும்… ரோமியோவின் கோபம், மாயம் செய்தது போல் மறைந்தது!

“நான் உன் லவ்வ சொல்லலை ரோமியோ. மைக்கேல் ப்ரோ, சிஸ்டரோட ஆசைய சொல்றப்போ… அம்மாக்கு நடந்தது நியாபகம் வந்திடுச்சு. அதான் அப்படிச் சொல்லிட்டேன்” என்று தன் நிலையை எடுத்துச் சொன்னாள்.

ரோமியோ தன்னிலை மறந்து நின்றான்!

“இனிமே சொல்லவே மாட்டேன். ஸாரி ரோமியோ”

காதலி கேட்ட மன்னிப்பு, காதலன் ரோமியோவைத் தண்டித்தது!

“இங்க இருக்கவே பிடிக்கலை. நம்ம வீட்டுக்கே போகலாம்” என்று வேண்டுகோள் வைத்தாள்.

அவளின் வேண்டுகோள், ரோமியோவிடம் அவள் வேண்டுவது காதல் மட்டுமே என உணர்த்தியது

“தனியா விட்டுட்டு மட்டும் போகாத! அதுக்கு நீ ஹாஸ்ப்பிட்டலயே விட்டுட்டுப் போயிருக்கலாம்”

சட்டென இறுக்கமான அணைப்பைத் தந்துவிட்டு, “ஸ்வீட் ஹார்ட்” என்று ஆசையோடு அழைத்தான்.

“அப்பாடி! ரோமியோ ஸ்வீட் ஹார்ட்டுன்னு சொல்லியாச்சு. இது போதும்” என்றவளின் கண்களில் கண்ணீர் பாதி, இதழ்களில் புன்னகை மீதி என்றபடி காதல் தெரிந்தது.

“ஸாரி ஸ்வீட் ஹார்ட். நான்… நான் பண்ணது தப்புதான். இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்” என்று காதலியைத் தன்னுடன் சேர்த்துக் கட்டிப் போட்டது போல் கட்டிப்பிடித்தான்.

காதலின் ஊடல் முடிந்த கணத்தில், சற்று நேரம் இருவரும் மெய் மறந்து நின்றனர்!

“ரோமியோகிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்றாள், கணவனது நெஞ்சத்தில் விரல்களால் கோலம் போட்டபடியே!

“கேளு ஸ்வீட் ஹார்ட்”

“ரோமியோ என்மேல இறக்கப்பட்டுதான் கல்யாணம் பண்ணிகிட்டானோ?”

“யார் சொன்னா? தனமா?? அவளாத்தான் இருக்கும்”

“என்னைய பத்திச் சொன்னேன். அவங்க இப்படிச் சொன்னாங்க”

“சொல்லட்டும். யார்னாலும் என்னாலும் சொல்லட்டும். அரண்மனை கட்டுவேன்ல… அப்போ தெரியும் என்னோட லவ்”

ஸ்வீட் ஹார்ட், ரோமியோவை ஆழமாகப் பார்த்தாள்.

அவன் காதல் நாயகன்! யார் என்ன சொன்னாலும் அவனது காதல் செய்கை மாறப் போவதில்லை!!

“என்ன பார்க்கிற ஸ்வீட் ஹார்ட்??”

‘ஒண்ணுமில்லை’ என்பது போல் தலையாட்டி, மீண்டும் அவனது நெஞ்சத்தில் தலை சாய்த்தாள்.

“ஏன் ரோமியோ? இப்பெல்லாம் நமக்குள்ள அடிக்கடி சண்டை வருது”

“அதுக்கு ஒரே காரணம்தான் ஸ்வீட் ஹார்ட்”

“என்ன ரோமியோ?”

“இப்பெல்லாம் நம்ம லவ்வ செலிப்ரேட் பண்ண மாட்டிக்கோம். அதான்!”

ஸ்வீட் ஹார்ட் சிரித்தாள்.

“அவங்க ரெண்டு பேரும் மேல இருக்காங்க. நம்ம லவ்வ செலிப்ரட் பண்ணலாமா?”

ஸ்வீட் ஹார்ட் சம்மதமாகச் சிரித்தாள்.

அவளைத் தன் அணைப்பிலிருந்து தள்ளி நிறுத்தியவன், ஓடிச்சென்று மழையில் நின்றான்.

ஊதா நிற ஒளிக்கற்றை… மினு மினுக்கும் சிவப்பு நிற நட்சத்திரங்கள்… பச்சை வர்ண பாறைகள்… காற்றில் ஆடும் மயில் பீலி… மற்றும் கொட்டும் மழை…. ரோமியோ, “ஸ்வீட் ஹார்ட்” என்று அழைத்தான்.

அந்த அழைப்பு எப்படி இருந்தது என்றால்? கடும் வெயிலில் ஐஸ்கிரீம் உருகும். ஆனால் அதே ஐஸ்கிரீம் கொட்டும் மழையில் கரைந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது!!

காதலன் அழைத்ததும், காதலி ஓடி வந்து அவனது கரங்களில் சரண் புகுந்து கொண்டாள்.

“கம் ஆன் ஸ்வீட் ஹார்ட். லெட்ஸ் செலிப்ரேட் அவர் பிரெஷ் லவ்” என்றான் ரோமியோ மழையில் இரு கைகளையும் விரித்தபடி!

காதலியின் உள்ளத்தில் ஏற்படுத்திய காயத்திற்கு, அவளது உதடுகளில் மருந்திட்டு, காயத்தை ஆற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான், காதலன் ரோமியோ!

இந்த ரோமியோ ஒரு இதழ் மருத்துவன்!!

இதே கணத்தில் மேலே…

மேலே இருந்த ஒரு கதவின் மேல் சாய்ந்து தனம் அமர்ந்திருந்தாள். மைக்கேல் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

இருவருமே அந்த இடம் எப்படி இருக்கிறது? சுற்றி என்ன நடக்கிறது? என்று கவனிக்கும் மன நிலையில் இல்லை.

“தனம்”

“என்ன சொல்லு?”

“ஸாரி தனம்”

“இன்னும் எத்தனை தடவை இதையே சொல்லப் போற?”

“தனம் நான் சொல்றதைக் கேளு”

“சொல்லு”

அவள் மனம் இறங்கி வந்து ‘சொல்லு’ என்றதும் ‘ரோமியோவுக்கு ஏன் உதவினேன்?’ என்று சொன்னான்.

“இதுதான் காரணம் தனம்”

தனம் அமைதியாக இருந்தாள்.

“நீ என்ன நினைக்கிறயோ… அதெல்லாம் செய்யறதுக்கு நான் உன் கூடவே இருந்து ஹெல்ப் பண்றேன்” என்று அவளது குறிக்கோளை ஒட்டிப் பேசினான்.

“மைக்கேலு” என்றவள் குரலில் லேசாகக் காதல் ஒட்டியிருந்தது.

“என்ன செல்லம்?”

திரும்பிப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்தாள்.

“ஸாரி… என்ன தனம்?” என்று முறையாகப் பேசினான்.

“அது! அவ்வளவு போதும்”

“சரி சொல்லு”

“மைக்கேலு உன்னைய எனக்கு பிடிக்குதா… பிடிக்கலையான்னே தெரியலை”

‘இன்னும் இவ இங்கேயே நிற்கிறாளா?’ என்று மைக்கேல் மனம் நொந்து போனான்.

“ஆனா உன்னைய யாருக்காவது பிடிச்சாலோ… இல்லை, உனக்கு யாரையாவது பிடிச்சாலோ… என்னால தாங்கவே முடியல”

‘காதலியே, இதற்கு காரணம் நீதான்’ என்று மானசீகமாக மாயப் பெண்ணிற்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டான்.

“உனக்கு எதாவது ஆபத்துன்னா… எனக்கு கஷ்டமா இருக்கு”

“அதான் தனம் லவ்வு”

“குறுக்க பேசாத”

“சரி சரி”

“இதுக்குப் பேருதான் லவ்-னா! அப்போ நானும் லவ் பண்றேன்”

மைக்கேல் மாமா மகளின் புதுச்சேதியைக் கேட்டுப் பூரித்துப் போனான்.

“அதனால… நான்… ஐ லவ் யூ சொல்லிக்கிறேன். சரியா?”

“ம்ம்ம்”

“நீயும் எனக்கு சொல்லிக்கோ மைக்கேலு”

“ஐ லவ் யூ தனம்!”

காதல் உறுதியான சந்தோஷத்தில் மைக்கேலும், அதை உறுதிபடுத்திய சந்தோஷத்தில் தனமும் சற்று நேரம் மெய் மறந்து இருந்தனர்.

“தனம், ஊருக்குப் போய் ஆயாகிட்ட, நீ என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டனு சொல்லவா?”

“அதெல்லாம் நானே சொல்லிடுவேன்” என்று சொல்லி தனம் எழுந்து விட்டாள்.

“தனம்! அப்போ கட்டிக்கலாமா?”

“அதான் சொல்லிட்டேனே??” என்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

மைக்கேல், தனத்தை இரு கைகளால் அணைத்திடக் காத்துக் கொண்டிருந்தான்.

“ஓ! இதுவா??” என்று அவளும் ஆசையாக அவனை நெருங்கி வந்தாள்.

மைக்கேலின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எத்தனை வருடக் காத்திருப்பு?

அப்பொழுது ‘தனம், தனம்’ என்று ரோமியோ கத்தி அழைக்கும் சத்தம் கேட்டது.

“என்ன மைக்கேலு? ரோமியோ இப்படிக் கத்துறான்”

“அதை விடு”

“அதெப்படி? வா போய் பார்க்கலாம்” என்று கதவின் பின்னே இருந்து வெளியே வந்தாள்.

‘ச்சே! இவனை என்ன பண்ணலாம்?’ என்று கோபத்துடன் மைக்கேலும் வந்து நின்றான்.

*****
மழை விட்டிருந்தது.

ரோமியோ தன் ஸ்வீட் ஹார்ட்டை தோளோடு தோள் சேர்ந்து அணைத்தபடி நின்றிந்தான்.

“ஏய் தனம்! என்னமோ சொன்னயாமே? நான் இவளைக் கல்யாணம் பண்ணிகிட்டது இரக்கபட்டுன்னு”

“அந்தக் கதையை யார் கேட்டாலும் அப்படித்தான் சொல்லுவாங்க ரோமியோ”

“அது கதையில்லை… என்னோடு காதல்”

“இருந்துட்டு போகட்டும். இப்ப என்ன பிரச்சனை உனக்கு?”

மேலும் மேலும் இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.

“போதும் நிறுத்துங்க. எதுக்காக வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? சாவியைத் தேடுவோமே” என்று எப்போதும் போல மைக்கேல் சமாதானப் படுத்தினான்.

அவன் சொல்வதும் சரிதான் என்று நினைத்து, தாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தைப் பார்க்க ஆரம்பித்தனர்.

பச்சை நிற வெல்வெட் கார்பெட் போல் தரைப் பகுதி பளபளத்துக் கொண்டிருந்தது. அதில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் மின்னும் நட்சத்திரங்கள்.

அப்பகுதியின் நடுவே ஒரு கதவு. எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் பழுப்பு நிறத்தில் தனியாக நின்றது. அதில் சாவிக்கான துவாரம் இருந்தது. மேலும் கதவின் ‘பொக்கிஷப் பேழை’ என்ற எழுத்துக்களின் அச்சுகள் இருந்தன.

மொத்தத்தில் அந்த இடத்தின் நிறங்கள், அந்த மாயப் பெண்ணை நினைவு படுத்தும் விதமாக இருந்தது.

இதைத் தவிர, அவர்கள் பார்த்துப் பயந்தது இரண்டு விடயங்கள்.

ஒன்று காற்றில் பறந்து பறந்து மேலே வரும் தங்கக் கண் கொண்ட ராட்சத மயில் பீலி.

மற்றொன்று அங்கே நின்று கொண்டிருக்கும் அந்த மாயப் பெண்ணின் உருவ பொம்மை. அதே அலங்காரங்களுடன்!

அனைத்தையும் உள்வாங்கி கொண்டார்கள்.

“என்ன பார்த்துகிட்டே இருக்கிறீங்க? போய்த் தேடுங்க” – மைக்கேல்.

“எங்கே போய்த் தேட? முதல இங்கே தேடுற அளவுக்கு என்ன இருக்கு?” – ரோமியோ.

“அதனா” – தனம்.

எனினும் தேட ஆரம்பித்தார்கள். அப்பகுதியின் விளிம்புகளின் சென்று முட்டி போட்டு அமர்ந்து கொண்டு, கீழே குனிந்து தேடினார்கள்.

கிடைக்கவில்லை!

தனியாக நின்ற கதவைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

அதிலும் இல்லை!

என்ன செய்யவென்று தெரியவில்லை. இதுவரை கஷ்டப்பட்டு தேடும் போது கூட, இவ்வளவு எரிச்சல் வந்ததில்லை.

அனைவருக்கும், இயலாமை! கோபம்! சலிப்பு! வலி! அத்தனை உணர்வுகளும் ஒரு சேர இருந்தன.

“அந்தப் பெரியவர் நம்மள ஏமாத்திட்டாரோ?” என்று ரோமியோ சந்தேகத்துடன் கேட்டான்.

“ச்சே அப்படியெல்லாம் இருக்காதுடா” என்றான் மைக்கேல்.

“பின்ன இதுக்கு என்ன அர்த்தம்?” என்று சுற்றியிருந்த நிலத்தைப் பார்த்துக் கத்தினான்.

“ரோமியோ… பொறுமையா இருடா”

“சும்மா இருடா. அந்த ஆளு மேல செம்ம கோபத்தில இருக்கேன். கையில கிடைச்சாரு அவ்ளோதான்!” என்று சொன்னவன்,

கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கை முஷ்டியை மடக்கிக் கொண்டு, அருகிலிருந்து மாயப் பெண் பொம்மை மேல் குத்தினான்.

“ரோமியோ… கோபப்படாத…ஏன்.. ” என்ற ஸ்வீட் ஹார்ட், அதற்கு மேல் பேசாமல் ஆச்சரியப்பட்டு நின்றாள்.

ஏன்? மற்ற மூவருமே அவ்வாறுதான் நின்றார்கள்.

ஏனென்றால்…

ரோமியோவின் செயலால், அந்தப் பெண் பொம்மை அழ ஆரம்பித்தது. ஆனால் கண்ணீர் வரவில்லை. மாறாக, ‘கண்ணீர் எழுத்துக்கள்’ வந்தன.

அதாவது பொம்மையின் கண்களில் இருந்து, தங்க நிறத்தில் ‘பொக்கிஷப் பேழை’ என்ற சொல்லின் ஒவ்வொரு எழுத்துக்களும் கண்ணீராய் வடிந்து வந்து விழுந்தன.

ஒவ்வொரு எழுத்துக்களும் வைரக் கற்கள் போன்று ஜொலி ஜொலிக்கும் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அந்த இடத்தின் ஒளியுடன் இதுவும் சேர்ந்து கொண்டது.

கடைசி எழுத்து வரும் வரை, ரோமியோ காத்திருந்தான். மேலும் தனத்தை, அவன் அருகே வரவிடவில்லை.

எல்லா எழுத்துக்களும் விழுந்து முடித்த பின், நிதானமாக ஒவ்வொரு எழுத்தாய் எடுத்துச் சென்று, அக்கதவின் ‘பொக்கிஷப் பேழை’ அச்சுகளில் வைத்தான்.

அனைத்து எழுத்துக்களும் வைத்த பின்… கதவிலிருந்த அந்த எழுத்துக்கள்… சிறிது நேரம் பளிச்சென்று மின்னல் போல் மின்னி மின்னி வெட்டியது. ஓரிரு நொடிகளிலுக்குப் பின் பளிச்சென்ற அந்த ஒளி அடங்கி நின்றது.

நான்கு பேரும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நடுக்கத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அக்கணம், கதவின் வழியே ஒரு பெண்ணின் கரம் நீண்டு வந்தது. ஏந்தினார் போல இருந்த, அதன் இரு கரங்களிலும் ஜொலி ஜொலிக்கும் திறவுகோல் இருந்தது.

ஒருகணம் நால்வரும் அதிர்ந்தனர்!

ரோமியோ சுதாரித்துக் கொண்டு, முகம் நிறைய புன்னைகையோடு சென்று , அப்பெண்ணின் கைகளிலிருந்து சாவியை எடுத்துக் கொண்டான்.

பின் தனத்தைப் பார்த்து, ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

தனத்தை தவிர மற்ற எல்லோர் முகத்திலும் ஒரு பெரிய நிம்மதி மற்றும் சந்தோசம்.

“ரோமியோ… சாவியை வச்சி கதவைத் திறடா” என்றான் மைக்கேல் பொறுமை இல்லமால்!

“அதுக்கு எதுக்கு திறக்கணும். அந்தப் பக்கம் போய் பார்த்தாலே தெரிஞ்சிடும்” என்றாள் தனம் பொறாமையோடு!

அவர்கள் இருவரது பேச்சையும் பொருட்படுத்தாமல் ரோமியோ சாவியைக் கதவின் தூவாரம் வழியே நுழைத்தான். இரண்டு சுற்றுகள் சுழற்றி கதவைத் திறந்தான்.

நாலாபுறமும் கண்ணைக் கூசச் செய்யக்கூடிய பிரகாசமான ஒளி வாரி இறைக்கப்பட்டது.

தக தகவென மின்னும், பச்சை மற்றும் சிவப்பு கற்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டி இருந்தது. அதன்முன் பக்கத்தில் தங்க மூலாம் பூசப்பட்ட பெரிய பூட்டு தொங்கியது.

மேலும் அதன் மேற்புறத்தில் திறவுகோலுக்கான அச்சு இருந்தது.

அக்கணம் ஓர் அசரீரி வந்தது…

முதலில் திடுக்கிட்டார்கள், பின்னர் காதைத் தீட்டி வைத்துக் கேட்டார்கள்.

அசரீரி இப்படிச் சொல்லியது….

‘திறவுகோலை பேழையின் இருக்கும் ‘திறவுகோல் அச்சில்’ வைக்கவும். ஆறு கல் நாணயங்களையும் அதனருகில் வைக்கவும்.

அடுத்த நொடி பேழையின் பூட்டு திறக்கப்படும்!

வேண்டிய மட்டும் பொக்கிஷத்தை எடுத்துக் கொள்ளவும்!!

ஆனால் இவை அனைத்தும், இங்கே தொங்கிக் கொண்டிருக்கும், அனைத்து மயில் பீலிகளும் கீழே விழுந்து எரிந்து முடிப்பதற்குள் செய்து முடிக்க வேண்டும்.

இல்லாவிடில் இந்த மாய உலகத்தில் நீங்கள் சிறை வைக்கப்படுவீர்கள்!’

அசரீரி முடிந்தவுடனே கால அளவு தொடங்கியது.

அதாவது முதல் மயில் பீலி, கீழே இருந்த பாறைகளுக்கு ஊடே விழுந்து எரிய ஆரம்பித்தது.

ஒருகணம் ரோமியோ ஸ்தம்பித்து நின்றான்.

பீலி எரிவதை எட்டிப் பார்த்துவிட்டு வந்த மைக்கேல், “ரோமியோ சீக்கிரமா சாவியை வச்சுப்பாரு” என்று துரிதப்படுத்தினான்.

“ம்ம்ம்” என்ற ரோமியோ பேழையின் திறவுகோலுக்கு உரிய அச்சில் சாவியை வைத்தான்.

தன்னிடம் இருந்த மூன்று நாணயங்களைப் போட்டுவிட்டான். ஆனால் அடுத்த மூன்று?

ரோமியோ தனத்தைப் பார்த்தான். இப்பொழுது, தனம் ரோமியோவைப் பார்த்துச் சிரித்தாள்.

“தனம் காயின் கொடு” என்ற ரோமியோவின் குரல் கம்மிப் போய் வந்தது.

“என்னது? நான் கஷ்டப்பட்டு எடுத்த காயின உன்கிட்ட கொடுக்கணுமா?” என்று தனம் முரண்டு பிடித்தாள்.

இந்த நேரத்தில், மேலும் மூன்று பீலிகள் விழுந்து எரிந்து சாம்பலாயின.

ஸ்வீட் ஹார்ட், மைக்கேல் இருவரது முகத்திலும் பயத்தின் ரேகைகள் தெரிந்தன.

“தனம் டயமுக்குள்ள முடிக்கலைனா… நம்ம தப்பிக்கவே முடியாது” என்று சொல்லி ரோமியோ பேசிப் பார்த்தான்.

“சரி தர்றேன். அப்போ எனக்கு என்ன கிடைக்கும்? அதைச் சொல்லு” என்று கேட்டு, தனம் பேரம் பேசினாள்.

“அதைப் பத்திப் பேசுற நேரமா இது? கொடு தனம்” என்று ரோமியோ மன்றாடிக் கேட்டான்.

“வேற எப்போ பேச ரோமியோ? இதுதான் என்னோட லாஸ்ட் சான்ஸ்” என்று தனம் மனம் மாறாமல் பேசினாள்.

அதற்கு மேல் கெஞ்சிக் கேட்க முடியாம‌ல், ரோமியோ “ச்சே” என்று எரிச்சல் கொண்டு நின்றான்.

இக்கணம் மேலும் நான்கு பீலிகள் கீழே விழுந்து எரிந்து முடிந்தது! ஸ்வீட் ஹார்ட், ரோமியோ அருகில் வந்து நின்றாள்.

தனம் பிடிவாதத்தின் உச்சத்தில் நின்றாள். வேறு வழியில்லாமல், மைக்கேல் தனத்தின் அருகில் வந்தான்.

“தனம், ப்ளீஸ் காயின ரோமியோகிட்ட கொடு” என்று மைக்கேல் கெஞ்ச ஆரம்பித்தான்.

“அவன்கிட்ட கொடுத்திட்டு… புதையலுக்கு நான் என்ன பண்ண?”

“தனம் அவன்கிட்ட கொடு”

“முடியவே முடியாது”

மைக்கேலுக்கு கோபம் வந்தது.

“சொன்னா கேட்கவே மாட்டியா? கொடு தனம்” என்று, அவளது பையிலிருந்து நாணயத்தை எடுக்கப் பார்த்தான்.

“வேண்டாம் மைக்கேலு. இது ரொம்பத் தப்பு” என்று அவனுடன் மல்லுக்கட்டினாள்.

இருவருக்கும் இடையே போராட்டம் நடந்தது.
மைக்கேலால் முடியவில்லை. பொறுமை பறந்தது.
கோபம் பிறந்தது.

“மரியாதையா காயின கொடு தனம்”

“எனக்கும் புதையல்ல பங்கு கொடுக்கச் சொல்லு. கண்டிப்பா தர்றேன்”

“அய்யோ தனம் புரிஞ்சுக்கோ! ரோமியோ புதையல் எடுத்தாலும்… பாதிப் புதையல் உனக்குத்தான் கிடைக்கும்” என்று வாய் தவறி வார்த்தை விட்டான்.

தனம் புரியாமல் விழித்தாள். அதே நேரம், ‘மைக்கேல் என்ன அர்த்தத்தில் பேசுகிறான்?’ என்று ரோமியோவும் புரியாமல் நின்றான்.

“அது… அது… அதெப்படி அந்தப் பெரியவருக்குத்தான கிடைக்கும்” என்றவளது குரல் தேய்ந்து போய் வந்தது.

“யாரு பெரியவர்? ஆங்! யாரு பெரியவரு? மாறனா?? அவன் ஒரு சின்னப் பையன்” என்று உண்மையைப் போட்டு உடைத்தான்.

தனமும் தன்யாவும் வாய் மூடி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். ரோமியோ கண்கள் சுருக்கி மைக்கேலை சந்தேகத்துடன் பார்த்தான்!

“மைக்கேல் நீ என்னடா சொல் வர்ற?” – ரோமியோ.

இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது என்று நினைத்து, “புதையல் பத்தின புக் எனக்குத்தான் கிடைச்சது. மாறன் என்னோட ஆளு. தனம் நீ காயின கொடு, மத்ததெல்லாம் அப்புறம் சொல்றேன்” என்று மிக எளிதாக மைக்கேல் சொன்னான்.

இக்கணம் மைக்கேலைப் பற்றி சில விவரங்கள் தேவைப்படுகின்றன…

பெயர் : மைக்கேல்
வயது : காதலிக்கவும், காதலிக்காக எதையும் செய்யவும் ஏற்ற வயது
குறிக்கோள் : குறுக்கு வழியிலாவது மாமா மகளின் குறிக்கோளுக்கு உதவிட நினைப்பது
எடை : ரோமியோவிற்கு இருக்கும் கோபத்தில், மைக்கேலை அடித்தால், திருப்பி அடிக்கும் அளவிற்கு பலசாலி.

மைக்கேல் இரண்டாவது நாயகனா?? இல்லை வில்லனா?? என்று… எதிரில் கொலை வெறியுடன் நிற்கும் ரோமியோவும் தனமும் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் இவன்தான் கதையின் நாயகன்!

கதாநாயகனுக்கே ‘டஃப்’ கொடுத்ததாலும், கதையின் நாயகன் காதலிப்பதாலும்… தனம் கதையின் நாயகி என்ற அந்தஸ்த்தைப் பெற்றாள்!!

error: Content is protected !!