Pokisha pezhai – 3

Pokisha pezhai – 3

ரோமியோவும், தனமும் தத்தம் மனதினில், இந்த நாள் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த நாளாக நினைத்தனர்.
புதையல் உண்மையா? பொய்யா?… புதையல் பற்றிய செய்தி கொடுத்தது யார்?…
இதுவரைக் கண்டிடாத உலகத்தில் எப்படித் தாக்குப்பிடிக்க முடியும்?…

இப்படி எந்த ஒரு கேள்வியும், அவர்களுக்கு எழவில்லை. சுலபமாக தங்கள் குறிக்கோளை அடைய வழி என்று மட்டுமே நினைத்தனர். ஏழ்மை அவர்களை அப்படி நினைக்க வைத்தது.

மனதிற்குள் பெரிய பேராசைகள் கொண்டு, அடுத்த நாளே கிளம்பிச் செல்ல முடிவெடுத்தனர்!

*****

மைக்கேல் வீடு

தனமும் மைக்கேலும் வீடு வந்து சேர்ந்தனர். ஒற்றை அறை கொண்ட கூரை வீடுதான்.

பேருக்குத்தான் மைக்கேல் வீடு, ஆனால் இருப்பது தனலெட்சுமி கட்டுப்பாட்டில்.

வீட்டின் வெளியே ஒரு முதியவர் அமர்ந்து பாத்திரங்கள் தேய்த்துக் கொண்டிருந்தார். இவர் தனத்தின் அப்பா மற்றும் மைக்கேலின் அம்மாவைப் பெற்றவர். தனம், தன் பெற்றோர்களைச் சிறு வயதிலேயே இழந்தவள். அதன் பின் அவளின் வாசம் இந்த வீட்டில்தான்.

மைக்கேலின் பெற்றோர், தனத்தை மருமகளாக்கிப் பார்க்க ஆசைப் பட்டனர். ஆனால் தனத்தின் மறுப்பினால், அந்த ஆசை நிறைவேறும் முன்னரே அவர்களது உயிர் பிரிந்தது.

இப்போது, இந்த முதியவரின் ஆசையும் அதேதான்.

இருவரும் வந்திருப்பதைப் பார்த்தவர், “ஏய் தனம்! வீட்ல வேலை செய்யாம எங்க போயிட்டு வர?” என்று கேட்டார்.

“கட்சி வேலை இருந்திச்சு” என்று சொல்லி, வெளியே போடப்பட்டிருந்த பலகையில் அமர்ந்தாள்.

“எத்தனை தடவ சொல்லிருக்கேன்? கட்சி ஆபீஸ் போக்கூடாதுன்னு. கேட்க மாட்டியா?” என்று சிடுசிடுப்புடன் கேட்டார்.

“வேற என்ன செய்யச் சொல்ற?” என்று எங்கோ பார்வை பார்த்தபடி சொன்னாள்.

“மில்லு வேலைக்குப் போ. இல்லையா?? இதோ இவனைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்று தன் பேரனைக் கை காட்டினார்.

“ரெண்டும் என்னால முடியாது” என்றவள், எழுந்து விட்டாள்.

“ஏன்? ஏன் பேரனுக்கு என்ன குறைச்சல்? எப்பக் கேட்டாலும் முடியாது முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்க” என்றார்.

“ஒரு பத்து நாளைக்குக் கட்சி வேலையா வெளியூர் போகப் போறேன்” என்று கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதிலைச் சொல்லிவிட்டு, வீட்டிற்குள் சென்று விட்டாள்.

“என்னடா இவ இப்படிச் சொல்லிட்டு போறா?” என்று மைக்கேலைப் பார்த்துப் கேட்டார்.

பெரியவரின் அருகில் அமர்ந்து, அவருக்கு உதவி செய்தவாறே, “போகட்டுமே” என்று மெதுவாகச் சொல்லிப் பார்த்தான்.

“நீ அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டாதடா. இப்படிப் போறதெல்லாம் நல்லாவ இருக்கும்”

“விடுங்க! நானும் கூடப் போறேன்ல. நான் பார்த்துக்கிறேன்”

‘எனக்கு இதில் உடன்பாடு இல்லை’ என, அவரின் பார்வையே சொல்லியது.

“நம்புங்க. இந்தப் பத்து நாள்ல, தனத்தோட மனச மாத்திருவேன்”

“பத்து வயசுலருந்து பார்க்கிற… பேசிற. அவளைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியலை. திட்டுதான் வாங்கிட்டு இருக்க. இந்த பத்து நாள்ல என்ன செய்யப் போற?”

“நீ வேணா பாரு, கண்டிப்பாக அவ திரும்பி வந்து, ‘எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு’ கேட்பா!!”

‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்பது போல் கண்களால் கேள்வி கேட்டார்.

“நிஜமா கேட்பா”

“அப்படி நடந்தா சந்தோஷம்டா. கட்டிக்கப் போறவன் கூட்டிட்டுப் போறேன்னு சொல்ற. நல்லபடியா போயிட்டு வா”

இதுபோன்று கட்சி வேலை என்று இருவரும் வெளியூர் செல்வது வாடிக்கை என்பதால், முதியவர் வேறு எதுவும் கேட்கவில்லை.

“சரி. நீ பார்த்து பத்திரமா இருந்துக்கோ” என்று சொல்லிவிட்டு, மைக்கேல் எழுந்து வீட்டிற்குள் சென்றான்.

தனம் சுவரின் சாய்ந்தபடி, தரையில் அமர்ந்திருந்தாள். மைக்கேலும் வந்து, அவள் அருகில் அமர்ந்தான்.

“என்ன சொல்றாங்க மைக்கேலு?” என்று சலுகையாக அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

“ம்ம், போகச் சொல்லிட்டாங்க” என்று சம்மதம் கிடைத்ததைத் சொன்னான்.

“எப்படி?”

“போயிட்டு வந்து, நீ கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன்னு சொன்னேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

சாய்ந்திருந்த அவன் தோள்களில் சட்டென்று அடித்தாள்.

“ஏன் அப்படிச் சொன்ன? அதெல்லாம் முடியாது மைக்கேலு” என்று சொல்லி, மீண்டும் சாய்ந்து கொண்டாள்.

“எனக்குத் தெரியும். ஆனா இப்படிச் சொன்னாதான் விடுவாங்க”

“ஓகோ! நீ தெளிவா இருக்கல்ல” என்று அவன் கண்கள் முன்பு, ஒற்றை விரல் நீட்டிக் கேட்டாள்.

“ம்ம்ம்”

“உனக்கு, என் ஆசை என்னன்னு தெரியும்ல” என்றவளின் கண்களில் அவளது கனவு தெரிந்தது.

“ம்ம், தெரியும்”

சற்று அமைதி நிலவியது.

“ஏன் தனம்? இது நமக்கு தேவையா?”

“எது?”

“இப்படிப் புதையல் எடுக்கப் போறது. பேசாம ரோமியோவே போய் எடுக்கட்டுமே”

“இது ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அதெல்லாம் விட முடியாது. நீ என்கூட வருவீல”

மைக்கேல் சிரித்தான்.

“சிரிக்காத. சொல்லு மைக்கேலு”

“நான் உன் கூடவே வரட்டுமா?” என்று காதல் கேள்விகள் கேட்டுப் பார்த்தான்.

கேட்டவன் முதுகிலும் தோள்களிலும் கண்டபடி அடிகள் விழுந்தன.

“போதும், அடிக்காத தனம்” என்று தடுத்து நிறுத்தினான்.

ஓய்ந்து போய் நிறுத்தினாள்.

“மைக்கேலு, நீ இப்படி இருக்காத. புதையல் கூட கிடைச்சிடும். ஆனா என் மனசு கிடைக்காது” என்று வியாக்கியானம் பேசினாள்.

“ம்ம்ம் சரி, சரி” என்று விட்டேற்றியாக எதிர்வினை புரிந்தான்.

“இங்கப்பாரு மைக்கேலு! தேவையில்லாம மனசில கனவுக் கோட்டைக் கட்டாத. அப்புறம் நான் முடியவே முடியாதுன்னு சொன்னா, உன் மனசு உடைஞ்சு போயிடும்” என்று அத்தை மகனுக்கு அறிவுரை வழங்கினாள்.

“பரவால்ல என் மனசுதான உடைஞ்சி போகும். உன் மனசு அப்படியேதான இருக்கும்” என்று அமைதியாகப் பதில் சொன்னான்.

அவனையே பார்த்தபடி இருந்தாள்.

“பின்ன என்ன? ஏதோ நேத்து லவ்வ சொல்லி இன்னைக்கு நீ வேண்டாம்னு சொல்ற மாதிரி பேசுற”

சிரித்தாள்.

“நான் லவ் பண்றேன்னு சொன்ன நாள்ல இருந்து இப்படித்தான் பேசிக்கிட்டு இருக்க” என்று எழுந்து சென்றுவிட்டான்.

அருகிலிருந்து அணைக்கட்டாமல் அளிக்கப்படும் அத்தை மகனின் அன்பை, அவளால் உணர்ந்தறிய முடியவில்லையோ?

ரோமியோ வீடு

அந்தச் சிறு அறையில், ரோமியோ வயர் கட்டிலில் அமர்ந்திருக்க, அவன் முன்னே அந்த இரு இளைஞர்கள் தரையில் உட்கார்ந்திருந்தனர். மற்றொரு அறைக் கதவின் அருகே ஸ்வீட் ஹார்ட் நின்று கொண்டிருந்தாள்.

அனைவரும் அமைதியாக இருந்தனர். ரோமியோ, எல்லாம் சொல்லி முடித்துவிட்டிருந்தான். ஆதலால் வந்த அமைதி.

“ஏதாவது சொல்லுங்கடா?” – ரோமியோ.

“ரோமியோ இதுல நிறைய ரிஸ்க் இருக்கு” – இளைஞன்-1.

“ஆமாடா! ரிஸ்க் இருக்கு. ஆனா புதையல் கிடைக்கும்ல”

“இவ்ளோ கஷ்டப்பட்டு புதையல் எடுக்கணுமா?” – இளைஞன்-2.

“ஒரு கஷ்டமும் இல்லை. நான் பார்த்துகிறேன். சரியா? ”

“டேய்! உயிருக்கு ஆபத்து இருக்குன்னு சொல்லயிருக்காரு. உனக்கு பயமா இல்லையா?” – இளைஞன்-1.

“எங்களுக்கு உன்னை விட்டா யாரும் இல்லை ரோமியோ” – இளைஞன்-2.

இதைக் கேட்டவுடன், ஸ்வீட் ஹார்ட் அறைக்குள் சென்று விட்டாள்.

“பயந்தா ஒன்னும் பண்ண முடியாது” என்றான், அவள் போவதையே பார்த்திருந்த ரோமியோ.

அமைதியாக இருந்தனர்.

“டேய்! நான் சொல்றதைக் கவனமா கேளுங்க”

“சொல்லு” – இளைஞன்-1.

“இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாக் கூடாது. யார்கிட்டயும் போய் உளறி வச்சிராதீங்க”

“சரிடா” – இளைஞன்-1.

“அதோட கட்சி வேலையெல்லாம் ரெண்டு பேரும் பார்த்துக்கோங்க. யாராவது என்னைய பத்திக் கேட்டா?, வெளியூர் போயிருக்கேன்னு சொல்லுங்க”

“ஏன் ரோமியோ? அதான் புதையல் கிடைக்கப் போகுதே, எதுக்கு கட்சி வேலை?” – இளைஞன்-2.

“யாருக்குத் தெரியும்? கிடைக்காமலும் போகலாம். ஸோ இருக்கிற வேலையை விடக் கூடாது”

“ஓ! சரி”

“உங்களுக்கு ஏதாவது காசு வேணும்னா? ம்ம் கட்சி ஆஃபீஸ்ல வாங்கிக்கோங்க”

“ம்ம்ம் சரி. நீ பத்திரமா போயிட்டு வாடா” – இளைஞன்-1.

“சரி, நாளைக்கு காலையில நான் கிளம்புறேன்” என்று எழுந்தவன், “பத்திரமா இருந்துக்கோங்கடா” என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றான்.

இளைஞர்களும் வெளியே சென்று விட்டனர்.

ரோமியோ உள்ளே நுழையும் போது, அவனது ஸ்வீட் ஹார்ட், அந்த அறையின் சன்னலின் அருகே நின்றிருந்தாள்.

“ஸ்வீட் ஹார்ட்” என்று, அவள் அருகே வந்து அழைத்தான்.

“பயமா இருக்கு ரோமியோ. நிஜமாவே ரொம்பப் பயமா இருக்கு” என்று தன் நிலை சொன்னாள்.

“எதுக்குப் பயப்பிடற?” என்று அவளின் தலை கோதியபடியே தன்னிகரற்ற காதலன் ரோமியோ.

“இந்தப் புதையல் எடுக்கப் போறத நினைச்சா?” என்றாள் மையல் விழிகளில் மையம் கொண்டிருந்த பயத்துடன்.

“சரி, நீ வேணா இங்கேயே இருக்கியா?”

“உன்னை விட்டுட்டு என்னால எப்படி இருக்க முடியும் ரோமியோ?”

“ஸ்வீட் ஹார்ட்” என்று மென்மையான காற்றின் குரலில் அழைத்து, “அதுக்காகத்தான் உன்னையும் கூட்டிட்டுப் போறேன்” என்று மேன்மையான காதல் குரலில் முடித்தான்.

“ஏன் ரோமியோ? போகாம இருக்க முடியாதா” என்றாள், ஒரு விரலால் அவனது நெஞ்சத்தில் காதல் கோலம் போட்டுக் கொண்டே!

“இது ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அதெல்லாம் விட முடியாது”

“ஆனா உயிருக்கு ஆபத்து இருக்குன்னு சொன்னாருல. அதான் பயமா இருக்கு” என்று காதல் கொண்டவள் பிதற்ற ஆரம்பித்தாள்.

அது பிதற்றலாகக் காதலன் ரோமியோவுக்குத் தெரியவில்லை! ‘ஸ்வீட் ஹார்ட்’ தன் மீது வைத்திருக்கும் பிரமாண்டக் காதலாகத் தெரிந்தது!!

“உனக்கு ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு ரோமியோ”

“ச்சே ச்சே.. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது”

மிகவும் யோசித்தவள், “எனக்கு…” என்று ஆரம்பிக்கும் முன்னே, அவள் இதழ்களில் ஒற்றை விறல் வைத்து, “அப்படிச் சொல்லாத” என்று கேட்டுக் கொண்டான்.

இஷ்டமானவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என நினைத்து, அவள் இதயம் கசந்து கசந்து துடித்தது. அந்தக் கசப்பு, முகச் சுளிப்பாய் வெளி வந்தது. அந்தச் சுளிப்பை, களிப்பாய் மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினான்.

குறைவான பேச்சு!
குறையாதக் காதல்!!
கோடி கோடியாய் பயம்!! – அதுவே என் காதலி என நினைத்தவன்,

“ஸ்வீட் ஹார்ட்” என்று அழைத்து, கண் தீண்டிடும் காதலுடன் பார்த்தான்.

“சொல்லு ரோமியோ”

“லெட்ஸ் செலிபிரேட் அவர் பிரெஷ் லவ்” என்று இரு கைகளையும் காற்றில் விரித்தபடி கூறினான்.

பயங்கள் சேர்ந்த வெட்கம் காட்டினாள்.

பின்னர், காதலி இதழ்களைத் தீண்டி, கலப்படமற்ற காதல் கொண்டு இனிப்பு செய்து, அவள் இதயத்திற்கு ஊட்டினான். கசந்து கசந்து துடித்தக் காதலி இதயம் இனிது இனிது என்று துடிக்க ஆரம்பித்தது!

இந்த ரோமியோ ஒரு ‘இதழ் இனிப்புக் கடைக்காரன்’!!

அடுத்த நாள்…

நால்வரும் ஒன்றாகவே கிளம்பிச் சென்றனர். நெடுநேரம் பயணம் செய்த பிறகு, நெடுமாறன் சொன்ன மலையின் அடிவாரத்தை வந்தடைந்தனர்.

அந்தப் பகுதியை அடையவே மாலை ஆகிவிட்டது. அதற்குமேல் மலையில் ஏறுவது என்பது சாத்தியப்படாது என்று நினைத்து, அதன் அடிவாரத்தில் தங்குவதற்கு முடிவு செய்தனர்.

மலையின் அடிவாரம் என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் நடமாட்டம் இருந்தது. அதுவும் இரவின் தூரம் நீள நீள, ஆட்கள் குறையத் தொடங்கி… நடுச் சாமத்தில் ஆட்கள் அரவமே இல்லாமல் இருந்தது.

அத்தியாவசியத் தேவைகளுடன் சேர்த்து, கைவசம் கூடாரம் அமைக்கும் பொருட்கள், சிறிய பெரிய கத்திகள் கொண்டு வந்திருந்தனர். அதனை வைத்து கூடாரம் அமைத்துக் கொண்டு, அந்த இரவுப் பொழுதை எதிர் கொண்டனர்.

இதற்கு முன், இது போன்ற அனுபவங்கள் இல்லாததால், அந்த இரவைத் தூக்கமில்லாமல் கடந்தனர்.

காலை விடியல் வருவதற்கு முன்பே, கூடாரத்தைக் கலைத்துவிட்டு, மலையின் மீது ஏற முடிவு செய்தனர். வைகறை பொழுது என்பதால், ஆட்கள் நடமாட்டம் ஓரளவிற்குத்தான் இருந்தது.

மலையின் உயரம் தொடுவதற்கான பயணம் தொடங்கியது.

முதலில் சமதளத்தில் நடப்பது போன்று இருந்தாலும், கொஞ்சம் தூரம் நடந்த பின்னர், உயரம் நோக்கிச் செல்வது போன்ற உணர்வு வந்தது. காரணம், மூச்சு வாங்கல்களும், வியர்வை வழிசல்களும் அப்படி!

அது நால்வரையும் நன்றாகக் களைப்படையச் செய்தது.

இருந்தும் முன்னேறி சென்றனர். அதன் பின் செங்குத்தான பாதைகளில் ஏறினார்கள். போகப் போகப் பச்சை நிற காட்டு வலைக்குள் மாட்டிக்கொண்ட உணர்வு வந்தது.

இன்னும் ஏறினார்கள். ஒரு கட்டத்திற்கு மேல், ஏதோ தனித்து விடப்பட்ட உணர்வு வந்தது. சூழலைச் சுற்றிப் பார்த்தார்கள். ஒன்றும் புரிபடவில்லை!

மேலும் நடக்கத் தொடங்கினர். புதர்களுக்குள்ளும், செடி கொடிகளுக்கும் நடந்தனர்.

அதிக தூரம் நடந்த பின்னர், ஒரு சிதைந்து போன கற்பாறை ஒன்றை புதர்களின் மறைவில் கண்டனர். அதை ரோமியோ கூர்ந்து நோக்கினான். மற்றவர்களும் பார்த்தார்கள்.

அந்தக் கற்பாறையில், ஏதோ எழுத்துகள் இருப்பது போன்று தெரிந்தது. ஆனால் அவை சேதமடைந்த நிலையில் இருந்ததால் வாசிப்பதற்கு கடினமாக இருந்தது.

கடைசியில் வாசித்து விட்டார்கள்.
அந்த எழுத்துக்கள் “பொக்கிஷத் தீவு’.

இப்பொழுது அனைவரும், எதிரே விரிந்து பரந்து தெரியப் போகும் அதிசய உலகத்தைப் பார்த்தனர்.

அவர்களுக்குப் புரிந்து போயிற்று! இங்கிருந்து பொக்கிஷப் பேழை புத்தகத்தைத் தேடிடும் பணி என்று.

இந்தத் தேடலில்,

தன் காதலுக்கும் காதலனுக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்வீட் ஹார்ட்!

எப்படியாவது தனத்தை தன் காதலியாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மைக்கேல்!

என்ன இடர் வந்தாலும் புதையலை எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ரோமியோ மற்றும் தனம்!!

நின்று கொண்டிருந்தனர்!!!

error: Content is protected !!