தனமும் மைக்கேலும் சேர்ந்து ரோமியோ இருக்குமிடத்திற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் கண்டது, ரோமியோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருப்பதைத்தான்.
தனம் சிரித்தாள்.
“எதுக்கு சிரிக்கிற தனம்?”
“இல்லை, எவ்ளோ சின்சியரா தேடுறான் பாரு?” என்று சொல்லி, மேலும் நகைத்தாள்.
“இப்போ என்ன செய்யப் போற?”
“பாரு” என்று மைக்கேலிடம் சொன்னவள், “ஹலோ லவ் பேட்ஸ், இங்கே வாங்க” என்று கத்திக் கூப்பிட்டாள்.
ரோமியோவும் ஸ்வீட் கார்டும் திரும்பிப் பார்த்தனர்.
“இவ எதுக்கு கூப்பிடறா?” என்று கேட்டுக் கொண்டே, ஸ்வீட் ஹார்ட் இருக்கும் இடத்திற்கு வந்து நின்றான்.
கூரான ஓரங்கள் கொண்ட துளைகளில் துழாவித் தேடியதில் ரோமியோவின் கைகள் முழுவதும் சிவந்திருந்தன.
“உன் கையெல்லாம் எப்படி இருக்குன்னு பாரு ரோமியோ” என்று அன்பாய் கூறி, ஆசையாய் பார்த்து, இதமாய் தடவிவிட்டாள்!
குறுநகை புரிந்து, “அதை விடு ஸ்வீட் ஹார்ட். வா, போய் பார்க்கலாம்” என்று கை கோர்த்தபடியே இருவரும் தனத்தை நோக்கிச் சென்றனர்.
*****
தனத்தின் அருகில் வந்ததும், “எதுக்கு கூப்பிட்ட? தேட விடமாட்டியா?” என்று கேட்டான் ரோமியோ.
“ஓ! அப்புறம்….” என்று லேசாகத் சிரித்தவள், “வீட்டுக்கு எப்படிப் போகப்போறீங்க? பறந்தா?? இல்லை, நடந்தா?” என்று கேட்டாள்.
“மைக்கேல், இவ என்னடா சொல்றா?”
“ரோமியோ, அவளுக்குப் புக் கிடைச்சிருச்சிடா. அதான் இப்படி”
“வாவ், கங்கிராட்ஸ்” என்று ஸ்வீட் ஹார்ட் புன்னகை புரிந்து, தனத்தை வாழ்த்தினாள்.
ஆனால் தனமோ ஸ்வீட் ஹார்ட்டிடம், ‘அங்கே பாரு’ என்று கண்களால் ரோமியோவைக் காட்டினாள்.
தோல்வியின் வெளிப்பாட்டைக் காட்டின ரோமியோவின் முகம். ‘அடுத்து என்ன செய்ய? இவளுக்கு எப்படிக் கிடைத்தது?’ இப்படி பல பல கேள்விகள் மூளைக்குள் வட்டமிட்டபடி நின்று கொண்டிருந்தான்.
“ரோமியோ, இனி நீ எங்க கூட வரக் கூடாது. திரும்பிப் போ” என்று அதிகாரமாய், தனம் பேசினாள்.
“அதெல்லாம் போக முடியாது” என்று ஆத்திரத்துடன், ரோமியோ பதில் தந்தான்.
“ஏய் ரோமியோ! அந்தப் பெரியவர் சொன்னது ஞாபகம் இல்லையா?”
“நல்லாவே ஞாபகம் இருக்கு”
“அப்புறம் என்ன?? அதுக்கு ஒத்துக்கிட்டுதான வந்த???”
“ஆமாம், ஆனாலும் போக முடியாது. மைக்கேல் நீ இவளை ஏதும் சொல்ல மாட்டியா?? ”
மைக்கேல் அமைதியாக நின்றான்.
“எதுக்கு தேவையில்லாத பேச்சு, நீ கிளம்பு” – தனம்.
“ச்சே! இப்போ என்ன? நான் போகணும் அவ்ளோதான!! போறேன்” என்று தனத்திடம் சொன்னவன், “வா ஸ்வீட் ஹார்ட்” என்று மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க அடிகள் எடுத்து வைத்தான்.
ஒரு இரண்டு நொடி கூட முழுமை அடைந்திருக்காது. அதற்குள்…
“தனம்” என்ற அழைப்பு ரோமியோவிடமிருந்து…
தனம் எதுவும் பேசாமல், ‘என்ன?’ என்பது போன்ற பார்வை பேச நின்றாள்.
“எங்கே போறேன்னு கேட்க மாட்டியா?” என்று மெல்லிய புன்னகை புரிந்து கேட்டான்.
அவன் கேட்ட கேள்விக்கான விடை தெரிந்ததால், “எங்.. எங்கே… போற?” என்று திணறினாள்.
“இந்த விஷயத்தை யார்கிட்ட சொல்லணுமோ அவங்ககிட்ட போய் சொல்லப் போறேன்”
தனம் அதிர்ந்தாள்.
“அப்படி முடியலைன்னா, போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லுவேன். அதுவும் இல்லையா கட்சி ஆபீஸ்ல சொல்லுவேன்”
தனம் எரிஅமிலம் போல் எரிச்சல் கொண்டாள்.
“நீயே சொல்லு தனம், இப்போ நான் என்ன பண்ணன்னு??”
“மைக்கேலு அவனைப் போக வேண்டாம்னு சொல்லு” என்று கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக முன்னே நடக்க ஆரம்பித்தாள்.
“அதான் அவ சொல்லிட்டாள ரோமியோ. வாடா” என்றான் ஆறுதலானக் குரலில் மைக்கேல்.
ஆனால் ரோமியோ, இன்னும் அதே இடத்தில் நின்று கொண்டு, “அவதான போகச் சொன்னா, அப்போ அவளையே போக வேண்டாம்னு சொல்லச் சொல்லு மைக்கேல்” என்று பிடிவாதமாகச் சொன்னான்.
“இது தப்பு ரோமியோ! நம்ம சான்ஸ மிஸ் பண்ணிட்டோம். ஆனா சிஸ்டர் நமக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருக்காங்க. ஸோ நீ இப்படிப் பண்ணக் கூடாது” என்று ஸ்வீட் ஹார்ட் சரியாகப் பேசினாள்.
அப்படிச் சொல்லியவளைப் பார்த்தவன், “சரி” என்று மொட்டையாகச் சொல்லி நடந்து செல்ல ஆரம்பித்தான். ஸ்வீட் ஹார்ட்டும் அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவர்களைப் பின் தொடர்ந்து, மைக்கேல் நடந்தான். சற்று தூரம் நான்கு பேரும், இதே வரிசையில் தனித்தனியாக நடந்து கொண்டிருந்தனர்.
“இப்படியே போனா என்ன அர்த்தம்? எல்லாரும் வாங்க… உட்கார்ந்து பேசி ஒரு முடிவெடுக்கலாம்” என்று மைக்கேல் கேட்டுப் பார்த்தான்.
ஸ்வீட் ஹார்ட் மட்டும் நின்று திரும்பிப் பார்த்தாள். ஆனால் மற்ற இருவரும் மைக்கேலின் பேச்சைக் கேட்பதாக இல்லை. நிற்காமல் சென்றனர்.
சற்று நேரத்தில் திரும்பவும் மைக்கேல், “புக் என்ன சொல்லு-துன்னு பார்க்க வேண்டாமா?” என்று கேட்டான்.
அந்தக் கேள்வியில், முன்னே சென்ற மூன்று பேரும் நின்றனர். சிறிது யோசித்தார்கள். பிறகு, மனம் சமாதானமாகி, நால்வரும் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
தனம் தன் மடியில் பெட்டியை வைத்துக்கொண்டு உம்மென்று இருந்தாள்.
“இப்போ ஏன் ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க?” என்று மைக்கேல் ஆரம்பித்தான்.
“நான் புக்-க யாருக்கும் தரமாட்டேன்” என்று வெடுக்கென்று சொன்னாள்.
“புக் என் கையில இல்லாம, நான் இங்கிருந்து யூஸே இல்லடா” என்று எழுந்து கொள்ளப் பார்த்த ரோமியோவை… மைக்கேல்தான், “இருடா” என்று பிடித்து நிறுத்தினான்.
“இல்லை மைக்கேல்! நான் இருக்கணும்-னா எனக்கு ஏதாவது யூஸ் இருக்கனும்”
“இரு ரோமியோ! இரு! நான் ஒரு ஐடியா சொல்லட்டா”
“என்ன ஐடியா?”
“இப்போ இந்த ஸ்டேஜ்ல தனம் காயின எடுத்திட்டா, அதனால அவகிட்டேயே புக் இருக்கட்டும்”
“அப்போ நான்??” – ரோமியோ.
“பொறுடா” என்றவன், ” அடுத்த ஸ்டேஜ்ல யாரு காயின எடுக்காங்களோ அவங்ககிட்ட புக்-க கொடுத்திடனும்” என்று இருவருக்கும் சமமாகப் பேசினான்.
மற்ற மூவரும் கேட்டனர்.
“கடைசி ஸ்டேஜ்ல யாருக்கு நிறைய காயின் இருக்கோ… யாருக்கு சாவி கிடைக்கோ, அவங்களுக்கு புதையல். ஓகேவா??”
“எனக்கு ஓகே” என்று சட்டென, ரோமியோ சம்மதம் தெரிவித்தான்.
“தனம் நீ சொல்லு” – மைக்கேல்.
தனம் மிகவும் யோசித்தாள். பின்னர், என்ன நினைத்தாளோ, “ம்ம்ம், ஓகே” என்றாள்.
“சரி. இப்போ அடுத்த ஸ்டேஜூக்கு எப்படிப் போகலாம்னு பாரு” என்றான் மைக்கேல்.
தன் கையிலுள்ள பெட்டியை எடுத்து முன்னே வைத்தாள்.
சுற்றிலும் பச்சை ஒளிக்கற்றைகள் வீசிக்கொண்டிருந்த சூழல். புடம் போட்ட தங்க நிறத்தில், அந்தப் பெட்டி இருந்தது. அதன் மீது சிற்சில ஓவியங்கள். அதுவும் பச்சை நிற பட்டு நூல் கொண்டு நெய்தது போல் ஜொலி ஜொலித்தது.
மெதுவாகத் தனம் பெட்டியின் கொண்டியைத் திறந்தாள்.
உள்ளே ‘பொக்கிஷப் பேழை’ என்று தலைப்பிடப்பட்ட புத்தகம். ஒருமுறை ஆழ்ந்த மூச்செடுத்து அனைவரையும் பார்த்தாள். பின், மெதுவாகப் புத்தகத்தைக் கைகளில் எடுத்தாள்.
கொஞ்சம் எடை அதிகம்தான். ஏனென்றால் புத்தகத்தின் அட்டை, கனமான தகடுகளை ஒன்றாகச் சேர்த்தது போல இருந்தது. அது வெண்கல நிறத்தில் இருந்தது. அதன் மீதும் சில பூக்கள், இலைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் போன்ற படங்கள் இருந்தன.
புத்தகத்தைத் திறக்கும் இடத்தில் கொக்கி போன்ற வடிவமைப்பு இருந்தது. கொக்கியை மேல் நோக்கி இழுத்து திறந்தாள்.
உள்ளே புத்தகத்தின் பக்கங்கள், காய்ந்து போன மல்லிகைப் பூக்கள் நிறத்தில் இருந்தன. எனினும் அதன் ஓரங்களில் தங்க நிறத்தில் பட்டையாக பட்டி இருந்து பளபளத்தது.
கண்டிப்பாக தனம் விடமாட்டாள் என்று தெரிந்தும், மற்ற மூவருக்கும் அதைத் தொட்டுப் பார்க்க ஆசை!
பின் மயில்பீலியினை எடுத்தாள். அதன் வெண்பகுதியானது, வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அதிலும் வேளைப்பாடுகள் இருந்தது. பீலியின் கண்கள் அடர் நீலநிறமும், கடல் பச்சை நிறத்திலும் தகதகவென மின்னியது.
மேலும் அப்பெட்டியினுள், ஒரு வெள்ளை நிறத்திலான சிறிய வட்ட வடிவமான கல் நாணயம். அதில் தங்க இலைகளால் சாவியின் முதல் பாகத்தின் முத்திரை பொறிக்கப் பட்டிருந்தது.
அதை அனைவரிடம் காட்டி, “புக்-தான் காமன். காயின் எனக்குத்தான்” என்றாள். மேலும், அந்த வெள்ளைக் கல் நாணயத்தைப் பைக்குள் வைத்துக் கொண்டாள்.
“சரி, அந்தப் பீலியை எடுத்துப் புக்-ல வைச்சிப் பாரு” – மைக்கேல்.
“ம்ம், சரி” என்று, தனமும் பீலியின் வெள்ளியால் ஆன வெண்பகுதியை, புத்தகத்தின் முதல் பக்கத்தில் வைத்தாள்.
எந்த எழுத்துக்களும் வரவில்லை. திரும்பவும் வைத்துப் பார்த்தாள். மீண்டும் அதே நிலைமைதான்.
‘என்னாச்சு? ஏன் இப்படி?’ என அனைவரும் யோசித்தனர்.
“தனம், கையில அந்தக் காயின் வச்சிட்டு ட்ரை பண்ணிப் பாறேன்” – ரோமியோ.
தனம், ‘முடியாது’ என்ற மறுப்பைக் காட்டினாள்.
“ம்ப்ச், செஞ்சி பாறேன் தனம்” என்று மைக்கேல் கெஞ்சினான்.
‘ச்சே’ என நினைத்தவள், பைக்குள் இருந்து நாணயத்தை எடுத்து, இடது கையில் வைத்துக் கொண்டு, புத்தகத்தின் பக்கங்களில் மயில் பீலியை வைத்தாள்.
சற்று நேரம் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து தங்க நிறத் துகள்கள் பறந்தன.
பின்னர் அது இப்படி எழுதிக் காட்டியது…
‘செங்காந்தள் மலரை ஒத்த மணல் வெளியின் நடுவிலுள்ள தும்பைப் பூவை ஒத்த தூண் மண்டபம்’
நால்வரும் வாசித்துக் கொண்டார்கள். சாவியின் அடுத்த பாகம் பொறிக்கப்பட்ட நாணயம், அங்கேதான் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று மட்டும் புரிந்தது.
“என்ன இன்னும் பேப்பர் எரியல?” என்று சந்தேகமாக தனம் கேட்டாள்.
“அடுத்த காயின் எடுத்ததுக்கு அப்புறந்தான்” என்று சொல்லி, எழுந்து கொண்டான் ரோமியோ.
மேலும், “ஸ்வீட் ஹார்ட் போகலாம் வா” என்று கை கொடுத்தான். அவளும் எழுந்து கொண்டாள்.
தனம் புத்தகத்தையும் பீலியையும் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு, நாணயத்தை பத்திரமாகப் பைக்குள் வைத்துவிட்டு எழுந்தாள். அவளைத் தொடர்ந்து மைக்கேலும் எழுந்தான்.
*****
திரும்பவும் நடக்க ஆரம்பித்தார்கள்…
ரோமியோவும், ஸ்வீட் ஹார்ட்டும்…
ஸ்வீட் ஹார்ட் தனத்தின் பக்கமிருந்த நியாயத்தைப் பேசிய பின்னர், ரோமியோ அவளிடம் சரியாகப் பேசவேயில்லை.
“ரோமியோவுக்கு என் மேல கோபமா?” என்று காதலி காதல் விளக்கம் கேட்டாள்.
“இல்லை” என்றான், காதலன் விருப்பம் இல்லாதது போல்.
“நீ சொல்றதலிருந்தே தெரியுது. என் மேல கோபம்தான்” என்று சொல்லி, ‘ம்ப்ச்’ என உதட்டைச் சுழித்தாள்.
“நீயேன் அவளுக்குச் சப்போர்ட் பண்ண?”
“அவங்க பக்கம்தான் நியாயம் இருந்திச்சு ரோமியோ. நான் அதைத்தான் சொன்னேன்” என்று சொல்லி, அவனது உடற்பயிற்சி தேகத்தில் உறுதியாய் சாய்ந்து நின்றாள்!
“அப்படியா! ஸ்வீட் ஹார்ட் சொன்னா, கேட்டுக்க வேண்டியதுதான்” என்று சொல்லி, ரோமியோவும் அவளது இடையை வளைத்து கைபோட்டுக் கொண்டான்!!
அப்படியே நடந்தார்கள்…
கண்மூடித்தனமாக காதலிக்கும் காதலர்கள் இவர்கள்!
*****
சற்றே பயணித்த பின்…
மைக்கேலும் ரோமியோவும் முன்னே பேசிக் கொண்டே நடந்து சென்றார்கள். பின்னே ஸ்வீட் கார்டும் தனமும் அமைதியாக நடந்து வந்தார்கள்.
“ஏன்?? எங்க கூடெல்லாம் பேச மாட்டீங்களா?” – தனம்.
“ஐயோ அப்படி இல்லை சிஸ்டர்”
“நான் உனக்கு சிஸ்டரா?”
சிரித்துக் கொண்டாள் ஸ்வீட் ஹார்ட்.
“சிஸ்டர்கிட்ட ஒண்ணு கேட்கலாமா?”
“ம்ம்ம் கேளு”
“மைக்கேல் ப்ரோ ரொம்ப நல்லவங்க இல்லையா??”
“சரி”
“அவங்க உங்களை லவ் பண்றாங்க இல்லையா?”
“சரி”
“ஆனா, நீங்க ஏன் அவங்களை லவ் பண்ணலை??”
“ஓ! மைக்கேல எனக்கு சின்ன வயசிலருந்தே தெரியும்”
“ம்ம்ம்”
“ரொம்ப வருசமா லவ் பண்றான்”
“ம்ம்ம்”
“அவனும் அடிக்கடி கேட்பான். என்னைய ஏன் லவ் பண்ணலைன்னு?”
“ம்ம்”
“அவனுக்கே சொன்னதில்லை. உனக்கு சொல்லனுமா? என்று நறநறவென பற்களைக் கடித்தபடிக் கத்தினாள்.
அந்தக் கத்தலை தாங்கும் அளவிற்கு, ஸ்வீட் ஹார்ட்டின் இதயம் இல்லை. அது ரோமியோவின் காதலை மட்டுமே தாங்கும்!
உடனே கடகடவென ஓடி, ரோமியோவின் அருகில் சென்று, அவனது கைகளைக் கோர்த்தபடியே நடையைத் தொடர்ந்தாள்.
“என்னாச்சு?” என்று கேட்டவனிடம், ‘ஒன்றுமில்லை’ எனக் கண்களால் பதில் சொன்னாள்.
அவர்கள் இருவரையும் சேர்ந்து நடக்கவிட்டு, மைக்கேல் காத்திருந்து தனத்துடன் நடையைத் தொடர்ந்தான்.
*****
கொஞ்சம் கொஞ்சமாக சூழல் மாற ஆரம்பித்தது. பச்சை வர்ண ஒளி வெள்ளம் போயிருந்தது. எந்தவொரு மரமும் இல்லை! ஏன்? சிறிய செடிகளோ, புற்களோ எதுவுமே இல்லை!! அதுபோல கற்பாறைகள் எல்லாம் முடிந்துபோயிருந்தன!!!
செம்மண் மணற்பரப்பு. நடக்க நடக்க, எழுந்த புழுதியால் அவர்கள் முட்டியின் கீழுள்ள ஆடையின் பகுதியும், பாதங்களும் செந்நிறமாக மாறியிருந்தது. அப்பகுதி முழுவதும் மஞ்சள் வெயில் மாலை போன்ற நிறக் கற்றையால் மூடப்பட்டிருந்தது.
மேலும் தொடர்ந்து நடந்தனர்…
நால்வரின் உடலும் சோர்வைக் காட்ட ஆரம்பித்தன. மற்றவர்களை விட, தனம் அதிக நாவரட்சியால் இரும ஆரம்பித்தாள். பதட்டத்துடன் மைக்கேல் தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தந்தான்.
மேலும், “குடி தனம்” என்று தண்ணீரைப் புகட்டினான்.
“இன்னும் கொஞ்சம் குடி” என்றான்.
“இப்போ ஓகேவா??” என்று கேட்டான்.
“ம்ம்ம்” என்றவள், மைக்கேலையே பார்த்தாள்.
“என்ன தனம் இப்படிப் பார்க்கிற?”
“இப்படியெல்லாம் செஞ்சி, என்னைய இம்ப்ரெஸ் பண்ணப் பார்க்கிறயா?”
“ஏது? இதுலெல்லாம் இம்ப்ரெஸ் ஆகிற ஆளா நீ!?!?”
“தெரிஞ்சா சரிதான்”
“அதெல்லாம் எனக்குத் தெரியும், வா போகலாம்”
மறுபடியும் கால் வலிக்க வலிக்க நடக்க ஆரம்பித்தார்கள்.
*****
சிறிது மணித்துளிகள் பின்…
நால்வரும் ஒரு இடத்தில் அமர்ந்து, கொண்டு வந்ததைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். இது இன்னும் எத்தனை நாள் வருமென்று கேள்வி வந்த போது, மீண்டும் பசிப்பது போன்ற உணர்வு வந்தது.
அதன் பின்னும் நடைப் பயணம்…
செங்காந்தள் பூவினை ஒத்த நிறத்தை உடைய பாதைகள். அதில் ஆங்காங்கே மேடு பள்ளங்கள். அந்தி வானச் சிவப்பாய் ஒளிக்கற்றைகள் பாய்ச்சிடும் ஒளி வெள்ளம். அவர்கள் விடும் மூச்சுக்காற்றே பெரிய சத்தமாகக் கேட்டிடும் வகையில் நிலவும் அமைதியான சூழல்.
இப்படியே பாதைகள் நீண்டன. வழிகள் நீள நீள, நால்வர் உயிரின் கடைசி செல்களும் வலியை உணர்ந்தன.
தீடிரென்று, “டேய் மைக்கேல்! அங்க பாரு” என்றான் ரோமியோ.
ரோமியோ கை காட்டிய இடத்தில், அதுவும் தூரத்தில், வெண்ணிற மதில் சுவர் தெரிந்தது.
இலக்கு கண்களுக்குத் தெரிந்த பின்பு, ஓரளவிற்கு தைரியம் வந்தது. அது அவர்களை விரைவாக நடக்கச் செய்தது.
சற்று மணித்துளிகள் கடந்த பின்பு…
மதில் சுவர் இருக்கும் இடத்தை வந்தடைந்து விட்டார்கள்.
ரோமியோவைத் தவிர மற்ற மூவரும் களைப்பின் காரணமாக, அந்தச் செம்மண் தரையில் அமர்ந்து விட்டனர்.
ரோமியோ மதில் சுவரைச் சுற்றி நடக்க ஆரம்பித்தான். சதுர வடிவிலான முழுச் சுவரும் நித்திய கல்யாணி பூவினை ஒத்த வெள்ளை நிறத்தில் இருந்தது.
நான்கு புறத்திலும் பெரிய நுழைவாயில் ஏதுமில்லை. ஆனால் ஓரே ஒரு பக்கத்தில், சராசரி உயரமுள்ள மனிதன்கூட, குனிந்து குறுகிச் செல்லும் வகையில் வழி இருந்தது.
எல்லாவற்றையும் ஆராய்ந்துவிட்டு வந்தவன், மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
“என்னடா? வழி இருக்கா?” – மைக்கேல்.
“அந்தப் பக்கம் இருக்குது மைக்கேல்”
உடனே தனம் எழுந்து, “சரி வா தேடப் போகலாம்” என்று மைக்கேலை அழைத்தாள்.
“ஒரு நிமிஷம்” என்று சொல்லி, மேலே சொல்லாமல் ரோமியோ தயங்கினான்.
“என்ன ரோமியோ?” – மைக்கேல்.
“உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் போங்க”
“ஏன்? ஏன்? ரெண்டு பேரும் தேடினா என்ன தப்பு?” என்று தனம் எகிறிக் கொண்டு வந்தாள்.
“அது…அது…” என்று ரோமியோ மீண்டும் தயங்கினான்.
“நான் சொல்லவா? மைக்கேலும் நானும் சேர்ந்து தேடினா காயின கண்டுபிடிச்சிருவோம். ஆனா உனக்கு… இவ கூட சேர்ந்து தேடறது கஷ்டம். இவ பயந்து… உன்னையும் பயப்பட வச்சி… தேடவே விடமாட்டா! அதானாலதான??” என்று ஸ்வீட் ஹார்ட்டைக் காட்டினாள்.
“அப்படியாடா ரோமியோ?”
“இல்லை மைக்கேல்”
“நீ அப்படி நினைக்கிறீயா ரோமியோ?” என்று பலத்த சந்தேகத்துடன் ஸ்வீட் ஹார்ட் கேட்டாள்.
“அய்யோ! அப்படிலாம் இல்லை ஸ்வீட் ஹார்ட்” என்று அவள் அருகே சென்று நின்றான்.
“தனம், ரோமியோ சொல்றது சரிதான். யாராவது ஒருத்தரே தேடலாம்” – மைக்கேல்.
“ஏன்?”
“ஏன்னா? புதையல் எடுக்கிறதுக்கு ஒத்துக்கிட்டது நீங்க ரெண்டு பேரும். நீங்க தேடுங்க. ஏதும் ஹெல்ப் வேணா பண்றோம்”
“நீ எப்பவும் அவனுக்கே சப்போர்ட் பண்ணு. எனக்கென்ன?” என்று கோபப்பட்டுச் சொல்லிவிட்டு, தனம் மதில் சுவர் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“தனம்… நில்லு தனம்” என்று மைக்கேல் சொல்லிப் பார்த்தான், ஆனால் அவள் நிற்பது போல் தெரியவில்லை என்றதும்… “சரி, பார்த்துப் போ” என்று அக்கறையுடன் சொன்னான்.
இவர்கள் இருவரையும் சமாளிப்பதே பெரிய வேலையாக உணர்ந்தான் மைக்கேல்.
பின், அருகில் நின்று கொண்டிருந்த ரோமியோவையும் ஸ்வீட் ஹார்ட்டையும் பார்த்தான். அவள் முகத்தில் ஒரு வருத்தம் தெரிந்தது.
“சிஸ்டர், நீங்க தனம் சொன்னதை யோசிக்காதீங்க. சரியா?” என்றவன், ரோமியோவைப் பார்த்து, “டே! சீக்கிரமா தேடப் போடா” என்றான்.
“சரிடா. ஆனா மைக்கேல்… இவ கொஞ்சம் பயப்பிடுவா… பார்த்துக்கோடா” என்று கோரிக்கை வைத்தான்.
“சரி” என்று சொல்லிவிட்டு, மைக்கேல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.
*****
ஸ்வீட் ஹார்ட்டும் ரோமியோவும்…
“ஸ்வீட் ஹார்ட்! அவ சொன்னதெல்லாம் மனசில நினைக்காத” என்றான் கணவன் ரோமியோ, மனைவியின் கூந்தல் கற்றைகளை ஒதுக்கி விட்டபடி.
“ம்ம்ம்” என்றவள், மட்டியைக் கடித்து கண்ணீரை நிறுத்த முயன்றாள்.
“நான் ஏன் அப்படிச் சொன்னேனா? உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னுதான்”
“ம்”
“உனக்கு எதும்னா என்னால தாங்க முடியாது”
“ம்ம்”
“நான் அந்த அர்த்தத்திலதான் சொன்னேன்”
“ம்ம்ம்”
காதலியின் கண்கள் கவல் கொண்டிருப்பது காதலனுக்குத் தெரிந்தது!
சூழ இருந்த தீச்சுவாலையின் நிறத்திலான ஒளிக்கற்றையின் அடியில் நின்று கொண்டு,” ஸ்வீட் ஹார்ட்” என்று அழைத்தான்.
“என்ன ரோமியோ?”
“லெட்ஸ் ஹேவ் ஹோப் ஆன் அவர் ப்ரஷ் லவ்” என்று காற்றில் கைகள் விரித்தவாறு சொன்னான்.
சூழ்ந்திருந்த சிவப்பைவிட ஒருபடி அதிகமாகவே வெட்கப்பட்டாள்.
தன் காதலியின் உள்ளத்தில் எழுந்த ஐயங்களுக்கு, அவளது உதட்டில் விளக்கங்கள் எழுத ஆரம்பித்தான் காதலன் ரோமியோ.
இந்த ரோமியோ ஒரு இதழ் எழுத்தாளன்!
காதலையும் காதலனையும் தன் கரங்களால் தள்ளி நிறுத்தியவள், சிரித்துக் கொண்டே, “போயிட்டு வா” என்றாள்.
மகிழ்ச்சியுடன் ரோமியோ மண்டபம் நோக்கிச் ஓடத் தொடங்கினான்.
எனினும் அவர்கள் காதல் கண்ணாடியில், ஏதோ ஒரு மூலையில் லேசான கீறல் விழுந்துவிட்டதோ?
****
தனமும் ரோமியோவும் மதில் சுவரின் குறுகலான நுழைவாயில் வழியாக, உள்ளை நுழைந்தார்கள். சற்று வினாடிகள் நடந்த பின்னர், மண்டபம் ஒன்று இருந்தது.
மேற் கூரை ஏதுமில்லாமல் தூண்கள் மட்டுமேயான மண்டபம் அது! தூண்கள் எண்ணிக்கை நூறு, இருநூறு அல்ல. எண்ணிலடங்கா தூண்கள்! அவை அனைத்திலும் தும்பைப் பூவை ஒத்த வெண்மை நிறம் ஏறியிருந்தது.
அந்தத் தூண்களின் அடிமுதல் உச்சி வரை, கண்டங்கத்திரி பூச்செடியின் இலைகளைப் போன்ற படங்கள் வரையப்பட்டிருந்தன. அவ்விலைகள் அனைத்தும் சிவப்பு வர்ணத்தில் இருந்தன. அதன் நரம்புகளின் வரியோட்டமானது தங்க நிற முட்கள் போன்றதாய் தெரிந்தது.
சூழலிருந்த மாலை வெயில் போன்ற ஒளி வெளிச்சத்தில், அந்த இலை நரம்புகள் தகதகவென கண்களைக் கூசச் செய்யும் வண்ணம் மின்னின.
இதுவரை இருந்த செந்நிற மணற்பரப்பு முடிந்து, அவர்கள் நின்ற இடத்திலிருந்து தூண்கள் இருக்கும் இடம் வரை வெள்ளை நிற மணற்பரப்பு இருந்தது.
எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல், பவழமல்லியின் தனிச் சிறப்பான நறுமணம் நாசியைத் தழுவிச் சென்றது!
இருவரும் மண்டபத்தின் உள் செல்லாமல், இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். பின், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அந்தப் பார்வையயின் அர்த்தம், ‘பார்க்கலாம், இம்முறை யாருக்கு நாணயம் கிடைக்கப் போகிறது’ என்று!
தனம்தான் முதலில் அந்த வெள்ளை மணலில் காலடி எடுத்து வைத்தாள். அவள் அப்படி எடுத்து வைத்த அடுத்த நொடியே தூண்கள் இருந்த இடத்திலிருந்து சடசடவென சுற்ற ஆரம்பித்தது.
“ஏன் இப்படி?’ என்று சுதாரிக்கும் முன்பே, தூண்களின் இலையிலுள்ள தங்க நிற முட்கள் போன்ற நரம்புகள், வில்லிலிருந்து வரும் அம்புகள் போன்று எய்யப்பட்டன.
ஒவ்வொரு நரம்பும், முள்ளைப் போல நறுக் நறுக் என்று உடலை குத்த ஆரம்பித்தது. இருவரும் ஓடினார்கள். அங்கு இங்கு என எங்கும் ஓடினார்கள். ஆனாலும் தப்ப முடியவில்லை. நாலாபுறமும் இதுபோன்ற சிறுசிறு கூரான இலை நரம்பின் அம்புகள்! அதுவும் விடாமல்!!
அத்தனை வேகமாக வருவதால் வலி ஒரு பக்கம், கண்களில் குத்தி விடக் கூடாதே என்று கைகள் கொண்டு கண்களை மூடியபடி, முடிந்த அளவு முன்னேறிச் சென்றனர்.
எப்படிச் செல்கிறோம் என்று எதுவும் தெரியாமல், சற்று நேரத் தத்தளிப்பிற்கு பின்னே, மண்டபத்தின் உள்ளே கால் வைத்தார்கள். அடுத்த நொடியே தூண்கள் சுற்றுவது நின்று விட்டது.
‘அப்பாடி! இனி நாணயத்தை தேடலாம்’ என நினைக்கும் போதே ஓர் அசரீரியின் குரல் கேட்டது!!
அது…
‘இங்கிருக்கும் ஏதோ ஒரு தூணின் அடியில், வெள்ளைக் கல் நாணயம் மறைந்து உள்ளது.
எல்லா தூண்களும் இருந்த இடத்திலிருந்து ஒரு சாண் அளவிற்கு மேலெலும்பி தொங்கும்.
கால அவகாசத்திற்குள் நாணயத்தை எடுக்கத் தவறினால், இங்கிருக்கும் தூணோடு மற்றுமொரு தூணாய் மாறி, இங்கேயே நிற்க நேரிடும்!!’
அசரீரி முடிந்தவுடனே, பிரமாண்ட வெள்ளைத் தூண்கள் அனைத்தும், ஒவ்வொரு வரிசையாக, அந்தரத்தில் தொங்க ஆரம்பித்தன.
எண்ணிலடங்கா தூண்கள், அவ்வாறு தொங்குவதைப் பார்க்கவே இருவருக்கும் பயமாக இருந்தது.
இருந்தும் கால அவகாசம் எவ்வளவு என்று தெரியாததால், இருவரும் தூண்களின் அடியில் படபடவென்று தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். எந்த வரிசையில் தூண்கள் மேலெலும்பியதோ, அதே வரிசையில் தேட ஆரம்பித்தார்கள்.
பாதியளவு கடந்த நிலையில், முதல் இரண்டாம் வரிசையில் தொங்கிக் கொண்டிருந்த தூண்கள் தரையைத் தொட்டன.
‘அதற்குள் நேரம் முடிந்து விடப்போகிறதா? இன்னும் இத்தனை தூண்கள் இருக்கின்றனவே!’ என இருவருக்கும் உயிரைப் பிசையும் பயம் வந்துவிட்டது.
அப்படி நினைக்கும் கணத்தில், கடகடவென மேலும் மூன்று வரிசைத் தூண்கள் ‘தட்தட்’ என்ற ஒலியுடன் தரையைத் தொட்டிருந்தன.