நாலாபுறமும் உயர்ந்து நின்ற மதில் சுவரின் உள்ளே சென்றவர்களுக்கு என்னாயிற்று தெரியாமல், வெளியே இரு உள்ளங்கள் தவித்துக் கொண்டிருந்தன.
அதிலும் ஸ்வீட் ஹார்ட், தனக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்று நினைத்த காதலனுக்கு ‘ஏதும் ஆகக்கூடாது’ என ஏங்கினாள். எப்பொழுது கண்களின் பாவைக்குள் வந்து விழுவான் என எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.
ஒரு கட்டத்தில் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகி, “ப்ரோ எதுவும் ஆகாதில்ல?” என்று பயந்து போய் மைக்கேலிடம் கேட்டாள்.
“ச்சே சே, அதெல்லாம் ஒன்னும் ஆகாது. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்க” என்று தைரியம் சொன்னான்.
“ம்ம்ம்”
மைக்கேலும் தனத்தை நினைத்து, ‘தனியாக விட்டிருக்கக் கூடாதோ?’ என்று எண்ணத் துவங்கினான்.
****
உள்ளே இருவரும்…
அதிவேகத்தில், தூண்கள் ‘டங்…டங்’ என்ற ஒலியுடன் கீழே காலூன்றி நிற்க ஆரம்பித்தன. அந்த சத்தத்தினால் எழுந்த பீதியில், இருவரின் தேடலின் வேகம் குறைந்தது.
உயிரின் பயத்தில் உடல் முழுவதும் வியரவைக் கொப்பளங்கள். குனிந்து குனிந்து தேடுவதால் முதுகுத்தண்டு முறிந்து விடும் அளவிற்கு வலி.
ஒவ்வொரு தூணின் அடியிலும் தேடிக்கொண்டிருந்த ரோமியோவிற்கு, சட்டென ஒரு யோசனை உதித்தது. ‘இப்படித் தேடுவதற்குப் பதில், வரிசையின் முதன் தூண் வழியே மற்ற தூண்களைப் பார்க்கலாமே; அப்படியென்றால், ஒரே நேரத்தில் ஒரு வரிசை முழுவதும் தேட முடியுமே; நேரமும் மிச்சமாகுமே;’ இப்படி நினைத்தவன், மறுகணமே அதைச் செயல்படுத்தினான். மடமடவென தேட ஆரம்பித்தான்.
ஓரிரு தூணாய் தேடிக்கொண்டிருந்த தனம், தற்செயலாக ரோமியோவைப் பார்த்தாள். ‘இவன், என்ன செய்கிறான்?’ எனப் பார்த்தவள், அவனது தேடல் யுக்தியைக் கண்டு, ‘தானும் இப்படிச் செய்யலாம்’ என அவனைப் பின்பற்றினாள்.
எந்த வேகத்தில் தூண்கள் கீழே உராய்ந்தனவோ, அதே வேகத்தில் தேடினான் ரோமியோ. முட்டிபோட்டு குனிந்து, முதன் தூணின் அடியிலிருந்து கண்களைச் சுருக்கி கூர்ந்து பார்த்தான். அந்தப் பார்வை, கடைசித் தூணின் அடி வரைச் சென்றது. அடுத்தது இது போலவே!
அக்கணத்தில் ரோமியோவின் கண் பார்வைக்குள், அந்த வரிசையின் ஆறாவது தூணின் அடியில் தேடலின் முடிவாய் கல் நாணயத்தின் காட்சி. பார்த்த அடுத்த கணமே விழுந்தடித்து ஓடிச்சென்றான். அத்தூணின் அருகில் விரைந்து, குனிந்து, கையினை விட்டு, கல் நாணயத்தை எடுத்துவிட்டான்.
அடுத்த நொடியில் அவனது கால்கள் அங்கு நிற்கவில்லை. வெண்ணிற மணல்பரப்பிற்குப் பாய்ந்தோடி வந்தவன், இன்னும் தேடிக் கொண்டிருந்த தனத்தைப் பார்த்து, “தனம் காயின் கிடைச்சிருச்சி” எனச் சொல்லிவிட்டு மீண்டும் ஓட்டம் பிடித்தான்.
அவன் சொன்னதைக் கேட்டு, அப்படியே நின்றிருந்தாள் தனம். ‘இவனுக்கு ஏன் கிடைத்தது?’ என முகம் முழுவதும் பொறாமையின் வெளிப்பாடு. தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்றே உணராமல், இன்னும் நின்றுகொண்டிருந்தாள்.
அப்பொழுது, அவள் அருகிலிருந்த தூண் ஒன்று, பட்டென்று பலத்த ஓசையோடு தரையைத் தொட்டது. அந்தச் சத்தத்தில், பயம் கொண்டு அவளது இதயம் ஒரு நொடி நின்று, பின் துடிக்க ஆரம்பித்தது. அதற்கு மேல் அவள் அங்கு நிற்கவில்லை, வெளியே ஓடி வந்துவிட்டாள்.
செம்மண் பகுதியை அடைந்ததும், பின்னங்கால் பிடரியில் படும் அளவிற்கு, இருவரும் மதில் சுவரைத் தாண்டி வெளியே ஓடி வந்துவிட்டனர்.
தூரத்தில் ஓடி வரும் காதலனைக் கண்ட ஸ்வீட் ஹார்ட்டும் ஓடிவர ஆரம்பித்தாள். அவள் ஓடி வருவதைக் கண்ட காதலன், இன்னும் வேகமாக ஓடி வந்தான். ஒரு சில வினாடிகளுக்குப் பின், கணவனும் மனைவியும் எதிரெதிரே! சிறு கணத்தின் பிரிவைக்கூட தாளா காதல் இருவரின் இடையில்.
குனிந்து நின்று, முட்டியில் இரு கைகளையும் ஊன்றி, மூச்சி வாங்கிக் கொண்டு நின்றான், கணவன் ரோமியோ.
“ரொம்ப பயந்துட்டேன் ரோமியோ. இப்பதான் நிம்மதியா இருக்கு”
ரோமியோ நிமிர்ந்து, தன் உள்ளங்கையில் வைத்திருந்த வெள்ளைக் கல் நாணயத்தைக் காட்டினான். இன்னும் மூச்சிரைத்தது.
“வாவ்” என்று சொல்லி, அதைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
அதற்கு அடுத்த நொடியிலிருந்து வெற்றியைக் கொண்டாட ஆரம்பித்தான். மூரல் தெரியும் முத்துச் சிரிப்பைத் சிந்தி, அவளது முன்நெற்றியோடு முட்டிக் கொண்டான்.
“ஸ்வீட் ஹார்ட்” என்று அட்டகாசமான காதல் குரலில் சொல்லி, அவளைத் தூக்கினான்.
மேலும் சிரித்துக் கொண்டே, “இது அரண்மனை கட்டறதுக்கு பர்ஸ்ட் ஸ்டெப்” என்று சொல்லி, அவளைத் தூக்கிய நிலையிலேயே சுற்ற ஆரம்பித்தான்.
*****
இதற்கிடையில்…
மைக்கேல் அருகில் வந்து நின்று, ஓடிவந்ததன் விளைவாக மூச்சு வாங்கவும் முடியாமல், விடவும் முடியாமல் தனம் நின்று கொண்டிருந்தாள்.
ரோமியோவின் வெற்றிக் கொண்டாட்டத்தைப் பார்த்தபடியே நின்ற மைக்கேல், “காயின் கிடைச்சா, அப்படிக் கொண்டாடணும். அதான் அதுக்கு மரியாதை” என்று சொல்லிக் கொண்டே வந்தவன், “நீயும் இருக்கியே” என்று சொல்லி தனத்தைப் பார்த்தான்.
அங்கே, கொலை வெறியுடன் தனம் நின்று கொண்டு இருந்தாள்.
‘அய்யய்யோ, இவ ஏன் இப்படி நிக்கிறா?’ எனத் தெரியாமல் முழித்தான்.
“எல்லாம் உன்னாலதான்” என்று இரு கை விரல்களையும் விரித்து, அவன் முகத்துக்கு நேரே நீட்டி நீட்டிச் சொன்னாள்.
“நான் என்ன பண்ணேன் தனம்?” என்று அப்பாவியாகக் கேட்டான்.
“உன்னால… உன்னாலதான்… காயின் அவன்கிட்ட போயிருச்சு” என்று பல்லைக் கடித்துக் கொண்டு, பாதாளம் வரை கேட்கும் சத்தமிட்டாள்.
“புரியலை தனம்”
“புக் கிடைக்காம, முத ஸ்டேஜ்லே போயிருக்க வேண்டியவன, பெரிய இவனாட்டம் சட்டம் பேசி, கூட வரவச்சதே நீதான”
‘ஓ! இவ இன்னும் இதை மறக்கலை போலயே!!’ என்று விழி பிதுங்கி மனக்குரலில் பேசிக் கொண்டான்.
“இங்கயாவது நீயும் சேர்ந்து தேட வந்திருக்கணும். ஒருத்தர் மட்டும்தான் தேடலாம்னு சொல்லி… அங்கே எத்தனை தூணு தெரியுமா?” என்று தன் இயலாமையைக் கொட்டித் தீர்த்தாள்.
“ஸாரி தனம்”
“பேசாத! இதுல, உடம்பெல்லாம் முள்ளு மாதிரி ஏதோ ஒண்ணு குத்திச்சி தெரியுமா?”
“ஐயோ தனம்?” என்று பதறி, அவள் அருகே வரப்போனவனை,
“வந்திடாத” என்று தடுத்து நிறுத்தினாள்.
“இப்ப நான் என்ன செய்ய?”
“புரிஞ்சுக்கோ மைக்கேலு, தனியா தேடுனா காயின் கண்டுபிடிக்கிறது கஷ்டம்”
“ஆனா ரோமியோக்கு கிடைச்சிருக்கே தனம்”
“இப்போ என்ன சொல்ல வர்ற?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டாள்.
“சரி, சரி நீயே சொல்லு”
“அடுத்த ஸ்டேஜ்லருந்து நாம ரெண்டு பெரும் சேர்ந்து தேடுவோம்”
“அதுக்கு அவன் ஒத்துக்கணுமே!”
“அவனை ஒத்துக்க வை. அதான் உன் வேலை”
மைக்கேல் யோசித்தான்.
அவன் யோசிப்பதைக் கண்டவள், ‘இவனை யோசிக்க விடக்கூடாது’ என்ற எண்ணத்தில், “நீ என்னைய உண்மையா லவ் பண்றீயா?” என்று கேட்டாள்.
“என்ன இப்படிக் கேட்டுட்ட தனம்? உனக்குத் தெரியாதா?”
“அப்போ எனக்கு ஹெல்ப் பண்ணு”
“நான் உனக்கு ஹெல்ப் பண்ணா, நீயும் எனக்கு ஹெல்ப் பண்ணுவியா தனம்?”
“அதெப்படி?? நீ என்னைய லவ் பண்ற, ஸோ நீ எனக்கு ஹெல்ப் பண்ணலாம். பட் நான் உன்னை லவ் பண்ணலை, அதனால நான் உனக்கு ஹெல்ப் பண்ணக் கூடாது”
“இது என்ன லாஜிக் தனம்?”
“இது லாஜிக் இல்ல. லவ்”
“நம்ம லவ்வா?”
“இல்லை. உன்னோட லவ்”
“ஏன்?.. தன”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ரோமியோ வந்து நின்றான்.
‘இவன் ஏன் இங்க வந்து நிற்கிறான்?’ என மைக்கேலும், ‘வந்துட்டானா?’ என்று தனமும் நினைத்தாள்.
“என்னடா வேணும்?”
“ஆமா ரோமியோ, என்ன வேணும்?” என்று மிடுக்குடன் கேட்டாள்.
“ஐ! தெரியாத மாதிரியே கேட்கிறீங்க”
“நிஜமா தெரியலைடா?”
“மைக்கேலு, அவன் புக்-க கேட்டு வந்திருக்கான்”
“கொடுக்கவா தனம்?”
“ம்ம்ம், கொடு”
பைக்குள் இருந்து புத்தகத்தை எடுத்தவனிடம் இருந்து, ரோமியோ புத்தகத்தைப் பிடுங்கி கொண்டு திரும்பினான்.
“நான் சொன்னதைச் சொல்லு மைக்கேலு” என்று மைக்கேலின் காதுகளின் அருகே கிசுகிசுத்தாள்.
“ம்ம்ம் இதோ” என்றவன், “ரோமியோ” என்று அழைத்தான்.
“என்ன?” என்று திரும்பி நின்றான்.
“அது வந்து.. அது வந்து அடுத்த தடவை நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து தேடுவோம்” என்று தனம் சொல்லச் சொன்னதைச் சொன்னான்.
முதலில் ரோமியோ சிரித்தான், பின் “நினைச்சேன்.. ம்ம்ம் நல்லா பயந்தாச்சு போல” என்று தனத்திடம் கேட்டான்.
அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“இல்லை ரோமியோ. அது… ” என்று விளக்கம் சொல்ல வந்தவனிடம்,
“பரவால்ல மைக்கேல். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே தேடுங்க. நான் சமாளிச்சிருவேன்” என்று சொல்லி, அங்கிருந்து சென்றான்.
***
ரோமியோ போன பின்…
“பாரு மைக்கேலு! எவ்ளோ திமிரா பேசிட்டு போறான்? ம்கும், நானாவது பயப்படறதாவது?” என்று சூடான எண்ணெயில் விழுந்த அப்பளமாகப் பொறிந்தாள்.
“நீ அந்தப் பொண்ண சொன்ன, அதனால அவன் உன்னைய சொல்றான். இனிமே அப்படிப் பேசாத தனம்” என்று அறிவுரை சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
இதுவரை, தன்னிடம் அடைக்கும் தாழில்லா அன்பை மட்டும் காட்டிக் கொண்டிருந்த மைக்கேல், இன்று அறிவுரை வழங்கியதை வித்தியாசமாக உணர்ந்தாள், தனம்.
****
சிறிது நேர உடல் ஓய்வுக்குப் பின், நால்வரும் ஒன்றாக அமர்ந்தனர். ரோமியோ புத்தகத்தைத் தரையில் வைத்திருந்தான்.
தனம் பொறாமையின் உச்சச்சத்தில் இருந்தாள். ரோமியோ பூரிப்பின் உச்சசத்தில் இருந்தான். மைக்கேலும் ஸ்வீட் ஹார்ட்டிற்கும் அங்குதான் இருந்தார்கள்.
ரோமியோ புத்தகத்தின் கொக்கியைப் பிடித்து இழுத்து திறந்தான். கனத்த தகடுகளால் ஆன புத்தகத்தின் அட்டையைப் புரட்டினான்.
அதற்கு அடுத்த நொடி, புத்தகத்தின் தங்க நிற பட்டிகளில், சிவப்பு வர்ணத்தில் கங்குகள் உருவாகின. அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி மஞ்சளும் சிவப்பும் சேர்ந்த தீயாக பரிணாம வளர்ச்சி அடைந்தது.
இதற்கு முந்தய கட்டத்தில் இருந்த எழுத்துக்களோடு சேர்ந்து, புத்தகத்தின் பக்கம் எரிய ஆரம்பித்தது.
இதுதான் நடக்கப் போகிறது என்று தெரியும், இருந்தும் அமர்ந்திருந்த நால்வரும், நாலாதிசையில் ஒரு அடி பின்னால் சென்றனர்.
அதீத பயத்தினால், ஸ்வீட் ஹார்ட் ரோமியோவின் தோள்களில் முகம் புதைத்துக் கொண்டாள். மற்ற மூவரும், பக்கம் முழுவதும் எரிந்து முடியும் வரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
எரிந்து முடித்தபின், “ஸ்வீட் ஹார்ட்” என்று ரோமியோ அழைத்தான்.
மெதுவாக அவன் தோள்களிலிருந்து தலை நிமிர்த்தி பார்த்தாள்.
“முடிஞ்சிருச்சா ரோமியோ?” என்றவள் குரலில் பயம் இருந்தது.
“ம்ம்ம்”
அதன் பின்னரே, அவள் நேராக அமர்ந்தாள்.
“அவனை நெக்ஸ்ட் பேஜ்ல வைக்கச் சொல்லு மைக்கேலு” – தனம்.
“வைக்கிறேன்னு சொல்லுடா” என்றவன், இடது கையில் நாணயத்தை வைத்துக் கொண்டு, வலது கையிலிருந்த பீலியை புத்தகத்தின் இரண்டாவது பக்கத்தில் வைத்தான்.
தூள் தூளாய் காற்றில் பறந்து சென்ற தங்கத் துகள்களுக்குப் பின், ஒவ்வொரு எழுத்தாய் முளைத்து, அது இப்படி வளர்ந்து நின்றது.
‘உப்பு நீர் தடாகத்தின் அடியில், சிப்பியின் உள்ளே’
வாசித்துக் கொண்டார்கள்.
“குளத்திலே உப்புத் தண்ணீயா? அப்புறம் சிப்பி எப்படிக் குளத்தில??” என்று சந்தேகமாகத் தனம் கேட்டாள்.
“என்னமோ மத்ததெல்லாம் சரியா இருக்கிற மாதிரி. இது மட்டுந்தான் தப்பா இருக்கிற மாதிரியும் கேட்கிற” – ரோமியோ.
“ம்ப்ச்” என்று அவனை உதாசீனப்படுத்தி எழுந்தாள்.
“வா ஸ்வீட் ஹார்ட் போகலாம்” என்று கை கொடுத்து, மனைவியை எழுப்பி விட்டான்.
*****
திரும்பவும் பயணிக்க ஆரம்பித்தனர். அதே தங்கவெயில் போன்ற நிறத்தின் ஒளியில் நனைந்து கொண்டு சென்றனர். அப்பகுதி முழுவதும் மயானத்தின் அமைதி நிரம்பி வழிந்தது.
உடலின் தகுதியையும், உள்ளத்தின் உறுதியையும் சோதிக்கும் தூரத்திற்கு நடந்தார்கள்.
அதற்கு அப்பால், அவர்கள் கண்கள் பார்த்த காட்சிகள் மாற ஆரம்பித்தன.
வெளிறிய கருமையான நிறம் கொண்ட பசை மண்ணால் ஆன பாதை விரிய ஆரம்பித்தது. இந்தக் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்குப் பயணிக்கிறோம் என்று எண்ணிக் கொண்டார்கள்.
அடுத்தக் கட்டத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக, அனைவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நின்றனர்.
“ஸ்வீட் ஹார்ட், வா போகலாம்” என்று பசை மண்ணில் பாதம் வைத்தான்.
அடுத்த நொடியே, நீரூற்றுகள் போல மண்ணிற்குள் இருந்து தண்ணீர் மேலெழும்பி வந்தன. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், அந்த பசை மண் முழுதும் இது போல் நீருற்றுகள்.
நான்கு பேரும் விதிர்த்துப் போய் நின்றுவிட்டார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
ரோமியோதான், “வேற வழியில்லை. போய்த்தான் ஆகணும்” என்று சொன்னதும், அனைவரும் நடக்க ஆரம்பித்தனர்.
திடீரென்று பேரிரைச்சலாய் நீர் விழும் சத்தம் கேட்டது. ஏதோ நீர்வீழ்ச்சி என்று நினைத்து, சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தார்கள். கண் பார்வையின் கடைசி எல்லை வரை, ஏதும் இல்லை. பின் எங்கிருந்து வருகிறது இந்த இரைச்சல்? அதுவும் சிலசமயம் காதுகளுக்கு மிக அருகில் கேட்டது. சில நேரங்கள் தொலைவில்.
முந்தைய இரண்டு பகுதிகளில் இருந்தது போல, இந்தப் பகுதிகளில் ஒளிக்கற்றைகள் அறவே இல்லை. உச்சி வேயில் காலத்தில் பூமி என்ன நிறம் கொண்டிருக்குமோ, அதே நிறம்!
பசை மண்ணோடு நீர் சேரச் சேர, நடக்கையில் கால்களில் ஒட்ட ஆரம்பித்தன. ஏற்கனவே ஓய்ந்து போயிருந்த கால்களில், ஒட்டிய மணலினால்… நடப்பதே சிரமமாக இருந்தது.
கனத்துப் போயிருந்த கால்களைத் தூக்கி நடப்பது என்பது, மொத்த உடலின் எடையை விட கூடுதலாக ஒருவரின் எடையைத் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற உணர்வு, வலி.
ஆனால் இனிமேல் பின்னால் செல்ல முடியாது என்பதாலும், அவர்களுக்கு இதைத் தவிர வாய்ப்புகள் ஏதுமில்லை என்பதாலும் வேண்டா வெறுப்பாக வேதனையோடு நடந்தார்கள்.
சற்று தூர பயணத்தின் பின்,
உடல் வலுவிழந்து முதலில் ‘முடியாது’ என்று நின்றது ஸ்வீட் ஹார்ட்தான். கண்கள் கலங்க கால்கள் வலிக்க, என்ன செய்ய? என்று தெரியாமல் நின்று விட்டாள்.
“என்னாச்சு ஸ்வீட் ஹார்ட்?” என்று பாசமான பார்வையுடன் கேட்டான்.
“முடியலை ரோமியோ”
“ஓ!” என்றவன், “ஸ்வீட் ஹார்ட். இந்தப் பேக்-க கொஞ்சம் பிடியேன்” என்று தன் முதுகிலிருந்த பையைக் கழட்டி, அவளிடம் நீட்டினான்.
பின்னே வந்து கொண்டிருந்த மைக்கேலும், தனமும் இதைப் பார்த்தனர். ‘அந்தப் பொண்ணே, நடக்க முடியாம நடக்குது… இதுல இவன் ஏன் பேக்-க கொடுக்கிறான்?’ என மைக்கேல் யோசித்தான்.
அவர்களுக்கு உதவி செய்யலாம் என்ற எண்ணத்தில், “தனம், நீ இந்த பேக்-க பிடி” என்று தன்னிடம் இருந்த பையைத் தனத்திடம் கொடுத்தான்.
பலத்த யோசனையின் பின், பையை வாங்கிகொண்டவள், “எதுக்கு?” என்றாள்.
“பாவம், ரெண்டு பேருக்கும் முடியலை போல, ஹெல்ப் பண்ணலாம்” என்று தன்னியல்பை வெளிக்காட்டினான்.
“ரொம்ப அவசியமா?” – இதுதான் தனத்தின் இயல்பு.
“இந்த மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செஞ்சிட்டு போனாதான்… முடியும்” என்றவன், “ரோமியோ, அந்தப் பேக்-க என்கிட்ட கொடு” என்று உதவிக்கரம் நீட்டினான்.
“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா?” என்று உறுத்தலாய் ரோமியோ கேட்டான்.
“அட! கொடுடா” என்று உரிமையுடன் மைக்கேல் பறித்துக் கொண்டான்.
“தேங்க்ஸ்” என்று மைக்கேலிடம் சொல்லிவிட்டு, “ஸ்வீட் ஹார்ட், நீ என் முதுகில ஏறிக்கோ! நான் உன்னையத் தூக்கிட்டுப் போறேன்” என்று உறவுக்காரியிடம் சொன்னான்.
“வேண்டாம் ரோமியோ, உனக்கு கஷ்டம்” என்று உதடு சுழித்தாள்.
“இதுல என்ன கஷ்டம். எனக்கு இதுதான் இஷ்டம்” என்று உயிர் உருகினான்.
காதலன் முதுகில் காதலி உப்பு மூட்டை ஏறிக் கொண்டாள். காற்று நிரம்பிய பலூன் பறப்பது போல, காதல் நிரம்பிய பையனாக இந்த ரோமியோ பறக்க ஆரம்பித்தான்!
ஆக மொத்தத்தில் இதுவரை சங்கடத்துடன் நடந்தவன் சந்தோஷமாக நடக்கலானான்.
இதையெல்லாம் பின்னிருந்து பார்த்துக்கொண்டிருந்த மைக்கேலோ, ‘அய்யய்யோ! இதுக்குத்தானா? இனி இவ என்னைய ஒரு வழி பண்ணிடுவாளே’ என்று மனதில் நினைத்துக் கொண்டே, மெதுவாகத் தலை திருப்பித் தனத்தைப் பார்த்தான்.
இடுப்பில் கை வைத்துக் கொண்டு, தனம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சத்தியமா எனக்குத் தெரியாது தனம், இவன் இப்படிப் பண்ணுவான்னு”
‘அப்படியா?’ என்பது போல் புருவங்களை உயர்த்தி, இன்னும் முறைத்துக் கொண்டே நின்றாள்.
‘டேய் ரோமியோ! நான் உனக்கு என்னடா பண்ணேன்? அவளே இப்போதான் ஹெல்ப் கேக்கிற லெவலுக்கு வந்திருக்கா! இதுல…’ என்று நினைத்தவன், ஒரு முடிவுக்கு வந்து… “தனம்,நீ வேணும்னா என்னோட முது…” என்று கேட்டு முடிக்குமுன்னே…
“ஆங்! ஆங்.. என்ன சொன்ன??” என்று அவனை நோக்கி சீறிக்கொண்டு வந்தாள்.
“அதாவது, இந்த பேக்-க கூட என்கிட்ட கொடுத்திடு தனம். அதையும் நானே தூக்கிட்டு வரேன். அதான்” என்று சமாளிக்க முயற்சித்தான்.
“அதைத்தான் செய்யப் போறேன்” என்று, தன்னிடம் இருந்தப் பையையும் அவனின் தலையில் கட்டிவிட்டு, மெதுவாக அடுத்த காலை எடுத்து வைத்தாள்.
*****
காலில் தொடங்கிய வலி, தலைக்குச் செல்லும் தூரங்கள் கடந்த பின், பசை மண் பகுதிகள் முடிந்தன. பெரிய பெரிய கருங்கற்கள் பதிக்கப்பட்டது போன்ற பகுதிகள் ஆரம்பமாயின. கருங்கல் அனைத்தும் வழவழப்பாக இருந்தன. அதேசமயம் வெவ்வேறு வடிவங்களில் இருந்தது. இங்கேயும், கருங்கல்லிற்கு ஊடே ஊடே நீருற்றுகள்.
இன்னும் இரைச்சலாய் காதிற்குள் நீர் விழும் ஓசை. ஆனால் இப்பொழுது அச்சத்தம் அவர்களுக்குப் பழகிவிட்டது.
கால்களில் ஒட்டியிருந்த மண்ணினைச் சுத்தம் செய்து கொண்டனர். பின், நடக்க ஆரம்பித்தனர். இதுவரை நீரில்லா நிலத்திலே நடந்து வந்தவர்கள். இப்போது வழிந்தோடும் நீரினால், ஜில்லென்று குளிர்ந்து போன கருங்கற்கள்… இதனூடே நடப்பது அலாதி சுகமாக இருந்தது.
ஒரு சில அடி தூரமே அந்தக் கால்கள் அவ்வாறு பயணித்திருக்கும், அதற்குள் தடாகம் வந்துவிட்டது.
பைகளை இறக்கிவிட்டு, அந்தத் தடாகத்தின் மேல் படிக்கட்டில் வந்து நின்றார்கள்.
அது சதுர வடிவமான தடாகம். அதன் நான்கு பக்கங்களிலும் நீள நீளமான படிக்கட்டுகள். அவையும் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. படிக்கட்டின் விளிம்புகளின், ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு, வெள்ளிக் கம்பிகளை உருக்கி ஊற்றியது போன்று ஒரு நேர்கோட்டில் பட்டி வடிவமைக்கப் பட்டிருந்தது.
கடல் நீரைப் போன்ற நிறத்தில், தடாகத்தின் நீர் இருந்தது. நீரின் அளவு, கீழ் படிக்கட்டின் எல்லை வரை மட்டுமே!
சூழல் முழுதும் நிறமில்லா தண்மை கொண்டிருந்தது.
நடந்து வந்த அலுப்பில்… தனம், மைக்கேல், ஸ்வீட் ஹார்ட் படியினில் கால் நீட்டி அமர்ந்து கொண்டார்கள். ஆனால் ரோமியோ மட்டும் படித்துறையினில் சுற்றிக் கொண்டே வந்தான்.
‘இவன் என்ன தேடறான்?’ என்று தனத்தின் மனம் அடித்துக் கொண்டே இருந்தது. ஆனால் எழுந்து செல்ல முடியாத அளவிற்கு அலுப்பு வாட்டியது.
ஒவ்வொரு படிக்கட்டாய் ஆராய்ந்து வந்தவன், ஒரு படிக்கட்டின் எதையோ நின்று படித்தான். பின்னர், அங்கே இங்கே என்று சுற்றிவிட்டு வந்தமர்ந்தான்.
மிகவும் தீவிரமாக யோசனையில் மூழ்கினான்.
“என்னடா யோசிக்கிற?” – மைக்கேல்.
“ஒண்ணுமில்லை”
“சரி, என்ன பார்த்த?” – தனம்.
“சொல்லுடா”
“காயின் தேடறதுக்கு கண்டிப்பா ஏதாவது ரூல்ஸ் இருக்கும்”
“ரூல்ஸ்ஸா??” – மைக்கேல்.
“ஆங்! போன தடவ நாம தேடறப்போ வந்துச்சே அந்த அசரீரி மாதிரியா?” – தனம்.
“ம்ம்”
“அதேமாதிரி இங்கேயும் இருக்கா??” – தனம்.
“ம்ம்ம்”
“என்ன அது?”
“நம்ம தேட ஆரம்பிச்சப் பிறகு, இந்தக் குளத்தோட தண்ணீ அளவு ஒவ்வொரு படிக்கட்டா உயருமாம்”
‘அய்யோ’ என்பது போல் மற்ற மூவரின் முகத் தோற்றம்.
“ஒவ்வொரு படிக்கட்டா தண்ணீ அதிகமாகும் போது, உள்ளே இருக்கிற சிப்பியோட எண்ணிக்கை டபுளாகுமாம்”
“ஐயோ! அப்போ தேடின சிப்பியையே திரும்பத் திரும்ப தேடுற மாதிரி இருக்குமே??” – தனம்.
“அதான்! ஆனா அதுமட்டுமில்லை. தண்ணீ மேல் படிக்கட்டு வரதுக்குள்ளே தேடி முடிக்கணும்”
“இல்லைன்னா?”
“ம்ம்ம்… ஜல சமாதிதான்”
‘வெட்ட வெளியில் தேடுவதே கடினம். இதில் மூழ்கடிக்கும் நீருக்குள் எப்படி?’ என தனம் யுக்திகளை சிந்திக்கத் தொடங்கினாள்.
ரோமியோ வேறு திசையில் பார்வையை நடக்க விட்டான்.
திடீரென்று திரும்பி, “யாரு அந்த ஆளு?” என்று கேட்டான் ரோமியோ.
‘எந்த ஆளு??’ என்று அனைவரும் அரண்டு போய், அவன் பார்த்த திசையை நோக்கினர்!