Ponnoonjal-4B

Ponnoonjal-4B

ஊஞ்சல்-4b

சேதுமாதவனின் பெற்றோர்கள் விவசாயத்தை முன்னிட்டு கிராமத்திலேயே தங்கி விட, வேலை நிமித்தம் சுந்தரராஜுலு தன் மனைவி அன்னலட்சுமியுடன் மகளின் வீட்டிற்கு அருகேயே வீடெடுத்து வசித்து வந்தார்.
தாத்தா, பாட்டியின் ‘பொம்மி’ என்ற செல்ல அழைப்பில், அந்த வீட்டின் குட்டி இளவரசியாய் வலம் வந்து கொண்டிருந்தாள் சுட்டிப்பெண். தந்தையின் ஒட்டு மொத்த அன்பையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டதைப் போல், எந்தநேரமும் சேதுமாதவன் கையணைப்பிலேயே வலம் வந்தாள். நொடி நேரமும் தந்தையை விட்டு பிரிந்ததில்லை அந்த செல்லப்பெண்.
“கொஞ்சநேரம் கீழே விடுங்க சேது, நீங்க இல்லாதநேரம் என்னை தூக்கி வச்சுக்க சொல்லி பிடிவாதம் பிடிக்கிறா!” என கணவனிடம் அசலா கடிந்து கொண்டாலும், காதில் வாங்கிக் கொள்ள மாட்டான் சேது மாதவன்.
“குழந்தைங்கள குறிப்பட்ட வயசு வரைக்கும்தான் தூக்கி வச்சுக்க முடியும். அந்த சந்தோசத்த நான் தட்டி கழிக்கப் போறதில்ல அச்சு!” – சேது
“அச்சு, பிச்சுன்னு நீங்க உளர்றத கேட்டு, உங்க பொண்ணும் அப்படியே கூப்பிட்டு வைக்கிறா! யாருக்கும் பதில் சொல்ல முடியல.” – அசலா.
“என் பொண்ணு என்னை மாதிரியே புத்திசாலி, அவங்கம்மா அச்சுல வார்த்த சிலைன்னு அவளுக்கும் தெரிஞ்சு போச்சு.” கண்ணடித்து சொல்பவனை, அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.
கணவன் சொல்வதைப் போல செதுக்கிய சிற்பமாய் மிளிர்ந்தாள் அசலாட்சி. மிகையில்லாத அழகும், இன்பங்களை அள்ளித் தெளித்த அன்பான இல்லறமும், பொங்கிய பிரவாகமாய் ஊற்றேடுத்த தாய்மையும், அவளது வனப்பை பன்மடங்கு பெருகிக் காட்டியது.
தந்தையின் நெஞ்சில் மட்டுமே உறக்கம் கொள்பவள், பாதி இரவில் கீழே இருந்தாலும் எழுந்து சென்று தன் செல்ல அப்பாவின் மேல் படுத்துக் கொள்வாள் நான்கு வயது பொம்மி.
“சேப்பா(சேதுப்பா) இன்னைக்கு பிங்க் கலர் டாம் டி-சர்ட் போட்டுக்கோ, சோட்டா பீம் நாளைக்கு போட்டுக்கலாம்.” – பொம்மி
“உன்னோட டேஸ்டுக்கு என்னை மாத்தி வைக்கிறடா தங்கம். அச்சும்மா பார்த்தா அதுக்கும் மூஞ்சி தூக்குவா.” – சேது
“அச்சும்மா பேச்சு கேட்காதே, பாட் கேர்ள் அவ”
“இப்படி சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்தானே? பொம்மி!”
“என்னை அடிக்கிறா சேப்பா?” சிணுங்கிக் கொண்டே சின்னச் சிட்டும் கூற,
“நீ சேட்டை பண்ணாம நல்ல பொண்ணா இருந்தா, அம்மா உன்ன அடிக்கமாட்டா செல்லம்!”
“அம்மா சாக்கி கொடுத்தா சமத்தா இருக்கேன்!”
“அது நடக்காத கதையாச்சே, உனக்காக உங்கம்மாவ சமாதனம் பண்ணியே எனக்கு வயசாயிடும் போல…” அவனது சுகமான சலிப்பு மனைவி, மகளின் மீது அவனுக்கிருக்கும் பாசத்தை அப்பட்டமாக சொல்லியது.
தினமும் இருவருக்கும் நாட்டாமையாக அவதாரம் எடுத்து களைத்து விடுகிறான். குடும்பத்தின் மீது கடலளவு பாசத்தை வைத்திருக்கும் பெரும்பாலான ஆண்களின் நிலை இதுதான்.
“ரொம்ப செல்லம் கொடுக்கிறீங்க சேது! பிடிவாதம் ஜாஸ்தி ஆகுது அவளுக்கு. கொஞ்சம் கண்டிக்க பாருங்க.”
“ஸ்கூலுக்கு போனா எல்லாம் சரி ஆகிடும். அவளுக்கு தொணையா ஒரு ஜூனியர் இருந்தா, பொறுப்பான அக்காவா மாறிடுவா என்பொண்ணு.” என்று கூறி சேது கண்சிமிட்டிட,
“மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போதும்நிப்பாட்டுங்க.” – அசலா
“ஊருக்கு போயிட்டு வந்து, அந்த வேலையதான் கையில எடுக்க போறேன். ஓயாம என் பொண்ணை திட்டுற இந்த வாயை தைக்காமலயே அடைக்க போறேன்.” – சேது.
“உங்க கூட அம்மாவும்(அன்னலட்சுமி) வர்றேனு சொல்லிருக்காங்க. உங்க ஃபிரண்ட் வாசுவோட அம்மாவ(கோகிலம்மா), அவங்களும் பாக்கணுமாம்”
“உன்னை வரச்சொன்னா, நாள் சரிபட்டு வராதுன்னு சொல்ற. வாசு(ரிஷபன் சீனிவாசன்) ரொம்ப பாவம் அச்சு, பொண்டாட்டிக்கு வந்த நோய் என்னான்னு தெரிஞ்சு கவனிக்கிறதுக்குள்ள அவபோய் சேர்ந்துட்டா. இப்போ இவனோட அம்மாவும் ரொம்ப முடியாம இருக்காங்கன்னு கேட்கும் போது, ரொம்ப கஷ்டமா இருக்கு. சின்னாவ கவனிக்க ஆள் இல்லாம, நம்ம வீட்டுல வந்து இருக்கான்.” – சேது
“அவனை இங்கே கூட்டிட்டு வாங்க சேது, நாம படிக்க வைப்போம்.”
“நல்லா சொன்னே போ, இருக்குற ஒரு பேரனையும் அனுப்பிட்டு அவங்க யார் மொகத்த பார்ப்பாங்க?”
“அப்படி ஒண்ணு இருக்கோ.”– அசலா
“முடிஞ்ச வரைக்கும் ஆதரவா இருக்கணும் அச்சும்மா, சின்ன வயசுல நாங்க பழகின பழக்கம் அப்படி. படிப்புன்னு ஒன்னு இடையில வராமா இருந்தா என்னையும், அவனையும் பிரிச்சிருக்க முடியாது.”
நண்பனை நினைத்து உருகியவன், மேற்கொண்ட பயணமே அவனது இறுதிப் பயணமாக அமைந்தது.
கணவன் சேதுமாதவனும், அசலாவின் தாய் அன்னலட்சுமியும் கிராமத்திற்குச் சென்று திரும்பும் வழியில் ரயிலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட, அவர்கள் பயணம் செய்த பெட்டி தடம்புரண்டு விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் மரணித்தனர்.
அழுவதற்கும் நேரமில்லாமல் அடுத்தடுத்த காரியங்களை முன்னின்று கவனிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாக, இயல்பிலேயே அமைதியான பெண்ணான அசலாட்சிக்கு தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும், துக்கத்தையும் வெளிப்படுத்த வாய்ப்பு கிட்டவில்லை. கவலைகளை பகிர்ந்து கொள்ள துணை இல்லாது தவித்துப் போனாள். வயதான தந்தைக்கு ஆறுதல் கூறி, தன் மனக்குமுறல்களை புதைத்துக் கொள்ள பழகிக் கொண்டாள்.
அந்த நேரத்தில் மேற்கொண்டு நடக்க வேண்டிய முன்னேற்பாடுகளைகவனிக்க, சமயத்தில் கை கொடுத்து உதவி புரிந்தவன் ரிஷபன் சீனிவாசன்.
‘வாசு’ என நண்பனால் பாசத்தோடு அழைக்கபட்டவன். தாய் கோகிலம்மாவிற்கு உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்த்திருந்த வேளையிலும், நண்பனின் முடிவை அறிந்து பதறிப் போய் ஓடி வந்தான். நண்பனின் இறுதி பயணத்திற்க்கு தேவையான உதவிகள் செய்து, அந்த குடும்பத்திற்கு அரணாய் நின்றான்.
அசலாட்சியும் தனது சோகத்தை, இழப்பை முடிந்தவரை மனதிற்குள் புதைத்துக் கொண்டு, தனக்குத்தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். அனைத்து காரியங்களும் பூர்வீக ஊரிலேயே ஒழுங்கான முறையில் நடத்தி முடிந்திட, பெரியவர்களின் விருப்பபடி கிராமத்திலேயே தங்கினாள்.
மகளோடு தந்தையையும் தன் பொறுப்பில் அரவணைத்து கொண்டாள் அசலாட்சி. இருவரின் இழப்பையும் விட, குழந்தை ‘அப்பா’ என்று சேதுமாதவனை தேடிக்கொண்டே அழுதது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. இரவு முழுதும் தந்தையின் நெஞ்சிலே துயிலும் பிஞ்சிற்கு அந்த கதகதப்பு கிடைக்காமல் போக, அங்கே ஆரம்பித்தது அவளது அழுகை மற்றும் பிடிவாதம்.
சுந்தர ராஜுலுவும் தன்மேல் போட்டுகொண்டு உறங்கச் செய்தாலும், அந்த சின்னசிட்டு சமாதானம் ஆகவில்லை. சேதுமாதவன் பெற்றோர்களிடம், அதிகப் பழக்கமில்லாத காரணத்தால் குழந்தை அவர்களையும் தட்டிக் கழித்தாள். நன்றாக விவரங்கள் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கும் நான்கு வயது குழந்தையின் நெஞ்சம், அத்தனை எளிதில் தந்தையின் அன்பை மறக்க வைக்கவில்லை.
பழக்கமில்லாத கிராமப்புறம் வேறு அந்த சிறு குழந்தையை அலைகழிக்க, முற்றிலும் புதிய இடத்தையும், பேசும் பேச்சுக்களையும் பார்த்து பயந்தே போனாள். அசலாட்சிக்கும் அதே நிலைமைதான்.
நகரத்தில் இருந்து பழக்கப்பட்டவளுக்கு கிராமத்தில் மிகுந்த அசௌகரியங்கள் ஏற்பட்டன. எந்த ஒரு வேலையை செய்ய முயன்றாலும் பழக்கமில்லாத காரணத்தால், வேலை பார்க்கும் ஆர்வம் பின்னுக்குத் தள்ளிப் போனது.
தனக்கென சுயவருமானமும், படித்த படிப்பிற்கான வேலையும் சென்னையில் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்ற எண்ணம் மனதில் உறுதியாய் தோன்றிட, மீண்டும் தந்தை சுந்தர ராஜுலுவை அழைத்துக் கொண்டு அசலாட்சி சென்னைக்கு புறப்பட்டாள்.
பொம்மியின் பிடிவாதம், அழுகை, தந்தையின் தேடல் என அனைத்தையும் மறக்க வைக்க, பெரும் மாற்றங்களை செய்ய வேண்டி வந்தது. வீட்டை மாற்றி, சேது மாதவனின் புகைப்படைத்தையும், அவனோடு சம்மந்தப்பட்ட பொருட்கள் என அனைத்தையும் ஒளித்து வைத்தனர். பலவகையான மாற்றங்களை செய்து அதனுடன் மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் கைகொடுக்க பொம்மி மெல்லமெல்ல மீண்டு வந்தாள்.
தனது பொருளாதார நிலையை கருத்திக் கொண்டு அப்பார்ட்மெண்ட் பகுதியில் இருந்து, தனது வருமானத்திற்கு ஏற்றவாறு இருப்பிடத்தை மாற்றி இருந்தாள் அசலாட்சி. சென்னை கந்தன்சாவடியில் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் அவளது வாசம். வரிசையாக நான்கு வீடுகளாக அமைந்த தனித்தனி குடியிருப்புகள், முன்புறம் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு கேட் அமைக்கப்பட்டிருந்தது.
வீடுகள் தனித்தனியாக இருந்தாலும், பின்புறம் புழக்கடை சற்றே விஸ்தாரமாக எல்லோருக்கும் பொதுவாய் இருந்தது. தண்ணீர் பிடித்து பாத்திரங்களையும், துணிகளையும் சுத்தம் செய்யும் பகுதி அது. அதனாலேயே எல்லா குடித்தனத்திற்கும் பின்புற வாசல் உண்டு.
அந்த வரிசை வீட்டில் இரண்டு பக்கமும் அனுசரணையான, தோழமையான குடும்பங்கள் அருகருகே குடியிருக்க, அதில் இரண்டாவது குடித்தனமாக அசலாட்சி வாடகைக்கு தங்கியிருந்தாள். அருகே உள்ள கார்மெண்ட்ஸில் கிளார்க்காக அவளுக்கு உத்தியோகம் கிடைத்தது. பொம்மியும் பக்கத்தில் உள்ள நர்சரிக்கு செல்லப் பழக்கமாகி இருந்தாள். படிப்பதிலும், சொல்வதை கூர்ந்து கவனிப்பதிலும் அத்தனை சூட்டிகையாக இருந்தாள் குட்டிப்பெண்.
அரசாங்க பணியில் இருந்து ஓய்வு பெற்ற, சுந்தர ராஜுலுவும் குடும்ப சுமையையும், பேத்தியின் எதிர் காலத்தினையும் கருத்தில் கொண்டு மகளுடன் தங்கி இருந்தார். மீண்டும் பகுதி நேர வேலையாக பக்கத்தில் இருந்த கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் அடுக்குமனை குடியிருப்பு வளாகம் ஒன்றிக்கு, காவலாளியாக(செக்யுரிட்டி) பகுதிநேர வேலைக்குச் சென்றுவர, அசலாவும் வீடு, வேலை என சற்றே ஆசுவாசமாக, தன் வாழ்க்கை பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
மிகப் பெரிய இழப்பினை சந்தித்து, ஒரு வருடம் முடிந்த நிலையில், மேலும் அந்தப் பாசக்கூட்டை உருக்குலைக்கவென, பொல்லாத கரிநாளாய் அன்றைய பொழுது விடிந்திருந்தது.
முன்தினம் விடாது பெய்த மழையில் ஆட்டம் போட்ட ஐந்து வயது பொம்மிக்கு அன்றைய தினம் காய்ச்சலும், ஜலதோஷமும் உச்சத்தில் இருக்க, மருத்துவமனையில் தன் அன்னையை படாத பாடுபடுத்தி, ஒரு ஊசியை குத்திக் கொண்டாள்.
மகள் உறக்கத்தில் இருந்த நேரத்தில், சமையலை முடிப்பதற்காக அடுப்படிக்கு சென்ற பிறகே பருப்பும், காய்கறியும் இல்லாமல் இருக்க மழையால் முன்தினம் வாங்காமல் விட்டது அசலாவிற்கு நினைவில் வந்தது.
‘இந்த வாலு பண்ற அட்டகாசத்தில எல்லாமே தலைகீழ் ஆகுது எனக்கு.’ மனதிற்குள் புலம்பியவள்,
‘கடைக்கு போயிட்டு வந்தாதான், சமைக்க முடியும். முன்னாடி பூட்டு போட்டுட்டு, பக்கத்துல சொல்லிட்டுப் போவோம்’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் மளிகைக்கடைக்கு கிளம்பி விட்டாள்.
மிக அருகிலேயே கடை இருந்தது. அதனால் உடனே வந்து விடலாம் பக்கத்தில் இருப்பவர்கள் குழந்தையை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் சேர்ந்து அவளைப் போக வைத்தது. வேலையின் அவசரமோ? அல்லது மிக அருகில்தான் போய் வரப் போகிறோம் என்ற அசமந்தமான எண்ணமோ? பின்புற வாசலை பூட்ட மறந்து விட்டாள் அசலாட்சி.
ஐந்து நிமிடத்தில் முடிந்து விடும் என்றெண்ணி மளிகைக் கடைக்கு சென்றவளுக்கு அங்கேயே பதினைந்து நிமிடங்கள் தாமதமாகிட, பக்கத்து வீடுகளில் யாரும் தென்படாத காரணத்தால், சொல்லாமல் மகளை தனியே விட்டு வந்தது மனதை அச்சப்பட வைத்தது.
திரும்பி வரும் வழியில் சுந்தரராஜுலுவும் அசலாவை அலைபேசியில் அழைக்க, அவருடன் பேசவென வீதியின் ஓரத்தில் நின்று விட்டாள். நடந்து கொண்டே பேசும் பழக்கத்திற்கு இன்னும் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை அசலாட்சி.
“ட்யூடி(duty) மாத்தி விடுற ஆள் வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆகும்மா.நீ இன்னக்கு லீவ் சொல்லிட்டியா?”
“ஆமாப்பா. ஒண்ணும் அவசரம் இல்ல மெதுவா வாங்க.”
“பொம்மி எப்படி இருக்கா?”
“தூங்கிட்டு இருக்கா, நான் கடைக்கு வந்தேன்ப்பா. இப்போ வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.”
“சரிம்மா, பொம்மா எழுந்ததும் பேசச் சொல்லு.” என பேச்சை முடித்து விட, அசலாவும், ‘பேத்திகிட்ட பேசாம பொழுது போகல தாத்தாக்கு.’என்று எண்ணி சிரித்துக்கொண்டே வீட்டினை அடைந்தாள்.
அதற்கு பிறகு அவள் சிரிக்கவில்லை! அதற்கான வாய்ப்பும் அமையவில்லை!

error: Content is protected !!