Ponnoonjal-5

Ponnoonjal-5

ஊஞ்சல் – 5
ஒருவாரம் கடந்த நிலையில், சென்னை தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் வழக்கறிஞர் ஆதிரையுடன் அமர்ந்திருந்தாள் அசலாட்சி. இறுக்கமான முகமொழி, விறைப்பான உடல்மொழி, வெறித்த பார்வை, அவள் தற்பொழுது என்ன மனநிலையில் இருக்கின்றாள் என்பதை உறுதியாகக்கூற முடியவில்லை.

மகளிர் காவல்நிலைய உயர்அதிகாரி அவள் கையில் இருந்த புகாரினைப் பெற்றுக் கொண்டு,
“மிஸஸ். அசலாட்சி நீங்க தைரியமா முன்வந்து இந்த வழக்கு பதிவு செய்தது நல்ல விஷயம். நீங்க கொடுத்த புகாருக்கு நிறைய விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதையெல்லாம் தயங்காம சந்திக்கணும்.” தற்போதைய நிலையை தெளிவாக விளக்க,

“என்னால் முடிந்த வரைக்கும் முயற்சி பண்றேன் மேடம்!” என்று இறுக்கமான குரலில் பதில் கூறினாள் அசலாட்சி.

“இவங்ககிட்ட தகாத முறையில நடந்துக்க முயற்சி செய்த மகேஷ் மேல வழக்கு பதிவு செய்து இருக்கோம். அந்த சமயத்துல அசலாட்சி, மகேசை தாக்குனதாலதான் இப்போ அவங்களுக்கு முன்ஜாமீனும் வாங்கி இருக்கோம். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்” என்ற ஆதிரை,

“அந்த மகேஷ் தரப்புல இருந்து, நடந்த தாக்குதலுக்கு யாரும் வழக்கு பதிவு செய்தால், இவங்கள கைது செய்யக்கூடிய சூழ்நிலையும் இருக்கு.” என்று தன்னுடைய விளக்கத்தை அளித்தார்.

“அப்படி தாக்குதல் நடந்தப்போ உங்க குழந்தைய அவன் தள்ளி விட்டு, அதனாலதான் இப்போ உங்க பொண்ணு ஐசித‌யுல இருக்காங்கிறத உறுதிபடுத்திக்க, எங்க தரப்புல இருந்து ஒரு ஆள் ஹாஸ்பிடலுக்கு வருவாங்க. நாங்க அந்த ரிப்போர்ட் பைல் பண்ணனும். அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க, மேற்கொண்டு நடக்க வேண்டியத நாங்க பார்த்துக்கறோம்.”– காவல் அதிகாரி.

“நிச்சயமா மேடம். ரொம்ப நன்றி.” என்றவர்கள் கனத்த இதயத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.

அடுத்த இரு நாட்களில் மருத்துவமனைக்கு காவல் அதிகாரி வருகை தர, பொம்மியை பார்க்கவென அவரை அழைத்துச் சென்றாள் அசலாட்சி.

அபாயகட்டத்தைத் தாண்டி இருந்தாலும் அசைவில்லாமல் கிடந்த அந்த பிஞ்சின் நிலையினை கண்டவர்க்கு தன் பதவியின் பொறுப்பினையும் தாண்டி, ஓர் பெண்ணாய் தன்மனதில் பொங்கிய தாய்மை உணர்வில் அவர் உள்ளமும் ஒரு நிமிடம் கொதித்து அடங்கியது.

தனக்கே இந்த நிலை என்றால் அவளைப் பெற்ற பெண்ணின் நிலையை எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை அவரால். அந்த சமயத்தில் அந்த பெண்ணும் செய்ததும் சரி என்று தன்மனமும் அவளுக்கு சார்பாய் வாதாடி கொண்டது.

போக்சோ சட்டம் என்பது பாலியல் வன்முறை வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்க வகை செய்யும் சட்டமாகும். இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணை தொடங்கி, ஒரு வருடத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சம்.

இந்த சட்டத்தின் மூலம் பாலியல் வன்முறை மட்டுமின்றி, பாலியல் தொல்லை, குழந்தைகளை ஆபாசாமாக ஒளிப்பதிவு எடுப்பது போன்ற குற்றங்களுக்கும் தண்டனை வழங்கலாம்.

தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை நிரூபிக்கும் பொறுப்பும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே என்பது வேதனைக்குரியது. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டப்படி நீதி கிடைக்கவும், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கவும் சம்மந்தப்பட்ட பெண் மனதிடத்துடன், அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போக்கோ சட்டத்தின் மூலம் முதற்கட்ட விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்களின் விருப்பதிற்கேற்ப அவர்கள் இல்லம் அல்லது நீதிபதியின் தனி அறையில் விசாரணையை நடத்த அனுமதி அளித்துள்ளது.

அதன்படி அசலாட்சியின் வழக்கு விசாரணை, முதன்மை குற்றவியல் நீதிபதியின்(ஜட்ஜியல் மாஜிஸ்திரேட்) தனி அறையில், ரகசிய விசாரணையாக(incamera proceedings) நடத்தப்பட்டது.

காவல்துறை விசாரணை, முதற்கட்ட விசாரணை என எதிலும் அசலாட்சி நேரடியாக பங்கேற்கவில்லை. வழக்கறிஞர் ஆதிரையின் அறிவுரைப்படியே அவள் நடந்து கொண்டாள்.

வழக்கு பதிந்த எட்டு மாதங்கள் கழித்து, அசலாட்சி தொடுத்த வழக்கின் குறுக்கு விசாரணைக்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் மணிமாறன், அவள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று அளித்த சிறப்பு மனுவின் பேரில், அவள் நீதிமன்றத்திற்கு வரவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

வழக்கறிஞர் ஆதிரையின் ஊக்கமும் நம்பிக்கை வார்த்தைகளும் அசலாட்சிக்கு பெருமளவு தைரியத்தை கொடுக்க, விசாரணையை சந்திக்க தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.

ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் மகிளா சிறப்பு நீதிமன்றம் உள்ளது. அங்கே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் அத்துமீறல்கள் விசாரிக்கப்படும். நீதிமன்றத்தின் தலைவராக பெண் நீதிபதி இருப்பார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிய அறைக்குள் வழக்கு விசாரணை நடைபெறும். வழக்கின் வாதி, பிரதிவாதி அவர்களுக்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி இவர்களுக்கு மட்டுமே அங்கே அனுமதி உண்டு.

சிறப்பு மகிளா நீதிமன்றத்தின் அன்றைய நாளின் முதல் வழக்காக, அசலாட்சியின் வழக்கு ஆரம்பிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணை ஆரம்பமாக எதிர்தரப்பு வழக்கறிஞர் மணிமாறன் தன்வாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

“வணக்கம் கனம் நீதிபதி அவர்களே! எனது கட்சிக்காரர் திரு.மகேஷ் அவர்கள், திருமதி.அசலாட்சி தாக்கியதியதன் காரணமாக உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு, தற்போது இந்த விசாரணைக்கு வரஇயலாத நிலையில் உள்ளார். அதற்கான மருத்துவ அறிக்கையை இந்த நீதிமன்றத்தின் முன்பு தாக்கல் செய்துள்ளேன். அவர் இல்லாமல் இந்த குறுக்கு விசாரணையை எதிர்கட்சிக்காரரிடம் நடத்திட தங்கள் அனுமதி வேண்டுகிறேன்.” – மணிமாறன்

“அனுமதி வழங்கப்பட்டது. தங்கள் விசாரணையை தொடங்கலாம்.” – நீதிபதி

“கனம் நீதிபதி அவர்களே! எனது கட்சிக்காரர் திரு.மகேஷ் மேல் சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் வன்புணர்வு வழக்கு முற்றிலும் உண்மைக்கு புறம்பாக தொடுக்கப்பட்ட போலி வழக்காகும். வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் என் கட்சிக்காரரை சமுதாயத்தின் முன் தலைகுனிய வைக்கும் முயற்சியாக இந்த வழக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவர் குடும்பத்தின் மேல் உள்ள முன்விரோதத்தை மனதில் வைத்தே அவருக்கு தாக்குதல் நடந்துள்ளது. அவரது பெற்றோர் கோவிலுக்கு சென்ற நேரத்தில், உடல் நிலை சரியில்லாமல் இருந்த என் கட்சிக்காரரை அசலாட்சி தாக்கியுள்ளார்.

அதன் காரணத்தால்தான் இன்று வரை என் கட்சிக்காரர் எழுந்து நடமாட முடியாத நிலையில் மருத்துவமனையில் உள்ளார். என் வாதத்தை நிரூபிக்க திருமதி.அசலாட்சியை குறுக்கு விசாரணை செய்ய, அவரை சாட்சிக் கூண்டுக்கு அழைக்கிறேன்” என்று தன் தரப்பு வாதத்தை மணிமாறன் ஆரம்பித்து வைக்க, அசலாட்சி அழைக்கபட்டாள்.
கனத்த இதயத்தோடும், வெறித்த பார்வையோடும் சாட்சிக் கூண்டில் ஏறியவள், கீதையின் மேல் கை வைத்து, சத்தியப்பிரமாணம் எடுக்க, குறுக்கு விசாரணை ஆரம்பமானது.

“உங்கள் பெயர் என்னம்மா?”- மணிமாறன்

“என் பெயர் அசலாட்சி.” தடுமாற்றம் இல்லாமல் பதில் வந்தது.

“இங்கே நீங்கள் வழக்கு தொடுத்திருக்கும் திரு.மகேஷ் என்ற இருபது வயது இளைஞரை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும் சார்.” – அசலாட்சி

“எப்படித் தெரியும்? விளக்கமா சொல்லுங்க அசலாட்சி.” – மணிமாறன்.

“என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருப்பவருடைய மகன்.” – அசலாட்சி

“இவர் மேல நீங்க சுமத்தும் குற்றம் என்ன?”– மணிமாறன்.

“எட்டு மாதங்களுக்கு முன், சம்பவம் நடந்த அன்றைக்கு குடிபோதையோடு என்வீட்டுப் பின்வாசல் வழியாக வந்து, என்கிட்ட தப்பா நடக்க ரொம்ப மூர்க்கத்தனமா முயற்சி பண்ணினார்.

என்னால் முடிந்த அளவு தடுத்துப் பார்த்தேன், கெஞ்சிப் பார்த்தேன், கேட்கல! என்னை அடிக்கத் தொடங்கினார். இடையில தடுக்க வந்த என்னோட அஞ்சு வயசுக் குழந்தையையும் தள்ளி விட்டுட்டார். அப்போ வந்த கோபத்துலதான் என் வீட்டு சமயலறையில இருக்குற கிரைண்டர் கல்லை(மாவாட்டும்உரல்) எடுத்து, சராமாரியாக அவர் இடுப்புக்கு கீழே தாக்கினேன்.” – அசலாட்சி

“குடிபோதையில் இருந்தார்னு எப்படி, அவ்வளவு சரியா சொல்றீங்க?” – மணிமாறன்

“அவரோட உடல் தள்ளாட்டமும், பேச்சும் அந்த சமயத்துல நிதானமில்லமா இருந்தது. அவர் பக்கத்தில வரும்போது மதுவாடை வந்தது.” – அசலாட்சி.

“அது மதுவாடைன்னு உங்களுக்கு தெரியுமா? எப்படித் தெரியும்? உங்களுக்கு பழக்கம் இருக்கா?” வக்கீலின் தோரணையில் மணிமாறன் கேட்டு வைக்க,

அசலாட்சியின் சார்பாக வாதிடும் வழக்கறிஞர் ஆதிரை எழுந்து, “கனம் நீதிபதி அவர்களே! என் கட்சிக்காரர் ஒரு பெண் என்பதை கருத்தில் கொண்டு, அவரை தலைகுனிய வைக்கும் கேள்விகளை கேட்பதை நான் ஆட்சேபிக்கிறேன்.” என வாதிடவும்,

“யாருடைய மனமும் புண்படாதவாறு, இந்த வழக்கிற்கு சம்மந்தமான கேள்விகளை மட்டும் கேளுங்க மிஸ்டர்.மணிமாறன்” என நீதிபதி அறிவுறுத்தினார்.

“யெஸ் மை லார்ட்.” என்று மணிமாறனும் பதில் அளித்து விட்டு,

“வழக்கிற்கு சம்மந்தமான கேள்வியை மட்டுமே கேட்கிறேன்.” அவர் சொன்ன விதமே, இனி தனது கேள்விகள் எல்லாம் வேறு முறையில் வெளிவரும் என்பதை உணர்த்தியது.

“உங்ககிட்ட தகாத முறையில நடந்துக்கிட்டார்னு சொன்னீங்கள்ல!” – மணிமாறன்

“ஆமா சார்.” – அசலாட்சி

“அப்படி நடக்குபோது நீங்க கூச்சல் போடலயா? எந்த முறையில தப்பா நடந்துகிட்டார்? அப்படி நடந்திருந்தா உங்களுக்கு உடல் காயம் ஏற்பட்டிருக்கும், அதுக்கான ஆதாரம் இருக்கா? அவர் மொதல்ல உங்கள எங்கே? எப்படி தொடமுயற்சி செய்தார்? பதில் சொல்லுங்க.” என்று மணிமாறன் கேட்ட கேள்விகள் எல்லாம், அசலாவின் இதயக் கூட்டில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.

அன்றைய நிகழ்வை எதிர்கொண்ட தாக்கத்தை விட, தன் வாய்மொழியில் அதை சொல்ல வேண்டிய அவல நிலையில் நிற்பது மிகக் கொடுமையான ஒன்று.

எதிர்தரப்பு வழக்கறிஞர் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது என்ற சங்கடமும், பெண் என்பதால் இயல்பாய் ஏற்பட்ட கூச்சங்களும், அசலாட்சிக்கு பதிலைச் சொல்ல சற்று தேக்கநிலை ஏற்பட, அதனையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பேச ஆரம்பித்தார் மணிமாறன்.

“இந்த பெண் சொல்லுவது முற்றிலும் பொய் என்பது இதன் மூலமே நிரூபணம் ஆகிறது மை லார்ட்!”– மணிமாறன்.

“இல்லை! இல்லை!” என்று அசலாட்சி மறுத்து, அவசரகதியில் பதிலை சொல்ல,

“அப்படி நடந்தது உண்மை என்றால், உங்களுக்கு எங்கேயெல்லாம் காயம் ஏற்பட்டது? அதற்கு ஆதாரம் இருக்கா? அவர் போதையில் இருந்தார் என்பதற்கு என்ன சாட்சி? அதை நிரூபிக்க முடியுமா? அவர் உங்களிடம் மூர்க்கத்தனமாய் நடந்து கொண்டபோது, உங்கள் உடையில் எங்கே? எப்படி கிழிந்து இருந்தது? எங்கே உங்களுக்கு காயங்கள் ஏற்பட்டது?” என மீண்டும் கேள்விக் கணைகளை தொடுத்தார்.

முன்பின் நீதிமன்ற வாதங்களைக் கேட்டோ, மற்றவர் முன் வாதிட்டோ பழக்கமில்லாத அந்தப் பேதைப்பெண்ணிற்குத், ‘தான் ஊமையாய், செவிடாய் இருந்திருக்கக் கூடாதா?’ என்றே அந்த நேரத்தில் அவள் உள்ளம் அழுதது.

“இவர் சொல்லும் எதுவும் உண்மையில்லை. இவர் வைக்கும் குற்றசாட்டுகளுக்கு சாட்சியோ, ஆதாரமோ எதுவும் இல்லை. இவர் மேல் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதற்கு மருத்துவ அறிக்கையும், சம்பவ நடந்த அன்று எனது கட்சிகாரார் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததற்கு மருத்துவ ஆதாரமும், இங்கே சமர்பிக்கப்பட்டிருக்கிறது மை லார்ட்!” என தன் வாதத்தை தொடர்ந்தவர்,
“நன்றாக ஆராய்ந்து, பொய்யாக புனையப்பட்ட வழக்கில் இருந்து என் கட்சிக்காரரை விடுவிக்க வேண்டுமாறு தாழ்மையும் கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஹானர்.” என தன் வாதத்தை முடித்து வைத்தார் மணிமாறன்.

“இதற்கு தங்களின் பதில் என்ன?” என்று ஆதிரையை பார்த்து நீதிபதி கேட்க, அவரும் தன் வாதத்தை தொடங்கினார்.

“எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் சாட்சியங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் ஆதாரங்கள், என்னிடம் உள்ளது, கனம் நீதிபதி அவர்களே!”

“சம்பவம் நடந்த அன்று அதிக போதையில் தள்ளாடியபடியே, அவர் அசலாட்சியின் வீட்டிற்கு வந்தது, அந்த வீதியில் இருக்கும் சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. அதற்கான பதிவுகள் இதோ!” என ஒரு மொபைல் டேப்பில்(tablet) பதியப்பட்ட காட்சிகளை காட்டினார். அந்தப் பதிவில் மகேஷ், அசலாட்சியின் வீட்டிற்கு பின்கட்டு வாசல் வழியாக தள்ளாடிய நடையில் நுழைவது பதிவாகி இருந்தது.

“அந்த வீடியோ பதிவில் மகேஷ் நுழைவதும், சுமார் அறுபது நிமிடங்கள் கழித்து, மருத்துவமனையை சேர்ந்த இரண்டு நபர்கள் ஸ்ட்ரக்சரில் அவரை தூக்கி கொண்டு, ஆம்புலன்சில் ஏற்றுவதும் தெளிவாக பதிவாகி உள்ளது. அசலாட்சியின் வீட்டுக்குள் நுழைந்து, வெளியேறும் வரை சுமார் ஒரு மணிநேரம் அங்கே மகேஷிற்கு என்ன வேலை இருக்க முடியும்?

அதே நேரத்தில் பதட்டத்தோடு என் கட்சிக்காரர் தன்குழந்தையை தூக்கிக் கொண்டு, அந்தத் தெருவில் உள்ள ஆட்டோவில் ஏறும் காட்சியும் பதிவாகி உள்ளது. சம்பவம் நடந்த பொழுது அசலாட்சியை தடுத்து, அமைதிப்படுத்த வந்த இரு பெண்களும் அங்குள்ள நிலவரத்தை பார்த்து, அதற்குரிய விளக்கத்தையும் அளித்துள்ளனர். இதற்கு எதிர்கட்சி சகோதரர் என்ன பதில் சொல்லப் போகிறார்? தனது வாதத்தில் மகேஷ் மது அருந்தவில்லை என்று அவர் குறிப்பிடவில்லை.” என்று வாதம் செய்ய மணிமாறனுக்கு இது புதுவிதமான தலைவலியாக இருந்தது.

எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தும், தன் மீது எந்த தவறும் இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக மகேஷும், அவன் குடும்பத்தாரும் மிக நல்லவர்கள் போல் பேசி வைத்தது கடுப்பைக் கிளப்பியது.

ஆனாலும் கேள்விகள் கேட்கும் போது பதில் அளிக்காமல் இருந்தால், அது தனது திறமைக்கு பெரிய கரும்புள்ளியாய் மாறிவிடும் என்ற நோக்கில்,

“அப்படி மது அருந்தி இருந்தாலும், போதையில் வீடு மாறி வந்து இருக்கலாம். ஆனால் இந்தப் பெண்ணின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன யுவர் ஹானர்.” – மணிமாறன்

இந்த வாதத்தை கேட்டதும் அசலாட்சிக்கு புதைந்து கிடந்த குமுறல்கள் எல்லாம் மனதில் ஏறி வார்த்தையாக கொட்டி விட்டாள்.

“மது அருந்திய போதையுடன் இருந்ததால் மட்டுமே, என் வீட்டிற்கு வந்தான் என்பதை எப்படி ஒத்துக் கொள்வது? போதையில் இருக்கும் போது சோற்றுக்குப் பதிலாக வேற ஏதாவது கொடுத்தால் சாப்பிடுவானா?

போதையில் அம்மா, தங்கை, அக்கா என்று உறவு முறைகள் எல்லாம் தெளிவாகத் தெரிகிறது. அவர்களிடம் முறை தவறி நடக்ககூடாது என்பதும் புரிகிறது. ஆனால் அதே போதையில் இருக்கும் பொழுது, அடுத்த வீட்டு பெண் ஆயிரம் தடவை அண்ணா என்றும் தம்பி என்றும் கூப்பிடுவது மறந்து போயிடுதா? அவளை தப்பான கண்ணோட்டத்துல பார்த்து, அவளை சீரழிக்க சொல்லுதா அவனுக்கு வந்த போதை?

அவன் செய்த குற்றத்திற்கு அவன் சாப்பிட்ட மதுவின் போதைதான் காரணம் என்றால் அந்த மதுவை தயாரிக்கும் கம்பெனி, விற்கும் கடைக்காரன், அதை விற்பதற்கு அனுமதி அளித்த அரசாங்கம் எல்லோரையும் குற்றவாளியாக நிற்க வைக்க இந்த கோர்ட் தயாரா இருக்கா?” அசலாவின் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் எல்லாம் ஆதங்கமாய் பேச்சில் பொங்கி விட, ஆதிரை தன் பார்வையால் ஆறுதல்படுத்தியே அவளை அடக்கி வைத்தார்.

“நீங்கள் சொல்ல விரும்புவதை உங்கள் வழக்கறிஞர் மூலமாக சொல்லலாம் மிசஸ்.அசலாட்சி. வழக்கிற்கு தேவையான கருத்துக்களை மட்டுமே இங்கே கூற வேண்டும்.” நீதிபதியும் அறிவுறுத்திட, நிமிட நேர அமைதிக்குப் பின்னர் மீண்டும் வாதத்தை ஆரம்பித்தார் ஆதிரை.

“கனம் நீதிபதி அவர்களே! அந்த வீட்டில் நடந்த தாக்குதலை ஊர்ஜிதம் செய்த மருத்துவ ஆதாரங்கள், அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் உடையில் வந்த மதுவாடை மற்றும் அந்த நபரின் உடற் காயங்களுக்கான மருத்துவ அறிக்கை, அனைத்தும் தங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திலும் மகேஷின் கைரேகையும், மதுவின் வாசனையும் இருப்பதை, உறுதி செய்த ஆய்வக ஆதாரங்கள்(லேப் ரிப்போர்ட்) எல்லாம் இப்பொழுது உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். அனைத்தையும் ஆராய்ந்து தகுந்த நீதி வழங்க கனம் நீதிபதி அவர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என ஒரே மூச்சில் பேசி முடித்தார்.

மகேஷின் பொய்யான வாக்குமூலமும், அசலாட்சி தான் தாக்கியதை ஒப்புக் கொண்ட உண்மையையும் மட்டுமே நம்பி வழக்கை நடத்திச் சென்ற மணிமாறனுக்கு, இது தீராத சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. எல்லாம் கடந்து விட்ட நிலையில் என்ன செய்து? எதை மாற்ற முடியும்? என்றே தன் இயலாமையை பெருமூச்சு விட்டே சமன்படுத்திக் கொண்டார்.

அனைத்தையும் விரிவாக ஆராய்ந்த நீதிபதி,
“சட்டத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் என்றும் நம்பிக்கையை விட்டுவிடக் கூடாது என்று திருமதி.அசலாட்சிக்கு இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. நீதிமன்றத்தின் முன் ஆதாரத்தோடு நிரூபிக்கப்படும் வழக்குகளுக்கு, என்றும் தகுந்த நியாயத்தை இந்த நீதிமன்றம் இன்றளவும் வழங்கி வருகிறது.

தவறு செய்பவனை தண்டிக்கும் நோக்கத்தில் அசலாட்சி செய்தது சரி என்று கருதியும், பெண்களின் தற்காப்பு விடயத்தில், இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாலும், அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்கிறது இந்த நீதிமன்றம்.

மேலும் மகேஷ் பாலியல் துஷ்பிரயோகம் செய்த அராஜகத்தை கண்டித்து, ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கிறது. உடல் நிலை சரியில்லாத இந்த நேரத்தில் காவலுடன் கூடிய அரசாங்க மருத்துவ பிரிவிற்கு அவரை மாற்றிவிட, காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.” என இறுதி தீர்ப்பை உரைத்து அந்த வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி.

தீர்ப்பின் தன்மை வெளியே இருந்த அனைவருக்கும் தெரியவர, அந்த சமயத்தில் அங்கே சூழ்ந்த ஊடகங்களின் வெளிச்சப் பார்வைக்கு அசலாட்சி பட்டுவிட்டாள்.

வெளியே வந்தவளை வளைத்து கொண்டு, அனைவரும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிப்போனாள். அடுத்தடுத்து அவளைத் தாக்கிய புகைப்பட வெளிச்சங்களாலும், சூழ்ந்து கொண்ட கூட்டங்களாலும் அவளுக்கு மூச்சு முட்டி விட்டது.

“இந்த தீர்ப்பு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குதா அசலாட்சி?”

“எந்த மாதிரியான சூழ்நிலையில நீங்க மகேஷை தாக்குனீங்க?”

“நீங்க அடிக்கும் போது மகேஷ் என்ன செய்துட்டு இருந்தான்?”

“இவனைப் போன்ற காமுகர்களுக்கு நீங்க கொடுக்கும் எச்சரிக்கை என்ன?”

“பெண்களுக்கு இதை போன்ற சூழ்நிலைகளில் எப்படி கையாள்வது?ன்னு உங்க அனுபவத்துல இருந்து நாலு வார்த்தை சொல்லுங்க!”

எதிர்கட்சி வக்கீலை விடஅதிகமான கேள்விகளை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கேட்டு, அவளை திக்கு முக்காட வைத்தனர்.

அவளது சூழ்நிலைகளின் தாக்கத்தை சொல்லி, கருத்துக்களைப் பகிர்வதற்கு, அவள் செய்தது என்ன ஆராய்ச்சியா? விளக்கி விவரமாக கூற? யார் புரிந்து கொள்வது இவற்றை எல்லாம்?

எந்த சூழ்நிலையிலும் தங்கள் விளம்பரம் ஒன்றேயே குறிக்கோளாகக் கொண்டு, ஊடகங்கள் தங்கள் வேலையைத் தவறாமல் செய்து கொண்டிருந்தனர்.

“என்னை தற்காத்துக்கொள்ள அந்த சமயத்தில் எடுத்த முயற்சி மட்டுமே அது. அதைத் தவிர வேறெந்த கருத்தும் இல்லை.” என்று அசலாட்சி பட்டும்படாமல் சொல்லிவிட்டு வந்தாலும், அது பூதாகாரமாக கிளம்பி, அன்றைய நாள் முழுவதும் மக்கள் வாயில் அசைபோட ஆரம்பித்தது.

அன்றைய நாளின் ஒரு மணிநேர கருத்தாடலுக்கு, அனைத்து ஊடகங்களிலும் அவளது பெயரே எதிரொலித்தது. மற்றொரு புறம் இவள் நடத்திய தாக்குதல், சரியா? தவறா? என்ற ரீதியில் பலஅமைப்பினர் பட்டிமன்றம் நடத்தி வந்தனர்.

பக்கத்து குடித்தனக்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத சேதி, காட்டுத்தீயாகப் பரவியதில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.

“இதனாலதான் நீ வேலைய விட்டுட்டு வீட்டுலயே அடைஞ்சு இருந்தியா?”

“முன் ஜாமீன் வாங்கிட்டு, தைரியமா எல்லாத்தையும் சமாளிச்சிட்டு இருந்திருக்க! பரவாயில்லையே!” என்று பலரும் பல விதமாக பார்த்தும், பேசியும் சென்றனர்.

“புருஷன் இல்லாத வீடு, வயசானவர் பெருசா என்ன செய்ய முடியும்னு நினைச்சே, திட்டம் போட்டு வந்திருப்பான் போல, ஆனா பொண்ணு அவனுக்கு சரியான பதிலடி கொடுத்து, தன்னை யாரும் அசைக்க முடியாதுன்னு நிரூபிச்சுட்டா!”

“என்ன புண்ணியம்? அவளால தன்னை காப்பாத்திக்க முடியாம போச்சே?” தன்னை பற்றிய வதந்திகள் கணக்கில்லாமல் பேசப்பட, ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருந்த குழப்பங்களும் மனவேதனைகளும் தூசி தட்டி எழுப்பப்பட்டன.

தீர்ப்பு வந்த அடுத்த வாரத்தில், மகேஷ் தன் நிலையைத்தானே சகிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருந்தான். இரவு நேரத்தில், எல்லோரும் உறங்கிய பின், இந்த அசம்பாவிதம் நடந்து முடிந்திருந்தது.

தன்னால் ஒரு உயிர் பலியாகி விட்டதே என்ற குற்ற மனப்பான்மையும் இப்பொழுது அசலாவை தாக்கத் தொடங்க, பெருத்த மனஉளைச்சலுக்கு ஆளானாள்.

வெளியே தலைகாட்டமுடியாத சூழ்நிலைக்கு அந்த குடும்பம் தள்ளப்பட, ஊராரின் பார்வைக்கும், அவர்களின் பலவித ஜாடையான பாஷைகளையும் கேட்டு சகிக்க முடியவில்லை.

முதுமை காலத்தில் உடலோடு உள்ளமும் தளர்ந்து விட, அன்பான பார்வைக்கும் மென்மையான பேச்சிற்கும் சுந்தர ராஜுலுவின் மனம் ஏங்கத் தொடங்கியது.

தங்களை எதிர்கொள்பவர்கள் எல்லாம், ஒருவித கேள்விக் குறியோடும் விசாரனையோடும் பேசுவதை தவிர்க்கவே, இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள முடிவெடுத்தார்.

யாதொரு ஆதரவும் இல்லாத நிலையில், வீம்பாக தன் நிலையில் நின்று, மகளோடு பேத்தியையும் அழைத்துக் கொண்டு சங்கரய்யாவோடு இணைந்து வாழ கிராமத்திற்கு பயணப்பட்டார்.

error: Content is protected !!