Ponnoonjal-7

Ponnoonjal-7

ஊஞ்சல் – 7

தங்கள் வீட்டுத் தோட்டத்தில், தனக்கு தெரிந்த கம்பு சுழற்றும் வித்தையை எல்லோர் முன்னிலையிலும் செய்து காட்டிக் கொண்டிருந்தான் சின்னா.

தங்கள் பாடங்களை முடித்து அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு, மாலை நேர சிற்றுண்டியாக இனிப்புபனியாரமும், முளைகட்டிய பயிரையும் பகிர்ந்து கொடுத்த அசலாட்சி,

“சின்னா நீயும் எடுத்துக்கோ! இன்னைக்கு சிலம்பம் சுத்துனது போதும்” என்று அவனை அழைக்க

“நான் நல்லா செய்றேனாம்மா?”

“உனக்கென்ன? அருமையா செய்ற பாபு!”

“இல்லம்மா! சின்னா தப்பு தப்பா செய்றான்” என்று வம்பிக்கிழுத்தாள் பொம்மி.

“இவ எப்போதான் என்னை அண்ணாயானு கூப்பிடுவாம்மா?” (இப்படிக் கேட்டே தனது ஏக்கத்தை, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கடத்தி விடுகிறான் இந்த பெரிய மனிதன்!) அசலாவைப் பார்த்து சின்னா கேட்க,

“இவளுக்கு கொழுப்பு கூடிப்போச்சு. ரெண்டு நாள் பட்டினி போட்டா சொல்பேச்சு கேட்க ஆரம்பிப்பா!”

“இவன் எனக்கு சின்னையாதான்! என்னை அடிச்சா, நான் உன்னை சீனிப்பாகிட்ட சொல்லிடுவேன்” என்று தன் தாயை மிரட்ட ஆரம்பித்தாள் பொம்மி.

அன்று தன்னை ஆதரித்தும், தன்னை பாசத்தோடும் அழைத்த ரிஷபனை ஏதோ ஒரு வகையில் ‘சீனிப்பா’ என ஏற்றுக் கொண்டவள், அவன் பேரை சொல்லி மற்றவர்களை மிரட்டி வைப்பது நான்கு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

“உங்க அப்பா முன்னாடி நின்னு பேச முடியல! என்கிட்டே மட்டும் வாய்கிழியும் உனக்கு” என்று அசலாட்சி நொடித்துக் கொள்ள,

“நாணா கூட பேசறதுக்கு இவ பயபடுறாம்மா! பொம்மி தைரியமா பேசு! நான் பக்கத்துல இருக்கேன் சரியா?” என்று சின்னாவும் தன் ஆதரவை தங்கைக்கு அளித்தான்.

நான்கு நாட்களுக்கு முன், தான் பேசிய பேச்சின் அர்த்தம் தெரியாமல், எப்பொழுதும் போல் அனைவரிடமும் பழகி வந்தான் சின்னா. அசலாவும் அவன் பேச்சை பொருட்படுத்தாமல் மகனிடம் பேசுபவள், கணவனிடம் தள்ளி நின்றாள்.

பிள்ளைகளின் பேச்சில் அன்று, தங்களுக்குள் முறுக்கிக் கொண்ட பெற்றோர்கள், இன்னும் நேருக்கு நேர் பேசிக் கொள்ளவில்லை. நான்கு நாட்களாக முகம் கொடுத்து பேசாத மனைவியை பேச வைக்கும் வித்தை யாதென்று ரிஷபனுக்கும் தெரியவில்லை.

ஏதோ ஒரு ஆதங்கத்தில் மனைவி பேசிவைக்க, பதிலுக்கு தானும் கோபத்துடன் பேசி இருக்க கூடாதோ என்றே மனம் தன் தவறை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

இரண்டு நாட்களாக மனைவி தானாக வந்து பேசிவிடுவாள் என்று எண்ணியவன், அது நடக்காமல் போனதில் அவளை பார்வையால் தொடர்ந்து கொண்டே இருந்தான்.

கணவனின் கேள்விப் பார்வைக்கு மனைவியும் சளைக்காமல் தன் விழிமொழியால் மட்டுமே பதில் அளிக்க, ரிஷபனுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் விளங்க முடியா தவிப்பை அளித்தது.

இதுவரை அனுபவித்திராத அவஸ்தை மனதை ஆட்கொள்ள, வெளிவேலையில் மனம் லயிக்காமல் அன்று இரவில் சீக்கிரமே வீடு திரும்பி இருந்தான்.

மனைவியிடம் பேசிவிட வேண்டுமென்று வந்தவன், எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் கண்களையும் மனதையும் அலைபாய விட்டவனாக இரவு உணவினை எடுத்துக் கொள்ள அமர்ந்திருக்க, அவன் கண்ணில் மனைவியின் தோற்றம் புதுவிதமான வேட்கையை அளித்தது.

இதை அறியாதவளாய் அசலாட்சியும் அங்கும் இங்கும் நடந்து அவனது தவிப்பினை மேலும் ஏற்றி வைக்க, மனைவியின் அழகை முதன் முறையாக ரசிக்க ஆரம்பித்தான்.

இருவரின் மனமும் ஒன்று படாமல் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்க ரிஷபனுக்கு விருப்பமில்லை. இன்னமும் தாயும் மகளும் தன்னிடம் மனதளவில் நெருங்காமல் இருக்கும் வேளையில், தனது மனதின் ஆசை தவறான செய்கையாகவே அவனுக்கு தோன்றியது.

மனதின் தவிப்பை உணவிலும் காட்டி அரைகுறையாக முடித்துக்கொள்ள, தன் மனப்பிணக்குகளை மறந்து அவனிடம் சென்றவள்,

“என்ன ஆச்ச பாவா? சரியா சாப்பிடல நீங்க?” அசலாட்சி அக்கறையுடன் கேட்க,

“பசியில்ல சாலா!” என்றவனின் பார்வை, அவளை மேலிருந்து கீழாக ஊடுருவி சென்றது.

அந்த பார்வையில் கணவனின் தவிப்பை அறியாதவள், “உடம்பு சரியில்லையா?” எனக் கேட்டு அவனது நெற்றியை எதேச்சையாக கைவைத்திட, அதையே தனக்கு சாதகமாகக் கொண்டு அவள் கரங்களை தன் கைச் சிறைக்குள் வைத்துக்கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அப்பப்பா என்ன ஒரு பார்வை! இது வரை இப்படி ஒரு பார்வையில் கணவன் தன்னை நோக்கியதில்லை என்பது அசலாவிற்கு அந்த நேரத்தில்தான் தெளிவாகத் தெரிந்தது.

கணவனின் பார்வையில் மனைவிக்கு உடலோடு சேர்ந்து மனமும் சிலிர்க்கத் தொடங்கியது. ரிஷபனின் அன்பான பரிவான பார்வையையும், அவனது கனிவான தொடுகையையும் அனுபவித்திருக்கிறாள்.

ஆனால் இந்த தொடுகை முற்றிலும் புதிய ஸ்பரிசம் அவளுக்கு. அவன் கைச்சிறையை விடுவித்துக் கொண்டு செல்லலாம்தான். ஆனால் அப்படி செய்து அவன் மனதை புண்படுத்த விரும்பாத தன்மனதை எந்த விதத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை அசலாவிற்கு. எது அவளைத் தடுக்கின்றது என்பதும் அவளுக்கு புரியவில்லை.

ரிஷபன், அவளை தன்னருகில் அமர வைத்துக் கொள்ள, அவளும் இணங்கியே அமர்ந்தாள். புத்திக்கும் இதயத்திற்கும் நடந்த போராட்டத்தில் இறுதியில் இதயம் வென்று, அவள் மனதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

அவள் அருகில் அமர்ந்து கொண்டவன், அவளது நீண்ட விரல்களையும், வாளிப்பான கரங்களையும் சிறிது நேரம் ரசித்தவன், அவள் அனுமதியை பெறாமல் அவள் கைகளை எடுத்து தன் கன்னத்தில் பதித்துக் கொண்டு கண்மூடி அந்த ஸ்பரிசத்தை அனுபவித்தான்.

சில்லென்று இருந்த மனைவியின் மென்மையான கைகளும் மென்பஞ்சு விரல்களும் அவன் மனதில் பனிமழை அள்ளி வீசியதோ?

இன்னும் அவன் கரத்தில், அவளது கை சிக்குண்டுதான் இருக்கிறது. இன்று ஏனோ அசாலாவின் மனமானது, புத்தியை தின்று ஏப்பம் விட்டு, அவள் நிலையை நொடிக்கு நொடி உணர்த்திக் கொண்டே இருந்தது.

“சாலா!!” என்று இதுவரை அழைக்காத மென்குரலில் அழைத்து தன் தவிப்பினை கணவன் உணர்த்திட, அந்த ஒற்றை சொல்லில் அவளது இதயம் ஆனந்த தாண்டவமாடியது.

கணவனின் அழைப்பில் விழி விரித்து பார்த்தவள், என்ன என்று தன்கண் பாஷையில் கேட்டிட

“கண்ணால பேசியே என்னை தவிக்க வைக்கிற சாலா! இந்த மாதிரி எல்லாம் நான் இருந்ததில்ல” என்று சொன்ன வேகத்தில், அவள் கண்கள் இரண்டிலும் தன் அச்சாரத்தை பதித்தான்.

உச்சி முகர்ந்து பாசத்தில் தந்த முத்தத்தை விட, இந்த இதழ் ஒற்றல் இனித்ததோ? இருவருக்கும் தெரியவில்லை.
அந்த நொடியில் கிடைத்த முத்தம் தித்திக்க, தன் நிலையை நினைத்து வெகுவாய் நொந்து கொண்டாள் அசலா

ஏழு வருடங்கள் ஒருவனுடன் காதல் வாழ்க்கையை வாழ்ந்தவள். சேது இறந்த இந்த இரண்டு வருடங்களில், அவனை நினைத்து உருக முடியாதபடி பிரச்சனைகள் தன்னை ஆட்கொண்டாலும், அவனை மறந்து விடவில்லை அசலாட்சி.

ஆனால் ரிஷபனை கைப்பிடித்த நாளில் இருந்து மகளின் போக்கை மாற்றி, இந்த வீட்டில் எப்படி தங்களை நிலைபடுத்திக் கொள்வது என்று யோசித்தாலேயொழிய, சேதுவின் இடத்தில் ரிஷபனை வைத்துப் பார்த்தாளா? என்பதை சிறிதளவும் சிந்திக்கவில்லை

ஒரு நொடியும் ரிஷபனை பற்றிய அன்பை மனதில் எண்ணிப் பார்த்ததும் இல்லை அவள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர அன்பு வைத்திருப்பவர்கள் தான். ஆனால் அது நேசமாக மாறிய விதம் எப்படி என்று அசலாட்சிக்கு தெரியவில்லை

தானாய் உண்டான புதிய நேசத்தில் மனம் மயங்க ஆரம்பித்த நிலையில், மூளை அவள் மனதை தட்டி எழுப்பி விட்டு இப்படியான பொல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு ஆசைவைத்த மனதை கலைத்து வைத்தது

தன்னை நோக்கி வருவபவனை, தன்னை இழுத்துக் கொள்பவனை தவிர்க்க இயலாமல் தவித்து விட்டாள் அசலாட்சி.

மனைவியின் இரு கண்களிலும் முத்தெடுத்தவன், கன்னத்தில் முக்குளிக்க முயற்சிக்க, மனைவியின் மெல்லிய குரல் அவனை தடை செய்தது.

“பாவா… என… எனக்கு… கொஞ்சம் டைம் கொடுங்க! உங்க மனசு எனக்கு புரியுது. ஆனா எனக்கு… நான் என்ன நெலையில இருக்கேன்னு… எனக்கே தெரியல? சத்தியமா உங்க மனசு சங்கடப்படுற மாதிரி நடந்துக்க எனக்கு இஷ்டம் இல்ல… ஆனா இப்போ… இது…. எப்படி சொல்லுவேன் பாவா!” என்று தன் இயலாமையை கூறியபடியே கணவனின் முகத்தை பார்த்தபடியே, நெஞ்சில் சாய்ந்து விட்டாள் அசலாட்சி.

“நீங்க சொல்லி நான் மறுத்ததா இருக்கக் கூடாது பாவா! எனக்காக, கொஞ்சம் பொறுமையா இருங்க!” மனதின் தவிப்பை ஒருவழியாக வார்த்தைகளில் கொட்டி விட்டாள்.

“ஏன் சாலா? நாம கணவன் மனைவி தானே? இன்னுமா உன் மனசு என்னை ஏத்துக்கல?” தனது வேட்கைகள் இவளுக்கு இல்லையோ என்னும் ரீதியில் ரிஷபனும் கேட்டிட,

“இல்லன்னு சொல்லல பாவா! ஆனா உங்களோட மட்டுமே நான் வாழ்ந்ததில்லையே? என் மனசு என்னை குத்திக் காட்டுது. சேதுவோட சந்தோசமா வாழ்ந்த வாழ்க்கைக்கும், அவர் மேல வச்சிருந்த அன்புக்கும் என்ன அர்த்தம்னு என்னை கேட்குது! நான் என்ன பண்ணட்டும்?” என்று அறியாப் பிள்ளையைப் போல தவிப்பாய் கேட்டு வைக்க, இதற்கு என்னவென்று பதில் சொல்வது?

கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டே அசலாட்சி பேசிக் கொண்டிருக்க, மனைவியை அணைத்தபடியே ரிஷபனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

“நாம யாரையும் தவிக்கவிட்டோ, ஏமாத்தியோ கல்யாணம் பண்ணிக்கல சாலா! ஒருத்தர் வாழ்க்கையில ஒருமுறை மட்டுமே காதல், விருப்பம் வரணும்னு சட்டம் இருக்கா என்ன? இல்ல அதுக்குன்னு தனியா வயசு வரம்பு வச்சிருக்காங்களா?” கேட்டபடியே தனது அணைப்பை மேலும் இறுக்கி, மனைவியை தன் முகம் பார்க்க வைத்தான்.

“அப்படியெல்லாம் இல்ல பாவா! ஆனா நமக்குள்ள எந்த விதத்துல, எப்படி ஆரம்பிச்சதுன்னு தெரியல? இப்போவும் சேதுவ மறந்திட்டியான்னு என்கிட்டே கேட்டா இல்லன்னுதான் சொல்வேன். அப்படி இருக்குறப்போ உங்ககூட எப்படி நான்…” என திக்கிக் திணறியே தன் நிலையை உணர்த்திட,

“புரியுது சாலா! என் மனச புரிஞ்சு, உன் மனசுல நானும் இருக்கேன்னு சொன்னதே போதும். எங்கே நான் மட்டுமே உன்மேல விருப்பத்தை வச்சிருக்கேனோன்னு மனசுக்குள்ள தவிச்சிட்டு இருந்தேன்.”

“ஏன் பாவா? என்கூட பேசவும் உங்களுக்கு தயக்கம் வருதா?” என்று சலுகையாக கோபித்துக் கொள்ள

“ஹஹா… நம்ம கல்யாணம் பெரியவங்க கட்டாயத்துல நடந்தது சாலா!. அதான் என் விருப்பத்தை உன்கிட்ட சொல்லவும் யோசிக்க வைச்சிருச்சு” என்று பெருமூச்சுடன் கூறிட, இருவருக்குமே திருமணத்திற்கு முன்பான தங்களது வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்தது.

நான்கு மாதத்திற்கு முன்னால்…
பாகாலா கிராமத்தின் மாலைபொழுதை எட்டிப் பார்க்கும் வேளை. மரநிழலில் சுகந்தமான தென்றல் காற்றை உள்ளிழுத்துக் கொண்டு சங்கரய்யா வீட்டுத் திண்ணையில் அசலாட்சி அமர்ந்திருக்க, உடன் அவளது மடியில் எப்பொழுதும் போல் பொம்மி ஒட்டிக் கொண்டிருந்தாள்.

சென்னை வாழ்க்கையை வெறுத்து இங்கே வந்து சரியாக இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. எந்தவொரு பயமும் நிந்தனையும் இல்லாத கிராமத்து வாழ்வு அவர்களுக்கு, பெருநிம்மதியை கொடுத்துக் கொண்டிருந்தது.

அன்றும் ஓய்வாக வெளித்திண்ணையில் அமர்ந்திருந்த வேளையில், கிராமமே புடைசூழ ஐந்து பேரை கட்டி இழுத்து வந்து கொண்டிருந்தது. அந்த ஐந்து நபர்களின் உடல் முழுவதும், கசையடியால் உண்டான காயங்களும், அதன் மீது வழிந்து கொண்டிருந்த இரத்தமும், அடித்த நபரின் வலிமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

“என்ன சங்கரா? எதுக்கு இவங்கள கட்டி இழுத்துட்டு போறாங்க?” நண்பனிடம் சுந்தரராஜுலு கேட்டார்.

“தப்பு செஞ்சுருப்பாங்க சுந்தரம்! அதுக்கு தண்டனை கொடுத்து, போலீஸ்ல ஒப்படைக்க போறாங்க!” – சங்கரய்யா

“போலீஸ்ல பிடிச்சு கொடுக்குறவங்க எதுக்காக இங்கே தண்டனை குடுக்கணும்?” – சுந்தரம்

“அங்கே போனா எப்படியும் அரைநாள்ல, இவங்களுக்கு வேலை குடுத்த பெரிய மனுஷனுங்க ஜாமீன்ல எடுத்திடுவாங்க… திரும்பவும் அதே தப்ப செய்ய இந்த காலிப்பசங்களும் வருவாங்க! அப்படி வராம இருக்கத்தான், ஊர்க்காரங்க சார்பா, காவல்காரன் இந்த தண்டனை குடுக்குறது” – சங்கரய்யா

“இதுக்கு அரசாங்கம் ஒன்னும் சொல்றதில்லையா சங்கரா?“

“ஊர் பஞ்சாயத்து ஒன்னுகூடி முடிவெடுக்குது, அதுவுமில்லாம தப்பு செஞ்சவங்கள காவல்துறை வசம் ஒப்படைக்கிறோம், அப்படி இருக்க என்ன சொல்ல முடியும்?” சங்கரய்யா விளக்கிக் கொண்டிருக்க கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தாள் அசலாட்சி.

கிராமத்து கட்டுப்பாடுகளோடு இருந்தாலும், இங்கே பாதுகாப்பு சர்வ நிச்சயம் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. எந்தவொரு அசம்பாவிதம் யாருக்கு நடந்தாலும், அவர்களுக்கு தகுந்த நிவாரணம் அளித்து, வாழ்வாதாரத்தை மீட்டுத் தருவதை செவிவழிச் செய்தியாக கேட்டும் வருகிறாள்.

இது போன்ற விஷயங்களில் ஊர்த்தலைவரின் முடிவு, ஊர் காவல்தலைவன் சொல்வதை சார்ந்தே இருக்கும். அதன்படி நகரி மண்டலத்தையே தன்காவல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரிஷபன் சொல்வதே இங்கே சட்டமாக இருந்து வருகிறது.

அவனது இந்த முடிவானது தவறு செய்பவர்களை மறுமுறை செய்ய விடாமல் தடை செய்தது. தவறுக்கு தண்டனை கொடுக்கும் விடயத்தில், அவனுக்கு நிகர் அவனே!

இழுத்து வரப்பட்ட ஐந்து பேரின் முன்னால், நடுவில் ராஜ தோரணையோடு கம்பீரமாக, காவல்தலைவனாய் வந்து கொண்டிருந்தான் ரிஷபன் சீனிவாசன். கையில் கயவர்களுக்கு அடிகொடுக்க பயன்படுத்தப்பட்ட சவுக்கு இருந்தது. நடந்து கொண்டே வந்தவன், உடன் வந்தவர்களை போகச் சொல்லிவிட்டு, சங்கரய்யாவுடன் பேச நின்றான்.

பெரியவர்களிடம் பேச நின்றானா? அல்லது திண்ணையில் அமர்ந்திருந்த அசலாட்சியை பார்க்க நின்றானா என்பது அவனுக்கே தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் அவனது மனம், அவளை பார்க்க சொல்வதை தட்டாமல் செய்கிறான்.

சங்கரய்யா வீட்டில் சிறுவயது முதல் நெருக்கமான பழக்கம் அவனுடையது. அதனால் அங்குள்ளவர்களுக்கும் வித்தியாசங்கள் எதுவும் தெரியவில்லை.

“சின்னநாணா!(சித்தப்பா) இந்த திருட்டுப் பசங்கள ஏசிபி ஆபிஸ்ல ஒப்படைச்சுட்டு வர்றேன். பின்னிகிட்ட ராத்திரி சாப்பாடு தாயார் பண்ணி வைக்க சொல்லுங்க!”

“சரி வாசு! உன் வேலையெல்லாம் முடிச்சிட்டு வா! எப்போவும் போல களவாணிப் பசங்களுக்கு மனம் போல ஆசிர்வாதம் பண்ணிட்ட போல?” சிரித்தபடியே சங்கரய்யா கேட்க

“தப்பு பண்ணவன் திரும்ப இந்த பக்கம் வர நெனச்சாலே, அவன் ஈரக்குலை நடுங்கி அந்த இடத்துலேயே செத்துப் போகணும். அதுக்குதான் இப்படி வாழ்த்தி ஊரெல்லாம் நடக்க வைக்கிறது” மீசையை முறுக்கிகொண்டே, சத்தமாக சிரித்தான் ரிஷபன்.

“என்னய்யா செஞ்சு உன்கிட்ட மாட்டுனாங்க?” – சுந்தரம்

“வழக்கபோல மணல் கடத்தல்தான் மாவையா(மாமா)… லாரியில கடத்துனா கண்டுபிடிக்கிறாங்கன்னு, சரக்கு ஆட்டோல தண்ணி டிரம்ல வச்சு கடத்த பார்த்திருக்காங்க… நம்மாளுங்க மடக்கி பிடிச்சுட்டாங்க!!”

பேச்சுக்குரல் கேட்ட கனகம்மாவும் எட்டிப் பார்த்து

“வாய்யா வாசு!! அம்மாவுக்கு எப்படி இருக்கு?”

“ஒன்னும் மாற்றமில்ல பின்னி!”

“சின்னா என்ன பண்ணறான்?” – கனகம்மா

“அவன் என்ன செய்றான்னு நான் எங்கே பார்த்தேன்? நான் வீட்டுக்கு போறப்போ அவன் தூங்கியிருப்பான், கொஞ்சம் தண்ணி கொண்டுவா பின்னி!” – ரிஷபன்

இவர்களின் சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அசலாட்சி, வீட்டு மனுஷியாய் ரிஷபனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

அந்த நேரத்தில் அவன் பார்த்த பார்வையில் பரிவும், கனிவும் தொக்கி நிற்க, அதனைக் கண்டவள் ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள். சட்டென்று ஒரு நொடியில் இருவரின் பார்வைகளும், வெவ்வேறு பாவனைகளில் சந்தித்துக் கொண்டது.

‘கடவுளுக்கும் சரி, செத்துப்போன சேதுப்பயலுக்கும் சரி, கொஞ்சம் கூட மனசுல ஈவு இரக்கங்கிறதே இல்ல… ரெண்டு அப்பாவிங்கள தனியா தவிக்க விட்டு, வேடிக்கை பார்க்க எப்படிதான் மனசு வந்ததோ?’ மனதிற்குள் அவர்களை எப்பொழுதும் போல் வசை பாடினான்.

அவன் நினைப்பது அவனுக்கே அபத்தம் என்று நன்றாக புரியும். சேதுமாதவன் இறந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த ஆதங்கம், இவர்களைப் பார்க்கும் போதெல்லாம் விருட்சமென வளர்ந்து, அவனை அறியாமலேயே மனதிற்குள் புலம்பித் தள்ள வைக்கிறது.

இவர்களின் முகத்தில் சிரிப்பை ஒரு நாளாவது பார்த்து விடமாட்டோமா? என்ற நப்பாசையில், எப்பொழுதும் ஒருவித அக்கறையுடன் பார்க்கிறான். இந்த இரண்டு மாதத்தில் பலமுறை இந்த வீட்டிற்கு வந்து போகின்றவனுக்கு இன்னும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

முன்பைவிட சோகமும், ஏக்கமும் நிறைந்த அசலாட்சியின் கண்களும், பயத்தோடு கூடிய அழுகையில் மிரண்ட பொம்மியின் முகமும், அவனை எப்பொழுதும் இம்சித்துக் கொண்டிருந்தன.

அதே நேரத்தில் புன்னைகையை முழுவதுமாகத் தொலைத்து நின்றவளுக்கோ, மனதில் பல கேள்விகள் முட்டி மோதி நின்றது.

‘இவர் பார்வையே இப்படித்தானா? ஊருக்கெல்லாம் நல்லவரா கம்பீரமா இருக்கிறவர், பார்க்குற பார்வை மட்டும் சரியில்ல… இது நல்லதுக்கு இல்லன்னு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறது? பதிலுக்கு முறைச்சுப் பார்த்தாலும் திரும்பவும் அதே மாதிரியே பார்த்தா என்னதான் செய்ய?’ மனதிற்குள் மட்டுமே புலம்ப முடிந்தது.

என்னவென்று சொல்லி அவனது பார்வை பரிவர்தனைகளை தடை செய்வது என்று அசலாட்சிக்கும் புரியவில்லை.

வார்த்தைகள் இல்லாத பாஷைகள் மூலம் தங்கள் உணர்வுகளை, தங்களுக்குள் கடத்திக் கொள்ள முயன்று இருவரும் தோற்றனர். அவன் சென்ற பிறகு வீட்டுப் பெரியவர்களின் பேச்செல்லாம் அவனது புராணமாகிப் போனது.

“இந்த ஊருக்கே ராஜாவா இருக்கான்… இவங்க அப்பாகூட இவ்ளோ கண்காணிப்பா இருந்ததில்ல… நம்ம பசங்க அதிக கூலிக்கு ஆசைப்பட்டு, எல்லா தப்பையும் சர்வ சாதாரணமா செய்றாங்கன்னு மனசு வருத்ததுலதான், வாசு இந்த ஊர்காவல் பொறுப்ப எடுத்துக்கிட்டான்.” – சங்கரய்யா

“அது வரைக்கும் அவனுக்கு இந்த முடிவு இல்லையா?” – சுந்தரராஜுலு

“ராமைய்யா அதுக்கு ஒத்துக்கல… ஊர் ஜனங்க கூடி அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவ ஒருத்தர தேர்ந்தேடுப்போம்னு சொல்லி, அவரோட பதவியையும் தட்டிக் கழிச்சார்!” – சங்கரய்யா

“எதுக்காக இந்த முடிவு எடுத்தாங்க சங்கரா?”

“ஊர் அவ்வளவு மோசமா இருந்தது சுந்தரம்! யாருக்கும் கட்டுபாடு இல்ல! காவாலிப் பசங்க இஷ்டத்துக்கு நாட்டாமை பண்ணிட்டு இருந்தாங்க… அதுக்கு அரசியல்வாதிகளோட ஆதரவும் இருந்தது. இதையெல்லாம் எல்லாருமா சேர்ந்து, சொல்லவும், வாசு தலையெடுத்து பார்க்க ஆரம்பிச்சான். இவன் பாதுகாப்புல, இப்போ நிம்மதியா ஊர் நடமாடுது.”

சங்கரய்யாவின் பாதுகாப்பு என்ற பேச்சு மட்டுமே அசலாட்சியின் காதில் விழ, இப்படி ஒரு காப்பாளன் தனக்கு கிடைத்தால், தானும் நிம்மதியான வாழ்க்கை வாழ வழி கிடைக்கும் அல்லவா என்ற சிந்தனை நொடிநேரத்தில் மனதில் தோன்றி மறைந்தது.

இதை போன்ற நினைவு இந்த இரண்டு மாத காலமாக அடிக்கடி வந்து தன்னை தாக்குவதை, அசலாட்சியால் தடுக்க முடியவில்லை.

தனது தனிமை வாழ்க்கை, யாரையாவது இனி சார்ந்தே வாழ வேண்டும் என்ற கழிவிரக்க நிலை, சுயமாய் நின்று தன் பெண்ணை வளர்க்க முடியாதோ என்ற நம்பிக்கையில்லா மனோபாவம், இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு பாதுகாப்பான கூண்டுக்குள் போய் அடைந்து கொண்டால் போதும் என்றே எண்ண வைத்திருந்தது.

நொடிநேரத்தில் மின்னல் போல் தோன்றிய எண்ணத்தை உதறித் தள்ளியவளுக்கு, தனது சுயநலமான மனநிலையை நினைத்து தன்னைத்தானே வெறுத்துக் கொண்டாள்.

தனது மனநிம்மதி மற்றும் நலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழும் பெரியவர்களை மறந்து, தன்னையும் தன் மகளையும் பற்றி மட்டுமே யோசித்த மனதை அடக்க பெரும்பாடு பட்டாள்.
அடுத்தடுத்து வந்த நாட்களிலும், ரிஷபன் வருகை தந்த பொழுதுகளில் எல்லாம், அவனது பார்வை தன்னைப் பின் தொடர்வதை அசலாட்சியால் தடுக்க முடியவில்லை.

ஒரு மாதம் கழித்து ரிஷபனின் தாயார் கோகிலம்மாவின் உடல் நிலையை விசாரித்து விட்டு வந்த பெரியவர்கள், இருவருக்குமான திருமண ஏற்பாட்டை அசலாவிடம் தெரிவித்தனர்.

பெரியவர்களின் முடிவை திட்டவட்டமாக மறுத்தாள். தனது மனம், மறுமணத்தை எதிர் கொள்ளும் பக்குவத்தில் இல்லை என்றும் பிடிவாதம் பிடித்தாள். இவள் மறுப்பு எல்லாவற்றையும் பெரியவர்கள், தங்கள் வயோதிகம் மற்றும் பொம்மியின் எதிர்காலம் என்ற விலக்க முடியாத, விளக்கங்களை கொடுத்து சம்மதம் வாங்கி விட்டனர்.

“எங்க மூணு பேருக்கு பிறகு, உனக்குன்னு ஒரு உறவு வேணும் அசலா! உனக்கு பொம்மி மாதிரி, வாசுவுக்கும் பையன் இருக்கான், ரெண்டு பிள்ளைகளும் வளர்றதுக்கு, நீங்க பெற்றோரா இருந்தா நல்லது.” – சுந்தரராஜுலு

“ஆனா என்னோட நெலமை தெரிஞ்சா, யாரும் ஒத்துக்க மாட்டாங்கப்பா…”

“அவங்க வீட்டுல சொல்லி சம்மதம் வாங்கியாச்சும்மா”

“ஒரு அழகான வீட்டுல, என்ன மாதிரி பொண்ணு எதுக்குப்பா? வேற நல்ல பொண்ணா அவருக்கு பாக்கலாமே!!”

“அவனுக்காக கல்யாணம் பண்றவானா இருந்தா, நீ சொல்றது சரியா இருக்கும். ஆனா இந்த கல்யாணமே குடும்பத்துக்காக நடக்கப் போகுது அசலாம்மா!”

மாற்றிப் பேசி மறுத்தாலும் சுந்தரராஜுலு மகளை வற்புறுத்தி ஒத்துக் கொள்ள வைத்தார். தான் எதிர்பார்த்த கூண்டு இதன் மூலம் வந்தால், அதை ஏற்று விதி போகும் வழியில் வாழ்ந்து விடுவோம் என்று அவளுமே சம்மதத்தை தெரிவித்து விட்டாள்.

அங்கே ரிஷபனுக்கும் அதே நிலைதான். நாற்பது வயதை எட்டப் போகும் தனக்கு மறுமணம் என்பது தேவையில்லாத ஒன்று என தனது மறுப்பைத் தெரிவிக்க,

“உங்க அம்மாவ கவனிக்க ஆள் வைக்கலாம் வாசு! ஆனா உன் மகனை கவனிச்சு வளர்க்க யாரை வச்சாலும், ஒரு அம்மா வளர்க்கிறது போல வராது.”- ராமைய்யா

“இத்தனை நாள் இப்படி இல்லையே நாணா?” – ரிஷபன்

“உங்க அம்மா எழுந்து நடமாடுவான்னு நம்பிக்கை இருந்தது. இப்ப அந்த நிலைமை இல்ல… வீட்டுல ஒரு மருமக பொண்ணு இருக்கணும் வாசு!”

“இப்படி சொல்லித்தான் என்னோட இருபது வயசுல கல்யாணம் பண்ணி வச்சீங்க! என்னை நம்பி வந்தவள, அக்கறையா பார்த்துகிட்ட ஞாபகம் எனக்கில்ல… திரும்பவும் என்னை நம்பி ரெண்டு பேரோட வாழ்க்கைய என்கிட்டே ஒப்படைக்க நினைக்கறீங்க நாணா! எனக்கு இது சரியாபடல”- விரக்தியான மனநிலையில் ரிஷபன் பேசிட,

“எனக்கு நம்பிக்கை இருக்கு வாசு! கல்யாணத்துக்கு உன்னை தயார் பண்ணிக்கோ… ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவா உன்னை மாத்திக்க பாரு!” கண்டிப்புடன் சொல்லி விட்டார் வேங்கட ராமைய்யா.

“வேடிக்கையா இருக்கு உங்க பேச்சு… எப்போவும் யாருக்காகவும், என்னை நான் மாத்திக்க மாட்டேன்!” – தன் நிலையை வெளிப்படையாக கூறினான் ரிஷபன்

அசலாட்சிக்கு நடந்த பிரச்சனைகளை மகனிடம் சொல்லவில்லை ராமைய்யா. அது முடிந்து போன கதை. இதனை தெரிந்து கொண்டு, மகன் செய்யப் போவது ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தில் மறைத்து விட்டார்.

நடந்து முடிந்த பிரச்சனைகள் இன்னும் அந்தப்பெண்ணின் மனதை ரணபடுத்திக் கொண்டிருக்கும் என்பதை அவர் ஏனோ மறந்து விட்டார். அதுவே மணவாழ்க்கையை ஏற்க முடியாமல் திண்டாடி, அவளை தத்தளிக்க வைக்கப் போவதை அந்த பெரியவர் அறியவில்லை.

இப்படியாக இருவரின் மறுப்பையும் மறுத்து, ஒரு வழியாக திருமண பந்தத்திற்குள் இருவரையும் இணைத்திருந்தனர் பெரியவர்கள்.

error: Content is protected !!