Poo17

azhagi

வீட்டில் நிலவிய கனமான சூழ்நிலை படிப்படியாகத் தணிந்து கொண்டிருந்தது. பல்லவி அதிகம் கீழே தன் நேரத்தைச் செலவழிக்கவில்லை. மாடியில் தங்கள் அறையிலேயே தங்கிவிட்டாள்.

மாதவனும் அன்று வெளி வேலைகள் எதையும் வைத்துக் கொள்ளாமல் ஃபோனிலேயே காரியங்களை நடத்திக் கொண்டான்.

மாலை இருள் ஏறுவதற்கு முன்பாக மனைவியை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குப் போக ஆயத்தம் பண்ணியவன் அற்புதாவையும் அழைத்தான்.

ஜானவியும் கூடத் தொற்றிக் கொள்ள கலகலப்பாக இளையவர் பட்டாளம் தயாரானது.

தோட்டத்தில் வேலைப் பார்ப்பவர்கள் கிளம்பி இருந்ததால் அந்த இடம் அமைதியாக இருந்தது. மாலையில் நீர் பாய்ச்சி இருந்ததால் நல்ல குளுகுளுவென்றிருந்தது.

சிறு சிறு பாத்திகள் கட்டப்பட்டு ஏற்கனவே பல்லவி திட்டமிட்டபடி பயிர்கள் நடப்பட்டிருந்தன. பல்லவியுமே அதை இப்போதுதான் பார்ப்பதால் இளையவர்கள் ஆர்வமாக எல்லாவற்றையும் பார்வையிட்டார்கள்.

“என்ன மாது திடீர்னு தோட்டத்துல இறங்கிட்ட?”

“எல்லாம் நம்ம அம்மணியோட திட்டந்தான்.”

“யாரு? நீயா அண்ணி?” ஆச்சரியமாகக் கேட்டார் அற்புதா. அந்த டவுன் பெண்ணிற்குள் இது போன்ற கிராமத்துக் கனவுகள் இருப்பது அவருக்குப் புதுமையாக இருந்தது.

“எங்க வீட்டுலயே எனக்கு இப்பிடியெல்லாம் பண்ணணும்னு ஆசை அண்ணி.”

“ஓ…”

“அம்மா ஒரேயடியா மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”

“ஏன் அண்ணி?”

“என்னோட வேலையையே நான் ஒழுங்காப் பண்ண மாட்டேனாம். இதுல உனக்கு நாலு தோழிப் பொண்ணுங்களான்னு திட்டினாங்க.”

“ஹா… ஹா…” சிரித்தது அற்புதா மட்டுமல்ல. ஜானவி கூட வாய் பொத்திச் சிரித்தாள்.

“அத்தை… அப்போ உங்க வீட்டுல நீங்க ரொம்ப நாட்டியா?”

“அம்மா வீட்டுல எல்லாருமே அப்படித்தான் ஜானும்மா.” சொல்லிய மனைவியின் கண்களில் சோகத்தைப் பார்த்த மாதவன் பேச்சை மாற்றினான்.

“அக்கா… பின்னால ஒரு கிணறு இருக்கு. வா போய் பார்க்கலாம்.”

“பெரிய கிணறா மாமா?”

“ஆமாடா குட்டி.”

“அப்ப நாமெல்லாம் குளிக்கலாமா?”

“ஆமா மாது… குளிக்கலாம். எவ்வளவு நாளாச்சு கிணத்துல குளிச்சு.” அற்புதாவும் மகளும் கோதாவில் இறங்கிவிட பல்லவிதான் திருதிருத்தாள்.

“அக்கா… அங்க வசதி எப்பிடின்னு கேளு.” மனைவியை வேண்டுமென்றே கோர்த்துவிட்டான் மாதவன்.

“ஏன் மாது? அண்ணி… நீ கிணத்துல குளிக்க மாட்டியா?”

“இல்லை… அது…” பல்லவி இழுத்தாள்.

“கிராமத்தான் பொண்டாட்டி… இதுல கிணறுன்னாலே பயம்.” மாதவன் மீண்டும் கேலிப் பண்ணினான்.

“அதானே! தோட்டம் வைக்க ஆசைப்படுறே. அப்ப எப்பிடிக் கிணத்தைப் பார்த்துப் பயம் வரும் அண்ணி?” அற்புதா கேட்டுக் கொண்டிருக்கும் போதே கிணறு வந்துவிட ஜானவி குதித்தாள்.

“கொஞ்சம் இருங்க, நான் அம்மாக்கு ஃபோனைப் போட்டு வாணிக்கிட்ட எனக்கும் ஜானுக்கும் மாத்துத்துணி அனுப்பச் சொல்றேன்.”

“டவல் இங்கேயே இருக்குக்கா.” சொல்லிவிட்டு மாதவன் கிணற்றின் பக்கவாட்டுப் படிகளில் இறங்க அம்மானோடு இளையவளும் இணைந்து கொண்டாள்.

“ஜானவி… பத்திரம்டா.”

“ஐயோ அத்தை… எனக்கு நீந்தவே தெரியும். நீங்க பயப்படாதீங்க.” சின்னப் பெண் சொல்ல மாதவன் மனைவியைக் கேலியாகப் பார்த்தான்.

‘உனக்கு இது தேவையா?’ என்பது போல இருந்தது அந்தப் பார்வை. கணவனுக்கு அழகு காட்டிவிட்டு மறுபக்கம் திரும்பிக் கொண்டாள் பல்லவி.

அற்புதாவும் ஃபோன் பேசிவிட்டு வந்துவிட கிணறு இரண்டு பட்டது. மாமனும் மருமகளும் பெரிய ஜலக்கிரீடையே நடத்தினார்கள். பல்லவி மீதும் நீர்த்துளிகள் தெறித்த வண்ணமே இருந்தது.

அற்புதா வாளை மீன்போல நீந்தக் கண்டு பல்லவி மிரண்டு போனாள். இத்தனைக்கும் அற்புதா புடவைக் கட்டி இருந்தாள்.

“எப்பிடி அண்ணீ?!” பல்லவி வாயைப் பிளக்காத குறைதான்.

“ஏன் அண்ணி? கிராமத்துல வளர்ந்த எனக்கு நீந்தத் தெரியாதா? நாங்கெல்லாம் ஆத்துலேயே நீந்துவோம்.”

“ஜானும்மா… உங்க அத்தை பாத்ரூம்லதான் நீந்துவாங்க.” மாதவன் மீண்டும் மனைவியைக் கேலி பண்ண அம்மாவும் மகளும் குலுங்கிச் சிரித்தார்கள்.

பல்லவி முகத்தைக் கோபமாகத் திருப்பிக் கொண்டாள். கிணற்றின் படிக்கட்டருகே வந்தவன் மனைவியை நோக்கிக் கையை நீட்டினான். கண்களில் அழைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“ம்ஹூம்…”

“வா பல்லவி.” அவன் ஆசையாக அழைக்க மறுக்க முடியாமல் கணவனின் கையைப் பற்றிக்கொண்டு இறங்கினாள் பெண். காலை விமானத்தில் ஏறியது முதல் இருந்த மனதின் கனம் முற்றாக வடிந்தது போல இருந்தது பல்லவிக்கு.

யார் என்னை எப்படிப் பேசினால் என்ன? என் மீது உயிரையே வைத்திருக்கும் இவன் இருக்கும் போது எனக்கென்ன கவலை? நீர் காலை நனைக்க ஆரம்பிக்க கணவனோடு ஒட்டிக் கொண்டாள் பல்லவி.

அற்புதா என்ன நினைத்தாரோ, மகளைச் சிறிது நேரம் நீரில் அனுமதித்தவர் இளையவர்களுக்குத் தனிமை கொடுத்து விட்டு மகளோடு வெளியேறிவிட்டார்.

மாதவன் அந்த நிமிடத்தை அனுபவிப்பவன் போல சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தான். கை மனைவியின் இடையை வளைத்திருந்தது.

“பல்லவி…”

“ம்…”

“நைட் நாம இங்கயே தங்கலாமா?”

“அண்ணியும் ஜானவியும்?”

“நான் அவங்களை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்தர்றேன்.”

“சரி…”

“என்னைப் பாரு பல்லவி.” மனைவியின் முகத்தைத் தனக்காகத் திருப்பினான் மாதவன்.

“எம்மேல கோபமா இருக்கியா?”

“இல்லையே, ஏனப்பிடிக் கேக்குறீங்க?”

“உன்னோட விருப்பமில்லாம வற்புறுத்தின மாதிரி உன்னைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேனே, அதான் கேக்குறேன்.”

“……………..”

“புரிஞ்சுக்கோம்மா… உன்னைக் கஷ்டப்படுத்திப் பார்க்கணுங்கிறது என்னோட நோக்கமில்லை. நம்ம உறவும் இன்னைக்கு நாளைக்கு முடியுற உறவுமில்லை. வாழ்நாள் முழுசுக்கும் இதுதான். எனக்கு நீதான், உனக்கு நாந்தான். அப்பிடியிருக்கும்போது எப்பிடி ஒதுங்கிப் போக முடியும் சொல்லு?”

“புரியுதுங்க.”

“அம்மா பண்ணினது தப்பு, நான் இல்லேங்கலை. அதுக்காக அவங்களை விட்டு நாம ஒதுங்க முடியுமா?”

“இல்லேங்க, நான் அப்பிடிச் சொல்லலை.”

“நாளைக்கு இதே மாதிரி உங்க வீட்டுல இருந்து யாராவது இப்பிடி எங்கிட்ட நடந்துக்கிட்டாலும் நான் இதையேதான் சொல்லுவேன். பல்லவிக்காக நான் எல்லாத்தையும் பொறுத்துப்பேன், விட்டுக் குடுப்பேன். அதைத்தான் இப்ப உங்கிட்டயும் நான் எதிர்பார்க்கிறேன்டா.”

“ம்…”

“யார்மேல தப்பு இருந்தாலும் மனஸ்தாபம் வரலாம். ஆனா விரிசல் வந்திடக்கூடாது பல்லவி.”

“சரிங்க.”

“இதையும் தாண்டி அம்மா உங்கிட்ட தப்பாவே நடந்துக்கிட்டாங்கன்னா நாம தனியாப் போயிடலாம்.”

“ஐயையோ!”

“இல்லைடா… எனக்கு எந்தளவு எங்கம்மா முக்கியமோ அதேயளவு நீயும் முக்கியம். அவங்க குட்டக் குட்ட நீ குனியணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை.”

“இல்லையில்லை… அத்தை அப்பிடிப்பட்டவங்க இல்லை.”

“யாரை எங்க வெக்கணும்னு எனக்குத் தெரியும்டா… நான் நல்ல மகன் மட்டுமில்லை, நல்ல புருஷனுந்தான்.” மாதவன் பதமாகப் பேசப் பேச பல்லவி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

கிணற்று நீரின் குளிர்ச்சியையும் தாண்டிக்கொண்டு அவன் மார்பு அவள் கண்ணீரின் வெப்பத்தை உணர்ந்தது.

“அழாத பல்லவி. இதுவும் கடந்து போகும்.” அவள் தலையை வருடிக் கொடுத்தான் கணவன்.

“காலம் கடந்து போனாலும் வடு மாறாதுங்க.”

“மாறும். காலப்போக்குல எல்லாம் மாறும். உம்மனசுல இருக்கிற வடுவும் ஆறும். அதுக்கு நான் பொறுப்பு.”

“பார்க்கலாம்.” சலிப்பாகச் சொன்ன மனைவியை இழுத்துக்கொண்டு தண்ணீரில் குதித்தான் மாதவன். பல்லவி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

குளியலை முடித்துக்கொண்டு இவர்களும் வர எல்லோரும் உடை மாற்றிக்கொண்டு வாணி கொண்டு வந்திருந்த காஃபி வடையை உண்டார்கள்.

பல்லவியும் ஜானவியும் தோட்டத்திற்குள் போய்விட பாத்திரங்களைக் கழுவ வாணியும் கிணற்றிற்குப் போய் விட்டாள். தமக்கையும் தம்பியும் கயிற்றுக் கட்டிலில் விச்ராந்தியாக அமர்ந்திருந்தார்கள்.

“மாது… என்ன நடந்துது? எங்கிட்ட சொல்ல முடியுமா இருந்தா சொல்லு.” தயங்கியபடியே கேட்ட அக்காவைப் பார்த்துச் சிரித்தான் தம்பி.

தன் மனைவியைப் பற்றி எந்தத் தவறான எண்ணமும் தன் அக்கா மனதில் எழுவதை விரும்பாத மாதவன் நடந்தது அத்தனையையும் சொல்லி முடித்தான்.

தங்கள் திருமணத்திலிருந்து தொடங்கி இன்று வரை நடந்தவற்றை ஒன்று விடாமல் அவன் சொல்லி முடிக்க அற்புதா அசந்து போனாள்.

“நம்ம அம்மாவா இப்பிடி நடந்துக்கிட்டாங்க?” ஆச்சரியமாகக் கேட்ட அக்காவைப் பார்த்துக் கசப்பாகச் சிரித்தான் தம்பி. இருவரும் குடும்பத்தில் நடந்த சிக்கலில் மூழ்கி இருக்க சுற்றுப் புறத்தை மறந்து போனார்கள்.

‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் கூடாது.’ என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள்?!
*****************

காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் இறக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது. விடிந்தால் கௌதமிற்கும் தன்விக்கும் திருமணம். தன்வி சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

சொன்னது போல பேசிய அடுத்த வாரமே கவிதா இந்தியா வந்து விட்டாள். ஷாப்பிங் செய்வதற்கு தோழியும் வந்துவிட்டதால் இரு பெண்களும் சேர்ந்து தேவைப்பட்டது, படாதது என அனைத்தையும் வாங்கிக் குவித்தார்கள்.

கௌதமிற்கு எப்போதும் பாரம்பரியத்தில் ஆர்வம் இருப்பதால் தன்வி பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் தேர்வு செய்தாள். கவிதா கூட தன் தோழியைப் பார்த்து மலைத்துப் போனாள்.

‘அவருக்கு இதுதான் பிடிக்கும் கவி.’ நாணத்தோடு சொன்னது தன் நண்பிதானா என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் கவிதா. அங்கே என்னவென்றால் ஒருத்தி ஒருவன் மேல் வைத்த காதலுக்காக அவனையே தியாகம் பண்ணிவிட்டு நாடு விட்டு நாடு வருகிறாள்! இங்கே ஒருத்தி பார்ட்டி, பப் என்று நாகரிகத்தில் உழன்றுவிட்டு இப்படிப் பேசுகிறாள்! காதல் என்று வந்துவிட்டால் எல்லோரும் இப்படித்தான் மாறிப்போவார்களா என்ன?!

ஆனால் அங்கே ஒரு காதல் ஒருவனைத் தலைகீழாக மாற்றிப் போட்டிருக்கிறதே! கௌதமை முதன்முதலாகச் சந்தித்தபோது கவிதா உண்மையிலேயே திகைத்துத்தான் போனாள். இவ்வளவு நாகரிகமாக அழகாக மென்மையாக இருக்கும் மனிதனுக்குள் கருங்கல்லை ஒத்த மனமும் உண்டா?!

இருக்கிறதே! இல்லையென்றால் எதற்கு பல்லவியை அப்படித் தண்டிக்க வேண்டும்? விரட்டி விரட்டி அடிக்க வேண்டும்? கவிதா தலையைப் பிடிக்காத குறைதான். ஆனால் பழக வெகு இனிமையான மனிதனாக இருந்தான் கௌதம். தன்வி என்று வந்துவிட்டால் உருகிக் கரைந்தான்.

‘என்னடா சாமி இது!’

“கௌதம்.” அந்தக் குரலில் கௌதம் சட்டென்று திரும்பிப் பார்த்தான். தன்வி நின்று கொண்டிருந்தாள். நேரம் இரவு பதினொன்றைக் கடந்திருந்தது.

“தனு! வா வா, என்னடா இந்த நேரத்துல?” அன்றைக்கு நண்பர்கள் அனைவரையும் அழைத்து பாட்சிலர் பார்ட்டி வழங்கி இருந்தான் கௌதம். சற்று முன்புதான் எல்லோரும் கலைந்து போயிருந்தார்கள்.

வீட்டின் முற்றத்திலேயே வண்ண விளக்குகள், உணவுப் பொருட்கள், மது வகைகள் என ரணகளப் பட்டிருந்தது. இளையவர்கள் என்பதால் கௌதமின் பெற்றோர் எதிலும் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.

நண்பர்கள் சென்றபிறகு வீட்டில் வேலைச் செய்பவர்கள் அந்த இடத்தைத் துப்புரவு பண்ணிக் கொண்டிருக்க கௌதமும் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தான்.

மனம் உணர்ச்சி வசப்பட்டிருந்ததாலோ என்னவோ அவனுக்கும் தூக்கம் வரவில்லை. நாளை மதியத்திற்கு மேல்தான் முகூர்த்தம் இருந்ததால் அந்த இனிமையான இரவுப் பொழுதை ரசித்தபடி இருந்தான். ஆனால் சத்தியமாக அப்போது அவன் தன்வியை அங்கு எதிர்பார்க்கவில்லை.

ஆலிவ் க்ரீன் வண்ணத்தில் மெல்லிய ஷிஃபான் சேலை அணிந்து அந்த வண்ண விளக்கு வெளிச்சத்தில் தேவதைப் போல நின்றிருந்தாள் பெண். கௌதமிற்கு மூச்சு ஒரு முறை தாளம் தப்பியது.

“தனு…” அவன் பேசிய பிறகும் அசையாமல் அப்படியே நின்றிருந்தது பெண். ஆனால் அவனைப் பார்த்திருந்த அந்தக் கண்களில் மட்டும் அத்தனைக் கனவு.

“தனு! ஹேய்… பேபி!” கௌதமின் குரல் இப்போது முழுதாகக் காதலைக் குத்தகைக்கு எடுத்திருந்தது. வேலைப் பெருமட்டிற்கு முடிந்திருந்ததால் கௌதமின் ஓர் கண்ணசைவில் அங்கு நின்றிருந்தவர்கள் உள்ளே போய் விட்டார்கள்.

“தனு!” அழைத்தவன்தான் அவள் பக்கத்தில் நடந்து வந்தான். அவள் அசையவில்லை. நின்ற இடத்தில் அப்படியே நின்றிருந்தாள். ஆனால் அந்தக் கண்கள் வைத்த குறி அவனையே தாக்கி நின்றது.

பெண்ணின் அருகில் வந்த கௌதம் அவள் வலது கரத்தைத் தன் இடது கரத்தோடு கோர்த்துக் கொண்டான்.

“தனு… என்ன இந்த நேரத்துல? ஒரு ஃபோன் கூடப் பண்ணலை!”

“உங்களைப் பார்க்கணும் போல இருந்துச்சு கௌதம்.”

“ஓ…” அவள் பதிலில் கௌதம் முழுதாக நிறைந்து போனான். கல்யாண நாள் நெருங்கி வந்ததால் கடந்த ஒரு சில நாட்களாக இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. அது அவளை அவ்வளவு தூரம் பாதிக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

“ஃபோன் பண்ணினாலும் நீங்க எடுக்கலை.” அவள் புகார் படித்தாள். அவள் குரலில் தாபம் வழிந்தது.

“சாரி பேபி. ஏதாவது ஒரு வேலை வந்துக்கிட்டே இருந்துச்சு, அதான்.”

“ட்ரிங் பண்ணி இருக்கீங்களா கௌதம்?”

“லைட்டா.” சொன்னவன் அவள் கண்களைப் பார்த்தான். அதில் கோபம் தெரியாமற் போகவே அவன் மூச்சு சீரானது. கௌதமா இது?!

பெண்ணின் கையைப் பற்றி இருந்தவன் அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த நாற்காலிகளை நோக்கிப் போனான். ஆனால் அவள் அமரவில்லை. கௌதமை இன்னும் கொஞ்சம் நெருங்கினாள். அந்தத் தாமரை முகம் அவனை அண்ணார்ந்து பார்த்தது.

“கௌதம்… கிஸ் மி.” பெண் ஆணையிட கௌதம் ஒரு நொடி திடுக்கிட்டான். வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவள்தான் என்றாலும் அதற்கு ஒரு வரையறை வைத்திருப்பாள் தன்வி.

பப் வரைச் செல்பவள் என்றாலும் தன் ஆண் நண்பர்களை எங்கே நிறுத்த வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். அப்படிப்பட்ட தன்வி இன்று இப்படிப் பேசவும் கௌதம் குழம்பிப் போனான்.

“தனு…” அவள் உணர்ச்சி வசப்பட்டிருப்பது அவனுக்கும் புரிந்தது. பேசி அவள் கவனத்தைக் திருப்ப நினைத்தவன்,
“உள்ள போகலாம் பேபி.” என்று அவளை அழைத்துக் கொண்டு அவன் ரூமிற்குச் சென்றான்.

வேலையாட்களுக்கு மீண்டும் கண்ணைக் காட்ட அவர்கள் மீதமிருந்த வேலையைத் தொடர்ந்தார்கள். வீட்டினுள்ளே அமைதி குடிகொண்டிருந்தது. கை வளைவில் வைத்தபடியே அவளை அழைத்துக் கொண்டு வந்தவன் தன்னெதிரில் இப்போது நிறுத்தினான்.

“தனு… என்னாச்சுடா?”

“உங்களுக்கு என்னாச்சு கௌதம்? நான் சொன்னதைச் செய்றதுக்கு எதுக்கு இவ்வளவு யோசனை?” லேசாக வெட்கம் முகத்தில் படர அவள் கேட்டபோது தலையைக் கோதிக்கொண்டு புன்னகைத்தான் கௌதம்.

“கௌதம் எப்பிடியெல்லாமோ இருந்தவந்தான்.” அவன் மேற்கொண்டு பேச முடியாமல் அவன் வாயை மூடினாள் தன்வி.

“பழைய கதை எதுவும் எனக்குத் தேவையில்லை கௌதம்.” சட்டென்று அவள் சொல்லவும் தனது வாயை மூடியிருந்த அவள் கரத்தை விலக்கினான் கௌதம்.

“ஆனா நான் மரியாதை செய்ற ஜீவன்களை எப்பவுமே கேவலப் படுத்தினதில்லை பேபி. நீ என்னோட கௌரவம் இல்லையா?”

“அப்போ நான் கேட்டது மரியாதைக் குறைவான விஷயமா கௌதம்?” அவள் குரலில் குறும்பிருந்தது. இப்போது மீண்டும் அவன் சிரித்தான்.

அந்தக் கண்களை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அதிலிருந்த அழைப்பு அவனைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. எங்கே தான் கண்ணியத்தைத் தவற விட்டுவிடுவோமோ என்று அஞ்சியவன் ஜன்னல் புறமாகத் திரும்பினான்.

ஆனால் அந்த இடைவெளியைப் பெண் அனுமதிக்கவில்லை. அவனைத் தன்புறமாகத் திருப்பியவள் எம்பி அவன் இதழ்களில் இதழ் பதித்தாள். கௌதம் ஒரு கணம் உலகம் மறந்து நின்றிருந்தான்.

“முத்தப் பிச்சைக் கேட்டு என்னைப் பித்தன் போல அலைய வைத்தாள்னு சிடி யில ஒரு பாட்டு இருக்கு கௌதம். கார்ல வெச்சிருக்கேன். பசங்கதான் பொண்ணுங்களைப் பார்த்து இப்பிடியெல்லாம் பாடுவாங்க. இது நியாயமா? இங்க என்னை நீங்க பாட வெக்குறீங்களே?” அவன் காது மடலில் மூக்கை உரசியவள் மெல்லிய குரலில் மிழற்றினாள்.

இதற்குப் பிறகும் வாளாவிருந்தால் அவன் கௌதமல்லவே. விடியும் பொழுது தனது கையால் மஞ்சள் கயிறு வாங்கிக் கொள்ள இருக்கும் தைரியம் அவளை இப்படியெல்லாம் நடந்து கொள்ள வைப்பதை அவன் புரிந்து கொண்டான். அதே தைரியம் அவனுள்ளும் சிறிது எட்டிப் பார்க்க அந்தத் தேன் சுளைகளைச் சுவை பார்க்க ஆரம்பித்திருந்தான்.

“மல்டி மில்லியனரோட பொண்ணு பிச்சைக் கேக்கக் கூடாதில்லை பேபி. அதான்…” அவன் குரலும் இப்போது அவளைச் சீண்டியது.

“போதுமா… இல்லை…” வேண்டுமென்றே இழுத்தான் கௌதம். ஆனால் அவளும் விடவில்லை.

“பிச்சைக் கேக்கிறவங்க எவ்வளவு குடுத்தாலும் போதும்னு சொல்லமாட்டாங்க கௌதம்.” என்றாள் தைரியமாக. இப்போது கௌதம் தன்னை மறந்து கடகடவென்று சிரித்தான். அவன் சிரிப்பில் அந்த இடமே அதிர்ந்தது.

“ஞாபகம் வெச்சுக்கோ தனு. இதே வார்த்தையை நாளைக்கு அநேகமா இதே நேரத்துக்கு நான் யூஸ் பண்ணுவேன்.”

“பண்ணுங்களேன்.” அவள் பதிலில் இருவர் முகத்திலும் சிரிப்பு விரிந்தது. சட்டென்று கௌதமின் முகம் சிந்தனைக்கு மாறியது. தன்வியின் முகத்தில் நன்றாக வெளிச்சம் படும்படி நிறுத்தியவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“தனு…”

“என்ன கௌதம்?”

“காலத்தைக் கொஞ்சம் வீணடிச்சிட்டோமோன்னு தோணுதுடா.”

“கொஞ்சமில்லை கௌதம், நிறைய. அதுவும் உங்களால.” அவள் குறைப்பட்டாள்.

“அதுல உனக்கு வருத்தமில்லையே தனு.”

“வருத்தமில்லையா? நிறைய வருத்தமிருக்கு கௌதம். நம்ம செட்ல இருந்த நிறையப் பேர் இப்போ கையில கொழந்தையோட இருக்காங்க தெரியுமா?”

“அதேதான் நானும் சொல்லுறேன் பேபி. நாமளும் கூடிய சீக்கிரமா ஒன்னைப் பெத்துக்கலாம். அப்போ கணக்கு சரியில்லை?” அவன் இலகுவாகப் சொல்ல தன்வி பக்கென்று சிரித்தாள்.

“கௌதம்… உங்களுக்கு எல்லாமே விளையாட்டா?”

“ஹேய்… இல்லை தனு. நான் சீரியஸா சொல்றேன்.”

“நிஜமா?”

“நிஜமாடா.” அவனுக்கு உண்மைமாகவே அந்த ஆசை நிறைய உண்டென்று தன்விக்கும் தெரியும்.

“உங்க கரெக்டருக்கு இந்த ஆசையெல்லாம் மேட்ச் ஆகலையே கௌதம்!”

“இதானே வேணாங்கிறது. நீயும் என்னைக் கேலி பண்ணுற பார்த்தியா.”

எந்த நேரத்தில் கௌதம் குழந்தை என்ற வார்த்தையைத் தன் வாயால் உச்சரித்தானோ, அந்த சந்தோஷம் இன்னொரு வீட்டில் அரங்கேறிக் கொண்டிருந்தது.
*******************

காலைச் சற்றுத் தாமதமாகவே கண் விழித்தாள் பல்லவி. உடம்பில் ஓர் சோர்வு தெரிந்தது. உடம்பு என்று சொல்வதை விட மனது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

அற்புதாவும் ஜானவியும் இருந்த வரை அவள் பொழுது கலகலப்பாகத்தான் போனது. ஆனால் அவர்களாலும் எத்தனை நாளைக்குத்தான் இங்கே தங்க முடியும்?

பவானியோடு பழைய உறவு இல்லாததால் ஒதுங்கித்தான் போனாள் பல்லவி. பேசக்கூடாது என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை. ஓரிரு வார்த்தைகள் வலிய சென்று பேசத்தான் செய்தாள். இருந்தாலும் முன்பு போல ஒட்ட முடியவில்லை.

அம்மா வீட்டிற்கும் மாதவன் ஒரு முறை அழைத்துச் சென்றான். அங்கேயும் இதே சரணத்தைத்தான் பாடினாள் பல்லவி. கணவனுக்கும் என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. பெரும்பாலான அவள் நேரங்கள் தோட்டத்தில் கழிவது போல பார்த்துக் கொள்வான்.

“என்ன மேடம்? இன்னும் எந்திரிக்க மனசு வரலையா?” சிந்தனைக் கலைய திரும்பிப் பார்த்தாள் பல்லவி.‌ எதிரே தலையைத் துவட்டியபடி மாதவன் நின்றிருந்தான். காலை உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு குளித்துவிட்டு வந்திருந்தான்.

“கொஞ்சம் டயர்டா இருக்குதுங்க.”

“ஆஹா! எம் பல்லவி தினமும் உரல்ல நெல்லுக் குத்தி அம்மியில மசாலா அரைச்சு சமையல் பண்ணுறா இல்லை. அந்த டயர்ட் இருக்கத்தானே செய்யும்?”

“கேலியா பண்ணுறீங்க?” பக்கத்தில் கிடந்த தலையணை மாதவனை நோக்கிப் பறந்தது. சிரித்தபடி அதைப் பிடித்தவன் மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“மனசைப் போட்டுக் குழப்பிக்காத பல்லவி. மனசு நல்லா இல்லைன்னா இப்பிடித்தான். உடம்பும் சோர்ந்து போகும். நல்லா சாப்பிடு. பிடிச்சதைப் பண்ணு. புத்தகம் படி. தோட்டத்துல வேற ஏதாவது புதுசா பண்ணலாமான்னு யோசி. இப்பிடி ஆக்கப்பூர்வமா எதையாவது செய்.” அவள் தலையைத் தடவிக் கொடுத்த படி பேசிக் கொண்டிருந்தான் மாதவன்.

“சரிங்க.” சொல்லிவிட்டு அவனோடு ஒட்டிக் கொண்டவள் அவன் இடுப்பை அணைத்துக் கொண்டாள்.

“நான் இன்னைக்குத் தோட்டத்துக்கு வரலைங்க. இப்பிடியே தூங்கணும் போல இருக்கு.”

“சரி பல்லவி. ஆனா ரொம்ப நேரம் தூங்கக் கூடாது என்ன?”

“ம்…”

“இரு… நான் வாணிக்கிட்ட காஃபி கொண்டுவரச் சொல்றேன்.”

“இல்லையில்லை… வேணாம்.”

“ஏன்?”

“நானே கீழ போய் குடிக்கிறேன்.” அவள் குரலில் பேதம் இருந்தது.

“பல்லவி!”

“ப்ளீஸ்… என்னால முடிஞ்ச அளவு நான் எல்லாரோடையும் சேர்ந்து போகத்தான் பார்க்கிறேன். ஆனா இங்க யாரும் வர வேணாம். இது நம்மளுக்கான இடம். இங்க நீங்களும் நானும் மட்டுந்தான்.”

உறுதியாக சொன்ன மனைவியின் முகத்தையே பார்த்திருந்தான் மாதவன். பிடிவாதத்தையும் தாண்டி அங்கு ஏமாற்றம் சலிப்பு என பல உணர்வுகள் கலந்து கிடந்தன.

“சரி… அப்போ நான் கொண்டு வர்றேன்.” சொன்னவன் கீழே இறங்கிப் போய்விட்டான்.

மீண்டும் அவன் மேலே வந்த போதும் மனைவி படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள்.

“பல்லவி… இன்னும் ப்ரஷ் பண்ணலையா? என்ன இது? எந்திரி.” மாதவன் ஒரு அதட்டல் போட அவனைக் கெஞ்சுவது போல பார்த்தாள் பெண்.

“ப்ளீஸ்… இன்னைக்கு ஒரு நாள் இப்பிடியே குடிக்கிறேனே.”

“உங்க வீட்டுல உனக்கு ரொம்ப செல்லம் குடுத்துட்டாங்க பல்லவி. இது என்ன பழக்கம்?” அதட்டுலுக்குச் சிணுங்கினாலும் கட்டிலை விட்டு பல்லவி நகரவில்லை. காஃபியை அங்கிருந்த படியே பருகியவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

மாதவன் அவளை அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. வெளி வேலை இருந்ததால் கிளம்பிப் போய்விட்டான். வேலைகளைக் கவனித்த போதும் மனதென்னவோ மனைவியிடமே இருந்தது. எப்போதும் இப்படிச் சோர்ந்து கிடப்பவள் அல்லவே!

பல்லவியின் தொலைபேசிக்கு அழைத்துப் பார்த்தான். பதிலிருக்கவில்லை. வீட்டிற்கு அழைக்க வாணிதான் லைனுக்கு வந்தாள். பல்லவியைப் பற்றி அவன் விசாரிக்க ‘அவங்க இன்னும் கீழ இறங்கி வரலை.’ என்ற பதில்தான் கிடைத்தது.

மாதவனுக்கு அதற்கு மேல் வேலை ஓடவில்லை. வாணியை மாடிக்குச் சென்று ஒரு முறைப் பார்க்கச் சொல்லவே பல்லவி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகப் பதில் கிடைத்தது.

‘என்ன ஆனது இவளுக்கு?!’

வேலைகளை அப்படியே விட்டுவிட்டு உடனடியாக வீட்டுக்கு வந்தான் மாதவன். நேரம் காலை பத்தையும் தாண்டி இருந்தது. மாடிக்கு அவன் வந்தபோது ஓய்ந்து போய் படுத்திருந்தாள் மனைவி.

“பல்லவி… பல்லவி…” மெதுவாக அவளை எழுப்பினான். அசைவு இல்லாதிருக்க குளிர்ந்த நீரில் டவலை நனைத்தவன் அவள் முகத்தை மெதுவாகத் துடைத்து விட்டான். அப்போதுதான் மெதுவாக அசைந்தாள்.

“பல்லவி… எந்திரி. டாக்டர் கிட்டப் போகலாம்.”

“என்னால முடியலைங்க.”

“என்ன பண்ணுது உனக்கு?”

“தெரியலை. இப்பிடியே தூங்கினா நல்லா இருக்கும் போல இருக்கு.”

“இல்லையில்லை… இது சரிவராது. டாக்டர் கிட்டப் போகலாம்.” அவளை வலுக்கட்டாயமாக எழுப்பியவன் அவனே பாத்ரூமிற்குள் அழைத்துச் சென்றான். பெயருக்கு அவள் பல் துலக்கி முடிக்க உடைமாற்ற வைத்தவன் கைப்பிடியாக காரிற்கு அழைத்துச் சென்றான்.

காலையிலேயே மகன் காஃபியைக் கீழே வந்து எடுத்துச் சென்றதால் இது அவர்கள் அந்தரங்கம் என்று ஒதுங்கிவிட்டார் பவானி.

பெரிய பேச்சுவார்த்தை இல்லாவிட்டாலும் பல்லவி தன்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவதே அவருக்குப் பெரிய அமைதியாக இருந்தது.

மனதில் இருந்த குற்ற உணர்ச்சி அவரை வெகுவாக அழுத்தியதால் அவராக வாய்திறந்து இதுவரை எதுவும் பேசியதில்லை. முடிந்தவரை இளையவர்களுக்குத் தொல்லைத் தராமல் ஒதுங்கிக் கொண்டார்.

இப்போது மகன் பல்லவியை அழைத்துச் சென்ற முறையில் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவசரமாக காரை நோக்கி ஓடி வந்தார்.

“என்ன ஆச்சு?” அவர் குரல் நடுங்கியது. மாதவன் எப்போதும் அம்மாவோடு பேசியவன் அல்லவே! ஆனால் இப்போது பதில் சொன்னான்.

“ரொம்ப டயர்டா இருக்காம். சோர்ந்து போயிட்டா.” எங்கோ பார்த்துக்கொண்டு அவன் பதில் சொல்ல பவானியின் நெற்றி சுருங்கியது.

“நாள் தள்ளிப் போகுதா பல்லவி?” நடந்த பிரச்சனைக்குப் பிறகு இன்றுதான் இத்தனைக் கோர்வையாக உற்சாகமாக மருமகளிடம் பேசுகிறார் பவானி.

“அத்தை!” பல்லவி குரலிலும் இப்போது லேசான உற்சாகம். பெண்களின் பேச்சில் திடுக்கிட்ட மாதவன் மனது அவசர அவசரமாகக் கணக்கெடுப்பில் இறங்கியது.

வாய்ப்பிருக்கிறதோ! முகம் பிரகாசிக்க மனைவியைப் பார்த்தான் கணவன். அவள் முகமும் மலர்ந்து போனது. இவர்கள் இருவரையும் பார்த்த பவானிக்கு மழைப் பொழிந்தாற் போல இருந்தது.

“கிளம்பின கையோட டாக்டரைப் பார்த்துட்டு வாங்க. அதுதான் நல்லது.” பெரியவர் சொல்ல இளையவர்கள் காரில் ஏறினார்கள். அந்த ஸ்கோடா கூட அப்போது ஆனந்தத்தில் திளைத்திருந்தது.

நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே…