Poovanam 10

Poovanam 10

பூவனம்—10

எளிமையான முறையில் மணமகன் குலதெய்வக் கோவிலில் திருமணம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. வெண்பட்டில் மாப்பிள்ளை மிடுக்குடன், அம்சமாய்
கிரிதரன் அமர்ந்திருந்திருக்க, அவனை ஏறிட்டு பார்க்க முடியா வண்ணம்
அரக்கு பாட்டில் மணமகளாய் நாணத்துடன், முகம் சிவக்க தலை
குனிந்திருந்தவளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி, காலில் மெட்டி அணிவித்து
தன்னுடையவளாய் ஆக்கிக் கொண்டான்…

திருமணம் சிறப்பாக நடந்தாலும் தன் பிள்ளை, தங்கள் கை மீறி போய் விட்டது
போன்ற உணர்வு மணமகனின் பெற்றோர்க்கு.

அந்த எண்ணத்தை மறைத்து, வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று, எந்த
குறையும் இல்லாமல் சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர்…

அதிகாலை திருமணம் முடிந்த கையோடு, பெண்ணை புகுந்த வீட்டில் அனுப்பி
விட்டு ரம்யாவின் பெற்றோர் விடைபெற்றனர்.

திருமணம் முடிந்து வீட்டிற்க்கு வந்தவர்களை ஆரத்தி எடுத்த கையுடன்
உறவினரின் பேச்சு ஆரம்பமாகியது. சற்றே மெலிந்த உடல்வாகு கொண்டவள், புதிய
உறவுகள், புது இடம், புது விதமான பேச்சுக்கள் எல்லாம் சேர தனக்குள்ளே
சுருங்கிக் கொண்டாள்.

“ஏன் பெரியதம்பி, நீ கட்டுன பொண்ணு வீட்டுல ரொம்ப கை சுருக்கமோ?
பொண்ணுக்கு நல்ல விதமா ஆக்கிபோட்டு உடம்ப தேத்து விடாம இப்படி பஞ்சத்துல
அடிபட்டவ மாதிரில்ல இருக்கா கல்யாணப் பொண்ணு” என உறவினர்கள் விசாரணையை
ஆரம்பிக்க

“அப்படி எல்லாம் இல்ல அத்த! அவ உடம்பு அப்படி, எல்லோரும் ஒண்ணு போலவே
இருக்குறோமா என்ன?” மாப்பிள்ளை பதிலுரைக்க

“இதப்பாருடா… பொஞ்சாதிய விட்டுக்குடுக்காம இருக்கான், பேசவாவது
செய்யலாமே, உன்ர பொஞ்சாதி… நாங்க பத்து கேள்வி கேட்ட மூணுக்கு தான்
பதில் வருது, சொல்லி வை தம்பி நம்ம உறவுகாரவுகள பத்தி…” என பட்டியல்
இடுவோர் நீள…

“சரி அத்த சொல்லி வைக்குறேன், புது இடம், கொஞ்சம் சங்கோஜம் இருக்கத்தானே
செய்யும்…“ மாப்பிள்ளையும் நெளிய

“எப்ப தம்பி சொல்ல போற? நீ சொல்லி, அவ இந்த வீட்டு பழக்கத்தை எல்லாம்
கத்துக்குறது எப்போ?” இது அடுத்தவரின் வாதம்

“இப்ப ஒரு வாரந்தான் இங்கே இருப்பீங்க. அப்பறம் வேலைன்னு சாக்கு
சொல்லிட்டு பட்டணத்துக்கு ஓடவே உங்களுக்கு சரியா வரும்” என்று
கணித்தவர்கள்

“வேற நான் என்னதான் பண்ணணும்னு எதிர்பாக்குறீங்க அத்த?” கிரி ஆதங்கத்துடன் கேட்க

“அவள ஒரு மாசம் இங்கே விட்டுட்டு போ பெரியதம்பி, எல்லா சொந்தக்காரங்க
வீட்டுக்கும் போய் பழகிகட்டும்”, குடும்பத்து மூத்த மருமக நம்ம சனங்களை
எல்லாம் தெரிஞ்சு, நம்ம பழக்க வழக்கத்தை எல்லாம் கத்துக்கணும்”
பட்டியலிட்டார் மீனாட்சி அம்மாள்.

“இப்போ தான் வேலைக்கு சேர்ந்து இருக்கோம், லீவெல்லாம் எடுக்க
முடியாதும்மா… இந்த பதினைஞ்சு நாள் லீவுக்கே கொஞ்சம் கஷ்டமாப் போச்சு,
நிச்சயமா கொஞ்ச நாள் கழிச்சு கூட்டிட்டு வர்றேன், அப்போ எல்லோரோட
வீட்டுக்கும் போயிட்டு வரட்டும்” சிரித்துக்கொண்டே சொன்னாலும் ஒரு வித
சங்கடம் கிரிதரனுக்கு.

மீனாட்சி அம்மாவிற்க்கோ பொல்லாத கோபம் மனதில். அனைவரின் முன்பும் மகன்
தன் பேச்சை தட்டி விட்டானே என்று அதை பேச்சில் காட்டத் தொடங்கினார்…

“இதுக்கு தான் பட்டணத்து பொண்ணு வேணாம்னு சொன்னது. நம்ம உறவுக்குள்ள
கட்டியிருந்தா இந்நேரம் இவ்ளோ பேச்சு இருக்குமா?” அங்கலாய்த்தவர்

“நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, அத எல்லாம் இந்த காலத்து
புள்ளங்களுக்கு எங்கே தெரியுது? வந்த மருமக தான் இதயெல்லாம் தெரிஞ்சு
குடும்பத்த நடத்தணும்.

இப்போவே பொண்டாட்டிய விட்டுட்டு போக மாட்டேன்னு சொல்றவன் எங்கே? எப்போ?
தனியா இங்கே விடப் போறான்?” என நீட்டிமுழக்கி விட்டார் கிரியின் தாயார்.

இத்தனை பேச்சுகளிலும் ரம்யா சிறிதும் கலந்து கொள்ளவில்லை. அவள் மனதில்
பயம் வந்து உட்கார்ந்து கொண்டது.

துணையாய் வந்த பெற்றவர்களும் இல்லாமல், ஏதோ ஒரு காட்டுக்குள் வழி தெரியாத
அபலை பெண்ணாய் தான் அமர்ந்திருந்தாள். பட்டணத்தில் பிறந்து
வளர்ந்தவளுக்கு சபை நாகரிகம் வாய்பூட்டை போட்டிருந்தது.

பொதுவாகவே புதிய மனிதர்களை பார்த்தால் ஒதுங்கிக் கொள்பவள்.. தன்னையே
எல்லோரும் உற்று உற்று பார்க்க, ஏதோ ஓர் தனிமை உணர்வு வந்து ஆட்கொண்டது.

அவள் வயதை ஒத்த செந்தாமரையிடமும் பேச்சு சற்று குறைவே, கணவனின்
தம்பியிடம் மிக சுத்தமாய் ஒதுங்கிக் கொண்டாள்.

மனம் மயக்கும் திருமண இரவில் மெல்லிய அலங்காரத்தோடு அறைக்கு வந்தவளின்
குழப்ப முகத்தை கண்டு கொண்டவனுக்கு சகஜமாய் மனைவியை தன் வீட்டில் எப்படி
பொருத்துவது என்ற கவலை சூழ்ந்து கொண்டது.

தோள்களில் அணைவாய் பக்கத்தில் அவளை அமர வைத்துகொண்டு மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்.

“இங்கே எல்லாம் பிடிச்சிருக்கா ரம்யா?”

“ஓ பிடிச்சிருக்கு”

“எங்க அப்பா அம்மா?”

“பிடிச்சிருக்கு”

“இது நம்ம ரூம், உனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம், என்ன வேணும்னு
சொல்லு செஞ்சிருவோம்,”

“ஏன் சென்னைக்கு போகப் போறதில்லையா கிரி?” என கண்களை விரித்து கேட்டவளிடம்

“ஏய்! சென்னையில தான் இருக்க போறோம், நாம இங்கே அடிக்கடி வந்துட்டு
இருக்கணும் ரம்யா.. மொத்தமா அங்கேயே இருக்க முடியாது? சரியா?” என்றவனின்
பேச்சிற்க்கு நன்றாகவே ஆட்டியவளின் தலையை தன் இரு கைகொண்டு நிறுத்தி

“இப்படி எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு இருக்காதே!
உனக்கு என்ன தோணுதோ சொல்லு” சற்றே சீண்டி விட அது நன்றாய் வேலை செய்தது.

“யாரு நானாடா மாடு? நானா தலையாட்டிட்டு இருக்கேன்? நீதான்டா மாடு! யாரு
என்ன சொன்னாலும் “சரி அத்த”, “சரி மாமா”னு ஆட்டிகிட்டே இருக்கே, ஒரு உரலை
தலையில கட்டி வச்சிருந்தா இந்நேரம் கல்யாணத்துக்கு மாவாட்டி இருக்கலாம்”

“அடிப்பாவி! பாவமா மூஞ்சிய வச்சுகிட்டு என்ன பேச்சு பேசுற? இந்த பேச்ச
கீழே சொந்தக்காரங்க கிட்ட பேசினா எல்லோரும் சந்தோசப்படுவாங்கடி, எனக்கும்
மாவாட்டற வேலை குறைஞ்சுருக்குமே?”

“அப்படி சட்டுன்னு பேசி பழக்கம் இல்ல கிரி… எனக்கு கூச்சமா இருக்கு,
எங்கேயும் போய் இருந்ததும் இல்ல”, தனக்கு இந்த வீடு பொருந்தவில்லை என்பதை
கோடிட்டு காட்டி விட்டாள் கணவனிடம்.

“இனிமே பழக்கப்படுத்திக்கோ ரமி… கிராமத்து ஜனங்க, இங்கே இருக்குற பழக்க
வழக்கம் எல்லாமே உனக்கு புதுசு தான். அவங்க வெளிப்படையா பேசுறாங்க, மனசுல
எதையும் வச்சுக்க தெரியாதவங்க, நீ ரெண்டு நாள் பேசி, பழகினாலே உனக்கு
தெரிஞ்சுரும்” நெற்றியில் முத்தமிட்டவாறே சொல்ல நெளிய ஆரம்பித்து
விட்டாள்.

அவள் நெளிவு, மனதில் உள்ள பயம் அனைத்தும் சேர்ந்து முகத்தில் பல வித
பாவங்களாய் சுருங்கியும் விரிந்தும் மாற

“இப்படியெல்லாம் மூஞ்சிய வச்சுக்காதேடி, பாக்க புடிக்கலே எனக்கு”

“நீ இப்படி ஓட்டிகிட்டு இருந்தா இன்னும் மோசமா கூட என் மூஞ்சி போகும்
கிரி, கொஞ்சம் இடம் விடேன்… ஏன் இப்படி பசையா ஓட்டிகிட்டு இருக்கே?”

“அது முடியாது, இப்போதைக்கு என்னால முடிஞ்சா வேலை இது மட்டும்தான், நம்ம
வீட்டுல தான் நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணிருக்கேன். அது
வரைக்கும் இப்படி பக்கத்துல உக்காந்து சமாதானம் பண்ணிக்கிறேன்”

“தள்ளியிருக்கேன்னு கொஞ்சம் தள்ளி உக்காந்தே சொல்லலாம் கிரி, எனக்கு
இப்படி.. பிடிக்கல…” மீண்டும் முகத்தை சுருக்க

“போடி பச்சமிளகா! கொஞ்சம் கூட பீலிங்க்ஸ் இல்லாத ஜடம் நீ”

“நீதான்டா அது, பக்கத்துல ஓட்டிகிட்டு, தள்ளி நிக்கிறேன்னு ஜடம் மாதிரி
சொல்றே, அரலூசு மாதிரி பேசுறே…” கடிந்து கூற

கோபமாய் தள்ளி அமர்ந்து கொண்டான். சட்டென்று அவனின் விலகலில் மனம் பதற
“கோபப்படாதே! கிரி சாரி… நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது, நீ
என்னோட நல்லதுக்கு தான் பாக்குறேனு தெரியுதுடா, கொஞ்சம் கூச்சமா பீல்
பண்ணினேனா, அதான் அப்படி பேசிட்டேன்” என்று சமாதனப்படுத்த இன்னும் ஒட்டி
அமர, கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமால் அவளைத் தன் தோளில் போட்டுகொண்டு
உறங்க ஆரம்பித்தான்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் அங்கு தங்கிருந்த காலத்தில் ரம்யாவிற்கு
முள் மேல் நடக்கும் நிலை தான். குடும்ப பாரம்பரியத்தை சொல்லிச்சொல்லி
அதன் படி நடக்கச் சொன்னவர்கள் அவள் நின்றாலும், நடந்தாலும்
குற்றப்பத்திரிகை வாசித்து மறைமுக எதிர்ப்பைக் காட்டத்தொடங்கினர்…

அந்த குற்றச்சாட்டின் தீர்ப்பு “நம்ம இனத்துல பொண்ணு கட்டியிருந்தா இவ்ளோ
கஷ்டம் நமக்கு இல்ல, இப்படி ஒண்ணொண்ணா சொல்லிக்குடுத்து வேண்டியிருக்கு”
என்பதே….

வீடெங்கும் உறவினர் சூழ்ந்திருக்க சதா மணப்பெண்ணை சுற்றி கண்கொத்தி
பாம்பாக பார்த்து வைத்து குத்திக் காட்டி பேசியதை கணவனிடம்
சொல்வதற்க்கும் வாய் வரவில்லை மணப்பெண்ணிற்க்கு.

கணவனை அழைக்கும் முறையையும் ஆட்சேபித்தவர்கள் “இது என்ன பேச்சு
கொஞ்சம்கூட மாரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிட்டுகிட்டு?

அழகா “மாமா” “மச்சான்” அதுவும் இல்லனா “அத்தான்”னு கூப்பிட்டு பழகு. இது
கிராமம், எல்லா விசயத்துலயும் ரொம்பவே அனுசரிக்கணும், உன் இஷ்டத்துக்கு
இங்கே இருக்கலாங்கிறத மறந்துரு” போன்ற பல சட்டதிட்டங்களை மருமகளுக்கு
சொல்லி, அவளுக்கு தான் என்றுமே எதிரி என்னும் மேல்பூச்சை பூசிக்கொண்டார்
மீனாட்சி அம்மாள்….

கணவனின் அருகாமையில் மட்டுமே நிம்மதியாக முச்சு விட முடிந்தது…

எங்கே தான் சொல்வது தவறான புரிதலுக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்ச
உணர்வு, உறவினர்களின் பேச்சை கணவனிடம் பகிர்ந்துகொள்ள விடாமல் தடுத்தது.

சென்னையில் வரவேற்பு முடிந்து தனிக்குடித்தனம் ஆரம்பித்து வைக்க வந்த
இடத்திலும் இந்த குத்தல் பேச்சு தொடர, தகுதிக்கு மீறிய இடத்தில் பெண்ணை
கொடுத்தது தவறோ என்ற எண்ணம் பெண்ணை பெற்றவர்களின் மனதை பதம் பார்த்தது

கிரிதரனின் சென்னை வீடு கொஞ்சம் பெரிய வீடாகத் தான் இருந்தது..
ஊரிலிருந்து அடிக்கடி பெற்றோரின் போக்குவரத்தும், சிறிது நாட்கள் கழித்து
தன் தம்பி முரளிதரனின் ஜாகையையும், இங்கே மாற்றிக்கொள்வதாக சொன்னதால்
பெரிய வீடாக பார்த்து முடித்திருந்தான்…

முன்பக்கம் பெரிய ஹாலும் அதனை ஒட்டிய மூன்று அறைகளும் அதற்கடுத்து இருந்த
சமையல் அறையும் கொண்ட தனிக்குடித்தனத்திற்கு தேவையான அனைத்து
பொருள்களையும், தன் தகுதிக்கு மீறியே சீர் செய்திருந்தார் ரம்யாவின்
தந்தை சண்முகம். “எதற்கு இவ்ளோ செய்றீங்க மாமா வேண்டாம்” என்று தடுத்த
மாப்பிள்ளையிடம்

“என்னை தடுக்காதீங்க மாப்ளே! இது என்னோட கடமை மட்டுமில்ல, என் பொண்ணு மேல
வச்சுருக்கிற பாசத்தை காட்ட எனக்கு ஒரு சந்தர்ப்பம்.

அவ எங்கவீட்டு இளவரசி, அவ கஷட்டப்பட்டா அத பாக்குற சக்தி எங்களுக்கு
இல்ல. இது ஒரு சுயநலம்னு கூட நீங்க எடுத்துக்கலாம். நாங்களும் சந்தோசமா
இருக்க தான் இத செய்றேன்” என்று நெகிழ வைத்து விட்டார்…

கிரிதரனுக்கு பெருமை தாங்கவில்லை… அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவள்,
அன்று ஏன் தன் காதலை ஏற்க மறுத்தாள் என்பது தெளிவாக விளங்கியது… திருமண
ஆராவாரங்கள் அடங்கி அமைதியான, மகிழ்ச்சியான நல்லதொரு நாளில், தங்களின்
இல்லறத்திற்க்கான அடுத்த அடியை எடுத்து வைத்தான்….

error: Content is protected !!