POOVANAM-18

POOVANAM-18

பூவனம்-18

ஊரில் அனைவரின் முன்னிலையில் நடக்கும் பஞ்சாயத்து, கிரிதரனின் தந்தை சுப்பையா ஊரின் பெரிய மனிதர் என்னும் முறையில் அன்று அவர்கள் வீட்டிலேயே பஞ்சாயத்து நடத்தி, அவர்களின் குடும்ப பிரச்சனையை தீர்க்க கூடி இருந்தனர்.

ஊர் மக்களை சேர்க்காமல் மத்தியஸ்தம் சொல்லும் பெரிய மனிதர்கள் ஏழு பேர் ஒருபுறம் அமர்ந்திருக்க, அவர்களை ஒட்டியே கிரிதரனின் குடும்பமும் அமர்திருந்தனர்.

எதிர் திசையில் சிவா அமைதியாய், தன் எதிரில் உள்ளவர்களை பார்வையாலேயே சுட்டு பொசுக்கி கொண்டிருந்தான்.

சிவாவின் பக்கம்  யாரும் இல்லையென்ற எண்ணத்தில், எளிதில் அவனை திசை திருப்பி அனுப்பி விடலாம் என்ற நினைப்புடன் தான், சுப்பையா உட்பட மற்ற பெரிய மனிதர்களும் பேசத் தொடங்கியது.

“சொல்லுப்பா தம்பி! பட்டணத்துல இருந்து வந்து, எங்க ஊர் பெரிய மனுஷன் மேல பிராது சொல்யிருக்கே… என்ன விஷயம் சொல்லு? சொல்றதுக்கு முன்னாடி நல்லா யோசனை பண்ணிக்கோ, நீ ஒரு பெரிய மனுஷன் குடும்பத்து மேல சொல்ல போற பிராது தப்பா போச்சுனா, அப்பறம் நீ தான் ஊர்க்காரங்க முன்னாடி நின்னு மன்னிப்பு கேக்கணும். ஊர்க்காரங்க சும்மா விட மாட்டோம், அத மனசுல வச்சுக்கோ தம்பி, இப்படி தேடி வந்து அவமானப் படணுமா?” என சிவாவை சலனப்படுத்தும் வகையில் பேச்சை ஆரம்பிக்க,

அதை கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் அவர்கள் பேச்சை தவிடுபொடியாக்கி, அவன் பேசிய பேச்சு, ஒருவரையும் அசைய விடவில்லை, தன் பக்க நியாயத்தை அவன் உரைத்த விதம் அனைவரின் மனசாட்சியையும் பதம் பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.

“பெரிய மனுசங்களுக்கு என்னோட வணக்கத்தையும், நன்றியையும் இந்த பஞ்சாயத்துக்கு தெரிவிச்சுக்குறேன். இந்த சின்ன பையன் பேச்சையும் மதிச்சு பஞ்சாயத்த கூடுனதுக்கு, எனக்கு இங்கே வந்து பஞ்சாயத்து கூட்டுனதுல விருப்பமில்ல தான்”

“விருப்பமில்லாதவங்க எதுக்கு தம்பி இங்கே வரனும்? பிராது சொல்லணும்?” ஊரின் பெரிய தலை இடையில் பேசிட,

“என்ன பண்ணறது பெரியவரே! எங்க வீட்டு நிம்மதிய இங்கே தான் தொலைச்சோம், அதான் பிடிக்கலனா கூட இங்க வந்து தேட வந்துருக்கேன்” பதிலடி கொடுத்தான் சிவா.

“உன் தங்கச்சி வாழ்க்கைக்கு அவ தானே வந்து பேசணும்? நீ எதுக்கு வந்த தம்பி?”

“அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இதே பஞ்சாயத்து, அவ சொல்றதையும் கேட்டு முடிவெடுத்துருந்தா, நானும் இப்ப அவள கூட்டிட்டு வந்துருப்பேன், இப்போ நான் அந்த பிரச்சினைய இழுக்க விரும்பல…

“இதோ இங்கே உக்காந்துருக்குற பெரிய மனுஷன் குடும்பத்துல தான் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி, என் தங்கச்சிய கட்டி குடுத்தது, அது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்” என்று சொல்ல ஆரம்பித்து, திருமணம் நடந்ததிலிருந்து இன்றைய தன் தங்கையின் நிலைமை  வரை பேசி முடித்தான்

“சரிப்பா இப்போ அதுக்கு என்ன? அதான் எல்லாம் முடிஞ்சுருச்சே…” எதிர் கேள்வி கேட்க,

“எங்க பொண்ணு நிம்மதியா நடமாடுறது பொறுக்கலய்யா அவங்க வீட்டு பையனுக்கு…

இப்போ குடும்பம் வேணும், பிள்ளை வேணும்னு வந்து நிக்குறாரு இவரோட பையன், இதுக்கு என்ன பதில் சொல்லறீங்க?” என அனைவரையும் பார்த்து காட்டமாய் சிவா கேட்க

“இது என்ன புது கதை, அது எப்படி முடியும்?” என்று பஞ்சாயத்து தலைகட்டு ஒன்று சத்தமிட

“இப்படி தான்யா நாங்களும் கேட்டோம், அதுக்கு சட்டத்துல இடம் இருக்கு, வரைமுறை இருக்கு, புது சட்டம் வந்திருக்குன்னு சொல்லி எங்கள திசை திருப்புறாரு? உங்க பெரியதம்பி…

அப்படி அந்த சட்டத்துல இடம் இருக்குன்னே ஒத்துக்குவோம், ஆனா நீங்க சொன்ன தீர்ப்புக்கு என்ன மதிப்பு இருக்கு? அப்பறம் இந்த ஊர் எதுக்கு? இந்த பஞ்சாயத்து எதுக்கு?” என்று மெதுவாய் பஞ்சாயத்தாரை சீண்டு முடித்தான் சிவா,

நீங்க இத்தன பேரும் அலசி ஆராய்ஞ்சு சொன்ன தீர்ப்பு என்ன பொய்யா போகவா? அதுக்கா பெரிய மனுசங்கனு சொல்லி உங்க வேலை வெட்டிய விட்டுட்டு இங்கே உக்காந்திருக்கீங்க?” என முடிச்சை இறுக்கவும் செய்தான்.

அவன் இத்தனை நேரம் பேசிய பேச்சிற்கே என்ன பதில் சொல்வது என்ற எண்ணத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் இருக்க

“என்ன சுப்பையா இந்த தம்பி சொல்றதெல்லாம் உண்மையா?” என்று அவரிடம் பஞ்சாயத்தார் கேட்க

“கொஞ்சம் பொறுங்கய்யா! நான் இன்னும் பேசி முடிக்கல, முழுசா சொல்லி முடிச்சதுக்கப்பறம் நீங்க அவர கேள்வி கேளுங்க” என்று மேலும் தன் தரப்பு வாதத்தை சொல்ல ஆரம்பித்தான்

“இவங்க வேணும்னா வச்சு வாழவும், வேணாம்னா தள்ளி வைக்கவும் என் தங்கச்சி என்ன பொம்மலாட்டத்துல பிடிச்சு இழுக்குற நூலா சொல்லுங்க?

இப்போ வந்து இவ்ளோ கெஞ்சுறவர் அன்னைக்கே தடுக்க பார்த்துருக்கலாம்.

அப்போ அத செய்யாமா, அவங்க அம்மா பேச்ச மட்டுமே கேட்டுட்டு, இப்போ வந்து நிக்கிறதுல எந்த அர்த்தமும் இல்ல.

இந்த பிரச்சனைக்கு, இந்த பஞ்சாயத்து என்ன தீர்ப்பு சொல்ல போகுது?”

“இன்னைக்கு கவுன்சிலிங் போனா நிச்சமயமா இவருக்கு சாதகமா தான், ஆறு மாசம் சேர்ந்து இருங்கனு கோர்ட்டுல சொல்வாங்க… ஆனா அதுக்கு மறுநாளே இந்த பெரிய வீட்டம்மா திரும்பவும் பஞ்சாயத்த கூட்டி பிரச்சனை பண்ணமாட்டங்கன்னு எப்படி நிச்சயமா நம்புறது? இவங்களா ஒரு முடிவு எடுத்திட்டு, எங்க வீட்டு பொண்ண கோர்ட் படி ஏற வைப்பாங்காளா?

இவரோட நினைப்பு எல்லாம் ரொம்ப நல்லா தான் இருக்கு, பொண்டாட்டி, பிள்ள வேணும், குடும்பமா இருக்கணும்னு சொல்றது எல்லாமே கேக்க சந்தோசம் தான் எங்களுக்கும்.

ஆனா அதுக்கு இவர் என்ன பண்ணிருக்கணும் சொல்லுங்க? அவங்க வீட்டுல உள்ளவங்க சம்மதத்தை வாங்கி இருக்கணுமா, இல்லையா? அத செஞ்சாரா? இல்ல வாய் வார்த்தையா இனிமே எனக்கு என் குடும்பம் மட்டும்தான், என்னோட அம்மா, அப்பா, தம்பி எல்லோரையும் மறந்துட்டு  உங்க கூட இருக்கேன்னு சொன்னாரா?

இவருக்கு வேண்டியது இவரோட சந்தோசம் மட்டுமே, அதனால தான் பின்விளைவுகள் எப்படி, என்ன வரும்னு கொஞ்சகூட யோசிக்காம இப்படி ஒரு காரியத்தை ஆரம்பிச்சு வச்சுருக்கார்?

என்னோட இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு, அந்த கவுன்சிலிங் கருமத்தை பாக்க சொல்லுங்க…

அதுக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணை பார்த்து பேசி இம்சை பண்றத அடியோடு நிறுத்த சொல்லுங்க” என்று அடுக்கடுக்காய் அவர்கள் மீதுள்ள குற்றங்களை ஆணித்தரமாக சொல்லி, தன் தரப்பு வாதத்தை நிறைவு செய்தான்.

ஊர் பெரிய மனிதர், பெரிய குடும்பம், இன்றும் விவசாயத்தை உயிர் மூச்சாய் கொண்டு, அந்த ஊருக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் சுப்பையாவை குற்றம் சொல்ல அவ்வளவு எளிதில் யாருக்கும் தைரியம் வரவில்லை.

இவ்வளவு நேரம் சிவாவின் விளக்கத்தை கேட்ட கிரிதரனுக்கும் பிரச்சனையை, திசை மாற்றிய விதத்தை பார்த்து மனதிற்குள் சிவாவை மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.

இப்பொழுது அடங்காத கோபம் சுப்பையாவிற்கு, தன் மகன் செய்த செயலை நினைத்து, தன் மனைவியின் சொல்லுக்கு, நியாய தர்மம் பார்க்காமல் தலையாட்டியதன் பலனை இன்று அனுபவித்து கொண்டிருந்தார். தன் மனைவியை பார்த்து மெதுவாய் கடினகுரலில்

“போதுமாடி!! நீ ஆடின ஆட்டத்துக்கு, இப்போ இந்த சின்ன பையன்கிட்ட தலை குனிஞ்சு நிக்கிறோம், இதுக்கு பதில் என்ன சொல்ல யோசிச்சு வச்சியா?

அன்னைக்கே இந்த பொண்ணு வேண்டாம்னு நாம இழுத்து பிடிக்காம விட்டது இப்போ வினையா வந்து நிக்குது. கல்யாணம் முடிஞ்சதும் நீயாச்சு, உன் பொண்டாட்டியாச்சுனு நீயாவது ஒதுங்கி இருந்துருக்கனும், அதுவும் செய்யாம நீங்க ரெண்டு பேரும் செஞ்சு வச்சுருக்குற வேலைக்கு, இப்போ நான் பதில் சொல்ல முடியாம நிக்கிறேன்டி” என்று தன் மனக்குமுறல்களை கோபமாய் தன் மனைவியிடம் கொட்டிக் கொண்டிருந்தார்.

இவர்களின் பேச்சை கேட்ட கிரிதரன் “இது நானா தேடிகிட்ட பிரச்சனை, நானே முடிச்சு வைக்குறேன். கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா…”

“என்னத்த பேசி முடிக்க போற? எங்களை இன்னும் தலை குனிய வைக்க போறியா? கொஞ்சமாச்சும் மனசுல உங்க அப்பாவோட மதிப்பு மரியாதைய நினைச்சு பார்த்திருந்தா, இந்த மாதிரி ஒரு காரியத்தை செஞ்சுருப்பியா பெரிய தம்பி?” என மீனாட்சி அம்மாளும் சீற

“இப்படி நீங்க மட்டும் பேசிப்பேசியே, என்னோட வாழ்க்கைய குட்டிசுவராக்கி வச்சுருக்கீங்க… இத எப்போ தான் மாத்திக்க போறீங்கனு தெரியல? என்னை கொஞ்சம் பேச விடுங்க” என தன் பெற்றோகளிடம் பல்லை கடித்தவன். அங்குள்ளவர்களை பார்த்துக் கொண்டே,

“சிவா உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்… இங்கே பஞ்சாயத்துக்கு வந்த பெரிய மனுசங்களுக்கும் என்னோட விளக்கத்தை சொல்றேன்… எனக்கும் இந்த பிரச்சினைய இழுத்து பிடிக்கிறது பிடிக்கல. எனக்கும் நிம்மதியே போயிருச்சு…

நான் இல்லாத சமயத்தில நடந்த சில வீணான, வரைமுறையில்லா பேச்சுக்களும், அதுக்கு தோதான சூழ்நிலையும் தான், இத்தனை தப்புக்களும் நடக்க காரணம்… நிச்சயமா சொல்றேன் நான் இங்கே இருந்திருந்தா இவ்ளோ தூரம் போக விட்ருக்க மாட்டேன். என் மேல இருக்குற பாசமும் அக்கறையும் கொஞ்சம் அதிகமா போய், என்னை சேர்ந்தவங்க எடுத்த முடிவு தான் இது..

எப்பவும் தன் பிள்ளையோட எதிர்காலம் மனசுல நிக்கும் போது, மத்தவங்களுக்கு பண்ணற அநியாயமும், அங்கே நியாயமா போய்டுது. இது தான் என்னோட விசயத்துல நடந்த உண்மை… இதுல யார் மேலயும் குற்றம் சொல்ல விரும்பல…

தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சே, நான் தூரமா இருந்து வேடிக்கை பார்த்திருக்கேன்… நான் இருந்த இடம், என் நிலைமை அப்படி இருக்க வச்சுருச்சு” என்று தன் இயலாமையை கூறிட

“இப்போ இவ்வளவு சொல்றவன் அந்த சமயத்துல வந்து எல்லாத்தையும் தடுத்திருக்கலாமே? ஏன் செய்யல பெரிய தம்பி” பஞ்சாயத்து பெரியவர் கேட்க

“என்ன பண்றது எல்லாம் என் நேரம், ஒரு நம்பிக்கை யாரவது இருக்குற சூழ்நிலைய புரிஞ்சு தடுத்து நிறுத்துவாங்கனு நினைச்சேன்… ஆனா அப்படி நினைக்கிறவங்களையும், இங்கே வாயடைக்க வச்சுருக்காங்கனு, எனக்கு எல்லாம் முடிஞ்சா பிறகு தான் தெரிஞ்சது” என்று தன் தாயை முறைத்தவாறே கூறினான்.

“என்ன நடந்தாலும் பெத்தவங்கள விட்டுக் குடுக்க கூடாதுன்னு என்னை பெத்தவங்க நினைக்கிற மாதிரி தான், என் பொண்டாட்டி, பிள்ளையையும் விட்டுகொடுக்க கூடாதுன்னு அவங்க நினைக்கல, நான் அப்படி இருக்கப் போறதில்ல… என்னாலே அவங்கள விட்டுகொடுக்க முடியாது…”

எல்லாமே என்னோட கெட்ட நேரம்னு நான் நினைச்சுக்குறேன்… நடந்த எல்லாத்துக்கும் உங்க தங்கை மட்டுமே பாதிக்கப்பட்டது துரதிஷ்டம் தான் சிவா… இந்த விளக்கத்தை எல்லாம் உங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டேன்…

எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க… உங்க தங்கச்சிய பிரிஞ்சு, நானும் சந்தோசமா வாழ்ந்துடல, அப்படி வாழ்றதுக்கும் எனக்கு தெரியாது… என்னோட தப்புகளை திருத்தி, நானே எல்லாத்தையும் நேர் பண்ணறேன்…

இந்த பஞ்சாயத்து மூலமா நாங்க பிரிஞ்சத மறுத்து, திரும்பவும் ஒண்ணு சேர்ந்து குடும்பமா வாழப்போறோம்னு நானே பஞ்சாயத்துல சொல்லி மன்னிப்பு கேக்குறேன்,

அந்த கவுன்சிலிங் கூட வேண்டாம்னு ரத்து பண்ணிடறேன்… ஆனா  என் பூர்வீகத்தையோ, என்னை பெத்தவங்களையோ ஒருநாளும் விட்டுக் கொடுத்தோ, மறந்தோ இருக்க என்னால முடியாது. அப்படி இருக்க நானும் விருப்பபடல…

உங்க தங்கச்சி இந்த வீட்டுல வந்து என்னோட வாழணும், என் குடும்பத்து மனுஷங்களோட ஒண்ணா இருக்கணும், அவ மேல ஒரு தூசு துரும்பு படாம, கண்ணுல வச்சு காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு.

இதுக்கு சம்மதிச்சு என்கூட வந்து இருக்க சொல்லுங்க,, அப்படி இல்ல…   உங்க தங்கைக்கு என்னோட சேர்ந்து வாழ விருப்பம் இல்லனா, என் குழந்தைய மட்டுமாவது என்கிட்டே குடுக்கச் சொல்லுங்க….

ரம்யாவுக்கு வேற வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கறதா இருந்தாலும் அதுக்கு ஒத்துகிட்டு என்ன நடைமுறையோ, அத செய்ய நான் தயாரா இருக்கேன்.

ஆனா என் குழந்தைய யாருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன், அது ஒரு நாளும் முடியாது. அவள வளர்த்து ஆளாக்கிறதுல என் மிச்ச நாட்களை கழிச்சிருவேன்” என தன் பேச்சினை முடித்தவன், தன் தம்பி வைத்திருந்த பத்திரத்தை, கைகளில் வாங்கி அந்த இடத்துலேயே கிழித்து எரித்து விட்டான்…

“என்ன காரியம் பண்ணறே பெரிய தம்பி?” என சுப்பையா கேட்டக

“ம்ம்… நீங்க எனக்கு வாங்கி கொடுத்த விடுதலை பத்திரத்தை எரிச்சுக்கிட்டு இருக்கேன்”

“பஞ்சாயத்து நடந்துகிட்டு இருக்கும் போது, உன் இஷ்டத்துக்கு இப்படி செஞ்சா என்ன அர்த்தம்?”

“எனக்கு எதுலயும் உடன்பாடு இல்லன்னு அர்த்தம்… இந்த பத்திரம் இருக்க போய் தானே, என் வாழ்க்கைய எல்லோரும் வாய்க்கு கிடைச்ச அவலா நினைச்சு மென்னு துப்பிகிட்டு இருக்கீங்க?

இனிமே அது நடக்காது… நான் இப்போ செய்றது தப்பு தான்… இதுக்கு தண்டனையா நீங்க என்ன சொன்னாலும் ஏத்துக்க தயார இருக்கேன்… ஆனா என் குடும்ப வாழ்க்கைய இதுக்கு மேல மேடை போட்டு பேசுறத நான் ஒத்துக்க மாட்டேன்…

இது எங்க வீட்டு பிரச்சனை, நாங்க வீட்டுல பேசி சரி பண்ணிக்கிறோம்… என்னை எல்லோரும் மன்னிச்சுருங்க… இப்போ நீங்க எல்லோரும் கிளம்பலாம்” என்று அதிரடி காட்ட

“அதெப்படி பெரிய தம்பி… இப்ப மட்டும் வீட்டுலையே பேசி தீர்த்துக்குறேன்னு சொல்லறீங்க? உங்களுக்கு வேணும்னா கூப்பிடவும், வேண்டாம்னா வெளியே போக சொல்லவும் நாங்க என்ன உங்க வீட்டு வேலைக்காரங்களா? கிராமத்து பஞ்சாயத்த அவ்வளவு சுலபமா நினைச்சுடீங்களா?” என ஒருவர் சட்டமாய் பேச

“வீட்டுல பேசி எங்க பிரச்சினைய முடிக்க முடியும்னு நம்புறேன்” என்று சிவாவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே “உன்மேல இருக்குற நம்பிக்கையில சொல்றேன்” என மனதில் நினைத்துக்கொண்டே கிரி பேசிட,

“நான் அப்பவே சொல்லிட்டேன் நான் செய்றது தப்பு தான், அதுக்கு தண்டனை ஏத்துக்க தயாரா இருக்கேன்னு ஏற்கனவே சொல்லிட்டேன், அதனால தயவு செய்து உங்கள கெஞ்சி கேக்குறேன், நீங்க கிளம்புங்க… ஒரு நல்ல நாள் பார்த்து உங்க தண்டனைய சொல்லுங்க நான் அப்போ வர்றேன்” என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அவர்களை அனுப்பி விட ஒரு வழியாய் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது…

மழை விட்டாலும் தூறல் விடவில்லை அங்கே… இப்பொழுது சிவா பிடித்துகொண்டான்…

“என்ன கிரி விளையாடுறீங்களா? இப்போ இங்கே இவ்ளோ பேசுற நீங்க, வெளிநாட்டுல இருந்து வந்ததும் இதே பஞ்சாயத்து மனுசங்களை கூட்டி வச்சு, இந்த காரியத்த செஞ்சு முடிச்சு எங்க வீட்டுல வந்து பேசி இருக்கலாமே? ஏன் அத செய்யல? உங்களுக்கு எல்லாமே ஈஸியா போச்சா? சட்டத்தோட விளையாட ஆரம்பிச்சுரிக்கீங்க கிரி!! இது நல்லதுக்கு இல்ல” என்று எச்சரிக்கும் பாவனையில் பேசிட

“நான் என் பொண்டாட்டி பிள்ளையோட வந்து இந்த பாத்திரத்துக்கு இனி வேலை இல்லன்னு நிரூபிக்க நினைச்சேன், அதான் அப்போ செய்யல… என் பொண்டாட்டி மேல நம்பிக்கை வச்சுருந்தேன், நான் சமாதானப்படுத்துனா என்கூட வருவா, என்னை மன்னிச்சு ஏத்துப்பானு ஈஸியா நினைச்சுட்டேன். ஆனா என்னோட நினைப்ப பொய்யாக்கிட்டா.

இந்த புது ரம்யாவை எப்படி சமாதானப் படுத்துறதுன்னு எனக்கு தெரியல. அவ என் கூட இருந்தா தான், என்னை அவளுக்கு புரிய வைக்க முடியும்… அதுக்கு இந்த கவுன்சிலிங் தான் சரின்னு முடிவு பண்ணினேன்… உங்க வீட்டுக்கு வந்து நான் பேசும் போது, நான் என்ன சொல்ல வந்தேன்னு கொஞ்சமாவது கேட்டிருந்தா, என்னோட நிலைமை தெரிஞ்சுருக்கும். எங்கே நான் வந்தாலே ஏதோ வெளியே நிக்குற பிச்சைக்காரன், வீட்டுக்கு வந்த மாதிரி என்னை பார்த்த, நானும் என்னதான் பண்ணுவேன்… அதான் வேற வழியில்லாம இந்த முடிவு எடுத்தேன்” என்று மனம் வலிக்க பேச

“அடுத்து என்ன செய்றதா உத்தேசம்? பஞ்சாயத்த கலைச்சாச்சு, கோர்ட்க்கும் போக மாட்டேன்னு சொல்லியாச்சு, இத்தனைக்கும் மேல எங்க பொண்ணு உங்க கூட வாழ வரமாட்டேன்னு சொன்னா அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?” சிவா விடாமல் கேட்க

“அவ வந்தா என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும், அவ இல்லைனா, எனக்கு என் குழந்தை போதும் சிவா… என் வழிய பார்த்து நான் போய்கிட்டே இருப்பேன்… அதுக்கும் இடைஞ்சல் பண்ணி என் குழந்தைய என்கிட்டே குடுக்க மறுத்தா, என் உசிர குடுத்தாவது நான் சாதிச்சுருவேன்.. இத அவ கிட்ட சொல்லி வைங்க… நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன். எங்க காதல் மேல, எனக்கு நம்பிக்கை இருக்கு. அது எங்கள சேர்த்து வைக்கும்” என்று தன் பேச்சினை முடித்தான்.

“எங்க நினைப்பு கொஞ்சம் கூட இல்லாம, நீயா எல்லாத்தையும் பேசிகிட்டே இருந்தா என்ன அர்த்தம் பெரிய தம்பி?” என்று சுப்பையா தன் இருப்பை காட்டிட

“அப்பா போதும்… இன்னும் வீம்பு பேசி என்னை கொல்லாதீங்க… நான்தான் தெளிவா சொல்லிட்டேனே… எந்த காலத்திலேயும் யாரையும் விட்டு குடுக்கப் போறதில்லன்னு. என் குடும்பத்தோட நான் இங்கே தான் வருவேன், என் குடும்பத்த நீங்க ஏத்துகிட்டு தான் ஆகணும். அப்படி எல்லாம் இருக்க முடியாதுனா, இந்த வாசலோட நின்னு உங்க எல்லோரையும் பார்த்துட்டு போறதுக்கு அனுமதி குடுங்க… அது போதும்…” ஆற்றாமையில் வார்த்தைகளை விட

“என்னண்ணா இப்படி எல்லாம் பேசுற? உனக்கில்லாத உரிமை இங்கே யாருக்கும் இல்லை… நீ உன் குடும்பத்தோட சந்தோசமா வாழத்தான் போற… நாங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இங்கே இருக்கத்தான் போறோம்.. எனக்கு அதுல நம்பிக்கை இருக்கு.. நீ போய் அண்ணிய சமாதனப்படுத்துற வேலைய பாரு…” என்று அவன் தம்பியும், தன் பங்கிற்கு அவனுக்கு பலத்தை கொடுத்திட, மீண்டும் தன் பயணத்தை சென்னையை நோக்கி தொடர்ந்தான்.

 

 

error: Content is protected !!