Poovanam-19

பூவனம்-19

ரம்யாவின் வீடு, சண்முகம் முன்பு கிரி அமர்ந்திருக்க, அவனை பார்த்தவாறே சிவாவும் செல்வியும் இருந்தனர், ரம்யா எப்பொழுதும் போல் வேலைக்கு சென்றது கோபத்தை வரவைத்தது கிரிக்கு.

அந்த புண்ணியத்தை கட்டி கொண்டது சண்முகம் மட்டுமே… முன்தினம் இரவே சிவா, அவரின் அனுமதி இல்லாமல் கிராமத்திற்கு சென்று, பஞ்சாயத்து பேசி, நடந்தவைகளை கூறி, நன்றாய் அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டிருந்தான்…

அந்த கோபமும், தான் நினைத்ததை மட்டுமே செயல் படுத்திக் கொண்டிருக்கும் கிரியின் செய்கைகளும், சேர்ந்து அவரை கோபத்தின் உச்ச நிலையை அடையச் செய்திருந்தது…

அதன் பலனே அவன் இன்று மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு வருகிறான் என்று தெரிந்தும், எப்பொழுதும் போல் மகளை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டார்.

அவளும் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பது போல் தன் அன்னை தடுத்தும் கேளாமல் சென்று விட்டாள்… இதையெல்லாம் சொல்லி எங்கே போய் முட்டிக்கொள்ள என்னும் நிலையில் தான் சிவாவும், செல்வியும் முளித்துகொண்டிருந்தனர்.

“இந்த பெண்ணிற்கு எப்பொழுது தான் புத்தி வரப்போகிறதோ? தன் வாழ்க்கை பற்றிய கணிப்பை இன்னும் எத்தனை நாளைக்கு தான் மற்றவர்கள் கையில் ஒப்படைப்பாள்? இவள் சுயாமாய் சிந்தித்து செயல் படுவது எப்போது?” என்ற ஆதங்கமும் சேர்ந்து செல்வியை சோர்வடையச் செய்தது…

குழந்தையும் பள்ளிக்கு சென்றிருக்க இடையூறு இல்லமால் கிரியை முறைக்கும் வேலையை செவ்வென செய்து கொண்டிருந்தார் சண்முகம்…

“கடவுளே என்னை இப்போ தான் இவர் மாப்பிள்ளை பாக்குறாரா? இன்னும் எவ்வளவு நேரம் தான், இப்படி இவர் முறைச்சு பாக்குறது? எனக்கு தலைய இந்த பக்கமும், அந்த பக்கமும் மாத்தி பார்த்து, திருகுவலி வந்துறும் போலேயே? யாரயும் வாய தொறக்க விடாம கட்டி போட்டுட்டார் போல? நேத்து என் வீட்டுக்கு வந்து எகிற குதிச்ச என் மச்சன்காரனும் பெட்டிப்பாம்பா அடங்கி இருக்கான்… தெய்வமே இதுக்கு விடிவு காலம் இல்லையா?” என மனதோடு பேசிக்கொண்டே, சிவாவின் முகத்தை ஆராய, அவனோ தனக்கும், இதற்கும் சம்மந்தம் இல்லை எனும் ரீதியில் கிரியை பார்த்து வைத்தான்.

“சே! எந்த பக்கம் போனாலும் அவுட் ஆக்க, பாத்தி கட்டிட்டு நிக்கிறாங்கயா!!” என்று தனது அடுத்த விக்கெட் கீப்பராய் நின்றிந்த செல்வியை நோக்க, அவரும் அதே நிலையில் அவனை பார்த்து வைக்க,

“டேய் கிரி! எல்லோருக்கும் ஏழரை நாட்டு சனி நடந்து போகும்னா, உனக்கு அது டெண்ட் போட்டு, உன் தலையில உக்காந்துருச்சு…. வேற வழியில்ல, இனிமே நமக்கு நாமே முடிவ சொல்லி, இவங்க பதில எதிர் பாக்காம பொண்டாட்டி பிள்ளைய கடத்திட்டு போய் தான் பேசணும் போல” என மனதிற்குள் முடிவெடுத்தவனாய் “நான் ரம்யாவ ஆபீஸ்ல பார்த்து பேசுறேன், இப்போ நான் கிளம்புறேன்” என விடை பெற,

“என் பொண்ணு அங்கே நிம்மதியா வேலை பாக்குறது பிடிக்கலையா உங்களுக்கு?” என்று பேச்சை ஆரம்பித்தார் சண்முகம்.

“நிம்மதியா? உங்க பொண்ணு அங்கே வேலை பார்ப்பாளா? நான் நம்ப மாட்டேன்… எனக்கு என்னமோ அவ இன்னைக்கு தானா போயிருக்க மாட்டா? நீங்க தான் வற்புறுத்தி அனுப்பி வச்சுருக்கீங்களோனு தோணுது. அத நான் அங்கே போய் கேட்டு தெரிஞ்சுக்குறேன்” உண்மையை உரக்க சொல்லி, வெளியே செல்ல முற்பட

“வந்த விஷயத்தை சொல்லாம போனா எப்படி கிரிதரன்?” சிவா தூண்டிலை போட

“நான் பேச வந்த ஆள் இங்கே இல்லாதப்போ எப்படி, யார் கிட்ட பேச முடியும் சிவா? நான் வந்ததில இருந்து முறைக்கிற வேலைய மட்டுமே நீங்க எல்லோரும் செஞ்சுட்டு இருந்தா நான் என்ன செய்ய?”

“நேத்து எங்க வீட்டுல வச்சு என்னோட நிலைமைய விளக்கியாச்சு, அதுக்கு நீங்களே சாட்சி, இன்னும் நான் என்ன பண்ணனும்… ஒரு குடும்பமா நான் வாழ நினைக்கிறது தப்பா?

ஏன் எல்லோரும் சேர்ந்து என்னை பழி வாங்குறீங்க? நேத்து அவ்வளவு கோபப்பட்டு பேசின நீங்க தான், இங்கே அமைதியா இருக்கீங்கனு நினைச்சா எனக்கே சந்தேகமா இருக்கு?

அங்கே இருக்குற எல்லா பெரியவங்க முன்னாடியும் உங்க நியாயத்தை சொன்ன  நீங்க தான், இன்னைக்கு உங்க அப்பா முன்னாடி, அவங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு, அமைதியா இருக்கீங்க.

அஞ்சு வருசத்துக்கு முன்னாடி, என்னோட நிலைமையும் இப்படிதானே இருந்தது. ஆனா நான் செஞ்ச காரியம் பெரிசு… கொஞ்சம் சுதாரிச்சு நான் உடனே இங்கே வந்திருந்தா, எல்லாத்தையும் மாத்திருப்பேன்… இனியும் நடந்து முடிஞ்சத பேச நான் தயாரா இல்லை… இனிமே நடக்க இருக்குறத பேச மட்டுமே வந்துருக்கேன்…” என்று ஆற்றாமையுடன் கூறினாலும் சண்முகம் அசைந்தாரில்லை.

இப்பொழுது பொல்லாத கோபம் செல்விக்கு வந்தமர்ந்திட “இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க, ரம்யா இங்கே இருப்பா” என கூறிக்கொண்டே கைபேசியில் அழைத்து விட்டார் பெண்ணை.

“ரம்யா இன்னைக்கு நீ வேலை பார்த்து கிழிச்சது போதும்… உடனே வீட்டுக்கு வந்து சேரு, உங்க அப்பா தான் கோபத்துல சொல்றாருன்னா, உனக்கு தெரிய வேணாம்… உன்னை மதிச்சு, உன்கூட பேச ஒருத்தர் வந்தா இப்படி தான் போவியா நீ? உனக்கும், மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்” என்று கண்டித்து வைத்தவர், அதே குரலில் கிரியிடம்

“இவர் மேல ஒரு தப்பும் இல்ல தம்பி, ஒரு பொண்ணை பெத்தவருக்கு இருக்குற வருத்தம் தான், இப்படி இவர் உங்ககிட்ட நடந்துக்க காரணம். இந்த வலியெல்லாம் அனுபவிக்கிறது அவ்வளவு சுலபமில்ல… கண்ணுக்குள்ளயே வச்சு வளர்த்த பொண்ணு, இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து அலைகழிச்சு, அவளை முடக்கி போட்டா, அத கண்ணாலே பார்த்துட்டு, நாங்க அனுபவிச்ச வலிய சொல்லி முடியாது…

பிரசவ வலிக்கு பிறகு சந்தோசம் தான், ஆனா என் பொண்ணுக்கு அந்த சந்தோசத்த கூட அனுபவிக்க வழி இல்லமா போயிருச்சு… என்ன பாவம் செஞ்சா என் பொண்ணு? அமைதியா இருந்தது ஒரு குத்தமா? யாரையும் எதிர்த்து பேசாம, பெரியவங்கள மதிச்சு நடக்க கத்துகொடுத்த எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை, அவளுக்கு கிடைச்சா எந்த தகப்பனால தான் தாங்கிக்க முடியும்… வேண்டாம் தம்பி… எந்த காலத்திலயும் நீங்க செஞ்சத நியாயப்படுத்தி பேசி, எங்க வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்க… நீங்க ரொம்ப காலம் நல்ல இருக்கணும்னு, இன்னைக்கு மட்டுமில்ல, என்னைக்கும் நினைக்கிறவங்க நாங்க… உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு… அதையும் ஞாபகத்துல வச்சுக்கோங்க…

இனிமேலாவது நியாய தர்மத்தை ஆராயமா, உங்க பக்கத்துல இருக்குறவங்கள மட்டுமே பாக்குற பார்வைய மாத்திக்கோங்க… அது தான் இனிமே நீங்க வாழப்போற வாழ்க்கைக்கு நல்லது… நல்லதொரு அஸ்திவாரம் கட்டுற வீட்டுக்கு மட்டும் இல்ல, வாழப்போற வாழ்க்கைக்கும் தேவை” என்று தன் மனக்குமுறல்களை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார்…

“போதும் செல்வி! இவருக்கு புத்தி சொல்லறேன்னு, முடிஞ்ச கஷ்டங்களை பேசி,  நீ உன் உடம்ப கெடுத்துக்காதே” என்று சண்முகம் ஆறுதல் கூற, சிவா தண்ணீர் கொடுத்து தன் அன்னையை ஆசுவாசப் படுத்த, தான் எவ்வளவு தூரம் அவர்களின் மனதை காயப்படுத்தி இருக்கிறோம் என்பதை கண்கூடாக கண்டு கொண்டான்.

எப்பேர்பட்ட வார்த்தைகள் இவை? கடினமாய் நான்கு  வார்த்தை திட்டி, சாபமிட்டு, தங்கள் துயரத்தை வெளிப்படுத்தாமல், மேலும் மேலும் தன் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு, வலிகள் எல்லாவற்றையும் தங்களுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்ளும் இவர்களைப் போன்ற மனிதர்களை உறவு முறைகளாக பெற தனக்கு என்ன தகுதி இருக்கிறது?

முதலில் “மனிதன்” என்ற தகுதி கூட தனக்கு இருக்கிறதா? என்ற சந்தேகம் கிரியின் மனதில் வந்தமர, தன்னை பற்றிய சுய அலசலில், தன் நிலை மிகவும் தாழ்ந்து இருப்பதை அறிந்து, நெஞ்சமெங்கும் பாரமேரிய உணர்வை அனுபவித்து கொண்டிருந்தான்.

செல்வி பேசிய பேச்சுக்கள், ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்திட, அந்த நிமிடங்கள் மணி நேரங்களாய் கடந்து, ரம்யாவும் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.

“நீ இவர் கூட இங்கே உக்காந்து பேசினாலும் சரி, வெளியே போய் பேசினாலும் சரி, ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்க பாருங்க. இன்னையோட இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ஒரு முடிவுக்கு வரட்டும்” செல்வி கட்டளையிட, சண்முகமும் தலையசைத்து அதற்கு சம்மதம் கொடுத்தார்.

“நான் இங்கே மாடி ரூம்ல போய் பேசுறேன்” என்று ரம்யா தன் முடிவினை அறிவித்து செல்ல தயாராக, கிரிதரனும் பின் தொடர்ந்தான்.

வெயிலடிக்கும் வெட்ட வெளியினை சுற்றிலும் பல வகையான பூந்தொட்டிகள் அந்த இடத்தை குளிர்ச்சிப்படுத்த, அங்கே சிறியதாய் ஒரு ஓய்வறை உபயோகத்தில் இருக்க அங்கே தான் வந்தமர்ந்தனர் இருவரும்…

மனைவியிடம் பேசவென முடிவு செய்து வைத்த பேச்சுக்கள் எல்லாம் செல்வியின் பேச்சால் கிரிக்கு மறக்கடிக்கப்பட்டு இருக்க, சொல்லாத மோனநிலையில் இருவரும் சிறிது நேரம் அமைதியாய் இருந்தனர்.

“எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று ரம்யாவே பேச்சை எடுத்து கொடுக்க, பெருமூச்சுடனே தன் எண்ணங்களை கூற ஆரம்பித்தான்…

“என்னனென்னவோ பேசணும், என்னோட நியாயத்தை எல்லாம் சொல்லனும்னு நினைச்சு வந்தேன் ரம்யா… ஆனா உங்க அம்மா எல்லாத்தையும் மறக்க வச்சுட்டாங்க…

நான் ரொம்ப சுயநலக்காரன், ஏன் ஒரு சராசரி மனுசனா கூட என்னை நினைக்க முடியல?… தன்னோட குடும்பத்த, எந்த நிலையிலேயும் விட்டுக் குடுக்காம இருக்குறவன் மட்டுமே மனுசன்னு நினைச்சுட்டு இருந்தேன், ஆனா அதையும் தாண்டிய மனுசத்தன்மை இருக்குனு உங்கம்மா எனக்கு புரிய வச்சுட்டாங்க… எவ்ளோ கோழையா இருந்திருக்கேன்… உங்க அப்பா பட்ட வலிகளை விட நான் எந்த கஷ்டத்தையும் அனுபவிச்சுடலே… யாரோ ஒருத்தன், தன் பொண்ண கட்டிகிட்டான்ங்கிற ஒரே காரணத்துக்காக, இப்போவும் அவனை ஒரு சொல் சொல்லாம, எல்லாத்தையும் அடக்கி வச்சு, மனசுக்குள்ளேயே குமைஞ்சு, இன்னமும் நான் நல்ல இருக்கணும்னு நினச்சுகிட்டு இருக்காங்களே, அவங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்? சத்தியமா எனக்கு தெரியல ரம்யா?” என்று பேசியபடியே அவள் முன்பு மண்டியிட்டு

“எனக்கு என்ன தண்டனை குடுக்கனும்னு தோணுதோ, அத இப்போவே குடுத்துரு.. நீயும் ஒண்ணுமே சொல்லாமா இன்னும் என்னை குற்றவாளி ஆக்காதே, போதும் இனிமே நான் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்கப் போறதில்ல…

உன்னை தூரத்துல வச்சு பாக்குற பக்குவம் எனக்கு இல்ல, உன்னோட வலிகளை என்னோட தோள்ல சுமக்க தயாரா இருக்கேன், ஆனா அதுக்கும் கூட எனக்கு குடுப்பினை இல்ல…. குழந்தைய வச்சு மட்டுமே நான் உன்னை என்கிட்டே கூப்புட்டுக்கனும்னு நினைச்சேன்… இப்போ அதுவும் வேணாம் எனக்கு… சுயநலமா இருக்குற என்கிட்ட என் பொண்ணு வளர்றத விட, உன்கூட உங்க அப்பா, அம்மா நிழல்ல வளர்றது தான் நல்லது… அது தான் சரி… நான் தூரமா நின்னு அவளை பாக்குறதுக்கு மட்டும் அனுமதி குடு ரம்யா அது போதும்”… என்று கரகரத்த குரலில் சொல்ல, ஏற்கனவே அவள் முன்பு மண்டியிட்டவன் , மேலும் தலை குனிந்து கொள்ள அவன் கண்ணீர் துளிகள் ரம்யாவின் பாதத்தில் தெறித்தன.

நெஞ்சம் கனக்க, கண்கள் பணிக்க தன் முன்னே இருந்த கணவனை பார்த்தவளுக்கு மூளை மரத்து போன நிலை தான்… நேற்றைய தினம் நடந்தவைகளை தன் அண்ணன் மூலம் அறிந்து, கணவனின் அடாவடியில், எக்காரணம் கொண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தவளுக்கு, இப்பொழுது தர்ம சங்கடமான நிலை…

எந்த சூழ்நிலையிலும் தன் கண்ணியத்தை தவற விடாமல், கம்பீரமாய் பதில் அளித்து அனைவரையும் வாயடைக்க செய்பவன், இன்று தன் முன்னே மண்டியிட்டு மன்னிப்பும் வேண்டாமால், தண்டனையை அளிக்கும் படி மன்றாட, அவளே அறியாமல் நொடி நேரம் தன் நிலையை மறந்து அவனிடம் சாய ஆரம்பித்த மனதை மிகவும் கட்டுப்படுத்தி, வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்து விட்டாள்.

“இப்போதான் புரிஞ்சதா எங்க வீட்டுல உள்ளவங்கள பத்தி?, எப்படி கிரிதரன் உங்களால இப்படி பேச முடியுது? நீங்க வந்து நின்னதும் ஒரு மறுப்பும் சொல்லாம, எந்த வித கஷ்டமும் உங்களுக்கு குடுக்கமா, தன் பொண்ணை உங்களுக்கு தூக்கி குடுத்தாரே அவருக்கு நீங்க என்ன கைம்மாறு பண்ணிருக்கீங்க?

உங்களுக்கு, உங்க கௌரவம் பெருசா போச்சு, பெத்தவங்களையும், பொண்டாட்டி புள்ளையையும், எப்படி காப்பாத்துறேன் பாருன்னு ஊர் உலகத்துக்கு தம்பட்டம் அடிச்சுக்க தான், நீங்க எல்லாம் கல்யாணம், கருமாதி எல்லாத்தையும் பண்ணி ஷோ காமீக்கிறீங்க… உங்களுக்கு கௌரவமா இருக்க ஒரு குடும்பம் தேவை அவ்வளவு தான்… மத்தபடி அவங்க மனசு உங்களுக்கு தேவை இல்லை.

என்ன சொன்னீங்க? குழந்தைய காட்டி என்னை உங்க பக்கம் இழுக்க நினைச்சீங்களா? உண்மையாவே நீங்க என்னை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிடீங்களா? நாம வாழ்ந்த வாழ்க்கை இவ்ளோ தானா? அப்போ உங்களுக்கும், எனக்கும் நடுவுல எதுவுமே இல்லையா? என்னை கஷ்டப்படுத்தின பாழாப்போன காதல் உங்களுக்கு வரலையா? ச்சே… இப்போ இந்த நிமிஷம் உங்கள நினைச்சா எனக்கு அருவெறுப்பா இருக்கு”… என்று கடுப்பினை காட்டி முகத்தினை சுளிக்க

“ஐயோ அப்படியெல்லாம் நினைக்காதே ரம்யா… நான் உன் மேல உசுரா இருக்கேன். நம்ம காதல தயவு செய்து உன் வாயால கொச்சை படுத்தாதே! உன்னோட வலிகளை மறந்து, நீ என்கூட, வாழறதுக்கு ரொம்ப காலம் எடுக்கும், அது வரைக்கும் கூட உன்னை என்னால பிரிஞ்சுருக்க முடியாதுங்குற ஒரே காரணம் தான், நான் குழந்தைய முன்னிறுத்தி உன்னையும் கூப்பிட்டது” என உருக

“எப்படி குற்றவாளிய, நிபந்தனை ஜாமின்ல வெளியே கூட்டிட்டு போற மாதிரி, கவுன்சிலிங்குற பேர்ல என்னை, உங்க கூட வந்து தங்க வைக்க திட்டம் போட்டீங்க அப்படி தானே?”

“ஏன் அதுக்கு முன்னாடியும் நான் வந்து உன்னை கூப்பிட்டேனே அது ஞாபகம் இல்லையா உனக்கு?” என்றவன் கோபமாய் எழுந்து பதில் சொல்ல,

“அதெப்படி உங்களுக்காக பேசும் போது மட்டும் நியாயத்தை பாக்குறீங்க கிரி?, அந்த சமயத்துல கூட உங்க மேல இருக்குற தப்பை நீங்க தெரிஞ்சுக்கல அப்படிதானே? நீங்க கூப்பிட்டதும் உடனே வந்திருந்தா உங்க சுயநலத்துக்காக என்னையும், என் பிள்ளையையும் பழைய படி உங்க குடும்பத்துக்காக, விட்டு கொடுத்துருக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? அவ்வளவு ஏன் உங்க அம்மாக்கிட்ட, பெண் குழந்தை மேலஇருக்குற வெறுப்பையும் சேர்த்து தானே அனுபவிக்க விட்றுப்பீங்க? இதையெல்லாம் பார்த்து திரும்பவும் என் மனசு கஷ்ட்டப்பட்டு பைத்தியகாரி மாதிரி அலையணும், அது தானே உங்க எண்ணம்.”

“போதும் நிறுத்து ரம்யா… நடந்தத திரும்பத் திரும்ப பேசி என்னை கொல்லாதே… கொஞ்சம் விஷம் இருந்தா குடுத்துரு சாப்பிட்டு செத்து போயிர்றேன்… உன் வாயால இந்த மாதிரி பேச்சை கேக்கவா நான் அவ்வளவு சிரமப்பட்டு நடந்த எல்லாத்துக்கும், எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டு, ஒண்ணுமில்லாம ஆக்கிட்டு வந்தேன்… உனக்கு என்ன தண்டனை குடுக்கனும்னு தோணுதோ அத குடுக்கவும் சொல்லிட்டேன்… இப்படியே பேசிக் கொல்லாதே என்னால தாங்க முடியல”

“ரொம்ப பீல் பண்ணாதீங்க… உங்களுக்கு தண்டனை குடுக்க நான் என்ன ஜெயிலரா? இல்ல வக்கீல தேடி போக உங்கள மாதிரி நான் என்ன சுயநலவதியா? உங்களுக்கு உங்க பொண்ண தூரமா இருந்து பாக்க கூட அனுமதி தரக்கூடாதுன்னு தான் முடிவெடுத்து இருந்தேன், இப்போ அந்த நினைப்ப மாத்திட்டேன்,

என்னை இதுவரைக்கும் கண்ணுக்குள்ள வச்சு காப்பத்துன பெத்தவங்களுக்கு, நானும் கைம்மாறு செய்ய நினைக்கிறேன், எங்க அண்ணன் எனக்காவே இன்னும் தன் வாழ்க்கையை அமைச்சுக்காம இருக்கான். எத்தன நாள் தான் நானும் அவங்களுக்கு பாரமா இருக்குறது, அவங்களுக்கு ஒய்வு குடுக்கனும், அவங்களும் சந்தோசமா இருக்கணும்.

எங்கள தூரமா பார்த்து நீங்க தண்டனைய அனுபவிக்க வேணாம், உங்க பக்கத்துலயே வச்சு, உங்க பொண்ணோட அம்மாவா மட்டுமே என்னை பார்க்கணும், அந்த தண்டனை தான் உங்களுக்கு, நான் உங்க கூட வந்து தங்கபோறேன். நல்ல ஞாபகத்துல வச்சுக்கோங்க வாழப்போறதில்ல… ஓரு ரயில் சினேகிதமா கூட அங்கே நான் பேசப்போறதில்ல…

நாம இருக்குற வீட்டுல நீங்க யாரோ? நான் யாரோ தான்?  எக்காரணம் கொண்டும் உங்க ஊருக்கோ, உங்க வீட்டு மனுசங்களுக்கோ என்னால மரியாதை குடுக்க முடியாது… என் பொண்ண உங்க பக்கத்துல கூட விடமாட்டேன். அப்போ தான் உங்களுக்கும் ஒரு அப்பாவோட வலி புரியும், இதுல உங்களுக்கும் குடும்பத்தோட இருக்கேங்கிற கௌரவம் கிடைக்கும், என்னை பெத்தவங்களுக்கும் அவங்க பாரம் குறைஞ்ச நிம்மதி கொஞ்சமாவது வரும். இதுக்கு சம்மதம் இல்லன்னா கண் காணாத இடத்துக்கு போயிருங்க… தயவு செய்து தூரமா இருந்து பாக்குறேன்னு சீன் போடாதீங்க… எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல வேலைய காரணம் காட்டி வேற ஊருக்கு போற ஐடியா இருக்கு எனக்கு. அதனால இதுக்கு சம்மதிச்சே ஆகணுங்கிற கட்டாயம் எதுவும் உங்களுக்கு இல்ல” என்று தன் பேச்சை முடித்துக்கொண்டு, கீழே வந்து விட்டாள்.

ஆக மொத்தத்தில் ரம்யாவின் பாழாய்ப்போன காதலும், கிரிக்கு நம்பிக்கை தந்த காதலும் ஒன்று சேருமா என்ற பெரிய கேள்விக்குறி அங்கே எழ, புன்னகைகள் மட்டுமே தன் வனத்தில் பூக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கிரியின் மனம், வறண்ட பாலைவனத்தில் கண்ணீருக்கும் பஞ்சமாய் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

அழுவதும் தவறில்லை, விழுவதும் தவறில்லை.  ஆனால் அழுதபின் சிரிக்காமாலும்…. விழுந்த பின் எழாமலும் இருப்பது தான் தவறு என்ற கூற்றினை மனதில் பதித்துக் கொண்டு ரம்யா தன் பாதையை விஸ்தரித்துக் கொண்டாள்