கிரிதரனும், சிவாவும் பேசிய நாளின் பின்னிரவில், கிராமத்து பெரிய வீட்டிலிருந்து, தாய்க்கு உடல்நலமில்லை என்று சின்னத்தம்பி தன் அண்ணனிற்கு அழைத்திருக்க, அந்த இரவுநேரத்தில் தன் டஸ்டரில் கிராமத்திற்க்கு விரைந்தான் கிரிதரன்.

அவசரகோலத்தில், கலைந்த தோற்றத்தில் தன் கிராமத்து வீட்டிற்கு வந்தவனை, வரவேற்றது ரம்யாவின் அண்ணன் சிவகுமார்.

“இவன் ஏன் இங்கே வந்தான்?” என்று மனதுக்குள் அதிர்ந்தாலும், பின் சமாளித்துக்கொண்டு தன் தம்பியை நோக்கியவன்,

“என்ன விஷயம் சின்னா!? ஏதோ அம்மாக்கு உடம்பு சரியில்லனு உடனே வர சொல்லிட்டு, இங்கே சவாகாசமா இவர் கூட உக்காந்திருக்க? பொய் சொல்லி என்னை வரவச்சுருக்கியா?”

“ஆமா… பொய் தான் சொன்னேன்”

“பொய் சொல்ல உனக்கு வேற காரணமே கிடைக்கலையா? ஒரே டென்சன் எனக்கு, அம்மா எங்க?”

“அம்மா உடம்புக்கு ஒண்ணும் இல்ல, நல்லா இருக்காங்க, ஆனா… நீ செய்ற வேலை தான் இங்கே புரியாத புதிரா இருக்கு”

“புதிரா?”, என தம்பியின் முகத்தைப் பார்க்க

“வேலையை சாக்கா வச்சுட்டு, சென்னை போய் என்ன செஞ்சுகிட்டு இருக்கண்ணா?”

“வேல தான் பாக்குறேன், வேற என்ன பண்ணேன்?”, என்றவாறு அருகில் நின்றிருந்த சிவாவை முறைத்தவன்,

“எல்லாம் உன்னால தானா? முளச்சு மூனு இல விடாததெல்லாம் வெளியிலயே நிக்க வச்சு கேள்வி கேக்குதுக என மனதுக்குள் நினைத்தவாறு இளக்கமில்லா முகத்துடன் பார்க்க

“வீட்ல பெரியவங்க இருக்குறது உனக்கு ஞாபகம் இருக்கா, இல்லையா?” என அவன் தம்பி கடுப்புடன் கேட்க

‘பெரியவங்க, பெரியவங்களா நடந்துகிட்டா, நான் ஏன் வயசு பையன் மாதிரி பொண்டாட்டி பின்ன திரிய போறேன் என நினைத்தவாறு

“நிறுத்து சின்னா! இப்போ எதுக்காக என்னை வர சொன்னே சொல்லு? எனக்கு நேரம் இல்ல… நான் போய் ஆகணும்”

“அப்படி என்ன அவசர வேலைனு சொல்லு, நானும் கூட வர்றேன். எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு செய்யாதே! ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம்”.

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா? அதிகபிரசங்கியாட்டம் பேசாதே!”

“நீ செய்யற வேலை தான் அப்படி இருக்குண்ணா, இதோ இங்கே நிக்கிறாரே, அவர் எதுக்கு வந்திருக்கார்னு சத்தியமா உனக்கு தெரியாது? எந்த முடிவு எடுத்தாலும் நீ பெரியவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செஞ்சுருக்கலாமேண்ணா!”

“என்னனு சொல்ல சொல்ற சின்னா?, அதுக்கு தான் வாய்ப்பு குடுக்காம வேற பொண்ணைக் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்றவங்ககிட்ட, என்னத்த சொல்லனும்னு எதிர்பார்க்குற?”

“அண்ணியோட வாழ நினைக்கிறத வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு, நீ செய்ய நினைச்சத செஞ்சுருக்கலாம், இப்போ பாரு நம்ம குடும்பத்து மேல மொத்த தப்பையும் சொல்லி, எங்கள குற்றவாளியா நிக்க வச்சு கேள்வி கேக்குற மாதிரி கொண்டு வந்து விட்டுட்டியே? இதுக்கு என்ன பதில் சொல்ல போறே?”

“நான் யாருக்கு என்னடா செஞ்சேன்? என் பொண்டாட்டி, பிள்ள வேணும்னு சொன்னேன், என் குடும்பத்த என் கூட அனுப்பிவைங்கனு அவங்க வீட்ல கெஞ்சி கேட்டேன்”

“அத தான், நம்ம வீட்டு பெரியவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்திருக்கலாம், சரி அதுக்குமேல கவுன்சிலிங் வர ஏன் போன?”

“அவங்க வீட்ல யாரும் என் பக்க நியாயத்த கேக்கல சின்னா!!, அதான் சட்டப்படி போயிட்டேன் இதுல என்ன தப்பு சொல்லு” என்று தம்பியிடம் பதில் சொல்லியவாறே, சிவாவை முறைக்கும் பார்வையை தொடர,

பதிலுக்கு அவனும் சளைக்காமல் முறைத்து விட்டு சின்னத்தம்பியிடம் “பஞ்சாயத்துக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் முரளி?” என கேட்டு வைக்க

“அரைமணி நேரத்துல எல்லோரும் வந்துருவாங்க சிவா… நீங்க உள்ளே வந்து உக்காருங்க”

“இல்ல, எல்லோரும் எப்போ வர்றாங்களோ அப்போ நான் வர்றேன் முரளி”

“நேத்து நைட் வந்ததுல இருந்து, நீங்க இந்த திண்ணையில உக்காந்து இருக்குறது, எங்க குடும்பத்த வேணும்னே அவமானபடுத்துற மாதிரி இருக்கு, தோப்பு வீட்டுக்கு வர சொன்னாலும் கேக்காம இதென்ன பிடிவாதம் சிவா?”

“இது பிடிவாதம் இல்ல முரளி, உங்க குடும்பத்து மேல அவ்வளவு வெறுப்பு. இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம், போய் ஆக வேண்டிய வேலைய பாருங்க” என சட்டமாய் மீண்டும் அந்த திண்ணையில் அமர்ந்து கொண்டு இருவரையும் உள்ளே அனுப்பினான்.

“படுபாவி எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு பழி வாங்குறானா இவன்? வெளியே உக்காந்து எங்க குடும்ப மானத்த கப்பலேத்தணும்னு கங்கணம் கட்டிட்டு உக்காந்துருக்கான்”  என மனதுக்குள் புகைந்து கொண்டே உள்ளே சென்றவன்,

“சிவா எப்படா வந்தாரு? இப்போ எதுக்காக வெளியே நின்னுட்டு இருக்காரு? பஞ்சாயத்துக்கு என்ன அவசியம்?” என மூச்சு விடாமல் கிரிதரன் கேட்க அவனை வெட்டவா, குத்தவா பார்வையை பார்த்து வைத்தான் சின்னத்தம்பி…

“செய்றதெல்லாம் செஞ்சுட்டு நல்லா கேக்குறண்ணா டீடைய்லு? நீ செஞ்ச வேலைக்கு உன்னை இன்னும் உசிரோட விட்டு வச்சுருக்காங்க பாரு, நெஜமாவே அவங்க பெரிய மனுசங்க தான்.”

“போதும்டா அவங்க புராணம், எப்ப வந்தான் என் மச்சான்காரன்?”

“நைட் 2 மணிக்கு வந்தாரு, ஏன் இவ்ளோ அவசரம்னு கேட்டதும் தான் அவருக்கிருந்த கோபத்தை எல்லாம் வார்த்தையாலயே, வஞ்சகம் இல்லாம வாளி, வாளியா எடுத்து ஊத்திட்டாரு”

“நல்ல அண்ணண்டா, என் பொண்டாட்டிக்கு”

“ஆமாண்ணா… நெஜமாவே அண்ணி குடுத்து வைச்சவங்க தான்”

“அப்போ நீ குடுத்து வைக்கலயாடா? அடேய் வெறுப்பேத்தாதே, மேட்டர் என்னனு சொல்லுடா”

“ம்ப்ச்… என்னத்த சொல்லச் சொல்ற? நீ செஞ்ச எல்லா விசயத்தையும் சொல்லி இப்போ பஞ்சாயத்த கூட்டுங்க, அதுக்கு அப்பறம் கவுன்சிலிங் போகலாம், உங்க பிள்ளைய வரச் சொல்லுங்கனு பிடிவாதமா நின்னுட்டார்”

“சரிடா, அதுக்காக அம்மாவுக்கு முடியலனாடா கால் பண்ணுவ? வேற ஐடியா எதுவுமே தோணலையா உனக்கு? பதறி அடிச்சு ஓடி வந்த எனக்கு தெரியும்டா, என்னோட கஷ்டம்”

“சாரிண்ணா நானும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன், இவர் பேசின பேச்சு அப்படி, எங்கள யோசிக்க விடல, இப்படி சொன்னா தான் நீ வருவேன்னு எனக்கு ஐடியா குடுத்ததே அவர் தான்”

“ஏன்டா அவர் வந்து ரெண்டு சத்தம் போட்டா, கூட நாலு சத்தம் போட்டு அனுப்பி வைக்காம இப்படி உக்கார வைப்பியா? அப்பா என்ன ஒண்ணும் சொல்லலையா?”

“என்ன சொல்லியிருக்கனும்னு சொல்ற? நாங்க எதாவது சொன்ன எங்க மேல தான் அது திரும்பும், அந்த நிலைமையில தான் இப்போ நாம இருக்கோம் சும்மா பேசி,  கடுப்ப கிளப்பாதே”

“எல்லாம் என் நேரம்டா, விஷயத்தை சொல்லு, எதுக்கு வெளியே உக்காந்திருக்காரு”

“நம்ம நேரம்னு சொல்லுண்ணா, பஞ்சாயத்து மூலமா தள்ளி வைச்சுருக்குனு பத்திரத்துல எழுதி குடுத்திருக்கோம்”

“நான் எங்கடா குடுத்தேன், நீ சொல்ற, நம்ம வீட்டு பெரியவங்க செஞ்ச வேல அது”

“முடிஞ்சதா பத்தி ஏன் இப்ப பேசுற? இனி நடக்க வேண்டியத பேசுண்ணா,  பத்திரத்த வச்சு தான் உன் மச்சான் பேசுறாரு,

என்னதான் சட்டத்துல இடம் இருந்தாலும், பஞ்சாயத்துல சொல்லி முடிச்ச தீர்ப்பு இது,

நாளைக்கு இத வச்சு திரும்பவும் பிரச்சனை வராதுனு என்ன நிச்சயம்?

திரும்பவும் கோர்ட்டு, பஞ்சாயத்துன்னு சொல்லி தள்ளி வைக்க உங்களுக்கு என்ன சொல்லியா தரணும்? இப்படி ஏகப்பட்ட கேள்வி கேட்டு, இப்ப அவர் முன்னாடி நாம தான் குற்றவாளியா நிக்கிறோம்…

அம்மா பயங்கர கோபத்துல இருக்காங்க, அப்பாக்கு பஞ்சாயத்துல என்ன பதில் சொல்றதுன்னு முழிச்சுகிட்டு உக்காந்திருக்காரு? இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியல…

சிவா ரொம்ப தீவிரமா இருக்காரு, என்ன பண்ண போறோம்னு தெரியல” என்று அவன் புலம்பலை முடிக்க, கிரிதரனை அடுத்து எதிர்கொண்டது மீனாட்சி அம்மாள்

“வா பெரிய தம்பி, ரொம்ப பெரிய வேலையெல்லாம் செய்ற போல? இங்கே உன்ன பெத்தவங்க உசுரோட தான் இருக்கோம்னு இப்போ தான் ஞாபகம் வந்துச்சா?”

“அம்மா கொஞ்சம் நிதானமா பேசும்மா, அண்ணன் இப்போ தான் வந்திருக்கு, நான் விவரம் சொல்லிட்டு இருக்கேன், நீ சாப்பிட ஏற்பாடு பண்ணும்மா” என்று சின்னத்தம்பி கூற

“நாங்க நிதானமா இருக்குற மாதிரியா இவன் காரியம் பண்ணிருக்கான்? போயும், போயும் ஒண்ணும் தெரியாத சின்ன பையனுக்கு பதில் சொல்ல முடியாத படி தலை குனிய வச்சுட்டானே?” என்று சிறியவனிடம் பேசியவர்

“போதுமா பெரிய தம்பி? நீ எங்களுக்கு எவ்ளோ நல்ல பேர் வாங்கி குடுத்துருக்கேனு உனக்கு தெரியுதா?

“உள்ளூருல ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானாம்”, அந்த கதையா தான் இருக்கு, நீ இப்போ செஞ்சு வச்சுருக்குற காரியம்.

எதுவா இருந்தாலும் இங்கே இருந்தே செஞ்சுருக்கணும்” என பெரியவனிடம் கேள்வி கேட்டு முடிக்க

“போதும்மா இனிமே என்னோட வாழ்க்கைக்கு யாரும் பேச வேணாம், நானே பேசிக்கிறேன்…” என தனது கோபத்தை அடக்கியபடியே, தாயின் மேலுள்ள தன் மனக்குறையை வார்த்தையால் காட்டாமல், செயலால் காட்ட எண்ணி தன் அறைக்குள் விரைந்தான்.

“ஒரு வார்த்தை நின்னு பேசுறது இல்ல, பதில் சொல்லாம போறதே இவனுக்கு பழக்கமாயிருச்சு, கொஞ்சமாவது காது கொடுத்தாச்சும் கேக்குறானா?” என்ற மீனாட்சியம்மாளின் அதட்டல் காற்றோடு போனது…

அறைக்குள் சென்றவனை தந்தை அழைக்க, தாயிடம் தான் சொன்ன பதிலையே அவருக்கும் கொடுத்து, வரவிருக்கும் பஞ்சாயத்தை எதிர்கொள்ள காத்திருந்தான் கிரிதரன்.

 

 

 

error: Content is protected !!