Poovanam15

பூவனம்—15

தாயாரின் மூளைச்சலவையில் சற்றே மனம் தடுமாறத் தான் செய்தது தனயனுக்கு… என்னதான் இருந்தாலும் தாய் என்று வரும்போது மனிதன் பகுத்து அறியும் உணர்வை சற்று மறந்து தான் போகிறான்.

விதி தனது பங்கை சிறப்பாக அரங்கேற்றியது… அன்னையின் பேச்சில், நெருப்பின் மீது நின்று கொண்டிருக்கும் பாவனையில், கிரிதரனின் உள்ளமும் கொதிநிலையை அடைய, அழைத்து விட்டான் தன் மாமனாரை அலைபேசியில்.

“அங்கே என்ன நடக்குது மாமா? எல்லோரும் சேர்ந்து என்ன குளறுபடி பண்ணி வச்சுருக்கீங்க? உங்க பொண்ணு என்ன பண்றா? நான் போன் பண்ணினாலும் எடுக்குறதே இல்ல? உங்க மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க?” என்று பொங்கியவனிடம்

“கொஞ்சம் அமைதியா பேசுங்க மாப்ளே… மொதல்ல என்ன நடந்ததுன்னு கேளுங்க, அப்புறமா உங்க கோபத்த எங்க மேல காட்டலாம்” என கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியுடன் கூற

“என்ன நடந்தாலும் நீங்க செஞ்சது சரியில்ல, எப்படி எங்க வீட்டுல சொல்லாம ரம்யாவை உங்க கூட கூட்டிகிட்டு போகலாம்? இது எவ்ளோ பெரிய தலைகுனிவு தெரியுமா எங்க வீட்டுக்கு” என்றே கோபப்பட்டவனிடம்

“அப்போ அங்கே என்ன நடந்தாலும் வேடிக்கை பார்த்துகிட்டு சும்மா இருக்கணுமா? உங்க பொண்டாட்டி புள்ள எப்படி இருக்காங்கனு தெரிஞ்சுகிட்டிங்களா மொதல்ல? என் பொண்ணு என்ன நிலமையில நான் கூட்டிட்டு வந்தேன்னு உங்களுக்கு தெரியுமா?” என சீற ஆரம்பித்தார் பெண்ணை பெற்றவர்.

“அது தெரிஞ்சதால தான் சொல்றேன்… அந்த நிலைமையில எதுக்கு கூட்டிட்டு போகணும், அவள ஏன் கஷ்டபடுத்தனும்? அங்கேயே வச்சு பார்த்துருந்தா இவ்ளோ பேச்சு இல்லையே?” என்றவனிடம் கோபம் குறையாமல்

“எப்படி இன்னும் நாலு பேர் வந்து பொல்லாப்பு பேசுவாங்க, அத எல்லாம் கேட்டுகிட்டு இருக்க சொல்றீங்களா? என் பொண்ணுக்கு வேண்டிய அமைதி அங்கே இருக்குற வரைக்கும் கிடைக்காது, அதனாலே தான் கூட்டிட்டு வந்தேன். இதுக்கு மேல என்கிட்ட விளக்கம் கேக்காதீங்க…

உங்க வீட்டுல எப்படி சொன்னாங்களோ அது எனக்கு தெரியாது, ஆனா அங்கே இருந்திருந்தா, என் பொண்ண அவங்க நிம்மதியா இருக்க விட்ருக்க மாட்டாங்கனு தான் நான் சொல்வேன்… அவ உடம்பும் மனசும் தேறி வரணும், அதுக்கு என்ன செய்யணுமோ அத தான் செஞ்சேன்”

“உங்க அம்மாகிட்ட கேட்டிருந்தா, ஒரெடியா வேணாம்னு சொல்லி எல்ரோரையும் கட்டி போட்ருவாங்க. போதும் ஒரு தடவை அவங்க சொல் பேச்சு கேட்டு நாங்க பட்டது. இனிமேலயும் சொல்லடி பட்றதுக்கு நாங்க தயார இல்ல” என்று பொரிந்து தள்ளி விட்டார்… அவர் வலி அவருக்கு…

மத்தளத்தின் இரண்டு பக்கமும் அடி வாங்குவது போல் தான் கிரியின் நிலைமை. ஒரு பக்கம் தன் அன்னையின் பேச்சை வாங்கிக் கட்டிகொண்டவன், இப்பொழுது தன் மாமனாரின் முறையாய் கேட்டுக் கொண்டான்.

“அப்போ எல்லா தப்பும் எங்க அம்மா மேல தான்னு சொல்றீங்களா? நீங்க செஞ்சது சரியா?” தன் அன்னையை பற்றி குறை கூறியதும் கிரிதரன் கோபத்துடன் எகிறிட

“நான் யார் மேலயும் தப்பு சொல்லலே, அதே போல எனக்கு சரின்னு பட்டத தான் நான் செஞ்சுருக்கேன். நீங்க எப்போ இங்கே வர்றீங்களோ, அப்போ என் பொண்ண கொண்டு வந்து விட்றேன், அது வரைக்கும் என்கூடயே இருக்கட்டும்” என்று பேச்சை முடித்து வைத்தார்.

ஏற்கனவே கோபத்துடன் இருந்தவனுக்கு தூபம் போட்டது அவரின் பேச்சு.

“அப்போ நான் மட்டும் தான் வேணும், என்னை சேர்ந்தவங்க வேண்டாம் அப்படித்தானே? நான் என்ன ஆகாசத்துல இருந்து குதிச்சவனா? யாருமே இல்லாம தனியா வந்து உங்க பொண்ணு கூட குடும்பம் நடத்த.

அதெப்படி அவ்ளோ ஈஸியா நீங்க சொல்லறீங்க? எந்த காலத்திலேயும் எங்க வீட்ட விட்டு, நான் வருவேன்னு மட்டும் கனவு காணாதீங்க. நீங்க ஆரம்பிச்ச இந்த பிரச்சனைய நீங்களே பேசி சுமூகமாக முடிக்க பாருங்க, நான் இடையிலே வந்து பேச முடியாது.”

“யாரையும் விட்டுக் கொடுத்தெல்லாம் என்னால இருக்க முடியாது, இந்த பிரச்சனையால வேற எதாவது நடந்தா அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்” என்று பொங்கியவன், சற்றே பூடகமாக பேசி முடித்தான்…

ஒரு புரியாத குழப்பம் சண்முகம் மனதில் வந்தமர, அடுத்து என்ன செய்வது என்று தெரியாத அந்த நேரத்தில் தான், கிராமத்தில் இருந்து பஞ்சாயத்தார் அவர் வீட்டினில் வந்தமர்ந்தனர்…

பிரச்சனையின் தீவிரத்தை அப்போது தான் உணர்ந்தார் சண்முகம். விஷயம் இந்த அளவிற்கு முற்றிவிட்டது என்று  அவர் எதிர் பார்த்திருக்கவில்லை.

வந்தவர்கள் படித்ததை ஒப்புவிக்கும் மாணவர்களை போல, கணவன் மனைவியை நிரந்தமாய் பிரித்து விட பேசினர். வந்திருந்த நால்வரில், ஒருவர் மாற்றி ஒருவர் பேச ஆரம்பித்தனர்…

“இங்கே பாருங்க சண்முகம்… ஊர்லயே பெரிய குடும்பம் எங்க ஐயா சுப்பையா குடும்பம் தான், அவங்க வீட்டுக்கே வாழ வந்த பொண்ணு, இப்படி அவங்கள மதிக்காம பேசினது அவ்ளோ சரியா படல”

“இங்கே எப்படியோ, எங்க கிராமத்துல பெரியவங்கள மதிக்காம இப்படி பேசினதுக்கு ஊர்கூடி மன்னிப்பு கேக்க சொல்லுவோம்… உங்க சம்மந்தி அம்மா அந்த பேச்ச கூட மறந்திட்டாங்க, அவங்களுக்கு இப்போ நினைப்பெல்லாம் இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்துக்குற பொண்ணு நாளைக்கு எப்படி குடும்பத்த நடத்தும்?”

“இப்பவே இவ்ளோ கோபமும், ஆவேசமும் உங்க பொண்ணுக்கு இருக்கே? பின்னாடி போகப்போக அதிகமாகாதுங்கிறது என்ன நிச்சயம்?

அதனாலே இந்த பொண்ணு மேலும், மேலும் இந்த குடும்பத்துல இருந்து தன்னை கஷ்டபடுத்திக்க வேணாம்ன்னு நினைச்சு தான் தள்ளி வைக்குறதா முடிவு பண்ணிருக்கோம்… அது தான் உங்க பொண்ணுக்கும், எங்க ஐயா அவுக குடும்பத்துக்கும் நல்லது.”

“மனசு ஒப்பாம குடும்பத்துல ஒட்டிகிட்டு இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு எங்களுக்கும் தெரியும், அத எல்லாம் மனசுல வச்சுகிட்டு தான் இந்த முடிவு எடுத்துருக்கோம்…

அடுத்த வாரம் எங்க ஊர்ல இருந்து பத்திரம் கொண்டு வருவாங்க, படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போட்டு குடுங்க” என்று தங்களது பொன்னான தீர்ப்பை உரைத்தனர்…

அடங்காத கோபத்தில் வெகுண்டெழுந்து விட்டார் சண்முகம்.

“ஏன்யா இப்படி எல்லோரும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம நடந்துகிறீங்க? யாருய்யா நீங்க எல்லாம்? என்ன நடந்துச்சுன்னு விசாரிக்காம அங்கே என்ன சொன்னாங்களோ, அப்படியே இங்கே வந்து ஒப்பிக்கிற நீங்க எல்லாம் பெரிய மனுசங்களா?”

“இதுக்கு சம்மதிக்கலன்னா என்னய்யா பண்ணுவீங்க? எங்களுக்கும் சட்டம் தெரியும். புருஷன் பொண்டாட்டி நடுவுல நீங்க ஏன் வர்றீங்க?

என் மாப்பிள்ளை வந்து சொல்லட்டும், அப்ப நான் பதில் சொல்றேன். உங்க கிட்ட எந்த விதமான பேச்சும் எனக்கு தேவையில்ல. ஒழுங்கா இடத்த காலி பண்ணிடுங்க” என்று கோபமும் ஆக்ரோஷமும் சேர்ந்து வந்தர்வர்களை விரட்டி விட, அதுவும் சேர்ந்து தூபம் போட்டது கிராமத்து மனிதர்களுக்கு….

இந்த அவமதிப்பை அவ்வளவு லேசில் விடுவதாய் இல்லை கிரியின் குடும்பத்தார். இப்பொழுது கிரியின் தந்தையும் சேர்ந்து கொண்டார்,

அப்படி என்ன வீராப்பு? பெண்ணை பெற்றவர் ஒரு முறை வந்து சமாதனம் பேசி, மகளின் நல்வாழ்விற்கு வழிவகை செய்யாமல், பேச சென்ற ஊர் பெரியவர்களையும் விரட்டி அடித்தது, கிராமத்து பெரிய மனிதருக்கு சற்றும் பிடிக்கவில்லை. மனைவியின் ஏச்சுபாச்சான பேச்சும் சேர்ந்து கடுப்பினை கிளப்ப, தீர்மானித்து விட்டார் அவர்களின் விவாகரத்திற்கு…..

மகனின் மறுப்பு, தந்தையிடம் செல்லாக்காசாகியது. “உன் பொஞ்சாதிக்கு உடம்பு மனசும் சுகமில்ல, அதான் அப்படி பேசிட்டானு சொன்னே சரி. இப்போ போனவங்களுக்கு என்ன மரியாதை குடுத்தாங்க சொல்லுப்பா? இவங்க செஞ்ச காரியம் ஊர் முன்னாடி தலைகுனிஞ்சதுக்கு சமானாமாகிப் போச்சு”…

“எங்கள மனசாட்சி இல்லாம பேசுறோம்னு சொல்லற இவங்க என்ன பண்ணறாங்க? இவங்க பொண்ணு வாழ்க்கை மேல அக்கறை இருந்தா வந்து பேசி இருக்கனுமா இல்லையா?”

“அத விட்டுட்டு என் மாப்ளே வரட்டும், அவர்கிட்டே பேசுறேன்னு சொல்லறாருன்னா என்ன அர்த்தம்? உன்னை பெத்தவங்கள என்ன மதிப்பில அவங்க வச்சுருக்காங்க? அப்போ நாம எல்லாம் தேவை இல்லையா? அவங்களுக்கு,

மாப்பிள்ளை நீ மட்டும் இருந்தா போதுமா? உங்க அம்மா சொன்னத தான் நானும் சொல்றேன் அந்த பொண்ணா? இல்ல நாங்களா? முடிவு உன் கையில”… என்று தன் பிடித்தமின்மையாய் விளக்கினார்…

ஒரு தடவை நேரடியாய் மனைவியுடன் பேசிவிட்டால் இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்துவிடும் என்று பேச முயற்சி செய்ய அதன் பலன் என்னமோ பூஜ்யம் தான்…

பிள்ளை பிறந்த பதினைந்து நாட்கள் கழிந்த நிலையில் வந்த கணவனின் அழைப்பு, ரம்யாவின் மனவாட்டத்தை போக்குவதற்க்கு பதிலாக பலவிதசங்கடமான பேச்சுக்களுக்கு வலி வகுத்தது… ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருந்தவள்… குழப்பமான மனநிலையுடன் தான் பேச ஆரம்பித்தாள்…

“ஹலோ ரம்யா… எப்படி இருக்கே?”

“இருக்கேன்”…

“ஏன் இப்டி சொல்றே?… பேபி எப்படி இருக்கா?

“நல்லா இருக்கா”…

“இப்ப மூளிச்சுருக்காளா?”…

“இல்ல தூங்குறா”…

“ஒரு போட்டோ எடுத்து அனுப்புறியா?… பொறந்ததும் பார்த்தது, அதுக்கப்புறம் பாக்க முடியல…”

“இத்தன நாள் வரைக்கும் என்ன பண்ணின கிரி? இப்ப மட்டும் என்ன குழந்தய பத்தி விசாரிக்கிற”

“நான் போன் பண்ணினேன்… நீ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிறேன்னு சொன்னாங்க… அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான்டி அமைதியா இருந்தேன்”…

“ஒஹ்… அந்த அளவுக்கு எங்க மேல அக்கறை இருக்கா உனக்கு?”

“ஏன் ரம்யா இவ்ளோ விரக்தியா பேசுறா? நான் அக்கறை படாம வேற யார் படுவா?…”

“இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ ரம்யா… நான் சீக்கிரம் திரும்பி வர ட்ரை பண்றேன்… நிச்சயமா நாம சந்தோஷமா இருப்போம்… கவலைப்படாதே…”

“எப்படி உங்க அம்மா பேச்ச கேட்டுகிட்டு சந்தோஷமா இருந்துறலாமா கிரி? அது முடியுமா?…”

“கொஞ்சம் விட்டு குடுத்து போ ரம்யா… உன்கிட்ட நான் முன்னாடியே சொல்லிருக்கேன், அவங்க கிராமத்து மனுசங்க, அவங்க பழக்க வழக்கம் வேற… நாம தான் அனுசரிச்சு போகணும்னு, சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா” என பற்ற வைக்க, தீ மூண்டது தானாய்…

“நம்ம குழந்தைய பத்தி பேசுறாங்க கிரி… அத கேட்டுகிட்டு சும்மா இருக்க சொல்றியா?

இல்ல எங்க அம்மாக்கு கொஞ்சமும் மரியாதை குடுக்கமா எடுத்தெறிஞ்சு பேசுறதயும், எனக்கு செஞ்சத எல்லாம் குத்திக்காட்டி பேசுறதையும் கேட்டுட்டு, பதில் சொல்லாம இருக்க சொல்றியா? எத நான் விட்டுக்குடுக்கணும்னு சொல்ற கிரி” என்று பொங்கியவள்..

“உங்க அம்மாக்கு நீ எப்படியோ? அப்படி தான் எனக்கு என் பிள்ளை”

“உனக்கு, உன் அம்மா மேல எவ்ளோ பாசம் இருக்கோ… அதே மாதிரி தான் எனக்கும் எங்க அம்மா மேல இருக்கு”

“உங்க அம்மா தான் என்னை கூட்டிட்டு போனாங்களே, தவிர நானா அந்த வீட்டு வாசப்படிய மிதிக்கலா…

எங்க வீட்டுல வந்து கேட்டப்போ கூட என்னை அனுப்ப சம்மதிக்கல… இதுக்கெல்லாம் ஒரு பதில் சொல்லு கிரி… தூரமா நீ இருக்குறதால உனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லனு சொன்னா நான் ஏத்துக்க மாட்டேன்”

படபடப்புடன் மனைவி பேசிட, அதே படபடப்பு குறையாமல் கணவனும் தன் பங்கை வார்த்தையால் கொட்டினான்.

“இப்படியே ஆளாளுக்கு உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு, இப்போ என் தலைய உருட்டுங்க… இவ்ளோ சொல்ற நீ அன்னைக்கே எங்க வீட்டுக்கு வரலனு தைரியமா சொல்ல வேண்டியது தானே”

“சாப்பாடு சரியில்லனா, நீயா கூட செஞ்சு சாப்பிடுருக்கலாமே ரமி, உன்னை யாரு அங்கே என்ன சொல்ல போறா? உன்னோட வீடா இருந்தா நீ செஞ்சுறுக்க மாட்டியா?”

“எல்லாத்தையும் மனசுல போட்டு அடைச்சுக்கிட்டு இருந்ததால தானே உனக்கு இன்னைக்கி இந்த நிலைமை. எத்தனயோ தடவ சொல்லிட்டேன் உன்கிட்ட, எதுவா இருந்தாலும் மனசு விட்டு பேசக் கத்துக்கனு… கேட்டியாடி நீ?  

நான் சொன்னத கேட்டிருந்தா இன்னைக்கு இத்தன பிரச்சனை வந்திருக்காது ரம்யா” என்று அவனும் பல்லைக் கடித்திட

“அப்போ நான் தான் சரியில்லைனு சொல்றியா? எங்க வீட்டுல பேசுனது தான் தப்புனு சொல்றியா?…

நீதானே… அம்மா என்ன சொன்னாலும் கொஞ்சம் அனுசரிச்சு போக சொன்னே, இப்போ என்ன புதுசா நான் பேசிருக்கணும்னு சொல்றே… வேலைக்கு ஒரு பேச்சு பேசுற கிரி” என்றவளிடம்

“கொஞ்சம் பொறு ரம்யா… நான் யாரையும் தப்பு சொல்லல… அம்மாவ கொஞ்சம் அனுசரிச்சு நடக்க தான் சொன்னேன் தான், அதுக்காக உன்னோட விருப்பத்தை ஒதுக்கி வச்சு செய்ய சொல்லலம்மா.

“உன்னோட பேச்சு எப்போவும், என்கிட்ட கூட ஒரு அளவோட தானேடி இருந்துருக்கு… நான் அத சொன்னேன்…

உனக்கு பேச தெரியலனு சொல்லல.. எந்த இடத்துல பேசனுமோ அங்கே பேச மாட்டேங்குற நீ, நான் அத தான் சொல்றேன்…

இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போகல… ஒரு தடவை போன் பண்ணி எங்க வீட்டுல பேசு ரம்யா… நான் சொல்லி வைக்குறேன்”… என அவன் பழைய பல்லவியை ஆரம்பிக்கவும்..

“திருந்த மாட்டடா நீ… எனக்கு என்ன ஆனாலும் உன்னோட வீடு, உன்னோட சொந்த பந்தம் தான் முக்கியம்…

எங்க மேல எல்லாம் கொஞ்சம் கூட பாசம் இல்ல, நீ சொன்னத என்னால செய்ய முடியாது, இனிமே என்கிட்ட பேசாதே”

என்று வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஆக்ரோஷம் வந்தவளாய் கைபேசியிலேயே கத்த ஆரம்பித்தாள்…

பின்பு அவளை சமாதானப்படுத்த முயல அது முடியாமால், அவளும் மூர்ச்சையாகி விட, அவள் தந்தையிடம் நன்றாய் வாங்கி கட்டிகொண்டான்..

“என்னையா பாவம் பண்ணினோம் நாங்க… இப்படி என் பொண்ண கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விடாம பேசியே கொல்றீங்க… உங்களுக்கு வேண்டியது அந்த விவாகரத்து தானே, அந்த கருமத்துக்கு ஒத்துக்குறோம்”

“அப்புறம் எங்க முன்னாடி வந்து நின்னா, நான் மனுசனா இருக்க மாட்டேன். இதுவே கடைசியா இருக்கட்டும், நீ என் பொண்ணு கூட பேசுறது” என்று அவருக்கு தெரிந்த வகையில் பேசிவிட்டு, கைபேசியில் தன் பெண்ணின் வாழ்கை திசையை மாற்றி விட்டார்…

அதன் பின்பு வேலைகள் வேகமாக தான் நடந்தன என்று சொல்ல வேண்டும்… ஆள் நேரில் வரத் தோது இல்லை என்றாலும், காணொளி கலந்தாய்வு (வீடியோ கான்ப்ரென்சிங்க்) மூலம் வழக்கு நடக்க, கையெழுத்திற்க்காக இருவரின் இருப்பிடம் தேடியே வழக்கு பத்திரங்கள் வர, இருந்த இடத்தில் இருந்து கொண்டே விவாகரத்து பெறுவது சாத்தியமானது….

ஒருமித்த கருத்துடன் கூடிய விவாகரத்து தற்காலிக நீதிமன்ற பிரிவின் கீழ் மிக விரைவில் பெறப்பட்டது….

வீணானா பேச்சும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும், குடும்பத்தாரின் தலையீடுகளும், தம்பதிகளுக்கிடையே நுழைந்து, அழகான சிறிய குடும்பத்தை பிரித்து பார்த்து புண்ணியம் தேடிக்கொண்டது…

 

 

 

 

 

ஒருமித்த விவாகரத்து :

கணவனும் மனைவியும் தொடர்ந்து  வாழமுடியாமல் விவாகரத்து செய்ய  ஒருமித்து முடிவெடுத்தால்  விரைவாக விவாகரத்து பெறலாம்.

ஒருமித்த விவாகரத்து முறையில் இருவரும் ஒரே வக்கீலை வைக்கலாம்..

வக்கீல் கணவன், மனைவி இருவரையும்  சந்தித்து அவர்களின்  சொத்து, வங்கி கடன், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை , அவர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு போன்றவற்றை பற்றி கலந்தாலோசித்து ஒப்பந்தம் தயார் செய்வார். இந்த ஒப்பந்தத்தில் கணவன் மனைவி இருவரும் கையெழுத்திட்ட பின் வக்கீல், ஒப்பந்தத்தை நீதிமன்றத்திற்க்கு அனுப்புவார்.

தற்காலிக நீதிமன்ற பிரிவு (Judicia Separation)

நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு குடும்ப சிக்கல்கள் தலைதூக்கும் போது, ‘கொஞ்ச நாள் விலகியிருந்தால் எல்லாம் சரியாயிடும்’ என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

 

திருமண உறவு முறையை முறித்துக் கொள்ளும் எண்ணமில்லாமலும், அதே நேரத்தில் சேர்ந்து வாழ்வதும் சரிவராது என்ற நிலை இருக்கும் பட்சத்தில் Judicia Separation என்று சொல்லக்கூடிய தற்காலிக நீதிமன்ற பிரிவு கோரி மனு தாக்கல் செய்ய சட்டம் வழிவகை செய்துள்ளது..

 

திருமண உறவுகளில் சில நேரங்களில் மனம் கசந்து விட வாய்ப்பு ஏற்படுகிறபோது, அந்த உறவை உதறித்தள்ள எத்தனிக்காமல் சிறிது காலம் சட்டப்படி பிரிந்திருக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டால் பிரச்னைகள் சுமுகமாக முடியலாம்.

திருமண உறவை எந்தவித சிக்கலும் இல்லாமல் மீட்டெடுக்கக்கூடிய வாய்ப்பு, மேற்கூறிய தற்காலிக நீதிமன்ற பிரிவு மனு தாக்கல் செய்வதன் மூலம் ஏற்படுகிறது.

எந்தெந்த காரணங்களுக்காக சட்டப்படி விவாகரத்து கோருகிறோமோ, அதே காரணங்களுக்காக தற்காலிக நீதிமன்ற பிரிவு கோருவதற்கும் அனைத்துச் சட்டங்களும் வழிவகை செய்துள்ளன.

குடும்ப உறவில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு விவாகரத்துதான் ஒரே தீர்வு என்று எண்ணாமல் தற்காலிக நீதிமன்ற பிரிவு கோரி மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் திருமண உறவு நிலைக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

விவாகரத்து என்பது பல பிரச்னைகளுக்கு முடிவு என்று எண்ணுவது அறியாமை. விவாகரத்து என்பது பாதிக்கப்பட்ட நபரை மட்டுமின்றி அவர்களது குழந்தைகள், அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டத்தையே பாதிக்கக்கூடிய ஒன்று.

அதனால் குடும்ப உறவினை பலப்படுத்த என்னென்ன வழிவகைகள் உள்ளனவோ, அவற்றை சட்டப்படியும் தர்மப்படியும் கையாண்டு, அவை தோல்வியடையும் பட்சத்தில் தான், விவாகரத்து பற்றி யோசிக்க வேண்டும்.

எப்போதுமே வேகத்திலும், கோபத்திலும் எடுக்கப்படுகின்ற முடிவுகள் தவறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குடும்ப உறவை கட்டிக்காக்க விரும்புபவர்களுக்கு நிதானம் அவசியம். குடும்ப நல நீதிமன்றங்கள் வெறும் விவாகரத்து நீதிமன்றங்கள் மட்டும் அல்ல என்பதை அனைவரும் புரிந்து செயல்படுவது அவசியம். உறவுகளைக் கட்டிக் காக்கவும் சட்டம் நமக்கு உதவக் காத்திருக்கிறது …

மேற்கூறிய கருத்துக்கள் யாவும் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை… இப்படிபட்ட பல வழக்குகள் நடைபெற்றதற்க்கான சான்றுகள் இன்றும் இணையத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்….