poovanam8

poovanam8

பூவனம்-8

அரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரியும் சண்முகம், அவரின் மனைவி
செல்விக்கு சென்னை நகரில் வாசம். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அந்த
குடும்பத்தில் ரம்யா கடைக்குட்டியாய், தன் அண்ணன் சிவக்குமாருக்கு
தங்கையாய் பிறந்தவள்.

அன்பான குடும்பத்தில் அறிவான, அமைதியான குழந்தையாய் வளர்ந்தவள். தனக்கான
உலகில் பட்டாம்பூச்சியாய் சிறகடிப்பவள்.

பெண் பிள்ளைகள் வார்த்தைக்கு வார்த்தை பேசிக்கொண்டிருக்கும் இந்த
காலத்தில் மிகவும் அமைதியாய் தான் இருக்குமிடம் தெரியாமல் இருப்பவள்.

பள்ளி இறுதியாண்டில் எடுத்த நன்மதிப்பெண்களால் நல்லதொரு பொறியியல்
கல்லூரியில் கணினி துறையில் படிக்கும் வாய்ப்பு தானாய் கிட்டியது.

நல்ல முறையில் படிப்பவள், மேலும் கண்ணும் கருத்துமாய் படிக்க
ஆரம்பித்தாள். கல்லூரி வாழ்க்கை அவளின் வாய்பூட்டை சற்றே அகற்றினாலும்,
புதிய மனிதர்களை கண்டால் தனக்குள்ளே ஒடுங்கும் சுபாவத்தை மாற்றவில்லை.

ரம்யாவின் மூன்றாம் வருட தொடக்கத்தில் முதுநிலை பொறியியல் படிக்க அதே
கல்லூரிக்கு வந்து சேர்ந்தான் கிரிதரன்.

திருநெல்வேலியில் உள்ள மாங்குடி கிராமத்தில் பாரம்பரியமிக்க வசதியான
விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். வேகத்தோடு விவேகமும் சேர எதையும்
சாதிக்கும் மனஉறுதி கொண்டவன்.

தந்தை சுப்பையாவும், தாய் மீனாட்சியும் விவசாயத்தை கவனித்திட, கிரிதரன்
முதுநிலை கணிணிப் பொறியியலும், அவன் தம்பி முரளிதரன் வேளாண்மையையும்
விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

அந்த கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலேயே கிரிதரனின் கண்ணில் விழுந்தவள்
தான் ரம்யா. கண்களில் விழுந்தவள் அவனின் கருத்தையும் கவர்ந்தாள்.

தன் துறை சார்ந்த வகுப்பை தேடி கொண்டிருந்தவன் அவளிடம் வழி கேட்க,
பெண்ணவளின் முதற்பார்வையில் வீழ்ந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும்.

அவள் சொன்ன வழித்தடத்தை கருத்தில் கொள்ளாது இமைக்காமல் பார்த்தவனை கண்டு
அந்த பெண் தான் அஞ்சி ஓட வேண்டியதாய் போயிற்று.

‘என்னை பார்த்து ஏன் இப்படி பே… பே…. பே..ன்னு முழிக்கிராங்கனு
தெரியலையே, அவ்ளோ பயங்கரமாவ இருக்கு என்னோட முஞ்சி.

ரம்யாகுட்டி உன்னை பார்த்தும் பயப்பட ஒரு ஆள் இருக்கு. எதுக்கும்
கன்போர்ம் பண்ணிக்குவோம். இவர் என்னை பார்த்து ஏன் இப்படி நிக்கிறாருன்னு
கேட்ருவோம்’ என்று மனதிற்குள் பேசியபடியே

“அண்ணா ஏன் இப்படி நிக்கிறீங்க? நான் சொன்னது உங்களுக்கு புரியலையா?
நீங்க தமிழ் தானே?” என்றவளை மனதிற்குள் முறைத்துகொண்டே

“என்ன? என்ன சொல்லி கூப்பிட்டே? அண்ணாவா? நான் என்ன உனக்கு அண்ணாவா? நா
என்ன வயசானவனாவா தெரியுறேன்…

இத பாரும்மா… இங்கே நான் படிக்க வந்துருக்கேன், அண்ணா, தங்கச்சின்னு
பாசபயிர் வளர்க்க வரலே புரியுதா? சோ நாம பிரெண்ட்ஸ். எப்போ
கூப்பிடனும்னாலும் கிரினு கூப்பிடு, இல்லை உன்னோட பிரெண்ட்ஸ எப்படி
கூப்பிடுவியோ அப்படியே கூப்பிடு.

ஆனா இந்த அண்ணா… சன்னா… எல்லாம் வேணாம் சரியா. எங்கே இப்ப பேர்
சொல்லி கூப்பிடு பார்ப்போம்.” என்றவனை ஒரு மார்க்கமாய் பார்த்தவள்

‘அடியாத்தீ! இது நட் போல்ட் எல்லாம் கழன்ட கேசு போல, சும்மா ஒரு
பேச்சுக்கு அண்ணானு கூப்பிட்டா, அத வச்சே பாடம் நடத்திகிட்டு இருக்கு.
இன்னிக்கு காலண்டர் ராசி பலன்ல தொல்லைன்னு போட்டிருந்தப்பவே நெனச்சேன்…
இப்பிடி எங்கயாச்சும் சிக்குவோம்னு. தனியா வேற வந்து மாட்டிகிட்டேனே
நான். ஐயோ இப்போ என்ன பண்ண? பேசாம இவன் பேர் சொல்லிட்டு எஸ்
ஆகவேண்டியதுதான்’ மனதோடு பேசியவள்

“சரி கிரிண்ணா” சொல்லி ஓடி விட்டாள்…

“என்னாது.. அண்ணாவா? திரும்பவுமா?” என்று வாய் திறக்க வந்தவன், அவளின்
ஓட்டத்தை பார்த்து “கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ? அது சரி பர்ஸ்ட் டைம்
பாக்குறப்பவே இப்படி பேசினா அவ வேற எப்படி நினைப்பா?

இங்க தானே இருக்கா பார்த்துக்குறேன்” என்றவனை அவன் மனசாட்சி “என்னடா
ஆச்சு உனக்கு? இவள பார்த்து இப்படி வழிய ஆரம்பிச்சிட்டியே?” என்ற
எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் வகுப்பை அடைந்தான்.

முதல் சந்திப்பிலேயே ஏதோ ஓர் இனம்புரியாத சந்தோச உணர்வும், தன் மனதை
தாக்க, உடலெங்கும் ஒரு உற்சாக அலை பரவ, அந்த உணர்வு ஒவ்வொரு முறை
பார்க்கும் பொழுதும் கூடியதே தவிர குறையவில்லை,

மனங்கவர்ந்தவளின் அழகும் பேச்சும் அவன் இதயத்தையும், கண்களையும் உறங்க விடவில்லை.

நாளுக்குநாள் அவளின் நினைவு விருட்சமாய் வளர்ந்து அவன் மனதை கொள்ளை
கொண்டு போக, தன் மனதில் அவளுக்கு தனியிடம் கொடுத்து ,தன் வாழ்க்கையின்
சரிபாதி அவள் தான் என்று முடிவே செய்து விட்டான்.

நாட்கள் அதன் போக்கில் நகர, இருவரும் பேசிக்கொள்ளா விட்டாலும்,
பார்க்கும் பார்வையில் ஒரு வித வித்தியாசம் இருவரிடையே வந்திருந்தது.

அவன் கனிவுடன் பார்க்கும் பார்வைக்கு பரிசாய், அவளின் முறைக்கும்
பார்வையே கிடைக்கும். அவனின் நேசப்பர்வைக்கு இன்னும் அவளுக்கு
வித்தியாசம் தெரியவில்லை.

அன்று ரம்யாவின் செய்முறை வகுப்பில் கணினியுடன் போராடிக் கொண்டிருந்தாள்.
எங்கே தவறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அனைவருக்கும் கொடுத்த நேரம் முடிந்து விடவே, அதிகப்படியாய் ஐந்து நிமிடம்
எடுத்துகொண்டு, முடிப்பதற்காய் திணறிக் கொண்டிருந்தவளின் முன்பு கிரிதரன்
வந்து நின்றான்.

“இன்னும் என்ன பண்ணிகிட்ருக்கே? நெக்ஸ்ட் கிளாஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க,
எங்க டீம் தான் செய்யப்போறோம். அங்கே உனக்காக உன்னோட பிரின்ட்ஸ்
வெயிட்டிங்… சீக்கிரம் முடி“ என்று துரிதப்படுத்தியவனிடம்..

“எங்கே மிஸ்டேக்னு தெரிய மாட்டேங்குதுண்ணா… ரொம்ப நேரமா மண்டைய போட்டு
குடைஞ்சுகிட்டு இருக்கேன், ப்ரோக்ராம் ரன் ஆக மாட்டேங்குது, கொஞ்சம்
ஹெல்ப் பண்றீங்களாண்ணா ப்ளீஸ்…“

வார்த்தைக்கு வார்த்தை அவளின் “அண்ணா” அழைப்பில் உஷ்ணமானவன் “இந்த
ஜென்மத்தில உனக்கு இந்த ப்ரோக்ராம் சரியாகாது” கடுப்புடன் சாபமிட்டான்.

“அய்யோயோ! இவன் தான் மண்ட கழன்ட கேசு, அரலூசேச்சே, “அண்ணா”ன்னு
கூப்பிட்டா ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிப்பானே! தெரியாத்தனமா இவன்
கிட்டேயே ஹெல்ப் கேட்ருக்கியே, உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லடி ரம்யா…
ஆனா இப்போ இத முடிச்சாகனுமே என்ன செய்ய?” என நினைத்தவாறு தன்னை
முறைத்தவனை பார்த்து

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி எல்லாம் சொல்றீங்க… உங்களுக்கு
தெரியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே.

எனக்கு சரியாகாதுன்னு எப்படி சொல்லலாம்? உங்கள போய் அண்ணானு கூப்பிட்டேன்
பாருங்க, என்னை சொல்லணும்” சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டவள்
தொடர்ச்சியாக

“டவுட் இல்ல… அரலூசு, பைத்தியமா மாறிகிட்டே வருது போல” என்று
மனதிற்குள் சொல்லிக்கொள்வதாய் நினைத்து வெளியே முணுமுணுத்து விட்டாள்.

“என்னது…? என்ன சொன்ன? நான் அரலூசா? பைத்தியமா?“

“பயபுள்ள எப்படியெல்லாம் உண்மை பேசுது” இதை மனதில் மட்டுமே சொல்லிக் கொண்டாள்.

“இல்ல என் கொலுசு லூசா இருக்குனு சொன்னேன், அதனால எனக்கு பைத்தியம்
பிடிச்சிரும்னு சொன்னேன்”

“நல்லா மாத்துறம்மா பேச்ச…”

“உங்களுக்கு இப்ப என்ன வேணும்?”

“நான் உன்கிட்ட என்ன சொல்லி கூப்பிட சொன்னேன்? அத விட்டுட்டு வேற எல்லா
பேரும் சொல்லி கூப்பிட்றே.

உனக்கெல்லாம் எந்த காலத்திலேயும் ஹெல்ப் பண்ண கூடாது. என்னைய பார்த்து
என்ன வார்த்தை சொல்லிட்டே… உன்னை எல்லாம் திருத்த முடியாது” சொல்லி
திரும்பிச் சென்றவனை கைபிடித்து இழுத்து நிற்க வைத்து விட்டாள்…

“ப்ளீஸ்… ப்ளீஸ்… சாரி கிரி… இனிமே உங்கள சேச்சே… உன்ன பேர்
சொல்லியே கூப்பிட்றேன்… இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிரு, இத மட்டும்
சரி பண்ணி குடு, ப்ளீஸ்” கண்களை சுருக்கி கெஞ்சிக் கேட்டவளை
தவிர்த்திடவும் அவனுக்கு மனம் வரவில்லை.

அவள் கெஞ்சல் பார்வையில் மனம் சொக்கிப் போனாலும், வெளியே காட்டாமால்
“ம்ம்ம்ம்… போதும் ரொம்பவும் கெஞ்சாதே, பாக்க கொஞ்சங்கூட சகிக்கல”
வேண்டுமென்றே முகத்தை சுருக்கி வைத்துகொண்டு

“நான் சரி செஞ்சு குடுக்குறேன், அதுக்கு பதிலா நீ இன்னைக்கு ஈவினிங்
என்கூட காபி சாப்பிட வர்ற ஓகே!” அவளுக்கு உத்தரவிட்டபடியே கோடிங்கை
சரிசெய்ய அமர்ந்தான்.

‘அடப்பாவி! இந்த சின்ன ஹெல்ப்க்கு பின்னாடி எவ்ளோ பெரிய ஆப்பு வைக்கிற,
உன்கூட கடலை போட வேற பொண்ணுங்களே கிடைக்கலையா?

நான் உன்கூட உக்காந்து காபி சாப்பிடறத யாராச்சும் பார்த்தா வேற வெனையே
வேணாம்… சும்மாவே நம்மள ஓட்டறதுக்குனு ஒரு குரூப் அலையுது,

அவங்க கிட்ட என்னை வாலாண்டியரா மாட்டி விட பிளான் பண்ணறியே, படுபாவி!
நான் வந்தாதானே? வரமாட்டேனே…. நீ என்னா பண்ணுவ?’ என்று ரம்யா
மனதிற்குள் பேச்சு நடத்தி கொண்டிருந்த வேளையில்

கிரிதரன் கணினியில் காண்பித்த தவறை சரி செய்து அவளை நோக்கி..

“இப்போ ரன் ஆகுதா உன்னோட ப்ரோக்ராம், கரெக்டா கவனிச்சியா, நான் என்ன சரி
செஞ்சேன்னு. இனிமே இந்த மிஸ்டேக் வராம பார்த்துக்கோ. அப்பறோம் ஈவினிங்
கேண்டீன்ல மீட் பண்ணுவோம் ஷார்ப் 5 o clock ஓகே”

“இல்ல நான் வரமாட்டேன்… என்னால முடியாது இப்படியெல்லாம் பாய்ஸ் கூட
தனியா போய் பழக்கம் இல்ல”

“ஏன் முடியாது? அப்போ நானும் ப்ரோக்ராம் சரி பண்ணினத திரும்பவும்
மாத்தி(எரர்) வச்சுருவேன். உன்னோட ஐ.டி உள்ளே போய் செய்ய தெரியாதுன்னு
நினைக்கிறியா, எப்படி வசதி?” சிரித்துக் கொண்டே மிரட்டி வைத்தான்.

“எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கே ஆப்பு வைப்பே… உனக்கு நான் யாருன்னு
காட்றேண்டா காஃபீ மண்டையா…” மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டவள்,

“ஏய்… கிரி… ஏன் இப்படி எல்லாம் ப்ளாக்மெயில் பண்ற? இப்போ என்ன
கேன்டீன் அண்ட் காபி with மீ அவ்ளோ தானே, வந்துட்டா போச்சு.

ஆனா இந்த ப்ரோக்ராம் மாத்தி வைக்குற வேலை எல்லாம் நோ… நோ… நோ…
மறந்துறணும் சரியா, ஷார்ப் 5 ‘o clock… மீட் பண்ணுவோம், பாய்ய்ய்ய்…”
என்று இளித்தவாறே சென்று விட்டாள்.

மாலை ஐந்து மணி தன் தேவைதையை காணும் கனவுடன் கேண்டீனில் அமர்ந்திருந்தவனை
தன் பரிவாரங்களுடன் எதிர் கொண்டாள் பெண்…

“ஹாய் கிரி… இவங்க எல்லாம் என்னோட பிரின்ட்ஸ், இவ சுஜா, அவ மேகா,
ரோஷினி, பவித்ரா அண்ட் இவ ஹரிணி, எங்க போனாலும் எல்லோரும் சேர்ந்தே தான்
போவோம். ஈஈஈ…”

‘எப்படி எங்ககிட்ட நீ மாட்டிருக்கேன்னு பார்த்தியா, தனியா ஒரு பொண்ணு
சிக்குனா இனிமே காபி சாப்பிட கூப்பிடுவே… மகனே! இதோட என் பக்கம் தலை
வச்சு படுக்கவே நீ யோசிக்கணும்’ என்று மனதிற்குள் கும்மாளமிட்டபடியே

“பிரன்ட்ஸ், இன்னைக்கி நம்ம கிரி சார் தான் ட்ரீட் குடுக்க போறாரு, சோ
என்ஜாய், கேன்டீன்ல என்னென்ன வேணுமோ சாப்பிடுங்க, கூச்சப்பட வேண்டாம்.
அப்படிதானே கிரி, கரெக்டா உங்கள கூப்பிட்டேனா?”

“ம்ம்ம் சூப்பர், பிரன்ட்ஸ் வந்த வேலைய பாக்கலாமே, இன்னும் ஏன்
தயங்குறீங்க? உங்க பிரன்ட் தான் சொல்லிட்டாங்களே“ சிரித்துக்கொண்டே
அவர்களை விரட்டி விட்டு, அழுத்தமான குரலில்

“சோ என் மேல நம்பிக்கை இல்லாம தான் நீ இவங்கள கூட்டிகிட்டு வந்துருக்கே,
அப்படித்தானே

அது சரி என்னை பத்தி நான் சொன்னா தானே என்மேல உனக்கு நம்பிக்கை வரும்.

ஒண்ணுமே செய்யாம உன்ன மட்டும் குத்தம் சொல்லக்கூடாது. இனிமே உன்னை நான்
இப்படி வர சொல்லமாட்டேன்“ என்றவன் கண்களை அழுந்த மூடி தன்னை சமன்
செய்தபடி உள்ளார்ந்த குரலில்

“எனக்கு மட்டும் உரிமையா… சொந்தமா… என்னோட வாழ்க்கையா நீ தான்
வரணும்னு விரும்பறேன் ரம்யா. எப்ப உன்ன பாத்தேனோ அப்போ இருந்தே நீ என்
மனசுல பதிஞ்சு போயிட்டே

நம்ம படிப்பு முடியுற வரைக்கும் வெளியே சொல்லாம இருக்கணும்னுன்னு
நினைச்சேன். ஆனா உன்னை பாக்காம, உன்கூட பேசாமா, என்னால இருக்க முடியல.

இன்னைக்கு லேப்ல நடந்தத ஒரு சாக்கா வச்சு உன்கிட்ட பேசி பழகனும்னு நினைச்சேன்.

ஆனா அது எவ்ளோ தப்புன்னு நீ எனக்கு புரிய வச்சுட்டே, சாரி… சாரி…
இனிமே இப்படி நடக்காது… ஐ லவ் யூ ரமி… இதுக்கும் மேல எனக்கு எப்படி
சொல்லி உனக்கு புரிய வைக்கிறதுனு தெரியலே” என்று மென்மையாய் சொல்லி
முடிக்க பெண்ணவளோ அவனையே கண்ணேடுக்காது அதிர்ந்து பார்த்துக்
கொண்டிருந்தாள்.

மொத்தமாய் வீழ்ந்தேன் விழி வீச்சில்

சத்தமின்றி சுருட்டினாய் பேரலையாய்

மிச்சச் சொச்சமாய் நான் இருந்தால்

முத்தத்தால் உயிர்த்து விடு என்னை…

error: Content is protected !!