Priyangaludan Mugilan 19
Priyangaludan Mugilan 19
ப்ரியங்களுடன் முகிலன் 19
அவன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போது மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. பொதுவாக மயூரா கடைசி கிளைமாக்ஸ் காட்சியை முதலில் எடுத்து விடுவதுதான் வழக்கம்.
அப்படிதான் இன்றும் திட்டமிட்டு இருந்தாள். கதையின் படி முகிலன் நடிப்பது ஒரு கண் தெரியாத கதாபாத்திரத்தில். அந்த கதாபாத்திரம் ஒரு பாரதியார் அபிமானி. அவன் எப்படி போராடி அவன் வாழ்க்கையிலும் காதலிலும் வெற்றி பெறுகிறான் என்பதே கதை.
தனக்கு கண் பார்வை இல்லை என்பது ஒரு பெரிய குறையே இல்லை என கம்பீரமாக உலா வரும் ஒரு கதாபாத்திரம்
உதகமண்டலத்தில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் படப்பிடிப்பு. கார் படப்பிடிப்பு தளத்தை அடைந்திருந்தது அடுத்த நொடி அவன் விழிகள் அவசரமாக அவள் முகம் தேடுவதை ஏனோ அவனால் தடுக்கவே முடியவில்லை.
தலையை குலுக்கிக்கொண்டான் அவன் .’வேண்டாம் முகிலா வேண்டாம்’. பின்னர் தன்னை இயல்புக்கு தள்ளிக்கொண்டு இறங்கினான்.
மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் அவனிடம் வந்து கைகுலுக்கி நலம் விசாரித்துக்கொண்டிருக்க அவள் மட்டும் அவன் கண்ணில் தென்படவில்லை. விழிகள் அதன் போக்கில் அவளை தேடி அவ்வப்போது சுழன்றன.
அடுத்த சில நிமிடங்கள் கழித்து கண்களில் கருப்பு கண்ணாடி, கையில் வெள்ளை தடி சகிதம் முழு மேக் அப்புடன் அவன் அவன் தயாராய் வர அவன் பின்னாலிருந்து கேட்டது அவள் குரல்
‘ஹாய்.. முகிலன்..’ சரேலென திரும்பினான்தான் அவன்.
‘கருப்பு கண்ணாடியில் இது ஒரு வசதி போலும்’ அவளை பார்த்ததும் சட்டென அவன் விழிகளில் ஓடிய பரவச ரேகைகளை அவள் படிப்பதை அணைப்போட்டு தடுத்து இருந்தது அந்த கருப்பு கண்ணாடி. அதை உணர்ந்துதான் இருந்தான் முகிலன்.
அவள் இதழ்களில் சந்தோஷ புன்னகை வீற்றிருந்தது.‘ என் முகிலனை எனக்கு தெரியும்’ இருவர் மனதிலுமே அந்த வரிகள் தன்னாலே ஓடத்தான் செய்தன. இருப்பினும் இருவருமே அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வெகு இயல்பாக இருக்க முயன்றனர்.
‘வாங்க மயூரா வெங்கட்ராமன்’ என்றான் இதழ்களில் பொருத்திக்கொண்ட புன்னகையுடன். ‘வருண் எப்படி இருக்கான்?’ அடுத்த நொடி தன்னாலே எழுந்தது இந்த கேள்வி. ‘கொஞ்சமாவது பழைய மாதிரி இருக்கானா? எல்லாரோடையும் பேசறானா?’
‘பச்..’ என்றாள் சின்ன தலை அசைப்புடன். ‘அப்படியேதான் இருக்கான்’ அவள் பதிலில் முகிலனின் முகத்தில் ஏமாற்ற கோடுகள்.
‘ஒரு தடவையாவது மனசு விட்டு அழுதானா அவன்?’’ சில நொடி யோசனைக்கு பிறகு மெல்லக் கேட்டான் முகிலன்.
‘எனக்கு தெரிஞ்சு இல்லை முகிலன்’ அவள் சொல்ல அவனுக்குள் ஏனோ லேசாக ஒரு பயம் பரவியது.
‘’நீங்க கொஞ்ச நாள் அவன் கூடவே இருக்கலாம் இல்லையா மயூரா வெங்கட்ராமன்’ என்றான் ஆற்ற மாட்டாமல். ‘இந்த ஷூட்டிங் கூட அவன் கொஞ்சம் நார்மல் ஆனதும் ஸ்டார்ட் பண்ணி இருந்திருக்கலாம்’
‘எல்லாம் இருக்க வேண்டியவங்க அவன் கூடத்தான் இருக்காங்க.’ குத்தலான தொனியில் சொன்னாள் மயூரா.
‘இருக்க வேண்டியவங்களா? யாரு?’ சில நொடிகள் யோசித்தவன் உங்கப்பாவா?’ என்றான் பட்டென..
‘எஸ்..’ என்றாள் புருவங்கள் உயர ‘எப்படி இப்படி கரெக்டா கேட்கறீங்க?’
மெல்ல சிரித்தான் முகிலன் ‘அன்னைக்கு சொன்னதுதான். ஒன் பிளஸ் ஒன் டூ’ என்றவனின் மனம் வெங்கட்ராமனின் கணக்குகளை ஓரளவு கணித்திருந்தது.
சில நொடிகள் கண்கள் மூடி நெற்றி தேய்த்து விட்டுக்கொண்டவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான் ‘எப்போ ஊட்டி வரான் அவன்? உங்க அப்பா ஷூட்டிங் எப்போ ஸ்டார்ட் பண்றார்?’
இன்னும் ரெண்டு நாளையிலே ஷூட்டிங் இருக்கும்… பட் ‘இந்த படம் பண்றதை பத்தி எங்கப்பா இன்னமும் யாருக்கும் சொல்லவே இல்லை. அவரும் வருணும் மட்டும்தான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க. அதுக்குள்ளே நீங்க இப்படி கரெக்டா…. யூ… ஆர் டூ ஸ்மார்ட்..’ என்றாள் ரசிப்பின் பாவத்துடன்.
‘ஆஹான்…’ அழகாய் புன்னகைதான் முகிலன். ‘எல்லாமே மேதமேடிக்ஸ்தான் மயூரா வெங்கட்ராமன்.. நான் உங்க அப்பா படத்துக்கு முதலிலே ரெண்டு நாள் இங்கேதானே ஷூட்டிங்லே இருந்தேன்.. அதுதான் இங்கே வருவான்னு கெஸ் பண்ணேன். ஒரு வகையிலே எனக்கு இது சந்தோஷம்தான். இனி கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகிடுவான்.’
‘ஆனா நீங்கதான் வருண் வருண் ன்னு சொல்றீங்க. அவன் உங்களுக்கு எதிராதான் நிக்கறான்.. எனக்கு என்னமோ எங்க அப்பா விஷயத்திலே உங்க மேலே தப்பு இருக்காதுன்னு தோணுது. எனக்கு வருண் மேலே ரொம்ப கோபம். சான்ஸ் கிடைச்சா அவனை நாலு வார்த்தை ..’ அவள் முடிக்கவில்லை.
‘மயூரா வெங்கட்ராமன்..’ சற்று சூடாக எழுந்தது அவன் குரல் ‘எனக்கும் வருணுக்கும் நடுவிலே ஆயிரம் இருக்கும். அதிலே நீங்க தலையிடாம இருக்கிறதுதான் உங்களுக்கு நல்லது’
‘அது சரி..’ என்றவளின் முகத்தில் நிறையவே மாற்றம் ‘அவன் அங்கே வேலையை பார் என்றான் இவன் இங்கே அதையே வேறு விதமாக சொல்கிறான்’
அதே நேரத்தில் உதகமண்டலத்திற்கு வந்து இறங்கி இருந்தான் வருண்.
அவன் நடிக்கப் போகும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான முகிலனின் பைக்காரா கெஸ்ட் ஹவுஸ்க்கு அடுத்ததாக இருக்கும் அந்த விருந்தினர் மாளிகையில் வந்து இறங்கினான் அவன்.
சில நிமிடங்கள் கழித்து ஆயாசமாக வந்து தோட்டத்தில் அமர்ந்தான் அவன் . மாலை மங்கிக் கொண்டிருந்தது. பசுமையும், ரம்மியமும் ஆட்சி செய்துக் கொண்டிருந்த அந்த சூழ்நிலை அவனத் மனதை கொள்ளையடிக்க மறுத்தது. அவன் மனதில் அவனது மடிசார் அழகியே ஆட்சி செய்துக்கொண்டிருந்தாள்.
தோட்டத்தில் இருந்த அந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்தவன் கைகள் அவனது பாக்கெட்டை துழாவின. சில நொடிகளில் சிக்கியது அது. சிகரெட் பாக்கெட்.
அதிலருந்து ஒன்றை உருவி உதடுகளுக்கிடையில் பொருத்திக் கொண்டு லைட்டரால் பற்ற வைத்துக் கொண்டான் வருண். இரண்டு மூன்று நாட்கள் முன்னால் துவங்கி அவனுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவிக் கொண்டிருந்தது இந்த பழக்கம். இதில் ஏதோ ஒரு வகை நிம்மதி வருவதாக அவனுக்குள் ஒரு பிரமை.
தூரத்திலிருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த தனாவுக்கு பதைத்தது உள்ளம் ‘இத்தனை நாள் இல்லாத பழக்கம் இப்போது ஏன் புதிதாய்.?’
அவனிடம் இரண்டு நாட்களாக இது பற்றி சில முறைகள் பேசி திட்டு வாங்கி தோற்றிருந்தான் தனா. செய்வதறியாது வருணையே பார்த்திருந்தான் அவன்.
எழுந்து நின்று சிகரெட்டை புகைத்தபடியே திரும்பியவன் பார்வையில் பட்டது முகிலனின் அந்த கெஸ்ட் ஹவுஸின் தோட்டம். உடல் காரணமே இல்லமால் ஒரு முறை குலுங்கி ஓய உள்ளுக்குளிருந்து எது உந்தியதோ பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை கீழே போட்டு காலால் அணைத்தான் வருண்.
இங்கே
சில நொடிகள் முகிலன் மயூரா இருவருக்கும் இடையில் மௌனம் நிலவ சுதாரித்துக்கொண்டு அதை முகிலனே உடைத்தான்.
‘சொல்லுங்க இன்னைக்கு என்ன சீன் நமக்கு? இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. சீக்கிரம் டேக் போலாம்’
‘ம்? ம். ஒகே..’ தன்னை இயல்புக்கு தள்ளிக்கொண்டாள் ‘உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். ஹீரோ ஹீரோயின் பேர் மாத்திட்டேன். ஹீரோக்கு உங்க சித்தப்பா பேர்.’ சொன்னவுடன் மலர்ந்தே போனது அவன் முகம்.
‘கண்ணனா?’ என்று கண்ணாடியை கழற்றியே விட்டான் முகிலன்.
‘எஸ்… கதாநாயகி மீரா’
‘ஆஹான்,,,’ அவன் குரலில் எங்கிருந்தோ நெகிழ்ச்சி வந்து குடி ஏறியது
‘மீரா……கண்ணன்’ உச்சரித்து பார்த்துக்கொண்டான் ஒரு முறை. ‘கிரேட் மயூரா வெங்கட்ராமன். நீங்க சீன் என்னனு சொல்லுங்க’ என்றான் ஆர்வமாக. மயூரா விளக்க ஆரம்பித்தாள் காட்சியை.
கண் தெரியாத நாயகன் வாழ்கையில் முன்னேறிய பிறகு கடைசியில் அவனுக்கு கண் பார்வை கிடைக்கும் ஒரு காட்சி. பல வருடங்கள் முன்னால் தன்னை விட்டு பிரிந்து போன காதலியையும் சந்திக்கும் காட்சி அது.
இவனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லை எனும் போதும் அவனது நண்பர்கள் இவனை கட்டாயப்படுத்தி அவனது கண் பார்வைக்கான அறுவை சிகிச்சைக்கு அவனை சம்மதிக்க வைத்திருக்க அவனுக்கு பார்வை வந்த பின்பு அவன் தனது காதிலியை அடையாளம் கண்டுக்கொள்வதே க்ளைமாக்ஸ் காட்சி.
அவள் காட்சியை விளக்கிக்கொண்டிருக்க ஒரு ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்கும் மாணவனின் பாவத்துடனும் அவ்வபோது சின்ன சின்ன தலையசைப்புக்களுடனும் அவளையே பார்த்திருந்தான் முகிலன்.
அவள் முடித்தவுடன் ‘சூப்பர்ப்…’ என்றபடியே நிமிர்ந்தான் முகிலன். ‘கிவ் மீ டூ மினிட்ஸ்’ சொல்லிவிட்டு ஆள்காட்டி விரல்களை புருவங்களுக்கு நடுவில் அழுத்திக்கொண்டு அமர்ந்தவன் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ‘நாம டேக் போகலாம் மயூரா வெங்கட்ராமன்’ என்றான்.
‘இல்ல ஒரு தடவை ரிஹெர்சல் மட்டும் பார்த்திடலாம் முகிலன்’.என்றபடியே மயூரா அவன் முகம் ஆராய
‘தேவை இல்லை. ஹீரோயின் ரெடின்னா நாம டேக் போயிடலாம். சரியா வரும்’ என்றான் உறுதியான தொனியில்.
அடுத்த சில நிமிடங்களில் நாயகியையும் காட்சிக்கு தயார் படுத்திவிட்டு விளக்குகளின் வெளிச்சம் கேமரா கோணங்கள் என எல்லாவற்றையும் சரி பார்த்துக்கொண்டு கேமராவின் பின்னால் நின்று அவனை பார்த்து கட்டை விரல் உயர்த்தி சிரித்தவளை ஒரு வித ரசிப்பும், பெருமையுமாக பார்த்திருந்தன அந்த கருப்பு கண்ணாடியின் பின்னால் இருந்த முகிலனின் விழிகள்.
அந்த பெரிய பங்களாவின் ஒரு பகுதியில் மருத்துவமனைப் போல் ஒரு செட் போடப்பட்டிருந்தது. அவன் கண்களில் கட்டு போல் ஒன்று கட்டிவிடப்பட அங்கே இருந்த அந்த மருத்துவமனை கட்டிலில் படுத்துக்கொண்டு அவன் தயாராக ஆக்ஷன்’ அவள் குரல் ஒலிக்க அவனருகில் வந்தாள் கதாநாயகி. அந்த கதாபாத்திரம் ஒரு கண் மருத்துவர்
‘கண் கட்டை பிரிக்கிறாள் அந்த மருத்துவர். அவள் விரல்களில் ஒரு சின்ன நடுக்கம். விழிகளில் பரிதவிப்பு’ காமெராவின் கண்களின் வழியே இதை எல்லாம் அழகான கோணங்களில் விழுங்கிக்கொண்டிருந்தாள் மயூரா.
அவனுக்கு பார்வை திரும்பிகிறது. நண்பர்களை, அவனுக்கு வாழ்கையில் துணை நின்றவர்கள் என எல்லாரையும் பார்த்து நெகிழ்கிறான் என காட்சிகள் நகர்ந்துக் கொண்டிருந்தன.
முகிலன் ஒரு நடிகனாக மிளிர்ந்துக்கொண்டிருக்க கதாநாயகி ஒரு வார்த்தை கூட பேசாமல் தனது விழிகளாலேயே நடித்து மனதை அள்ளிக் கொண்டிருக்க ஒவ்வொரு காட்சியாக திருப்தியாக பதிவு செய்துக் கொண்டிருந்தாள் மயூரா.
காட்சிக்கான வசனங்கள் என்று கூட பெரிதாக எதையும் சொல்லிவிடவில்லை மயூரா. கொஞ்சம் கொஞ்சமாக காட்சிக்குள் ஒன்றியவனாக அவனே பேசிக்கொண்டிருந்தான் வசனங்களை. அதற்கு ஏற்றார் போல் மற்றவர்களும்.
அதன் பிறகு வந்தது அந்த காட்சி. மற்றவர்கள் எல்லாரும் கலைந்து செல்ல அறையில் தனியாக விடப்பட்டிருந்தனர் நாயகனும் நாயகியும். இதுவரை குரலை கூட காட்டிக்கொள்ளவில்லை கதாநாயகி.
சில வருடங்களுக்கு முன்னால் இவளுக்கு அவன் பொருத்தமில்லை என்று இவளது குடும்பத்தினர் இவர்கள் காதலுக்கு குறுக்கே வர, வேறு வழியே இல்லாமல் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் இன்று வாழ்க்கையில் புகழின் உச்சியை தொட்டிருக்கும் அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள முடியாத ஒரு குற்ற உணர்வு அவள் முகத்தில். இதுவரை தனது விழிகளால் அவள் முகம் பார்த்திராத கதாநாயகனுக்கும் அவளை அடையாளம் தெரிந்துக்கொள்ள முடியாத சூழ்நிலை.
அவள் புன்னகையுடன் தலை அசைத்து விட பெற எத்தனிக்க
‘தேங்கஸ் எ லாட் டாக்டர். ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்ன்னு சொன்னான் எங்க பாரதி. உங்களாலே தான் நான் இன்னைக்கு நான் அந்த எல்லா இன்பத்தையும் கண்ணாலே பார்க்கிறேன்’ அவன் சொல்ல கதாநாயகி மெல்ல புன்னகைக்க இங்கே மயூராவும் புன்னகைத்துக் கொண்டாள்
இவன் அவளை நோக்கி புன்னகையுடன் கைநீட்ட தயக்கம் ஏறிய விழிகளுடன் அவனை நோக்கி கைநீட்டினாள் அவள். அவன் அவள் கையை பற்றி குலுக்க அவனை நோக்கி க்ளோஸ் அப்பில் நெருங்கியது கேமரா.
உடல் முழுவதும் ஒரு குலுங்கலுடன் நிமிர அவன் விழிகளில் அப்படி ஒரு பரிதவிப்பு குடியேறியது. கண்களை மூடிக்கொண்டு எதையோ ஆழ்ந்து உணர்வது போல் ஒரு பாவம் முகத்தில்.
ஒரு நடிகனாக மிளிர்ந்துக்கொண்டிருந்தான் முகிலன். வியப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தாள் மயூரா.
கதாநாயகி ஒரு வித தவிப்புடன் அவன் முகம் பார்த்திருக்க சட்டென கண் திறந்தவன் ‘மீ….. ரா…..’ என்றான். அவன் விழிகளில் நீரின் பளபளப்பு. கிளிசரின் இல்லாத கண்ணீர். எப்படி வந்தது என அவனுக்கும் தெரியவில்லை.
இங்கே மயூராவின் செவிகளுக்குள் இறங்கியது அவனது குரலில் ‘மீ…ரா…’
ஏனென்றே தெரியாமல் வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு நெகிழ்வு அவளுக்குள்ளே பரவியது.
‘நீ மீராதானே? எனக்கு தெரியும் கண்டிப்பா தெரியும். நீ மீராதான். நீ மீராவேதான். வந்திட்டியா மீரா? நீ திரும்ப வந்திட்டியா மீரா?’ அவன் குரல் பரிதவிக்க கேட்டுக்கொண்டிருந்த மயூராவின் உடல் முழுவதும் காரணமறியா சந்தோஷ நடுக்கம்.
‘இ… இல்ல.. அதெல்லாம் இல்ல…’’ சற்றே குரலை இறக்கிக்கொண்டு கதாநாயகி சொல்ல
‘பொய்…….நீ தான் மீரா. ஐ நோ யூ மீரா. உன்னை எனக்கு தெரியும். உன்னை தெரிஞ்சுக்க எனக்கு கண்ணு தேவை இல்லடி. உன் ஸ்பரிசம் மட்டும் போதும்.’ அவன் கட்டிலை விட்டு எழுந்து விட கதாநாயகி மெல்ல பின்வாங்க அவள் கையை விடுவிக்காமல் அவள் அருகில் நின்றான் இவன்.
‘சொல்லு. நீ என் மீராதான்னு சொல்லு. திரும்ப உன்கிட்டேயே வந்திட்டேன்ன்னு சொல்லு’ சொல்லு மீரா ப்ளீஸ் மீரா’.. சொல்லு மீரா.. நீ என் மீராதான்னு சொல்லு மீரா..’
ஒரு நிமிடத்துக்குள் எத்தனை மீராக்கள்? அவளது காதில் மாட்டி இருந்த அந்த ஹெட் போனின் வழியே அவனது மீராக்கள் பரவேசித்துக்கொண்டே இருக்க அந்த காட்சிக்குள் அவளே மீராவாக இருப்பது போன்ற உணர்வுடன் நெகிழ்ச்சி பொங்க காமெராவின் விழிகளின் மூலம் அவனை விழுங்கிக்கொண்டே இருந்தாள் மயூரா.
‘க..ண்…ணா’ அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் கதாநாயகி அவன் தோள் சாய அவன் அவளை இறுக்கிக்கொண்டு ‘மீ.. ரா..’ என்று உச்சரித்தவனின் விழிகளில் கண்ணீர் மழை. அவன் முயன்றும் ஒரு கட்டுபாட்டுக்குள் வராமல் வழிந்தது கண்ணீர்,
‘க.ட்.’ சொல்லி காட்சியை துண்டிக்ககூட மறந்திருந்தாள் மயூரா. அவன் நடிப்பில் வியந்து போன சுற்றி நின்றவர்கள் எல்லாரும் கைதட்ட ஆரம்பிக்க அப்போதுதான் தன்னிலை பெற்றாள் மயூரா.
கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்து சில நொடிகளில் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தான் முகிலன். எல்லாரும் முகிலனை சூழ்ந்துக்கொண்டு அவனது நடிப்பை பாராட்ட, இதழ்களில் கஷ்டப்பட்டு ஒட்ட வைத்த புன்னகையுடன் எல்லாருடனும் கைக்குலுக்கிக் கொண்டிருந்தான் முகிலன்.
அது நிஜமாகவே நடிப்பல்ல ஆழ்மனதில் பொங்கிய உணர்வுகளின் வெளிப்பாடு என அங்கே இருந்தவர்கள் யாரும் அறியவில்லை.
மயூரா அவன் அருகிலேயே வரவில்லை. இமைதட்ட கூட விரும்பாமல் ஒரு ஓரத்திலிருந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவனது மீரா திரும்ப திரும்ப அவளை தொந்தரவு செய்துக்கொண்டிருக்க சொல்லத்தெரியாத ஒரு உணர்வுடன் உள்ளம் பொங்கி பொங்கி வழிந்துக்கொண்டிருந்தது.
பத்து நிமிடத்தில் திரும்ப வருவதாக ஷ்யாமிடம் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தவன் வெளியே நின்றிருந்த காருக்குள் சென்று அமர்ந்துக்கொண்டான். சில்லென ஊசிப் போட்டுக்கொண்டிருக்கும்
மாலை நேர உதகமண்டல குளிரையும் தாண்டி வியர்த்துக்கொண்டிருந்தது முகிலனுக்கு. மெல்ல இருள் சூழ ஆரம்பித்திருக்க மேலிருந்து அவனை பார்த்து அவன் நிலையை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது வெண்ணிலவு..
‘ஏ.சி’ யை இயக்கிக்கொண்டு அமர்ந்தான். இதயம் படபடக்க விழிகளில் லேசாக நீர் திரளும் உணர்வு. தண்ணீர் பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டான். மனம் மட்டும் நிதானப்பட மறுத்தது.
கண்களை மூடி அமர்ந்தான். உள்ளம் ஏனென்றே தெரியாத ஒரு உணர்ச்சி குவியலாக இருந்தது. மூடிய கண்களுக்குள் மயூரா வந்து வந்து போக சட்டென கண்களை திறந்துவிட்டான் அவன்.
‘இந்த பெண் உன்னை பைத்தியம் ஆக்காமல் விடப்போவதில்லை முகிலா’ பின் தலையில் தட்டிக்கொண்டான் அவன்.
‘‘சொல்லு. நீ என் மீராதான்னு சொல்லு. திரும்ப உன்கிட்டேயே வந்திட்டேன்ன்னு சொல்லு’ சொல்லு மீரா ப்ளீஸ் மீரா’.. சொல்லு மீரா.. நீ என் மீராதான்னு சொல்லு மீரா..’ எப்படி இப்படி உருகிப்போனேன் அந்த காட்சிக்குள் அவனுக்கே புரியவில்லை.
பொதுவாக இந்த மாதிரியான உணர்ச்சி பூர்வமான காட்சிகளில் அவன் அதிகம் நடிப்பதில்லைதான். அப்படியே நடித்தாலும் இப்படி எல்லாம் உணர்ச்சி வசப்பட்டது என்பது கிடையவே கிடையாது. ஆனால் இந்த காட்சி எப்படி அவனை இந்த அளவுக்கு உள்ளுக்குள் இழுத்துக்கொண்டது? விளங்கவில்லை அவனுக்கு.
ஆழ்மனதில் இருக்கும் மயூரா மீதான ரகசிய நேசம்தான் இதற்கு காரணமாக இருக்குமோ என்று தோன்றியது அவனுக்கு.
‘போதும் அதை விட்டு வெளியே வா முகிலா. வெளியே வா’ அவன் தனக்குள்ளே சொல்லிக்கொள்ள அது மட்டும் இயலவில்லை.
காரணம் இல்லாமல் கண்களுக்குள் மறுபடியும் கண்களில் கண்ணீர் திரள பார்க்க அப்போது காரின் கதவு மெல்ல தட்டப்பட்டது. இவன் சுதாரித்து திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்தாள் மயூரா.
டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவன் கைகுட்டையால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு, இதழ்களில் புன்னகையை ஓட்ட வைத்துக்கொண்டு எதிர் பக்க கதவை திறந்தான் அவளுக்காக.
‘எஸ்.. மயூரா வெங்கட்ராமன் .டூ மினிட்ஸ் வந்திட்டேன்’ அவன் சொல்லிக்கொண்டே இருந்த நேரத்தில் காருக்குள் வந்து அவனருகில் அமர்ந்திருந்தாள் பெண்.
படபடவென துடிக்க ஆரம்பித்தது அவன் இதயம். அவளது அருகாமையில் உள்ளம் இன்னுமாக கரைவது போல் தோன்ற சுவாசத்தை இறுக்கி மனதை கட்டுப்படுத்திக்கொண்டு ஸ்டியரிங்கை இறுக பிடித்தபடி அமர்ந்திருந்தான் முகிலன்.
அவன் நிலைக்கு கொஞ்சமும் குறைவில்லாத உணர்ச்சிகளின் பிடியில்தான் அவள் அமர்ந்திருந்தாள். சுவாசம் தடுமாறிக்கொண்டிருந்தது அவளுக்கும்.
‘சொல்லு. நீ என் மீராதான்னு சொல்லு. திரும்ப உன்கிட்டேயே வந்திட்டேன்ன்னு சொல்லு’ சொல்லு மீரா ப்ளீஸ் மீரா’.. சொல்லு மீரா.. நீ என் மீராதான்னு சொல்லு மீரா..’ அவளுக்குள்ளும் உருண்டுக்கொண்டே இருந்தது.
‘முகிலன்’ எதற்குள்ளோ கரைந்து தொலைந்தது போல் அவள் அழைத்த நேரத்தில் சத்தியமாய் அவள் விழிகளை சந்திக்கும் திராணி இல்லமல்தான் அமர்ந்திருந்தான் முகிலன்.
‘முகிலன்..’
‘ம்?’ அவன் விழிகள் முன்னால் இருந்த கண்ணாடியின் வழியே தெரிந்த இருளையே வெறித்திருந்தன.
‘கலக்கிடீங்க. நான் அப்படியே அந்த சீன்குள்ளேயே போயிட்டேன்’
‘ம்..’
பொங்கும் உணர்வுகளை உள்ளுக்குள் அழுத்திக்கொள்ள மிகவும் போராட வேண்டி இருந்தது முகிலனுக்கு ‘நான் எப்போதும் இப்படி எல்லாம் இல்லையடி பெண்ணே இப்படி எல்லாம் இல்லவே இல்லை. ஏனடி என்னை இப்படி பித்தனாக்குகிறாய்?’
‘உங்க கையை ஒரு நிமிஷம் கொடுங்க’ அவன் அனுமதி இல்லமலே கையை பிடித்துக்கொண்டு குலுக்கினாள் மயூரா. இப்போது அவள் கண்களை சந்திக்க வேண்டிய கட்டயம் அவனுக்கு. திரும்பி அவள் கண்களுக்குள் பார்த்தான் முகிலன்.
நிலவின் ஒளி காருக்குள் மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தது. வெளியில் குளிர் காற்று அடித்துக்கொண்டே இருந்தது. அது எதையோ அவர்களுக்கு சொல்ல விழைந்தது போல் இருந்தது.
ஏதோ ஒரு கண்ணுக்கு புலப்படாத நூல் இருவரையும் கட்டிப்போட்டது போல் உணர்ந்தனர் இருவரும். அது என்னவென்றுதான் இருவருக்கும் புரியவில்லை.
இறைவன் எழுதும் கதையில் அவன் போடும் ரகசிய கணக்குகளை பல நேரங்களில் அவனது கதாபாத்திரங்கள் புரிந்து கொள்வது இல்லை. ஆனால் இறைவன் போடும் கணக்குகளில் நியாயம் மட்டும் என்றும் தவறுவதே இல்லை.
சேர வேண்டியவைகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தகுதியான நேரத்தில் சேர வேண்டியவர்கள் கைக்கு அருகில் வந்து நிற்கவே செய்கின்றன. அதை நம்புவதற்கும் அதை ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான பக்குவம்தான் பல நேரங்களில் அவர்களுக்கு இருப்பதில்லை.
மயூராவின் விழிகளுக்குள் பார்த்தவனின் மனதிற்குள் சுனாமி அலை சுழற்றி சுழற்றி அடித்தது. அவள் அவனை கட்டி இழுக்கிறாள் என்பது மட்டும் நன்றாகவே புரிந்தது முகிலனுக்கு.
சில நொடிகள் அவன் முகம் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் மயூரா. சத்தியமாய் அவன் கையை விடுவிக்க மனமில்லை அவளுக்கு. சந்தோஷத்தின் உச்சியில் இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..
‘அவன் கையை தனது கைகளுக்குள் பொத்திக்கொண்டு அப்படியே அதை இதழ்களுக்கு கொண்டு சென்று புறங்கையில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்து…’ இப்படித்தான் தோன்றிக்கொண்டிருந்தது அவளுக்கு.
அவளைவிட அவன்தான் அதிகம் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். முத்தமிட மாட்டாளா என அவன் மனதின் ரகசியமான ஒரு பிரதேசம் எதிர்ப்பார்க்கவும் செய்தது. ஏன் அவளை அப்படியே இழுத்து தன்னோடு சாய்த்துக்கொள்ள விழைந்தது அவன் உள்ளம்.
ஆனால்?
ஒரு முறை அவன் முகம் பார்த்துவிட்டு ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அவள் அவன் கையை நோக்கி குனியும் நேரத்தில் அவனது சூடான குரல் அவளை சட்டென நிமிர்த்தியது.
‘மயூரா வெங்கட்ராமன்… வேண்டாம்…’ கையை விடுவித்துக்கொண்டான் அவன்.
சற்றே திகைத்து பின் சுதாரித்துக்கொண்டு கேட்டாள் ‘ஏன்? நான் அன்னைக்கே சொன்னேன். நீங்க ‘என் முகிலன்’ அவள் சொல்ல அவன் அனுமதி இல்லாமல் அவனுக்குள் சந்தோஷ மின்சாரம் பாயத்தான் செய்தது. ஆனால் அதை கொஞ்சமும் காட்டிக்கொள்ளவில்லை முகிலன்.
‘நீங்க ‘என் முகிலன்’ இதுதான் எனக்கு திரும்ப திரும்ப சொல்லணும்னு தோணுது’
‘நோ. அதெல்லாம் இல்லை..’ முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு இருளை பார்த்து தலையசைத்தான் அவன்.
‘ஏன்? உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? பிடிக்கலையா?’
‘நான் வேண்டாம்னு சொல்றேன்’ என்றான் விழிகளை மறுபடியும் எதிரே தெரிந்த இருட்டுக்குள் புதைத்துக்கொண்டு.
‘நான் வேணுமா? வேண்டாமான்னு கேட்கலை. பிடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டேன்’ அவள் விடாமல் கேட்க இப்போது அவள் பக்கம் திரும்பினான்.
‘ஸீ மயூரா வெங்கட்ராமன். நான் ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்க மாட்டேன்.. இதோ உங்க அப்பா படம் எடுக்க ஆரம்பிச்சார்ன்னா அதுக்கு அப்புறம் அவரை ஓட ஓட விரட்டுவேன். இந்த முகிலன் அப்படிதான். அது உங்களுக்கு வலிக்கும். அப்போ இந்த முகிலன் உங்களுக்கு கெட்டவனா தெரிவான்.’
அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க அவளை நோக்கி கை நீட்டி தடுத்தான் முகிலன்.
‘இப்போ இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு தோணும். ஆனா ஒரு ஸ்டேஜ்லே உங்களுக்கு என்னை பிடிக்காம போயிடும். மனசிலே ஆசைகளை வளர்த்துகிடீங்கன்னா அப்புறம் ரொம்ப கஷ்டமா இருக்கும். உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது. நீங்க ஒண்ணும் டீன் ஏஜ் பொண்ணு கிடையாது. நிறைய மெச்சூரிட்டி இருக்கு உங்களுக்கு. புரிஞ்சுக்கோங்க.’
‘முகிலன் நான் சொல்றதை ஒரு நிமிஷம்…’ அவள் ஏதோ சொல்ல முயல
‘நான் ரெடி. நாம அடுத்த சீன் போகலாம் மயூரா வெங்கட்ராமன்’ சொல்லிவிட்டு கார் கதவை திறந்துக்கொண்டு இறங்கி நடந்தான் முகிலன்.
அவனை பார்த்து வாய்விட்டு சிரித்தது இறைவனின் கணக்குகளை சரியாக புரிந்துக்கொண்டு பல வருடங்களாக எல்லாவற்றுக்கும் சாட்சி பூதமாக நின்றுக்கொண்டிருக்கும் அந்த நிலவு
தொடரும்….