Punnagai pookkum (en) poovanam 5

Punnagai pookkum (en) poovanam 5

ரம்யாவின் மனதில் பல்வேறு நினைவுகள் தறிகெட்டு ஓட ஐந்து வருட பிரிவிற்கு பிறகு கணவன் தன்னை வந்து சந்தித்த நாளிற்கு சென்றது.

இரண்டு வாரத்திற்கு முன்பு முன்னிரவு பொழுதில் வேலை முடிந்து சற்று ஓய்வாக அனைவரும் இருந்த நேரத்தில் அழைப்பு மணி அழுத்திய கிரிதரனை பார்த்த அவள் தந்தை சண்முகம் வெளியே நின்றவனிடம்

“எங்கே வந்தீங்க? என்ன வேணும் உங்களுக்கு? என்று உள்ளே அழைத்து பேச விரும்பாவிட்டாலும் மரியாதையுடன் தான் கேள்வி கேட்டார்.

“உள்ளே போய் பேசலாமா?” கிரிதரன் குரலோ ஏகத்திற்கும் மெலிந்தே வந்தது..

தன்னை உள்ளே அழைக்காமல் வெளியே நிற்க வைத்து கேள்வி கேட்டவரிடம் கோபம் வந்தாலும் சூழ்நிலையும் காலமும் தனக்கு எதிராக இருந்ததால் சற்று தணிந்தே பேசினான்.

“என்ன வேணுமாம் அவருக்கு? உறவே இல்லனு அத்து விட்டவராச்சே. இப்ப யார தேடி வந்துருக்காரு” என்று பிளாக் சார்ட்ஸ் மற்றும் டீ சர்ட்டில் இருபாலரையும் திரும்பிப் பார்க்கத் தூண்டும் கம்பீரத்தில் இருந்த ரம்யாவின் அண்ணன் சிவகுமார், சீண்டலை தொடர…

“சிவா இதென்ன பழக்கம். வீட்டுக்கு வந்தவர் யாராயிருந்தாலும் உள்ளே கூப்பிட்டு பேச பழகு. உங்க அப்பா தான் கோபத்துல வெளிய நிக்க வச்சே பேசுராருன்னா நீயும் அவருக்கு சரியா நின்னு பேசிகிட்டு இருக்க” என்று கணவர் செய்த செயலை மறைமுகமாக கண்டித்தார் செல்வி..

“இவ ஒருத்தி என்ன எதுன்னு கூட கேக்க விட மாட்டா; நம்மள குத்தம் சொல்ல மட்டும் முன்னாடி வருவா. இவ்வளவு பேசுறவ நான் வந்து பேசும் போதே முன்னாடி வந்து வெத்தல பாக்கு வச்சு கூப்பிட வேண்டியது தானே..

உறவே வேணாம்னு போறவனுக்கு குடுக்கிற மரியாதை கூட இங்கே வீட்டுல இருக்குறவனுக்கு கிடைக்க மாட்டேங்குது” என மனதுக்குள் அலுத்துக்கொண்டவர் சாட்சாத் ரம்யாவின் தந்தை சண்முகம் தான். கண்டிப்பானவர், அன்பையும் அதட்டலாய் காண்பிக்கும் மென்மையான மனம் கொண்டவர்.

மனைவியின் பேச்சில் மனதிற்க்குள் நொடித்துக் கொண்டாலும் மனையாளின் மனதை வருத்தமடைய செய்யாது “உள்ளே வாங்க” என்று வரவேற்று விட்டு தனக்கும் அவனுக்கும் எந்த வித சம்மந்தமும்மில்லை என்பது போல் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.

“இவருக்கு எல்லாமே பொண்டாட்டி வந்து ஞாபகப்படுத்தணும் போல.. வந்தவனை உக்காருன்னு சொல்ல வாய் வரல இவருக்கு” மனதோடு கிரிதரன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில்

“உக்காருங்க தம்பி” என்று வழக்கம் போல் உபசரித்து விட்டார் அவனின் மாமியார்.

மனைவியை முறைத்துக்கொண்டே “என்னடி உபசரிப்பு எல்லாம் பலமா இருக்கு. வந்தவருக்கு தலை வாழை இலை போட்டு விருந்து வைக்க வேண்டியது தானே. கொஞ்சநஞ்சம் ஓட்டிகிட்டு இருக்குற என் பொண்ணோட நிம்மதிய மொத்தமா எடுத்துகிட்டு போகட்டும். ஒரு வார்த்தை அவன் கூட பேசுனே அப்பறோம் நடக்கிறதே வேற.” என்று சண்முகம் சீற

“நீங்க இந்த வேலைய செஞ்சுருந்தா நான் ஏன் பேசியிருக்கப் போறேன்… இப்ப இல்லைன்னாலும் ஒரு காலத்துல இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை இவர் தானே அத மறந்துட்டு பேசாதீங்க.” என அவர் மனைவி தொடர்ந்திட

‘”இது என்னடா வம்பா போச்சு நான் என்னோட பிரச்சனைய பேசி தீர்க்கலாமுனு வந்தா இவங்க என்னை வச்சே பிரச்சனை பண்ணிக்குவாங்க போலேயே..

ம்ஹும் நாம கொஞ்சம் அமைதியா இருந்தாலும் எதுக்கு வந்தோம்னு மறக்க வச்சுருவாங்க.. பந்திக்கு முந்துறத விட இப்ப பேச்சுல முந்தணும். இவங்க பேச்சுல ஊடால போய் நான் பேசுறதுல தப்பே இல்ல’ என்று மனதிற்குள் எண்ணியவனாய்

“நான் ரம்யாவையும் குழந்தையையும் கூட்டிட்டு போக வந்துருக்கேன்” தன் வந்த காரணத்தை ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்…

“என்ன சொன்னீங்க… கூட்டிட்டு போகவா? நீங்க யார் சார்? அதைச் செய்ய. அதான் எல்லாம் முடிஞ்சு ஓய்ஞ்சு போச்சே… என் தங்கச்சிய எவ்வளவுக்கு அழ வைக்கனுமோ கஷ்டப்படுத்தனுமோ அதையெல்லாம் அழகா செஞ்சு முடிச்சுட்டு இப்போ தான் பழைய படி எழுந்து நடமாட ஆரம்பிச்சுருக்கா… அது பொறுக்காமா திரும்பவும் அவ உசுர வாங்க வந்துடீங்களா?” என்று சிவா கோபத்துடன் மூச்சு விடாமல் பேசியதில் அவனின் பாசமே நிறைந்து இருந்தது…

தங்கையின் துயரை அருகில் இருந்தே கண்டவன்… அவளின் உடலும் மனதும் உருக்குலைவதை தடுக்கும் வகை அறியாது பித்து பிடித்தவனைப் போல் மனதிற்குள் அழுதவன்.

பிறந்ததில் இருந்தே தந்தையின் பாசத்தை உணர முடியாத சின்னசிறு சிட்டை கைககளில் ஏந்தும் போதெல்லாம் தகப்பனுக்கு நிகரான அன்பை பொழிந்தவன். பெண்ணின் நிலையை பார்த்து தன் பெற்றோர் மனமொடிந்த நேரத்தில் அந்த குடும்பத்தை தன் தோள்களில் சுமந்தவன்.

அவனின் பேச்சிற்கு என்னவென்று பதிலுரைக்க. “இவன் கேள்விக்கே என்னால பதில் சொல்ல முடியலயே; பொண்டாட்டி கேக்கப்போற  கேள்விக்கெல்லாம் எப்படி பதில் சொல்லப் போறேன்” மனதிற்குள் நொந்தபடியே தன்னை கொட்டிக்கொண்டான் கிரிதரன்…

“போதும் சிவா உன் பேச்ச நிறுத்து.. நம்மள மதிச்சு ஒருத்தர் வந்தா இப்படி தான் நிக்க வச்சு கேள்வி கேப்பியா? மொதல்ல அவர உக்கார சொல்லு.. அவரையும் கொஞ்சம் பேச விடு…

என்ன சொல்ல வந்துருக்கார்னு கேட்டுட்டு அப்புறம் அப்பாவும் பிள்ளையும் மாறி மாறி அவர கேள்வி கேக்கலாம்” என்று செல்வி கூறிவிட

கிரிதரன் நிம்மதி பெருமூச்சு விட்டபடி தன் நன்றியை அவருக்கு மானசீகமாய் தெரிவித்துக் கொண்டான்….

“இப்படி சொல்லியே எங்கள கட்டிப் போடுறீங்கம்மா” சொல்லியபடியே

“உக்காருங்க.. என்ன பேசணும்? இந்த மன்னிப்பு புண்ணாக்குனு சொல்லி ஆரம்பிக்க வேணாம்; அத எல்லாத்தையும் ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுருங்க; இல்லனா அதுக்கும் எங்க அம்மாகிட்ட நான் பேச்சு வாங்க வேண்டியிருக்கும். சொல்ல வந்தத சுருக்கமா சொல்லிட்டு கிளம்புங்க” என்று வேண்டா வெறுப்பாக சொல்ல

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமால் “நான்… நான்… எனக்கு… இல்ல… என்னென்னமோ நடந்து போயிருச்சு; இப்படி ஆகும்னு யாரும் எதிர் பாக்கல; ஏதோ ஒரு வேகம்.. எல்லோருக்கும்…” பேசத் தெரியாதவன் திக்கித் திணறி பேசக் கற்றுக் கொள்பவன் போல வார்த்தைகள் தடுமாறி தொண்டையில்  சிக்கிக்கொள்ள…

“கொஞ்சம் தண்ணி கொண்டு வந்து குடு செல்வி” என சண்முகம் கூறியவுடன் விரைந்தே கொடுத்தார்..

எங்கே தான் முந்திக்கொண்டு கொடுத்தால் அதற்கும் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்று யோசிக்கையில் கணவரின் இந்த பேச்சு நிம்மதி அளித்ததோடு அவரின் மேல் மதிப்பும் கூடியது…

கிரிதரனுக்கும் ஆச்சரியமே… உள்ளே வர விடாமால் தடுத்தவர் இப்பொழுது தனக்கு உபசரிப்பதை கண்டு; மிச்சம் வைக்காமல் குடித்தவனுக்கு சற்றே தெம்பு வர தெளிவாக பேச தொடங்கினான்…

“நடந்த எதுவும் இல்லைன்னு ஆகிடாது; நான் அதை மாத்த நினைக்கிறேன்.. சத்தியமா சொல்றேன் இனிமே உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் நடக்காது. நடந்ததுக்கெல்லாம் நானே பொறுப்பெடுத்து உங்ககிட்ட மன்னிப்பு கேக்குறேன்…

நான் என்னோட வாழ்க்கைய திரும்ப வாழறதுக்கு நீங்க தான் ஒரு வழி காட்டனும்… என் குடும்பத்த என் கூட நீங்க அனுப்பி வைக்கணும்… அவங்கள கண் கலங்காம காப்பத்துறது என்னோட பொறுப்பு” என்று கூறி அனைவரின் முகத்தை பார்க்கும் நேரத்தில்

தட தடவென யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க வாசல் பக்கம் திருப்பியவனின் பார்வையில் அழகான பெண்குழந்தை வந்து நின்றது.

சிவப்பு நிறத்தில் வெள்ளை பூக்கள் போட்ட டாப்சும் சாம்பல் நிற ஸ்கர்ட்டும் அணிந்து ரோஜா நிற பூக்களால் பிரிண்ட் செய்யப்பட்ட கான்வாஸ் (ஷு)பாதங்களை அலங்கரிக்க ரோஜாப்பூவை அசரடிக்கும் சிவந்த நிறத்தில் கண்களும் முகமும் ஒரே நேரத்தில் பல கதைகள் பேசிய படியே வந்த குழந்தையை பார்க்க பார்க்க ஏதோ ஒரு இன்ப உணர்ச்சி உடலெங்கும் பரவ கண்களில் குளம் கட்டியது கிரிதரனுக்கு…

தன் குழந்தை; தன் ரத்தம்; தன் வாரிசு; தன் சந்தோசம்; என்று அனைத்திற்கும் அடையாளமாய் நின்ற குழந்தையின் கண்களும், முகபாவனைகளும் அவனையே பிரதிபலிக்க பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு..

குழந்தையை பார்த்த அந்த நொடி மூடுபனியாய் தன் மனதை சூழ்ந்திருந்த துன்பமேகங்கள் யாவும் களைந்து தெளிவான தோற்றமாய் அமைதியின் இருப்பிடமாய் மனது ஆனந்தித்தது…

“பாட்டி நான் எந்த சேட்டையும் பண்ணல… குட் கேர்ளாத்தான் இருந்தேன். ஆனாலும் மம்மி நான் கேட்டத வாங்கியே குடுக்கல” என்று குற்றப்பத்திரிகை வாசிக்க “ஆரம்பிச்சிட்டியா என்ன அவசரம்” என்று கூறியபடியே ரம்யா வர பரவச நிலையின் உச்சம் தான் கிரிதரனுக்கு..

இப்படி ஆனந்த பரவசநிலை அடைபவன் தான் விவாகரத்து என்னும் நல்ல செயலை செய்தவன் என்பதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்..

ஆனால் என்ன செய்ய விதி தன் விளையாட்டை அவனை வைத்து சற்று நன்றாக ஆடி விட்டது…

ரம்யாவிற்கும் வீட்டில் அமர்ந்திருப்பவனை பார்த்ததும் முகம் மலர்ந்தாலும் நொடி நேரத்தில் கடினத்தன்மை கொண்டது.. அதையும் அவன் கவனிக்க தவறவில்லை… தான் நினைத்த காரியம் சீக்கிரம் நிறைவேறும் என்று எண்ணமும் உருவாக கவனத்தை தன் குழந்தையின் மீது திருப்பி

“பேபிம்மா… என் கூட பேசுவீங்களா”.. குழந்தையின் முன் மண்டியிட்டு தொட்டு பேசிட முயல அந்த பிஞ்சுவோ அவசரமாக அருகில் அமர்ந்திருந்த தன் மாமனின் மடியில் தஞ்சமடைய அக்கணம் மனதளவில் மொத்தமாய் அடி வாங்கினான் கிரிதரன்.

அதனை பார்த்துக்கொண்டே தந்தையின் அருகில் வந்த ரம்யாவின் குரலும் கைகளும் சற்றே நடுங்க “அப்பா”… என்றழைக்க

“ஒண்ணுமில்லம்மா பதட்டப்படாதே… ஏதோ பேசணும்னு வந்துருக்காரு என்னனு கேட்டு அனுப்பி வச்சிறேன்.. நீ பாப்பாவ கூட்டிட்டு உள்ளே போய் ரெஸ்ட் எடு” அவளை உள்ளே அனுப்ப முயல…

செல்வியோ “இப்போ ஏன் அவளை உள்ளே அனுப்பிறீங்க.. எதுவா இருந்தாலும் அவளும் தெரிஞ்சுக்கணும்; அவ விருப்பம் இல்லாம இங்கே எதுவும் நடக்க போறது இல்ல. கொஞ்ச நேரம் அவ இங்கேயே இருக்கட்டும் என்று பேச

சுயத்தை அடைந்த கிரிதரன் “எப்படி இருக்கே ரம்யா? நான் உங்கள பாக்கத்தான் வந்துருக்கேன்… என்னை மன்னிச்சிரு; நடந்ததெல்லாம் மறந்துரு; இனிமே எந்த குழப்பமும் வராம நான் பார்த்துக்குறேன் நாம சேர்ந்து இருக்கலாம்” என்று கூற

அதைக் கேட்ட பெரிய பெண் தன் தந்தையை பார்த்து “வேண்டாம்” என்று தலையசைக்க… சிறிய பெண் தன் தந்தையை பார்த்து முறைத்தது…

ஏற்கனவே வெறுப்பில் மனம் உழன்று கொண்டிருந்த சண்முகம் மகளின் கையை அழுத்தமாய் பிடித்துக்கொண்டே “என் பொண்ணுக்கு பிடித்தம் இல்லாத எதையும் செய்ற உத்தேசம் எனக்கு இல்ல.. நீங்க கிளம்பலாம்” என்று இரத்தின சுருக்கமாய் கூறி பெண்ணையும் பேத்தியையும் அழைத்துக்கொண்டு உள்ளறைக்கு சென்று விட்டார்…

“இதுக்கும் மேல எதுவும் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்; வந்த மாப்பிளைக்கு உங்க மனசு கோணாம டிபன் குடுத்துட்டு அனுப்பி வைச்சுருங்க… அதோட இந்த பக்கம் தலைகாட்டமா இருக்க சொல்லுங்கம்மா… அது தான் அவருக்கு நல்லது” என சிவாவும் கூறிச் சென்று விட மிகுந்த ஏமாற்றம் அடைந்தான் கிரிதரன்..

 

யாரிடமும் எதுவும் பேசாமல் தன் எதிர்காலம் மீண்டும் ஆழமான பள்ளத்தில் விழுந்து விட்டதோ என்ற கழிவிரக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினான்….

 

error: Content is protected !!