PunnagaiMannan-1

PunnagaiMannan-1

புன்னகை மன்னன்

 அத்தியாயம் – 1

வாயிலில் நின்றிருந்த காவலாளி கதவைத் திறக்க அந்த ப்ளாக் ஆடி விரைந்து போய் அந்தக் கட்டிடத்தின் முன்பாக நின்றது.

அர்ஜூன் காரை விட்டு இறங்கி மளமளவென்று உள்ளே போனான். வேகம்… அர்ஜூன் என்றால் இன்றைய தொழில் வட்டாரத்தில் அனைவரும் அறிந்தது அவன் வேகம் தான். அதற்கு அவன் அசுர வளரச்சியே சாட்சி.

ரிசப்ஷனைத் தாண்டி உள்ளே போகும் போது செம்பில் பழுங்கிய அந்தப் பெயர் பலகையை ஒரு தரம் பார்த்துக் கொண்டான் அர்ஜூன்.

‘பி.எம் எக்ஸ்போர்ட்ஸ்’

இன்றைக்கு அந்தத் தொலைக்காட்சி நேர்காணலில் கூட அந்தப் பெண் இதைத்தானே கேட்டாள்.

“சார்! ‘பி.எம்’ன்னா என்ன சார்?”

“பார்த்தசாரதி அன்ட் மஞ்சுளா… அப்பா அம்மா பெயரோட முதலெழுத்துகள் தான் அந்த பி.எம்.” அவன் சொல்ல இந்த உலகமே அதை நம்பிக் கொண்டிருக்கிறது.

ஆனல் அவன் மனச்சாட்சிக்குத் தெரியும், அதன் அர்த்தமே வேறு என்று. அவன் காபினுக்குள் போனவன் சாய்ந்து அமர்ந்து கொண்டான். ஒரு காஃபி குடித்தால் தேவலாம் போல இருந்தது.

“தம்பீ…” அழைத்தபடி உள்ளே வந்தார் வடிவேல். வேட்டி சட்டையில் இருந்தார் மனிதர். தலையில் முக்கால்வாசி வழுக்கையாகவே இருந்தது.

“சொல்லுங்க மாமா.” இவன் அவரை அப்படித்தான் அழைப்பான். வயதில் மூத்தவர் என்பதையும் தாண்டி அவரின் தொழில் சுத்தம், கைச் சுத்தம் இவன் மதிக்கும் விஷயங்கள். நம்பிக்கையான மனிதர்.

“இதுல உங்க கையெழுத்து வேணும் தம்பி.” அவர் சொல்லவும் படித்தே பார்க்காமல் சைன் பண்ணினான் அர்ஜூன்.

“அடுத்த லோட் சாமான்கள் இன்னைக்கு ஷிப்புக்குப் போகுது தம்பி.”

“சரி மாமா.”

“என்னாச்சு தம்பி? கொஞ்சம் சோர்வாத் தெரியுறீங்க?”

“என்னன்னு தெரியலை மாமா. டயர்டா இருக்கு.”

“பின்ன… இப்படியே ஓடிக்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகுறது? அது உடம்பா இல்லை மிஷினா?” உரிமையாக வடிவேல் கண்டிக்கவும் சிரித்தான் அர்ஜூன்.

“கொஞ்சம் ஓய்வெடுங்க தம்பி.”

“சரி மாமா.” தயவாக வடிவேல் சொல்லவும் சட்டென்று இறங்கி வந்தான் அர்ஜூன். அவர் சொல்லி எதையும் அவன் மறுப்பதில்லை.

“எங்கையாவது வெளியூர் போங்க தம்பி. ஃப்ளைட் வேணாம். ட்ரெயின்ல போங்க. லாங் ஜர்னியா. ராஜ்தானியில டிக்கெட் போடட்டுமா தம்பி?” அந்த மனிதர் கேட்கவும் விலுக்கென்று நிமிர்ந்தான் அர்ஜூன்.

‘ராஜ்தானியா! ராஜ்தானி எக்ஸ்பிரஸ்?’ அவன் முகபாவம் பார்த்து வடிவேல் திடுக்கிட்டுப் போனார்.

“தம்பீ? என்ன ஆச்சு?‌”

“ஒன்னுமில்லை மாமா…” அவன் சமாளித்தான்.

“இல்லை… என்னமோ இருக்கு தம்பி.”

“அந்த ட்ரெயின்ல தான் முதல் முதலா டெல்லி போனேன். அப்போ தான்…” அவன் மேலே பேசவில்லை. ஆனால் வடிவேல் புரிந்து கொண்டார்.

“விடுங்க தம்பி. முப்பத்தியோரு வயசாச்சு. கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரத்துக்கு ரெண்டு பிள்ளைங்களுக்கு அப்பா ஆகி இருப்பீங்க. அதை விட்டுட்டு… உங்களால வீட்டுலயும் இப்போ வீணான மனவருத்தம்.”

“என்னை என்ன பண்ணச் சொல்லுறீங்க மாமா?”

“அபிராமி அம்மாவைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க தம்பி. கழுத்துல ஒரு தாலியைச் சுமக்கணும்னு அவங்களுக்கும் ஆசை இருக்காதா?”

“மாமா… அதுக்காக…”

“கொஞ்சம் யோசிங்க தம்பி. போனது போனதாவே இருக்கட்டும்.” அதற்கு மேல் எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டார் வடிவேல்.

ஆனால் அர்ஜூன் முகத்தில் ரௌத்திரம் தெரிந்தது. போனதா? எது போனது? போனதென்ன காசா? பணமா? சொத்தா? போனது என் உயிர்! அதை அத்தனை சுலபத்தில் விடச் சொல்கிறார்களே?

நான் கேட்டேனா? என்னை வந்து காதலி என்று நான் கேட்டேனா? உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கேதானென்று வசனம் பேசிவிட்டு… ஒரு மனைவி போல அனைத்து சுகங்களும் கொடுத்துவிட்டு… இப்போது ஒன்றுமே இல்லையென்றால்?

போனது போகட்டும் என்றால்? அர்ஜூனின் தாடை என்புகள் இறுகியது. கண்மூடி நாற்காலியில் சாய்ந்தான். கண்முன்னே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் காட்சி தந்தது. இன்றும் பசுமையாக நினைவில் நின்றது ராஜ்தானி எக்ஸ்பிரஸ்.

*************

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 12433. நேரம் காலை ஐந்து முப்பது.

சென்னையிலிருந்து நியூ டெல்லி பயணப்பட இருக்கும் அந்த ரயில் பரபரப்பாக நின்றிருந்தது.

ரயில் சரியாக ஆறு பத்திற்குக் கிளம்பும் என்பதால் அப்பாவும் மகனும் சற்று முன்பே கிளம்பி வந்திருந்தார்கள்.

“அப்பா! நீங்க கிளம்புங்கப்பா. இல்லைன்னா காலேஜ் போக லேட்டாகிடும்.” அப்பாவை விரட்டிக் கொண்டிருந்தான் அர்ஜூன். அப்போது இருபத்தி நான்கின் ஆரம்பத்தில் இருந்தான்.

“பரவால்லை அர்ஜூன். இன்னும் கொஞ்ச நேரம் நின்னுட்டுப் போறேனே.”

“இன்னும் என்னைச் சின்னப் பையன் மாதிரியே நடத்தாதீங்க ப்பா.”

“அப்படி இல்லை அர்ஜூன்… அடிக்கடி இனிமேல நாம பார்க்க முடியாது. உங்கூட இன்னும் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுது. அதுதான்…” சொன்ன அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தான் அர்ஜூன்.

பார்த்தசாரதி… அர்ஜூனின் அப்பா. அப்பாவா? அண்ணனா? பார்ப்பவர்கள் இப்படிக் கேட்குமளவிற்கு இருக்கும் அவரின் தோற்றம். சின்ன வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் இத்தனைப் பெரிதாக ஒரு மகன் அவரிற்கு.

மனைவி தவறி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அன்று முதல் அப்பாவிற்கு மகன் தான் உலகம்.

காலேஜில் பேராசிரியராக இருக்கிறார் பார்த்தசாரதி. எப்போதுமே உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் மனிதர். மனைவி இறந்தப் பிறகும் அது இன்றுவரைத் தொடர்கிறது. ஆரோக்கியம் பேணப்படுகிறது.

“அடிக்கடி ஃபோன் பண்ணு அர்ஜூன்.‌ கொஞ்சம் லோன்லியா ஃபீல் பண்ணுவேன்டா.”

“எதுக்குத் தனியா உக்காந்திருக்கணும்? அபிராமி ஆன்ட்டியை வரச்சொன்னா வருவாங்க.”

“டேய்! ஏன்டா?”

“என்ன டேய்? என்ன ஏன்டா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படித் தனியாவே உக்காந்திருக்கிறதா எண்ணம்?”

“உனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்குற வயசுல நீ என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லுற அர்ஜூன்.”

“இப்போ எனக்குக் கல்யாணம் பண்ணுற வயசுன்னு உங்களுக்கு யாரு சொன்னா? அப்படியே தான் இருந்தாலும், நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன தப்புங்கிறேன்?”

“எம் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணச் சொல்லுற நீ” இப்போது முகத்தை வேண்டுமென்றே கடுகடுவென வைத்துக் கொண்டார் பார்த்தசாரதி.

“இதென்னடா வம்பாப் போச்சு! போய்ச் சேர்ந்த பொண்டாட்டிக்கு இங்க ஒருத்தர் உண்மையா இருக்கப் போறாராம்!” பேசிக் கொண்டிருக்கும் போதே அர்ஜூனின் ஃபோன் அடித்தது. எடுத்துப் பார்த்தான். ‘அபிராமி ஆன்ட்டி’ என்றது.

“உங்க ஆளுதான். அப்பா! உங்களுக்கு இந்த வருஷம் மட்டும் தான் டைம். நீங்களா ஆன்ட்டிக்கிட்டப் பேசலைன்னா நான் பேசுவேன். இப்போ கிளம்புங்க.” சூடாகச் சொன்னவன் ரயிலில் ஏறிக் கொண்டான்.

“ஹலோ! சொல்லுங்க ஆன்ட்டி.” பேசியபடியே போகும் மகனை ஒரு புன்சிரிப்போடுப் பார்த்திருந்தார் பார்த்தசாரதி.

அம்மாவின் நிறத்தில் இருந்தாலும் தன்னையே கொண்டு பிறந்திருக்கும் மகன் மேல் அப்பாவுக்கு எப்போதுமே அலாதிப் பிரியம் தான்.

படிப்பிலும் அப்படித்தான். அவன் அப்பாவின் நகல். படு கெட்டிக்காரன். டெல்லி யூனிவர்ஸிட்டியில் மெரிட்டில் இடம் கிடைத்திருந்தது.

எம்.பி.ஏ., ‘இன்டர்நேஷனல் மானேஜ்மென்ட்’ அது அர்ஜூனின் கனவு. அதற்காகப் போராடிப் படித்து இன்று வெற்றி கண்டிருக்கிறான். பார்த்தசாரதிக்கு அதில் கொள்ளைப் பெருமை. இருக்காதா என்ன? டெல்லி யூனிவர்ஸிட்டியில் இடம் கிடைப்பதென்றால் சின்னக் காரியமா?

அர்ஜூனின் அம்மா மஞ்சுளாவிற்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. ஆனால் வசதியான வீட்டுப் பெண். அந்தக் காலத்திலேயே பெரிய படிப்புப் படித்திருந்த கணவர் மேல் காதல் வருவதற்குப் பதிலாக மரியாதை தான் வந்தது.

அதில் பார்த்தசாரதிக்குக் கொஞ்சம் வருத்தம் தான். ஆனாலும் மஞ்சுளாவைக் குறை சொல்ல முடியாது. நல்ல அம்மா, நல்ல மனைவி. ஆனால்… காதல் மனைவி இல்லை.

படிப்பை முடித்துவிட்டு சொந்தமாகப் பெரிய அளவில் தொழில் பண்ணவேண்டும் என்பது அர்ஜூனின் திட்டம். அம்மா வழிவந்த சொத்துக்கள் நிறையவே அர்ஜூன் பெயரில் இருந்ததால் மூலதனத்திற்கு எந்தக் கவலையும் இல்லை. பார்த்தசாரதி அதிலெல்லாம் ஒரு போதும் கை வைத்ததில்லை.

அவருக்கு வரும் சம்பளமே அவருக்கும் மகனுக்கும் தாராளமாகவே இருந்தது. சொந்த வீடு, நிம்மதியான வாழ்க்கை. ஆனால் இனிமேல் தனிமைத் தன்னை வாட்டும் என்று நினைத்தபடி நகர்ந்தார் மனிதர்.

“அப்பா இப்போ தான் கிளம்பினார். இன்னைக்குக் காலேஜ் வருவார் ஆன்ட்டி.” தன் இடத்தில் உட்கார்ந்த அர்ஜூன் பேச்சைத் தொடர்ந்தான்.

“உடம்பைப் பர்த்துக்கோ அர்ஜூன். படிப்புப் படிப்புன்னு சதா லைப்ரரியிலேயே கிடக்காத. சரியா? வேளா வேளைக்குச் சாப்பிடு.”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க அப்பாவைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க ஆன்ட்டி.”

“அர்ஜூன்?” அபிராமியின் குரலில் ஒரு தயக்கம் இருந்தது.

“என்னாச்சு ஆன்ட்டி?”

“அர்ஜூன்… நீயும் இருக்கிறப்போ நான் உங்க வீட்டுக்கு வர்றது வேறே. ஆனா இப்பவும் அப்படிப் போனா நல்லா இருக்காது டா.”

“ஏன் ஆன்ட்டி?’

“யாராவது ஏதாவதுப் பேசிடுவாங்க அர்ஜூன்.”

“ஆன்ட்டி… இதையெல்லாம் நீங்க கண்டுக்குவீங்களா?”

“ஒருசில விஷயங்களைக் கண்டுக்கத்தான் வேணும் அர்ஜூன். இல்லைன்னா கஷ்டப்படுவோம்.”

“…………..”

“சாப்பாட்டைப் பத்திக் கவலைப்படாதே. சமைச்சு ராமுக்கிட்டக் குடுத்து அனுப்புறேன்.”

“ம்…” அதன்பிறகு அர்ஜூன் அதிகம் பேசவில்லை. தலைக்குள் ஏதேதோ சிந்தனைகள். ஆன்ட்டி அப்பாவைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மலைபோல இருந்தது. அதனால் தான் தைரியமாகக் கிளம்பினான்.

ஆனால் அவர் இப்போது இப்படிச் சொல்கிறாரே? இப்போது என்னதான் செய்வது? அர்ஜூனுக்கு கவலை பிடித்துக் கொண்டது.

இரண்டு ஆண்டுகளாக அப்பா வேலை செய்யும் காலேஜில் தான் இந்த அபிராமி ஆன்ட்டியும் வேலை பார்க்கிறார். நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தார் அந்தப் பெண்மணி.

அப்பாவை அவருக்கு நிரம்பவே பிடிக்கும். அதை அவர் கண்களே சொல்லும். அர்ஜூனிற்குத் தெரியும். அவன் என்ன சின்னப் பையனா? அப்பாவை அவர் பார்க்கும் பார்வையில் அவ்வளவு காதல் தெரியும். ஆனால் அதைச் சொன்னால் அப்பா ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அப்பா ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தாலும் அப்படிச் சொல்லமுடியாத தோற்றம். அபிராமி ஆன்ட்டியும் அப்பாவும் சேர்ந்து நடந்தால் பார்க்க அத்தனை அழகாக இருக்கும். அப்பாவின் அறிவிற்கும் தோற்றத்திற்கும் ஈடு கொடுக்க அவரால் முடியும். ஆனால் இந்த அப்பாவை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று தான் அர்ஜூனுக்குப் புரியவில்லை.

யோசனையில் மூழ்கி இருந்தவனைக் கலைத்தது இரு இளங்குரல்கள். திரும்பிப் பார்த்தான் அர்ஜூன். பெண்கள் இருவர் இவன் அமர்ந்திருந்த பகுதிக்குள் ஏறிக் கொண்டிருந்தார்கள். பொழுதைப் போக்க அவன் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டான் அர்ஜூன்.

கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் எண்ணம் முழுவதையும் அப்பாவும், அபிராமி ஆன்ட்டியுமே நிறைத்திருந்தார்கள்.

“ஹாய் ண்ணா!” அந்தக் குரலில் கவனம் சிதறியது அர்ஜூனிற்கு. சட்டென்று நிமிர்ந்தான்.

ஏறிய பெண்களில் ஒன்று இவனைப் பார்த்து நட்பாகப் புன்னகைத்தது. அவர்கள் உடமைகளை பத்திரப் படுத்திவிட்டு கொஞ்சம் பரபரப்பாக அமர்ந்திருந்தார்கள்.

“ஹாய்.” அர்ஜூனும் புன்னகைத்தான். முன்னெச்சரிக்கையாக அவர்கள் ‘அண்ணா’ போட்டது அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

அத்தனை தூரம் அவர்களுக்கும் தனக்கும் வயது வித்தியாசம் இருக்கும் போலத் தெரியவில்லை அவனுக்கு. கையில் அவர்கள் வைத்திருந்த ஃபோன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைச் சொன்னது. பெண்கள் இப்படி ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் சந்தோஷம் தான் என்று எண்ணிக் கொண்டான்.

“எங்க இன்னும் இந்த மதுராவைக் காணோம்?” ஒரு பெண் பதட்டமாகக் கேட்க மற்றவளுக்கும் அதே பதட்டம் தொற்றிக் கொண்டது போலும்.

“ஆமா… ட்ரெயின் வேற கிளம்பப் போகுது.” என்றாள் நேரத்தைச் சரி பார்த்த படி. இவர்களைக் கண்டும் காணாதது போல அமர்ந்திருந்தான் அர்ஜூன்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு பெண் தடதடவென ஓடி வந்து ரெயிலுக்குள் ஏறிக் கொண்டாள். அர்ஜூனின் பார்வை ஒரு நொடி அதிகமாகவே அவளைத் தொட்டு மீண்டது.

“மதுரா!” ஒருத்தி கூவ இன்னொருத்தி எழுந்தே நின்றுவிட்டாள். மூன்று பெண்களும் ஹை ஃபைவ் கொடுத்துக் கொண்டார்கள். ஏதோ சாதித்ததுப் போல சிரித்துக் கொண்டார்கள்.

பார்த்தாலே தெரிந்தது… மூன்று பேரும் சேர்ந்து ஏதோ ஒரு திருட்டுத்தனம் பண்ணுகிறார்கள் என்று. ஆனால் மூன்று முகங்களிலும் குற்றங்களைத் தாண்டிய ஒரு நிர்மலம் தெரிந்தது.

“மதுரா! நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா? எங்க நீ வராம போயிடுவியோன்னு. உன்னை நம்பித்தான் வீட்டுல பர்மிஷனே வாங்கினேன்.”

“கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ப்பா.” இது அவர்கள் மதுரா என்று சொன்ன பெண்.

“கொஞ்சம் சீக்கிரமா வரமாட்டியா? எனக்கு உயிரே போயிடுச்சு.” ஒருத்தி குறைப்பட, அந்த மதுரா…

“சரி சரி…” என்றாள். அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த மதுராவின் ஃபோன் அழைத்தது.

“ஷ்…‌ அம்மா…‌ அம்மா பேசுறாங்க.” அவள் கிசுகிசுப்பாகச் சொல்லி மற்றைய இரு பெண்களையும் அடக்கினாள். அவர்களும் ஏதோ ராணுவ உத்தரவிற்கு அடிபணிவது போல அமைதி காத்தார்கள்.

“அம்மா…” அடுத்த முனையில் என்ன சொன்னார்களோ! இவள் இங்கே சொன்ன பதில் அர்ஜூனைத் தூக்கி வாரிப் போட்டது.

“ஆமாம்மா… இன்னும் கொஞ்ச நேரத்துல கேட் ஓபன் பண்ணிடுவாங்க. ஃப்ளைட் கிளம்பிடும்.” சொன்ன படியே திரும்பியவள் அர்ஜூனின் அரண்ட முகம் பார்த்துப் பல்லைக் காட்டினாள்.

“சாரி…” சத்தமே வராமல் அந்த மதுரா இவனிடம் மன்னிப்புக் கேட்க… அப்போதுதான் கூட இருந்த இருவரும் இவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.

அம்மாவிடம் ஏதேதோ கதையளந்தப் பிறகு பெண்கள் மூவரும் ஏதோ மலையைச் சாய்த்து விட்ட அசதியில் சாய்ந்து உட்கார்ந்தார்கள்.

“அது ஒன்னுமில்லை ண்ணா…” ஒருத்தி இழுக்க, இப்போது அந்த மதுரா குறுக்கறுத்தாள்.

“அண்ணாவா?”

“ம்… அந்த அண்ணா ரொம்ப நல்லவங்க.‌” உடனடியாக இவனுக்கொரு இலவச நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அர்ஜூன் சிரித்துக் கொண்டான்.

“இவ்வளவு ஹான்ஸம்மா இருக்கான். அண்ணாங்கிறே?” இது அவர்கள் கிசுகிசுத்துக் கொண்டது. அது அர்ஜூனுக்குக் கேட்கவில்லை.

“இவங்க வீட்டுல மதுராவை ட்ரெயின்ல போக விடமாட்டாங்க. எல்லாத்துக்கும் ஃப்ளைட் தான். இவளுக்கு இப்படி லாங் ஜர்னி ட்ரெயின்ல போகப் பிடிக்குமா… தனியாப் போக பயமா இருக்குன்னு சொன்னா. அதான் நாங்களும் கிளம்பி வந்தோம். ஓசியில டெல்லியைப் பார்க்க.” சொல்லிவிட்டு அந்தப் பெண்கள் சிரிக்க அர்ஜூனும் சிரித்தான்.

“எல்லாத்துக்கும் சிரிப்புத்தானா அண்ணா?”

“ஐம் அர்ஜூன்.”

“நான் பவித்ரா ண்ணா.”

நான் அர்ச்சனா ண்ணா.” அவர்கள் அறிமுகப் படுத்திக் கொள்ள அந்த மதுரா லேசாக இவனை அண்ணார்ந்து பார்த்தாள். அந்தக் கண்கள் அர்ஜூனை என்னவோ பண்ணியது.

“நீயும் உம் பேரை அர்ஜூன் அண்ணாக்கிட்டே சொல்லேன்.” பவித்ரா சிணுங்கினாள். ஆனால் அந்த மதுரா வாயைத் திறிக்கவில்லை. இவனைக் கொஞ்சம் சங்கடமாகப் பார்த்தது போல இருந்தது.

“பரவாயில்லை பவித்ரா. அவங்க பெயர் மதுரான்னு நீங்களே சொல்லிட்டீங்களே, அப்புறம் என்ன?” அர்ஜூன் சொல்லிவிட்டுப் புத்தகத்தில் மூழ்கி விட்டான்.

கிட்டத்தட்ட முப்பது மணித்தியாலங்களைத் தொட்ட அந்தப் பயணத்தை அந்த மூன்று பெண்களும் நிரம்பவே ரசித்தார்கள். ஆடாத குறை மட்டும் தான். பாடினார்கள், சிரித்தார்கள், கைக்கொட்டினார்கள். காண்பதையெல்லாம் வாங்கி உண்டார்கள். காசு தண்ணீராய் அந்த மதுராவின் கையில் செலவழிந்தது.

ஆங்காங்கே இவனுக்கும் சில பல கவனிப்புகள். மறுக்க முடியாமல் ஒரு சிலதை ஏற்றுக் கொண்டான் அர்ஜூன்.

அந்த ரயில்பயணம் அர்ஜூன் வாழ்வில் மட்டுமல்ல, அங்கிருந்த மற்றைய மூன்று பெண்களின் வாழ்விலும் மறக்க முடியாத ஒன்றாகவே மாறிப்போனது.

எங்கோ கேட்ட ஒரு சத்தத்தில் சட்டென்று கலைந்தான் ஆர்ஜூன். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் காணாமல் போயிருந்தது. ஆஃபீஸ் அறையில் அவனும் அவன் தனிமையும்… எப்போதும் போல…

‘ஏய்! புன்னகை மன்னா! மை பி.எம். அதென்ன எப்போப் பார்த்தாலும் ஒரு சிரிப்பு. பொண்ணுங்களை மயக்குற மாதிரி!’ அவன் காதோரம் சிணுங்கிய குரல் அவன் இதழில் முடிவடைந்தது.

கண்களை மூடிக்கொண்டான் அர்ஜூன். நினைக்கும் போதே மனம் மயங்கியது. எங்கோ வலித்தது. இப்போதே அந்த சுகம் மீண்டும் வேண்டுமென்று மனம் கிடந்துத் தவித்தது.

மூடிய அவன் விழிகளிலிருந்து ஒற்றைக் கோடாய் கண்ணீர் இறங்கியது.

ஏற்றுமதித் தொழிலின் இன்றைய இளம் புயல் அர்ஜூன் பார்த்தசாரதி அழுது கொண்டிருந்தான்.

error: Content is protected !!