PunnagaiMannan-2

PunnagaiMannan-2

புன்னகை மன்னன்

அத்தியாயம் – 2

அர்ஜூன் ஆஃபீஸிலிருந்து அப்போது தான் வீடு திரும்பி இருந்தான். அவன் நடையில் கூட அவன் வேகம் தான் தெறித்து விழுந்தது.

அப்பாவும் அவனுமாக அப்போது இருந்த அவர்கள் வீட்டில் தான் இப்போது வடிவேல் மாமா இருக்கிறார். தொழிலில் காலூன்ற ஆரம்பித்த பிறகு சென்னையின் முக்கியமான ஓரிடத்தில் தனது ஜாகையை மாற்றிக் கொண்டான் அர்ஜூன்.

அப்பா ஹாலில் உட்கார்ந்து கொண்டு டீவியை ஓட விட்டிருந்தார். இப்போதெல்லாம் இவனோடு அவ்வளவாகப் பேசுவதில்லை.‌ அபிராமி ஆன்ட்டி தான் இருவருக்கும் பாலம்.

அபிராமியைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் அர்ஜூன். வயது போன காலத்தில் துணையும் இல்லாமல் அவர் அவதிப்படுவதை அவன் அனுமதிக்கவில்லை.

“ஆன்ட்டி எங்கப்பா?”

“ரூம்ல தான் இருப்பா.” கேள்விக்குப் பதில் வந்தது. அவ்வளவுதான்.

அர்ஜூன் எதுவும் பேசவில்லை. நேராக மாடிக்குப் போனான். அபிராமியின் அறைக்கதவை இரு முறை தட்டிவிட்டு உள்ளே போனான்.

அபிராமி கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தார். இரண்டு வாரங்களாகக் கொஞ்சம் நலிந்து போய்த்தான் திரிந்து கொண்டிருக்கிறார். டாக்டரும் வந்துப் பார்த்தாகி விட்டது.

உடம்பில் எந்தப் பிரச்சனையும் இல்லையாம். மனது தான் இப்போது அவருக்கு உலையாக இருந்தது. அப்பாவின் கோபம் அத்தனையும் இவன் மேல் பாய அதுவே காரணமாகவும் ஆகிப்போனது.

“ஆன்ட்டி…” அந்தக் குரலில் கண்விழித்துப் பார்த்தார் அபிராமி.

“அர்ஜூன்… வந்துட்டியா? இதோ… காஃபி குடுக்கிறேன்.” அவர் எழுந்து கொள்ளப் போக அதைத் தடுத்தான் அர்ஜூன்.

அவர் தோள்களை அழுத்தி மீண்டும் தலையணையில் அவர் தலையைச் சாய்த்தவன் அவர் கால்களைப் பிடித்து விட்டான்.

“அர்ஜூன்… கையை எடு. இப்படிப் பண்ணாதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.”

“ஏன்? எங்கம்மாக்கு நான் பண்ணக்கூடாதா?”

“ஆமா! பேச்சு மட்டும் தான் சீனிச் சக்கரை. கூப்பிடுறது ஆன்ட்டின்னு. இதுல இவருக்கு நான் அம்மாவாம்!” அவர் நொடித்துக் கொள்ள அர்ஜூன் சிரித்தான்.

“அம்மான்னு கூப்பிடேன் அர்ஜூன்.”

“சரிம்மா… நானும் தான் ட்ர்ரை பண்ணுறேன். ஆனா வரமாட்டேங்குதே!”

“அடப் போடா.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராமு உள்ளே வந்தார். அபிராமியிடம் அப்போதிருந்தே வேலையிலிருந்த மனிதர்.‌ அவர் இங்கே குடிபெயரவும் கூடவே வந்துவிட்டார்.

“அம்மா! சாப்பாடு ரெடி.”

“இதோ… வர்றேன் ராமுண்ணா. அர்ஜூன்… வா சாப்பிடலாம்.”

“ம்…‌ சரிம்மா.”

இருவரும் கீழே இறங்கிப் போக பார்த்தசாரதி இவர்களுக்காக டைனிங் டேபிளில் காத்திருந்தார். எதுவும் பேசிக் கொள்ளாமல் உண்டு முடித்தவர் அவர் ரூமிற்குள் புகுந்து கொண்டார்.

“இவர் பிரச்சனை என்னம்மா?” போகும் அப்பாவைக் கடுப்பாகப் பார்த்தான் மகன்.

“வேறென்ன? நீதான்… நீயொரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டா அவர் குஷியாகிடுவார். அப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை.”

அபிராமி புன்னகைத்தபடி அழகாகச் சொல்லவும் அர்ஜூனும் சிரித்தான். அந்தச் சிரிப்பு பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது.

“சிரிக்கும் போது பார்க்க ரொம்ப அழகா இருக்கடா அர்ஜூன்.” அம்மா ரசித்துச் சொல்லவும் வெளிக்குச் சிரித்தவன் நெஞ்சில், யாரோ கத்தியைப் பாய்ச்சியது போல இருந்தது.

‘பி.எம்…‌ யூ ஆர் மை பி.எம்… இப்படி அடிக்கடி சிரிச்சா நான் என்னதான் பண்ணுறதாம்?’ என்றோ சரசமாக அவனைக் கொஞ்சிய குரல் இப்போதும் அவன் காதில் எதிரொலித்தது.

‘அதென்ன? எப்பப் பார்த்தாலும் என்னை ‘பி.எம்’ன்னு கூப்பிடுற?’

‘அது அப்படித்தான்.’ முறுக்கிக் கொண்டாள் பெண்.

‘ஏய்! இப்போ சொல்லப் போறியா இல்லையா?’ அவன் மிரட்டினான்.

‘பி.எம் ன்னா புன்னகை மன்னன்!’ அவள் கலகலவென்றுச் சிரித்தாள்.

எதற்கோ அஞ்சி ஓடுபவனைப் போல டீவியை ஆன் பண்ணினான் அர்ஜூன். அதிலும் ஏதோ ஒரு காதல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. காதலியும், காதலனும் ரயில் பயணமொன்றில் சல்லாபித்துக் கொண்டிருந்தார்கள். அங்கேயும் ட்ரெயினா? அர்ஜூன் நொந்து போனான்.

“அம்மா… நான் தூங்கட்டுமா? டயர்டா இருக்கு.”

“சரிடா… குட் நைட்.”

“குட் நைட் மா.” சொல்லிவிட்டு அர்ஜூன் தனது ரூமிற்கு வந்து விட்டான். தான் அங்கே இருக்கும் வரை அப்பா வெளியே வரமாட்டார் என்று தெரியும். இதுதானே கொஞ்ச நாளாக நடக்கிறது.

மகனோடு சண்டை போட்ட படி மல்லுக்கு நிற்கிறார் பார்த்தசாரதி. இவன் ஒரு கல்யாணத்தைப் பண்ணாமல் தனியாக நிற்கும் ஆதங்கம் அவருக்கு. அவர் பேசுவதிலும் நியாயம் இருப்பதால் அபிராமியும் எதுவும் சொல்வதில்லை.

அபிராமியின் கழுத்தில் இன்று வரை அவர் தாலி கட்டாமல் இருப்பதற்குக் காரணமும் அதுதான். இவையெல்லாம் சேர்ந்து அந்தப் பெண்மணிக்கு அழுத்தத்தைக் கொடுத்ததோ என்னவோ!‌ இப்போதெல்லாம் சோர்ந்து போனார். அப்பாவும் மகனும் துடித்துப் போனார்கள்.

அவர்களுக்கென்று ஆதரவாக இருக்கும் ஒற்றை ஜீவன் அவரல்லவா? சிறந்த டாக்டரையே நாடினார்கள். நோய் உடம்பிலென்றால் வைத்தியம் பார்க்கலாம். மனதிலென்றால் என்ன தான் பண்ணுவது. அடிக்கடி சோர்ந்து போய் உட்காரும் அந்த அன்புருவத்தை ஒரு கையாலாகாதத் தனத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான் அர்ஜூன்.

*************

அன்று ராஜ்தானி எக்ஸ்பிரஸில் டெல்லி வந்திறங்கியவன், அந்த ரயில் சினேகத்தை அத்தோடு முடித்துக் கொண்டான். பெண்கள் மூவரும் இவனோடு புன்னகைத்தப் படியே விடைபெற்றுக் கொண்டார்கள்.

ஒரு வாரம் மளமளவென்று நகர்ந்திருந்தது அர்ஜூனுக்கு. ஹாஸ்டல் வாசம் தான். தனியாக வீடு எடுக்கும் அளவிற்கெல்லாம் அவன் பொருளாதார நிலை அவனுக்கு இடம் கொடுக்கவில்லை.

ரூமில் இவனோடு இன்னொரு பையனும் இருந்தான். பெரிதாகப் பிரச்சனை என்று எதுவும் இருக்கவில்லை. தினமும் அப்பாவிடமும் ஆன்ட்டியிடமும் பேசுவான்.

படிப்பு என்பது அவனுக்கு எப்போதுமே பிடித்தமான விஷயம். அதுவும் இந்தப் படிப்பு, அவன் கனவு. மூழ்கிப் போனான் அர்ஜூன்.

இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த அவன் வாழ்க்கையில் வந்த புயல் தான் மதுரா. அர்ஜூனிடத்தில் இருந்தது நிதானமான வேகம் என்றால்… இது நிதானமற்ற வேகம். புயலின் வேகம். அந்தப் புயல் தான் அவனைப் புரட்டியே போட்டது.

லைப்ரரிக்குப் போய் கொண்டிருந்த அர்ஜூன் தான் முதலில் அவளைப் பார்த்தான். ஒரு வாரம் கடந்திருந்தாலும் எளிதாக அவனால் அவளை இனங்கண்டு கொள்ள முடிந்தது.

“மதுரா!” அவன் ஆச்சரியமாக அழைக்க அவளும் திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பார்த்தாள்.

“அர்ஜூன்!”

“இங்க என்ன பண்ணுறீங்க?” அவன் குரலில் இப்போதும் ஆச்சரியத்தின் மிச்சங்கள் இருந்தன.

“சும்மாதான்… ரெண்டு வருஷம் இந்த யூனிவர்ஸிட்டியைச் சுத்திப் பார்க்கலாம்னு வந்தேன்.” அவள் பேச்சில் அவன் வெடித்துச் சிரித்தான்.

“ஆமா… கூட வந்த ரெண்டு பேரும் எங்க?”

“அவங்களுக்கு இந்த ட்ரிப் கட்டுப்படியாகாதாம். அதால தாஜ்மஹாலை மட்டும் பார்த்திட்டுக் கிளம்பிட்டாங்க.”

“ஓ…” அவன் முகத்தில் புன்னகை வழிந்தது. ஆனால் அவள் வெகு சீரியஸாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இப்படித்தான் ஆரம்பித்தது அவர்கள் நட்பு. மதுரா படு குறும்புக்காரியாக இருந்தாள். சமயத்தில் அர்ஜூனைத் தனது வேகத்தால் திணறடிப்பதும் உண்டு.

அடிக்கடி ஏதாவது சிக்கல்களில் மாட்டிக் கொள்வது அவள் வாடிக்கை. அப்போதெல்லாம் அவனுக்கு கால் வரும்.

“அர்ஜூன்…‌ ப்ளீஸ்… ஹெல்ப் மீ யா?” அவள் கெஞ்சும் போது அவனுக்கு மறுக்க மனம் வராது. புத்தகங்களை ஓரங்கட்டி விட்டு அவளைத் தேடிப் போவான். அது எந்த நேரமானாலும்.

“ஒரு இடத்தில அடங்கி உட்கார மாட்டியா மதுரா?” இது அவன் அடிக்கடிச் சொல்லும் வார்த்தைகள்.

ஒற்றைப் படுக்கை அறை கொண்ட ஃப்ளாட்டை அவளுக்காக வாங்கிக் கொடுத்திருந்தார் அவள் அப்பா உதய நாராயணன். கூடவே சின்னதாக ஒரு காரும். மிரண்டு போனான் அர்ஜூன்.

அவள் வசதி படைத்தவள் என்று முதல் சந்திப்பிலேயே அவனுக்குப் புரிந்தது தான். ஆனால் இத்தனைத் தூரம் எதிர்பார்த்திருக்கவில்லை.

இரண்டாண்டுப் படிப்பிற்காக வீடே வாங்குவார்களா? அதுவும் டெல்லியில்! அவள் அப்பா வாங்கி இருந்தார். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம் போல் தான் தெரிந்தது.

ஒரு நாள் அப்படித்தான். மழை பெய்து கொண்டிருந்த மாலைப் பொழுது.‌ புத்தகங்களை மூடி வைத்து விட்டு கையில் காஃபியோடு கொட்டும் மழையை ரசித்திருந்தான் அர்ஜூன்.

ஃபோன் சிணுங்கியது. பார்த்தால் ‘மதுரா’ என்றது. அர்ஜூனுக்குத் திக்கென்றது. அவசரமாக அழைப்பை ஏற்றான்.

“அர்…ஜூன்…” அவள் குரல் ஹீனமாக வந்தது.

“மதுரா என்னாச்சு? எங்க இருக்க?” அவன் பதறினான்.

“விழுந்திட்டேன் அர்ஜூன்.”

“என்னது! விழுந்திட்டியா? எங்க?” அவன் கேட்ட விதத்தில் பயந்து கொண்டே பதில் சொன்னாள் பெண். ஓட்டமும் நடையுமாக அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் அர்ஜூன்.

கை, காலில் எல்லாம் சிராய்த்தபடி உடம்பு முழுக்க சேறை அப்பிக்கொண்டு பாவம் போல உட்கார்ந்திருந்தாள். அறையலாம் போல ஆத்திரம் வந்தது அர்ஜூனுக்கு.

இவனைக் கண்டதும் கண்களில் கண்ணீர் பொங்க,

“அர்ஜூன்.” என்றாள். உதடு பிதுங்கியது.

“கார் எங்க?”

“கொண்டு வரலை.” அவள் பதிலில் ஒரு டாக்ஸியைப் பிடித்தவன் அவளையும் ஏற்றிக்கொண்டு அவள் வீடு வந்திருந்தான்.

ஃப்ளாட் வாசலில் நின்றிருந்த கூர்க்கா இவள் கோலம் பார்த்து வாய்விட்டுச் சிரித்தான். கொஞ்சமும் அனுதாபப் படாமல் அவன் சிரிக்கவும் அர்ஜூனுக்குக் கோபம் வந்தது. அதையே அவன் ஹிந்தியில் கேட்டபோது, கூர்க்கா இன்னுமே சிரித்தான்.

“மதுரா மேடமோட சேட்டைகளை நான் இந்த ஆறு மாசமா பார்த்துக்கிட்டுத் தானே இருக்கேன் சாப்.” அவன் பதிலில் அர்ஜூன் தலையில் அடித்துக் கொண்டான்.

மானம் போனது. அவளை உறுத்து அவன் முறைக்க நல்ல பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டாள்.

பாத்ரூமிற்குள் அவள் போக அங்கிருந்த கிச்சனில் காஃபி தயாரித்தான் அர்ஜூன். நல்ல பழக்கம் இருந்தாலும் அவள் ஃப்ளாட்டுக்கு இதுவரை அவன் வந்தது கிடையாது.

மிகவும் பாதுகாப்பான இடத்தில் தான் மகளுக்கு இருப்பிடத்தைத் தெரிவு செய்திருந்தார் உதய நாராயணன். அரசியலில் பெரும்புள்ளி.

“இந்த மழையில எங்க போன மதுரா?” உடையை மாற்றிக் கொண்டு வந்தவள் கையில் காஃபியைக் கொடுத்தவன் உஷ்ணமாக் கேட்டான்.

“மழையில சும்மா… நனையலாமேன்னு…”

“வாட்! அறிவிருக்கா உனக்கு?”

“ஏன் அர்ஜூன்? நீ குடுக்கப் போறியா?” டென்ஷன் நீங்கி மதுரவாக அவள் இப்போது மாறி இருந்தாள்.

“விட்டேன்னா ஒரு அறை… பல்லுப் பேந்திரும்.” அவன் ஆத்திரமாகக் கையை ஓங்க கண்களை இறுக மூடிக்கொண்டாள் பெண்.

“சின்னப்புள்ளை மாதிரி ஏதாவது பண்ண வேண்டியது. ஆனா வாய் மட்டும் நல்லா வங்காள விரிகுடா மாதிரி இருக்கு?”

“அவ்வளவு பெரிசாவா இருக்கு அர்ஜூன் என்னோட வாய்?”

“பேசாதேன்னு சொல்லிட்டேன்! மழையில நனையப் போறவ இத்தனை பெரிய ஹீல் வெச்ச ஷூவா போடுவாங்க?”

“அது… மழையைப் பார்த்த சந்தோஷத்துல என்ன பண்ணுறோம்னு புரியாம…” அவள் தட்டுத் தடுமாறினாள்.

“அது உனக்குப் புரியாது அர்ஜூன். பொத்திப் பொத்தி வளர்க்கிறாங்க. எதுக்காம்? ஆத்திரமா வருது. இந்த மழையில நனையுற சுதந்திரம் கூட எனக்கு இருந்ததில்லை.” அவள் கோபத்தில் கத்த ஆரம்பித்திருந்தாள்.

“இங்க கொண்டு வந்து விட்டுட்டு வாட்ச்மேன் வரைக்கும் உஷார் பண்ணிட்டுப் போயிருக்காங்க. எனக்கு எவ்வளவு கேவலமா இருக்குத் தெரியுமா?”

“………….”

“ஒரு இடத்துக்கு வெளியே போக முடியலை. அந்த வாட்ச்மேனை என் வழிக்குக் கொண்டு வர்றதுக்கு நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா?”

“அதான் இப்போ இளிச்சுக்கிட்டு நிக்குறாரே.” இது அர்ஜூன்.

“பெய்யுற மழைக்கு மத்தியானம்னு தெரியுமா, இல்லை ராத்திரின்னு தெரியுமா?” கத்திவிட்டு மூச்சு வாங்கியபடி நின்றவளைப் பார்த்த போது சிரிப்பு வந்தது அர்ஜூனுக்கு. அடக்கிக் கொண்டான்.

“மழையில நனையணும்னா இங்கேயே நனைஞ்சிருக்கலாமே. எதுக்கு அவ்வளவு தூரம் போனே?”

“அதுவா அர்ஜூன்…” அவள் ஒரு கோணல் சிரிப்புடன் ஆரம்பிக்கவும் அர்ஜூனிற்குப் புரிந்தது. ஏதோ வில்லங்கமாகத் தான் சொல்லப் போகிறாள் என்று.

“இந்த ‘மின்னல்’ படத்துல வர்ற ஹீரோயின் மழையில நாலு சின்னப் பசங்களோட நடு ரோட்டுல ஆட்டம் போடுவாங்க இல்லை. அப்படிப் பண்ணணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அதான் போனேன்.”

அர்ஜூன் தலையில் கையை வைத்தபடி அங்கிருந்த சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான்.

“இப்போப் புரியுதா உன்னை ஏன் பொத்திப் பொத்தி வளர்க்கிறாங்கன்னு?”

“அர்ஜூன்! நீயும் அவங்க பண்ணுறது சரிங்கிற மாதிரிப் பேசாத… எனக்குக் கெட்ட கோபம் வரும்.” அவள் எச்சரித்தாள். அவள் வாயில் வந்த ஒருமை அவனிடம் அவள் எடுத்துக் கொள்ளும் உரிமைக்கு சாட்சி சொன்னது.

அர்ஜூன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. நிறுத்திக் கொண்டான். ஆபாசமாக உடையணிய மாட்டாள். பணம் அத்தனைப் புரண்ட போதும் கண்ட கண்ட இடங்களுக்கெல்லாம் போக மாட்டாள்.

இருப்பது டெல்லி. அதுவும் அத்தனை பணம் கையில் புரள்கிறது.‌ அவள் நினைத்தால் ஆட்டமே போட்டிருக்கலாம். ஆனால் அவள் அப்படிப்பட்ட பெண்ணல்ல. அந்த நம்பிக்கை இருந்ததால் தானோ என்னவோ… அவளை டெல்லி வரை தனியே அனுப்பி இருந்தார்கள்.

ஆனால் அடுத்த நாளே அவள் அர்ஜூனை அழைத்துப் பேசிய விதம் இவனைக் கலங்கடிக்கச் செய்தது. ஓடியே போனவன் கண்டதெல்லாம் கட்டிலில் சுருண்டு கிடந்த பெண்ணைத்தான்.

காய்ச்சல் கொளுத்தியது. நேற்று மழையில் போட்ட ஆட்டம் இன்று வேலையைக் காட்டி இருந்தது. பேசக்கூட முடியாமல் முணுமுணுத்தபடி இருந்தாள் பெண். அப்போதும் அவள் வாய் ஓயவில்லை.

அந்த இரண்டு நாட்களும் அர்ஜூன் அவளோடு தான் இருந்தான். அந்த ஃப்ளாட்டிலேயே அவள் ரூமைப் பயன்படுத்திக் கொள்ள அவன் சோஃபாவில் தூங்கினான்.

கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அவள் தூங்க, இவன் அவ்வப்போது எழுந்து வந்து பார்ப்பான். ஓய்ந்து போனாள் மதுரா. அந்த இரண்டு நாட்களும் வீட்டாரோடு பேசாமல் மெஸேஜ்கள் மட்டும் அனுப்பி இருந்தாள்.

இப்போது அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் அர்ஜூனுக்கு ஒன்று தோன்றும். அன்று அவளுக்கு அந்தக் காய்ச்சல் வராமல் இருந்திருந்தால் அவர்களுக்குள் அத்தனை அன்னியோன்யம் வந்திருக்காமலே போயிருக்குமோ?

அதன் பிறகு தான் பெண் மெல்ல மெல்ல இவனை நெருங்கத் தொடங்கினாள். எந்தப் புள்ளியில் அவர்கள் நட்பு காதலானது என்று இருவருக்குமே தெரியாது.

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு பலமுறை இதை விவாதித்திருக்கிறார்கள். ஆனால் விடை தான் இன்றுவரைத் தெரியவில்லை. ஜன்னலோரமாக நின்று கொண்டு பழையதை அசை போட்டவனைக் கலைத்தது ஃபோன். தயாளன் அழைத்துக் கொண்டிருந்தார்.

“சொல்லு தயா.”

“அர்ஜூன்… உனக்கொரு குட் நியூஸ்.”

“கண்டுபிடிச்சுட்டியா? எங்க இருக்கா?”

“ம்ஹூம்… நான் கண்டு பிடிக்கலை. அது தானாகவே தெரியப்போகுது.”

“புரியல்லை தயா.”

“உதய நாராயணனுக்கு மாசிவ் அட்டாக். நம்பத்தகுந்த வட்டாரத்துல இருந்து தகவல் வந்திருக்கு. மீடியாக்கு இன்னும் நியூஸ் வரலை. லீக் ஆகாம ரொம்ப கெயார்ஃபுல்லா பார்த்துக்குறாங்க.”

“ஓ… அதுக்குத்தான் அந்த மதிநிலவன் இருக்காரே. எல்லாத்தையும் பக்காவாப் பண்ணுவார்.”

“என்னதான் பக்காவாப் பண்ணினாலும் அப்பாவைப் பார்க்கப் பொண்ணு வரத்தானே வேணும்?”

“ம்… கண்டிப்பா.‌ ஏர்போர்ட்லயே ஃபோலோ பண்ணு தயா. எந்த கன்ட்ரியில இருக்கான்னு எனக்குக் கண்டிப்பாத் தெரியணும்.”

“டோன்ட் வொர்ரி அர்ஜூன். நான் பார்த்துக்கிறேன்.”

“தயா… ரெண்டு வருஷமா மெனக்கெடுறோம். இந்த சான்ஸை மிஸ் பண்ணிராதே. எப்படியும் ‘விஐபி’ வழியாகத்தான் வருவாங்க.”

“எல்லா இடத்திலயும் நமக்கு ஆளுங்க இருக்காங்க அர்ஜூன். நீ கவலையே படாதே. இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு ஃபுல் ரிப்போர்ட் சப்மிட் பண்ணுறேன்.”

“வெயிட்டிங் தயா…‌ ஐம் வெயிட்டிங் ஃபோர் தட் மொமன்ட்.”

“குட் நைட் அர்ஜூன். நிம்மதியாத் தூங்கு.”

“குட் நைட்.” சொன்னவன் ஃபோனை அணைத்துக் கட்டிலில் வீசினான். முகத்தில் ஒரு குரோதப் புன்னகை நெளிந்தது.

ஏழு வருடங்கள்… முழுதாக ஏழு வருடங்கள். முதல் ஐந்து ஆண்டுகளும் தொழிலுக்குள் நெருப்புக் கோழியைப் போலத் தன் தலையைப் புகுத்திக் கொண்டான் அர்ஜூன்.

பழிவாங்கும் வெறி அவனை முற்று முழுதாக ஆக்கிரமித்து இருக்க… தொழில், தொழில் என்று ஊறிப்போய்க் கிடந்தான். பதிலாக அசுர வளர்ச்சி சாத்தியமானது. அந்த வளர்ச்சி இல்லாமல் அவளோடு மோத முடியாது. அது அவனுக்கு அவள் கற்றுக் கொடுத்த பாடம்.

‘பி.எம்.எக்ஸ்போர்ட்ஸ்’ இன்று நகரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. அதன் பிறகு தான் அவனது தேடுதல் வேட்டையை ஆரம்பித்து இருந்தான் அர்ஜூன்.

இரண்டு ஆண்டுகளாக இந்தியாவைச் சல்லடை போட்டாகி விட்டது. அவள் எங்கேயும் அகப்படவே இல்லை. அடுத்து ஐரோப்பிய நாடுகள். அங்கும் பதில் பூச்சியம் தான். மாயமாக மறைந்துப் போயிருந்தாள் பெண்.‌

ஆனால் இப்போது சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. மதுரா…‌ அந்தப் பெயரைச் சொல்லும் போது அவன் முகத்தில் அத்தனை ரௌத்திரம் தெரிந்தது. தன்னைச் சுதாரித்துக் கொண்டான் அர்ஜூன்.

error: Content is protected !!