PunnagaiMannan-5

PunnagaiMannan-5

புன்னகை மன்னன்

அத்தியாயம் – 5

மதுரா அன்றும் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்பாவின் உடம்பில் இன்னும் அதிக முன்னேற்றம் தெரிந்ததால் அடுத்த வாரம் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுப் போகலாம் என்று டாக்டர்கள் சொல்லி இருந்தார்கள்.

இன்று மகளையும் பட்டுப் பாவாடை சட்டை போட்டு ரெடியாக்கி இருந்தாள். கனடாவில் இது போலெல்லாம் சட்டென்று ரெடியாகி வெளியே போக சஞ்சீவ் அனுமதிக்கமாட்டான்.

‘குழந்தையையும் தூக்கிக்கிட்டுத் தனியே போக வேணாம் மதுரா. உன்னால சமாளிக்க முடியாது. நான் வீட்டுல இருக்கும் போது வெளியே போகலாம். சரியா?’ இப்படித்தான் சொல்லுவான்.

அவள் நலனில் எப்போதுமே அவனுக்கு அக்கறை உண்டு என்பதால் மதுராவும் கண்டுகொள்ள மாட்டாள்.

மற்றையபடி மகளை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வாள். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்குச் செல்வாள். ஆனால் இது போல கோவிலுக்கெல்லாம் நினைத்த போது போனதில்லை.

ஆதர்ஷினி அந்த உடையில் அத்தனை அழகாக இருந்தாள். உடைக்கு ஏற்ற வகையில் சின்னதாக ஒட்டியாணம், ஆரம், வளையல்கள் என நகைகளையும் அணிவித்திருந்தாள் மதுரா.

“அடடா! என்னோட குட்டி தேவதை எங்கக் கிளம்பிட்டாங்க?” கேட்டபடியே சஞ்சீவ் இவர்கள் ரூமிற்குள் வரவும் குழந்தை புன்னகைத்தது.

“சஞ்சு… நாங்க ரெண்டு பேரும் கோவிலுக்குப் போறோம்.” இது ஆதர்ஷினி. மதுரா சஞ்சீவை அப்படி அழைப்பதால் குழந்தையும் அப்படியே பிடித்துக்கொண்டது.

சஞ்சீவ் எவ்வளவு முயற்சி பண்ணியும் இளையவள் அவனை அப்பா என்று அழைக்கவே இல்லை. மதுராவும் அதை ஆதரிக்கவில்லை என்பதுதான் உண்மை. அதில் சஞ்சீவிற்குப் பெரிய வருத்தமே உண்டு.

“அப்படியா? கோயிலுக்கு எதுக்குப் போறீங்கச் செல்லம்?”

“அதுவா…‌ தாத்தாவை நெக்ஸ்ட் வீக் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்குக் கூட்டிட்டு வரலாம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க இல்லை. அதுக்கு தாங்ஸ் சொல்லப் போறோம்.”

“ஓ… யாருக்கு தாங்ஸ் சொல்லப் போறீங்க?” இதற்கு பதில் சொல்லக் குழந்தைக்குத் தெரியவில்லை. திருதிருவென விழித்தது. சஞ்சீவும் மதுராவும் சிரித்துக் கொண்டார்கள்.

“யாரோட போறே மதுரா?”

“நானும் ஆதர்ஷினியும் தான் போறோம் சஞ்சு. பக்கத்துல இருக்கிற கோயிலுக்குப் போறதுக்கு எதுக்குத் துணை?”

“அதுவும் சரிதான். பத்திரம் மதுரா. குட்டி அங்க இங்க ஓடுவா. ட்ரைவரையும் உள்ளே அழைச்சிக்கிட்டுப் போ.”

“ம்… போகலாமா பட்டு?”

“ஓகே.” அம்மாவும் மகளும் போவதைப் பார்த்தபடியே இருந்தான் சஞ்சீவ். பெருமூச்சொன்று அவனிடமிருந்துக் கிளம்பியது.

அன்று கோவிலில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. உள்ளே வரப்போன ட்ரைவரை வாசலிலேயே நிறுத்தி இருந்தாள் மதுரா.

“தேவைன்னா கூப்பிடுறேன் அண்ணா. இந்தக் கூட்டத்துலே நீங்க எதுக்கு சிரமப்படுத்திக்கணும்.” மதுரா இதமாகச் சொல்ல அந்த மனிதரும் நன்றியாகப் புன்னகைத்தார்.

மகளோடு உள்ளே வந்தவள் தனது வேண்டுதல்கள் அனைத்தையும் தனக்கு மேலேயிருந்து ஆட்டுவிக்கும் அந்தச் சக்தியிடம் சமர்ப்பித்தாள்.

குழந்தையைத் தனக்கு முன்னால் நிறுத்திக் கொண்டாள். ஒரு கை குழந்தையின் கையைப் பற்றி இருந்தது. பக்கத்தில் நின்ற யாரோ கொஞ்சம் வேண்டுமென்றே இவளைத் தள்ளினாற் போலத் தோன்றவும் சட்டென்று மூண்ட ஏரிச்சலோடு திரும்பினாள் மதுரா.

அர்ஜூன் நின்றிருந்தான். மதுரா உண்மையிலேயே அதிர்ந்து போனாள். அவளையும் அறியாமல் அவள் கண்கள் தன் காலடியில் நின்றிருந்த குழந்தையைக் குனிந்துப் பார்த்தது.

“அப்பவே பார்த்துட்டேன். ரொம்ப அழகா இருக்கா. உன்னை மாதிரியே.” சொன்ன அவன் குரலில் அத்தனை நெகிழ்ச்சி.

“நம்ம ரெண்டு பேருக்கும் பொறந்திருக்க வேண்டிய பொண்ணு இல்லை மதுரா?” அவன் கேட்டபோது மதுராவிற்குத் தூக்கிவாரிப் போட்டது.

“அர்ஜூன்!” அவள் அதிர்ந்து போக, அவன் கண்கள் நிறைந்துப் போனது.

“ஏம் மதுரா? உன்னோட ஆசைப்படியே முதலாவதா பொண்ணுதான் பொறந்திருக்கு இல்லை? அடுத்தது எப்போ? அது டெஃபினட்டாப் பையன் தானே?” அர்ஜூனின் குரலில் தெரிந்த மாற்றம் மதுராவிற்கு அத்தனை நல்லதாகப் படவில்லை.

குழந்தையையும் அழைத்துக் கொண்டு அவள் நகரப்போக அவன் அவள் வழியை மறைத்தான். இருவரின் பார்வைகளும் மோதிக் கொண்டன.

“அர்ஜூன்! என்ன பண்ணுறீங்க?” குழந்தைக்குக் கேட்காமல் கோபமாக முணுமுணுத்தாள் மதுரா.

“மதுரா!‌ சீன் கிரியேட் பண்ணுறதுல எனக்கும் விருப்பம் இல்லை. இந்தக் கோவிலுக்குப் பின்னால ஒரு சின்ன கேட் இருக்கு. அது மூலமா வெளியே போனா அங்க என்னோட கார் நிக்குது. ப்ளாக் ஆடி. கார் முன் சீட்ல இந்தப் ப்ரின்ஸஸோட நீ போய் உட்கார்ற. உம் பின்னாடியே நான் வந்து சேர்றேன்.”

“அர்ஜூன்! என்ன பண்ணுறீங்க நீங்க? வெளியே ட்ரைவர் வெயிட் பண்ணிக்கிட்டு நிக்குறார்.”

“அவரையெல்லாம் கவனிக்க ஆள் போட்டாச்சு. நீ நான் சொன்னதை மட்டும் செய்.” கண்கள் தீபாராதனையைப் பார்த்தபடி இருக்க, வாய் மட்டும் அவளுக்கான ஆணைகளைப் பிறப்பித்ததுக் கொண்டிருந்தது.

மதுரா விவாதிக்கவில்லை. பயன் இருக்கும் என்றும் தோன்றவில்லை. நகர்ந்துவிட்டாள். கோவிலுக்குப் பின்னால் கார் நின்றிருந்தது. அவள் மகளோடு ஏறி அமர்ந்த அடுத்த நிமிடத்தில் அவன் வந்து சேர்ந்தான்.

“அர்ஜூன் என்ன…”

“ஷ்…” அவளை முழுதாக முடிக்கவிடாமல் அடக்கினான் அர்ஜூன்.

“ஹாய் ஸ்வீட் ஹார்ட்.” அவன் நேசக்கரம் இப்போது குழந்தையை நோக்கி நீண்டது. குழந்தை புதிதாகக் கிடைத்த அந்த நட்பில் கொஞ்சம் மிரண்டது.

“ஐம் அர்ஜூன். யுவர் நைஸ் நேம்?” அவன் கேள்வியாக நிறுத்த குழந்தை அம்மாவைப் பார்த்தது. அவள் சம்மதமாகத் தலையாட்டவும் இப்போது லேசாகச் சிரித்தது.

“ஆதர்ஷினி.”

“ஓ… ரொம்ப அழகா இருக்கு. நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க, உங்க பெயர் மாதிரியே.”

“தான்க் யூ. சஞ்சுவும் இப்படித்தான் சொல்லும், இல்லை செர்ரி?” இப்போது குழந்தை அம்மாவைப் பார்க்க அர்ஜூனின் கண்கள் மதுராவை வெறித்தது.

“அர்ஜூன்! நான் கிளம்பணும். ப்ளீஸ்… குழந்தையை வெச்சுக்கிட்டு எதுவும் பேசாதீங்க.” அவள் அவசர அவசரமாக இறங்கப் போகவும் அவள் கையைப் பிடித்தான் அர்ஜூன்.

“இன்னைக்கு ஈவ்னிங் நாம திரும்பவும் மீட் பண்றோம் மதுரா.”

“அர்ஜூன் என்னால…”

“இதுல எந்த மாற்றமும் இல்லை. நீ வர்றே. எங்க நான் வரணுங்கிறதை மட்டும் எனக்குத் தெரியப்படுத்து. நீ வரலைன்னா உங்க வீட்டுக்கு நான் வருவேன்.” சொன்னவன் அவள் கையில் தனது விசிட்டிங் கார்டைத் திணித்தான்.

“அர்ஜூன் ப்ளீஸ்… என்னோட சிட்டுவேஷனைப் புரிஞ்சுக்கோங்க.”

“எல்லார் பேச்சையும் இதுவரை நான் கேட்டது போதும் மதுரா. இப்போ நான் போடுற ட்யூனுக்கு நீங்க எல்லாரும் ஆடுங்க. என் வாழ்க்கையை இனியாவது நான் வாழணும். நீ இப்போ போகலாம்.”

இரக்கமில்லாமல் அவன் பேசி முடித்திருந்தான். மதுராவும் அதன்பிறகு எதுவும் பேசாமல் இறங்கிப் போய்விட்டாள். காரின் சீட்டைப் பின்னால் சாய்த்துக்கொண்டு தொலை தூர வானை வெறித்திருந்தான் அர்ஜூன்.

நினைவுகள் பின்னோக்கி ஓடியது அர்ஜூனிற்கு. அந்த ஒற்றைப் படுக்கையறை ஃப்ளாட்டில் அத்தனைப் பொருட்கள் இருக்கவில்லை. தனக்குத் தேவையானதை மட்டுமே வாங்கி வைத்திருந்தாள் மதுரா.

சமையலிலும் அவளுக்கு அத்தனை ஆர்வம் கிடையாது. செய்யவும் வராது. அதனால் அர்ஜூன் தான் அவ்வப்போது ஏதாவது சமைப்பான்.

அன்றும் அப்படித்தான். ரெஸிப்பி ஒன்றை வைத்துக்கொண்டு கிச்சனில் போராடிக் கொண்டிருந்தான்.

“அர்ஜூன்… நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?”

“ம்ஹூம்… நீ வராதே. அதுவே பெரிய ஹெல்ப் தான்.”

“போடா…” விறைப்பாகச் சொல்லிவிட்டு தன் பாடப் புத்தகத்தோடு அமர்ந்துவிட்டாள் பெண்.

“ஏன் அர்ஜூன்?‌ அந்த லேடி லெக்சரர் எதுக்குடா இப்படி ரம்பம் போடுறாங்க. ஒரு மண்ணும் இன்னைக்கு எனக்குப் புரியலை.”

“ஏன் புரியலை உனக்கு? அவங்க நல்லாத்தான் சொல்லிக் குடுக்குறாங்க.”

“அப்ப ஓகே.‌ எனக்கு இனி நீ சொல்லிக்குடு. நான் பேசாம அந்த லெசன்ல ஒரு குட்டித்தூக்கம் போடுறேன்… சரியா?”

“உங்கப்பாக்கிட்ட இதைச் சொல்லிட்டு நீ தூங்கு. நான் அதுக்கு அப்புறமா உனக்குச் சொல்லிக் குடுக்குறேன்.”

“ஏன்டா? ஏன் இந்தக் கொலைவெறி?” ஒரு தினுசாகக் கேட்டவள் புத்தகத்திற்குள் மூழ்கிப் போனாள். பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும். மீண்டும் அர்ஜூனை வம்பிழுத்தாள் மதுரா.

“அர்ஜூன்! டின்னரை இன்னைக்குக் குடுப்பியா இல்லையா? பசிக்குதுடா.”

“இதோ முடிச்சுட்டேன். ரெடி.” சொன்னபடியே அவளிடம் ஒரு ப்ளேட்டைக் கொடுத்தவன் அவள் பக்கத்தில் தன் ப்ளேட்டோடு அமர்ந்து கொண்டான்.

“என்ன பி.எம் இது?”

“ஃப்ரைட் ரைஸ். எப்படி இருக்கு?”

“சூப்பர்! நளபாகம் அர்ஜூன். எப்படிடா எல்லாத்துலயும் மாஸ்டரா இருக்கே?”

“ம்… எங்கப்பா மாஸ்டர் பாரு… அதனாலதான்.” அவனை அவள் பொருட்படுத்தவே இல்லை. சாப்பாட்டை ருசி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சாப்பிட்டு முடிச்சதும் கிச்சனைக் க்ளீன் பண்ணிடு மதுரா.”

“டன் பி.எம். அப்போ செவிக்கு உணவில்லையா அர்ஜூன்?” அவள் கேட்கவும் புன்னகைத்தான் அர்ஜூன்.

“ப்ளீஸ்டா… நீ வயலின் ப்ளே பண்ணி ரொம்ப நாளாச்சு இல்லை.” உண்டு முடித்த ப்ளேட்டை சின்க்கில் போட்டுவிட்டு அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் மதுரா.

“என்ன பாட்டு அர்ஜூன்?” அவன் வயலினைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தான்.

“அதை நீயே கண்டுபிடி.” சொல்லிவிட்டு அவன் ஆரம்பித்தான். அந்தச் சின்ன இருப்பிடத்தில் இசை நாலாபக்கமும் பரவியது. மதுராவிற்கு உடம்பு சிலிர்த்தது.

‘கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது… தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது…

அவன் இரண்டு வரிகளையும் வாசித்து முடிக்க மதுரா அந்த வரிகளோடு இணைந்து பாடினாள். ஓரளவு நன்றாகவே அவளுக்குப் பாடவரும்.

மீண்டும் ஒரு முறை அவன் அந்த வரிகளை வாசிக்க அவனோடு மீண்டும் இணைந்து பாடியது பெண். அர்ஜூன் புன்னகைத்துக் கொண்டான்.

“அர்ஜூன்… இந்தப் பாட்டை ட்ர்ரை பண்ணேன்.”

“என்ன பாட்டு?”

“மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக் கண்டேன்… மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்…”

“சூப்பர்…” அவன் ரசித்துச் சொல்ல அவளுக்கு அப்படியொரு சந்தோஷம்.

“ஏய் அர்ஜூன்! நான் நல்லாப் பாடுறேனா?”

“பின்னிட்ட போ.” சொன்னவன் இரண்டு மூன்று முறை அவள் பாடிய வரிகளை வயலினில் முயற்சித்தான். இதுவரை அவன் ப்ராக்டீஸ் பண்ணாத பாடல் என்பதால் அத்தனை துல்லியமாக வரவில்லை.

“இன்னும் கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணணும் மதுரா.‌ அப்போதான் நல்லா வரும்.”

“இதுவே நல்லாத்தான் இருக்கு அர்ஜூன்.”

“ம்ஹூம்… எனக்கு ஹாப்பி இல்லைடா.”

“ஓ… அர்ஜூன்… நீ இந்தப் பாட்டுக் கேட்டிருக்கியா?”

“எது?”

“அக்னி நட்சத்திரத்துல வருமே… ஜேசுதாஸ் பாட்டு.”

“வா வா… அன்பே அன்பே…” அவள் சொல்லி முடிக்க அவன் பாட்டைக் கண்டுபிடித்திருந்தான்.

“யெஸ்… அதுதான். பாடு அர்ஜூன்.” அவன் மடியில் சாய்ந்து கொண்டவள் அந்த முகத்தையே பார்த்திருந்தாள். வயலினைத் தூர வைத்துவிட்டு அவள் தலையைக் கோதியபடி பாடினான் அர்ஜூன்.

“நீலங்கொண்ட கண்ணும் நேசங்கொண்ட நெஞ்சும்… காலந்தோறும் என்னைச்சேரும் கண்மணி… பூவையிங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்… மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி…”

சிந்தனைகள் அறுந்து போக அர்ஜூனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. எத்தனை தூரம் ஒன்றிப்போய் வாழ்ந்திருந்தார்கள். அத்தனையும் இல்லையென்று ஆகிப்போனதே.

தான் பண்ணுவது தவறென்று அவனுக்குத் தோன்றவில்லை. அவள் இன்னொருவரின் மனைவி என்று அவனுக்கு உறைக்கவே இல்லை. மாறாகத் ‘தன் மனைவியைத் தன்னிடமிருந்து பிரித்தது அவர்கள் தான். தனக்குப் பதில் சொல்லவேண்டிய கடமை அவர்களுக்குத்தான் இருக்கிறது.‌’ அவன் செயல்களுக்கு அவன் மனம் இப்படித்தான் சப்பைக்கட்டுக் கட்டியது. ஃபோன் சிணுங்கியது. தயாளன் அழைத்துக் கொண்டிருந்தான்.

“சொல்லு தயா.”

“அர்ஜூன்… எங்க இருக்கே?”

“கோவிலுக்கு வந்தேன். சொல்லு தயா, என்ன விஷயம்?”

“நேர்ல பார்த்துப் பேசினா நல்லா இருக்கும் அர்ஜூன்.”

“சரி… கோவிலுக்குப் பின்னாடி தான் கார்ல இருக்கேன். நீ வா தயா.” எந்தக் கோவில் என்று விபரம் சொன்னவன் மீண்டும் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டான். அந்தக் குட்டித் தேவதை மதுராவைச் செர்ரி என்று அழைத்தது அவனை வெகுவாகவே பாதித்திருந்தது.

ஆசையாசையாகக் கனவு கண்டுவிட்டு அனைத்தையும் தண்ணீர் ஊற்றி அழித்ததுப் போல இருந்தது அர்ஜூனுக்கு. இத்தனை பாடுபட்டுத் தொழிலை வளர்த்து, சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையைப் பிடித்து… எல்லாம் பண்ணியது அவளுக்காகத்தானே! இப்போது அவளே இல்லையென்றால் அது என்ன நியாயம்?

இவனைக் காக்க வைக்காமல் சற்று நேரத்திலெல்லாம் வந்துவிட்டான் தயாளன்.‌ காரிற்குள் ஏறி உட்கார்ந்தவன் முகம் ஏதோ போல இருந்தது.

“என்னாச்சு தயா?”

“ஃபுல் ரிப்போர்ட் ரெடி அர்ஜூன்.”

“அதைக் கொஞ்சம் சந்தோஷமாச் சொல்லேன். இந்த ரிப்போர்ட்டை ரெடி பண்ண உனக்கு இத்தனை நாளா தயா?”

“நம்ம ஊரா அர்ஜூன் சட்டுப் புட்டுன்னு வேலையை முடிக்க? வெளிநாடுப்பா. யாருமே கான்ஃபிடென்ஷியல்னு வாயையே திறக்கலை. எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?”

“சரி சரி…”

“அர்ஜூன்… உனக்கும் மதுராக்கும் இடையில… ரிலேஷன்ஷிப்…” நண்பன் வெகுவாகத் தயங்கவும் அர்ஜூன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

“என்னக் கேக்கணுமோ அதைத் தாராளமாக் கேளு தயா. எதுக்குத் தயங்குறே?”

“அர்ஜூன்… நீ ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகி இருந்தப்போ மதுரா உன்னைப் பார்க்க ஒரு தரம் வந்திருந்தா இல்லை?”

“ஆமா… அம்மா அப்படித்தான் சொன்னாங்க. ஆனா அது எனக்குத் தெரியாது.”

“கரெக்ட்… அப்போ நீ மூச்சுப் பேச்சில்லாம ‘ஐசியூ’ல இருந்தே. மதுரா ஹாஸ்பிடலுக்கு வந்த ஒரு வாரத்துல அவங்களோட அத்தைப் பையன் சஞ்சீவுக்கும் மதுராக்கும் சிம்பிளாக் கல்யாணம் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணி இருக்காங்க.”

“ம்…”

“அதுக்கப்புறமாத் தன்னோட அத்தனை பின்புலத்தையும் பயன்படுத்தி மதுராவை எவ்வளவு சீக்கிரம் கனடாக்கு அனுப்ப முடியுமோ, அத்தனை சீக்கிரமா கனடாக்கு அனுப்பி இருக்கார் உதய நாராயணன்.”

“ம்…”

“இதுல இடிக்கிற விஷயம் என்னன்னா… மதுரா கனடா போய் சரியா எட்டாவது மாசம் அவங்களுக்கு டெலிவரி ஆகியிருக்கு. ஆனா… பேபி ப்ரிமேச்சர் இல்லை. ஃபுல் டேர்ம் தான்.”

இதுவரை சீட்டில் சாய்ந்தபடித் தன் சோகக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அர்ஜூன் எழுந்து உட்கார்ந்தான். அவன் கண்கள் தன் நண்பனை அதிர்ச்சியாகப் பார்த்தது.

“தயா… நீ என்ன சொல்லுறே?”

“அர்ஜூன்… எனக்குக் கிடைச்சிருக்கிறத் தகவலின் படி பார்த்தா… மதுராக்குக் கல்யாணம் ஆகும்போது அவங்க ரெண்டு மாசம் கர்ப்பமா இருந்திருக்காங்க.”

“தயா!” அர்ஜூன் உறைந்தே போனான்.

“அவசர அவசரமாக் கல்யாணம் பண்ணினது, உங்கண்ணுலயே படாம மதுராவை மறைச்சது எல்லாத்துக்கும் ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கணும். அதனால தான் அப்படிக் கேட்டேன் அர்ஜூன். இதுக்கு ஏதாவது வாய்ப்புகள் இருந்ததா?” தன் நண்பனின் கேள்விக்கு ஆமென்பதைப் போலத் தலையை ஆட்டினான் அர்ஜூன். வாய்ப்புகள் தான் நிறையவே இருந்ததே.

கண்கள் குளமாகிப் போயிருந்தது. பேசுவதற்கு வார்த்தைகள் அகப்படாமல் கல்லுப்போல அமர்ந்திருந்தான் அர்ஜூன். நண்பனின் நிலையைப் பார்த்த போது தயாளனுக்குமே பரிதாபமாக இருந்தது.

“அர்ஜூன்… இப்போதான் நீ நிறையவே நிதானமா இருக்கணும். நிறைய விஷயங்கள் நடந்திருக்கு. இதுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய ஒரே ஆள் மதுராதான்.”

“ம்…” உறுமலாகத்தான் வந்தது அர்ஜூனின் பதில்.

“தயா… நீ எதுல வந்தே?”

“டாக்ஸி தான். ஏன் அர்ஜூன்?”

“என்னால இப்போ ட்ரைவ் பண்ண முடியாது.‌ என்னைக் கொஞ்சம் ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணுறியா?”

“என்னடா கேள்வி இது?” கடிந்துகொண்ட தயாளன் காரை எடுக்க அர்ஜூன் ஏதோ பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருந்தான்.

தன்னைச் சுற்றி என்னவெல்லாம் நடந்திருக்கிறது. ஆறு வயதில் தனக்கொரு குழந்தையே இருக்கிறதா? இது கூடத் தெரியாமல் நான் காசைத் துரத்திக்கொண்டு ஒரு வாழ்க்கை வாழ்கிறேனா?

மதுரா… அவள் மட்டும் இப்போது என் எதிரே இருந்தால்! அர்ஜூனின் தாடைகள் இறுக கை முஷ்டியைத் தன் காலிலேயே ஓங்கி அடித்தான்.

“அர்ஜூன்!”

“ஒன்னுமில்லை தயா… ஒன்னுமில்லை… ஒன்னுமில்லை.”

“நடந்திருக்கிறது பெரிய விஷயம்தான்.‌ இல்லேங்கலை. அதுக்காக உணர்ச்சிவசப்பட்டு எதையும் பண்ணிடாத அர்ஜூன். ஏற்கனவே நீ நிறைய இழந்துட்டே.”

“ம்…”

ஆஃபீஸில் அர்ஜூனை இறக்கிவிட்டு தயாளன் போய்விட்டான். ஆனால் இன்னும் அர்ஜூன் அப்படியேதான் உட்கார்ந்திருந்தான்.

இன்று நான் பார்த்த அந்தக் குட்டித் தேவதை என் மகளா? மதுராவைச் செர்ரி என்று அழைத்த அந்தப் பட்டுக்குரல் எனக்குச் சொந்தமானதா?

கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் வழிந்தது அர்ஜூனிற்கு. என்ன மாதிரியான வாழ்க்கை இது? விரட்டி விரட்டிக் காதலித்தவள் என் குழந்தையையும் சுமந்து கொண்டு எதற்குத் தொலைந்து போனாள்? இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள்? நினைக்கவே தலையைச் சுற்றியது இவனுக்கு.

அப்படியே சிலை போல நின்றிருந்தவனைக் கலைத்தது ஃபோன். புதிய எண்ணிலிருந்து ஒரு மெஸேஜ் வந்திருந்தது. சட்டென்று திறந்துப் பார்த்தான் அர்ஜூன். மதுரா தான் அனுப்பி இருந்தாள்.

‘பவித்ராவின் முகவரி இது. மாலை ஐந்து மணிக்கு அங்கே சந்திக்கலாம். டாக்ஸியில் வரவும்.‌ பவித்ராவை உங்களுக்குத் தெரியும்.’ இப்படித்தான் இருந்தது மெஸேஜ்.

பவித்ராவா… யாரது? எனக்குத் தெரிந்த பெண் என்றால்… ஓ! ரயிலில் பார்த்த அவள் சிநேகிதிகளில் ஒருத்தியாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம்! அந்தப் பெண்ணின் பெயர்தான் பவித்ரா.

எண்ணங்கள் சட்டென்று பின்னோக்கி ஒடியது அர்ஜூனிற்கு. அப்போதெல்லாம் ஹாஸ்டல் ரூமைக் காலி பண்ணிவிட்டு மதுராவின் ஃப்ளாட்டில் தான் தங்கி இருந்தான் அர்ஜூன்.

மதுராவின் வற்புறுத்தல், அவர்கள் வாழ்ந்திருந்த சூழல் எல்லாமாக அர்ஜூனையும் இதற்குச் சம்மதிக்க வைத்திருந்தது. மதுரா தன் காதலி என்ற எண்ணம் மாறி அவளைத் தன் மனைவியாகவே பார்க்க ஆரம்பித்திருந்தான் அர்ஜூன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மதுரா அவள் வீட்டிற்குப் போய் வருவது வழக்கம்.‌ அந்த வார இறுதியும் அப்படித்தான் கிளம்பிப் போயிருந்தாள்.

அன்றைக்கு முழுதும் அர்ஜூன் வீட்டிலேயே இருந்து கொஞ்சம் க்ளீனிங்கில் இறங்கி இருந்தான். படிப்பு வேலைகள் தலைக்கு மேல் இருந்ததால் இப்படிச் சாவகாசமாக துப்புரவு பண்ண நேரம் கிடைப்பதில்லை.

மதுரா வர இன்னும் நேரம் இருந்ததால் ஒரு காஃபியைப் போட்டுக்கொண்டு வந்து டீவியின் முன் உட்கார்ந்தான் அர்ஜூன். காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. யாராக இருக்கும்? யோசித்தபடி கதவை இவன் திறக்க…

‘சர்ப்ரைஸ்!’ என்று கத்தினாள் மதுரா. அர்ஜூன் திடுக்கிட்டுப் போனான். கூடவே அன்று ரயிலில் பார்த்த அவள் தோழிகள் இருவரும் நின்றிருந்தார்கள்.

‘வாங்க…’ அவன் சங்கடமாக வரவேற்றான். ஆனால் அவர்கள் ‘நீ இங்கே இருப்பது எங்களுக்குத் தெரியும்’ என்பது போலவே நடந்து கொண்டார்கள்.

அன்றைய பொழுது மிகவும் கலகலப்பாகவே கழிந்தது. தோழிகள் வந்த சந்தோஷத்தில் மதுரா இன்னுமே கூத்தடித்துக் கொண்டிருந்தாள். ஒற்றையாக வளர்ந்த அர்ஜூனிற்குமே அது நன்றாகத்தான் இருந்தது.

‘அண்ணா…’ அர்ச்சனாவும், மதுராவும் ஏதோ வாங்க வேண்டும் என்று கடைக்குப் போயிருக்க பவித்ரா இவனிடத்தில் வந்தாள்.

‘சொல்லுங்க பவித்ரா.’

‘எனக்கு ரொம்பப் பயமா இருக்குண்ணா.’

‘ஏன்? என்னாச்சு?’

‘ரொம்பப் பெரிய இடம் ண்ணா. இதுக்கு அவங்க சம்மதிப்பாங்கன்னு எனக்குத் தோணலை…’

‘ம்…’ இப்போது அர்ஜூனின் முகம் இறுகிப் போனது.

‘நான் உங்களைத் தப்பாச் சொல்லலைண்ணா. நீங்க என்னைச் சரியாப் புரிஞ்சுக்கணும்.’

‘இல்லையில்லை… எனக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது பவித்ரா. இது அத்தனை சுலபமில்லைன்னு எனக்கும் தெரியும். ஆனா இனி எதையும் மாத்த முடியாது.’

‘நீங்க கொஞ்சம் பொறுமையா மதுராக்கு எடுத்துச் சொல்லி இருக்கலாம்.’ அந்தப் பெண் சொல்லி முடிக்க அர்ஜூன் சிரித்தான். அந்தச் சிரிப்பின் அர்த்தம் பவித்ராவிற்கும் புரிந்திருக்கும் போல.

‘புரியுதுண்ணா… நீங்க சொல்லாம விட்டிருக்க மாட்டீங்க. ரொம்பப் பிடிவாதக்காரி. அவ நினைச்சதை நடத்தியே பழகிட்டா. ஆனா ரொம்ப நல்லவண்ணா. எந்த அளவுக்குப் பிடிவாதம் பிடிப்பாளோ அதே அளவுக்குப் பாசம் காட்டவும் அவளுக்குத் தெரியும்.’

‘ம்… தெரியும்மா.’

‘அவசரப்பட்டு இவ எதையாவது அவங்க வீட்டுல உளறிடப்போறா. பார்த்துப் பண்ணுங்கண்ணா. என்ன உதவி வேணும்னாலும் எங்களைக் கேளுங்கண்ணா.’ அர்ஜூன் அந்தப் பெண்ணைப் பார்த்து நன்றியாகச் சிரித்தான்.

இங்கே இத்தனையும் நடந்து கொண்டிருக்க மதுராவின் வீடு வரை அர்ஜூன் பார்த்தசாரதியைப் பற்றிய விஷயங்கள் கசிந்திருந்ததை இங்கிருந்த யாரும் அறியவில்லை.

அடுத்த ஒரு வாரத்தில் அனைத்தும் தலைகீழாக மாறப்போவதை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பெருமூச்சை வெளியேற்றிய அர்ஜூன் மாலை ஐந்து மணிக்காகக் காத்திருந்தான். இனி அவன் வாழ்க்கையை அவனே தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது என்று புரிந்தது.

இனியும் காலம் கடத்துவதில் அர்த்தமில்லை. இழந்தது எல்லாம் போதும். இனித்தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும். மனைவி, மகள் எல்லாம் இருந்தும் தனித்துக் கிடந்து தவித்ததெல்லாம் போதும்.

அவசர அவசரமாக நான்கைந்து ஃபோன் கால்கள் பண்ணினான். சில ஏற்பாடுகள், சில ஆலோசனைகள் என அனைத்தையும் அழகாகச் செய்து முடித்தான்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் எவ்வளவு முக்கியம் என்று அப்போதுப் புரிந்து கொண்டான் அர்ஜூன் பார்த்தசாரதி.

error: Content is protected !!