PunnagaiMannan-6

PunnagaiMannan-6

அத்தியாயம் – 6

டாக்ஸியைக் கொஞ்சம் தொலைவில் நிறுத்திவிட்டு இறங்கினான் அர்ஜூன். நான்கைந்து வீடுகள் தாண்டினால் மதுரா சொன்ன அட்ரஸ் வந்துவிடும். அதனாலேயே டாக்ஸியைத் தள்ளி நிறுத்தி இருந்தான்.

ஆனால் மொட்டைமாடியில் வெளிச்சமில்லாத பகுதியில் நின்றபடி இவனையே தான் அவள் பார்த்தபடி இருந்தாள். ஆண்மையின் மொத்த இருப்பிடமாக இருந்தவனைப் பார்த்த போது ஓடிப்போய்க் கட்டிக் கொள்ளலாம் போல இருந்தது பெண்ணுக்கு.

என்ன மாதிரியான வாழ்க்கை இது? எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போல ஒரு நிலைமை. கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீரைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். அழ இன்னும் மிச்சம் மீதி இருக்கிறதா என்ன?

அதுதான் வேண்டிய மட்டும் அழுதுத் தீர்த்தாகிவிட்டதே! அவன் கிடைக்கவில்லையே என்று அழுதிருக்கிறாள். அவன் தன்னைத் தேடுவானே என்று நினைத்து அழுதிருக்கிறாள். குழந்தை பிறந்த போது அதன் முகத்தைப் பார்த்துப் பார்த்து சதா அழுதிருக்கிறாள். இனியும் அழ அவளிடம் சக்தி இல்லை.

காலிங் பெல்லை அழுத்தினான் அர்ஜூன். சட்டென்று கதவு திறந்து கொண்டது. பவித்ரா தான் நின்றிருந்தாள்.

“அண்ணா! வாங்க வாங்க.” வாயெல்லாம் புன்னகையாக வரவேற்றது பெண். அர்ஜூனும் புன்னகைத்துக் கொண்டான்.

“எப்படி இருக்கீங்க பவித்ரா?”

“நான் நல்லா இருக்கேண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?” இந்தக் கேள்விக்கு அர்ஜூன் பதில் சொல்லவில்லை. புன்னகைத்தான், அவ்வளவுதான்.

“மதுரா இன்னும் வரலையா?”

“வந்துட்டாண்ணா. மேலே மொட்டைமாடியில இருக்காண்ணா. நீங்க போய்ப் பேசுங்க.” அவள் சொல்லி முடிக்கும் போது அர்ஜூன் பாதிப் படிகளைத் தாண்டி இருந்தான்.

பவித்ரா முகத்தில் கலவரம் தோன்றியது. நடந்தது அத்தனையும் பவித்ராவிற்குத் தெரியும். மதுரா கனடா போன பிறகும் பவித்ராவுடன் தொடர்பில் இருந்ததால் இவளுக்கு நடந்த அத்தனையும் தெரியும். இன்னும் என்ன நடக்க இருக்கிறதோ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டாள்.

அர்ஜூன் மேலே வந்தபோது மதுரா படிகள் முடியும் இடத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் மேலே தான் வருவானென்றுத் தெரியும்.‌ தன்னை நெருங்கும் அழுத்தமான காலடிகளை இமைக்காமல் பார்த்திருந்தாள்.

“சொல்லு மதுரா?” அவன் குரல் நிதானமாகத் தான் வந்தது.

“என்ன சொல்லணும் அர்ஜூன்?” இருவருக்கும் பேச மனதில் ஆயிரம் இருந்தது. வெடித்து அழப் பலக் காரணங்கள் இருந்தது. இருந்தாலும் வார்த்தைகள் வெகு ஜாக்கிரதையாகக் கையாளப்பட்டன.

“உன்னோட வாழ்க்கையில நிறைய விஷயங்கள் நடந்திருக்கே… அதைப் பத்தி எங்கிட்டச் சொல்லு.”

“அதையெல்லாம் இனிப்பேசி‌ என்ன பிரயோஜனம் அர்ஜூன்?”

“பிரயோஜனம் இருக்கா இல்லையான்னு நான் சொல்லுறேன். நீ பேசு மதுரா.”

“அர்ஜூன்… ப்ளீஸ். புரிஞ்சுக்கோங்க.‌ நிலைமை முன்ன மாதிரி இல்லை. இப்படி அடிக்கடி நாம பார்க்கிறது, பேசுறது எல்லாம் சரியா வராது அர்ஜூன்.”

“கல்யாணம் பண்ணிக்காம புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தோமே… அது மட்டும் சரியா மதுரா?”

“…………….”

“படிப்பு படிப்புன்னு இருந்தவன் மேல காதலைக் கொண்டு வந்துக் கொட்டிட்டு…‌ எல்லா சுகத்தையும் காட்டிட்டு… இப்போ ஒன்னுமே இல்லை போடான்னு விட்டுட்டு ஓடினது மட்டும் சரியா மதுரா?”

“அர்ஜூன்!”

“அர்ஜூனுக்கு என்ன வெச்சிருக்க மதுரா?”

“……………”

“வீட்டுல அப்பா எங்கூடப் பேசுறதே இல்லை. அவங்க கை காட்டுற பொண்ணை நான் கட்டிக்கலையாம். அந்த வருத்தம் அவருக்கு.”

“ஏன் அர்ஜூன்? பிடிச்சிருந்தாக் கட்டிக்கலாம் இல்லை.”

“எப்படி மதுரா? நான்தான் ஏற்கனவே ஒருத்தியைக் கட்டிக்கிட்டேனே. இப்பவும் இதுதான் வாழ்க்கை. இன்னும் பத்து வருஷம் கழிச்சும் இதுதான் வாழ்க்கை. நான் சாகிற வரைக்கும் இதுதான் வாழ்க்கைன்னு அவ சொன்னாளே மதுரா. அப்போ எனக்கும் அதுதானே பொருந்தும். நான் அவகூட மட்டும் தானே வாழணும்?”

“அர்ஜூன்… ப்ளீஸ். என்னைக் கொல்லாதீங்க. இன்னும் கொஞ்ச நாள்ல வந்த மாதிரியே நான் திரும்பிப் போயிடுவேன். உங்க மனசுல இருக்கிற அத்தனையையும் தூக்கித் தூரப் போட்டுட்டு வாழுற வழியைப் பாருங்க அர்ஜூன்.”

“எங்க போகப்போறே மதுரா? முன்னாடி ஓடி ஒளிஞ்சு பொண்ணைப் பெத்துக்கிட்ட. இப்போ… உன்னோட பையனைப் பெத்துக்கப் போறியா அந்த சஞ்சீவ் கூட?” அர்ஜூனின் முகம் செந்தணல் ஆனது.

“அர்ஜூன்… வார்த்தைகள் கொஞ்சம் அதிகமா வருது.” அவளின் சூடான மிரட்டலில் அவனுக்கு இன்னும் கொஞ்சம் வெறி ஏறியது.

“இவ்வளவு தைரியம் உனக்கு எங்க இருந்துடி வந்துச்சு. அதான் நான் கேக்குறேன் இல்லை. பதில் சொல்லேன். உம் பொண்ணு பொறந்த கதையைச் சொல்லு. நீ வாழ்ந்த வாழ்க்கையைப் பத்திச் சொல்லு. எதையுமே சொல்லாம இவ்வளவு தெனாவெட்டா என்னையே மிரட்டுற?” அவள் தோள்களைப் பற்றிய அர்ஜூன் லேசாக அவளை உலுக்கினான்.

“விடுங்க அர்ஜூன்.‌ உங்களுக்கு இதையெல்லாம் விளக்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.” அவன் கைகளை உதறிவிட்டு அவள் நகர முயற்சிக்க அர்ஜூனிற்கு இன்னுமே சினம் தலைக்கேறியது. வெளியே மிடுக்காக நின்று பேசிக் கொண்டிருந்தாலும் மதுராவிற்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.

“அவசியம் இருக்கு மதுரா. ஏன்னா உனக்கும் எனக்கும் நடுவுல இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.” அவன் பிடி இறுகியது.

“ஒன்னுமேயில்லை அர்ஜூன். நமக்கு நடுவுல எதுவுமே இல்லை.” அனைத்தையும் மறைத்துக் கொண்டு அவள் இரக்கமில்லாமல் அவனைத் தாக்கினாள்.

“உன்னயே நினைச்சு நான் ஏங்குறது உனக்குப் புரியலையா மதுரா? நான் எந்த அளவுக்கு உன்னைத் தேடுறேன்னு உனக்கு விளங்கலையா?” அர்ஜூனின் சத்தம் இப்போது லேசாக அதிகரித்திருந்தது.

“ஷ்… சத்தம் போடாதீங்க அர்ஜூன். எனக்கு எதுவும் தெரியவும் வேணாம், புரியவும் வேணாம். என்னை முதல்ல விடுங்க.” அவளின் உதாசீனம் அர்ஜூனை நிலைகுலைய வைத்தது. தன்னிடமிருந்து பிடிவாதமாக நகரப் போனவளை இழுத்து அந்த இதழ்களை வலுக்கட்டாயமாகச் சரணடைந்திருந்தான் அர்ஜூன்.

மதுராவின் திமிறல்… கணநேரத்தில் காணாமற் போயிருந்தது. அதேபோல அவள் மயக்கமும் அத்தனை நேரம் நீடிக்கவில்லை. தன்னை விடுவித்துக் கொள்ளவே முயன்றாள்.

“அர்ஜூன்… ப்ளீஸ். இப்படியெல்லாம் நடந்துக்காதீங்க.” தொடர்ச்சியாகப் பேசி அவனை நிதானப்படுத்த அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கொடுக்கும் நிலையிலும் அர்ஜூன் இல்லை.

“அர்ஜூன்… ப்ளீஸ்… என்னைப் பேச விடுங்க.” ஆனால் அவனுக்கு அது எதுவும் கேட்கவில்லை. இத்தனை வருடப் பிரிவின் வேதனைக்கு மருந்தை அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வசூலிக்க ஆரம்பித்திருந்தான்.

மதுரா அதன்பிறகு எதுவும் பேசவுமில்லை, தடுக்கவுமில்லை. அந்த நொடிகளுக்குள் அவளும் ஆழ்ந்து போனாள். ஒரு கட்டத்தில் அவனாகவே அவளை விடுவிக்கும் வரை அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.

“மதுரா…” காதோரம் தேன் பாய்ச்சியது அவன் குரல். அவன் தன்னை நிதானத்திற்குக் கொண்டுவரும் நினைப்பில் இல்லை என்று புரிந்து கொண்டவள் லேசாக விலகினாள். அர்ஜூனின் முகத்தில் இப்போது மெலிதாகக் கோபம் தெரிந்தது.

“நாம கொஞ்சம் பேசணும் அர்ஜூன்.”

“ம்… ஆனா பேச்சு நாம சம்பந்தப்பட்டதா மட்டும் தான் இருக்கணும். இனி நாம வாழப்போற வாழ்க்கை சம்பந்தப்பட்டதா மட்டும் தான் இருக்கணும்.”

“அர்ஜூன்… என்ன பேசுறீங்க நீங்க? எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு.”

“ம்… எனக்கும் அது நல்லாவே தெரியும். நான் என் வாழ்க்கையில செஞ்ச மிகப்பெரிய தவறு அன்னைக்கு உங் கதையைக் கேட்டுக்கிட்டு உங் கழுத்துல ஒரு தாலியைக் கட்டாதது தான். தாலியைக் கட்டி அன்னைக்கே ரெஜிஸ்டரும் பண்ணி இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.”

“அர்ஜூன்… அப்படியில்லை…” அவள் இப்போது தடுமாறினாள்.

“ஆமா…‌ கழுத்துல எங்க தாலியைக் காணோம்.” அவள் அணிந்திருந்த துப்பட்டாவை அகற்றியவன் மளமளவென்று அவள் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை ஆராயவும் அவனைத் தள்ளிவிட்டாள் மதுரா.

“அர்ஜூன் என்ன பண்ணுறீங்க?”

“ஏன்? அப்படி என்ன பண்ணிட்டேன்னு இப்போ நீ என்னைத் தள்ளிவிடுறே? முன்னப் பின்னே நான் உன்னைப் பார்த்ததே இல்லையா?” சட்டென்று அர்ஜூன் கேட்கவும் முகத்தை அந்தப் புறமாகத் திருப்பிக் கொண்டாள் மதுரா. அவள் முகபாவம் பார்த்தவன் முகம் கனிந்து போனது.

“தாலி எங்க மதுரா?” அவன் அதிலேயே குறியாக இருந்தான்.

“வெயிட் ஜாஸ்தியா இருந்ததால லாக்கர்ல வெச்சிருக்கேன்.”

“ஹா… ஹா… தாலியை லாக்கர்ல வெச்சிருக்கியா? தமிழ்ப் பொண்ணாடி நீ?” வாய்விட்டுச் சிரித்தவன் மீண்டும் அவளைத் தன் கை வளைவிற்குள் இழுத்துக் கொண்டான். மதுராவின் தலை தானாகக் குனிந்தது.

“ம்… தாலி கட்டாமலேயே என்னைப் புருஷனா ஏத்துக்க முடிஞ்ச உனக்கு… தாலி கட்டியும் அவனைப் புருஷனா ஏத்துக்க முடியலை… அப்படித்தானே?” அவன் கேள்வி நிதானமாக வந்தது. மதுராவின் மூளைக்குள் மணி அடித்தது.

“அ…‌ அப்படியெல்லாம் இல்லை… அர்ஜூன்.”

“இன்னும் எதை எங்கிட்ட இருந்து மறைக்க நினைக்கிற மதுரா? நடந்தது எல்லாத்தையும் நீயாச் சொல்லுவேன்னு தான் இவ்வளவு நேரமும் நான் காத்துக்கிட்டு இருக்கேன். ஆனா நீ ஓடுறதுலயே குறியா இருக்கே?”

“……………”

“சொல்லு மதுரா.”

“சொல்லு சொல்லுன்னா எதைச் சொல்ல அர்ஜூன்?”

“ஆதர்ஷினியைப் பத்திச் சொல்லு மதுரா. அந்தப் ப்ரின்ஸஸ் உனக்கும் எனக்கும் பொறந்தவங்கிறதைச் சொல்லு மதுரா.”

“அர்ஜூன்!” இப்போது மதுரா விக்கித்துப் போனாள். அர்ஜூன் வேகமானவன்தான். ஆனால் இத்தனை வேகமாக வேலை செய்திருப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

“அதை எங்கிட்ட நீ மறைச்சிட்டேன்னு சொல்லு மதுரா.” இப்போது அவன் குறைப்பட்டான்.

“இல்லை அர்ஜூன்.”

“அதை மறைக்கத்தான் உன்னோட குடும்பமே ஒன்னாச் சேர்ந்து உனக்கு அவசர அவசரமாகக் கல்யாணம் பண்ணி வெச்சுதுன்னு சொல்லு மதுரா.” மூச்சு வாங்க நிறுத்தினான் அர்ஜூன். மதுரா தன் எதிரில் நிற்பவனை இமைக்காமல் வெறித்திருந்தாள்.

“எத்தனை விஷயம் நடந்திருக்கு. ஏன்? இந்தப் பவித்ராக்கு நடந்தது எல்லாத்தையும் சொல்லித்தானே இருப்பே? ஏன் எனக்கு ஒரு கால் பண்ணத் தோணலை உனக்கு?”

“அர்ஜூன்!”

“கனவு காணும் போது ஒன்னாத்தானே கண்டோம். நனவை மட்டும் எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டு நீ மட்டும் அனுபவிச்சா அது என்ன நியாயம் மதுரா?”

“……………” இப்போது மதுராவின் இதழ்கள் விரக்தியாகப் புன்னகைத்தது.

“கனவோ நனவோ… எதுவா இருந்தாலும் அதை அனுபவிக்க என் அர்ஜூன் உயிரோட இருக்கணுமில்லை?” அவள் இதைக் கேட்டபோது அர்ஜூனின் கண்கள் சுருங்கியது.

“மிரட்டினாங்களா உன்னை, உங்க வீட்டுல?”

“உன்னோட அர்ஜூனைக் கொன்னுடுவோம்னு சொன்னாங்க அர்ஜூன்.” இதைச் சொல்லும்போது மதுரா வெடித்து அழுதாள்.

“ஓ…‌”

“எப்படின்னு தெரியலை. வீடு வரைக்கும் நம்ம விஷயம் தெரிஞ்சிருக்கு.” கண்களைத் துடைத்துக் கொண்டாள் பெண்.

“அன்னைக்குக் காலையில தான் உங்கப்பா என்னைப் பார்த்துப் பேசினார்.”

“எப்போ? இதை ஏன் எங்கிட்ட நீ சொல்லலை அர்ஜூன்?”

“சொல்ல அவகாசம் கிடைக்கலை மதுரா. பணம் குடுக்குறேன், இடத்தைக் காலி பண்ணுன்னு முதல்ல சொன்னார். அதுக்கு மசியல்லைன்னதும் மிரட்டினார்.‌ மதுராவை என்னால விட்டுக் குடுக்க முடியாது. உங்களால என்ன முடியுமோ பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு நான் போய்ட்டேன்.”

“அதுக்கு… அப்புறமாத்தான்…” மேலே பேச வாய் வரவில்லை பெண்ணுக்கு.

“ம்… நாலஞ்சு பேர் வந்தாங்க. என்ன ஏதுன்னு கேக்குறதுக்கு முன்னாடி அடிச்சு நொறுக்கினாங்க.”

“அர்ஜூன்!” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓடி வந்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். எதிலிருந்தோ அவனைக் காப்பது போல அவள் அணைத்திருந்த கோலம் பார்த்துவிட்டு அர்ஜூன் புன்னகைத்தான். அவன் கை அவள் தலையைக் கோதிக் கொடுத்தது.

“ஹாஸ்பிடல் வந்திருந்தியா என்ன?”

“ம்… ஆன்ட்டி இருந்தாங்க.”

“பேசினியா?”

“ம்… ஐஸியூ எங்கிறதால வெளியே இருந்துதான் பார்க்க முடிஞ்சுது. உங்களைப் பார்த்ததும் நான் அப்பவே செத்துப் போயிட்டேன் அர்ஜூன்.” மீண்டும் ஹோவென்று அழுதவளை அரவணைத்துக் கொண்டான் அர்ஜூன்.

“அப்படியொரு ஆத்திரம் வந்துச்சு. வீட்டுக்குப் போய் அத்தனை பேரையும் நிக்க வெச்சுக் கேள்வி கேட்டேன்.”

“ம்…”

“யாருமே அசைஞ்சு குடுக்கலை. அம்மா மட்டும் தான் எனக்காக அழுதாங்க. அப்போதான்…”

“என்ன ஆச்சு?”

“ஆதர்ஷினி பத்தித் தெரிய வந்திச்சு.”

“ஓ… என்ன சொன்னாங்க?”

“அத்தையும் மாமாவும் ஒரு நாட்டியமே ஆடி முடிச்சாங்க.”

“ம்…”

“இப்பவே மாப்பிள்ளை பார்க்கணும், இல்லைன்னாக் குடும்ப மானம் காத்துல பறந்திடும்னு ஒரே சத்தம். அப்பாவும் அமைதியாகிட்டார். யாருமே அவங்களை எதிர்த்துப் பேசலை. அம்மாவோட பேச்சு அங்க எடுபடவே இல்லை.”

“……………”

“அப்போ சஞ்சு மட்டும் தான் எங்கூட நின்னான்.”

“ம்…”

“அவங்க பார்க்கிற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டலைனா உங்கக் கதையை ஹாஸ்பிடல்ல வெச்சே முடிச்சிருவோம்னு சொன்னாங்க. என்னால என்ன பண்ண முடியும் அர்ஜூன்?”

“சஞ்சீவ் என்ன சொன்னான்.” அர்ஜூனின் குரலில் மதுரா அவனை அண்ணார்ந்து பார்த்தாள். அந்தக் குரலை வைத்து எதையும் கணிக்க அவளால் முடியவில்லை.

“இப்போதைக்கு உனக்குத் தேவை ஒரு கல்யாணம். அதை நான் பார்த்துக்கிறேன். பின்னாடி என்ன பண்ணலாம்னு அப்போ முடிவு பண்ணிக்கலாம். இப்போ நான் சொல்றதுக்கு எல்லாம் தலையை மட்டும் ஆட்டுன்னு சொன்னான்.”

“ம்… பின்னாடி ஏதாவது பண்ணினானா?”

“அர்ஜூன்… நீங்க சஞ்சுவை சந்தேகப்படுறீங்களா?”

“உனக்கு எதுவுமே வித்தியாசமாப் படலையா மதுரா?” அர்ஜூனின் பேச்சில் மதுராவின் நெற்றி சுருங்கியது.

“சஞ்சு எனக்கு உதவிதான் பண்ணினான் அர்ஜூன். இன்னைக்கு வரைக்கும் எனக்குப் பாதுகாப்பாத்தான் இருக்கான், ஒரு நல்ல ஃப்ரெண்டா.”

“ம்… சரிடா.”

“சஞ்சுவைப் பத்தி எப்பவுமே தப்பாப் பேசாதீங்க அர்ஜூன். எனக்குக் கஷ்டமா இருக்கு.”

“சரி சரி… பேசலை. இப்போ உன்னோட மனசுல என்ன இருக்கு மதுரா?”

“அர்ஜூன்?”

“இந்த நிமிஷம் உம் மனசுல தோணுறதை நீ எனக்கு மறைக்காம சொல்லு.”

“அர்ஜூன்… எனக்குப் புரியலை. எங்கிட்ட நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க?”

“உன்னை எதிர்பார்க்கிறேன் மதுரா. ஆதர்ஷினியை எதிர்பார்க்கிறேன். என்னோடதை இத்தனை நாளும் மத்தவங்ககிட்ட இரவல் குடுத்ததுப் போதும். திருப்பிக் குடுக்கச் சொல்லு.” அவன் இலகுவாகச் சொல்ல அவள் விறைத்துப் போனாள்.

“அர்ஜூன்! என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா?”

“ம்… நான் என்னத் தப்பாச் சொல்லிட்டேன் இப்போ?”

“அர்ஜூன்… இங்கப் பாருங்க. நீங்க எனக்கு முக்கியம். ரொம்ப முக்கியம். எம் பொண்ணா, அர்ஜூனான்னு கேட்டா… எந்தத் தயக்கமும் இல்லாம என்னோட பதில் அர்ஜூனாத்தான் இருக்கும்.”

அவள் பேச்சில் இப்போது அர்ஜூன் புன்னகைத்தான். அவன் பக்கமாக வந்தவள் அந்த முகத்தை, கன்னக்கதுப்பை வருடிக் கொடுத்தாள். இத்தனை நாளும் இழந்திருந்த அவன் ஸ்பரிசத்தை அவள் விரல்கள் தீண்டிக் களித்தன.

“நீங்க எங்கூட இல்லாட்டியும் பரவாயில்லை. எங்கேயாவது சந்தோஷமா இருக்கணும் அர்ஜூன்.”

“நீ இல்லாம எனக்கு சந்தோஷம் எங்கிருந்து வரும் மதுரா?”

“அர்ஜூன் புரிஞ்சுக்கோங்க. எங்க வீட்டுல இருக்கிறவங்க ஏதாவது உங்களுக்குப் பண்ணிடுவாங்களோங்கிற பயம் இன்னுமே எனக்கு இருக்கு.”

“இப்படி ஆளுக்கொரு பக்கமா இருந்து சாகுறதுக்கு அது எவ்வளவோ மேல் மதுரா.”

“அர்ஜூன்! முட்டாள் மாதிரிப் பேசாதே. இதுக்குத் தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேனா?” அவள் முகத்தில் தெறித்த ஆத்திரம் பார்த்துப் புன்னகைத்தான் அர்ஜூன்.

அவன் கைகள் அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டது.

“அப்போ இத்தனை நாளும் நான் பட்ட கஷ்டத்துக்கு அர்த்தம் என்ன மதுரா? நீ அப்போப் பார்த்த அர்ஜூன் இல்லை மதுரா நான்.”

“வேணாம் அர்ஜூன். விட்டிருங்க.” அவள் குரலில் அத்தனை உறுதி இருந்தது.

“எப்படி விட முடியும். முன்னாடியாவது ஒன்னு ரெண்டு என்ன சைட் அடிக்கும். இப்போ அப்படியா? பெரிய லிஸ்ட்டே இருக்கு. அதையெல்லாம் பார்த்து நீ சண்டை போட வேணாம்?” சட்டென்று அவன் அவளை இலகுவாக்க முயன்றான். மதுராவும் புன்னகைத்தாள்.

“இன்னும் அந்த வயலினைத் தூக்கிக்கிட்டுத் தான் அலையுறீங்களா அர்ஜூன்?”

“ஆஹாஹா! இப்போ வயலினைத் தூக்காமலேயே பட்சிங்க சும்மாப் பறந்து வருது.”

“ம்ஹூம்… அடி குடுக்க இந்த மதுரா பக்கத்துல இல்லேங்கிற தைரியமா இருக்கும்.”

“ம்… இருக்கும் இருக்கும்.” தலையை ஆட்டியவன் மனதுக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடியது.

“கிளம்பலாமா அர்ஜூன்?” சொன்னவளை அவன் கண்கள் ஆழமாகப் பார்த்தது. அவளுக்கு என்ன புரிந்ததோ! அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கியவள், அவன் இதழில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

அர்ஜூன் உறைந்து போனான். உலகத்து இன்பத்தையெல்லாம் ஒன்றாகத் திரட்டி அவள் கொடுத்த இதழ் முத்தத்திற்குள் திணித்து வைத்தது போல இருந்தது. விலக மனமில்லாமல் நின்றிருந்தார்கள் இருவரும்.

காவேரி ஆற்றுக்குக் கல்லில் அணை… கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை… நான் போடவா…

error: Content is protected !!