PunnagaiMannan-9

புன்னகை மன்னன்

அத்தியாயம் – 9

மதுராவின் பொறுமை முழுதாகக் கரைந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று வாகனங்கள் மாற்றிவிட்டார்கள். கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் பயணித்தும் விட்டார்கள். ஆனால் யாரும் வாயைத் திறக்கவில்லை.

மதுரா எவ்வளவு பேசியும் எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்கள். தேவைகள் அனைத்தும் செவ்வனே நிறைவேற்றப்பட்டன. மிகவும் மரியாதையாக நடந்து கொண்டார்கள். சொல்லப்போனால் ராஜமரியாதை தான். ஆனால் மதுராவிற்கு ஒன்றுமே சுவைக்கவில்லை. எரிச்சல் தான் வந்தது. அம்மா வேறு தேடுவார்களே!

கடைசியாக இவர்கள் போன வாகனம் ஓரிடத்தில் நிற்க அங்கிருந்த இன்னொரு காரில் ஏறச்சொன்னார்கள். மதுராவிற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

“இங்கப் பாருங்க… இதுக்கு மேல என்னால அசையவே முடியாது. உங்களை யாரு இதெல்லாம் பண்ணச் சொன்னாங்களோ அவங்களை வரச்சொல்லுங்க. அப்பதான் நான் இறங்குவேன்.” இவள் கறாராகச் சொல்லிவிட்டு சட்டமாக உட்கார்ந்துக் கொண்டாள்.

காரை ஓட்டிக்கொண்டு வந்த மனிதன் முகத்தில் சலிப்புத் தெரிந்தது. ஃபோனை எடுத்து யாரையோ அழைத்தார். கொஞ்சம் தள்ளி நின்று பேசியதால் என்ன பேசுகிறார் என்று இவளுக்கும் புரியவில்லை.

அவர்கள் இருக்கும் இடம் கிராமப் புறமாக இருந்தது. வரும் வழியில் தன்னையும் மறந்துப் பத்து நிமிடங்கள் கண்மூடி இருந்தாள். ஆனால் அவள் உறங்கியது கிட்டத்தட்ட ஐந்து மணித்தியாலங்கள் என்பது அவளுக்கே தெரியாது.

இவர்கள் கண்ணயரும் போது மயக்கம் தரும் மெல்லிய ஸ்ப்ரேயை இவர்கள் புறமாக அடிக்க வேண்டும் என்பது ட்ரைவருக்கு விடுக்கப்பட்டிருந்த கட்டளை.

முகத்தை மூடிக்கொண்டு ட்ரைவர் அதைச் செய்திருக்க, அம்மாவும் மகளும் நன்றாகத் தூங்கி இருந்தார்கள். மதுரா சென்னையை விட்டுத் தான் அத்தனை தொலைவில் இல்லை என்று நினைத்திருக்க அது பொய்யாகிப் போயிருந்தது.

சற்று நேரத்தில் இவர்கள் நின்றிருந்த இடத்திற்கு இன்னொரு கார் வந்து சேர்ந்தது. அதிலிருந்து இறங்கிய மனிதரை மதுரா முன்புப் பார்த்திருக்கிறாள்.

“நீங்க…‌ அர்ஜூன் ஃப்ரெண்ட் இல்லை?”

“ஆமா சிஸ்டர். மறந்துட்டீங்களா? தயாளன்.”

“ஆமா… ஆமா…‌ இப்போ ஞாபகம் வருது. தயாளன்… அர்ஜூன் சொல்லி இருக்கார். இங்க என்ன நடக்குது தயாளன்?”

“கோபப்படாதீங்க சிஸ்டர். எல்லாம் உங்க நன்மைக்குத்தான் நடக்குது. கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க.”

“அர்ஜூன் எங்க?”

“இன்றும் ரெண்டு நாளைக்கு அர்ஜூன் சென்னையை விட்டு நகரமாட்டான்.”

“ஏன்? அப்போ எதுக்கு எங்களை இங்க வர வைச்சிருக்கார்?”

“எதுவும் சொல்ல இப்போ எனக்குப் பர்மிஷன் இல்லை. ரெண்டு நாள்ல அர்ஜூனே இங்க வருவான். அப்போ எல்லாம் உங்களுக்குப் புரியும். இப்போ கிளம்பலாமா?”

“என்னோட ஃபோனைக் குடுங்க. நானே அர்ஜூன் கிட்டப் பேசிக்கிறேன்.” அதற்கு வெறும் சிரிப்பு மட்டுமே தயாளனிடமிருந்துப் பதிலாக வந்தது.

மதுரா அதற்கு மேல் அடம்பிடிக்கவில்லை. தயாளன் கை காட்டிய காரிற்குள் ஏறிக்கொண்டாள். இன்று பேசும் போதும் அர்ஜூன் இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள் என்று தானே சொன்னான். என்னதான் நடக்கிறது இங்கே? வீட்டில் வேறு தேடுவார்களே!

கார் அழகான ஒரு வீட்டின் முன் போய் நின்றது. கிராமத்துப்புறம். நல்ல ஈரலிப்பாக இருந்தது மண். மழை இங்கு அடிக்கடிப் பெய்யும் போல.

கொஞ்சம் பழைய வீடு என்றாலும் எல்லா வசதிகளும் இருந்தன. அண்மையில் தான் யாரோ வாங்கி இதைப் புதுப்பித்திருக்க வேண்டும்.

“ஒரு ரெண்டு வாரம் முன்னாடி தான் அர்ஜூன் இந்த வீட்டை வாங்கினான்.”

“ஓ… என்ன திடீர்னு?”

“அவனுக்கு இந்த ஊர் ரொம்பப் பிடிக்கும். உங்களோட வந்து இங்க தங்கணுமாம். அதுக்காகவே அவசர அவசரமா எல்லா ஏற்பாடும் பண்ணினான்.”

“ஓ… எந்த ஊர் இது?” இதற்கும் தயாளன் பதில் சொல்லவில்லை. இப்போதும் வெறும் புன்னகைதான் பதிலாகக் கிடைத்தது. இருள் சூழ ஆரம்பித்திருந்தது.

“உங்களுக்கும் பாப்பாவுக்கும் தேவையானது அந்த ரூம்ல இருக்குதாம். குளிச்சிட்டு வாங்க சிஸ்டர். சாப்பாடு ரெடியா இருக்கு.”

“அர்ஜூன் எப்போ வருவார்?‌ வீட்டுல தேடுவாங்க தயாளன். அப்பாவுக்கு இப்போதான் ஹார்ட் அட்டாக் வந்தது. இந்த சமயத்துல இதெல்லாம் எனக்கு நல்லதா படலை. அர்ஜூன் ஏன் இப்படியெல்லாம் பண்ணுறார்?”

“எனக்கு அர்ஜூன் போட்ட ஆர்டர் ம்மா இது. இதைத்தாண்டி என்னால எதுவும் பண்ண முடியாது. குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்.” தயாளன் நகர்ந்து விட்டார்.

மதுராவிற்கு வியப்பாக இருந்தது. தனது அப்பாவைப் பற்றிப் பேசியதும் ஏன் இந்த மனிதருக்குக் கோபம் வருகிறது? இதுவரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர் எதற்கு இப்போது கோபமாகப் போகிறார்?

எதற்குமே பதில் கிடைக்காது என்பதால் அமைதியாகவே இருந்தாள் மதுரா. இட்ட பணியை அவர்கள் செய்கிறார்கள். எய்தவன் இருக்க அம்பை எதற்கு நோகவேண்டும்? வரட்டும்… அர்ஜூன் வரட்டும். அவனை…

*************

ஷாப்பிங் போன மகளும் பேத்தியும் வீடு வரத் தாமதம் ஆனபோது முதலில் மலர் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. நிச்சயம் அர்ஜூனைச் சந்தித்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டார்.

ஆனால் நன்றாகத் தாமதம் ஆகவும் மதுராவை ஃபோனில் அழைத்தார். ஃபோன் அணைக்கப்பட்டிருந்தது. லேசாகப் பயம் வந்தது. சமாளித்துக் கொண்டார்.

சற்று நேரங் கழித்தும் ஃபோன் ஸ்விச்ட் ஆஃப் என்றே வரவும் பயந்து போனார். அர்ஜூனின் நம்பரும் அவருக்குத் தெரியாதே. கணவரிடம் லேசாக விஷயத்தைச் சொன்னார்.

விஷயம் சஞ்சீவின் காதுக்குப் போனபோது அவன் பதட்டப்படவில்லை. மதுராவைத் தொடர மதிநிலவன் ஆள் அனுப்பி இருந்தார். அர்ஜூனை அவள் சந்திக்கிறாளா என்று அவருக்கு அறியவேண்டி இருந்தது. அந்த மனிதரைத் தொடர்பு கொண்டான்.

மதுராவைப் பின்தொடர்ந்த படி தகவல்கள் வழங்கிக் கொண்டிருந்த அவரும் காணாமற் போயிருந்தார். சட்டென்று பதட்டம் தொற்றிக்கொள்ள அப்பாவை அழைத்தான். அப்போது அவர் வீட்டில் இருக்கவில்லை.

“அப்பா! மதுரா இன்னும் வீட்டுக்கு வரலை.”

“இல்லையே சஞ்சு. கார் பார்க்கிங்குக்கு மதுரா வந்ததை நம்ம ஆள் பாத்திருக்கான். அந்தப் பரதேசியை அவ மீட் பண்ணலை. யாருக்கோ ஃபோன் தான் பண்ணி இருக்கா.”

“அப்போ மதுரா எங்கப்பா?”

“யாராவது ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போயிருப்பா. வந்திடுவா. ஃபோன் சார்ஜ் தீர்ந்து போயிருக்கும். இதுக்குப் போய் எதுக்கு டென்ஷன் ஆகுற?”

“ம்…” சஞ்சீவிற்கும் அப்பா சொல்வது சரியென்று தான் தோன்றியது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். ஆனால் அதற்கு அதிக ஆயுள் இருக்கவில்லை.‌

நேரம் ஏறிக்கொண்டே இருந்தது. மதுராவும் குழந்தையும் வீடும் திரும்பவில்லை. ஃபோனும் அணைத்தே இருந்தது. மலர் அழ ஆரம்பித்து விட்டார். மதிநிலவனின் ஆள் மயக்கமாகக் கிடந்து பின் இவர்களைத் தொடர்பு கொண்ட போதுதான் நிலைமையின் வீரியம் புரிந்தது. சஞ்சீவ் கோபத்தின் உச்சியில் காரைக் கிளப்பிக் கொண்டு நேராக அர்ஜூனின் அலுவலகத்திற்குத் தான் போனான்.

அலுவலகத்தில் நின்றிருந்தவர்கள் இவனைத் தடுக்கத் தடுக்க அது எதையும் பொருட்படுத்தாமல் கான்ஃபரன்ஸ் அறைக்குள் புகுந்தான். வெளிநாட்டு மூலதனக் காரர்களுடன் அர்ஜூன் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான் அப்போது.

சஞ்சீவிற்கே ஒரு மாதிரி ஆகிப்போனது. சாரி சொன்னவன் சட்டென்று வெளியே வந்து விட்டான். ஆனால் அங்கேயே அசையாமல் அமர்ந்து கொண்டான். அர்ஜூன் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

அர்ஜூனின் கட்டளையின் பேரில் இவனுக்கு காஃபி வந்தது. ஒன்றிரண்டு மாகசின்களும் தரப்பட்டது. சஞ்சீவ் பல்லைக் கடித்துக் கொண்டான். ஆத்திரப்படுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதால் அமைதியாக அமர்ந்திருந்தான்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்துத்தான் அர்ஜூன் வந்து சேர்ந்தான். டையைத் தளர்த்தியபடி வந்தவன் சஞ்சீவிற்கு எதிரே சாவகாசமாக அமர்ந்தான்.

“மதுராவும் குழந்தையும் எங்கே?” சஞ்சீவின் குரல் வெடித்தது.

“யாரு? யாரைக் கேட்டீங்க? உங்க வைஃபையும் பொண்ணையுமா?” வார்த்தைகளில் சற்று அழுத்தம் இருந்தது.

“அர்ஜூன்… விளையாடாதே. இது விளையாடுற விஷயமும் இல்லை.”

“உனக்கும் உங்கப்பனுக்கும் எல்லாரோடையும் விளையாடித்தானே பழக்கம்? இப்போ என்ன புதுசாப் பேசுற சஞ்சீவ்?”

“அர்ஜூன்…” சஞ்சீவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக வெறிப் பிடித்துக் கொண்டிருந்தது.

“யோவ்! ஊருக்குள்ள உனக்கு எத்தனை எதிரிங்க இருப்பாங்க. அங்க போய் கேளு. இங்க வந்து டைமை வேஸ்ட் பண்ணாமப் போய்த் தேடுற வழியைப் பாரு.”

“அர்ஜூன்… என்னைக் கொலைகாரன் ஆக்காதே!”

“இஞ்சப்பார்ரா! ஐயாக்குக் கோபம் எல்லாம் வருது.”

“மதுரா எங்கன்னு சொல்லு அர்ஜூன்.”

“முக்கியமான மீட்டிங்ல இவ்வளவு நேரமும் உட்கார்ந்துட்டு வர்றேன். சம்பந்தமே இல்லாம எங்கிட்ட வந்து உன்னோட பொண்டாட்டி புள்ளையைப் பத்திக் கேக்குற?”

“உனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இருக்கு!” சஞ்சீவின் குரல் இப்போது உயர்ந்தது.

“ம்…” இப்போது நிதானமாகத் தலையாட்டினான் அர்ஜூன்.

“எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இருக்குன்னு உனக்கு இப்போ தான் தெரியுதா?”

“அர்ஜூன்!”

“வாயை மூடுடா நாயே! கல்யாணம் பண்ணி உனக்கு உதவி பண்ணுறேன்னு சொல்லிட்டு இத்தனை நாளும் நீ அவளை மறைச்சு வெச்சப்போ எனக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்? அப்போத் தெரியலையா உனக்கு… சம்பந்தப்பட்டவளை எங்கிட்டக் கொண்டு வந்து சேர்க்கணும்னு?”

“அர்ஜூன்… உன்னோட விவாதம் பண்ண நான் இப்போ இங்க வரலை. மாமாவோட உடல்நிலை அவ்வளவு நல்லா இல்லை.”

“யாருக்குப் பூச்சாண்டி காட்டுற சஞ்சீவ்? உன்னோட மாமா மலை விழுங்கி மஹாதேவன்னு எனக்கு நல்லாவே தெரியும். பேசாமப் போயிடு. இல்லைன்னாப் பரவாயில்லை… சாகட்டும் விடு. இருந்து என்னத்தைக் கிழிக்கப்போறார்?”

“அர்ஜூன்… வேணாம். மதுராவை எங்கிட்டக் குடுத்திடு.”

“இதுக்கு மேல ஒரு வார்த்தை அவளைப் பத்தி எங்கிட்டப் பேசினே… தொலைச்சிடுவேன். வெளியே போடா!”

வார்த்தைகள் இருபக்கத்திலிருந்தும் தாறுமாறாக சிதறிக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்துக்கு மேல் சஞ்சீவ் கிளம்பிவிட்டான். யாரை வைத்துக் காய் நகர்த்த வேண்டும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

சற்று நேரத்திலெல்லாம் மலர் தன்னைத் தேடி வரவும் அர்ஜூன் புன்னகைத்துக் கொண்டான். அவனுக்குத் தெரியும். அடுத்த கட்ட நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்று.

“வாங்க அத்தை.”

“அர்ஜூன்! மதுராவும் பாப்பாவும் எங்கே? சஞ்சீவ் என்னென்னமோ சொல்லுறானே. எனக்குப் பயமா இருக்கு அர்ஜூன்.” பதட்டமாகப் பேசிய மலரை முதலில் அமர வைத்தவன் புன்னகைத்தான்.

“எதுக்கு அத்தை இவ்வளவு டென்ஷன்?‌ அவங்க எங்கிட்டத்தான் பத்திரமா இருக்காங்க. நீங்க கவலையே படவேணாம்.”

“ஐயையோ! எம் புள்ளைங்களுக்கு ஒன்னும் ஆகலை இல்லை அர்ஜூன்?”

“ஒன்னுமே ஆகலை… ஆகவும் நான் விடமாட்டேன்.”

“இப்போ அவங்க எங்க இருக்காங்க அர்ஜூன்?”

“அது சொல்ல முடியாது அத்தை.‌ சாரி.”

“அர்ஜூன்!” மலரின் முகத்தில் இப்போது அதிர்ச்சி தெரிந்தது.

“அத்தை… என்னை நீங்க நம்புறீங்க இல்லை?”

“ம்…”

“அப்போ நான் சொல்லுற படிக் கேளுங்க.”

“ம்… என்ன பண்ணணும்?”

“நான் ஒரு பேப்பர் குடுக்கிறேன். அதை உங்க மருமகன் கிட்டக் குடுத்து சைன் வாங்கிக் குடுங்க. ஆட்டோமேட்டிக்கா உங்க பொண்ணு அவ பொண்ணோட உங்க வீட்டுக்கு வருவா.”

“என்ன பேப்பர் அது?”

“டிவோர்ஸ் பேப்பர்ஸ்.”

“ஓ…”

“எனக்கு அந்த முட்டாள் பயல்கிட்ட இருந்து மதுராக்கு டிவோர்ஸ் வேணும். தன்மையாக் கேட்டுப் பார்த்தேன். முடியாதுன்னு சொல்லிட்டான். அதனால தான் இப்படிப் பண்ண வேண்டியதாப் போச்சு.”

“ஓ… இதைக் கொண்டுபோய் நீட்டினா சஞ்சீவோட அப்பா இதுக்கும் பேரம் பேசுவார்.”

“கேக்குறதைக் குடுத்திடுங்க அத்தை. அது எல்லாத்தையும் விட மதுராவோட வாழ்க்கை உங்களுக்கு முக்கியம் இல்லையா?”

“கண்டிப்பா!”

“உங்களுக்கு நான் இருக்கேன் அத்தை.” அந்த வார்த்தைகளைச் சொன்ன போது மலரின் முகம் மலர்ந்து போனது. வாய் நிறையப் புன்னகைத்தார்.

“எப்பாடுபட்டாவது இதுல ஒரு கையெழுத்தை வாங்குறேன் அர்ஜூன்.” மலர் சொன்னபோது அர்ஜூன் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“கவலைப்படாதீங்க அத்தை. உங்க பொண்ணும் பேத்தியும் என்னோட பொறுப்பு. இனிமே அவங்க சந்தோஷமாத்தான் இருப்பாங்க.” அத்தையும் மருமகனும் புன்னகைத்துக் கொண்டார்கள். சஞ்சீவ் அதில் கையெழுத்துப் போடத் தயங்கினாலும் மதிநிலவன் போட வைப்பார் என்று அர்ஜூனிற்கு நிச்சயமாகக் தெரியும்.

***************

இரண்டு நாட்கள் போயிருந்தது. மதுராவிற்கோ குழந்தைக்கோ எந்த விதமான சௌகரியக் குறைச்சல்களும் ஏற்படவில்லை. ஆனால் வெளி உலகோடு தொடர்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.

வீட்டை விட்டு வெளியே போக தயாளன் அனுமதிக்கவில்லை. வீட்டிற்குப் பின்னால் நல்ல பெரிய இடம் வாழை மரங்களால் நிறைந்திருந்தது. சகல வசதிகளும் இருந்ததால் குழந்தைக்கும் போரடிக்கவில்லை.

ஆனால் அர்ஜூன் மாத்திரம் இன்னும் வந்து சேரவில்லை. தயாளனிடம் இதுவரை பலமுறை மதுரா கேட்டுவிட்டாள். ஆனால் பதில் மட்டும் ஒன்றுபோலவே வந்தது.

‘இன்னைக்கு எப்படியும் வந்திருவான் ம்மா.’

எரிச்சலின் உச்சக்கட்டத்தில் இருந்தாள் மதுரா. இரவு உணவும் உண்டு முடித்தாகிவிட்டது. இன்னும் அவன் வந்து சேர்ந்திருக்கவில்லை. காத்திருந்துப் பார்த்து விட்டுக் குழந்தை கூட உறங்கிப் போனது. மதுரா ஆத்திரத்துடன் ரூம் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு சரவிளக்கின் வெளிச்சத்தில் நடைபயின்றுக் கொண்டிருந்தாள்.

வெளியே காரொன்றின் சத்தம் கேட்டது. மதுராவிற்கு உடம்பெல்லாம் பரபரத்தது. நிச்சயம் அர்ஜூனாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் வெளியே வராமல் ரூமிலேயே இருந்தாள்.

வெளியே பேச்சுக் குரல்கள் கேட்டது. அர்ஜூனும் தயாளனும் தான் பேசிக் கொண்டார்கள். இடையிடேயே அந்தப் புன்னகை மன்னனின் வசீகரச் சிரிப்பும் கேட்டது. காலடி ஓசை ரூமை நெருங்க மதுரா ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டாள். ரூமைத் திறந்தவன் உள்ளே வந்தான்.

“ஏய் மதுரா! என்ன இது லைட்டை… ஓ… சின்னக்குட்டி தூங்கிட்டாங்களா?” கேட்டபடி அவன் குழந்தையிடம் போக மதுரா வெளியே வந்து விட்டாள்.

களைத்துப் போய்த் தெரிந்தான். எதற்கு இவனுக்கு இந்த வேண்டாத வேலைகள்? எத்தனை பெரிய ஆபத்தை இவன் இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறான்.

வீட்டிற்குப் பின்னாலிருந்த கிணற்றுப் பகுதிக்கு வந்தாள் மதுரா. வானில் நிலா காய்ந்து கொண்டிருந்தது. காற்றின் குளுமை கூட அவள் வெம்மையைத் தணிக்கச் சக்தியற்றுப் போயிருந்தது.

“மதுரா!” காதோரம் கேட்ட அந்தக் குரலில் சட்டென விலகப் போனாள் பெண். ஆனால் அவன் கரங்கள் அவளைத் தடுத்து அணைத்திருந்தது.

“சாப்பிட்டீங்களா?” கறாராக வந்தது கேள்வி.

“என்னை விட்டுட்டுச் சாப்பாட்டை முடிச்சவங்க இதைக் கேக்கக் கூடாது.”

“ஆமா… நீங்க எங்கிட்ட எத்தனை மணிக்கு வருவேன்னு சொல்லிட்டுப் போனீங்க பாருங்க, நான் காத்துக்கிட்டு இருக்க.” உரிமையாக அவள் நொடித்துக் கொள்ள அவன் உரிமையை அவனும் வேறு வழியில் காண்பித்தான்.

“விடுங்க அர்ஜூன் வலிக்குது.”

“வருஷக் கணக்குல பட்டினி போட்டா இதையெல்லாம் தாங்கத்தான் வேணும்.” சொன்னவனைப் பிடித்துத் தள்ளி இருந்தாள் மதுரா.

“எதுக்கு இத்தனை விளையாட்டு அர்ஜூன்? எனக்கென்னமோ பயமா இருக்கு.” அவள் சொல்லவும் ஃபோனை எடுத்து ஒரு புகைப்படத்தைக் காட்டினான்.

“என்ன இது?” அவன் காட்டிய படத்தில் ஒரு காகிதம் இருந்தது. அதில் சஞ்சீவ் கையெழுத்திட்டிருந்தான்.

“அர்ஜூன்! இது…”

“மேடமோட சைனுக்கு வெயிட்டிங். போட்டீங்கன்னா டும் டும் டும்.” சொல்லியபடியே மீண்டும் அவளுக்குள் புதைந்தான் அர்ஜூன். மதுரா பேச மறந்து போனாள்.

“எப்படி அர்ஜூன்?” அவள் பேச்சைக் கணக்கில் கொள்ளாதவன் யாருக்கோ ஃபோன் பண்ணினான். ரிங் போகும் சத்தம் கேட்டது.

“பேசி முடிச்சுட்டு வந்து சாப்பாடு போடு, பசிக்குது.” அவன் இங்கு நகரும் போது அங்கு மலரின் குரல் கேட்டது.

“அம்மா!”

“மதுரா!” அதற்கு மேல் அர்ஜூன் அங்கு நிற்கவில்லை. புன்னகையோடு நகர்ந்துவிட்டான்.

ரூமிற்குள் வந்தவன் குழந்தையை மீண்டும் ஒரு முறை முத்தமிட்டுவிட்டுக் குளிக்கப் போய்விட்டான். இவனைத் தொடர மதிநிலவன் ஆட்கள் போட்டிருந்தத் தகவல் இவனுக்கு வந்து சேர்ந்திருந்ததால் கொஞ்சம் போக்குக் காட்டியபடிதான் பயணப்பட்டான். அதனால்தான் இத்தனைத் தாமதம் ஆகியிருந்தது.

ஆனால் மலர் காரியத்தைக் கனகச்சிதமாக முடித்திருந்தார். மதிநிலவன் பேசிய பேரத்திற்கு உதய நாராயணன் சம்மதித்திருந்தாராம். இதைத் தன் மாமியார் சொன்ன போதுதான் அர்ஜூன் ஆச்சரியப்பட்டான்.

ஆனால் கையெழுத்திட்ட சஞ்சீவின் முகத்தில் வன்மம் இருந்ததாம். ஆனால் அதை அர்ஜூன் பொருட்படுத்தவே இல்லை.

“அர்ஜூன்!” குழந்தையைத் தொல்லை பண்ணாமல் மெதுவாக அழைத்தாள் மதுரா. பாத்ரூமில் நீர் கொட்டும் சத்தம் சட்டென்று நின்றது.

“இவ்வளவு நேரம் யாராவது இந்த ராத்திரியில குளிப்பாங்களா?” அவள் தனக்குத்தானே புலம்பிக்கொள்ள, அர்ஜூன் வெளியே வந்தான். வேண்டுமென்றே டீஷர்ட்டை அணியாமல் வந்திருந்தான்.

“இங்க ப்ரீத்தி இருக்காளா என்ன? எதுக்குடா நீ இப்போ ஆர்ம்ஸ் காட்டுறே?” இவள் பேச்சுச் சத்தத்தில் குழந்தை லேசாக அசைந்தது. அர்ஜூன் சிரிக்க, வாக்குவாதம் பண்ணாமல் இருவரும் வெளியே வந்து விட்டார்கள்.

டைனிங் டேபிளில் அர்ஜூன் உட்கார மதுரா பரிமாறிக் கொண்டிருந்தாள். சாப்பாடு சூடாக இருந்தது. வேலை செய்யும் பெண்மணிக்கு அர்ஜூன் வருவான் என்று தயாளன் சொல்லி இருந்ததால் எல்லாம் ரெடியாக இருந்தது.

“அர்ஜூன்! அப்போ நான் கிளம்பட்டுமா?” இது தயாளன்.

“காலையில போகலாமே தயா?”

“இல்லை அர்ஜூன். இப்போக் கிளம்பினா வசதியா இருக்கும்.”

“ஓ… அப்படியா? அப்போ ஓகே. மதுரா… தயாளன் குடுக்குற பேப்பர்ல சைன் பண்ணிக் குடு.” அர்ஜூன் சொல்லவும் தயாளன் பேப்பரை நீட்டினான். மளமளவென கையொப்பம் இட்டவள் அதை தயாளனிடம் நீட்டினாள்.

“நான் கிளம்புறேன் அர்ஜூன். வரேன் ம்மா.” அத்தோடு தயாளன் கிளம்பிவிட அர்ஜூன் சாப்பாட்டைத் தொடர்ந்தான். மதுரா ஏதோ ஒரு யோசனையோடே வேலைகளைக் கவனித்தாள்.

மகள் தூங்கிக் கொண்டிருந்த ரூமிற்குள் போகப் போனவளை பக்கத்து ரூமிற்குள் இழுத்துக் கொண்டான் அர்ஜூன்.

“அர்ஜூன்… சின்னவ தனியாத் தூங்குறா…”

“கொஞ்ச நேரம் செர்ரி… ப்ளீஸ்டா…”

“ம்… சொல்லுங்க.” அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் பெண்.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா விஷயத்தை முடிக்கச் சொல்லி தயாளன் கிட்டச் சொல்லி இருக்கேன். இனியும் இப்படி இருக்க முடியாது செர்ரி.”

“ம்…” மதுரா புன்னகைத்தாள்.

“உனக்குச் சிரிப்பா இருக்கா? நீயும் தனியாத்தான் இருந்தே. ஆனா உனக்குக் குழந்தைங்கிற ஒரு சந்தோஷம் இருந்துச்சு. ஆனா எனக்கு அப்படியில்லை மதுரா. தனிமை மட்டும் தான்.”

“புரியுது அர்ஜூன்.”

“என்னை உனக்குப் புரிஞ்ச மாதிரி இப்போ… எனக்குத் தோணலையே மதுரா.” அவன் பேச்சின் அர்த்தம் புரிந்தவள் அந்தக் கன்னத்தில் எம்பி முத்தம் வைத்தாள்.

“அந்த ப்ரீத்தியோட அட்ரெஸை எங்க வெச்சேன்னு ஞாபகம் இல்லையே…” அவன் சொன்னதுதான் தாமதம்… அவனைப் பிடித்துக் கட்டிலில் தள்ளியவள் அவன் மார்பில் அடிக்க ஆரம்பித்திருந்தாள். சத்தமாகச் சிரித்தபடி அவள் கைகளைப் பிடித்தவன்,

“வாழ்க ப்ரீத்தி” என்றான்.

“உன்னைக் கொன்னுடுவேன் பி.எம்.”

“வெயிட்டிங் செர்ரி.” அதற்கு மேல் அங்கு பேச்சுச் சத்தம் கேட்கவில்லை.