Puthu Kavithai 21

Puthu Kavithai 21

அத்தியாயம் 21

சகுந்தலா கூறியதை கேட்டதும் அதிர்ந்தவன், “ம்ம்மா… உளறாத…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற, அவர் நிதானமாக நின்று கொண்டிருந்தார்!

‘தான் கேட்டது உண்மையா?’ அவனுக்கு சந்தேகம்!

“வேற வழியில்லை தம்பி…” என்று கூறியவரின் பார்வையில் படுக்கையிலிருந்த மது பட்டாள். மளுக்கென்று அவரது கண்களில் கண்ணீர் ததும்பியது.

இன்னமும் அவள் விழிக்கவில்லை. அவளது நிலையை பார்த்தபோது அவளது போராட்டம் புலப்பட்டது.

மெழுகு சிலையில் சில பின்னங்கள்!

“புத்தியோட தான் இருக்கியாம்மா?” அவர் கூறியதை உறுதி செய்து கொண்டவனுக்கு கோபம் கொந்தளித்தது.

கோபம் குறையாமல் அவன் நின்ற தோரணையைப் பார்த்து சகுந்தலாவின் கண்களில் கலக்கம் ப்ளஸ் பயம். தன் கண் முன்னால் மதுவின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக தோன்றியது அவருக்கு. அவரது கருத்தில் பேத்தியின் வாழ்க்கையை காப்பாற்றியேயாக வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

அர்ஜுனனுக்கு கிளியின் கண்கள் மட்டுமே தெரிந்ததை போல, அவரது கண்களுக்கு மது மட்டுமே தெரிந்தாள். பார்த்திபன் என்ன இருந்தாலும் ஆண்மகன், தன் மகன், அவனையன்றி யாரை இதில் பணயம் வைக்க முடியும் என்று தான் எண்ணத் தோன்றியது அவருக்கு!

“வேற என்ன சாமி பண்றது? இப்படி ஒரு சம்பவத்துக்கு அப்புறம் நம்ம மதுவோட வாழ்க்கை என்னாகறது? அதுவும் போலீசுக்கு போய், பத்திரிக்கைக்காரங்க வரைக்கும் நியுஸ் போய்டுச்சு. மதுவுக்கு இனிமே யார கல்யாணம் பண்ணி வைக்க முடியும். அப்படியே பண்ணி வெச்சாலும் இந்த விஷயத்தை ஒத்துக்கிட்டு, மதுவுக்கு ஒன்னுமாகலைன்னு நம்பி யார் வருவா? அப்படியே வந்தாலும் என்னைக்காச்சும் அவன் வேற மாதிரி சொல்லி காட்டினா மதுக்குட்டியால அதை தாங்கிக்க முடியுமா?”

அவரது பதிலில் கடுப்பானவன், அவரை பார்த்து முறைத்தபடி அமர்ந்திருந்த சேரை தள்ளி விட்டு எழுந்து போக முயல, அதுவரை பேசாமலிருந்த பானுமதி அவனை தடுத்தார்.

“அம்மா சொல்றதுல என்னடா தம்பி தப்பிருக்கு?” என்று கேட்க, பானுமதியை எரித்து விடுவதை போல பார்த்தான் பார்த்திபன்.

அவருக்கு பதில் கூறக் கூட பிடிக்கவில்லை.

யார் யாரை திருமணம் செய்வது?

தனக்கும் மதுவுக்குமா? நினைக்கும் போதே கசப்பாக இருந்த ஒன்றை எப்படி இவர்களால் நினைக்க முடிகிறது என்பதே அவன் அறியவில்லை.

“ஆமா தப்பே இல்ல…” என்றவனின் முகம் கோபத்தில் கனன்றது.

ஒரு பக்கம் அமைச்சரின் வார்த்தைகள் என்றால் இன்னொரு புறம் தாயும் தமக்கையும் கொடுக்கும் சங்கடம்.

அதுவும், தான் நினைத்தே பார்த்திராத சங்கடம்.

“உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் தான் பிடிச்சுருக்கு…” என்று கடுப்படித்தவன் வெளியேற முயல, அவனது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் சகுந்தலா.

“டேய் தம்பி, என் பேத்தி வாழ்க்கையே உன் கைல தான் இருக்கு…” என்று பரிதாபமாக அவர் கூறியதை கேட்டபோது மனம் வலித்தது.

“ம்மா அவ கொழந்த மா…”

“நம்ம கண்ணுக்குத்தான் அவ கொழந்த பார்த்தி… அந்த கொழந்தையத்தான் இப்படி கொடும பண்ணி இருக்கானுங்க…” துக்கத்தில் அவருக்கு குரல் விக்கியது.

“என்னம்மா ஆச்சு? ஒண்ணுமாகல… அப்படியே ஆகியிருந்தாலும் அது ஆக்சிடென்ட்… அவ்வளவுதான்… இதுக்கு இவ்வளவு நீங்கள்லாம் ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியமில்ல… அவ மொதல்ல படிச்சு முடிக்கட்டும்… அப்புறமா அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையா அமைச்சு கொடுக்க வேண்டியது என் பொறுப்பு…” நீளமாக பேசியவனை கண்ணீரோடு பார்த்தார் சகுந்தலா.

“உன்னத்தான் நம்பியிருக்கேன் பார்த்தி… நீ என் பேத்தியை கைவிட்டுட்டா…” என்றவர் நா தழுதழுக்க, “ப்ச்…” என்று எரிச்சலாக கூறியபடி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

அவன் கனவிலும் நினையாத ஒன்றை தன் மேல் திணிக்கப் பார்க்கும் தாயையும் தமக்கையையும் என்ன சொல்லி தடுப்பது என்று புரியவில்லை. பார்த்திபனுக்கும் அது புரியாத நேரம் தான் . ஆனா அவன் இப்படிப்பட்ட முடிவுகளுக்குள் போகவில்லை. அவர்களை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு வேறு எதுவும் பாதுகாப்பான விடையாக தோன்றவில்லை.

சங்கடமாக மதுவை ஏறிட்டான். அவள் கண் மூடி துயில் கொண்டிருப்பதை பார்க்கையில் மனதுக்குள் பயம் கவ்வியது. தாய் கூறியதை போல நிகழ்வுகள் நடக்காதென்பதற்கு எந்தவிதமான உறுதியும் இல்லை. இந்த சம்பவம் அவளது வாழ்க்கையை காவு வாங்க காத்திருக்கிறது என்பது புரிந்தது. இன்னொரு பக்கம் ஜெயச்சந்திரன் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடும் என்ற நிலை.

ஆனால் மதுவை மனைவியாக அவன் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

திருமணத்திற்கு அடிப்படை காதலாக இருக்கலாம். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் கூட மனம் ஒன்றினால் தான் கணவன் மனைவியாக முடியும் என்பதை உறுதியாக நம்பினான்.

ஆனால் மதுவை அவனால் மனைவி என்ற ஸ்தானத்தில் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

தலை வின்வின்னென்று வலித்தது. அவனது நிலை சகுந்தலாவுக்கு புரிந்தாலும் அவருக்கு வேறு நல்ல வழி இப்போது தோன்றவில்லை.

“பெத்த அப்பனுக்கு அடுத்தபடியா தாய்மாமனுக்கு தான் கடமை அதிகம் தம்பி… அப்பன் கைவிட்ட புள்ளைங்கள கூட மாமன் கைவிட மாட்டான். இப்ப மதுவுக்கு ஏதாவது ஆகிருந்தா கூட அந்த புள்ளைய கட்டிக்கற கடமை உனக்கு இருக்கு பார்த்தி…” தொடர்ந்து சகுந்தலா இறுக்கமாக கூற, பார்த்திபன் இருதலை கொள்ளி தாளாமல் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.

“அதெப்படி மா மதுவ போய் நான்?” என்றவனால் முடிக்க முடியவில்லை.

அவனது மன உளைச்சல் எதனால் என்பதை ஒரு ஆணாக வினோதகனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“புரியுது பார்த்தி… நீ எதுக்காக கோபப்படறன்னு புரியாம இல்ல. அந்த காலத்துல எல்லாம் இந்த மாதிரி அக்கா பொண்ணை கட்டிக்கறது ரொம்ப இயல்பான ஒண்ணா இருந்துது. யாரும் அதுக்காக வருத்தப்படலை. ஆனா இன்னைக்கு சூழ்நிலைல நீங்க எல்லாம் நிறைய படிக்கறீங்க… நிறைய பார்க்கறீங்க… அதனால இந்த உறவுமுறை உங்களுக்கு மீனிங் இல்லாத மாதிரி தோணுது இல்லையா?” என்று அவர் கேட்க, அவன் பதில் கூறாமல் இன்னமும் தலையை பிடித்தவாறுதான் இருந்தான்.

“ஆனா உங்கம்மா எனக்கு ஒன்னு விட்ட அக்கா தான். மதியும் எனக்கு அக்கா பொண்ணு தான். நாங்க சந்தோஷமா இல்லாம போயிட்டமா?” என்று அவர் கேட்க, அதை அவன் ஆமோதிக்கவில்லை.

“மனசு தான் காரணம் பார்த்தி… மனசு ஏத்துக்கிட்டா வாழ்க்கை ஈசியாகிடும்… ஆனா…” என்றவரை நிமிர்ந்து பார்க்க, அவர் தொடர்ந்தார்.

“இப்ப நடந்த விஷயம் இவங்க ரெண்டு பேரும் நினைக்கற அளவுக்கு பெரிய விஷயமில்ல. பார்த்தி சொல்ற மாதிரி ஜஸ்ட் ஒரு சின்ன ஆக்சிடென்ட் தான். மதுவுக்கு செக்யுரிட்டி வேணும்ன்னு நானும் தான் நினைச்சேன். அதுக்காக இப்பவே கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நினைக்கல. ஆனா பார்த்திக்கு பிடிச்சா, பார்த்தி கட்டிக்கனும்ன்னு நினைச்சா நிச்சயமா நான் என் பொண்ணை கொடுப்பேன். பார்த்தியை விட நல்ல மாப்பிள்ளையை நான் தேடிப் பிடிக்க போறதில்ல…”

உறுதியாக அவர் கூறியதை கேட்ட பானுமதிக்குள் குழப்பங்கள். மகளின் வாழ்வை நினைத்து உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.

மூச்சை இழுத்து வெளியே விட்ட பார்த்திபன் தீர்மானமாக நிமிர்ந்தான்.

சகுந்தலாவை பார்த்து, “ம்மா… நீயும் அக்காவும் பயப்படறது புரியுது. கல்யாணம் பண்ணா எல்லாம் சரியா போய்டும் நீ நினைக்கற… ஆனா அது என்னால முடியாதும்மா. மதுவ நான் அந்த மாதிரி நினைச்சு கூட பார்த்ததில்லை. அப்படி பண்ணிதான் ஆகணும்ன்னு சொன்னா நான் கண்டிப்பா பண்ணிக்கறேன். ஆனா அது கண்டிப்பா என்னை பொறுத்தவரைக்கும் கல்யாணமா இருக்காது. மதுவோட லைப் பத்தி கவலைப் படாதீங்க. நான் இருக்கேன். என்னன்னாலும் நான் பார்த்துக்குவேன். படிச்சு முடிக்கட்டும். அவளா சுயமா தன் கால்ல நிற்கட்டும். எல்லா விஷயத்துலயும் நான் கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவேன். இந்த பேச்சை இப்ப விடுங்க…” என்றவனின் வார்த்தைகளை மறுத்து பேச அங்கு யாராலும் முடியவில்லை.

அவன் சொல்வதும் உண்மைதானே!

திருமணம் செய்துவித்தால் மட்டும் போதுமா?

அதை இருவரும் ஏற்று வாழ்க்கையை வாழ்ந்தால் தானே அதற்கான அர்த்தமாகும்!

பிடிக்கவில்லை என்று கூறுவதை விட அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத உறவு என்பதை அவர்களும் அங்கீகரிக்கத்தானே வேண்டும் என்று நினைத்துக் கொண்ட சகுந்தலாவுக்குள் ஒரு நீண்ட பெருமூச்சு!

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பார்த்தி. என் பேத்தி வாழ்க்கை எப்படி போகும்ன்னு தெரியல. எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் இருக்கான். அவன் தான் பார்த்துக்கணும்…” என்றவர் கணம் தாள முடியாமல் அருகிலிருந்த சேரில் அமர்ந்து கொண்டவரை உலுக்கியது மதுவின் முனகல்.

அது விஐபி ரூம் என்பதாலும், பார்த்திக்கு அங்கு நல்ல பழக்கம் என்பதாலும் நால்வருமே இருந்தனர்.

வலிக்காக செலுத்தப்பட்ட மருந்துகளின் வீரியம் குறைய ஆரம்பித்து இருந்தது போல!

அவளது முனகலை பெண்கள் இருவராலும் தாள முடியவில்லை. அப்போதுதான் வினோதகன் வெளியே சென்றிருந்தார். சகுந்தலா அவனை பதட்டமாக பார்க்க, “டென்ஷனாகத மா…” என்றபடி, அவளுக்கு அருகில் சென்று பார்க்க, அவனது தமக்கையோ வாயை இறுக்கமாக மூடியபடி அழ ஆரம்பித்து இருந்தார்.

அவளது கண்ணீரை கண்டவருக்கும் கண்கள் கலங்க, தள்ளாடிய தாயை பிடித்துக் கொண்டார் பானுமதி. அந்த நேரத்தில் மதிக்குமே ஆதரவு தேவை அல்லவா!

சோம்பலாக கண் விழித்தவளின் பார்வை வட்டத்தில் முதலில் விழுந்தது பார்த்திபன் தான்!

“மா…மா…” என்றபடி கையை தூக்க முயல, முறிந்திருந்த கை அவளுக்கு ஒத்துழைக்கவில்லை.

“ஒன்னும் இல்லடா… யூ ஆர் ஆல்ரைட்…” என்று அவளது கையை பார்த்திபன் பிடித்துக் கொள்ள,

“என்… னாச்சு மா… மா…” என்று சிரமப்பட்டு வார்த்தைகளை கோர்த்தாள்.

“ஒண்ணுமாகல… இப்ப நாம ஹாஸ்பிடல்ல இருக்கோம் மதுக்குட்டி… யூ ஆர் சேஃப்…” என்று நிதானக் குரலில் பார்த்திபன் கூற, அடிபட்ட கையை அசைக்க முடியாமல், “ஸ்ஸ்ஸ்ஆஆ…’ என்று கத்தப் பார்க்க,

“மது….” என்று கதறியபடி வந்தார் பானுமதி.

அவரை அதுபோல பார்த்த அதிர்ச்சியில் மிரண்டு விழித்தாள் மது.

பயத்தில் அவளுக்கு நா உலர்ந்து போனது.

தவறு செய்தது அவளாயிற்றே!

தந்தையும் தாயும் கொடுத்த சுதந்திரத்தை, அவர்கள் தன் மேல் வைத்த நம்பிக்கையை குலைத்து விட்டதாகவே தோன்றியது அவளுக்கு!

மது மிரண்டு விழிப்பதை பார்த்தா பார்த்திபனுக்கு கோபம் வந்தது!

“மதிக்கா… கொஞ்சம் பேசாம இருக்கியா?” கடுப்பான குரலில் இறுக்கமாக அவன் கூற,

“இல்லடா தம்பி… பிள்ளை எப்படியெல்லாம் கஷ்டபட்டிருக்கு…” என்று இன்னமும் அழ, அவர் அழுவதை பார்த்த மதுவின் கண்கள் கலங்கியது.

“மதிக்கா….” பல்லைக் கடித்தான். அவர் சேலை தலைப்பினால் வாயை மூடிக் கொண்டு அமர்ந்து விட, பார்த்திபன் மதுவை நோக்கி திரும்பினான்.

“ஒன்னும் இல்லடா மது… கைல கொஞ்சம் ப்ராக்ச்சர்… கால்ல கொஞ்சம் ஸ்க்ராட்ச்… அவ்வளவுதான்… இன்னைக்கு இங்க இருக்கலாம்… நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிட்டு கோயம்பத்தூர் போய்டலாம்…” தெளிவாக, அழுத்தமாக பார்த்திபன் கூறியதை கேட்ட மது சற்று தெளிவானாள்.

“அந்த ரெண்டு பேரையும் சும்மா விடக் கூடாது மாமா…” வலியை பொறுத்துக் கொண்டு அவள் கூற,

“கண்டிப்பா விட மாட்டேன் மது…” அவளது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

“போதும்டி ஆத்தா… இன்னும் உன் பேர் நாறி போறதுக்கா?” அழுகையோடு வெடித்தார் மதி.

“ம்மா…” கைகளிலிருந்த வலி, இப்போது அவளது கண்களில்!

“அக்கா…” பற்களை நறநறவென கடித்தான் பார்த்திபன்.

“போதும் பார்த்தி… இந்த விஷயத்தை இன்னும் பெருசாக்கினா, நாளைக்கு இவ வாழ்க்கை என்னாகறது? நீயும் என்னை கை விட்டுட்ட… இனிமே நான் என்ன பண்ணுவேன்?” அழுகையும் கோபமும் போட்டியிட்டது மதியின் குரலில்! அதுவரை தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த சகுந்தலாவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.

மது நிர்கதியாக பார்த்தியை பார்க்க, அவனது பிடி இன்னமும் அழுத்தமாகிற்று!

“ம்மா… ஏன்மா?” வலித்து ஜனித்தாள் மது!

“அம்மா சொல்றது நல்லதுக்கு தான் மது… இந்த விஷயத்தை தயவு பண்ணி விட்ரு… எங்களுக்கு உன்னோட லைப் தான் முக்கியம்…” பானுமதி கண்கள் கலங்கியவாறே கூறினார்.

அப்படியென்றால் அந்த ஜெயசந்திரன்? ரதீஷ்? சஞ்சய்?

பெண் என்பதால் இந்த தீமை அத்தனையையும் பொறுத்துப் போக வேண்டுமா?

அவள் எதிர்ப்பை காட்டினால் தவறா?

நினைக்கும் போதே ரத்தம் சூடாகியது பார்த்திக்கு!

கோபமாக பேச வாயெடுக்கும் போது செல்பேசி அழைக்க, யாரென பார்த்தான்.

திரும்பவும் ஜெயச்சந்திரன் தான்!

இவர்களுக்கு பதவி ஒரு துருப்பு சீட்டு. பதவி இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்களாமா? கோபமாக பேசியை பார்த்தவன், எடுத்தான்.

“சொல்லுங்க…” வார்த்தைகளில் கனல்!

“தம்பி… நான் சொன்னதை பத்தி யோசிச்சீங்களா?” மிகவும் நிதானமாக கேட்டார் அவர்.

“யோசிக்க ஒன்னுமில்லங்க ஜெயச்சந்திரன். உங்க பையனை விட முடியாது. நீங்க என்ன பண்ணுவீங்களோ, அது உங்க தலைவலி. ஆனா என்னோட சைட்ல உங்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் கிடைக்காது…” அழுத்தம் திருத்தமாக அவன் கூற,

“தம்பி, உங்க கிட்ட மத்தவங்க மாதிரி நடக்க எனக்கு ரொம்ப நேரமாகாது. நம்ம கட்சிக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா இருக்கீங்க. அதான் இவ்வளவு நிதானமா இருக்கேன்…” ரொம்பவும் கோபத்தை அடக்கியபடி பேசுவது புரிந்தது.

“தெரியுதா ஜெயச்சந்திரன்? அப்படிப்பட்ட எங்க வீட்டு பொண்ணு மேல ஒருத்தன் கை வைக்க பார்த்தான்னா நான் சும்மா விடுவேன்னு நினைச்சீங்களா? நான் இன்னும் உங்க மகனை உயிரோட விட்டு வெச்சு இருக்கறதே பெரிய விஷயம். அவன் ஜெயில்ல இருந்தா உயிரோடவாவது இருப்பான். வெளிய எடுக்கணும்ன்னு நினைச்சீங்க… உங்க மகனை பொணமாத்தான் பார்ப்பீங்க…” குரலிலும் சரி, முகத்திலும் சரி ரவுத்திரம் தெறித்தது.

“தம்பி… நீங்க சொல்றது எல்லாம் புரியுது. அதான் அந்த பொண்ணு மதுவை நானே மருமகளாக்கிக்கறேன்னு சொல்றேனே தம்பி. கொஞ்சம் விட்டுக் கொடுங்க. ஒத்தை புள்ளை தம்பி…” மிகவும் கெஞ்சினார் அவர். தந்தை பாசம் என்பதோடு, அமைச்சராக இருந்தாலுமே அத்தனை வழிகளும் அடைபட்ட நிதர்சனம்!

“எங்க பொண்ண மருமகளாக்கிகுவீங்க… ஆனா இதே ஒண்ணுமில்லாத குடும்பமா இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?” என்று நறுக்கென்று கேட்டவன், சற்று நிறுத்தி, “அய்யா சாமி… எனக்கும் ஒண்ணுமே இல்லைன்னு வைங்க… அந்த இடத்துல என்ன பண்ணுவீங்க? கேஸை ஊத்தி மூடத்தான பார்ப்பீங்க?” என்று நக்கலாக கேட்க, அதற்கு அவரிடம் பதில்லை.

“விடுங்க தம்பி… இந்த ஒரு தடவை தம்பிய மன்னிச்சு விடுங்களேன்… எனக்காக தயவு பண்ணுங்க… ப்ளீஸ் பார்த்தி…”

“சாரி ஜெயச்சந்திரன்… வெச்சுருங்க…” என்று கூறியபடி பேசியை அணைத்தான்.

அத்தனையையும் உணர்வே இல்லாமல் பார்த்திருந்தாள் மது.

“என்னாச்சு பார்த்தி?” அப்போதுதான் உள்ளே நுழைந்த வினோதகன் கேட்க,

“திரும்பவும் மினிஸ்டர் கூப்பிட்டு இருந்தார்…” என்றவனை வெறித்து பார்த்தபடி இருந்தார் பானுமதி.

“என்னவாம்?”

“சஞ்சய் மேல இருக்க கேஸை வித்ட்ரா பண்ண சொல்லித்தான்…”

“என்ன சொன்னீங்க?”

“உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோன்னு சொல்லிட்டேன்…”

“வேண்டாம் பார்த்தி… இந்த விஷயத்தை விட்டுடு…” சொன்னது பானுமதி அல்ல. அவனுடைய தாய் சகுந்தலா.

“ம்மா…” அதிர்ந்து அவரை பார்த்தான். ஏனென்றால் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை விட்டு விடாதே என்று பிடிவாதம் பிடித்தது அவனது தாய் தானே!

“ஆமா பார்த்தி… அந்த பையனுக்கே மதுவ கொடுத்துடலாம்…” சற்றும் தயங்காமல் அவர் கூற, அவரை அழுத்தமாக பார்த்தான் பார்த்திபன்.

“நீ எப்ப பாட்டி இவ்ளோ பத்தாம்பசலித்தனமா ஆன?” சிரமப்பட்டு பேசினாலும் ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தாள் மது.

“நான் மட்டுமில்ல மது… பொண்ணா பொறந்தா ஒரு இடத்துல நாம பத்தாம்பசலித்தனமாத்தான் யோசிக்க வேண்டியிருக்கு…” என்றவரை உணர்ச்சிகளை துடைத்தபடி பார்த்தான் பார்த்திபன்.

“இல்ல பாட்டி… நான் செத்தாலும் அவனை கட்டிக்க மாட்டேன்…” உறுதியாக கூறியவளின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான் பார்த்திபன்.

‘நான் உனக்கு இருக்கிறேன்’ என்றது அந்த அழுத்தம்.

“வேற வழியில்ல குட்டிம்மா… எங்களுக்கு மட்டும் உன்னை அவனுக்கு கொடுக்கணும்ன்னு ஆசையா என்ன? ஆனா என்ன பண்றது?” தலையை பிடித்துக் கொண்டார் பானுமதி.

“ஆமா…” என்ற சகுந்தலா, “அந்த பையன் மேல இருக்க கேஸை வித்ட்ரா பண்ணு பார்த்தி…” உறுதியாக கூறியவரை முறைத்தான் பார்த்திபன்.

“வேறென்ன பண்ண சொல்ற? எனக்கு வேற ஆப்ஷன் நீ கொடுக்கல பார்த்தி…” என்றார் பானுமதி, அவனை குற்றம் சாட்டும் பார்வையோடு!

“அதுக்காக அந்த பொறுக்கிக்கே உன் பொண்ணை கட்டிக் கொடுத்து அவ வாழ்க்கையை அழிக்கறதுன்னு முடிவே பண்ணிட்ட இல்லையா?” வெகு அழுத்தமாக நிதானமாக பார்த்தி கேட்க, ஆமென்று தலையாட்டினார் மதி.

“அப்படீன்னா நான் இப்பவே செத்து போறேன் மா… எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். அதுவும் அந்த பாஸ்டர்டோட வேண்டவே வேண்டாம்…” மிரண்ட பார்வையோடும் குரலிலிருந்த நடுக்கத்தோடும் மது கூற, அவளை பார்த்தான் பார்த்திபன். ஏதாவது செய்து என்னை காப்பாற்றேன் என்று அவள் கெஞ்சுவதை போலிருந்தது.

இந்த சின்ன பெண்ணை ஏன் அழிக்க பார்க்கிறார்கள் என்ற வேதனை அவனுடைய மனதுக்குள். எத்தனையோ கனவுகள். எத்தனையோ குறிக்கோள்கள். அத்தனையும் யாரோ ஒரு பொல்லாதவனால் காணலாக வேண்டுமா?

மதுவை சஞ்சயாலோ, ரதீஷாலோ எதுவும் செய்ய முடியவில்லை. அவளை அவளே தற்காத்துக் கொண்டிருக்கிறாள். அதை பாராட்ட தெரியவில்லை இவர்களுக்கு. ஆனால் போலி சமூக மரியாதையை குறித்தான கவலை!

அப்படியே மதுவை சஞ்சய்க்கு திருமணம் செய்து வைத்து விட்டால் அவன் புனிதமானவன் ஆகிவிடுவானா?

மனதுக்குள் பலவாறு கொதித்தாலும் அத்தனையும் வெளிப்படுத்த முடியவில்லை.

அவளது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டவன், கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான்.

அவனது மனதுக்குள் தீர்மானம் எடுக்கத் துவங்கியிருந்தான்.

“மதுவுக்கு ஓகேன்னா, எனக்கும் ஓகே…” என்றவனை புரியாத பார்வை பார்த்தாள் மது.

அதே குழப்பம் அத்தனை முகங்களிலும்!

“என்ன சொல்ற பார்த்தி?” சகுந்தலா புரிந்தும் புரியாமல் விழித்தபடி கேட்டார்.

“மதுவுக்கு ஓகேன்னா…” என்று ஆரம்பித்தவனுக்கு, அந்த விஷயத்தை வார்த்தையாக சொல்லவும் தயக்கமாக இருந்தது. “எங்க மேரேஜுக்கு நாள் பாருங்க…”

அந்த வார்த்தை எல்லோருடைய முகத்தையும் ஒளிர செய்தது. இருவரை தவிர.

பார்த்திபன், உச்சகட்ட குழப்பத்தில் இருந்தான்!

மது, உச்சகட்ட அதிர்வில் இருந்தாள்!

ஒரே நாள் தந்த வரிசையான அதிர்ச்சிகள்!

சொன்னவனால் அங்கே நிற்க முடியவில்லை. அது என்ன உணர்வு என்று அவனால் வரையறுக்க முடியவில்லை. மதுவின் அதிர்ந்த முகத்தை காண முடியாமல், அவளது கையை விலக்கியபடி எழுந்து வெளியே சென்றான்.

வெளியே வந்தவனுக்குள் புழுங்கியது…

அவனது முடிவு சரியா? தவறா?

எந்த நோக்கமும் இல்லாமல் பால்கனிக்கு அருகிலிருந்த சேரில் அமர்ந்தவன், குழப்பம் தாள முடியாமல் தலையை பிடித்துக் கொண்டான்.

 

error: Content is protected !!